Tuesday, December 6, 2016

ஜெயலலிதா அவர்களின் ஆணைப்படி….



பயிற்சி ஆசிரியராக சங்ககிரி பள்ளியில் பயிற்சிக்கு சென்றிருந்த சமயம் ஒரு ஆசிரியர்,“தம்பி உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்க எப்படியும் 36 வயது ஆகிவிடும் அதனால சப்ஜெட் மறக்காமல் இருக்க எங்காவது தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்துடுங்க“ என்றார். எனக்கு ’ஐயோ’ என்றாகிவிட்டது. விடுதிக்கு வந்த உடன் பொது அறிவு சார்ந்த புத்தகங்களை தூசி தட்டினேன். இன்னுமோர் மாமாங்கம் காத்திருக்க இயலாது. உடனடியாக வேலைக்கு போக வேண்டுமே.
பி.எட் முடித்தவுடன் தஞ்சையில் உள்ள ’ஸ்பாடிக்ஸ்’ மெட்ரிக் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னை நம்பி பனிரெண்டாம் வகுப்பு கணிதமே வழங்கப்பட்டது. கூடவே விடுதியிலும் தங்கிக் கொண்டேன். சம்பளம் மிக குறைவாக இருந்தாலும் ’டியுசன்’ வருமானம் சம்பளத்தைப் போல இருமடங்கு. நாள் தோறும் ஒவ்வொருவராக கொடுப்பார்கள். பாக்கெட்டில் எப்போதும் 100ரூபாய் தாள்கள் இருக்கும். ஆனாலும் ’இது போதாது தேங்கி நிற்காதே’ என்ற உள்ளுணர்வு கூறியதால் அடுத்த கல்வி ஆண்டில் இடம் மாற முடிவு செய்தேன். போட்டித் தேர்வுகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து படித்தேன். இப்போது போல் அடிக்கடி வேலைக்கான தேர்வுகள் நடத்தப் படுவது இல்லை.
2001-2002 ம் கல்வி ஆண்டில் ’‘ஹில்டேல் மெட்ரிக் பள்ளி’ கொல்லி மலையில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த அன்று முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் (இவர் ம.இளவரசு என்கிற எனது உற்ற நண்பர்) இடையே நடந்த உரையாரடல் இன்னும் என் நினைவில் உள்ளது.
“என்ன சார் எலக்ஷன் ரிசல்ட்லாம் எப்படி?“ முதல்வர்
“எங்களுக்கு அரசு வேலை கிடைப்பது இன்னும் ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போகப் போகிறது?“ இளவரசு சார்
“ஆனாலும் சேஞ்ச் வேணும் இல்லையா?“ என்கிற ரீதியில் சென்றது. 2001 மே மாதம் இரண்டாம் முறை ஜெயலலிதா அவர்கள் முதல்வராக பணியேற்ற போது நடந்த சம்பவம் அது.
தஞ்சையில் 950 ரூபாய் சம்பளம் என்றால் இங்கு 2250ரூபாய். அது உண்டு உறைவிடப் பள்ளியாதலால் விடுதி வாசம் மறுபடியும். ரம்மியமான சீதோஷ்ண நிலை, எழில் கொஞ்சும் இயற்கை சூழல் நம் வேலைக்கு உரிய அங்கீகாரம் வழங்கி மரியாதையாக நடத்தும் நிர்வாகம் என 100 விழுக்காடு மனதுக்கு பிடித்த பள்ளி. நிர்வாகத்தினர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் என் மேல் அளவு கடந்த பிரியமாக இருந்தார்கள். ஆசிரியர் பணியில் நான் புதுப் புது யுத்திகளை எல்லாம் வெற்றிகரமாக பரிசோதித்துக் கொண்டு இருந்தேன்.
’ஆசிரியர் நியமனம் இனி போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாகத் தான் நடைபெறும் ’ என்ற முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு காதில் தேனாய் பாய்ந்தது.
உடனடியாக மலையில் இருந்து இறங்கி விண்ணப்பித்து விட்டு வந்தேன். பள்ளியில் காலாண்டுத் தேர்வு நடத்தினோம். டி.ஆர்.பி தேர்வுக்கு பத்து நாட்களே இருந்தது. பள்ளி வேலைக்கு இடையில் தேர்வுக்கு படிக்க இயலவில்லை. இனி முழு மூச்சாக படிக்க வேண்டும்.வரும் வழியில் திருச்சியில் ’சக்தி கைடு கணிதம்’ வாங்கினேன். காலாண்டு விடுமுறை முழுவதுமாக புத்தகத்தை அட்டை டு அட்டை புரட்டி விட்டேன். புத்தகத்தில் உள்ள பிழைகள் அனைத்தையும் கூட பேனாவால் திருத்தி இருந்தேன். இந்த வேகம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
பரீட்சையில் கேள்வித் தாளை பார்த்தால் அனைத்தும் தெரிந்த வினாக்கள். தெரியாத வினாக்கள் 10க்குள் அடக்கம். கண்டிப்பாக எழுத்து தேர்வில் பாஸ் என்று தீர்மானமாக தெரிந்து விட்டது. அடுத்து நேர்காணல்.(அங்கே நான் அரங்கேற்றிய கூத்துகளை ஒரு நகைச்சுவை கட்டுரையாக வெளியிட உத்தேசம். அப்படிப் பட்ட சொதப்பல் அது) அங்கு வந்திருந்த சக பணி நாடுனர் பெரும்பாலானோர் ’ஏற்கனவே போஸ்டிங் எல்லாம் வித்தாச்சு ஒரு போஸ்ட் 3 லட்சம். இது சும்மா ஐ வாஷ்தான்’ என்று வயிற்றில் புளியை கரைத்தனர். நம்பிக்கை இல்லாமல் மறுபடியும் கொல்லி மலை ஏறினேன்.(அந்த சமயத்தில் 750 இடங்களும் சுத்தமான மெரிட்டில் போடப்பட்டவை. தோல்வியுற்றோர் இதை ஏற்க தயாரில்லை)
பள்ளி திரும்பியபின் ஏற்கனவே SSC ல் தேர்ச்சி பெற்று பிறகு ஒரு டைப்பிங் தேர்வு பாக்கி இருந்தது அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். காலையில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அழைத்தார்கள். என் நடு சித்தப்பா அழைத்தார். ”டேய் ஜெயராஜ் நீ இன்டர்வியு வில் பாஸ் பண்ணிட்டே ஜனவரி 11 ம் தேதி சென்னை போய் அப்பாய்ண்ட்மன்ட் ஆர்டர் வாங்கனும்”
மாத்தி நம்பர் பாத்திருப்பாரோ? ” என்னப்பா சொல்றீங்க நம்பர் சரியா பாத்தீங்களா? எங்கே என் நம்பர் சொல்லுங்க பார்ப்போம்?”
”……” சரியாத் தானே இருக்கு. ’அவ்வளவு தூரம் சொதப்பியும் வேலை கொடுத்து இருக்காங்களே!’
எனக்கு 36 ல் தான் வேலை என்று இருந்து நிலை மாறி 25ல் கிடைக்க செய்தது முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு தான்.
     கணித ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்க எப்படியும் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். ஏனெனில் கணித பாட ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு 100 பேருக்குள் தான் பதவி உயர்வு கிட்டும்.
     2011 ல் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் அந்த ஆண்டில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள 250 பேருக்கு கணித முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிட்டியது. இது தற்செயல் தான். இருந்தாலும் நான் அரசுப் பணிக்கு வந்தது அவரின் துணிச்சலான முடிவால்தான். அவரது இரண்டாவது ஆட்சி கால முதலாம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தது என்றால் எனது பதவி உயர்வு அவர்களின் மூன்றாவது ஆட்சி காலத்தின் முதல் வருடத்தில்.

     ஆயிரக்கணக்கான மாணவர்களின் அன்புக்கு பாத்திரமான ஆசிரியராக நான் இருக்கிறேன் என்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ஜெயலலிதா அவர்களால் தான். இருந்த போதிலும் அவர்களுடன் கோட்பாடு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முரண்பட்டவனாகவே இருந்து வந்துள்ளேன். நன்றி செலுத்துவது என்பது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு கண்மூடித் தனமாக ஆதரிப்பது அல்ல என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும் அவரைக் காணும் போதெல்லாம் நன்றியோடு எனது கையில் ஒட்டியிருக்கும் சாக்பீஸ் கரைகளை பார்த்துக் கொள்வேன்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...