Sunday, June 2, 2019

கல்விப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி



அப்போது நான் பட்டதாரி கணித ஆசிரியராக இருந்த காலம். எனது வகுப்பில் ஒரு வழக்கு வந்தது.
 “சார் இவன் என்னை பட்டப் பெயர் இட்டு அழைக்கிறான் சார்”
“அப்படியாப்பா, என்ன பெயர் இட்டு அழைக்கிறான்?”
“தக்காளின்னு சொல்றான் சார்”
“டேய் இனிமே நம்ம தக்காளியை யாரும் தக்காளின்னு சொல்லக்கூடாது” என்று கூறியதும் வகுப்பே சிரிப்பலையில் மூழ்கியது.
“என்னடா தக்காளி, உன்னை யாரும் தக்காளின்னு கூப்பிட மாட்டாங்க” மறுபடியும் சிரிப்பலை.
“சார் என்ன சார் நீங்களே…”
“ஏன்டா நான் உன்னை தக்காளின்னு கூப்பிடக் கூடாதா?“
“நீங்க கூப்பிடலாம் சார்” என்றான் வெட்கத்தில் நெளிந்தபடி.
மற்றொருமுறை வகுப்பே அமைதியில் உரைந்திருக்க வருகைப் பதிவு எடுத்துக் கொண்டு இருந்தேன்.
“ராகுல்“
“எஸ் சார்“
”ரஞ்சித்“
“எஸ் சார்”
“கும்கி” என்று விளித்தவுடன் வெடித்த சிரிப்பலை அடங்க ஐந்து நிமிடம் ஆனது. அப்புறமும் சர வெடி வெடித்து முடிந்த பின்பும் வரும் ஓரிரு வெடிச் சத்தம் போல சிரிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு வழியாக அந்த வகுப்பின் இறுக்கம் தளர்ந்தது.
“சார், என்னங்க சார்” என்று நெளிந்தான் கும்கி என்கிற சற்றே பருத்த மாணவன்.(இன்றளவும் எனது பழைய மாணவர்கள் பல பேரின் பட்டப் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது)
மாணவர்களுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி இப்படியாக நெருக்கம் ஆகிவிடும். அப்புறம் சிறு விடுமுறை முடிந்து போனால் கூட ”என்ன சார் லீவு போட்டுட்டீங்க” என்று அன்பாக கேட்பார்கள்.
நானும் கூட ’எப்போது வகுப்புக்கு செல்வோம்’ என்கிற ஏக்கத்தோடு இருப்பதுண்டு.
மாலை வேளைகளில் மாணவர்கள் சோர்ந்திருக்கும் வேளைகளில் நாங்கள் பாடத்தை தவிர்த்து பல விஷயங்களை பேசுவோம். அந்த வேளைகளில் இது வரை வகுப்பில் பேசாத மாணவர்கள் எல்லோரும் பேசுவார்கள். அது முற்றிலும் ஒரு தயக்கமற்ற கேள்வி பதில் நேரமாக சுவாரசியமாக செல்லும்.
என்ன பேசுவோம் அப்படி?!!
மாணவர்களின் கரம் பிடித்துக் கொண்டு நிலவு, சூரியன், செவ்வாய் கிரகம் ஏன் சூரியமண்டலம் தாண்டிக் கூட சென்றது உண்டு.
இளையராஜாவின் இசையமுதை எப்படி பருகவேண்டும் என்று கூட பேசி இருக்கிறோம்.
ஆங்கிலத் துணைப்பாடம்(women empowerment) நடத்தும் போதெல்லாம் உலக அளவிலான பெண் ஆளுமைகளின் சாதனைகளை கதைத்தது உண்டு.
யார் மனசுல யாரு (21 yes or no type questions கொண்டு மாணவர்கள் மனதில் நினைக்கும் ஆளுமைகளை 21 வது கேள்விகளுக்குள் இறுதி செய்து கண்டு பிடிக்கும் விளையாட்டு) கூட விளையாடி இருக்கிறேன்.
துப்பறியும் சாம்பு கதைகள் உள்ளிட்ட நான் படித்த மாணவர்களிடம் பகிரத்தக்க கதைகளை பேசியிருக்கிறேன்.
அவர்களுக்கு சொல்வதெற்கென்றே நான் நூலகத்தில் நிறைய நூல்கள் எடுத்து படித்தேன்.
இதனால் என்ன பயன்?
இந்த வகையான பாடம் தாண்டிய உரையாடல்கள் மாணவர்களுக்கும் எனக்குமான இடைவெளியை குறைத்தது. என்னை முழுமையாக நம்பி எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். எனது பாடம் அவர்களின் மிகப் பிடித்த பாடமாகிப் போனது. (பாத்தீங்களா பொதுநலத்தில் ஒரு சுயநலம்)
அடுத்தது ”ஹீரோ பேனா”
வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்போருக்கு நான் வழங்கும் பரிசுதான் அது. பொதுத்தேர்வு என்று இல்லை, காலாண்டு அரையாண்டு பரிட்சையில் கூட வழங்குவது உண்டு.
சில முறை மெல்லக் கற்போருக்கு தனிப்பட்ட இலக்கு (30, 35, 40) நிர்ணயித்து பேனா பரிசு வழங்கியது உண்டு.
“உங்க கிட்ட பேனா பரிசு வாங்கியே ஆக வேண்டும் என்று சத்தியம் செய்து படித்து இருக்கிறோம் சார்” என்று பின்னாட்களில் எனது மாணவர்கள் கூறக் கேட்ட போது அகமகிழ்ந்து போனேன்.
பரிசு கூட வேண்டாம், பாராட்டு என்பது நம் கையில் உள்ள தங்க காசு போன்றது. தயக்கமில்லாமல் அதை அள்ளி அள்ளி வீச வேண்டும். நன்கு படிப்போர் மெல்லக் கற்போர் என அனைவரையும் பாராட்டி அவர்களின் செயல்களை அங்கீகரிக்க வேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
முற்றிலும் தவிருங்கள்
ஆசிரியர்கள் புகை மது என்று எந்த விதமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருப்பது உத்தமம்.
குறைந்தபட்சம் அந்த பழக்கங்களை தமது மாணவர்கள் அறியாவண்ணம் வைத்திருப்பது நல்லது.
MORAL VALUES ஐ அவர்கள் பெரிதாக எண்ணவும் பின் பற்றவும் நாம் அவர்களுக்கு INSPIRATION ஆக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சாரே செய்கிறார் நாம் செய்து பார்த்தால் என்ன என்று எண்ணுவார்கள். ஒழுக்கத்தின் எல்லைகளை மீற முயல்வார்கள்.
முக்கியமாக நமது மது அல்லது புகை போன்ற தீய பழக்க வழக்கங்களை மாணவர்கள் காதில் விழும் வண்ணம் சாகசம் போலக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவப் பாடங்கள். ஆசிரியப் பெருமக்களாகிய நாம் இந்தக் கல்விப் புத்தாண்டில் நம்மை இன்னும் மேம்படுத்தி மெறுகேற்றிக் கொண்டு மாணவர்களுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக என்று கூறி எனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.


Saturday, June 1, 2019

இந்தி – தேவையான ஆணியா தேவையில்லாத ஆணியா???


எனது நண்பர் ஒருவர், “சார் இந்தி கற்க விடாம ஒரு தலைமுறையையே நாசம் செய்து விட்டார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள்”
“ஏன் நீங்க தனிப்பட்ட முறையில் இந்தி கத்துக்கறத வேணாம்னு யாரும் சொன்னாங்களா?”
“இல்ல சார் ஆனா ஸ்கூல்லயே படிச்சாக்க நல்லாருக்கும்ல”
“ஆமாம், ஸ்கூல்லதான் 3 ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் படிச்சிங்கல்ல இப்போ ஆங்கிலத்துல உங்களால பேசமுடியமா?”
“சார், அது வந்து…”
“உங்களால புரிஞ்சுக்க முடியும் பேசவும் முடியும் அதற்கான சூழல்ல இருந்தா ஒரு மாதத்தில் உங்களால் சரளமாக பேசமுடியும்”
“ஆனா வந்து இந்தி பற்றிய அடிப்படை தெரிஞ்சிக்கலாம்ல”
“ஏன் இந்தியில எதாவது இலக்கியம் படைக்க போறீங்களா?, நீங்க ஆர்வ மிகுதியில் எந்த ஒரு மொழியையும் சொந்தமாக கற்றுத் தேற இயலும், அதற்காக அந்த மொழியை பள்ளிப் பாடத்தில் வைக்கணும்னு சொல்லி பீதிய கௌப்பாதீங்க”
மேலே இருக்கும் உரையாடல் இருக்கட்டும், எதற்காக இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்??
இந்தியாவை ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதற்கு காரணம் சைஸ் மட்டும் இல்லை, இங்கே பலதரப்பட்ட பழக்க வழக்கங்களும் கலாச்சாரங்களும் உள்ள மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக உள்ளார்கள் என்பதால் தான். அதையெல்லாம் மழுங்கடித்து ஒற்றை மொழி ஒற்றை கலாச்சாரம் என்கிற புள்ளியை நோக்கி நெட்டித்தள்ளி இந்தி – இந்து – இந்தியா என்று சொல்லி மார்தட்டும் முயற்சியாகவே இந்த இந்தி திணிப்பை நான் பார்க்கிறேன்.
என்ன தான் பாஸ் உங்க பிரச்சனை பள்ளியில இந்தி பாடத்தை கட்டாயம் கொண்டுவந்தால் மாணவர்களுக்கு நல்லது தானே?
ஆமாம் ஏற்கனவே இருக்கும் அயல்மொழி ஆங்கிலத்தை அப்படியே ”அறுத்து தள்ளிட்டாங்க”!!
ஏற்கனவே அயல்மொழியான ஆங்கிலம் மாணவர்களுக்கு ஒரு அச்சுறுத்தும் கொடுங்கனவாகவே உள்ளது. அதனோடு இந்தியையும் சேர்த்து மாணவர்களின் பாடச்சுமையை ஏன் அதிகப் படுத்த வேண்டும். தேவைப்படுவோர் தனியாக கற்றுக் கொள்ளட்டும். எதற்காக கட்டாயப்படுத்த வேண்டும்.
இதில் இன்னொரு நுணுக்கத்தையும் பார்க்க வேண்டும். வட இந்தியாவில் உள்ள பல மொழிகளின் எழுத்துக்கள் யாவும் இந்தி போன்ற வடிவம் உள்ளவை. அவர்களின் மொழி வழக்குகளில் கூட பல சொற்கள் இந்தி போலவே இருக்கும். மேலும் இஸ்லாமியர் பேசும் மொழியும் இந்தி போலவேத்தான் இருக்கும். இருவரும் எளிதாக புரிந்து கொள்வார்கள். எனவே வட இந்திய மாநிலத்தவருக்கு இந்தி மொழி கற்பது எளிது. நமக்கு இந்தி முழுக்க முழுக்க அந்நியம். ஒரு தொடர்பும் இல்லை. எனவே இந்தி பேசும் பல மாநிலத்தவருக்கு இந்தி மிக எளிது. நமக்க கடினம்.
மேலும் நாம் ஏன் இந்தி கற்க வேண்டும்?
இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் இந்தியாவில் தேசிய மொழி என்கிற அந்தஸ்தெல்லாம் கிடையாது. இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழிதானே ஒழிய தேசிய மொழியெல்லாம் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடு “இந்தி எதிர்ப்பு“ என்று தவறாக தலைமுறைகள் தாண்டி பரப்ப பட்டு வருகிறது. அது “இந்தி திணிப்பு எதிர்ப்பு“ என்றுதான் கூறப்பட்டிருக்க வேண்டும். யாரும் இந்தி படிக்காதீர்கள் என்று யாரும் கத்தியைக் காட்டி மிரட்ட வில்லை, மாறாக பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கி திணிக்காதீர்கள் என்று தான் போராடினார்கள்.
இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றி புரிந்து கொள்ள இதன் ஆரம்ப கால வரலாற்றை தெரிந்து இருப்பது அவசியம்.

1938ல் ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி கட்டாயம் என்கிற அரசாணையை வெளியிடுகிறது. மறைமலை அடிகளார், சோம சுந்தர பாரதியார் மற்றும் தந்தைப் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் பெரிய போராட்டம் வெடிக்கிறது. அதில் கைது செய்யப் பட்ட நடராசன் என்கிற மாணவரும் தாளமுத்து என்பவரும் உடல்நலம் குன்றி இறந்து போகிறார்கள். 1940ல் எதிர்ப்புகளுக்கு பணிந்து அந்த அரசாணை வாபஸ் பெறப்படுகிறது.
1948ல் ஓமாந்தூரார் தலைமையிலான அரசும் இந்தி திணிப்பை அரசாணையாக வெளியிட மறுபடியும் எதிர்ப்பு வலுக்கிறது. பிறகு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று அரசாணை மாற்றி வெளியிடப் படுகிறது
இதன் பிறகு நேருவின் அமைச்சரவையில் 1963ல் ஆட்சி மொழி மசோதா சட்டமாக்கப் படுகிறது. அதன்படி ”26.01.1965 முதல் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும்” என்பது சட்டம்.
1965ம் ஆண்டு நெருங்க நெருங்க போராட்டம் தீவிரமடைகிறது. கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் ஒரு சிலை இருக்கும் அது யார் தெரியுமா?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சி இரயில் நிலையத்தில் தீக்குளித்து இறந்து போன கீழப்பழூரைச் சேர்ந்த சின்னசாமி என்ற மொழிப்போர் தியாகியின் சிலைதான் அது.
27.01.1965ல் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதில் சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்கிற மாணவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்.

இந்தி எதிர்ப்பு போரில் பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டம் தான் முதன்மையானது. அங்கே தபால் அலுவலக இந்தி பெயர்ப் பலகையை தார் கொண்டு அழிக்க முயன்ற சிறுவன் ஒருவன் இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானான். அதன் பின்பு வெடித்த போராட்டத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு நூற்றுக் கணக்கானோர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. 1965 பிப்ரவரி 12 பொள்ளாச்சி படுகொலை நாள் என்றே வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.
முதன் முதலில் கட்டாய இந்தி மசோதாவை கொண்டு வந்த ராஜாஜியே கூட சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். 50 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டம் மார்ச் 15 1965 ல் முடிவுற்றது.
அதற்கு பிறகான சட்டப் பேரவைத் தேர்தலில் தான் 1967 ல் காமராஜர் பெ.சீனிவாசன் என்கிற மாணவரிடம் தோல்வியுற்றார். இந்தி திணிப்பை கையில் எடுத்த காங்கிரஸ் அப்போது வீழ்ந்தது தான் அதன் பின்பு தமிழ் நாட்டில் எழவே இல்லை.
இறுதியாக இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடரும் என்று அந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
நாம் இந்தியை விடுத்து ஆங்கிலத்தை தழுவியதால் தான் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோம்” ஆம் நம் மாநிலத்தவர் அநேகம் பேர் அயல் நாடுகளுக்கு சென்று நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். மாறாக இந்தி கற்றிருந்தால் பின் தங்கிய மாநிலமாகி மோடிக்கு வாக்களித்துக் கொண்டு இருந்து இருப்போம்.
இறுதியாக இன்னும் தெளிவாக சொல்கிறேன், இந்தி பிரச்சார சபா மூலமாக வெறும் பத்து ரூபா செலவில் யார் வேண்டுமானாலும் இந்தி கற்றுக் கொள்ளலாம் ( இது 1923 முதலாகவே இந்தி கற்றுத் தருவதற்காக சென்னையில் இயங்கி வருகிறது.) அதற்காக கட்டாயப் படுத்தி திணிப்பது தவறு.
எனது நிலைப்பாடும் திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் (அ.இ.அ.தி.மு.க இப்போது திராவிடக் கட்சியாக உள்ளதா என்பதே கேள்விக்குறியது) இது தான் ”எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் இந்தி உட்பட, ஆனால் இந்தி தான் அலுவலக மொழி இந்தியை பள்ளியில் கட்டாயமாக்குங்கள் என்கிற இந்தி திணிப்பை இப்போதும் எதிர்க்கிறோம் இன்னும் தீவிரமாக”

Wednesday, May 15, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை – 3



முன்குறிப்பு: முதல் பகுதியில் கருந்துளை என்றால் என்ன என்று முடிந்த அளவில் இலகுவாக விளக்கியிருப்பதாக எண்ணுகிறேன்.
     இரண்டாம் பகுதியில் கருந்துளை என்கிற கருத்தாக்கம் முதன் முதலில் யாருடைய மனதில் சூல் கொண்டது யாரெல்லாம் அதனை வளர்த்து எடுத்தார்கள் என்று பார்த்தோம். அது இன்னும் முடியவில்லை. இந்திய விஞ்ஞானி ஒருவரின் பங்களிப்பு பற்றி கூறுவதாக சொல்லி இருந்தேன். அங்கே ஆரம்பித்து தொடர்வோம்.
சுப்பிரமணியன் சந்திர சேகர் யார்?
     இவர் இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வென்ற இயற்பில் அறிஞர் சர்.சி.வி.இராமன் அவர்களின் நெருங்கிய உறவினர்.
அவர் அப்படி என்ன கண்டுபிடித்தார்?
     சூரியனின் நிறையைப்போல் 1.4 மடங்கு வரைக்கும் உள்ள வெள்ளைக் குள்ள விண்மீன் நிலைத்து இருக்கும். அந்த 1.4 மடங்கு என்கிற எல்லையை கண்டி தாண்டுச்சுன்னா போச்சு அம்புட்டுதான் அப்புறம் அது தன்னுள் தானே சிதைந்து சுருங்கி நியுட்ரான் ஸ்டாராகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிப்பூடும்.
யப்பா கொஞ்சம் இரு கொஞ்சம் இரு, என்னா நீ பாட்டுக்கு வெள்ளைக் குள்ளன் கருப்பு குள்ளன் என்கிற, நியுட்ரான் நட்சத்திரம் என்கிற ஒண்ணுமே வௌங்களயேப்பா?!!
அதுக்கு முதல்ல இந்த நட்சத்திரம் எல்லாம் எப்படி உண்டாச்சுன்னு பூர்வீகத்தலாம் தோண்டனும். வரலாறு முக்கியம் அமைச்சரே!
A Brief History of Time (காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்) என்கிற நூலில் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் அழகா விவரிச்சி இருக்காரு.
“பால் வீதியில் உள்ள பெரும் அளவிலான வாயு மேகங்கள் (பெரும்பாலும் ஹைட்ரஜன்) தன் ஈர்ப்புக் கவர்ச்சியின் காரணமாக தங்களுக்குள்ளாகவே முட்டி மோதி தகர்வுறத் தொடங்கும் போது ஒரு விண்மீன் உருவாகிறது”
இப்படியே அவை தனக்குத் தானே மோதி சுருங்கும் போது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் கூடிக் கலந்து ஹீலியம் என்கிற வாயு உருவாகிறது. இதற்கு பெயர் தான் அணுக்கரு இணைவு. அதாவது ஹைட்ரஜன் பாம் மாதிரி.
ஆமாம், ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாடு காரணமாக அதிலிருந்து கட்டற்ற பேராற்றல் வெளிப்படுகிறது. இந்த வெப்ப உமிழ்வால் தான் வின்மீண்கள் ஒளிர்கின்றன. அதே வழியில் தான் சூரியனும் ஒளிர்கிறது. சூரியனிலும் இதே பொழப்புதான் நடக்கிறது. அங்கே இருக்கிற ஹைட்ரஜன் அணுக்கள் கூடிக் கலந்து ஹீலியமாக ஆவதோடு பேராற்றலையும் வெளிப்படுத்துவதால் நமக்கு வெளிச்சமும் வெப்பமும் சூரியனில் இருந்து கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
அப்படியா?
அப்படித்தான், ஆனா இங்கயும் ஒரு அழகான இயற்கை நுட்பம் அந்த நட்சத்திரத்தை நிலைத்திருக்க வைக்கிறது.
நான் முதலில் ஹைட்ரஜன் அணுக்கள் தங்களுக்குள் மோதி தகர்வுற்று சுருங்கியபடி செல்கிறது என்றேன் அல்லவா?
ஆமாம்.
அப்படி உள்நோக்கி சுருங்கியபடி செல்லும் நிகழ்வானது ஒரு சமரசத்திற்கு வரும் நுட்பம் ஒன்று உள்ளது.
அப்படியா அது என்னாது?
அணுக்கரு இணைவில் உருவாகும் வெப்பமானது அவை ஒன்றுடன் ஒன்று தகர்வுற்று நொறுங்கி சுருங்கும் நிகழ்வைத் தடுக்கிறது.
ஒண்ணுமே பிரியலையேப்பா!!
“பலூன் உள்ளே இருக்கும் காற்றழுத்தம் பலூனை பெரிதாக்க முயலுகிறது, பலூனின் ரப்பர் இழுவை சிறிதாக்க முயலுகிறது. இந்த இரு முயற்சிகளுக்கும் இடையே ஒரு சமரசம் ஏற்படுவதால் பலூன் நிலைத்திருக்கிறது” இது புரிகிறதா, இதே மெக்கானிசம் தான், வெப்பம் அணுக்களை விலக்கியிருக்க வைக்கிறது, அதே நேரத்தில் ஈர்ப்பு விசை இணைக்க முயலுகிறது. இந்த சமரசம் தான் வின்மீண்கள் நிலைத்திருக்க காரணம்.
விண்மீன் தோன்றியது சரி, அப்புறம் இந்த வெள்ளைக் குள்ள நட்சத்திரம்னு சொன்னிங்களே?!
குந்தித் தின்றால் குன்றும் மாலும் அல்லவா? அதே போலத்தான் விண்மீனில் இருக்கும் ஹைட்ரஜன் எல்லாம் இணைந்து இணைந்து ஹீலியமா மாறிப் போச்சுனு வைங்க அப்புறம் என்னாகும்?
சூரியன் டக்குன்னு கருப்பாயிடுமா?
உள்ளே இருக்கும் எரிபொருள் (ஹைட்ரஜன்) தீரும் நிலை வரும் போது அதன் வெளிவட்டம் விலகிப் போய் விடும் மீதம் உள்ள உள்வட்டப் பகுதி சுருங்கி வெள்ளைக் குள்ளனாக மாறிப்போகும்.
சரி அதுக்கும் சுப்பிரமணியன் சந்திர சேகர் கண்டு பிடிச்சதுக்கும் என்ன சம்மந்தம்?
இந்த வெள்ளைக்குள்ளனோட நிறை நம்ம சூரியனோட நிறையில் 1.4 மடங்கு இருக்கும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் பண்ணாமல் இருக்கும். ஆனா 1.4 மடங்கு என்கிற எல்லையை ( இந்த எல்லைக்குப் பேர் ”சந்திரசேகர் லிமிட்”) தாண்டிடுச்சின்னா அது தன்னுள் இருக்கும் அணுக்களை தனக்குத்தானே ஈர்க்கும் வேகம் தாறுமாறா உயர்ந்து போகும். அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து நியுட்ரான் நட்சத்திரமா மாறிப் போகும்.
எப்பா எப்பா, அது என்னாப்பா நியுட்ரான் நட்சத்திரம்?
ஒரு அணுன்னா உட்கருவுல நேர்மின் சுமையுடைய (தமிழ்ல பாசிட்டிவ்னு சொல்வாங்க)
 புரோட்டான், அப்புறம் எந்த மின்சுமையும் இல்லாத மிக்சர் சாப்பிடுற நியுட்ரான் இருக்கும். அப்புறம் இந்த எதிர் மின் சுமை ( அதே தான் நெகட்டிவ்) உடைய எலக்ட்ரான் என்கிற துகள்  அணுக்கருவைச் சுற்றி சுற்றி வலம் வந்தபடி இருக்கும். பாசிட்டிவான புரோட்டான்களும் நெகட்டிவான எலக்ட்ரான்களும் சம எண்ணிக்கையில் இருந்தா தான் அது நடுநிலையான அணு. ஏதாவது ஒண்ணுல கூட போயிடுச்சின்னா அயனி ஆயிடும்.
அதுல்லாம் நான் இஸ்கூல்ல படிச்சிருக்கே மேல சொல்லு தல!!
இப்ப இந்த பேரதிக ஈர்ப்பு ஆற்றலால் ஈர்க்கப்படும் அணுக்கள் தங்களுக்குள் மோதும் போது பாசிட்டிவான எலக்ட்ரான்களும் நெகட்டிவ் புரோட்டான்களும் ஒண்ணாக் கூடி நியுட்ரான்களா மாறிப் போய்விடும். அவை வேறு சம எண்ணிக்கையில் இருப்பதால் ஒண்ணுக் கூட மிஞ்சாது.
     இந்த அணுங்கறது ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிசாக இருக்குன்னு வைங்க அப்போ அங்கே கீழே கிடக்கும் ஒரு கூழாங்கல்லு சைஸ் தான் அந்த அணுவோட உட்கரு.
அப்படின்னா அணுவோட உள்ளே வெற்றிடம் தான் நிறைய உள்ளதா??
     ஆமாம், ஆனா அது எலக்ட்ரான் சுத்தி சுத்தி வரும் வரைக்கும் தான். அணு தகர்வுற்று உட்கருவோடு கலக்கும் போது அந்த கால்பந்து மைதானம் சுருங்கி கூழாங்கல்லா பூடும். ஆனா வெயிட் என்னவோ அதே கால் பந்து மைதானம் அளவுக்கு இருக்கும். சோ நிறை அதிகமாக இருப்பதால் ஈர்ப்பு விசையும் மிக அதிக மடங்கு கூடிவிடும்.
     இப்படியாக கழுத தேஞ்சி கட்டெறும்பாக இல்ல இல்ல சித்தெறும்பாக மாறுகிற கதை தான் இந்த நியுட்ரான் நட்சத்திரத்தோட கதை.
     இப்படியாக அந்த நியுட்ரான் நட்சத்திரம் ஒரு மில்லியன் வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும். அப்புறம் மேலும் தகர்ந்து சுருங்கி கருந்துளையாக மாறிவிடும். அந்த நிலையில் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகம். ஒளி கூட எஸ்கேப் ஆக முடியாது.
நிறுத்துப்பா போதும் இது தான் மொத அத்தியாயத்திலேயே சொல்லிட்டியே!!
சரி சரி ஓகே! அடுத்தவாரம் இந்த கருந்துளைக்கு “கருந்துளை” ன்னு காதுகுத்தி கெடா வெட்டி பேரு வச்சது யாரு என்னா மேட்டருன்னு விலாவாரியா பாப்போம்.


Friday, May 3, 2019

“கிரீன் புக்” – அமெரிக்க நிறவெறியின் கேட்டலாக்


“கிரீன் புக்” – அமெரிக்க நிறவெறியின் கேட்டலாக்

“டோனி லிப்” என்பவர் பிரபல பாரில் பவுன்சர் ஆக வேலை பார்க்கிறார். எந்த பிரச்சனை ன்னாலும் முஷ்டியை முறுக்கிக் கொண்டு போவார். பெரிய குடும்பம். பார் திடீரென மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாக சொல்கிறார்கள். அந்த மூன்று மாதம் குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நிற்கிறார். அடுத்தநாளே வாட்ச் 50 டாலருக்கு அடகுக்கு போகிறது. ஆசாமி நிரம்ப நிற வெறி உடையவர். வீட்டிற்கு மின்பழுது நீக்க வந்த பணியாளர்களுக்கு டோனிலிப் ன் மனைவி க்ளாசில் ஜுஸ் கொடுக்கிறார். பணியாளர்கள் கருப்பினத்தவர். டோனி லிப் அந்த க்ளாசினை அருவெறுப்போடு எடுத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறார். – இது தான் டோனி லிப்.
”டான் ஷெர்லி” அமெரிக்காவின் மிகப்பெரிய ப்யானோ இசைக் கலைஞர். கருப்பினத்தவர். இசையால் கிடைத்த கட்டற்ற வருமானம். நல்ல வசதியான மாளிகையில் மகாராஜா போல வாழ்ந்து வருகிறார். கம்மங்கூழ் கொடுத்தால் கூட மடியில் டவல் போட்டுக் கொண்டு ஃபோர்க் கரண்டி எல்லாம் எடுத்துக் கொண்டு தான் அமர்வார். அவ்வளவு டீசன்ட். நடத்தையும் அவ்வாறே. வீணாக வம்புக்கு  போக மாட்டார். எதையும் டிப்ளமேட்டிக்காக அணுகி சுமுகமாக முடிக்க வேண்டும் என எண்ணுபவர்.
“கிரீன் புக்” – இந்தப் புத்தகம் நிற வெறி உச்சத்தில் இருந்த 1960 களில் கருப்பினத்தவர் எங்கே பயணம் சென்றாலும் கையோடு எடுத்துக் கொண்டு செல்லும் புத்தகம். அதில் கருப்பினத்தவரால் நடத்தப்படும் உணவு விடுதிகள் தங்கும் விடுதிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும். மற்ற இடங்கள் வெள்ளைக் காரர்களுக்கானது. பிரச்சனையின்றி எங்கேயும் போய் வர வேண்டுமானால் “கிரீன் புக்” கை வசம் இருக்க வேண்டும்.
இப்போ மேட்டருக்கு வருவோம். இந்தப் படம் உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எடுக்கப் பட்டது. 1962 ல் கதை நடப்பதாக காட்டப் படுகிறது.
வேலையின்றி தவிக்கும் டோனி லிப். நிறவெறி மிகுந்த தெற்கு மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஷெர்லிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இரண்டு மாத சுற்றுப் பிரயாணமாக காரில் சென்று அனைத்து நிகழ்ச்சிகளையும் முடிக்க திட்டமிடுகிறார். அதனால் பாடி கார்ட் கம் டிரைவராக பணியாற்ற ஆள் தேடுகிறார். 
இன்டெர்வியுவுக்கு வரும் டோனிலிப் காக்க வைக்கப் பட்டு உள்ளே அனுப்ப படுகிறார். அங்கே அரண்மனை போன்ற ஒரு வீட்டில் மகாராஜா போல ஷெர்லி வந்து அமர்கிறார். “ஒரு கருப்பனுக்கு இவ்வளவு பவுசா” என்கிற அலட்சிய மனப்பான்மையோடு டோனி லிப் அவரைப் பார்க்கிறார். அவரது வேலையின் தன்மை மற்றும் தாராள சம்பளம் குறித்து பேசுகிறார். ஒரு புறம் ஒரு கருப்பன் கிட்ட வேலை செய்வதா என்கிற அவரது நிறவெறி மனது அரித்தாலும் அவரது குடும்பத் தேவை சார் நெருக்கடிகள் அவரை சம்மதிக்க வைக்கிறது.
இப்படித்தான் டோனி லிப் ம் ஷெர்லியும் முதலில் இணைகிறார்கள். பயணம் தொடங்குகிறது. ஷெர்லியின் முதல் நிகழ்ச்சியிலேயே மனதை பரிகொடுத்து அவர் மீது மரியாதையும் பாசமும் வருகிறது டோனிக்கு. என்னதான் விலையுயர்ந்த ஆடைகள் என மிடுக்கான தோற்றத்துடன் இருந்தாலும் அவரது நிறம் அவரை அவ்வப்போது அவமானத்துக்கு உள்ளாக்குகிறது. அம்மாதிரியான தருணங்களில் டோனி இடையில் புகுந்து காப்பாற்றுகிறார்.
ஒரு மழை இரவில் போலீஸ் இவர்களது காரை வழிமறிக்கிறது. கொட்டும் மழையில் டோனி இறங்கி ஆவணங்களை காண்பித்துக் கொண்டு இருக்கிறார். உள்ளே ஷெர்லியை பார்த்ததும் போலீஸ் காரர் இறங்கச் சொல்கிறார். ரெண்டு வெள்ளைக் காரனுவ மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம் ஒரு கருப்பு ஆளு உள்ளே காரில் அமர்ந்திருப்பதா என்று கோபமுறுகிறார். கோபக்கார டோனி போலீஸ் மேலேயே கை வைக்க இருவரும் லாக்கப் ல் வைக்கப் படுகிறார்கள். போலீஸ் காரர்களிடம் கைதிகளின் உரிமைகள் பற்றி வாக்குவாதம் செய்து ஒரு போன் செய்ய அனுமதி பெற்று போன் செய்கிறார். பிறகு கால் வருகிறது. போலீஸ் அதிகாரி சப்த நாடியும் ஒடுங்கிப் போய் பேசுகிறார். அவர்கள் வெளியே விடப்படுகிறார்கள். “ஆமாம், யார்கிட்ட பேசுனீங்க?” என்று டோனி கேட்க “அபிராகாம் லிங்கனிடம் ” என்று அமைதியாக பதிலளிக்கிறார் ஷெர்லி.
கிருஸ்மஸ் நெருங்குகிறது. பயணம் செய்யும் சாலைகளில் எல்லாம் பனித் திவலைகள் மழை போல பொழிகிறது. இறுதியாக ஒரு நிகழ்ச்சி அது முடிந்த பின்னர் ஊருக்கு கிளம்பவேண்டும். ராஜமரியாதையோடு வரவேற்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். வரவேற்று ஓய்வெடுக்க ஒரு கேவலமான அழுக்கு அறை தரப்படுகிறது. சரி பரவாயில்லை என்று அங்கேயே உடை மாற்றிக் கொண்டு சாப்பிட வருகிறார். அங்கே கருப்பர்கள் அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது என்று மறுக்கிறார்கள். ” இந்த நிகழ்ச்சியின் நாயகன் அவர். அவர் நிமித்தமாகத் தான் இந்த ஹோட்டலில் இத்தனை பேர் சாப்பிட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள் அவருக்கே நீங்கள் அனுமதி மறுக்கிறீர்கள்” என்று டோனி கேட்கிறார். “இந்த ஹோட்டலுக்குன்னு ஒரு பாரம்பரியம் பழக்க வழக்கம் இருக்கு அதை எவர் பொருட்டும் மாற்ற இயலாது புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார் விடுதி சிப்பந்தி. பின்னர் இருவரும் அருகில் உள்ள கருப்பர்களுக்கான உணவு விடுதியில் உணவு உண்டு அங்கேயே ஒரு அருமையான துள்ளிசைக் கச்சேரி நடத்தி விட்டு ஒப்புக் கொண்ட அந்த நிகழ்ச்சியை கேன்சல் செய்து விட்டு கிளம்பி விடுகிறார்கள்.
மற்றுமொரு சம்பவம்- ஒரு பெரிய துணிக்கடையில் விலையுயர்ந்த ஆடை வாங்க செல்கிறார்கள். விலை டிசைன் எல்லாவற்றையும் டோனி பார்த்து எடுத்து விடுகிறார். “அங்கே தான் ட்ரயல் ரூம் இருக்கு சென்று போட்டு பாருங்கள்” என்கிறார் கடைக்காரர். ஆனால் உடை ஷெர்லிக்கு என்று தெரிந்த அடுத்த வினாடி உடையை பிடுங்கிக் கொண்டு  “நீங்க எல்லாம் துணியை ட்ரயல் பார்க்க கூடாது” என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விடுகிறார்.
இவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுற டோனிக்கு லெட்டர் ஒழுங்கா எழுத வரலையா என்று நான் வாயைப் பொளந்தேன். அப்புறம் தான் தோன்றியது அவன் ஒரு அமெரிக்க அன் எஜுக்கேட்டட். டோனி தனது அன்பு மனைவிக்கு கடிதங்களை கவிதையாய் எழுத ஷெர்லி உதவுகிறார். டோனி தனது மனைவிக்கு எழுதும் அன்பு ஒழுகும் கடிதங்கள் சார்ந்த காட்சிகள் நல்ல கவிதை.
வசதியே இல்லாத வெள்ளையர் டோனி பெரிய குடும்பமாக வாழ்கிறார். அவ்வளவு பெரிய பணக்கார ஷெர்லி தனி மரமாக இருக்கிறார். “தயக்கத்தை வென்று முதலில் பேசி உறவுகளை சீர் செய்யப் பயந்து பயந்து தனி மரமாக வாழும் மனிதர்கள் இந்த உலகில் நிரம்ப உள்ளனர்” என்று அருமையான தத்துவத்தை போகிற போக்கில் விட்டெரிகிறார் டோனி.
கிருஸ்மஸ் இரவில் எப்படியாவது டோனியை குடும்பத்தோடு சேர்த்து விட வேண்டும் என களைப்பாக இருக்கும் டோனிக்கு ஓய்வு கொடுத்து விட்டு அந்த பனி கொட்டும் இரவில் தானே காரோட்டி கிருஸ்மஸ் பண்டிகையை  குடும்பத்தோடு டோனி கொண்டாடும் படி செய்து விட்டு தனது கூட்டிற்கு செல்லும் ஷெர்லி, தனிமையின் புழுக்கமும் அமைதியின் நாராச இரைச்சலும் மனதை உலுக்கவே அழையா விருந்தாளியாய் டோனியின் வெள்ளைக் குடும்பத்தின் கதவை தட்டுகிறார். டோனியின் மனைவி அவரை ஆரத் தழுவி வரவேற்கிறாள் என்பதோடு படம் முடிகிறது.
இங்கே இந்தியாவில் சாதி தெரியாத வரைக்கும் என்ன வேணும்னாலும் பெற இயலும். சாதியைக் கூறும் வெளிப்படையான அடையாளங்கள் இல்லை. ஆனால் தங்கள் தோற்றமும் நிறமுமே வேற்றுமைக்கு காரணமாக இருக்கும் போது அமெரிக்க வாழ் கருப்பர்கள் எப்படி தங்களின் அடையாளத்தை மறைக்க இயலும். எனவே இங்கு நிலவிய சாதியக் கொடுமைகளைக் காட்டிலும் அதிக இன்னல்களை அவர்கள் அனுபவித்திருக்கக் கூடும். ஒரு வெள்ளையன் பேருந்தில் நிற்கும் போது கருப்பர்கள் அமர இயலாது. அவர்களின் இடத்தை வெள்ளையர்களுக்கு விட்டுத் தர வேண்டும். இந்த இடத்தில் தானே மார்ட்டின் லூதர் கிங் ன் போராட்டத்திற்கான பொறி கிளம்பியது.
இந்த “கிரீன் புக்” என்பதற்கான விளக்கத்தை அறிந்த போது பார்சி விடுதியில் இருந்து நள்ளிரவில் அம்பேத்கர் வெளியேற்றப் பட்ட சம்பவம் தான் எனக்கு ஞாபகம் வந்தது.


Tuesday, April 30, 2019

100க்கு 100 தேர்ச்சி அல்ல எங்கள் முயற்சி

காலையில் ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு, " சார், நான் கமலோட (பெயர் மாற்றப் பட்டுள்ளது)அம்மா பேசறேன் சார்"
"எந்த கமல் அம்மா?!"
" பத்தாம் வகுப்பு கமல்"
"ஓ, உங்க பையன்தான் பாஸாயிட்டானே ம்மா!"
"ரொம்ப நன்றி சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியிலை,
ரொம்ப ரொம்ப நன்றி சார்" என உடைந்து அழுதார்.

யார் இந்த கமல்?!
தாத்தா வீட்டில் தங்கி படிப்பவன், வயதான தாத்தாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஊர் சுற்றினான்.
ஆசிரியர்களோ விட்டேனா பார் என அவன் வீட்டில் போய் அமர்ந்து விட்டார்கள்.
அவனோட அம்மாவுக்கும் தொலை'பேசி' வரச்செய்து கொத்தாக தூக்கிக் கொண்டு வந்தனர்.
அவனோட அம்மாவுக்கும் அவனுக்கும் அறிவுரை கூறி திரும்பவும் பள்ளிக்கு வரச்செய்தோம்.
தேர்வுக்கு 10 நாள் இருக்கும் போது மீண்டும் வம்பு பண்ணி ஓடிவிட்டான். பள்ளிக்கு வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான்.
இருக்கும் ஒரே வாய்ப்பாக அவன் அம்மாவுக்கு விஷயத்தை எடுத்து சொல்லி 'இனிமே வந்தா கூட பாஸ்பண்ண வச்சிடுவோம் ' என்று உறுதியளித்தனர் தம் முயற்சியில் சற்றும் தளராத எங்கள் ஆசிரியர்கள்.
ஆனாலும் நம்பிக்கையின்றியே என்னிடம் விஷயத்தை கூறினார்கள்.

அடுத்தநாள் "மஃப்டியில்" சோல்டர் பேகோடு ஃபேர்வெல் பார்ட்டிக்கு காலையிலேயே வந்து விட்டான்.
இந்த மாதிரி பல "உள்ளே வெளியே" போராட்டத்தோடு அவனோடு மல்லுக் கட்டி அவனை கடை தேற்றி விட்டார்கள் எமது ஆசிரியர்கள்.

தேர்வு முடிவுகள் வந்த அன்று காலை ரொம்ப பிசியாக பல போன்கால்களுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்த போது ஒரு அம்மா வந்து கை கூப்பியபடி நின்றார்.
"என்னம்மா?!"
"என் பொண்ணு பாஸ் பண்ணிட்டாளா சாரு?!"
"பேர் என்னங்கம்மா?!"
"---"
" ஓ நல்லாவே பாஸ பண்ணிடுச்சிம்மா, 320 மார்க்"
சில நிமிட நேரம் தேம்பி தேம்பி அழுதார்
"ரொம்ப நன்றி சாமிவுளா" என்று கரம் கூப்பினார்.
"நான் இங்க துப்புரவு தொழிலாளியா இருக்குறேன் சாமி, நான் படிக்கல என் பொண்ணு படிச்சிக்கிட்டா" என்று தழுதழுத்தபடி கூறினார்
"பொண்ண  மேல படிக்க வைங்க, பொண்ணுங்களுக்கு நகை நட்டை விட படிப்புதான் பெரிய சொத்து"
"கடன  ஒடன வாங்கியாவுது படிக்க வச்சிடுறேன் சாமி" என்று கூறிச் சென்றார்.

"பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல?!"
இப்படியும் ஒரு பெண் மாலதி (பெயர் மாற்றப் பட்டுள்ளது)
ரொம்ப ட்ரிக்கா கட் அடிப்பார். நீண்ட நாள் வரலேன்னா தானே பெயரை நீக்குவாங்க, வாரத்தில் ரெண்டு நாள் உள்ளே மூன்று நாள் வெளியே.
ஆசிரியர்களும் மாலதி வீட்டுக்கு நடையாய் நடந்து சலித்து விட்டார்கள்.
மாலதியின் அம்மா, அப்பா, அக்கா, அப்பாயி, அம்மாயி, அத்தை என எல்லோரும் வாரா வாரம் வந்து பரிந்து பேசி உள்ளே அனுப்புவார்கள். எல்லாம் இரண்டு நாள் தான், அடுத்த வாரம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிடுவாள்.
அவுங்க வீட்டு ரேஷன் கார்டுல தான் பெயர் இல்லையே ஒழிய அவுங்க குடும்ப உறுப்பினர் போல ஆகிவிட்டேன்.
கடைசியாக பரிட்சைக்கு இடைப்பட்ட நாட்கள் பயிற்சிக்கும் வரவில்லை.
ஆசிரியப் பெருமக்களின் பகீரத பிரயத்தனத்திற்கு பயனில்லாமல் போயிற்று.
ஆம், இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தாள்.
நூறு சத தேர்ச்சியை எதிர் நோக்கி மாலதிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் எம் பள்ளியில் இல்லை.
சற்று அசட்டையாக இருந்திருந்தால் மாலதியே இடை நின்றிருப்பார்.
ஆனால் தேர்வு எழுதியதால் 3 பாடங்களில் தேறினார். நிச்சயமாக உடனடித் துணைத் தேர்வில் தேறி விடுவார்.
தலைமையாசிரியராக முதலாம் ஆண்டில் 100 விழுக்காடு பெற முடியாமல் போனாலும் அனைத்து குழந்தைகளையும் அரவணைத்து விடா முயற்சியோடு பணியாற்றிய ஆசிரியர் குழுவோடு இணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய திருப்தியே பல விருதுகளுக்கு இணையானது.

Sunday, April 28, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை – 2








 முன்குறிப்பு
முதல் பகுதியில் கருந்துளை என்பது என்ன என்கிற புரிதலை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி கண்டள்ளதாக எண்ணுகிறேன். கருந்துளை பற்றி என் பையன் அருண் இடம் அவ்வப்போது அளவளாவியது உண்டு. எனவே இந்த பகுதியை எனக்கும் அவனுக்குமான ஒரு கற்பனை உரையாடலாக வழங்கலாம் என்றுள்ளேன்.
ஞாயிறு மதியம் ஃபுல் கட்டு கட்டி விட்டு உறங்க எத்தனித்த நேரம் கெடுவாய்ப்பாக அருண் கண்ணில் தி இந்து வில் வந்த கருந்துளையின் புகைப்படம் பட்டுத் தொலைத்து விட்டது. அப்புறம் என்ன என் தூக்கம் தொலைந்தது தான் மிச்சம்.
“அப்பா, இந்த கருந்துளையை முதல்ல யாருப்பா கண்டு புடிச்சாங்க?”
“நியுட்டன் முதன் முதல்ல ஈர்ப்பு விதியை கண்டு பிடிச்சது தான் முதல்ல நடந்தது, அதுக்கப்புறம் அதில தொடங்கி சங்கிலித் தொடர் மாதிரி ஒவ்வொரு நிகழ்வா நடந்து இப்போ கருந்துளையை போட்டோ புடிச்சதுல வந்து நிக்கிறோம், போதுமா ? எனக்கு தூக்கம் வருது நீ போய் படு”
“அப்பா, இத மட்டும் சொல்லுப்பா, நியுட்டனுக்கு அப்புறம் யாரெல்லாம் கருந்துளையை பற்றி ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சாங்க?”
”நியுட்டன் இறப்பதற்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் போது பிறந்த ஒருவர் தான் ஆங்கிலேய விஞ்ஞானி ஜான் மிஷல்(இவர் ஒரு சர்ச் ஃபாதர்), இவர் தான் கருந்துளை என்ற ஒன்று இருக்கிறது என்கிற கருத்தை முன் வைத்தார். ஆனால் அதற்கு அவர் வைத்த பெயர் “இருள் நட்சத்திரம்“ (Dark Star)”

“இருள் நட்சத்திரம் அவருக்கு மட்டும் எப்படிப்பா தெரிஞ்சுது?”
”டேய், முதல்ல அந்த விஞ்ஞானி பெரிய கில்லாடிடா, பூமியோட எடைய கண்டுபிடிக்க ஒரு மிஷின கண்டு பிடிச்சவரு, செயற்கை காந்தம் தயாரிக்கும் வழிமுறையை முதலில் சொன்னவர்”
“அதெல்லாம் சரிப்பா, டார்க் ஸ்டார் இருக்குன்னு எப்படி சொன்னார்?”
“உனக்கு கோள்களின் விடுபடு திசை வேகம் (Escape velocity) பற்றி தெரியும் இல்லையா?“
     “ஆமாம்பா, சூரியனில் இருந்து ஒரு பொருள் எஸ்கேப் ஆகணும்னா ஒரு விநாடிக்கு 618 கிமீ ஸ்பீட்ல  போகணும்னு சொன்னீங்களே”
“வெரிகுட், அதையே நம்ம மிஷல் கொஞ்சம் டெவலப் பண்ணினார்.”
“எப்படிப்பா?”
”ஒரு நட்சத்திரத்தின் விடுபடு திசைவேகம் ஒளியின் திசைவேகத்தை விஞ்சி இருக்குமானால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பில் இருந்து ஒளி கூட தப்ப இயலாது அந்த மாதிரி ஒரு நட்சத்திரம தான் டார்க் ஸ்டார் அப்படின்னு சொன்னார்”
“அந்த மாதிரி ஸ்டார் இருக்குமாப்பா?”
“ஏன் இல்லாம, ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3 லட்சம் கிமீ, நம்ம சூரியனோட விடுபடு திசைவேகம் 618 கிமீ”
“சரி அதனால”
“உத்தேசமா சொன்னா சூரியன போல 500 மடங்கு பெரிய நட்சத்திரத்தோட விடுபடு திசைவேகம் 3 லட்சத்தை தாண்டும் (500X618=309000) அந்த ஒரு நட்சத்திரம் ஒளிய கூட வெளிய விடாம இருக்கறதால அது ஒளிராது எனவே ’டார்க் ஸ்டார்’ உண்டு என்கிற முடிவுக்கு வந்துட்டார்”
“அப்புறம் யாருப்பா இந்த விஷயத்தை இன்னும் தெளிவா கண்டுபிடிச்சாங்க?”
“மிஷல் கண்டு பிடிச்ச ஒரு பத்தாண்டுக்கு பின்னால் கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் “சகலகலா வல்லவரான “லாப்லாஸ்” ம் இதே விஷயத்தை முன்னிருத்தினாரு”

“அப்புறம்பா?”
“அப்புறம் என்ன 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகள்ல நடந்த இந்த விஷயங்கள மேல கொண்டு போற அளவில் நம்ம ஆராய்ச்சிகள் அந்த காலகட்டத்தில் முன்னேறாத காரணத்தால மேற்கொண்டு எந்த கருத்தும் யாரும் கூறாம கிடப்பில் போட்டுட்டாங்க”
“யாருமே கண்டுகலயா?”
“ஆமா, அப்புறம் 20ம் நூற்றாண்டு இயற்பியல் துறையையே புரட்டிப் போடும் 4 முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டார் நம்ம ஹீரோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்”
”ஐன்ஸ்டீன் எந்த நாடுப்பா?”

“ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து ஸ்விட்சர்லாந்துல வளர்ந்து, ஹிட்லரோட யூதவெறிக்கு தப்பி அமெரிக்காவில் குடியேறியவருதான் நம்ம ஹீரோ ஐன்ஸ்டீன்”
“அவரோட சார்பியல் கோட்பாடு(Theory of Relativity) நியுட்டனின் ஈர்ப்பு விதியை வேற விதமா நிறுவியது“
“சார்பியல் கோட்பாடுன்னா என்னப்பா?”
” அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது, கருந்துளைக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்குவோம். அவர் தான் ஸ்பேஸ்ல இருக்கிற முப்பறிமாணங்களில் நான்காவது பறிமாணமாக நேரத்தை கொண்டு வந்தார்“
”கோள்களின் நிறைகள் சமதளமாக இருக்கும் நேர வரைபடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்துகின்றன என்றார். அதாவது நேர்க்கோட்டில் போகும் காலமானது கோள்களின் நிறைக்கேற்ப வளைகின்றன”

”புரியலப்பா”
“இன்டெர்ஸ்டெல்லார் படம் பார்த்தியா இல்லையா?“
“ஆமாம்பா, ஹீரோ 40 வயசிலேயே இருப்பான் ஆனா அவன் பொண்ணு 108 வயசாயிடுவாளே”
“அதே தான், ஹீரோ போகிற அந்த கோளில் ஒரு மணிநேரம் பூமியில் 20 ஆண்டுகள், அதாவது அந்த கோள் நேரத்தை அதிகமாக வளைத்து விடுகிறது“
“சரி கருந்துளைக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?”
”நட்சத்திரம் எவ்வளவு அதிக நிறையுள்ளதாக உள்ளதோ அந்த அளவுக்கு காலத்தை வளைக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் நிறையை அந்த நட்சத்திரம் எட்டும் போது காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. அந்த எல்லை நிறையில் தான் நேரத்தின் கடைசி எல்லைக் கோடு முடிகிறது. அதன் பிறகு காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்”
“என்னது காலம் இல்லாமல் போய்விடுமா?”
”ஆமாம் அதனால் தான் கருந்துளையானது “நிகழ்வு எல்லை“ (EVENT HORIZON) என்று ஐன்ஸ்டீனால் அழைக்கப் பட்டது”

“அப்பா, அப்புறம்,,,,”
”இன்னைக்கு இது போதும், இதுவே தலைசுத்துற மாதிரிதான் இருக்கும், மீதிய அப்புறம் பாப்போம். இந்திய விஞ்ஞானி ஒருத்தர் கூட கருந்துளை ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லை நட்டு வச்சுட்டு போயிருக்காரு அவர பத்தி அடுத்த பகுதியில் பார்ப்போம்”


Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...