Friday, March 7, 2025

மகளிர் தின சிறப்பு பதிவு

மகளிர் தின சிறப்பு பதிவு
சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. இளம் வயது திருமணங்கள்- நகர்புரத்தில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு விசித்திரமான ஒன்றாக தோன்றலாம், ஆனால் முகத்தில் அறையும் எதார்த்தம் என்னவென்றால் இன்னமும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு குழந்தை திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.அதுவும் அவர்களுடைய பெற்றோரின் முழு சம்மதத்தோடு. "எப்படியாவது பன்னிரண்டாம் வகுப்பை பாஸ் பண்ணி விட்டேன் என்றால் எனக்கு நிச்சயமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்னை கணித பாடத்தில் தேர்ச்சி அடைய செய்யுங்கள் நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதை செய்து விடுகிறேன்" என்று கேட்ட மெல்ல கற்கும் மாணவி ஒருவருக்கு அந்த காலகட்டத்தில் கணித பாடத்தில் தேர்ச்சி அடைய தேவையான 70 மதிப்பெண்களை எடுக்க சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்தேன். மிக ஆர்வத்தோடு எல்லாவற்றையும் கற்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அந்த மாணவியை நிறைமாத கர்ப்பிணியாகத் தான் ஒரு பேருந்து நிலையத்தில் காண நேர்த்தது. அதுபோல 470 க்கு மேல் எடுத்த மிகப் பிரமாதமாக படிக்கக்கூடிய ஒரு மாணவி பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் வாங்க வந்த போது ஃபைலை வைத்து கழுத்தை மறைத்தவாறு நின்றார். உற்றுப் பார்த்தால் தாலி கயிறு!! இன்னமும் கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை நடுத்தர வர்க்க பெற்றோர் தங்களுடைய குடும்ப கவுரவம் தனது பெண்ணிடம் மட்டுமே இருப்பதாக கருதுகிறார்கள். எந்த காதல் பிரச்சினையும் இன்றி அவர்களை பாதுகாப்பாக திருமணம் செய்து கொடுத்து விட்டால் தங்களது அனைத்து கடமைகளும் பாதுகாப்பாக கௌரவம் குறையாமல் நிறைவேறி விட்டதாக நினைக்கிறார்கள். ஆண் குழந்தைகள் காதல் வயப்பட்டாலும் அல்லது அது போன்று சொல்லிக்கொண்டு ஏதேனும் கிறுக்குத்தனங்களை செய்து கொண்டிருந்தாலும் லேசாக கடிந்து கொண்டு கடந்து விடும் அதே பெற்றோர் தான் வதந்தியாக கூட காதல் என்கிற பெயரோடு பெண்ணின் பெயர் இணைத்து பேசப்படுமானால் உடனடியாக பள்ளி செல்வதை தடுத்து திருமணம் செய்து வைக்க முற்படுகிறார்கள். நிச்சயமாக இந்த மாதிரியான கொடுமையான இளம் வயது திருமணங்களுக்கு அந்த குழந்தையை சுற்றி இருக்கும் சமூகம் நூறு விழுக்காடு முற்றிலும் உடந்தை. ஏனென்றால் தற்போது 1098 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தாலே போதும் இது போன்ற குழந்தை திருமணங்களை நிச்சயமாக தடுத்துவிடலாம். புகார் அளிப்பவர் பெயர் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இதுபோல ஆசிரிய பெருமக்களும் தங்கள் பள்ளிக்கு நீண்ட காலம் வருகை தராத மேல்நிலை வகுப்பு மாணவிகள் இருந்தால் 'இவருக்கும் திருமணம் ஆகி இருக்குமோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் இருக்குமோ' என்று சந்தேகித்தால் கூட இந்த உதவி எண்ணை நாடலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை. பதின்பருவத்தில் இயல்பாகவே வரும் எதிர் பாலின கவர்ச்சியை காதல் என்று விதந்தோதும் சினிமாக்களும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கலுக்கு நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமாக பேணப்பட வேண்டிய எதிர் பாலின நட்பினை காதல் என்று கற்பிதம் செய்து கொண்டு மாணவர்கள் பெண்களிடம் அத்து மீறுவது போன்று சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது . இது போலான சமயங்களில் பெற்றோர்கள் மிகுந்த பதட்டத்திற்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். பதின் பருவத்தில் இருக்கும் பையன்கள் மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற காணொளிகளை ஒரு லேசான கோபத்தோடு கடந்து போகிற அதே நபர்கள் தான் அது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண் குழந்தைகளின் காணொளிகளை கண்டதும் குய்யோ முறையோ என்று பொங்கி கொண்டு வேகமாக இணையத்தில் பரப்பி வைரலாக்கி அந்த குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றார்கள். இது அந்த குழந்தைகளின் செயலை ஞாயப்படுத்துவதற்காக அல்ல ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கிரிமினல் குற்றங்களில் கூட பெயர்கள் வெளியிட கூடாது என்கிற சட்டம் இருக்கிறபோது இதுபோல காணொளிகளை பரப்புவது சட்டவிரோதமும் கூட. பாலின சமத்துவம் என்கிற எண்ணம் சமூகத்தில் பரவலாக ஏற்படும் போதுதான் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும் குற்றங்களும் குறையும். ஆனால் பாலின சமத்துவம் என்கிற இலக்கை அடைய நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி தான் உள்ளது. எனது பணி அனுபவம் சார்ந்து பல விஷயங்களை பாலின பாகுபாடு ஆழமாக ஊறிப்போன சம்பவங்களை கண்டுள்ளேன். மாற்றுத்திறனாளி ஆண் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து ஒரு அரசு வேலைக்கு அனுப்பி வைத்து விடவேண்டும் என்கிற முனைப்பு உள்ள பெற்றோரை கண்டுள்ளேன். அதுபோல மிகச் சிறப்பான பணிக்கு அனுப்பியும் உள்ளார்கள். அதே வேளையில் மிகவும் நன்கு படிக்க கூடிய குழந்தைகளை வீட்டிலேயே முடக்கி அவர்களுக்கான கல்வி வாய்ப்பினை வழங்க எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்களுடைய திறமைகளை வீணாக்கிய பெற்றோரையும் கண்டுள்ளேன். கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாண்டட் லேபர் ஆக வேலைக்கு சென்ற ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகம். அவர்களது திருமணத்திற்கு பணம் சேர்க்கிறேன் என்கிற பெயரில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதுபோல வேலைக்குச் சென்ற ஒரு குழந்தையை மீட்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத செய்தோம் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார் , ஆனாலும் அடுத்த ஆண்டு மீண்டும் வேலைக்கு சென்று விட்டார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர் "நான் முதல்வன் திட்ட" தேடலில் கூட அகப்படாமல் தன்னுடைய தம்பிகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொள்கிறார், அப்பா அம்மா இருவரும் வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டுக் குடும்ப அமைப்புகள் மிக தகர்ந்து போனதற்கான காரணம் என்ன தெரியுமா?! அங்கே சாதாரணமாகவே அன்றாடம் குவியக் கூடிய வேலைகளில் நிலவிய பாலின பாகுபாடு தான். சமத்துவமற்ற எந்த ஒரு அமைப்பும் நிச்சயமாக நொறுங்கி விழுந்து மடியும். மிஞ்சி இருக்கும் தனி குடும்ப அமைப்பு நீண்ட காலம் நீடிக்க வேண்டுமானால் இணையருக்கு இடையே பாலின சமத்துவ எண்ணம் நிலவ வேண்டும் குழந்தைகளிடம் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதிலும் கூட பாலின சமத்துவத்தை கவனமாக பேணுவது என்பது அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மகளிர் தினத்தில் பெண்களை தேவதை என்றோ தெய்வம் என்றோ போற்றி புகழ வேண்டாம். மேலே கூறியுள்ள தகவல்களை சற்று மனதில் நிறுத்திக் கொண்டு பாலின சமத்துவத்தை நாம் இருக்கும் இடம்தோறும் பேணுவதோடு அல்லாமல் உடன் இருப்போரிடமும் வலியுறுத்தி வருவோமானால் அதுவே மகளிர் தினத்திற்கு நாம் அவர்களுக்கு கூறும் நல்ல வாழ்த்து செய்தியாக அமையும். " சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"

Thursday, March 6, 2025

தலைநகரம் – 3 *நிராயுதபாணி*

எப்போதுமே பயணங்களில் எனக்கு லக்கேஜ் தான் அலர்ஜி. எப்போது பயணம் மேற்கொண்டாலும் முடிந்தவரை லக்கேஜ் குறைவாக இருக்கும் படி பார்த்துக்கொள்வேன். டெல்லிக்கு டிக்கெட் போட்ட அன்றைக்கு இரவே அரியலூர் ஏபிஎன் ல் குளிருக்கு இதம் அளிக்க ஏதுவாக ஜெர்கின் வாங்கிவிட்டேன். எடை குறைவுதான் என்றாலும் பல்க்காக இருந்தது. என்ன சுருட்டினாலும் ஷோல்டர் பேகை அடைத்துக் கொண்டு உப்ப வைத்துவிட்டது. “சரி இவனத் தூக்கி பொட்டில போடு“ என்று போட்டு அதற்கு மேல் மூன்று செட் பேண்ட் சர்ட் எல்லாம் போட்டு அமுக்கி விட்டேன். அப்புறம் ஷோல்டர் பேக்ல வாட்டர் பாட்டில் சால்வை மற்றும் சில குட்டி ஐட்டங்கள் தான். நான் விரும்பிய வண்ணம் லேசான லக்கேஜ். மனசே லேசான மாதிரி ஒரு ஃபீல். மூன்று மணி சுமாருக்கெல்லாம் தாறுமாறாக போர் அடித்து துவைக்க தொடங்கிவிட்டது. சரி என்று அங்கே இருக்கும் கடைகளில் நுழைந்து விலைகளை விசாரித்துக் கொண்டே வந்தேன். அப்புறம் விமானம் ஏறுவதற்கான கேட் திறக்கப் பட்ட உடன் என்ன செய்கிறார்கள் என்று கவனமாக பார்த்து வைத்துக் கொண்டேன். காத்திருக்கும் இடத்தின் வாயிலில் ஒரு டன்னலை கொண்டு வந்து சொருகுகிறார்கள். அதில் இறங்கி நடந்தால் அது விமானத்தின் உள்ளே கொண்டுபோய் விடுகிறது. ஆகா, நாமும் அந்த டன்னலில் நடக்கப் போகிறோம் என்று ஆவலோடு கேட் நம்பர் 1 ல் காத்திருந்தேன். ஓட்டப் பந்தயத்தில் சீறிப் பாய காத்திருக்கும் வீரனைப் போல தயார் நிலையில் இருந்தேன். நான்கு மணிக்கு வாயில் திறக்கும் என்று காத்திருந்த எங்களுக்கு அந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது. எங்களுக்கான விமானத்தை அடைய கேட் நம்பர் 18க்கு போகவேண்டும் என்று கூறிவிட்டார்கள். கடைசி நேரத்தில் மாற்றி இருந்தார்கள். அது தரைதளத்தில் இருப்பதை விசாரித்து அறிந்து கொண்டேன். “லே பேதில போவான் யாம்லே இப்பிடி பண்ணுதிய?!“என ஜெபி முத்துவை மைண்ட் வாய்சில் வைத்து விட்டு எஸ்கலேட்டரில் இறங்கிய வண்ணம் படி இறங்கினேன். அங்கிருந்து பேருந்து வைத்து விமானத்தின் அருகே கூட்டிப் போனார்கள். விமானத்தில் ஏற ரேம்ப் இருந்தது. லக்கேஜை மேலே தூக்கிப் போட்டு மூடினேன். ஜன்னல் சீட்டை தேர்வு செய்ய தனியே காசு கட்டி இருக்கலாம். எனது அண்டை சீட்டில் ஜன்னலருகே அமர்ந்திருந்தவர் என்னை விட புத்தம் புது ஆள் போல. விமானத்தில் நுழைந்தது முதற்கொண்டு ஒவ்வொரு தருணத்தையும் படமாக பதிவு செய்து கொண்டிருந்தார். அதில் இரண்டு ஏர்ஹோஸ்டஸ்களை சூம்செய்து எடுத்த வைகளும் அடங்கும். ச்சுடச்சுட வாட்சப் ஸ்டேட்டஸ் வேறு போட்டார். நானோ விமானத்தில் நுழைந்த மாத்திரத்தில் ஏரோப்ளேன் மோடில் போட்டு விட்டேன். மேலே போகும் போது (அடச்சே விமானம் மேலே போவதைச் சொன்னேங்க!!) மேகங்களை படமெடுத்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன். எத்தனை தடவை கூகுள் செய்திருந்தாலும் பிராக்டிக்கலாக சந்திக்கும் போது சற்று சிரமமாகத்தான் உள்ளது. “Hi Bro, (இல்லன்னா youth ன்னு நம்ப மாட்டாங்க) will you please help me to fasten the belt?” அவரே போட்டு விட்டார். கழட்டும் முறையையும் சொல்லிக் கொடுத்துவிட்டார். ரன்வேயில் லேசாக ஊர்ந்த விமானம் திடீரென்று வேகமெடுத்தது. விமானம் குலுங்கியபடி விரைந்தது. ஸ்ரீனிவாசன் சாரிடம் வாங்கி லோட் செய்திருந்த பஞ்சுப் பொதி பத்திரமா என்று காதை தடவிப் பார்த்துக் கொண்டேன். சட்டென்று எல்லாம் சரியாகி “இறகைப் போலே அலைகிறேனே“ என்று லேசாகி பறந்து கொண்டிருந்தது. அவ்வளவு பஞ்சையும் தாண்டி காது அடைப்பதும் நான் வாயை ஒரு மாதிரி கோணலாக ஆட்டி எடுத்துவிடுவதும் என்று சில நிமிட நேரம் நீடித்தது. அடுத்த விமானப் பயண "பக்கெட் லிஸ்ட்"டில் இருக்கும் விஷயத்தை நிறைவேற்ற தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தேன். அன்றைய தின வானம் மேகமூட்டமாக இருந்த காரணத்தினால் பஞ்சு பரப்பி வைத்த திடலுக்கு மேலே விமானம் பறப்பது போன்று இருந்தது. கழிவறை சைன் போர்டு பச்சைக்கு மாறிய உடனே பட்டென்று எழுந்தேன். ஆகா, எவ்வளவு குட்டி ஸ்பேஸ்?! என்று வியந்து கொண்டே சிறு கடனை நிறைவேற்றி வெளியேறினேன். ஸ்ரீனிவாசன் சாரை பார்த்த போது, “இவர் என்ன இந்த வெயில் நேரத்தில் ஜெர்கினோடு இருக்கிறாரே?“ என நினைத்தேன். ஆனால் விமானத்தினுள் செம்ம குளிராக இருந்தது. ஜெர்கினை பெட்டியில் அமுக்கி வைத்தது எவ்வளவு பெரிய பிசகு என்று புரிந்து கொண்டேன். திடீரென்று விமானம் பரபரப்பானது. ஏர்ஹோஸ்டஸ் மூன்று பேர் டிஸ்யு பேப்பரை கொத்தாக அள்ளிக் கொண்டு ஓடினர். ஆகா என்னடா இது என்று ஆரம்பத்தில் சொன்ன ஆக்சிஜன் மாஸ்க் இருக்கும் இடத்தை துழாவத் தொடங்கினேன். பெரிதாக ஒன்றும் இல்லை மேலே லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்து தண்ணீர் தாரை கொட்டியதில் ஒரு பெண் தலையும் உடையும் நனைந்து விட்டது அவருக்கு. ஏர்ஹோஸ்டஸ் துடைத்துவிட்டு வேறு இடமும் கொடுத்தனர். “யே, யாருப்பா தண்ணி பாட்டிலை சரியா மூடாமல் வைத்தது?!” என்று எனக்கு கூட கேட்கா வண்ணம் நன்றாக திட்டிவிட்டேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது, என்னுடைய மெட்டாலிக் வாட்டர் பாட்டிலின் மூடியை சில சமயங்களில் இறுக மூடினால் கோபித்துக் கொள்ளும். ஆனாலும் அதனை சோதித்து அறிய இது சரியான நேரம் அல்ல. அந்தப் பெண் தலை ஈரம் கூட சரியாக காயவில்லை. பிரச்சனை ஆறிய பிறகு பூனைக்குட்டியை வெளியே விடலாம் என்று காத்திருந்தேன். சற்று நேரம் கழித்து மெதுவாக எழுந்து யாரும் அறியா வண்ணம் தண்ணீர் பாட்டிலை எடுத்து எனது சீட்டின் முன்னால் இருந்த பை போன்ற அமைப்பில் போட்டு விட்டேன். பார்த்தால் முக்கா லிட்டரில் முன்னூறு மில்லி கூட மீதம் இல்லை. இவ்வளவு ரகசிய நடவடிக்கையிலும் பெல்ட் போட்டு விட்ட பக்கத்து சீட் தம்பி ரகசியமாய் சிரித்தார். பயபுள்ள சிபிஐ இன்டர்வியு போவான் போல!! அதற்குள்ளாக விமானம் வானத்தின் ஆரஞ்சு வளையத்திற்குள் வந்தது போல ஒரு ரம்மியமான காட்சி. மேகப் பொதிக்குள் அமிழும் சூரியன் ஏற்படுத்திய வானியல் அற்புதம் தான் அது. அனேகமாக ஜன்னல் சீட்டில் இருந்தோர் அனைவரும் ஆவலோடு படமெடுத்தார்கள். பிறகு இருள் கவ்வியது. சற்று நேரத்திற்கெல்லாம் டெல்லி நகர விளக்குகள் தெரியத் துவங்கின. விமானம் தாழப் பறந்தபடி “டச் டவுனுக்கு” தயாரானது. ஏதோ சடன் பிரேக் போடும் போது லேசாக ஜெர்க் அடித்தது போல இருந்தது அவ்வளவுதான் விமானம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. வெளியில் பார்த்தால் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டு இருந்தது. ”எலேய் யார்ரா நீ” என்பது போல ஆளே மாறி இருந்தார் நம்ம பக்கத்து சீட்டு தம்பி. ஜெர்கின், கழுத்தைச் சுற்றி சால்வை, தலைக்கு பனி குல்லா என குளிரை எதிர்த்து போராட அனைத்து ஆயுதங்களையும் தரித்து இருந்தார். நானோ நிராயுதபாணியாய்!! என்னாச்சின்னு அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Tuesday, March 4, 2025

தலைநகரம் -2

*FIRST FLIGHT EXPERIENCE*
முதல் வானூர்தி பயணம்
முன்ன பின்ன விமான பயணம் செய்ததும் இல்லை. அதற்கு டிக்கெட் எடுக்கும் நடைமுறைகளும் தெரியாது. ஆனாலும் எப்போதும் போல தைரியமாக டிரையல் அண்ட் எரர் மெத்தடில் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன். விமானத்தில் டெல்லி போய் வருவதற்கு பயணப்படி கிடைக்கும் என்று கூறினார்கள். சரி ஓசியில ஒரு விமான பயணம் என்று ஆர்வத்தோடு இருந்தேன் நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்துவதற்காக கூகுள் மீட் போட்டார்கள். NIEPA நிர்வாகத்தினர் மாநாட்டுக்கு வருகை தரும் அனைத்து தலைமை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு whatsapp குழுவை உருவாக்கி தொடர்ந்து 5 நாட்கள் கூகுள் மீட் மூலமாக அனைவரிடமும் பேசி நிகழ்ச்சிக்கு வந்து செல்வது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவு படுத்தினார்கள் . விமான பயணத்திற்கு பயணப்படி உண்டுதான் ஆனால் எல்லோருக்கும் அல்ல. "ஏங்கண்ணு, உன்னோட கிரேட் பே என்ன வருது?!" "4800 ங்க" "செல்லாது செல்லாது உனக்கு விமானத்தில் பயணத்துக்கு பயணப்படி இல்லை" "ஆமா ஆருக்குங்க குடுப்பீங்க?!" "5400க்குத்தான்" "நான் விமானத்தில் வந்தா எனக்கு என்ன கொடுப்பீங்க?" "செகண்ட் ஏசி ஃபேர் தான்" "2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 36 மணி நேரம் லோல் பட முடியாது, நான் விமானத்திலேயே வந்துடுறேன் நீங்க குடுக்குற காச குடுங்க போதும்" ஆமாம் நான் புக் செய்த அன்று செகண்ட் ஏசி ட்ரெயின் கட்டணமும் வானூர்தி கட்டணமும் 2000 இடைவெளியில் தான் இருந்தது. ஆனது ஆகட்டும் என்று விமானத்திலேயே புக் செய்யலாம் என்று ஒரு விமான பயண சீட்டு வழங்கும் ஏஜென்ட் ஆப்பை அணுகினேன் அத்தனை விமானங்களும் இண்டிகோவாகவே இருந்தன. பயணச்சீட்டு போக வர என்று இரு பக்கத்துக்கும் புக் செய்துவிட்டு பணத்தை எல்லாம் கட்டி முடித்த பிறகு இண்டிகோ காரன் ஏம்பா என்கிட்ட நேரடியா வந்து இருந்தா இன்னும் கொஞ்சம் சல்லிசா முடித்து இருக்கலாமே என்று வெறுப்பேற்றினான். மாலை 4. 30க்கு தான் விமானம் புறப்படும் நேரம். ஆனால் நான் அரியலூரில் காலை எட்டு மணி பல்லவனை பிடித்து விட்டேன். ஏனென்றால் எந்த காரணத்தினாலும் விமானத்தை தவற விட்டு விடக்கூடாது என்கிற அதிகபட்ச உஷார் நிலையில் இருந்தேன் . தவறவிட்டால் 7 ஆயிரம் ரூபாய் போச்சே!! முதல் விமான பயணம் என்பதால் எனது நட்பு மற்றும் உறவினர் வட்டங்களில் உள்ள அனைவரும் ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வீசி விட்டனர். அதில் அரிதிற் பெரும்பான்மை பெற்ற ஒரு முக்கியமான அறிவுரை என்னவென்றால் விமான நிலையத்தில் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று கனவு கூட கண்டு விட வேண்டாம் உன்னுடைய மொத்த பேங்க் பேலன்ஸும் போய்விடும் என்பதுதான். எதிராளி வீட்டுல விருந்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே ஒழிய இந்த பயலுக விமான நிலையத்தில் பச்சத் தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று ஏர்போர்ட் வாசலை மிதிக்கும் முன்பாக சங்கல்பம் செய்து கொண்டேன். நான்கரை மணிக்கு புறப்படும் விமானத்திற்கு மதியம் ஒரு மணிக்கு எல்லாம் கதவை பிராண்டியவன் நானாகத்தான் இருப்பேன். இந்தியாவில் உள்ள 95 விழுக்காடு விமான சேவைகளை இண்டிகோவே மேற்கொள்கிறது போல உள்ளது எங்கே பார்த்தாலும் அவர்களின் விமானம் தான். அனைத்து ஸ்டால்களிலும் அவர்களுடைய ஊதா உடை சிப்பந்திகள் தான். அதில் ஒரு நீலக்குயில் இடம் சென்று. "ஏந்தாயி இது எனது முதல் விமானப் பயணம். அதனால் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஒன்னும் தெரியாது செத்த கோவிச்சிக்காம இதப் பாரு தாயி" என்று ஆங்கிலத்தில் கெஞ்சியபடி எனது பயணச்சீட்டின் சாஃப்ட் காப்பியை நீட்டினேன். "டிக்கெட் ஹார்ட் காப்பி வேணுமா?!" என்று இனிய குரலில் செவிகளுக்கு ஆங்கில ஒத்தடம் கொடுத்தார். "ஆமா நிச்சயமாக, reimbursement க்கு வேண்டுமே" என்று நீலக்குயில் தந்த நீல நிற இன்டிகோ விமான டிக்கெட்டை வாங்கி பத்திரப்படுத்தினேன். "அப்புறம் எனக்கு விமான புறப்பாடு நான்கு முப்பதுக்கு தான் நான் இப்போதே செக்யூரிட்டி செக் செய்து புறப்பாடு வாசல் அருகே அமர்வதற்கு தடை ஏதும் இல்லையே?!" என்று எனது சந்தேகத்தை கேட்டுக்கொண்டேன். "சரி உங்க சூட்கேஸ் கொடுங்க"என்று வாங்கி அதில் எதையோ அச்சிட்டு ஒட்டி ஒரு கன்வேயரில் போட அது துள்ளி குதித்து எனக்கு முன்னால் குஷியாக ஓடியது. அதற்கடுத்து செக்கின் கவுண்டருக்கு சென்றால் அங்கே எல்லோரும் ஷூ பெல்ட் என சகலத்தையும் அவிழ்த்து சீர்வரிசை வைத்திருப்பது போல கையில் ஏந்தியபடி சட்டை பேண்டோடு நின்று கொண்டு இருக்கிறார்கள். கையில் கைப்பை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தையும் தட்டில் வைத்து ஒரு நகரும் தளத்தில் வைக்க அது நகர்ந்து உள்ளே செல்கிறது. அங்கிருந்து ஸ்கேனர் மூலமாக உள்ளிருக்கும் அனைத்தையும் சோதிக்கிறார்கள். அதே நேரத்தில் விமான நிலைய காவலர்கள் நமது உடலை, உடையை பரிசோதிக்கிறார்கள். ஏதோ அந்த காலத்தில் சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க போவது போல எனக்கு முன்னால் சோதனைக்கு நின்றவரின் முதுகை இடித்துக் கொண்டு உள்ளே பாய்ந்தேன், அங்கிருந்த செக்யூரிட்டி என்னை அன்பாக முறைத்தார். நான் "ஃபர்ஸ்ட் டைம் பாஸ்" என்று சிரித்தபடி பின் வாங்கினேன். ஏதோ "தொப்பை வளர்த்து" எல்லா பேண்ட்டையும் "இறுகப்பற்று" என்று வைத்திருப்பதால் தப்பினேன். இல்லையென்றால் பெல்டை கழட்டிய பிறகு பேண்ட்டை கையில் கோர்த்தபடி அல்லவா நின்று கொண்டிருக்க வேண்டி இருந்திக்கும். உள்ளே போனால் ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கானோர் சேரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தனர் நானும் அசால்டாக ஒரு சேரில் விழுந்தேன் அந்த சமயம் பார்த்து எங்களுடன் வரக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைமை ஆசிரியர் ஆம்பூர் ஶ்ரீனிவாசன் சார் என்னை பார்த்துவிட்டு அழைத்தார். அவர் இரண்டரை மணி விமானத்திற்கு செல்ல வேண்டியவர் அவரே காத்துக் கொண்டு நின்றார் அவர் மிகவும் விவரமாக செல்போன் சார்ஜிங் பாயின்ட் அருகே உள்ள நாற்காலியை வசப்படுத்திக் கொண்டு போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டார். நானும் அங்கே சமீபத்தில் காலியான சேரை பிடித்து அமர்ந்தபடி அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது கேட் ஒன்றிலிருந்து யாரோ கை அசைப்பது போல தெரிந்தது பார்த்தால் புதுச்சேரி மேடம் இருந்தார்கள். அவரும் ஸ்ரீனிவாசன் சாருடன் விமானம் ஏற உள்ளார். " சரி நீங்க போங்க நான் பின்னாடியே வரேன்" என்று அவர்களை அனுப்பிவிட்டு மொபைலில் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த ஒரு படத்தில் மூழ்கினேன். விமான நிலைய கழிவறை பற்றி சொல்லியே ஆக வேண்டும் சென்னை விமான நிலையம் வருவதற்கு முன்பு நான் தூய்மையான கழிவறை என்றால் சத்யம் சினிமாஸ் போன்ற பெரிய தியேட்டர்களில் இருக்கும் கழிவறை தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் இங்கே அதைவிட சிறப்பாக பராமரித்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப லென்த்தா போவுது இத்தோட முடிச்சுக்குறேன். விமானத்தின் உள்ளே நடந்த களேபரம் ஒன்றைப் பற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன்!!

Monday, March 3, 2025

தலைநகரம் - 1

என்றைக்கு இந்த தலைப்பை அறிவித்தேனோ அன்றிலிருந்து தொடர்ந்து வேலை பளு அதிகமாகவே இருந்தது. சரி இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று இன்றைக்கு தொடங்கி விட்டேன். தலைநகரம் - 1
அறிமுகம் NIEPA - NATIONAL INSTITUTE OF EDUCATIONAL PLANNING AND ADMINISTRATION என்கிற ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு கல்வி மேலாண்மை சார்ந்த பல்வேறு படிப்பகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. மேலும் கல்வி மேலாண்மையில் புதுமையை புகுத்தும் அலுவலர்களுக்கு விருது கொடுப்பது மட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் சிறப்பான செயல்பாடுகளை கேஸ் ஸ்டடியாக எடுத்து அது சார்ந்து கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் கல்வி மாநாடுகள் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. பள்ளி மேலாண்மை குறித்த ஒரு மாநாட்டிற்கு டிசம்பர் மாதத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்தது எனது நண்பர் விஜயகுமார் அதை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். பார்த்தவுடன் சரி உடனே அப்ளை செய்து விடுவோம் என்று வேகமாக நினைத்து அதே வேகத்தில் மறந்தும் போய் விட்டேன். அதன் பிறகு ஒரு நாள் அந்த விளம்பரம் போட்டோ கேலரி ஸ்க்ரோலிங் பண்ணும் போது கண்ணில் பட்டது. பார்த்தால் அன்றுதான் இறுதி தேதி. சரி சார் நம்மீது நம்பிக்கை வைத்து அனுப்பி வைத்திருக்கிறார் நாம் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று கணினியை திறந்து அப்போது எனது கணினியில் உள்ள எங்கள் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் சார்ந்த படங்களை எடுத்து ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஒட்டி ஒரு பத்தி எழுதி முழு கட்டுரையாக தொகுத்து படங்கள் அனைத்தையும் அன்று மாலை 5 மணிக்கு மின்னஞ்சலில் சேர்த்து விட்டேன். நாம் ஏனோதானோவென்று ஒரு கட்டுரை அனுப்பி இருக்கிறோம் நிச்சயமாக நமக்கு அழைப்பு இருக்காது என்கிற எண்ணத்தில் இருந்தேன், ஆனால் ஒரு இன்ப அதிர்ச்சி போல மாநாட்டுக்கு அழைப்பு வந்துவிட்டது. அடுத்த சிக்கல் என்னவென்றால் மாநாடு ஜனவரி 8-10 டெல்லியில் நடக்கிறது ஜனவரி மாத டில்லி குளிர் எப்படி இருக்கு என்பது எல்லோரும் அறிந்ததே!! போகலாமா வேண்டாமா என்று மனது ஊசலடிக் கொண்டே இருந்தது. அப்பொழுது குளிருக்கு பயந்து இங்கேயே போகவில்லை என்றால் எதிர்காலத்தில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல முடியுமா (ஹி ஹி 😂 😂) அதனால் இப்போதே ஒரு ட்ரையல் பார்த்துவிடலாம் என்று துணிந்து விட்டேன். குளிர்காப்பு உடைகள் மற்றும் புதிய ஷுக்கள் ( 2019 க்கு பிறகு ஷு அணிவதே இல்லை) என பர்ச்சேஸ் செய்து விட்டேன். தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு தலைமையாசிரியர் தேர்வாகியிருந்தார் அதோடு மட்டுமில்லாமல் புதுச்சேரியிலிருந்தும் இரண்டு பேர் தேர்வாகியிருந்தனர் ஆக நாலு பேர் நாலு விதமாக தமிழில் பேசிக் கொள்ளலாம் என்கிற சந்தோஷத்தோடு பயண ஏற்பாடுகளை செய்யத் துவங்கினேன்.

மகளிர் தின சிறப்பு பதிவு

மகளிர் தின சிறப்பு பதிவு சமூகத்தில் எவ்வளவுதான் கல்வி வேலை வாய்ப்பு அதிகாரம் என்றெல்லாம் மகளிர் மேலே வந்தாலும், இன்னமும் பல இன்னல்கள் சம...