Friday, September 23, 2016

மருதாணி மூன்றாம் முறை சிவந்தது

மருதாணி மூன்றாம் முறை சிவந்தது.

”புத்தம் புது காலை பொன்னிற வேளை….” இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் அது நள்ளிரவு வேளையானால் கூட கதிரவன் தன் பொற்கரங்களால் நம்மை தீண்டுவது போல உணர்வோம். இசையும் பாடல் வரியும் இணைந்து காலை நேர குளிர்ச்சியாய் நம் இதயத்தில் ஊடாடிச்செல்லும்.

வெண்ணிற மலர்களை மரங்கள் உதிர்த்து தரையில் மெத்தை விரிக்க அந்த மெத்தை மேல் மலர்க் காம்புகள் தீண்டினால் கூட புண்ணாகும் மலரினும் மெல்லிய பாதமுடைய கதாநாயகி நடந்து கொண்டு அதிகாலை பனியை ரசித்தபடி இந்த பாடலை பாடுவதாக நானே கற்பனை செய்து கொண்டு அது தான் காட்சி என்ற எண்ணத்தில் இருந்து விட்டேன்.

திடீரென ஒரு நாள் இந்தப் பாடல் பிண்ணனியில் ஒலிக்க ஒரு திருமண வீட்டின் காட்சிகள் ஹைக்கூ கவிதைகளாய் பாடல் முழுவதும் மினுங்கிய படி படமாக்கப்பட்டிருந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்டேன். இளையராஜாவிடம் பாடலைக் கடன் வாங்கி பயன்படுத்தியிருந்தாலும் அதற்காக கூலி எதுவும் வாங்காமல் வெகுமதி அளித்து பெருமைபடுத்தத் தக்க விதத்தில் பாடல் பயன்படுத்தப் பட்டிருந்தது. இளையராஜா நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

பாடல் முழுவதும் மணமக்களை படம் பிடிக்க வேண்டிய கேமரா கதாநாயகியை படம் எடுத்துக் கொண்டு இருக்கும். பலவண்ண மலர்கள் நிறைந்த சோலையில் ஒரு வானவில் தரையில் நின்று கொண்டிருந்தால் வானவில்லை விடுத்து மலர்களை ரசிக்க முடியுமா? கடல் நீர் முழுவதையும் சிறிய பாட்டிலில் அடைக்க முயலும் மூடன் போல் கதாநாயகியின் அழகு முழுவதையும் அந்த சின்ன கேமராவில் சிறை பிடிக்க முயலுவான் கதாநாயகன்.

 நகலே இப்படி இருக்கிறதே அசல் எப்படி இருக்கும் என்ற ஆசையில் இந்தப் பாடல் இடம் பெற்ற படம் எது என்று பார்த்தால் படம் “அலைகள் ஓய்வதில்லை“. ஆனால் பாடல் காட்சியை ஒரு போதும் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் இல்லை. “யு டியுப்“ ஏ பஞ்சர் ஆகும் வகையில் தோண்டிப் பார்த்தும் கிடைக்க வில்லை.

 பிரிதொரு நாள் ஒரு நிகழ்ச்சியில் கங்கை அமரன் அவர்கள் தான் என் தேடலுக்கு விடை கொடுத்தார்.
 “மருதாணி“ என்றொரு பாதியில் நின்றுபோன படத்துக்காக போடப்பட்ட பாடல் தான் இது. அந்தப் படம் வெளியாகாமல் போனதால் அந்தப் பாடலை “அலைகள் ஓய்வதில்லை“ ஆல்பத்தில் பயன் படுத்திக் கொண்டோம். என்றார்.

எனவே அசல் பாடல் காட்சிப் படுத்தப் படவே இல்லை. அது நம் கற்பனையில் தான் வாழும்.

“Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter”

 Keats believes that imagining something brings more fulfilment and contentment than a “real” version ever could

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...