ஆசிரியர் – த.வி.வெங்கடேஸ்வரன்
பதிப்பகம் – பாரதி
புத்தகாலயம்
என்.ராமதுரை அவர்களுக்கு அடுத்ததாக எனது அறிவியல்
தாகத்திற்கு பிஸ்லரி வாட்டர் ஊற்றி தாகசாந்தி செய்தது த.வி.வெங்கடேசன் அவர்கள் எழுதிய
பல கட்டுரைகள் தான் என்றால் அது மிகையில்லை.
சென்ற ஆண்டு பாரதிபுத்தகாலயத்தில் இருந்து ஒரு
நான்காயிரத்து ஐநூறு ரூபாய்க்கான புத்தகத்தை மூவாயிரம் ரூபாய்க்கு தருவித்துத் தந்தார்
நண்பர் முத்துக்கண்ணன். அவர் கொடுத்த பட்டியிலில் என்னிடம் இருந்தவை நீங்களான ஏனைய
தவிவெ அவர்களின் அனைத்து புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.
இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உலகில் பல மாற்றங்களை
கண்டு வியந்த நூற்றாண்டு. ஏனென்றால் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நியுட்டன்
கட்டி வைத்து விட்டுச் சென்ற பாரம்பரிய இயற்பியல் என்னும் எஃகு கோட்டையை செங்கல் செங்கல்லாக
பிரித்து மேய்ந்து விட்டனர் சென்ற நூற்றாண்டு விஞ்ஞானிகள்.
“Nature and Nature’s Laws lay hid in night
God said, let Newton be! And all was light”
இதுதான் நியுட்டன் கல்லறையில் பொறிக்கப் பட்டிருக்கும்
வாசகம்.
இயக்கவியல் மற்றும் ஈர்ப்பியல் சார்ந்த பல அறிவியல்
பிரிவுகள் நியுட்டன் போட்டுத்தந்த ராஜபாட்டையில் கம்பீரமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது
வரை அணு என்பது மேலும் பகுக்க இயலாத சிறிய துகள்தான்.
1895 ராண்ட்ஜென்ட் எக்ஸ்கதிரை கண்டறிந்த பின்னர்
ஏற்பட்ட பற்பல அடுத்தடுத்த ஆய்வுகள் நியுட்டனின் பாரம்பரிய இயற்பியலின் போதாமையை உணரத்
தொடங்கின. சிறுவயதில் எனது கையில் சிக்கிய எங்க வீட்டு பிளிப்ஸ் ரேடியோ போல குரூக்ஸ்
என்பவர் கண்டறிந்த குடுவை (வெற்றிடக்குழாய் மின்னோட்ட ஆய்வுக்கு பயன்படுத்தப் பட்டது)
நம்ம விஞ்ஞானிகள் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டது. அப்படித்தான் நம்ம ராண்ட்ஜென்ட்
கையில் சிக்கியது. அவர் மின்னோட்டத்தை நிகழ்த்தியபோது கேத்தோடு கதிர்கள் (இது வேற ஒன்றும்
இல்லைப்பா, எலக்ட்ரான் தான். ஆனா அப்போதுதான் எலக்ட்ரான் என்றால் என்னவென்றே தெரியாதே!!)
புறப்பட்டு ஆனோடு நோக்கிச் சென்றது. வழக்கமாக எல்லோருக்கும் அந்த ரிசல்ட் தான். ஆனால்
ராண்ட்ஜென்ட் கவனித்தது குழாயை தாண்டி ஒன்பது அடி தள்ளி உள்ள சுவற்றில் ஒளிர்தலை ஏற்படுத்தியது.
துணி, கறுப்பு காகிதம் அட்டை என எதை வைத்தாலும் ஒளிர்தல் நிற்கவில்லை ”அடப்பாவி மக்கா
யாருலே நீ செத்தப்பயலே என்ன வச்சி மறச்சாலும் நிக்கமாட்டேக்கிற பேதில போவான்” என்று
திட்டிக் கொண்டே கையைக் கொண்டு போனபோது எலும்புக் கூடாக தெரிந்தது. வாடா என் செல்லக்
குட்டி, நீ யார்னே தெரியல இருந்தாலும் உனக்கு எக்ஸ் என்று பெயர் வைக்கிறேன் என்றாராம்.
“நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்“ என்று
கவிஞர் எழுதியது போல எலக்ட்ரான்கள் மோதி வினைபுரிவதால் உருவாவது தான் எக்ஸ் கதிர்கள்
என்று பிற்கால விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தாலும் அது கண்டுபிடிக்கப் பட்ட காலகட்டத்தில்
எலக்ட்ரான் என்ற ஒன்று கண்டுபிடிக்கப் படவே இல்லை என்பது தான் சோகம். அதுவும் அணுவின்
உள்ளே உள்ள துகள் என்று சொன்னால் கட்டையால் அடித்து மண்டையை பிளந்திருப்பார்கள்.
ஆக, நியுட்டனின் எஃகு கோட்டையில் முதல் செங்கல்லை
பிரித்தது நம்ம ராண்ட்ஜெனின் கண்டுபிடிப்பு தான் என்று நான் கூறவில்லை நூலாசிரியர்
கூறுகிறார்.
அணுவைப் பற்றி அறிவியல் சமூகம் பெரிதாக அலட்டிக்
கொள்ளாத காலகட்டத்திலேயே கதிரியக்கம் கண்டறியப் பட்டு ஆல்ஃபா, பீட்டா மற்றும் காமாக்
கதிர்கள் என்கிற மும்மூர்த்திகளின் கீர்த்தியை உலகம் அறிந்து விட்டது. அதற்கு பிள்ளையார்
சுழி போட்டவர் ஹென்றி பெக்கொரல் என்று 1992 ல் நான் பத்தாம் வகுப்பு படித்தபோதே அறிந்து
கொண்டேன். (இல்லையா பின்ன அது முக்கியமான ஐந்து மார்க் கேள்வியாச்சே!) “இது என்ன சப்போட்டே
இல்லாம நிக்குது?!“ என்று வடிவேல் வியந்து நோக்கியது போல லைட் சோர்ஸ் இன்றி தானாகவே
மிளிரும் கல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. அந்த கதிர்களை யுரேனியக் கதிர்கள்
என்று அழைத்தனர்.
அதன்பின்பு ரேடியம் குறித்த ஆராய்ச்சியில் குடும்பமே
கலந்து கொண்டு ஆய்வு செய்து பல இருட்டில் கிடந்த பல அறிவியல் உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சியது கியூரி குடும்பம்.
ஆமாம், பியாரி கியூரியும் மேரிக் கியூரியும் கதிரியக்கத் தனிமங்கள் தொடர்பான பல ஆய்வுகளை
செய்து ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும்
நோபல் பரிசு பெற்றதோடு இல்லாமல் மேரிக் கியூரி இயற்பியல் துறை மற்றும வேதியல் துறை
இரண்டிலுமே நோபல் பரிசுளை பெற்றுள்ளார். ஒன்று அழிந்து மற்றொன்று உருவாகும். ஆனால்
அள்ள அள்ள குறையாமல் வரும் கதிர்வீச்சுகள் எதில் இருந்து வருகின்றன என்கிற மர்ம முடிச்சு
மட்டும் அவிழ்க்கப் படாமல் இருந்தது.
அப்புறம் குரூக்ஸ் குடுவை வழியாக ஆய்வுகள் பல
செய்த ஜெ.ஜெ.தாம்சன் ஆய்வுகள் பல செய்து எதிர்மின் சுமை உள்ள எலக்ட்ரான்கள் லட்டின்
உள்ளே ஆங்காங்கு முந்திரிகள் பொதிந்துள்ளது போல அணுவின் உள்ளே உள்ளன என்று முடிவு செய்தார்.
அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள் என்பது வரை சரிதான் ஆனால் அது முந்திரி பருப்பு போல அல்ல
என்ற படி “மே ஐ கம் இன்?” என்றார்கள் அடுத்தடுத்து வந்த விஞ்ஞானிகள்.
அடுத்து வந்த மாக்ஸ் பிளாங்க் என்பவர் ஒரு அஸ்திவாரம்
தோண்டி “குவாண்டம்“ என்கிற கல்லை நட்டு வைத்தார். ஒளி அலைகள் எனர்ஜி பொட்டலங்களாகத்தான்
பரவுகின்றன என்கிற கருதுகோளை முன்வைத்தார். ”என்னய்யாது ஏதோ விபூதி பொட்டலம் மாதிரி
சொல்ற?”என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1928 ல் அவரை நோபல் பரிசால் அங்கீகரித்தது
அறிவியல் உலகம்.
அணுவின் மையத்தில் உட்கரு உள்ளது என்பதை கண்டறிந்து
உலகிற்கு சொல்ல ரூதர்ஃபோர்டு ஆல்ஃபா கதிர்களோடு வந்தார். அவரின் ஆய்வில் தான் கால்பந்து
மைதானம் அளவில் இருக்கும் அணுவில் கால்பந்து தான் அணுக்கரு என்றால் அதன் எல்லையில்
கிடக்கும் ஒரு நெல்லிக்காய் தான் எலக்ட்ரான் என்கிற அளவில் அணுவைப் பற்றி ஒரு பிம்பம்
உருவானது. ஆமாம் அணுவில் 99.99 சதவீதம் வெற்றிடம் தான் இருக்கு.
மேற்கூறிய எல்லா கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு
ஒரு புதிய அணுக்கொள்கையை வகுத்து அளித்தவர்தான் நீல்ஸ்ஃபோர். இவர் ஜெ.ஜெ.தாம்சனின்
சீடகோடி.
அடுத்து என்ரிகோ ஃபெர்மி, ஓட்டாஹான் மற்றும் லைஸ்
மிட்டனர் ஆகியோர் நியுட்ரான் கொண்டு அணுக்கருவைத் தாக்கும் போது அணுவில் உருவாகும்
மாற்றம் குறித்து ஆய்வுகள் செய்தனர். ஒத்த மின்சுமை உள்ள துகள்கள் ஒன்றையொன்று விலக்கும்,
ஆனால் அணுவின் உட்கருவில் எப்படி இந்த நேர்மின்சுமை உடைய புரோட்டான்கள் சமர்த்துப்
பிள்ளைகளாக ஒற்றுமையாக நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்து உள்ளன? அங்கே தான் புரோட்டான்களின் விலக்கு விசையும் அணுக்கருவின்
பிணைப்பு விசையும் சமரசம் செய்து கொள்கின்றன. இந்த சமநிலையை உடைக்கும் போது அணுவை பிளக்கலாம்
என்று கண்டறிகின்றனர்.
அந்த பிளவில் இருவேறு தனிமங்கள் உண்டாகின்றன,
மேலும் நிறை குறைவு ஆற்றலாக மாறுகிறது என்பதை E=Mc2 என்கிற ஐன்ஸ்டீன் சமன்பாடு
காட்டிக் கொடுக்கிறது. மேலும் இது அமெரிக்காவின் ராணுவ வலிமையை கூட்டியும் கொடுத்தது
என்பதெல்லாம் உலகறிந்த உண்மை.
ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை ஒளிமின்விளைவு (சூரிய
ஒளிக்கதிர்கள் ஒரு தகட்டில் விழும் போது அதில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியாகின்றன
– என்று கண்டறிந்து சோலார் பேனல் உருவாக காரணமானார்) பற்றிய ஆய்வு அணுக்கரு இயற்பியலைப்
பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அப்புறம் “நிறை” மற்றும் “ஆற்றல்“
இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் நிறை ஆற்றலாக மாறும் என்று கூறி உலகிற்கு ஒரு சமன்பாட்டை
வழங்கினார். அப்புறம் குவாண்டம் இயற்பியல் மற்றும் அவரது மாஸ்டர் பீஸ் ஆய்வான “சார்பியல்
தத்துவம்“ ஆகியவற்றை உலகிற்கு வழங்கியிருந்தாலும் அவருக்கு நோபல் பரிசை பெற்றுக் கொடுத்தது
ஒளிமின்விளைவு ஆய்வு தான். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி
என்றால் அவர் ஐன்ஸ்டீன்தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா?
“சார் ஏதோ புத்தகம் பற்றி எழுத வந்துட்டு இப்படி…..?”
“நான்
மேலே கூறிய எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டது இந்த புத்தகத்தை படித்து
தான்பா!!“
பள்ளி
மாணவர்களுக்கு அறிவியல் மீது தீராக் காதலை ஏற்படுத்த வல்ல ஒரு புத்தகம் இது. அனைவரும
வாங்கிப் படியுங்கள். வெறும் 112 பக்கங்கள் தான்.
”அடப்பாவி மக்கா யாருலே நீ செத்தப்பயலே என்ன வச்சி மறச்சாலும் நிக்கமாட்டேக்கிற பேதில போவான்” - யப்பா இது "G.P முத்து" வாய்ஸ் மாதிரி தெரியுது ... அங்கிட்டு பார்சல் பிரிச்சிக்கிட்டு இருந்த "G.P முத்து" வ இங்கிட்டு கூட்டிகிட்டு வந்தது யாரு?!
ReplyDeleteஹா ஹா... சும்மா காமெடிக்காக கலந்து கட்டி அடிக்கறது தான் சார். உங்க feed back க்கு நன்றி
ReplyDeleteபிளஸ் டூ வோட அறிவியலை ஓரங்கட்டி வெச்சிட்டோம்... இந்த மாதிரி சில புத்தகங்கள் தான் எங்களை பள்ளிக்காலத்திற்கு அழைச்சிட்டுப் போகிறது.. அருமையான அறிமுகம் சார்💐🎈
ReplyDelete