Saturday, March 30, 2024

கம்யூனல் ஜி.ஒ - பேராசிரியர் அன்பழகன்

வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) புத்தகம்: வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யுனல் ஜி.ஓ) ஆசிரியர்:பேராசிரியர் க.அன்பழகன் புத்தகம் “கம்யுனல் ஜி.ஓ“ உச்ச நீதி மன்றத்தால் முடக்கப்பட்ட நேரத்தில் “அவால்“ எல்லாம் எப்படி குதூகலம் அடைந்திருப்பார்கள் என்கிற கற்பனை (நையாண்டி தொனிக்கும்) உரையாடலில் ஆரம்பித்து வகுப்புரிமைப் போராட்டம் உருவான விதம் வளர்ந்த வரலாறு அரசியல் அமைப்பின் முதலாவது சட்டத்திருத்தம் மூலமாக சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டதோடு முடிகிறது. ஆழமான ஆய்வு சமூக நீதி குறித்த மிகச்சரியான பார்வை ஆங்காங்கே எள்ளல் என அருமையாக எழுதியிருக்கிறார் பேராசிரியர். (ஒரு இடத்தில் “உலக உத்தமர்“ என்று காந்தியை விளித்திருப்பார்). ”வர்ணாசிரம (அ)தர்மத்தைத் தோற்றுவித்து, ஜாதிக்கொரு தொழிலென மக்களை ஒப்புக்கொள்ள வைத்து, அதை ஒப்பாமல் மக்கள் புரட்சி எண்ணம் கொள்ளாமல் இருக்க மூடநம்பிக்கைகளையும், பொய்க்கதைகளையும் புகுத்தி அறிவை அடிமைப்படுத்தி, எவரேனும் அதற்கு மாறாகப் புரட்சி செய்தால் அடியோடு ஒழிக்க மனு (அ)நீதியை வகுத்து அதை அரசுகளெல்லாம் ஏற்ற நடக்கச் செய்தல்” படிக்கும் போதே தலைசுற்றும் அளவுக்கு சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தை ஆழமாக சமூகத்தில் வேரூன்றும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுகாலமாக ஒரு விஷ விருட்சமாக வளர்த்தெடுத்த பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரிக்கும் ஒரு அருமையான புத்தகம் தான் இது, பார்ப்பனரல்லாதோருக்கு கல்வி உரிமை கிஞ்சிற்றும் கிடையாது, படிப்பது பார்ப்பன மக்களின் ஏகபோக உரிமை என அனுபவித்து வந்த நிலையை மாற்ற1917 ல் நீதிக்கட்சி முயற்சித்து வெற்றி கொண்ட ஒரு அரசாணை தான் கம்யுனல் ஜி.ஓ. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்கிற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மத்தியில் 1920 களில் உதித்தது. என்னதான் பெரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்குள்ளே இருந்து வற்புறுத்தினாலும் பார்ப்பன சூழ்ச்சி அதற்கு செவிசாய்க்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வருவதற்கு காரணமே வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாததுதான். கம்யுனல் ஜி.ஓ என்ன சொல்கிறது? மொத்தம் உள்ள 12 இடங்களில் இந்து பார்ப்பனரல்லாதோருக்கு 5 பார்ப்பனருக்கு 2 முகம்மதியர்களுக்கு 2 கிருஸ்தவர்களுக்கு 2 (ஆங்கிலோ இந்தியர்கள் அடக்கம்) மற்றவர்களுக்கு 1(ஆதிதிராவிடர்கள் அடக்கம்) அதாவது 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனருக்கு 100க்கு 17 உத்தியோகங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆதிதிராவிடர்களுக்க 12 ல் ஒன்று அதுவும் ஏனையோர் என்கிற பிரிவில். இதை பார்த்தவுடன் பார்ப்பனர் நெஞ்சம் பதறுகிறது. ஆனாலும் அவர்கள் எதையும் தான் நேரடியாக எதிர்க்க மாட்டார்கள் அல்லவா? அவர்கள் இன்று வரை வைத்துக் கொண்டு வரும் ஓயாத ஒப்பாரியான “தகுதி“ மற்றும் ”திறமை” குறித்த நீலிக்கண்ணீர் வடிக்கலாயினர். இந்த நூலில் “தகுதி மற்றும் திறமை” என்கிற வெற்றுக் கூச்சலையும் அதன் பின்னால் உள்ள சூழ்ச்சியையும் ஒரு சேப்டரே ஒதுக்கி “வச்சு செஞ்சிருக்கார்” பேராசிரியர். என்னதான் அரசாணை போட்டாலும் கல்லூரி சேர்க்கையின் போதே பார்ப்பனிய “கைங்கர்யம்“ வேலை செய்துவிடும் என்பதால் கம்யுனல் ஜி.ஓ எந்த அளவில் பின்பற்றப் படுகிறது என்பதை கண்காணிக்க ”கல்லூரிக் குழு” என்கிற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது “கம்யுனல் ஜி.ஓ“ வை பின் வாசல் வழியாக வந்து எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும் ஆட்சியாளர்கள் “கலி முத்திடுத்து லோகம் கெட்டுடுத்து” தகுதி திறமைக்கு லோகத்துல மதிப்பில்லாமல் போயிடுத்து என்று நீலிக்கண்ணீர் வடித்து மெரிட்டுக்கு என்று 20 விழுக்காடு பெறுகின்றனர். பார்ப்பனிய ஒதுக்கீடு மற்றும் மெரிட் என்று இரட்டை வாசலை திறந்து கொண்டு மேலிட பதவி வகிக்கும் பார்ப்பனிய துணை கொண்டு கல்லூரிகளில் மற்றவர்களுக்கு உரிய இடத்தையும் அபகரிக்கிறார்கள். மேலும் கல்லூரிக் குழு வையும் கலைத்து விடுகிறார்கள். இருந்தும் கூட அவர்களின் ஆசை தீரவில்லை. அனைத்து பிரிவு மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசாங்கத்தில் 100 விழுக்காடு பதவிகளையும் நாமே வகிக்க வேண்டும் என்கிற பேராசையால் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ( இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு) சட்ட நுணுக்கத்தை காட்டி வெற்றிகரமாக நீக்கி விடுகிறார்கள். சென்னை மாகாணம் (அப்போது அது தானே பெயர்) முழுவதும் பள்ளி கல்லூரிகளில் போராட்டம் வெடிக்கிறது. இந்த காலத்தில் மக்கள் பணத்தில் கொழுத்த சூப்பர் ஸ்டார் ”சிஸ்டம்” இஞ்சினியர்கள் கூட போராட்டம் தவறு என்று கூறி இளைஞர் எழுச்சியை காயடித்து விட்டு திரும்ப எழுச்சி வரட்டும் அப்போ வரேன் என்று பிதற்றுகிறார்கள். மாணவர்கள் தங்களது படிப்பு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். அரசியல் சட்டம் புனிதமானது. அந்த சட்ட திட்டங்களை நாம் தான் மதிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் மீது பார்ப்பனியம் கோமியம் தெளிக்க பார்க்கிறது. போராட்டக் காரர்களோ “மக்கள் நலனுக்காகத் தான் சட்டம், நலன் கெடும் என்றால் சட்டத்தை திருத்தலாம் தவறில்லை” என்று சட்ட திருத்தத்திற்கான வழிமுறையும் சட்டத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டுகின்றார்கள். (உப்புக்கு பிரயோஜனம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு எழுச்சியோடு போராடிவிட்டு ”நீட்“ டில் கோட்டை விட்டிருக்கிறோம் நாம்) வேறு வழியின்றி கல்வியில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் முதலாவது சட்டத்திருத்தமாக 1951 ல் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. ஆம், அரசியல் சட்டத்தையே மக்கள் நலனுக்காக முதல் முறை திருத்தம் செய்ய காரணமாக இருந்தது திராவிடம். அப்போது கோட்டை விட்டிருந்தோம் எனில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பலபேர் கல்லூரியை பார்த்திருக்க இயலாது. இடஒதுக்கீடு என்பது என்னவோ ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே அனுபவிக்கும் “சலுகை“ என்கிற எண்ணம் பெரும்பாலான பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மத்தியில் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். அவர்களே தகுதி திறமை பற்றி பேசி சக ஆதிதிராவிட மாணவர்களை சிறுமை படுத்த முயல்வதையும் கண்ணுற்றிருக்கிறேன். இடஒதுக்கீடு என்பது உரிமை என்பதோ அதன் அடிப்படையோ தெரியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலபேர், அமர்ந்திருக்கும் கிளை மீதே கோடரி வீசும் போதெல்லாம் ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே இடஒதுக்கீட்டு “சலுகை“க்காக சிலுவை சுமந்திருக்கிறார்கள். தற்போது 28 மதிப்பெண் எடுத்துவிட்டு EWS என்கிற ஒதுக்கீட்டில் வங்கிப் பணியாளர் பணியினை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்களேன் “தகுதி திறமை“ என்னவாயிற்று என்று, அவா எல்லோரும் “செலக்டிவ்“ செவிடர்களாகி விடுவார்கள். 80 மதிப்பெண் எடுத்த எஸ்.ஸி, ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்காத பணி 28 மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பில் பிறந்த வருடம் 8 லட்சம் வருமானம் ஈட்டும் ”ஏழை”களுக்கு கிடைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை என்கிற புரிதலாவது குறைந்தபட்சம் தேவை.

Sunday, March 24, 2024

எருமை மறம் - மௌனன் யாத்ரிகா

நூல் - எருமை மறம் ஆசிரியர் - மௌனன் யாத்ரிகா பதிப்பகம் - நீலம் விலை - ரூ.200 நூலாசிரியர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே மௌனன் யாத்ரிகா அவர்களின் "அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது" என்கிற ஜனரஞ்ச கவிதை தொகுப்பையும் "வேட்டுவம் 100" என்கிற அருமையான வேட்டையாடுதல் பற்றிய கவிதை தொகுப்பையும் வாசித்துள்ளேன். வேட்டுவம் நூறு கவிதை தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் நமக்கு வேட்டையாடுவதை அருகில் இருந்து பார்க்கும் பரவச உணர்வை தருவது போல் எழுதியிருப்பார். அதோடு மட்டுமின்றி அவர்களை அவரின் ஒவ்வொரு கவிதையும் நமது மனக்கண்ணில் காட்சிகளாய் விரியும் வகையில் தெளிவாக வார்த்தைகளால் காட்சிப்படுத்தி இருப்பார். அந்த நூலை வாசித்த போது நிச்சயமாக இது பெரிய பெரிய விருதுகளை பெற வேண்டும் என்று எண்ணினேன். தற்போது அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். கவிஞர் மௌனன் யாத்ரிகா அவர்கள் பல திரையிசை பாடல்களையும் எழுதியுள்ளார் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தில் கூட பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த நூல் நீலம் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டது. கெட்டியான அட்டையில் தரமான தாளில் மிக நேர்த்தியாக உயர்தரத்துடன் நூலை நீளம் வெளியிட்டுள்ளது. ஆதித்யன் அவர்களின் அட்டைப் படமும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அவர்களின் கோட்டோவியங்களும் நூலை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. நூலின் வெளியீட்டு விழாவானது தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்கள் பேசியவைகளை தனி நூலாக அச்சிட்டால் இன்னும் சில பெரிய நூல்கள் நமது கிடைக்கக்கூடும் அவ்வளவு ஒரு அறிவார்ந்த விழாவாக அது அமைந்தது. ஆக, வெளியிட்டு விழாவில் இருந்து இந்த நூலை வாங்கி சுடச்சுட வாசித்து விட வேண்டும் என்று உடனடியாக ஆன்லைனில் ஆர்டர் போட்டு வரவழைத்தேன். இந்த நூல் மலைப்பகுதிகளில் இருந்த தொல் குடிகள் தங்களை ஆக்கிரமிக்க வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டையிட்ட வரலாற்றை வீர வரலாற்றை கவிதை வழியில் புனைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த நூலில் காமமும் வீரமும் அடுத்தடுத்து வரும் வகையில் கவிதைகளை தொகுத்துள்ளார். சோ ஆகவே இந்த கவிதை நூல் தொல்குடிகளின் அகத்தையும் புறத்தையும் பேசும் நூலாகும். எருமை மறம் என்றால் என்ன?! வல்லின "ற" வந்திருப்பதால் இது நிச்சயமாக வீரத்தை குறிக்கும் சொல் என்பதை அறிந்திருப்பீர்கள் அது என்ன எருமை மறம்?! தனது படை பரிவாரங்கள் அனைவரும் அஞ்சி பின்வாங்கினாலும் கூட தனியா ஒரு நாளாக எதிரிகளை அடித்து துவம்சம் செய்ய துணியும் ஒரு வீரனின் வீரம் தான் எருமை மறம்!! என்னதான் பசுவை போல எருமையும் பால் கொடுத்தாலும் நாம் பசுவுக்கு கொடுக்கும் புனித இடத்தை எருமைக்கு தருவதில்லை. இன்றும் கூட எருமையை ஒரு அபசகுணம் மற்றும் தீமையின் குறியீடாகவே வைத்துள்ளோம். ஆனால் சங்க காலத்தில் எருமைகளை பற்றி பல்வேறு வகையில் வீரம் செறிந்த பாடல்கள் எல்லாம் இருந்துள்ளது இது குறித்து ஆய்வு செய்து பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் "அணிநடை எருமை" என்கிற ஒரு நூலையே கூட எழுதி உள்ளாராம். நூலின் துவக்கமே அதகலமாக உள்ளது " மாட்டுக்கொம்பை குருதியில் தோய்த்து ஊரெல்லையில் நட்டு வைத்துப் போயிருந்தார்கள். எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது" என்று ஆரம்பமே ஒரு போர் முழுவதற்கான அறிகுறியாக நம்மை அச்சுறுத்தும் வாசகமாக அமைந்துள்ளது. அடுத்ததாகவே போருக்கு முன்பான கூத்து, கொண்டாட்டமாய் கவிதையில் விளைந்துள்ளது. கிராமத்து வாழ்வியலை வாழ்ந்ததோடு மட்டுமின்றி உற்று நோக்கியவர்களால் மட்டுமே இந்த அளவுக்கு நுட்பமான உவமைகளை கவிதைகள் சொருகி வைக்க முடியும் "ஈட்டிகளை நிற்க வைத்தால் போல் தோற்றம் தரும் கம்பங்கதிர்கள் வளர்ந்த காட்டில்" காடு என்பது தொல்குடிகளுக்கு அள்ளி அள்ளி தரும் அமுத சுரப்பியாக இருந்துள்ளது என்பதை அறிவோம் அதை தான் கவிஞர் இவ்வாறு கூறியுள்ளார் " தீது செய்யும் அரசமைந்து நாமெல்லாம் கூழுக்கு தாளம் போடும் நிலையே வந்தாலும் இந்த காட்டு வளம் மிஞ்சியிருந்தாலே போதும் உண்டு கழித்து உயிர்த்திருக்கலாம்!!" நான் இதுவரையில் நத்தை கறி சாப்பிட்டதில்லை உங்களை எருக்கம் அந்த அனுபவம் இருக்கலாம் அது சமையல் செய்யும் வழிமுறைகள் கூட எனக்கு தெரியாது ஆனால் கவிஞர் ஒரே வரியில் அதன் 'ரெசிபி'யை அழகாக கூறியுள்ளார். அதோ காண்! சிறிய மாவடு போன்றிருக்கும் நத்தையின் மூடி கொதி நீரில் திறந்து கொள்வதுபோல் தம் தலைவியின் மனம் தாழ் திறவாதாவெனத் தவிக்கும் காளையர் கண்களை;" இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து சிலாகித்தேன் "எனக்கும் கொஞ்சம் காமத்துப்பாலை பயிற்றுவியேன். நானும் ஒரு புலியின் மீசையில் தேன் தடவி நீவி விட விரும்புகிறேன்" இந்த நூலில் கரியன் என்கிற வீரனின் வீரத்தையும் காமத்தையும் அழகாக தந்துள்ளார். ஆனால் கரியன் உள்ளே வருவதே 'இன்டர்வல் பிளாக்கில்' தான். ஊரை காப்பாற்ற மிகவும் அரிதான மலர் ஒன்றை பறித்து வர வேண்டி கரியன் செய்யும் சாகசத்தோடு கரியனின் அறிமுகம் சிறப்பாக துவங்குகிறது. வேட்டையாடிய மிருகங்களை சமைப்பது பற்றி கவிஞர் தரும் விளக்கங்கள் நமது நாசியில் அந்த கவிச்சு வாடையை வரவழைத்து நாவில் நீர் பெருக்கெடுத்து ஓட செய்கிறது!! இதுபோல சொற்சுவை நாச்சுவையை தூண்டும் கவிதைகள் ஏராளமாக வேட்டுவம் நூறு நூலிலும் அழகாக வடித்திருப்பார். காதலியின் நினைவு கரியனின் நெஞ்சில் ஊருவதை இப்படி கூறியிருக்கிறார். " மண்பானையில் நண்டூருவது போல் நெஞ்சில் அவள் நினைவூரிய போதும்" கரியனின் வேட்டியை அவன் நினைவாக வைத்துக் கொண்ட காதலி அந்த வேட்டியை 15 க்கு மேற்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்துகிறாள்!! கரியனின் காமம் அவனது காதலிக்கு எப்படி இருந்தது என்பதற்கான உவமையை கண்டு பிரமித்து போனேன்!! " உயிரோடு துள்ளும் நூறு கெளுத்திகளை மார்பில் அள்ளி போட்டுக் கொண்டதைப் போல இருந்தது பலம் கொண்ட அவன் காமம்" கவிஞரின் விவரனைகளின் நுட்பமானது மிகவும் சிறப்பான ஒன்றாகவும் அரிதாகவும் இருக்கிறது. "குதிரையின் கவுட்டியில் புகுந்து நெஞ்செலும்பை நொறுக்கும் வேட்டை நாய்களின் பற்களைக் கூர் தீட்ட வேண்டும்!!" இந்தக் கவிதை நூலைப் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டுமானால், கவிஞரின் மொழியிலேயே கூறலாம். "மொழிக்குப் பிறகு நிலமே இனத்தை அழியாமல் காக்கும்" அந்த நிலத்தை காக்க வேண்டியது அங்கே இருக்கும் மக்களின் கடமை என்பதாக உள்ளது!! இங்கே நான் குறிப்பிட்டு காட்டி இருப்பது மிக சொற்பமான வரிகள் தான். நூலில் ஏராளமான அற்புதமான கவிதைகள் பொதிந்துள்ளன. அதுவும் அகப்பாடல்களில் காமச்சுவை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய தொகுப்பு.

Tuesday, March 19, 2024

விலக்கி வைக்கப்பட்டவர்கள் சாதித்த வரலாறு!!

விலக்கி வைக்கப் பட்டவர்கள் சாதித்த வரலாறு!!
நான் பி.எட் முடித்த அடுத்த வருடம் (2000-2001) ஒரு தனியார் பள்ளியில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராக பணியாற்றினேன். என்னை பத்தாம் வகுப்பு “பி“பிரிவிற்கு வகுப்பாசிரியராக நியமித்தார்கள். எனக்கோ பெருமை பிடிபடவில்லை. வந்த உடனே பத்தாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரா?! வகுப்பில் பிரபல நகைக் கடை ஓனர் பையன் முதல் இனிப்புக்கடை ஓனர் பையன் வரையில் அடக்கம். ஒரு பேருந்து முதலாளி பெண்கூட படித்தார். வீட்டுப் பாடம் செய்வதில் சற்று முன்ன பின்ன இருந்தாலும் ஆசிரியரிடம் அவ்வளவு அன்பாகவும் பணிவாகவும் இருப்பார்கள். நானும் கஷ்டமான கணக்குகளை நான் போட்டுவிட்டு ரொம்ப சப்பையான கணக்குகளை அவர்களுக்கு வீட்டுப் பாடமாக தருவேன். அவர்களும் போட்டு வந்துவிடுவார்கள். பள்ளி தாளாளர் மற்ற வகுப்புகளுக்கு கொடுக்கும் எந்த நெருக்கடியும் எனது வகுப்பிற்கு தரமாட்டார். இவர்கள் மாநிலப் பாடத்திட்டம் படிப்பவர்கள் (அப்போது மெட்ரிக் பாடத்திட்டமும் அமலில் இருந்தது) மேலும் “மொதலாளி நம்மை முழுதாக நம்புகிறார்“ என்று பெருமை பொங்க எண்ணிக் கொண்டு கம்பீரமாக வலம் வருவேன். டிசம்பர் மாதவாக்கில் பத்தாம் வகுப்பு பிரைவேட் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் தருணம் (அப்போதெல்லாம் ஆன்லைன் எல்லாம் இல்லை ஒன்லி “பென்“லைன் தான்) வந்த போது எனது வகுப்பு மாணவர்கள் 25 பேரையும் கொத்தாக விண்ணப்பிக்க அழைத்துச் செல்லுமாறு பிரின்சிபல் என்னை பணித்த போது தான் அவர்கள் எல்லாம் பள்ளி பெயரில் எழுதவில்லை பிரைவேட்டாக எழுத உள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன். அதாகப் பட்டது என்னுடைய வகுப்பு என்று நான் பெருமையாக பீற்றிக் கொண்டது ஒரு டுடோரியல் கிளாஸ். எங்க பள்ளியை தப்பா நினைக்காதீங்க, அந்த 25 மாணவர்களும் அந்த நகரத்தின் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரையில் மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஆண்டு இறுதியில் “உங்க பிள்ளை ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி அடைய வாய்ப்பில்லை, அதனால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம், அவன் பெயிலாகி எங்க பள்ளியில் இரண்டாம் வருடம் படிக்கலாம் அல்லது ஒன்பதாம் வகுப்பு பாஸ் என்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு இடம் பெயரலாம்” என்று “டீல்“ பேசியுள்ளனர். இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்து வெளியேறியவர்களை அரவணைத்து இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அதே வேளை தனது பள்ளி தேர்ச்சி விழுக்காட்டிற்கும் பங்கம் வராமல் பிரைவேட்டாக எழுத வைப்பது தான் எங்க பள்ளியின் செயல் திட்டம். ஆண்டு விழாவின் போது எல்லா வகுப்பு மாணவர்களும் அவரவர் வகுப்பு சார்பாக ஒரு நடனத்தை ஏற்பாடு செய்தனர். எனக்கு அந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமோ முன் அனுபவமோ கிடையாது. ஆனாலும் கூட பசங்க “ஈஸ்வரா வானும் மண்ணும் பிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா…” என்ற பாடலை தேர்வு செய்து அவர்களே பிராக்டீஸ் செய்து வந்தனர். எங்க வகுப்பு ரிகர்சலை பார்வையிட முதல்வரை அழைத்த போது “சார் உங்க வகுப்பு வேண்டாம் சார்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார். இது அன் அபிஷியல் வகுப்பு என்பதால் மேடையேற்ற பயந்திருக்கிறார் என்று பின்னர் உணர்ந்தேன். மெட்ரிக் மாணவர்கள் எல்லோரும் ஒரே சென்டரில் தேர்வினை எழுத எனது வகுப்பு மாணவர்கள் அந்த நகரத்தின் பிரைவேட் சென்டரில் அகரவரிசைப் படி அமர்வதால் 25 பேரும் 15 வெவ்வேறு அறைகளில் எழுதினார்கள். அவர்களோடு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள். மேலும் இவர்கள் தனியார் பள்ளி சீருடையில் வருவதை வித்தியாசமாக பார்ப்பார்கள். அவர்களை நானே தேர்விற்கு அழைத்துச் சென்று எழுதச் செய்து அழைத்து வருவேன். இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு நம்ப முடியாததாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆமாம், 25 பேரில் 23 பேர் தேர்ச்சி பெற்று விட்டனர். ஏற்கனவே பயின்ற பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட அந்த மாணவர்களில் ஒருவன் 443 மதிப்பெண் எடுத்தான். கணிதப் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றதோடு இரண்டு பேர் 90க்கு மேல் முக்கால் வாசி மாணவர்கள் 60 விழுக்காட்டிற்கு மேல் பெற்றிருந்தார்கள். எனது மாணவர்களின் பழைய பள்ளி நிர்வாகம் எந்த அளவுக்கு இவர்களின் திறமையை கணித்து உள்ளது பார்த்தீர்களா?

Sunday, March 17, 2024

"மகா கவிதை - வைரமுத்து" நூல் விமர்சனம்

நூல் - மகாகவிதை ஆசிரியர் - கவிப்பேரரசு வைரமுத்து
ஒரு நூலை வாசித்து முடித்து ஒரு நூல் விமர்சனம் போட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. படிப்பதற்கு நேரமே கிடைக்கவில்லை என்றெல்லாம் தப்பிக்க முடியாது, ஏனென்றால் மற்ற விஷயங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தற்போது வாசிப்புக்கு கொடுக்க இயலவில்லை என்பது தான் உண்மையாக இருக்கும். இனிமேல் நிறைய வாசிக்க இயலும் என்று நினைக்கிறேன். தற்போதெல்லாம் வைரமுத்து அவர்கள் எழுதி வெளியிடும் நூலின் விலை 500-க்கு கீழே இருப்பதே இல்லை ஆகையால் பெரும்பாலும் புத்தக கண்காட்சிகளில் நான் இந்த நூலை வாங்க விரும்பியதும் இல்லை. அப்புறம் எப்படி இந்த நூல் என் கைவசம் வந்தது?! பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிற ஆசிரியர்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள், அங்கே இந்த நூல் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த நூல் எதை குறித்து என்பதெல்லாம் முன்னோட்டமாக நாளிதழ்களில் மற்றும் சமூக ஊடகங்களில் கண்டாயிற்று. ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, வளி (காற்று), வெளி(ஆகாயம்) ஆகியவை குறித்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு தான் இது. மேற்காணும் ஐந்து தலைப்புகளிலும் ஒவ்வொரு அறிவியல் கட்டுரை எழுதினால் எவ்வளவு விஷயங்கள் பொதிந்திருக்கும் அவ்வளவு அறிவியல் பூர்வமான தகவல்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான கவிதை வடிவ நூல் தான் இது. என்னுடைய பதின் பருவத்தில் ராஜேஷ்குமார் நாவல்களை விரும்பி வாசிப்பதுண்டு, அவருடைய துப்பறியும் நாவல்களில் நிறைய அறிவியல் விஷயங்களை கதை களத்தில் அழகாக இணைத்து இருப்பார். அதுபோல வைரமுத்து அவர்கள் கவிதை தளத்தில் இணைத்துள்ளார். நிலம் என்கிற தலைப்பில் புவியின் தோற்றம் அங்கே நிகழ்ந்த பல பேரழிவுகள் உயிர்களின் தோற்றம் என்று ஏராளமான கருத்துக்களை எழுதியுள்ளார். கவிஞரின் முத்தாய்ப்புகள் அங்கங்கே விரவி இருக்கின்றன. அவற்றில் ஒன்று, " பூமியின் தனிப்பெரும் செயல் மழை மறுப்பெருஞ்செயல் மலை" என்பதாகும். நீரின் மூலமாக மலை பிளவுற்று பிளவுற்று மணல் தோன்றுகிறது அவற்றின் ஊடாக தாவரங்கள் உயிரினங்கள் பரவிய பின் மண் தோன்றுகிறது என்று பதிவு செய்துள்ளார். புவி எவ்வாறு சூரியனிலிருந்து மிகச் சரியான மிதமான சூழலில் இருந்து கொண்டு ஒரு உயிர் கோளமாக இருந்து வருகிறது என்பதை அறிவியலின் பல்வேறு பரிணாமங்களில் விளக்குகிறார். புவி தன்னைத்தானே சுற்றுவது குறித்து ஒரு அழகமான உவமையை கூறியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது " கோடி கோடி நாவுகள் புழங்கிய பிறகும் ஒரு சொல்லின் அர்த்தம் குறையாதது போல சுற்றலே தொழிலென்றாலும் சுறுசுறுப்பு குறையவில்லை" பூமி ஐந்து முற்றழிவுகளுக்கு பிறகும் உயிர்த்தெழுந்த விஷயங்களை வரிசைக் கிரமமாக கவிதையில் வடித்துள்ளார். கவிஞருக்கு மொழியோடு புவியின் சிறப்புகளை உவமையாக்கி கூறுவது மிகவும் பிடிக்கும் போல , "இரும்பை உள்ளே வைத்து மண்ணை வெளியே வைத்தாய் பொருளை உள்ளே வைத்து சொல்லை வெளியே வைத்த மொழியை போல!!" "பூமி என்ற அஃறிணையை உயர்திணையாக்க வந்த பெரும் பொருளே!!" என்று அடுத்த அத்தியாயமாக தண்ணீருக்கு தாவுகிறார். இந்த புவியில் தண்ணீர் நிலைத்திருக்கும் நீடித்திருக்கும் வரலாற்றினை கவிஞர் கூறுகிறார். நிலமும் கடலும் அடிக்கடி இடம் மாறி கிடந்திருக்க கூடும் என்பதற்கு ஆதாரமாக ஒரு சிறு பத்தியை எடுத்துக் காட்டியுள்ளார். "கண்ணீரை தின்று பார் செங்குருதி ருசித்துப் பார் சிறுநீரை கேட்டுப்பார் இந்திரியம் ஆய்ந்து பார் உள்ளாடி கிடக்கும் உப்பு" நீரின் வடிவங்கள் குறித்து கூறும்போது "நீ நின்ற நிலை அருவி நடந்த நிலை ஆறு கிடந்த நிலை கடல் உறைந்த நிலை பனிக்கட்டி உலவு நிலை மேகம்" என்று அழகாக கூறியுள்ளார். நீ எவ்வளவு தூரம் ஆக்க சக்தியை பெற்றுள்ளதோ அதே அளவுக்கு அழிவு சக்தியையும் கொண்டுள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்தது தான் அதை கவிஞர் தனக்கே உரிய பாணியில் "மலைகளுக்கு முகச்சவரம் செய்வாய் சில நேரங்களில் சிரச்சேதமும்" என்கிறார் மொத்த நீரில் சுத்த நீர் மூன்றே விழுக்காடு தான் அதிலும் கூட துருவங்களில் உறைந்தது போக மீதி உள்ள ஒரு விழுக்காடு நீரைத் தான் நாமெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நீரின் சிக்கனம் குறித்தும் கவலை கொண்டுள்ளார். நீர் என்பது மிக அரிய திரவம் ஏனென்றால், "அவிழ்த்துக் கொட்டிய அரிசி போல் நட்சத்திர நெரிசல் மிக்க பால் வீதியில் தொலையாடிகெட்டிய தொலைவு மட்டும் தண்ணீர்க்கோள் ஏதுமில்லை!!" வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்களது நாடுகளை சுத்தமாக பராமரித்துக் கொண்டு, நீரினை அதிகமாக குடிக்கும், சுற்றுச்சூழலை அதிகமாக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை வளர்ந்து வரும் நாடுகளின் மீது திணித்து உள்ளன, என்று கவலையோடு இவ்வாறு பதிவு செய்கிறார் "ஏழை நாடுகளுக்கு தொழிற்சாலைகளை ஏற்றுமதி செய் பொருளை மட்டும் இறக்குமதி செய்" அதாவது, "நரகத்தில் உற்பத்தி சொர்க்கத்தில் விற்பனை" "தண்ணீர் சட்டங்களை மீறுகிற மனிதன் தாகத்தின் கைதியாவான்" என்று சாபம் இடவும் தயங்கவில்லை. பஞ்சபூதங்களில் மூன்றாவது பலமான தீயை தீண்டும் கவிஞர் இந்த அத்தியாயத்தில் சூரியன் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்கள் அவ்வளவு கொட்டுகிறார் " பதினைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்தில் எரியும் தொலையா நெருப்பே கோள்கள் சமைத்த அணையா அடுப்பே" சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் வியாழன் அதனை நையாண்டியாக இவ்வாறு குறிப்பிடுகிறார் "பேரரசு கட்டியெழுப்பும் பேராசையோடு சமருக்குச் செல்லும் வழியில் சாமியாராகிப் போன சக்கரவர்த்தியை போல நட்சத்திரமாக முயன்று பாதி வழியில் கிரகமாகிப்போன வியாழன் சூரியனை கெஞ்சித்தான் விளக்கு போட்டுக் கொள்கிறது வீட்டுக்கு" சூரியனின் அந்திம காலம் என்னவென்று அறிவியல் உலகம் கணித்துள்ளது அல்லவா நினைவேதான் கவிஞர் இவ்வாறு கூறுகிறார் "கிரகங்களை உண்பிப்பதும் அதுதான் உண்ணப்போவதும் அது தான்!!" " சூரிய நட்சத்திரம் பால்வீதிக்குச் சிறிது - எங்கள் பகல் வீதிக்கு பெரிது!!" என்னதான் லட்சக்கணக்கான பூமிகளை உள்ளே அடக்கும் அளவுக்கு சூரியன் பெரிதாக இருந்தாலும் பால் வீதியில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களை காணும் போது சூரியன் மிகச் சிறியதுதான் அப்படியானால் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள்?! இந்த இடத்தில் நான் சிரித்தே விட்டேன்! "கடைசியில் பூமியின் வயிற்றில் புழு பூச்சி உண்டானது தீக்கடவுளின் தீட்சண்யத்தால்!!" ஆமாம், சூரிய ஒளி மட்டும் இல்லை என்றால் இங்கே ஒளிச்சேர்க்கை ஏது உயிர்கள் ஏது!! நான் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்தில் பல வீடுகளில் தீக்குச்சி இல்லாத சமயத்தில் ஒரு இரும்பு கரண்டியில் பக்கத்து வீட்டில் இருந்து தீ கங்குகளை அள்ளி வந்து அடுப்பிலிட்டு தீ மூட்டுவார்கள்!! அந்த விஷயத்தை அழகாக கவிதையில் வார்த்திருக்கிறார் "அடுத்த வீட்டு அடுப்பிலிருந்து கரண்டியில் கங்கெடுத்துவரும் இரவல் தீக்காரி போல சூரிய அடுப்பை நம்பி கொதிக்கிறது ஏழை பூமியில் இரவல் உலை!!" அடுத்ததாக "வளி" அதாவது காற்று!! நீர் எவ்வாறு அத்தியாவசியமாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறதோ அது போல தான் காற்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் அதே வேளையில் சில சமயங்களில் ஆபத்தான ஒன்றாகவும் மாறிப்போகிறது!! புவியின் வளிமண்டலம் எவ்வாறு புவிக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருந்து எல்லா ஆபத்துகளையும் வடிகட்டி பூமியை ஒரு வாழ ஏதுவான கோளாக வைத்துள்ளது என்பதை அழகாக கவிதையின் வார்த்துள்ளார் கவிஞர். காலை மற்றும் மாலை வேலைகளில் வானத்தில் தோன்றும் வர்ண ஜாலம் குறித்து கவிஞர் பேசாமல் இருப்பாரா?! ஆம், அந்த ஓவியங்களின் நிலையற்ற தன்மை குறித்து ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளார். "ஆணியின்றி அடிக்கப்படும் ஓவியங்களை நழுவ விடாத வானமொன்று வாங்க வேண்டும்!! என்கிறார். நாம், புவியில் கார்பன் டையாக்சைடு அதிகரித்து புவிக்கு ஆபத்து ஏற்படுத்துவதை பற்றி கவலை கொள்கிறோம், ஆனால் அந்த காரியமில வாயு கூட "மிகினும் குறையினும் நோய் செய்யும்" வாயு என்பதையும் கூறியுள்ளார். "உயிரின் வளி வடிவம் உயிர்வளி உணவின் வளிவடிவம் கரியமில வாயு" சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் என்ன விதமான வாயுக்கள் இருக்கின்றன?! அல்லது, அங்கே வாயுக்கள் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?! என்பதை பற்றி எல்லாம் அறிவியல் பூர்வமாக தகவல்களை அடுக்கி உள்ளார். ஒவ்வொரு வகை புயலும் உருவாகும் பகுதி மற்றும் அது ஏற்படுத்தும் பேரழிவின் வீச்சு பற்றியும் பதிவு செய்துள்ளார். " போகும் வழியெங்கும் பூ மலர்த்தி போனவன் தான் கடக்கும் வழியெங்கும் திட்டமிடாத மயானங்களை விட்டுச் செல்கிறேன்" என்று காற்றின் மென்மையையும் வன்மையையும் பதிவு செய்துள்ளார். அந்த காலத்தில் காற்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் கடல் பயணங்கள் சாத்தியமே ஆகியிருக்காது அல்லவா அது குறித்து ஒரு கவிதையில் இவ்வாறு கூறுகிறார் " ஆண்டனியும் கிளியோபாட்ராவும் கழற்ற முடியாமல் முத்தமிட்டு கிடந்த கலங்களை நெற்றி வியர்க்க நெட்டி தள்ளியது நான்தான்!! அடுத்ததாக வெளி அதாவது வானம் இந்த அத்தியாயத்தில் இன்னும் இன்னும் ஏராளமான விண்வெளி தகவல்களை கூறியுள்ளார் புவி மைய கோட்பாட்டில் இருந்து சூரிய மைய கோட்பாடு தோன்றியபோது விஞ்ஞானிகள் எதிர்கொண்ட தீவிர எதிர்ப்பிலிருந்து துவங்குகிறார் " சூரியனை விடச் சூடானது உண்மை அது தங்கத் தூண்களை உருக்கித் தண்ணீராய் ஓட விடுமெனில் தக்கைகள் என்னுறும்?!" ஆகவே என்னதான் மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாய் கொட்டி மதங்கள் உண்மையை மூடினாலும் அறிவியல் உண்மைகள் நிச்சயம் வெளிவந்தே தீரும்!! இந்த அத்தியாயத்தில் ஒன்பது கோள்களின் தனிச்சிறப்புகளையும் கூறி அவற்றிலிருந்து புவி எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது எவ்வாறு நமக்கெல்லாம் இடம் அளித்திருக்கிறது எவ்வாறு உயிர்கள் பிழைத்து இருக்க சாதகமான சூழ்நிலையை கொண்டுள்ளது என்பதை பற்றி எல்லாம் கூறியுள்ளார். "இங்கே பன்னிரெண்டு மணிக்கொரு முறை இரவு துயில் கொண்டு வருகிறது; பகல் வெயில் கொண்டு வருகிறது" ஐம்பூதங்கள் பற்றி அறிவியல் ஆய்வுகள் எல்லாம் செய்து முடித்த பிறகு இயல்பாகவே அனைவருக்கும் எழும் கேள்வி "கண்டாயா மனிதா கடவுளை?" என்பதுதான். அதற்கான பதிலாக கவிஞர் கூறியிருப்பது, " மதங்களால் கட்டமைக்கப்பட்ட அன்றாடங்களில் அக்கறை கொண்ட ஒருவராய்க் கருதேன் கடவுளை ஒருபோதும் வேண்டுமானால் பிரபஞ்சத்தின் 'ஒழுங்குவிதி' யைக் கடவுள் என்பேன்" அப்படியாயின், கடவுள் 'அவர'ல்ல 'அது' என்று முடிக்கிறார். இந்த மகாகவிதை தொகுப்பை பொறுத்தவரையில் ஐம்பூதங்கள் பற்றி தெள்ளத்தெளிவான அறிவியல் கருத்துக்களை அழகாக எடுத்துரைத்துள்ளார். மேலும் என்னதான் பூதமாக இருந்தாலும் மனிதன் கையில் சிக்கிய கைப்புள்ளையாக அது எவ்வாறெல்லாம் மாசடைந்து படாத பாடு பட்டு கொண்டு கிடக்கிறது என்பதையும் பதிவு செய்ய தவறவில்லை. அதே வேளையில் இந்த ஐம்பெரும் அற்புதங்களின் பிரமாண்டத்தின் அருகில் நாமெல்லாம் மிக மிக அற்பம் என்பதை உணரத்தக்க வகையில் மிகச் சிறப்பான ஒரு தொகுப்பாக இதை வடித்துள்ளார். இந்த ஐம்பூதங்களும் பிரபஞ்ச வீதியில் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஒன்றின் தலைப்பின் கீழ் மற்றொன்றின் இருத்தலையும் தவிர்க்க இயலவில்லை. ஆகவே சில இடங்களில் சில கருத்துகள் திரும்பத் திரும்ப வருவது சற்று அயர்ச்சியாக உள்ளது. மற்றபடி மிகச் சிறப்பான கவிதை தொகுப்பு தான்.

Friday, March 1, 2024

நாகசாகி பேரழிவின் பின்னணி!!

எனது "மான்ஹாட்டன் ரகசிய திட்டம்" கிண்டில் நூலில் இருந்து ஒரு அத்தியாயம். ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்ட பிறகும் ஜப்பான் போடப்பட்டது அணுகுண்டு என்பதைப் பற்றியோ அதன் வீரியம் பற்றியோ அறிந்திருக்க வில்லை. ஏதோ பெரிய குண்டை அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது உருட்டி விட்டிருக்கிறது என்று முட்டாள்தனமாக கருதி “கடைசி வீரன் உயிருடன் இருக்கும் வரை அமெரிக்கா மீதான போர் தொடரும். சரணடையும் பேச்சுக்கே இடமில்லை“ என்று தொடையைத் தட்டி வாயால் வடையைச் சுட்டுக் கொண்டிருந்தது. யுரேனியம் பாமை டெஸ்ட் பண்ணிப் பார்த்தாச்சு, டிரினிட்டி டெஸ்டை விட பக்காவா வொர்க் அவுட் ஆகிடுச்சி. இந்த புளுட்டோனியம் பாமை எப்படி டெஸ்ட் பண்ணிப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்த அமெரிக்காவுக்கு ஜப்பானின் பிடிவாதப் போக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. “எலேய் சம்முவம் உட்றா அடுத்த பாம!!” என்று டினியன் தீவுக்கு சேதி கொடுத்தது. ஆகஸ்ட் 11 ம் தேதி என்று நாள் குறிக்கப் பட்டது. நாகசாகி யும் லிஸட்டில் இருந்தாலும் இந்தமுறை கோகுரா நகர் தான் இலக்கு என்பது முடிவானது. ஆனால் அந்த நாளில் குண்டு போட ”ரமணன் சார்” கிளியரன்ஸ் கொடுக்காத காரணத்தினால் ரொம்ப நாள் கடத்தினா மனசு மாறினாலும் மாறிவிடும் என்று தள்ளிப் போடுவதற்குப் பதிலாக கொஞ்சம் முன்னாடியே நாள் குறித்துவிட்டனர். ஆமாம், ஆகஸ்ட் 9. போன முறை மூன்று விமானங்கள் ஹிரோஷிமாவுக்கு சமாதி கட்ட சென்று வந்தன. ஆனால் இப்போது ஐந்து விமானங்கள் மிஷனுக்குள் இறக்கிவிடப்பட்டன. பழைய வார் ஹீரோவான எனோலா கே கோகுரா நகர வானிலையை கவனித்து சேதி அனுப்ப வேண்டும். லெகிங் டிராகன் நாகசாகிக்கு சென்று வானிலையை கவனித்து சேதி அனுப்ப வேண்டும். ”பாக்ஸ்கார்“ என்ற விமானம் தான் அணுகுண்டு சுமந்து செல்ல வேண்டும். மேலும் இரண்டு விமானங்கள் அப்சர்வேஷன் மற்றும் போட்டோகிராஃபிக்காக பாக்ஸ்கார் உடன் (ரெக்)கை கோர்த்துக் கொண்டு சென்றன. பாக்ஸ்காரை ஓட்டும் பொறுப்பு மேஜர் சார்லஸ் ஸ்வீனியிடம் ஒப்படைக்கப் பட்டது. அதிகாலை 3.47 க்கு மிஷன் ஸ்டார்ட் ஆனது. விமானம் புறப்பட உள்ள கடைசி நேரத்தில் தான் ரிசர்வ் ஃபியுவல் ஓப்பன் பண்ணும் இயந்திரம் வேலை செய்ய வில்லை என்பதை ஸ்வீனி கண்டறிந்தார். அப்போது சொன்னால் திட்டம் தன்னால் தாமதமடைந்து விடும் என்று அஞ்சி கப் சிப் என்று கமுக்கமாக வருவது வரட்டும் என்ற வண்டியை மேலே கிளப்பினார். “யோவ் சிட்டி ஃபுள்ளா ஒரே புகை மண்டலமாக இருக்கு டார்கெட்டை பார்க்கவே முடியல கோகுரா நகரத் திட்டம் கேன்ஸல்ட்“ என்ற தகவல் ஸ்வீனியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. டார்கெட் நாகசாகி என்றால் திரும்பவும் பாதை மாறி பறக்கணும் விமானத்தில் எறிபொருள் குறைந்த வண்ணம் வருகிறது. ரிசர்வ் வேற ஓப்பன் ஆகல. கோகுரா நகர மக்கள் குண்டு வீச்சு நமது நகரின் மீது நடத்தப் படலாம் என்று அனுமானித்து டயர், கட்டை , எறிபொருள் என எதையெல்லாமோ கொளுத்தி அந்த புகை மூட்டத்தை எழுப்பி இலக்கு தெரியாமல் மறைத்து அமெரிக்க விமானத்தை விரட்டினர் என்ற இணையத்தில் ஒரு தகவல் இருந்தது. டார்கெட் நாகசாகியின் மீது பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானத்தில் இருந்து சேதி “யோவ் இங்கேயும் வானத்தில் மேகமூட்டம் நெறய இருக்கு இருந்தாலும் வா பாத்துக்கலாம்” என வந்தது. இவனுக வேற நேரம் காலம் தெரியாம மாத்தி மாத்தி அடிக்கிறானுங்களே என்று ஸ்வீனி எரிச்சலடைந்தாலும் கட்டளைக்கு இணங்கி நாகசாகியை நோக்கி பறந்தார். எறிபொருள் கால் டேங்குக்கும் கீழே போய்க் கொண்டு இருந்தது. டார்கெட் சரியாக தெரியாத காரணத்தினால் நகரத்தை இரண்டு முறை பாக்ஸ்கார் விமானம் சுற்றிவந்தது. ’என்னடா ஆபத்து புரியாம சடங்கு சுத்த வைக்கிறீங்க’ என்று எரிச்சலுற்றார் விமானி. புளுடோனியம் நிரம்பிய குண்டினை திரும்ப எடுத்துக் கொண்டும் போகமுடியாது. அப்படியே எங்கேயும் கடலிலும் போட்டுவிட முடியாது. எரிபொருள் தீர்ந்து போனால் விமானத்தோடு சேர்ந்து குண்டு நாகசாகி மீது விழுந்து வெடிக்கும் என்கிற நெருக்கடி நிலை. “யோவ் அங்க பாருய்யா, மேகங்களுக்கு நடுவால ஒரு மைதானம் தெரியுது” என்று அப்சர்வர் சொல்லி வாய் மூடுவதற்குள் குண்டினை போட்டு விட்டு விர்ரென்று பறந்து சென்றது பாக்ஸ்கார். எந்த நேரத்திலும் எரிபொருள் டேங்க் உலர்ந்து போகும் நிலை. வேறு வழி இன்றி ஒகினாவா என்கிற தீவில் எமர்ஜென்சி லேண்டிங் ஆகியது. விமானம் கீழே இறங்கிய போது ஃபியுவல் டேங்க் சுத்தமாக உலர்ந்து போய் இருந்தது. அது எதிர்பாராத இடம் ஆதலால் அவர்களை வரவேற்று வெற்றித் திலகம் வைக்கவோ போட்டோ எடுக்கவோ எந்த ஏற்பாடும் அங்கே இல்லை. இறங்கியதும் “மிஷன் அக்கம்ப்ளிஷ்டு“ என்று டினியனில் ஆர்வத்தோடு காத்திருப்போருக்கு சேதி அனுப்பி விட்டனர். நாகசாகியில் போடப்பட்ட புளுடோனியம் குண்டின் வெடிப்பின் வீரியம் ஹிரோஷிமா குண்டினை விட அதிகம். விட்டுருந்தால் அதை விட பல மடங்கு சேதம் உண்டாகி இருக்கும். இங்குதான் நாகசாகியின் புவியியல் அமைப்பு அந்த நகருக்கு அனுகூலமாக அமைந்து போனது. ஆமாம், நாகசாகி இரண்டு பக்கம் மலைகள் சூழ்ந்த உரஹாமி பள்ளத்தாக்கில் இருந்த காரணத்தினால் வெடிப்பினால் உண்டான வெப்ப அதிர்வுகளை மலை வாங்கிக் கொண்டு பரவாமல் காத்து நின்றது. இந்த குண்டு போடப்பட்ட ஒரு வாரத்தில் ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. ஆக்சுவலா சோவியத் ரஷியா ஆகஸ்ட் 8 ம் தேதி ஜப்பான் மீது போர் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அடுத்த நாள் குண்டு வெடிப்பு மற்றும் ஜப்பானின் சரண் என்று சீனே மாறிவிட்டது. அதற்குப் பிறகும் 1946 முதல் 1952 வரையில் ரெஸ்கியு அண்டு ரீ கன்ஸ்ட்ரக்ஷனுக்கு உதவுகிறேன் என்று அமெரிக்கா அங்கேயே பட்டறையை போட்டு அமர்ந்து இருந்தது. இப்படியாக “அணுசக்தி“ எனும் அறிவியல் சக்தி ஒரு பேரழிவு சக்தியாக “மே ஐ கம் இன்” என்று பூமிப் பந்தின் கதவைத் தட்டி உள்ளே வந்து தொலைத்தது. அணுகுண்டு என்பது போட்ட உடனே லட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள் என்று கவலையோடு கண்ணைக் கசக்கி மூக்கை சிந்தி போட்டு விட்டு கிளம்பும் விஷயம் அல்ல. கதிர் வீச்சு பாதிப்பு காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக தொடர்ந்த வண்ணம் இருக்கும். எனவே உலகில் மற்றுமொரு அணுகுண்டு விழுந்தால் தாங்காது. அதுவும் தற்போதைய ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் நவீன ரக அதிவேக கண்டம் பாயும் ஏவுகணைகளால் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியே. இந்த கட்டுரையின் நோக்கம் அணுகுண்டின் அறிவியலையும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் பின்விளைவாக தொடர்ந்து வரும் பேராபத்தையும் எடுத்துக் கூறி அணுஆயுதப் போருக்கு எதிரான மனநிலையை வாசிப்போருக்கு ஏற்படுத்துவது தான். யாரும் யாரையும் ஆதிக்கம் செய்யாமல் இந்த புவியில் இருக்கும் வளங்களை பாகுபாடு இன்றி பகிர்ந்து அமைதியாக வாழ வழி செய்யும் மதம் ஏதாவது இருந்தால் கூறுங்கள். இல்லையேல் அனைத்து மதங்களையும் குப்பையில் போடுங்கள். இங்கே மதம் தேவையில்லை மனிதமே தேவை. மு.ஜெயராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம்.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...