Friday, September 16, 2016

பெரியார் 137வது பிறந்தநாள் பதிவு

பெரியார் 137வது பிறந்தநாள் பதிவு

“டேய் என் புக்க கிழிச்சது எவன்டா?“
“நான் இல்லை!“
“நான் இல்லை”
“யேய் ஞாயித்துக் கிழமை சாமியார்ட்ட சொல்லி மந்திரம் போட சொல்லிடுவேன்”
“நான் தாண்டா, சாமியார்ட்ட சொல்லிடாதடா!”

“லீடர்னா பெரிய இவனா? நான் பேசவே இல்லை ஏண்டா ஏம்பேர எழுதின“
“நீதான் பேசினல்ல?“
“நான் எப்போ பேசினேன்? என் பேர அழிக்கிறயா இல்லையா?“
“மீண்டும் மீண்டும் அடங்க வில்லை ன்னு எழுதுறேன் வா!”
“அப்படின்னா உன் பேரயும் சாமியார்ட்ட எழுதி குடுத்துட வேண்டியதுதான்”
“டேய் வேண்டான்டா உன் பேரய அழிச்சுடுறேன்”

மேலே சொன்ன இரண்டு சம்பவங்கள் போல பல சம்பவங்கள் நான் நான்காம் வகுப்பு படித்தபோது எனது வகுப்பில் நடக்கும். அதிலே மிரட்டுவது ஒரு கிருஸ்துவ மாணவன். மிரட்டப் படுவது வகுப்பில் இருந்த சக மாணவர்களான நாங்கள் அனைவரும் தான்.

எந்த ஒரு சின்ன பிரச்சனையையும் சாமியாரைக் கொண்டு இலகுவாக கடந்து விடுவான். ஆமாம் அந்த சாமியார் யார் தெரியுமா? சர்ச் ஃபாதர் தான். ஞாயிற்றுக் கிழமை சர்ச் போவது அவனது வழக்கம். அங்கே ஏசுநாதர் செய்த “அற்புதங்களை“ கதைகளாக கேட்டு வந்து எங்களிடம் கூறுவான். அதனால் சாமியார் பேரைக் கேட்டாலே ”சும்மா அதிருதுல்ல“ என்னும் அளவுக்கு நாங்கள் பக்குவப் பட்டிருந்தோம்.
அவனது “அட்ராசிட்டி“ எல்லை மீறிப்போய்க் கொண்டு இருந்தது. நான் ஒருநாள் அவனது நோட்டில் “சாமியார் ஒரு பன்றி“ என்று பெரிதாக எழுதி வைத்து விட்டேன். அவன் யார் என்று கேட்டு வழக்கமான ஆயுதம் கொண்டு மிரட்டினான். நான் ஒப்புக்கொள்ள வில்லை. இந்த ஞாயித்துக் கிழமை வரட்டும் என்று ஆய்வுக்கு தயாரானேன். திங்கள் கிழமை பள்ளி வந்ததும் அவனிடம் “நான் தான்டா எழுதினேன்” என்று சொன்னதோடல்லாமல் எல்லோரிடமும் சாமியாரின் சக்தி குறித்த “குட்டை“ உடைத்து விட்டேன். அதன்பிறகு சாமியாரை எந்த வம்புக்கும் அவன் இழுப்பதில்லை.
இந்த சம்பவம் நடந்தபோது எனக்கு நாத்திகம் பற்றியெல்லாம் பெரிய விழிப்புணர்வு கிடையாது. பயங்கர பக்திமான். சாமியென்று சொல்லி நெடுஞ்சாலையோர மைல் கல்லை காட்டினால் கூட “பொத் பொத்“ என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடுவேன். அங்கே கிடக்கும் மண்ணை எடுத்து திருநீராக இட்டுக்கொள்வேன்.
பின் எப்போது தான் நாத்திகவாதி ஆனேன். அதுகூட ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது “எங்கள் குடும்ப பெரியாராம்” காலஞ்சென்ற எங்கள் “நடு சித்தப்பா“ சிவசங்கர நாராயணன் அவர்களின் பேச்சைக் கேட்டுத்தான். வளர வளர அவரது பேச்சு, அவர் அழைத்துச் சென்ற மற்றும் கேசட் ப்ளேயரில் போட்டு காட்டிய “மேடைப் பேச்சுக்கள்“ மற்றும் புத்தகங்கள் இவையெல்லாம் என்னை முழுமையான பகுத்தறிவாளனாகவும் சுயமரியாதைக் காரனாகவும் மாற்றியது.
சிறுவயதில் “வாய்ப்பாடு“ புத்தகம் வைத்திருக்கும் போது அதில் உள்ள கண்டுபிடிப்புகள் பக்கத்தை புரட்டிப் படிப்பது வழக்கம். அதில் இந்தியாவின் பெயர் இல்லாதது கண்டு வருத்தமாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.
“புள்ள எப்படி பொறக்குது?“
“எல்லாம் கடவுள் படியளக்குறது தான்!”
“இடி ஏன் இடிக்குது?”
“அர்ச்சுனன் தேர் ஓட்டுறார் அர்ச்சுனா! அர்ச்சுனா! ன்னு சொல்லு ஒண்ணும் ஆகாது!”
“மழ இல்லாம வறண்டு போச்சே!”
“சாமி கோவமா இருக்கு விழா எடுத்து குளிர்விக்கணும்”
“வெள்ளம் வந்து எல்லாம் அழிஞ்சு போச்சே“
“கலி முத்திடுச்சி இனிமே இப்படித்தான் அழிக்கும்“
“அது என்ன காட்டுல தீ?“
“ஐய்யய்யோ அது கொல்லி வாய் பிசாசு பக்கத்தில போகாதிங்க!
“பயன்படுத்தாத பாழடைந்த கிணற்றில் இறங்குனவன் செத்துட்டானே?”
“அங்கே பேய் இருக்கு யாரும் எட்டிப் பாக்காதிங்க!”
“புள்ள பெத்த பிஞ்சு உடம்புக் காரிக்கு கோண கோண இழுக்குதே?“
“பேய் புடிச்சிருக்கு பேயோட்டுறவனுக்கு சொல்லிவிடுங்க!“
“சந்திர கிரகணம் புடிச்சிருக்கு!“
“அது ஒண்ணும் இல்ல நிலாவ பாம்பு முழுங்குது கொஞ்ச நேரத்தில விட்டுடும்”
இந்த மாதிரி ஆயிரக் கணக்கான ஆய்வுக்குறிய விஷயங்களை ஒன்று பயமுறுத்தியோ அல்லது கடவுள் பெயரால் புனிதப் படுத்தியோ விலக்கி வைத்து விட்டோம். அப்புறம் எப்படி அறிவியல் மனப்பான்மை வளரும். கண்டுபிடிப்புகள் நடக்கும்.
பல்வேறு மூடநம்பிக்கைகளால் மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் பெரியார் தம் கைத்தடியால் அடித்து நொறுக்கினார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கில் கூட்டம் கூடியது. ஆனால் கொள்கையை அவ்வளவுபேர் பின் பற்றவில்லையே? காரணம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் கடவுள் மீதான பயம் தான் காரணம். சென்ற வாரம் கூட அரியலுர் பேருந்து நிலையம் அருகில் ஒரு பொதுக்கூட்டத்தில் “பெரியார் தொண்டர்“ ஒருவர் அருமையாக உரையாற்றினார். எல்லோரும் ரசித்துக் கேட்டதோடு அல்லாமல் ஆமோதிக்கவும் செய்தனர். ஆனாலும் அவர்களைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் கடவுள் நம்பிக்கை என்னும் சுவற்றை உடைக்கும் “திராணி“ இல்லை.
நான் ஆசிரியர் இடையே விவாதிக்கும் போது கூட “நானும் கடவுள கும்பிடுவேனே ஒழிய இந்த மூட நம்பிக்கல்லாம் பிடிக்காது” என்று சொல்வார்கள். அதற்கு நான் “கடவுள் தான் சார் மூடநம்பிக்கையில் முதன்மையானது முதல்ல அத விட்டொழியுங்கள்“ என்பேன்.
கடவுள் நம்பிக்கை வெளியே சென்றுவிட்டால் “அறிவியல் மனப்பான்மை“ வளர்ந்து விடும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சப்படாத புதிர்களுக்கெல்லாம் நாம் கடவுளையல்லவா விடையாகக் கொள்கிறோம். அதனால் தானே “go damn particle” கடவுள் துகள் (god’s particle) ஆனது.
பெரியாரின் அறிவியல் மனப்பான்மை எத்தகையது தெரியுமா? அண்ணா பல்கலைக்கழகத்திலே ஒரு கருத்தரங்குக்கு செல்கிறார். அங்கே புதிதாக கணினி வந்துள்ளதாக கூறுகிறார்கள் அப்போதெல்லாம் அது “கம்ப்யுட்டர்“ என்றுதான் வழங்கப்பட்டது. அதைப்பார்க்க வேண்டமே என்கிறார். அது மாடியில் உள்ளது உங்களால் ஏற இயலாது என்று நாசுக்காக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பார்த்தே ஆவேன் என்று தன்னை எப்படியாவது கொண்டு போக சொல்கிறார். அது IBM வகை கம்ப்யுட்டர். ஒரு அறை முழுவதும் அடைத்துக் கொண்டிருக்கும். சென்று அதை இயக்கிக் காட்ட சொல்கிறார். தேதியை சொன்னால் கிழமையை சொல்லும் நிரல் அவருக்கு இயக்கி காட்டப்பட்டதாக படித்தேன்.
பெரியாரின் 137வது பிறந்தநாளாகிய இன்று சமூகத்தில் கடவுள் என்னும் இருள் சூழ்ந்திருக்கும் இடமெல்லாம் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்ச சபதமேற்போம்.



3 comments:

  1. Wow nice..... simple and beautiful narrative style

    ReplyDelete
  2. Wow nice..... simple and beautiful narrative style

    ReplyDelete
    Replies
    1. அருமை..என் வாழ்க்கை சம்பவம்போல இருக்கிறது இந்த பதிவு..வாழ்த்தும்,பாராட்டும்..

      Delete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...