Saturday, October 29, 2016

ஆசிரியப் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி!

தீபாவளி அன்று காலை நண்பர் ஒருவரின் மகள்- ஏழாம் வகுப்பு சிறுமி- இனிப்பு மற்றும் பலகாரம் எடுத்துக் கொண்டு வந்தாள்.
பலகார தட்டை இடமாற்றம் செய்துகொண்டு இருந்தார் துணைவியார். அதுவரை பேசிக் கொண்டிருக்கலாமே என்று
 “என்னம்மா பட்டாசெல்லாம் வெடிச்சாச்சா?” என்று கேட்டது தான் தாமதம்
தடாலென்று எழுந்து பணிவோடு இடது கையைக் கட்டிக்கொண்டு வலது கை விரல்களை மூடி ஒவ்வொரு விரலாய் விடுவித்தபடி
 ”சயின்ஸ், மேத்ஸ், சோசியல் எல்லாம் படிச்சிட்டேன் அங்கிள்” என்றாளே பார்க்கலாம். எனக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை. இருந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்
“இல்லம்மா பட்டாசு வெடிச்சிட்டியா ன்னு கேட்டேன்” என்றேன்.
“வெடிச்சிட்டேன் அங்கிள்” என்று அமைதியாக சொன்னாள்.



சில வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு சிறுவன் ரொம்பவும் வாஞ்சையோடு ஒட்டிக்கொண்டு குறும்புகள் செய்வதும் தோள்பட்டையில் தொங்குவதும் என இருந்தான்.
அவனுடைய அம்மா “டேய் அங்கிள் மேத்ஸ் சார்டா“ என்று சொல்லி விட்டார். அதிலிருந்து அவன் என்னிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு 10 அடி விலகியே நிற்பான்.
 என்னைக் காணும் போதெல்லாம் “அட்டேன்ஷன்“ பொசிஷனுக்கு வந்து பிறகு “லெஃப்ட் ரைட்“ போட்டு நடக்க ஆரம்பித்து விடுவான்.
எதிர்காலத்தில் இராணுவத்தில் வேலைக்குச் சென்றால் என்னை நன்றியோடு நினைவு கூர்வான் என்று நினைக்கிறேன்.


எப்போதும் என்னை ஆசிரியராகவே பார்க்கும் மனப்பான்மை சுற்றத்தார் மற்றும் உறவினர் மத்தியில் அதிகமாக உள்ளது. அதனாலேயே சிறார்கள் என்னிடம் பேசும் போதெல்லாம் சத்தம் சில டெசிபல் குறைத்து தான் பேசுகிறார்கள்.


Wednesday, October 26, 2016

சுதந்திர போராட்டத்தை பிண்ணனியில் எழுதினால் அது விருதுக்கு தகுதியான படைப்பா?

கி.இராஜநாராயணன் அவர்களின் நாவலான “கோபல்ல கிராமம்“ லைப்ரரியில் கிடைத்தது. மிகவும் அருமையான நாவல். பத்து வரிகளுக்குள் சொல்லி முடிக்கத்தக்க ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதனை ஒரு 170 பக்க நாவலாக கொடுத்திருக்கிறார் திரு.கி.இராஜநாராயணன் அவர்கள்.
கதைக்காலம் 1858 க்கு முந்தைய காலகட்டம். தொலை தொடர்பு வசதிகளோ, செய்தித் தாளோ இல்லை. எந்த ஒரு அரசாங்கத்தின் ஆட்சியிலோ அல்லது இராஜாவின் ஆட்சியிலோ இல்லாத ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்ட ஒழுங்குடன் கூடி வாழும் கிராம நாகரிகத்தை அதன் தோற்றம் முதல் கதை தொட்டுச் செல்கிறது.
மங்கத்தாயாரு அம்மாள் என்ற 137 வயது பாட்டியின் கதை சொல்லல் மூலமாக கதையானது அவர்களின் முன்னோர்கள் ஆந்திரப் பகுதியில் இருந்து ஒரு துளுக்க ராஜாவின் பெண்ணசையினால் துரத்தப்பட்டு வருடக்கணக்கில் நடந்து வந்து தற்போதைய பகுதியை திருத்தி விளைநிலமாகவும் கிராமமாகவும் ஆக்கி வாழ்ந்த வரலாறை கூறுகிறார். கதையின் பாதிப்பகுதியை இந்தஃப்ளாஷ் பேக்தான் ஆக்கிரமித்துள்ளது.
மக்கள் நாடோடியாக வந்து ஒரு இடத்தில் தங்கி வீடுகள் விளைநிலங்கள் அமைத்து ஒரு கிராமத்தை எவ்வாறு நிர்மானிக்கிறார்கள் என்ற வரலாற்றை சுவை குன்றாமல் சுவாரசியமாக சொல்லி இருப்பார். நாவலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கினாலும் தகும்.

இந்த நாவலின் sequel போல வெளிவந்த ”கோபல்ல புரத்து மக்கள்“ ஐ படிக்க ஆவல் மேலோங்கியது. லைப்ரரியில் தொல்லை பண்ணி விசாரித்து காத்திருந்து கிட்டதட்ட ஓராண்டு கழித்து கிடைத்தது.
”கோபல்லபுரத்து மக்கள்“ 
ஆனந்த விகடனில் தொடராக வந்த நாவல். முதல் பாகம் அவரது இயல்பான கரிசல் வட்டார வழக்கு மற்றும் பழக்க வழக்கங்கள் அதனுள்ளே ஒரு அமரக்காதல் என்று விரிகிறது. மேலும் நாகரிகத்தாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் விளையும் புதிய விஷயங்களை அக்கிராமத்தார் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று சுவைபட கூறியிருப்பார். 

கிட்டப்பன் மற்றும் அச்சிந்தலு காதலில் தோற்று இருவரும் வேறு வேறு இடங்களில் மணமாகி பின்னர் இருவரது வாழ்க்கையும் சீரழிந்து பின்னர் ஒன்று கூடுகிறார்கள்.இந்த கதையில் கிராமத்து வழக்கங்கள் கொண்டாட்டங்கள் வீரசாகசங்கள் என அவருக்கே உரிய கவித்துவமான விஷயங்கள் இருக்கும்.

இந்த நாவலின் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட களத்தை சுவீகரித்துக் கொள்கிறது. சுதந்திர போராட்ட வேட்கை கோபல்ல கிராம மக்களிடையே எவ்வாறு பரவுகிறது என்று ஆரம்பித்து போரின் போக்கை பின்பற்றி செல்லும் போது பள்ளியில் படித்த அசுவாரசியமான ஒரு வரலாற்று பாடபுத்தகமாக மாறிவிடுகிறது. 

கதை ஓட்டத்தில் “செம்புலப் பெயல் நீர்”போல கலந்து வரலாற்றை விவரிக்கும் கி.ரா வுக்கு என்னவாயிற்று? தண்ணீரில் கரையாத பொருளை வலிந்து தண்ணீரில் கரைத்தால் என்னவாகும் திப்பை திப்பையாக மிதந்து அலங்கோலமாக காட்சியளிக்கும் அல்லவா. அந்தமாதிரிதான் உள்ளது நாவலின் இரண்டாம் பாகம். இயல்பிலேயே அழகிய தோற்றம் கொண்ட மங்கையொருத்தி “மேக்கப்“ போடுகிறேன் என்று தன் அழகை சிதைத்துக் கொண்டமாதிரி கி.ரா வின் இயல்பான கரிசல் நடை முடமாகி கிடக்கிறது.

பள்ளிகளில் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் சுதந்திர போராட்டத்தை மையப் படுத்தி எதாவது சொன்னாலே பரிசில் கிடைக்கும். சாகித்திய அகாடமி விருது பெறவும் பள்ளி சிறார்கள் செய்த உபாயத்தை பின் பற்றுவது ரசிக்கும் படியாக இல்லை. அமரர் கல்கி அவர்களுக்கும் கூட சுதந்திர போராட்டக் களத்தை பின்னணியாக கொண்டு அவர் எழுதிய “அலைஓசை“ நாவலுக்காகத் தான் அவ்விருது கிடைத்தது. கி.இரா அவர்களுக்கும் கோபல்ல கிராமத்திலே ”சுதந்திர போராட்டத்தை” கலந்து விட்டதால் தான் விருது கிட்டியிருக்கும் போல.


அவரது “கோபல்ல கிராமம்“ தான் விருதுக்கு முற்றிலும் தகுதியான நாவல். அதற்கு “நோபல் பரிசு“ கொடுத்தாலும் தகும்.

Monday, October 24, 2016

அய்யோ எல்லாம் போச்சே.....

பொங்கி வரும் வெடிச் சிரிப்பை அடக்கி இருக்கிறீர்களா?
பொங்கி வரும் காட்டாற்றை அணைக்கட்டி அடக்குவதைக் காட்டிலும் பொங்கி வரும் சிரிப்பை அடக்குவது சற்ற சிரமமான காரியந்தான்.
சமீபத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது நடந்த சம்பவம். ஒரு இளைஞன் அரசாங்க சாராயக்கடையில் சாராயப்புட்டி வாங்கிக் கொண்டு வந்தான்.

தனது இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் அதை நுழைத்தான். பொசுக்கென்று உள்ளே சென்றுவிட்டது. அது வெளியே தெரியாமல் உள்ளடங்கி போய் விட்டதில் அவனுக்கு திருப்தியில்லை. அதனால் அதனை சற்று உயர்த்தி சாய்வாக்கி அதன் கழுத்து வரை வெளியே தெரியும் படி வைத்து நாலு பேர் பார்க்கும் படி செய்து தனது கவுரவத்திற்கு பங்கம் வராதபடி பார்த்துக் கொண்டான். (முன்பெல்லாம் நாப்கினுக்கு அடுத்தபடியாக பிரவுன் கவர் சுற்றி வாங்கி செல்லும் பொருள் சாராய பாட்டில் தான். வாங்கினாலும் லுங்கியால் மறைத்தோ அல்லது பட்டா பட்டி டவுசரில் வைத்தோ மறைத்து எடுத்து செல்வார்கள்)

பக்கத்து கடைக்கு சென்று சாராயம் அருந்த தேவையான ”அக்சஸரீஸ்” வாங்க சென்றான். வாங்கி திரும்பும் போது “டமார்“ என்று ஒரு சத்தம். பார்த்தால் “டேங்க்“கவரில் வைத்த சாராய பாட்டில் ஏற்றி வைக்கப் பட்ட போது அங்கிருந்த துவாரம் வழியாக நழுவி இருக்கிறது (பயபுள்ள கவனிக்கல போலிருக்கு!). அது உடைந்ததும்  உடைந்த பாட்டிலையும் கையில் இருந்த ”அக்சஸரீஸ்” ஐயும் அவன் பரிதாபமாக பார்த்த போது தான் எனக்கு சிரிப்பை அடக்க வேண்டிய சங்கடமான சூழல் உண்டானது. இருந்தாலும் வீட்டிற்கு வந்து பாத்ரூம்  கதவை சாத்திக்கொண்டு ஒரு இரண்டு நிமிடம் சிரித்து தீர்த்தேன்.

Wednesday, October 19, 2016

சூரப் பழம் பறிக்க வாரீங்களா

“சூர“சம்ஹாரம்

இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் அல்லது கிணற்றில் குதித்தல் காடுகளில் சுற்றித்திரிதல் என்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சாகசமும் மகிழ்ச்சியும் எல்லை மீறும்.

யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் ஓடிப்போகும் கதாநாயகி போல் வீட்டிலிருந்து நைசாக நழுவி காத்திருக்கும் மற்ற நண்பர்களுடன் கலந்து காலை பத்து மணி போல எங்கள் வனவாசம் ஆரம்பிக்கும். தெருவில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தாண்டியதும் வயல் வெளிகள் முடிந்து “பொட்டாங்காடு“ ஆரம்பிக்கும்.
அங்கே இரண்டு பாதைகள் பிரியும். இடது புறம் சென்றால் துவரை,வரகு, கம்பு போன்ற பயிர்கள் விளையும் புன்செய் நிலப்பரப்புகள். நல்ல பாதைகள் வரப்புகள் நிறைந்தது. அதிகம் பேர் ஆள் அரவம் இருக்கும். வலதுபுறம் சென்றால் அரசாங்க முந்திரி காடு. ஆள் அரவம் இல்லாதது. But we took the one less travelled by. That makes all the difference.
எங்கள் இலக்கு “சூரப்பழம்“ தான். குழந்தைகளிடம் பென்சிலை கொடுத்து கிறுக்க செய்து அதன் மேல் வட்ட வட்டமாக சிறு இலை வரைந்தால் அது தான் சூரப்பழ செடி. ஒழுங்கில்லாமல் வளரும் புதர் வகையை சார்ந்த முள் நிறைந்த செடி. மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் கைகளில் ஒரு கருவி இருக்கும். மூட்டையில் குத்தி இழுத்தால் பிடி நழுவாது. அந்த கருவி உருவாக யோசனை கொடுத்ததே சூர முள்ளாகத்தான் இருக்கும். சட்டையில் கோர்த்துக் கொண்டால் எடுப்பது சிரமமாகிவிடும். வெகு லாவகமாக சட்டைக்கு சேதாரம் இல்லாமல் எடுக்க வேண்டும்
செடியில் சூரக் காய்களும் பழங்களும் வெள்ளிக் கொலுசில் சத்தம் செய்யும்  முத்துக்கள் போல கிளையோடு கொத்துக் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருக்கும். பழம் பழுத்து விட்டால் விதையை இன விருத்திக்காக வெளியேற்றியாக வேண்டும் அல்லவா? எனவே தான் பெரும்பாலான காட்டுப் பழங்களின் காம்புகள் இற்று விடும். லேசாக ஆட்டினாலே விழுந்து விடும். விருட்சமாய் அடுத்த பயணம் தொடங்க வேண்டுமல்லவா? சூரப்பழமும் அப்படித்தான். நாவல் பழக் கலரில் சைக்கிள் சக்கரத்தில் இருக்கும் “பால்ரஸ்“ அளவில் இருக்கும் ஒரு மினி இலந்தை பழம்.
முதலில் குச்சி கொண்டு லேசாக தட்டினால் பழங்கள் உதிரும். (ஒரு போதும் குச்சியால் வேகமாக அடித்து காயையும் பிஞ்சுகளையும் உதிர்ப்பதில்லை. அதெல்லாம் பழம் பறிக்கும் எதிக்ஸ்). லாவகமாக முட்களை விலக்கி குனிந்து சென்று பழங்களை மென்மையாய் கூட்டி அள்ள வேண்டும். சிலபேருக்கு மரத்தில் இருந்து நேரடியாய் உதிர்த்து சாப்பிடப் பிடிக்கும். அவர்களெல்லாம் கிளையை இழுத்து பழங்களை உதிர்ப்பர். மண்ணில் படாமல் சாப்பிட்டால் இன்னும் அருமையல்லவா?
அடுத்து பழத்தின் சுவை, லேசான புளிப்பு கலந்த ஆழ்ந்த இனிப்பு. பழத்தில் சதைப்பகுதி என்று சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இருக்காது. மெல்லிய தோல் பகுதிக்கும் கொட்டைக்கும் இடையே உள்ள இடைவெளி அரை மில்லி மீட்டர் கூட இருக்காது. அந்த சின்ன இடைவெளி தான் அமிழ்தமான சுவையை கொடுக்கும் பகுதி.

ஒவ்வொன்றாக சாப்பிட இது ஒன்றும் இலந்தைப் பழம் அல்ல. ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு குதப்ப வேண்டும். தோல் கிழிந்து சுவை வெளிப்படும். சுவை முழுவதும் உறிந்து சப்பிய பின் விதைகளை துப்பி விட வேண்டும். ஒன்றிரண்டு விதைகள் நழுவி தொண்டை கடந்து இரைப்பையில் தஞ்சமடையக் கூடும் ஜாக்கிரதை. 

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...