Friday, July 8, 2016

பேருந்து பயணங்கள்

பேருந்தின் ஜன்னலோரம்.
பேருந்து பயணங்கள் எப்போதுமே எனக்கு அலுப்பை ஏற்படுத்தியதில்லை. நான் தினசரி பள்ளி செல்ல 45 நிமிட பயணம் மேற்கொண்டாலும் கூட ஒவ்வொரு நாள் பயணத்தையுமே ஒரு சுவாரசியமான சிறுகதை போல ரசித்தபடி செல்வேன்.
பேருந்து பயணம் நமது வாழ்க்கை பயணம் போன்றது தானே! நினைவுகளோ சாலையோர காட்சிகள் போல பின்னோக்கி செல்ல , பேருந்தோ நிகழ்காலத்திலிருந்து நம்மை பெயர்த்து எதிர்காலத்தினுள் செலுத்தும் கால எந்திரமாய் தன் சக்கரத்தை சுழற்றியபடி செல்கிறதல்லவா?!
தொடரியில் இருக்கை முன்பதிவு இறுதிவரை காத்திருப்பில் இருந்ததால் சென்னை நோக்கி மற்றுமொரு பேருந்து பயணம். சற்றே அயர்ச்சியாகவும் சிறிது மிரட்சியாகவும் இருந்தது. அயர்ச்சிக்கு காரணம் வேடிக்கை பாரக்கவியலா ஒரு நெடிய இரவுப் பயணம். மிரட்சிக்கு காரணம் பழைய அனுபவம் தான். என்னவென்று கேட்கிறீர்களா ?! வாருங்கள் சற்று பின்னோக்கி பயணிப்போம்.
அன்று வழக்கத்திற்கு மாறாக 10 நிமிடங்கள் முன்னதாக பேருந்து நிறுத்தம் வந்து விட்டேன். 8.20 மணிக்கு வரவேண்டிய நெய்வேலி நகரம் செல்லும் பேருந்து பெரும்பாலும் வராதாகையால் 8.35 ராமானுகூலம் பேருந்தை எதிர் நோக்கி காத்திருந்தேன். மற்றுமொரு 'வழக்கத்திற்கு மாறாக' நெய்வேலி நகரம் வந்தது. சொற்பமான பயணிகளே இருந்தனர். நான் ஓட்டுநர் இருக்கை க்கு அருகில் அமர்ந்தேன்.
"ஏங்க ஸ்கூல் டைம், கொஞ்சம் ரெகுலரா வந்திங்கன்னா பஸ் பாஸ் பசங்க ஏறுவாங்க நெறய ஸ்டாஃபும் வருவாங்களே?!"
"இந்த பஸ்ஸுக்குன்னு ரெகுலர் டிரைவர் கண்டக்டர் இல்லீங்க சார், யாரையாவது கெடைக்கிறவங்கள போட்டு அனுப்புவாங்க சார். நீங்க வாத்தியாருங்களா?!"
"அட எப்படிங்க கண்டுபிடிஞ்சிங்க?!"
"பாக்கெட்ல சிவப்பு பேனா, பஸ் பாஸ் பசங்களுக்காக பேசுறீங்க!" என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ் க்கு நிகராக தன்னை வியந்து கொண்டு.
பேருந்து சாவடி காட்டை தாண்டி விரைந்து கொண்டிருந்தது. பேசுவதில் ஆர்வமாக இருந்த ஓட்டுநரை தவிர்க்க செய்தித்தாளை விரித்தேன். ஆனால் அவர் விடுவதாய் இல்லை.
"சார இந்த '----' படம் பாத்தீங்களா?!"
"ஓ! பெரும்பாலும் எல்லாருமே பாத்திருப்பாங்களே!"
"அந்த படத்தின் டைரக்டர் '---' யார் தெரியுமா?!"
'அதான் சொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க விடவா போறீங்க கொஞ்சம் ரோட்டையும் பாருங்க பாஸூ பயந்து வருது!!' என்ற மைண்ட் வாய்ஸை மறைத்து "ம் சொல்லுங்க உங்க ரிலேட்டிவா?!"
"வாத்தியார்னா சும்மாவா கரெக்ட்டா சொன்னீங்க அவருடைய என் சொந்த மச்சான்!!"
"ஏங்க பெரியநாகலூர் பாதை நிறுத்துங்க!!" என்றேன்
"ஆங் மறந்துட்டேன், நம்பாளு விசில் அடிக்கவே இல்ல"
"அவரு ரெண்டு தடவ அடிச்சுட்டாருங்க"
"அப்படியா" என்று அசடு வழிந்தார்.
இனி இவர பேச விடக் கூடாதுன்னு கையில் இருந்த பேப்பரை விரித்தேன்.
"சார் இந்த ஒண்ண மட்டும் கேளுங்க!" என்று பரிதாபமாய் கெஞ்சினார். சரி போகட்டும் என நிமிர்ந்தேன்,"கொஞ்சம் ரோட்டையும் பாருங்க"
"அதெல்லாம் 'கன்' மாறி ஓட்டுவேன். ஸ்டாப் வந்ததும் கால் தன்னால பிரேக் போடும்!"
'எங்க போன ஸ்டாப்ல போட்ட மாதிரியா?'(மறுபடியும் மைண்ட் வாய்ஸ்)
"என்னவோ சொல்லிகிட்டு இருந்தேனே , என்ன சார்?!"
"டைரக்டர் உங்க மச்சான்" (தவளை தன் வாயால் கெடத் தயாரானது!!)
" ஆங் அவருடைய அடுத்த படம் ஆரம்பிச்சுட்டாரு சார்!"
"அப்படியா"
விளாங்குடியில் ஏறிய மாணவர்கள் எனக்கும் ஓட்டுனருக்கும் இடையில் தடுப்பரண் அமைத்து காத்தனர். அப்பாடா, என்று நடுப்பக்க கட்டுரையாவது வாசித்து விடலாம் என்று பேப்பரை விரித்தேன்.

"தம்பி கண்ணாடிய விட்டு நில்லுப்பா!!" என்று ஒரு நான்கைந்து பேரை பின்னுக்கு தள்ளி விட்டு பார்த்து சிரித்தார்(யார்கிட்ட தப்பிக்க பாக்குற?! என்ற வெற்றி களிப்பாய் எனக்கு தோன்றியது)
"புதுப் படத்துக்கு பாட்டு ரிலீஸுக்கு கூப்பிடுவார். உங்களுக்கும் டிக்கெட் வாங்கி தரேன் வாங்க போவோம்"
"ம், போகலாம் சார்!"
குறுகலான விளாங்குடி பாலத்தில் பேருந்து வழக்கத்தை விட அகலமாக திரும்பியது.
"சார் பாத்து ஓட்டுங்க!"
"எட்டு வருட அனுபவம் சார்!!, டெம்ப்ரவரியா பாத்தப்பவே மெட்ராஸ்லாம் ஓட்டியிருக்கேன்"
"ஓ அப்படிங்கள!?"
"சார் இந்த --- கட்சி ஒன்றியம் '---' அவர தெரியுமா?!"
"தெரியாதே!"
" அவருடைய நம்ப மாமாதான், அவரு தான் போஸ்டிங் வாங்கி கொடுத்தாரு"
"அப்படியா!"
"ரொம்ப ஆனஸ்ட்டான மனுசன் சார் கைய நீட்டி காசு வாங்கிட்டா வேலைய கச்சிதமா முடிச்சி குடுத்துடுவார்"
"ஓ! பரவால்லையே!" (நானும் எத்தனை தடவ தான் அப்படியா ன்னே சொல்றது)
சீட்டில் இருந்து சற்று உயர்ந்து பின் வசதியாய் அமர்ந்து உற்சாகமாய் ஆரம்பித்தார்.
"சார் உங்களுக்கு எதாவது டிரான்ஸர் வேணும்னா சொல்லுங்க" ( பரவால்ல ன்னு சொன்னது அவரை ஏகமாய் உசுப்பேற்றியிருந்தது)
"இல்ல இங்கயே நல்லாருக்கு மேலும் இதுவே பக்கம்தான்"
"அப்படி ன்னா விடுங்க!"
"சார் அண்ணன் பையன் ஒருத்தன் நல்லா படிப்பான் இஞ்சினியரிங் சேக்கனும்னா +1ல எந்த குரூப் நல்லா இருக்கும்?!"
"கணக்குல என்ன மார்க்?!"
"அதெல்லாம் 40 மார்க் வாங்கியிருக்கான்"
"அவனுக்கு கணக்கு பிரச்சனை இல்லன்னா ஏ குருப் சேருங்க"
"உடையார்பாளையம்"
கண்டக்டரின் குரல் காதில் தேனாய் பாய்ந்தது.
"சரி, வரேன் சார்!"
"சரிங்க சார் பாக்கலாம்"என்றார் ஏமாற்றத்தோடு.
சரியாக நான்கு மாதங்களுக்கு பின்
சென்னை செல்ல பேருந்து ஏறினேன்
" சா....ர்ர், வணக்கம்" என்று சிரித்தபடி அழைத்தார் அதே டிரைவர்(செத்தாண்டா சேகரு)
"முன்னாடி  வெளிச்சம் விட்டு விட்டு அடிக்கும் தூங்க முடியாது சார்" என விடை பகன்று பின்னங்கால் பிடறியில் பட பின் சீட்டை நோக்கி ஓடினேன்
அப்படியும் விட்டாரில்லை, மோட்டலில் தேனீர் குடிக்க அழைத்தார்.
"சார் என்ன தூங்கி கொண்டு ஓட்றீங்க எங்கள  பத்திரமாய் கொண்டுபோய் சென்னைல விடுங்க சார்" என்றேன் சற்றே அதட்டலாய்.
"கண்டுபிடிச்சுட்டீங்களா, ஆஃப் எடுக்காம டூட்டிக்கு வந்துட்டேன் சார். தூக்கம் வந்ததும் எப்படி சமாளித்து ஓட்டினேன் பாத்தீங்களா?!"
"ஆமாம் சென்டர் மீடியன ஒட்டி ஊர்ந்துகிட்டே போனீங்க, ரெண்டு பஸ் உங்க தூக்கத்த கலைக்க ஆரன் அடிச்சபடி போச்சு, நான் எந்திரிச்சு உங்ககிட்ட வந்தேன் மோட்டலில் நிறுத்திட்டீங்க".
அங்கீகாரத்துக்கு ஏங்கும் மனதிற்கு பரிவோடு கேட்கும் காதுகள் கிடைத்தால் போதும் கடைமையும் மறந்து கதை கூறுவார்கள்.
இப்ப புரியுதா ஏன் பயந்தேன்னு?!
இந்த பஸ் ஓட்டுநர் அருமையாக செலுத்துகிறார். நிம்மதி.


Saturday, May 14, 2016

இந்த முறை சு.சமுத்திரம் அவர்களின் நூல்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி யில் (AIR&DD)வேலை பார்த்தவாறே எழுத்துலகில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை  நிலை மற்றும் அவர்கள் மீதான அடக்குமுறை மற்றும் சுரண்டல்களை தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் ஆவணப்படுத்தியவர். தனது 'வேரில் பழுத்த பலா' நாவலுக்காக 1990ல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி நூலகத்தை திறந்து புத்தகங்களை எடுத்த போது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' நூலைக் கண்டேன். முன்னுரையில் அது 'திருநங்கைகள்' வாழ்க்கைப் பற்றிய நாவல் என்று இருந்ததால் சுவாரசியம் உந்தித் தள்ளவே எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். தன்னுள்ளே பெண்மையை உணரும்போது   தொடங்கி அவளது இறுதி வரையில் கதை இந்தியா முழுதும் பயணித்து அரவாணிகளின் வாழ்க்கைப்பாடு ,சவால்கள்,ஒடுக்குமுறைகள், புறக்கணிப்புகள் மற்றும் அவர்களுக்குள்ளான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் என விரியும்.முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கட்டுரையை விடவும் பன்மடங்கு மேலான ஆராய்ச்சி. திருநங்கைகள் பற்றி அவர்கூறியது இன்னும் என் நெஞ்சில் பசுமரத்து ஆணியாக உள்ளது. அது..' திருநங்கை என்பவள் ஆணின் உடலுக்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்' என்பதுதான். மேலும் கதைப்போக்கில் சிறுவனாக இருக்கும் போது 'அவன்' 'இவன்' என்றவர் திருநங்கை ஆனபின் 'அவள்''இவள்' என்பார். கதையின் இடையில் சொந்த ஊருக்கு ஆண்வேடம் தரித்து வரும்போது மறுபடியும் 'அவன்' 'இவன்' என்றே விளித்திருப்பார்.
இவரது 'கே செக்ஸ்' பற்றிய ஒரு குறுநாவலும் படித்திருக்கிறேன்.
இப்போது அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் எடுத்த புத்தகமான 'கோட்டுக்கு வெளியே' நாவல் பற்றி. விருதுநகர் பகுதியில் வாழ்ந்த நாடார் மக்களைப்பற்றிய களம். கதை அறுபதுகளின் காலகட்டத்தில் நடப்பதாக தெரிகிறது. நேர்மை , துணிவு மற்றும் சுயமரியாதை மிகுந்த கிராமத்து ஏழை நாடார் (பனையேரி) பெண் உதயம்மா. ஒவ்வொரு இனத்தினுள்ளும் ஏழை பணக்காரர் இடையேயான intra caste  untouchability பற்றி கதை உரக்கப் பேசுகிறது. மாரிமுத்து எனும் பணக்கார நாடார் தனது அவலட்சணமான முதிர்கன்னி மகள் சரோஜாவை கரையேற்ற உதயம்மாவைக்காட்டி மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றுகிறார். இதனை அறிந்த உதயம்மா சரோஜாவுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகளை எண்ணி மாப்பிள்ளையை பார்த்து உண்மையை கூறி சமாதானம் செய்து சரோஜாவையே மணம் புரிய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். ஆனால் திருமணம் நின்றுவிடவே அதற்கு காரணமான உதயம்மாவை ஒழித்துக்கட்ட எண்ணுகிறார் மாரிமுத்து நாடார். அதை எவ்வாறு துணிவோடு உதயம்மா எதிர்கொள்கிறாள் என்பதே கதை.
கடைசி சில அத்தியாயங்களை கடந்த போது கட்டுப்பாடின்றி என் கண்களில் நீர் தாரை பெருக்கெடுத்தது. கடைசியாக கதை புரட்சிகர இனிய திருப்பமெடுத்து  தலித் மக்களின் உணர்வுகளைப் பேசி முடிகிறது. இந்த புத்தகம் நூலகத்திற்கு வந்து பல ஆண்டுகள் ஆயினும் நான்தான் முதலில் எடுத்தது. 

Sunday, May 8, 2016

நான் என்ன சொல்றேன்னா....

நான் என்ன சொல்றேன்னா....
ஈஷா குப்தா என்ற பெண் இந்தியாவை தனது பைக்கில் சுற்றி வரும் சாதனைப் பயணம் மேற்கொண்டவர். தனது அனுபவங்களை 'தி இந்து' வில் எழுதி வருகிறார். நேற்றைய பகுதியில் ஜார்கண்ட் மாநில பயண அனுபவங்களை கூறியிருந்தார். அது காடுகள் நிறைந்த தேசம். இன்று வரை அனைத்து ஊர்களுக்கும் மின்வசதி என்ற நிலை ஏற்படவே இல்லை. தொடக்கப்பள்ளிகள் எல்லா கிராமங்களிலும் இல்லை என்கிறார்.
தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆண்டு நாட்டையே குட்டிச்சவராக்கி விட்டதாக நாம் அங்கலாய்க்கும் திராவிட கட்சிகள் 90 களிலேயே எல்லா குக்கிராமங்களுக்கும் (மலைகிராமங்கள் உட்பட) மின்வசதி வழங்கி விட்டன. தொடக்கப் பள்ளி இல்லாத ஊர்கள் உண்டா?!
CCRT பயிற்சிக்கு சென்ற போது ஜார்கண்ட் மாநில ஆசிரியர்கள் 3 பேரை சந்தித்தேன். அவரது சம்பளத்தைவிட நம் மாநிலத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளரின் சம்பளம் அதிகம். இந்தி மொழியில் சரளமாகப் பேசும் அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை அவர்களிடம் பேசமுயன்று கொஞ்சம் இந்தி கொஞ்சம் பரதநாட்டியம் (கை கால் கண் இவற்றால் பேசவேண்டும் அல்லவா) கற்றுக் கொண்டது தான் மிச்சம்.
இந்தி எதிர்ப்பு மட்டும் நடத்தாமல் போயிருந்தால் நமது ஆங்கில அறிவும் அவர்கள் போலத்தான் இருந்திருக்கும். வெளிநாட்டுக்காரன் இண்டர்வியூவில் நம்மிடம் பரத நாட்டியம் ஆடியே நாக்கு தள்ளி ஆணியே புடுங்க வேண்டாம்னு ஓடியிருப்பான். வெளிநாட்டு வேலை கணினி தொடர்பான வேளைகளில் ஆதிக்கம் என தமிழ்நாட்டவர் உலக அரங்கில் கம்பீரமாக வலம் வர காரணம் இந்தியை 'தம்பி நீ கொஞ்சம் ஒதுங்கு' என்றதுதான்.
ஐய்யயோ இந்தி படிக்காமல் என் வாழ்க்கையே வீணாப் போயிடுச்சே இந்த கலைஞர் மட்டும் இல்லைன்னா நானும் இந்தி நல்லா படிச்சு ராஜஸ்தானுக்கு 'டைல்ஸ்' ஒட்டவோ அல்லது பீகாரில் கட்டிட வேலைக்கோ போயிருப்பேன் என்று புலம்புவோர் தனியே சொந்த முயற்சியில் 'இந்தி பிரச்சார சபா' மூலமாக கிட்டத்தட்ட இலவசமாக இந்தி பயிலலாம்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நிலை வந்ததால் தானே நமக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் வந்து சேர்ந்தது. தேசிய கட்சிகள் என்ன கரணம் போட்டாலும் இங்கே காலூன்ற முடியாததற்கு என்ன காரணம்? மாநில கட்சிகள் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லாதது தானே!  மத்தியில் ஆளும் பாஜகவையே அனாதையாக அலைய விட்டிருக்கிறோம். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கும் மோடி என்ற ஊடகங்களால் உருவாக்கப்பட்ட அலை அடித்த போதும் இங்கு ஒரு சலசலப்பும் இல்லையே!
2G ஊழல் செய்தது திமுக தானே என்று சொல்வோரே சற்று கேளுங்கள். திமுக ஊழலற்ற பரிசுத்தமான கட்சி என்று சொல்வது எனது நோக்கமல்ல. அனைத்து கட்சியிலும் ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்வது இங்கே வாடிக்கை தான். 'அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டும் கார்பரேட் கம்பெனிகள் அதில் ஒரு பகுதியை துறை சார்ந்த அமைச்சருக்கு லஞ்சமாக வழங்கும் ' என்பதுதான் கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்குமான லஞ்ச சூத்திரம். அதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல.
அப்போது அந்த 'ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி'?!!
பகிரங்க ஏலம் மூலமாக 2G அலைக்கற்றையை எடுத்து ஏகபோக லாபம் ஈட்ட நினைத்த முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் செய்த கைங்கர்யம் தான். ₹176000.... க்கு ஏலம் எடுத்தவன் அந்த பணத்தை எங்கிருந்து லாபத்தோடு எடுப்பான்?! நம்ம பாக்கெட்டிலிருந்து தானே?!! அந்த ஏலத்தொகை கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றே. 3G அலைக்கற்றையே 36000 கோடிக்குத்தான் ஏலம் போயிருக்கிறது என்பதை அறிக. நேற்று நான் போட்ட டேட்டா 1.5GB@₹264 போன மாதம் அதே விலை ஆனால்2GB ! டேட்டா பயன்படுத்தும் நண்பர்களே 3 மாதங்கள் தொடர்ந்து டேட்டா சேவை ஒரே விலையில் இருந்தது உண்டா?! பகிரங்க ஏலம் மூலமாக இப்போது மொத்தமும் அவர்கள் கையில். பொன்முட்டை இடும் வாத்தை அறுத்து பார்த்த கதைதான்.

Tuesday, May 3, 2016

ஒரு கடிதம் எழுதினேன்...

'அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்....'
'காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்...'
'ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்...'
'காலெமெல்லாம் காதல் வாழ்க...'
'நிலா நீ வானம் காற்று...'
'பூவே இளைய பூவே...
தம்பி ராமகிருஷ்ணா கூச்சப்படாமல் மாற்றங்களையும் படித்துக் காட்டவும்'
இந்தப் பாடல்கள் எல்லாம் கடிதம் வழி காதல் வளர்த்தவை. கடிதங்கள் பரிமாறாத காதலர்கள் அனேகமாக இல்லை எனலாம். இதுபோலவே கடிதங்கள் மீது காதல் இல்லாதவர்கள் இல்லவே இல்லை என்றே கூறலாம். அப்போதெல்லாம் நமது வீட்டின் முன்னால் தபால்காரர் நிற்பதைக் காணும் போது அவ்வளவு பரவசமாக இருக்கும். கணவனிடமிருந்து மனைவிக்கு, காதலனிடமிருந்து காதலிக்கு, பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு என்று வகை வகையாக உறவுப்பாலத்தின் முக்கிய கண்ணியாக இருப்பதால் ஊரில் எல்லோருக்கும் பிடித்தமானவர் தபால்காரர்.
இப்போதைய தகவல் யுகத்தில் எதையும் உடனுக்குடன் பரிமாற இயல்கிறது. காத்திருப்பின் சுகம் மறைந்து போய்விட்டது. அப்போதெல்லாம் மரண செய்தி கூட குறைந்த பட்சம் 12மணி நேரமாகும் உரியவரை சென்றடைய. தந்தியை பார்த்ததுமே தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விடுவர். தந்தி என்றாலே மரணச்செய்தியாகத்தான் இருக்கும். இப்போது தந்தி சேவையே மரணித்து செய்தியாகிவிட்டது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கடிதம்  படித்துக்காட்டுவது மற்றும் எழுதிக் கொடுக்கும் வேலை மூலமாக கடிதங்களுடன்  அறிமுகம்.
'அடுத்த வாரத்துக்குள்ள பணம் வரலன்னா எல்லாரும் மருந்து குடிச்சு செத்து போவோம்' அப்டினு எழுதுப்பா"
"ஐய்யயோ நான் மாட்டேன்"
"இல்ல சாமி, அப்பதான் அந்த ஆளு காசு அனுப்புவாரு"
"வேணும்னா புள்ளைக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரி க்கு போக பணம் வேணும்னு எழுதட்டா?"
"சரி சாமி"
இந்தமாதிரி கடிதங்கள் எழுதவும் வேண்டியிருக்கும்.
சற்றேறக்குறைய தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய பின்னரும் தங்கள் எதிர்ப்புகளையெல்லாம் கேள்விகளாக கேட்டு ஜோசியரின் ரீல் சுற்றும் வேலையை இலகுவாக்கி விடும் வாடிக்கையாளர் போல முழு கடிதத்தையும் படித்துக்காட்டிய பின்னும் 'வேறு எதாவது எழுதியிருக்கா?' என்று திரும்ப திரும்ப கேட்பார்கள்.
குறைவாகப் படித்தோரின் கையெழுத்து அழுத்தம் திருத்தமாக இருக்கும் பிழைகள் இருப்பினும் இலகுவாக திருத்தி படித்து விடலாம். மெத்தப் படித்தோர் சேர்த்து எழுதறேன் என்று கிறுக்கி தள்ளி விடுவார்கள். சூர முள் நடுவே இருந்து ஒவ்வொரு பழமாக உதிர்த்து எடுப்பது போல ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்து பின் கோர்த்து வாக்கியமாக சொல்ல வேண்டும். அதனால் இந்தமாதிரி கடிதங்களை மனதினுள் rough draft எடுத்து அதை fair draft ஆக வெளியே சொல்ல வேண்டும். முக்கியமாக எதிர் வீட்டுமாமாவின் லெட்டரை நானோ என் அக்காவோ அன்றி வேறு யாராலும் படிக்க இயலாது. சில இடங்களில் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயிருக்கும் வார்த்தைகளை யூகித்து இட்டு நிரப்ப வேண்டி இருக்கும்.
"எப்போ வரேன்னு எதாவது எழுதியிருக்குதாப்பா?" என்று எதிர்பார்ப்போடு கேட்கும் சமீபத்தில் திருமணமான அக்காக்களிடம்,
"போன மாசம் தானக்கா போனாரு!!" என்று விவரம் புரியாமல் அபத்தமாய் கேட்டதுமுண்டு.
பலதரப்பட்ட கடிதங்களை கண்டு வளர்ந்த எனது கடிதம் ஒன்றும் முரசொலியில் வரும் கலைஞரின் கடிதத்தையோ இந்திராவுக்கான நேருவின் கடிதத்தையோ போன்ற செவ்வியல் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
முதல் வரியில் அம்மா அப்பா நல விசாரிப்பு.இரண்டாம் வரியில் நன்றாக படிப்பதாக(?!) கூறல். மூன்றாம் வரி deadline உடனான பணத்தேவை காரணத்தோடு. அடுத்து நன்றி. இவ்வளவுதான். ஒவ்வொரு கடிதத்திலும் எனது விடுதி விலாசம் தெளிவாக எழுதி விடுவேன். மணியார்டர் இலகுவாக விரைந்து வரவேண்டுமல்லவா?!.
பட்டப் படிப்பு முடித்தபோது எல்லோரிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன். ஒருவருக்கும் கடிதம் எழுதினேனில்லை. காதல் கடிதம் எழுதும் வாய்ப்பு அமையவே இல்லை(அவ்வ்வ்..!!). மனைவிக்கு கடிதம் எழுதிக்கொள்ளலாம் என்று வாளாவிருந்துவிட்டேன். அதற்குள்ளாக தகவல் புரட்சியின் விளைவாக செல்போன் வந்து தொலைத்து விட்டது.

Saturday, April 30, 2016

முந்திரித்தோப்பும் மாலைநேர படிப்பும்.


நாடு நகரம் மாட மாளிகை எல்லாம் விட்டு வனவாசம் சென்ற ராம்ஸ்&கோ மன நிலையில் பரீட்சை சமயத்தில் நாங்களும் புத்தகத்தோடு வனவாசம் புகுவதுண்டு. நண்பர்கள் அனைவருமே தாங்கள் அமரும் முந்திரி கிளையையே ரொம்ப சவுகரியமானதாக கொண்டு படிப்பில் மூழ்கிவிடுவர். எனக்கோ புரிந்த பாடம் அதிக நேரம் எடுக்காது புரியாத பாடம் படிக்கப் பிடிக்காது. நான் ஒவ்வொருவனுடைய கிளையையும் கேட்டு கேட்டு மாற்றி பொழுது போக்கிக் கொண்டே கிளைமாக்ஸ்க்காக காத்துக் கொண்டிருப்பேன்.

அது என்ன கிளைமாக்ஸ்?!! பக்கத்து மாந்தோப்பு, வெள்ளரிக்காய் போன்று புளிப்பற்ற மொறு மொறு ஒட்டு மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்த்து பாரம் தாங்காமல் தரையோடு தேய்ந்தபடி தொங்கும். கேட்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா?! அதனால் தான் அந்த தோப்பின் firewall(முள் வேலி) ஐ தாண்டி மரத்தை hack செய்து போதுமான அளவுக்கு மட்டும் download செய்து கொள்வோம். ஆமாம் it's an ethical hacking.
அதனால் தான் அந்த வனவாசம் செல்ல அனைவரும் ஆவலோடு இருப்போம். வழியில் எங்களை புத்தகத்தோடு பார்ப்போரெல்லாம் என்னை காட்டி 'இப்படி  படிக்கிற பிள்ளை கூட கூடினாதான உருப்புடலாம். இப்ப பாக்க எம்புட்டு ஆசையா இருக்கு!' என்று சகட்டு மேனிக்கு புகழ்ந்து தள்ளுவார்கள். நாங்கள் நமட்டு சிரிப்போடு கடந்து போவோம்.

Thursday, April 28, 2016

பழைய போனுக்கான பிரிவு மடல்

இன்றோடு  பிரியப்போகிறேனடா உன்னை
எனது மூன்றாண்டு கால தோழனே!
என்னைச் சுற்றி எல்லோரும் 'ஸ்மார்ட்'ஆனபோது
என்னை 'ஸ்மார்ட்' ஆக்க வந்தவன் நீ!
பர்ஸை பலநூறு முறை தடவிப் பார்த்து இறுதியாய்
'ஈ-பே 'யில் கேட்டேன் உன்னை !
'செல்ஃபி' கேமரா இல்லை
பின்புற கேமராவோ மூணரை எம்பி தான்
எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தபோது
நீயோ ஐநூறு சொச்சம் 'ரேமில்' தவழ்ந்து கொண்டிருந்தாய்!
இருந்தாலும் பல அற்புதமான தருணங்களை உறைய வைத்தது
உன் சின்ன கேமராதான்!
கேட்ட போதெல்லாம் வழங்கும் அட்சய பாத்திரமாய்
என் சந்தேகங்களை 'கூகுலிட்டு' துரிதமாக  வழங்கினாய்!
என் மகனுக்கு உனது 'திரை'யரங்கில் சதுரங்கம் பயிற்றுவித்த
ஐம்பது விழுக்காடு ஆசான் நீயே!
இசையில்லா பேருந்து பயணங்கள் எனக்கு இசைவில்லை அப்போது
நீ வந்த பின் இசையுடன் சேர்ந்து 'இண்டர்நெட்டோ' , 'ஈ-புக்கோ'
பார்க்க முடிவதால் கட்டை வண்டி பயணம் கூட கடினமில்லை!
இலகுவாக ஒரு தமிழ் 'கீ போர்டு' வேண்டி இணையத்தை குடைந்தபோது
கூட்டுக்குடும்பத்தில் பிள்ளைக்காக திண்பண்டத்தை
தனியே எடுத்து வைத்திருக்கும் தாய் போல
உனது 'செட்டிங்ஸ்'லிருந்து எனக்காக
 எளிய தமிழ் 'கீ போர்டு' வழங்கியவன் நீ!
இதுவா அதுவா என நான் வார்த்தைகளோடு மல்லுக்கட்டுகையில்
சிறப்பான வார்த்தை காட்டி சிரித்து நிற்பாய் நீ!
நீ, நான், நிலா சேர்ந்து இருக்கும் போதெல்லாம் என் சிந்தையில்
சில நல்ல குறுங்கட்டுரைகள் விரல் வழி வந்து உன்னை தழுவும்!
'தங்கமீனுக்கான தூண்டிலில் தவளை பிடிப்பதா'
என்றெண்ணி உன்னை சினிமா பார்க்க பயன்படுத்தியதில்லை நான்!
மூன்றாண்டுகள் உருண்டோடி விட்டன
மாற்றம் ஒன்று தான் நிலையானதல்லவா?!
ஆதலால்  நானும் மாறிவிட்டேன்
'சோனி'யிலிருந்து 'மோட்டோ'விற்கு!!



"என் கண்மணி என் காதலி இளமாங்கனி
உனை பார்த்ததும் சிரிக்கின்றதோ சிரிக்கின்றதோ..."
...
...
"தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு "
"வாரணாசி வந்தாச்சி எறங்கு"
'யார்ரா அது'
அட கண்டக்டர்!
பாடல் மீண்டும் ஒளிக்கத் தொடங்கியது
பஸ் மெல்ல வேகமெடுத்தது.
"யாருய்யா அது ஒரு டிக்கெட் கொறயுது?!"
என்றார் கண்டக்டர். இதற்கு முன்பாக ஒரு நான்கு முறை தலையை எண்ணியபடி சென்றார்.
நான் எனது டிக்கெட்டை தொட்டுப்பார்த்துக் கொண்டேன். எனது இடத்தை நெருங்கிய கச்டக்டர் முன் இருக்கை பெரியவரை துயிலெழுப்பினார்
"யோவ் ஏன்யா உயிர வாங்குறீங்க எங்கய்யா எறங்கனும்?'
அலட்சியமாக அரைக்கண்ணை திறந்தவாறு " ம்ம் ...கீழப்பழுவூர் " என்றார்
"யோவ் அதுக்கப்புறம் மூணு ஸ்டாப் தாண்டி இப்போ தவுத்தாகுளமே வரப்போவுதுய்யா"
அதற்காக சற்றும் மனம் தளறாத 'விக்கிரமாதித்தன்' "இங்க நெறய பஸ் நிக்காது நீ அரியலூர் கொடு" என்று ஏழு ரூபாய்க்கு கொத்தாக பணத்தை அள்ளி கொடுத்தார். தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தையும் டிக்கெட்டையும் வழங்கினார்.
"நைட் ட்ரிப்ல இதே தொல்லையா போச்சு. தண்ணிய போட்டுட்டு வந்து ஏறிகிறானுவோ எழுப்பி எழுப்பி எறக்கி விட வேண்டியிருக்கு!"
"ரிட்டன் வரும்போது 'வாரணாசி' எடுங்க அப்போது தான் கீழப்பழுவூர் ல எறக்கி விடுவாங்க" என்றார் ஒரு குறும்புக்கார சக பயணி.
# நைட் ட்ரிப் பஸ் ஏறும் போது ஒரு 'கால்' எறக்கிட்டு ஏறுனா சும்மா ஜில்லுன்னு தூங்கிய படி வரலாம்னு நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். மனிதர் நான்கு கால்களை எறக்கியிருப்பார் போல!!

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...