Sunday, September 22, 2013

கருங்குழி


கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளை என்பன, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது. பெரிய மகலனிக் விண்மீன் கூட்டத்துக்கு முன்னேயுள்ள கருங்குழியின் தோற்றம். ஈர்ப்பு வில்லை விளைவு காரணமாக மகலனிக் கூட்டத்தின் வடிவம் உருப்பெருத்து இரண்டாகத் தெரிகின்றது. மேலே குறுக்காக இந்த விளைவு காரணமாக பால்வெளி மண்டலம் வளைந்து தோற்றமளிக்கின்றது. இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி விண்மீன்கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வளிமங்களைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது. ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புச் சக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவொன்றை 1783 ஆம் ஆண்டில் தொழில்சாராப் பிரித்தானிய வானியலாளரான வண. ஜான் மிச்சேல் (John Michell) என்பவர் முன்வைத்தார். 1795 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் இது போன்ற முடிவொன்றை வெளியிட்டார். இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருங்குழி பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது. போதிய அளவு பெரிதான ஒரு திணிவு போதிய அளவு சிறிதான வெளிப் பகுதி ஒன்றில் இருக்கும்போது சூழவுள்ள வெளி உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்தப் பொருளும் கதிர்வீச்சும் தப்பி வெளியேறாதபடி தடுத்துவிடும். பொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற சிறப்பொருமையுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, குவாண்டம் பொறிமுறையின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஹோக்கிங் கதிர்வீச்சு எனப்படுகின்றது.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...