Sunday, September 4, 2016

ஆசிரியர் தின சிறப்புப் பதிவு

Teacher's day special:

எங்கள் அன்புக்குறிய எஸ்.எம் சார்

 எங்கள் கிராமம் சுத்தமல்லியில் உள்ள சின்னஞ்சிறு உயர்நிலைப்பள்ளியில் அவர் சமூகவியல் போதிக்கும் ஆசிரியர். முறுக்கிய மீசை கம்பீரமான முறுக்கேறிய தோற்றம் இவற்றுக்கு முரணாக முறுக்கிய மீசைக்கு கீழே கடும் பாறைகளுக்கிடையில் தவழ்ந்தோடும் அருவி போல இனிய புன்னகை-இதுதான் எஸ்.எம் சார்.
 வகுப்பில் நுழையும்போதே நேற்றைய பாடத்தில் இருந்து ஒரு கேள்வியை பந்து  போல வீசியபடி வருவார். நான் நீ என்று அனைவருமே அந்த கேள்விப் ’பந்தை’ கேட்ச் பிடிக்க முயற்சிப்போம். ஏன் என்றால் எங்கள் வகுப்பில் அனைவருமே சமூகவியல் பாடத்தில் ’கில்லி’. படிக்க தெரியாத மாணவர்கள் கூட செவி வழி கேட்டதை அழகாக நினைவு கூர்வார்கள்.
 உலக வரைபடமோ அல்லது இந்திய வரைபடமோ இல்லாமல் அவர் வகுப்பிற்கு வந்ததே இல்லை. எங்கள் வகுப்பில் அனைவருக்கும் உலக நாடுகளின் இருப்பிடங்கள் கடல்கள் மற்றும் இந்திய மாநிலங்கள் தலைநகரங்கள் என அனைத்துமே அத்துபடி. ஆசிரியர் இல்லாத பாடவேளையில் உலக வரைபடத்தில் உள்ள ஊர் பேரை ஒருவர் கூற மற்றவர் கண்டுபிடிப்பது என பொழுது போக்கும் அளவுக்கு எங்களை சமூக அறிவியல் பாதித்திருந்தது.
 வரலாறு பாடம் நடத்தும் போது குதிரைகளின் குளம்பொலி எங்கள் காதுகளில் ஒலிக்கும். போர்க்களக் காட்சிகளை மேப்பின் ஊடாக எங்களை அழைத்துச் சென்று நடத்துவார்.
 புவியியல் வகுப்பில் ஆற்று நீர் சலசலத்து சுழித்து ஓடும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காற்றுகள் ஏற்படுத்தும் புயல் சூழல் கண்முன் புழுதிபரப்பும்.
 குடிமையியல் வகுப்பு எங்களுக்கு அரசியல் பயிலரங்கம். இந்திய மற்றும் தமிழக அளவிலான பதவி படி நிலைகள், அதிகார வரம்புகள், தேர்தல் முறை அனைத்தையும் எங்களுக்கு அத்துபடியாக்கினார்.
 இவையனைத்தையும் புத்தகத்தை திறக்காம்லே செய்வார். சமூகவியல் புத்தகமே அவருக்கு மனப்பாடமாக உள்ளதாக நாங்கள் எங்களுக்குள் வியந்து பேசிக்கொள்வோம்.
 வகுப்பறையில் அவரது உச்சரிப்பு பேச்சு வழக்காக இல்லாமல் சுத்தமான உச்சரிப்புடன் கூடிய செந்தமிழில் இருக்கும். இரண்டுநாட்கள் நடத்தப்பட்ட பாடப்பகுதிகளுக்கு மூன்றாம் நாள் வினா விடை அவராகவே ’டிக்டேட்’ செய்வார். சமூகவியல் பாடத்திற்கு நாங்கள் நோட்ஸ் வாங்க வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லை.
 எங்களுக்கு அவரைப்பார்த்து பயம் வந்ததே இல்லை.
 “புவி உருண்டையாக உள்ளது என்கிறார்கள் ஆனால் மேப் மட்டும் எப்படி செவ்வக வடிவில் உள்ளது சார்?“
 “புயல் எவ்வாறு உருவாகிறது?“
 இப்படி பலநூறு கேள்விகள் கேட்டாலும் புன்னகை மாறாமல் பொறுமையாக விளக்குவார்.
 ஆசிரியரானவுடன் ”நாம் எப்படிபட்ட ஆசிரியராக இருக்கவேண்டும்?“ என்று எனக்குள் கேள்வி எழுந்தபோது எனக்கு “எஸ்.எம் சார்“ தான் நியாபகத்திற்கு வந்தார்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...