Tuesday, March 20, 2018

வானம் வசப்படும்-3 லஞ்ச லாவண்யங்கள்



நாவலில் கனகராய முதலி என்கிற ஒரு கிருஸ்துவர் துய்ப்ளெக்ஸ்க்கு துபாஷாக இருக்கிறார். கிருஸ்துவர் என்பதால் மாதாம் துய்ப்ளெக்ஸ் (திருமதி துய்ப்ளெக்ஸ்) அவர் மீது பாசம் கொண்டவர். ஆனந்தரங்கம் பிள்ளை கனகராய முதலிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர். கவர்னருக்கு ஆனந்தரங்கம்பிள்ளையின் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகம்.
கனகராய முதலி சர்க்கரை வியாதியஸ்தர். ஒரு மனைவி மட்டுமே. குழந்தைகள் கிடையாது. ஒரு பையன் சிறுவயதில் மாண்டு போய்விட்டான். அவனது விதவை மனைவி உண்டு. தம்பி தானப்ப முதலி இருக்கிறான். அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கிறார். திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போகிறார்.
அவருடைய சொத்து மதிப்போ லட்சம் வராகனுக்கு மேல் தேறும். எனவே உடனடியாக தானப்ப முதலி மாதாம் துய்ப்ளெக்ஸை சந்தித்து பேசுகிறான். அண்ணனின் சொத்து எனக்கே வர வேண்டும். மனைவி மருமகள் இருவரும் விதவையர்கள் அவர்களது உணவு தேவைக்கு என்ன வேண்டுமோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். (பெண்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அதுவும் விதவையர் என்றால் இன்னும் மோசம்.) கனராய முதலியின் மனைவி ஆனந்த ரங்கம் பிள்ளையை சந்திக்கிறாள். தானப்ப முதலியும் சந்திக்கிறான்.
வருகிற சொத்தில் மூன்றில் ஒரு பாகம் கவர்னருக்கு தந்து விடுவது என்ற ஏற்பாட்டில் பஞ்சாயத்து நடக்கிறது. சொத்து மதிப்பை குறைத்துக் காட்டி அரசருக்கு கிடைக்கும் கமிஷனை குறைக்க ஆனந்த ரங்கம் பிள்ளையை சந்திக்கிறான் தானப்ப முதலி.
இறுதியாக சொத்து தானப்ப முதலிக்கு என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறுகிறது. கவர்னர் கமிஷன் அல்லாது மாதாம் துய்ப்ளெக்ஸ்க்கு தனியே பணம் தரப்படுகிறது. மேலும் அண்ணன் பார்த்த துபாஷ் பதவி தனக்கே வேண்டும் என்று மாதாமை வைத்து லாபி செய்ய முயற்சிக்கிறான் தானப்ப முதலி அதற்கு தனியாக லஞ்சம் தர முன்வருகிறான்.
மேலும் ஒரு ஐயர் ஒருவரும் துபாஷ் பதவி தனக்கு வேண்டும் என்கிறார். அவரும் லஞ்சம் தர முன்வருகிறார். தானப்ப முதலி கிருஸ்துவர் ஆகையால் மாதாமுக்கு அவர் பக்கம் பாசம் கொஞ்சம் அதிகமாக பொங்குகிறது. இதனை ஐயரிடம் வாய்விட்டே கூறிவிடுகிறார். இதை கேட்ட மாத்திரத்தில் துபாஷ் பதவிக்காக பூணூலை அறுத்தெறிந்து விட்டு கிருஸ்துவராக மதம் மாறி ஞானஸ்தானம் பெறுகிறார்.
அடடே இந்த பதவி சரியான பணம் காய்ச்சி மரம் போல தெறிகிறதேகவர்னரும் மாதாமும் யாருக்கும் உத்திரவாதம் வழங்க வில்லை. ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சூசகமாக இவர் இவர் இவ்வளவு பணம் தர முன்வருகிறார்கள். ’நீ துபாஷாக வரவேண்டுமானால் அதற்கு ஒரு விலை தந்தாக வேண்டும்என்று மறைமுகமாக உணர்த்துகிறார் கவர்னர். ஆனால் பிள்ளையோ இதன் பொருட்டு லஞ்சம் தர தயாராக இல்லை. பதவி இல்லாவிட்டாலும் ஒரு துபாஷ் என்ன செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்கிறாரோ அதையெல்லாம் செவ்வனே செய்துவருகிறார் பிள்ளை. எப்படியும் பதவி தனக்கே வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு.
கவர்னரின் படைப்பிரிவுக்கு ஆள் எடுக்கிறார்கள். அதற்கும் தகுதி இருப்பவர்களை காட்டிலும் லஞ்சமாக பணம் தருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளதாக நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இஸ்லாமிய குறுநில மன்னர் ஒருவர் ஆங்கிலேயரிடம் சிறைபடுகிறார். அவர்களுடைய மனைவி மக்கள் புதுச்சேரியில் தஞ்சம் அடைகிறார்கள். அவர்கள் தங்கள் கணவரை சிறையில் இருந்து மீட்டுத்தர கோருகிறார்கள். 15 லட்சம் வராகன்கள் பணம் கட்டினால் விடுதலை கிட்டும் என்று கூறி பணம் பெற்றுக் கொண்டு 7 லட்சம் வராகன்கள் கட்டி அவரை சிறை மீட்டுத் தந்து விட்டு மீதியைலவட்டிக்கொள்கிறார்கள் கவர்னரும் மாதாமும்.
கிடைக்கும் வரைக்கும் லாபம் என்கிற ரீதியில் தான் கவர்னர் பதவியை துய்ப்ளெக்ஸ் பயன்படுத்தி தனக்கு சொத்துக்களை சேர்த்துக் கொண்டுள்ளார். என்பது நாவலின் வழி தெரிகிறது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...