Saturday, June 14, 2025

Three Good movies!!

கடந்த வாரத்தில் பார்த்த மூன்று படங்கள். Four good days படத்தில் துவக்கத்தில் ஒரு வயதான தம்பதிகள் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். அப்போது கதவு தட்டப்படுகிறது திறந்து பார்த்தால் இந்த பாட்டியின் மகள் (தாத்தாவின் மகள் அல்ல) . அவர் எவ்வளவு கெஞ்சி மன்றாடி கேட்டும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டு கதவை அடைத்து விடுவார். நள்ளிரவில் மீண்டும் எழுந்து பார்த்தால் அந்த பெண் வெளியிலேயே உட்கார்ந்திருப்பார் குளிரில் நடுங்கி கொண்டு. இவளுக்கும் மனது கேட்காது ஆனாலும் கதவை திறந்து விட மாட்டார் திரும்ப அடுத்த நாள் காலையில் அவள் பிடிவாதமாக இருப்பதால் என்னவென்று கேட்கும் பொழுது "நான் இதற்கு மேல் ட்ரக் பயன்படுத்த மாட்டேன், என்னை De-addiction center இல் சேர்த்து விடுங்கள்" என்று கெஞ்சி கேட்பார். அங்கே இவளுக்கு மருத்துவம் பார்த்து நான்கு நாட்களுக்கு பிறகு drug one shot வழங்குவார்கள் அது வரை கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அந்த நான்கு நாட்களில் என்ன நடந்தது என்பதுதான் கதை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் படத்தில் முக்கால்வாசி நேரத்தை அம்மாவும் பெண்ணும்தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பார்கள் ஆனாலும் கூட சுவாரசியமாக கதை செல்லும். இந்த படத்தில் போதைக்கு அடிமையாகி இருப்பவரின் நிலைமையை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக காண்பித்து இருப்பார்கள் நமக்கு பார்க்கும் போதே மிகவும் அதிர்ச்சியாகவும் பதட்டமாகவும் இருக்கும். முக்கியமாக படத்தில் கதாநாயகியின் பற்கள் கண்றாவியாக இருக்கும் உண்மையிலேயே அந்த விஷயத்தில் அவர்கள் எப்படி மேக்கப் போட்டிருப்பார்கள் என்பதை யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். கதாநாயகி அம்மாவாக நடித்திருப்பவர் நடிப்பும் மிகப் பிரமாதமாக இருக்கும். படம் மெதுவாகத்தான் செல்லும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. Netflix movie STRAW தமிழில் "எவனோ ஒருவன்" என்று மாதவன் நடித்த படம் உண்டு. இந்த ஸ்ட்ரா படம் அது போன்ற ஒரு படம் தான். இதற்கு மேலும் ஓட முடியாது என்கிற அளவுக்கு வாழ்க்கை ஒருத்தனை துரத்தி துரத்தி அடிக்கும் போது அவன் எப்படி மாறுகிறான் என்பதுதான் அந்த படம். கதாநாயகி ஒரு சிங்கிள் பேரண்ட். காலையில் எழுந்தவுடன் உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு மருந்து வாங்க வேண்டும் அதற்கு காசு தேவை. மதியம் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுக்கு பணம் கொடுக்க வேண்டும் நேற்று பணம் கொடுக்கவில்லை என்று எல்லோர் முன்னிலையிலும் பள்ளியில் கேட்டிருப்பார்கள். குழந்தைக்கு மீண்டும் அவமானம் நேர்ந்து விடக்கூடாது‌. வெளியே வந்தால் இன்றைக்கு மதியத்திற்குள் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றால் மூட்டை முடிச்சுகளை தூக்கி வெளியே வீசி விடுவேன் என்று வீட்டுக்காரர் மிரட்டுகிறார். வேலைக்கு சென்றால் முதலாளியின் சிடுசிடுப்பு அதையும் மீறி அனுமதி பெற்று தனது வங்கி கணக்கில் இருக்கும் சொற்ப தொகையை அப்படியே எடுத்து குழந்தைக்கு கொடுத்து வந்துவிடலாம் என்று பர்மிஷனில் செல்கிறாள். அவசர அவசரமாக வங்கிக்கு சென்று பணம் கிடைக்காமல் குழந்தையின் பள்ளிக்கு செல்கிறாள் அங்கே இவள் சரியாக பராமரிக்கவில்லை என்று குழந்தையை காப்பகத்துக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டு மீண்டும் தான் பணி செய்யும் மாலுக்கு அவசரமாக காரை ஓட்டி வருகிறார் அப்போது கார் மற்றொரு காரை இடித்து விடுகிறது. அது ஒரு போலீஸ்காரருடைய கார். லைசென்ஸ் பார்த்தால் அது காலாவதியாகி இருக்கிறது அதை புதுப்பிக்க பணம் தேவை. போலீஸ்காரர் தான் இவளுடைய காரை நெட்டி தள்ளி பந்தாடியிருப்பார் ஆனாலும் கூட இவளை அபராதம் கட்டச் சொல்லி காரை பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகிறார்கள். மீண்டும் மாலுக்கு வந்தால் பர்மிஷனர் சென்ற இவள் தாமதமாக வந்ததால் கோபத்தில் அந்த சிடுசிடு முதலாளி இவளை வேலையை விட்டு தூக்கி விடுகிறார். சரி சம்பளமாவது கொடுங்கள் என்று கேட்டால் அதை நான் தபாலில் அனுப்பி வைக்கிறேன் என்கிறார். அப்போது அங்கே இரண்டு பேர் வந்து திருட முனைகிறார்கள். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் துப்பாக்கி இவள் கைக்கு வந்து எதேச்சையாக வெடித்து முதலாளி இறந்து போகிறார். இவள் ரத்தக்கரை படித்த தனது சம்பள காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு ஓடுகிறாள். படத்தின் முதல் கால் மணி நேரத்திலேயே இவ்வளவு பரபரப்பும் கலவரமும் நடந்து முடிந்துவிடும். இதற்கு பிறகு இதற்கு மேல் பரபரப்பும் பதட்டமும் இருக்கும். அதை மிகவும் எமோஷனலாக திரைக்கதை அமைத்து கொண்டு சென்று இருப்பார்கள். நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். அவ்வளவு உருக்கமான படம். கதாநாயகியாக நடித்தவர் பிரமாதமாக நடித்திருப்பார். படம் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது. லெவன் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் இது ஒரு தமிழ் படம். ஒரு சைக்கோ சீரியல் கில்லர் வகை படம். சென்னையில் தொடர்ந்து கடத்தப்பட்டு எரித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கின்றன போலீசுக்கு உருப்படியாக ஒரு துப்பும் கிடைக்கவில்லை இந்த கேசை புலனாய்வு செய்யும் அதிகாரி விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார். அந்த இடத்திற்கு மற்றொரு காவல் அதிகாரி வருகிறார். அவர் கொலைகளை புலனாய்வு செய்து கொலையாளியை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. ஆனால் கதைக்குள்ளும் திரைக்கதையிலும் அத்தனை சுவாரசியம். படத்தின் ஹீரோவாக வரும் காவல் அதிகாரி மருந்துக்கு கூட ஒரு ஃபிரேமிலும் சிரிக்க மாட்டார். கொலைகளுக்கான காரணங்களை விளக்கும் பிளாஷ் பேக் காட்சிகள் சற்று நீளமாகத் தான் இருந்தன. அதை தவிர்த்து பார்த்தால் படம் எந்த இடத்திலும் தேங்கி நிற்கவில்லை. மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது. ஹீரோ அறிமுக காட்சியில் வரும் இரண்டு கேஸ்களும் சுவாரசியமாகவும் சண்டை காட்சிகள் மிரட்டலாகவும் இருந்தன. முக்கியமாக பின்னணியில் ஒலித்த ஆங்கிலப் பாடல் மிகச் சிறப்பாக இருந்தது. படம் முழுவதுமே பின்னணி இசையை பிரமாதப்படுத்தி இருப்பார் இசையமைப்பாளர். படத்தில் பரபரப்புக்கு இதுவும் ஒரு காரணம். பெரிய படங்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு விளம்பர வெளிச்சம் காரணமாக இது போன்ற மின்மினி பூச்சிகள் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டன. முக்கியமாக இந்த மாதிரி படங்களுக்கு அதிக தியேட்டர்களோ மாலைக் காட்சிகளோ அதிகம் ஒதுக்கப்படுவதில்லை. இன்று இந்த படம் அரியலூர் சக்தி திரையரங்கில் வந்திருந்தது. நான் எதேச்சையாக அமேசான் பிரைமை திறந்து பார்த்தால் அங்கேயும் இருந்தது. நானும் அமேசான் பிரைமில் தான் பார்த்தேன்.

No comments:

Post a Comment

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...