”கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது“ என்ற சொலவடையானது ’ஈவ்டீசிங்’ தொடர்பானது என்று ரொம்ப நாள் விவரம் அறியாமல் எண்ணிக் கொண்டு இருந்து விட்டேன்.
நண்பன் ஒருவன் தான் “அட மக்குப் பயலே அது யார் கண்ணும் படாம பாத்து நடந்துக்கணும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதுடா“
“அடேய் கண்ணு இருக்கிறவன் பாக்கத் தானடா செய்வான்“ என்றேன்
“நீ ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு தரம் நிருபிக்கிறாய், நம்முடைய வளர்ச்சிய பார்த்து ஒருத்தன் ’ஆ’ ன்னு வயித்தெறிச்சலோடு பாத்தான்னா நமக்கு கேடு நிச்சயம் ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கடா”
“ஐய்யய்யோ இதுக்கு என்னடா பரிகாரம்”
“ அவுங்க கண்ண திசை திருப்புற மாதிரி பண்ணனும் அல்லது கண்ணேறு கழிக்கனும்” என்றான்
அன்றிலிருந்து எனது மூன்றாவது கண் (அய்யய்யோ நெத்தியில இல்லங்க அகக்கண் தாங்க) திறந்து கொண்டது. போகும் இடம் எல்லாம் எப்படியெல்லாம் கண்ணேறு கழிக்கிறாங்க என்பதை பார்த்து ஆய்வு செய்வது எனது வழக்கமாகிப் போனது.
நான் சிறுபிள்ளையாக இருந்த போது வாரம் ஒரு முறை எனது அம்மா எங்கள் அனைவரையும் வரிசையாக உட்கார வைத்து சூடம் ஏற்றி சுற்றிக் காண்பித்து கொண்டு போய் தெருவில் போடுவார். கண் வைத்தோரின் கண்ணெல்லாம் இதனால் பொசுங்கி போய்விடும் என்று அவர்கள் எண்ணம். ஆனால் எங்கே சூடம் காண்பிக்கிறேன் என்று முடியை பொசுக்கிடுவாங்களோ என்பதுதான் எனது பயம்.“ஊரு கண்ணெல்லாம் எம்புள்ளைங்க மேல தான்“ என்று பெருமையோடு அலுத்துக் கொள்வார். கோடை விடுமுறை சமயத்தில் எங்கள் சித்தப்பா நடுசித்தப்பா என்று பெரிய ’கெட் டுகெதர்’ இருக்கும். அப்போதும் கூட எல்லோரையும் உட்கார வைத்து கோயில் பிரகாரம் சுற்றுவது போல சுற்றிப் போடுவார்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டில் கவனித்தது, வீட்டின் வாயிற்படியில் ஒரு சிறு தேங்காய் அதன் கீழ் ஒரு எலுமிச்சை, அடுத்து நான்கு காய்ந்த மிளகாய் அப்புறம் ஒரு கறித்துண்டு என்று பவுதிக விதிப்படி நிறைக் கிரமமாய் அழகாய் கட்டி தொங்க விட்டிருந்தார். என்னடா இது ஒரு மினி ’புரவிஷன் ஸ்டோரையே’ கட்டித் தொங்க விட்டுருக்கானே என்று நினைத்தால் அது திருஷ்டி பரிகாரமாம்.
’வருவோர் எல்லாம் வவுத்தெரிச்சல் பிடிச்சவனுவ அவனுங்க கண்ணு போட்டா பரிகாரம் வேண்டாமா?’(குடுத்த காபியை குடிக்கலாமா வேண்டாமா அவ்வ்வ்...) நண்பர்கள் மற்றும் உறவினர் பற்றி எவ்வளவு ஆரோக்கியமான உயரிய எண்ணம் கொண்டுள்ளார் என்று வியந்து போனேன். என் கவலையெல்லாம் என்றைக்காவது அவசரத்துக்கு சட்னிக்கு சாமான் இல்லைன்னு அவுங்க வீட்டம்மா அதை சரத்தோட எடுத்துக் கொண்டு போய் வேலைய பாத்துடக் கூடாதேன்னுதான்.
திருஷ்டி கழிக்கிற பசங்க கையில மாட்டிக் கிட்டு இந்த பூசணிக்காய் படுற பாட்டை நினைத்தாலே கண்ணெல்லாம் வேர்த்துக் கொட்டுது போங்க. காயின் மேல் ஒரு சிறு துவாரமிட்டு அதனுள் குங்குமத்தை கொட்டி பிறகு அந்த துவாரத்தை மூடி அதன் மேல் சூடம் வைத்து கொளுத்தி நல்ல ஒர அழகான சாலையின் நடுவில் கொண்டு போய் ’தொபுக்ட்டீர்’ என்று போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கிறார்கள். ’சட்டுன்னு’ பாத்தா ஏதோ ரத்த சகதி போல தெரியும். ரோட்டுல வண்டில போறவன் அதில வழுக்கி எங்கியாவது போய் மண்டை உடைச்சிக்கிட்டா நமக்கென்ன கவலை.
அப்புறம் இந்த வீடு கட்டிக் கொண்டு இருப்போர் ஒரு பூசணிக்காய் வாங்கி அதன் மேல் ’கர்ண கொடூரமாக’ ஒரு படம் வரைந்து தொங்க விட்டு விடுவார்கள். வருவோர் போவோர் எல்லாம் வீட்டை பார்க்காமல் அந்த பூசணிக்காய் ராட்சசனை பார்த்து சென்று விடுவார்கள். பார்வை அஸ்திரத்தை பூசணிக்காய் அஸ்திரம் கொண்டு முறியடித்தாயிற்று. எனது மகன் சிறு பிராயத்தில் இதை பார்க்கும் போதெல்லாம் வீறிட்டு அழ ஆரம்பித்து விடுவான்.
கண்ணேறு கழித்தலில் ஒரு அபாயகரமான வழிமுறை ஒன்று உள்ளது. யாருடைய பார்வை மிக மோசம் என்பதை எல்லையை காக்கும் வீரன் போல உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மோசமான கண்ணை இனம் கண்டு விட்டபின் வாலாவிருக்கலாகாது, உடனே துரிதமாக செயல்பட்டு சம்பவத்தோடு தொடர்புடையவரின் காலடி மண்ணை சேகரிக்க வேண்டும். அந்த மண்ணைக் கொண்டு சுற்றிப் போடுவதால் 99 விழுக்காடு பலன் கிடைக்குமாம். சம்பத்தப் பட்டவர் நீங்கள் மண் சேகரிக்கும் போது பார்த்து விட்டால் அவர் உங்கள் பரம விரோதியாகும் வாய்ப்பு உள்ளது. பாத்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள்.
மற்றுமொரு இலகுவான வழிமுறை ஒன்று உண்டு. முக்கியமாய் சோம்பேறிகளுக்கானது. நான்கு வற்றல் மிளகாயை எடுத்து கையில் வைத்து மூடிக்கொண்டு சும்மா 'சர் சர்ர்..' னு இப்படியும் அப்படியுமாக மூன்று சுற்று சுற்றி அதிலேயே எச்சில் துப்பச் சொல்லி வாங்கி கொண்டு போய் அடுப்பில் போட வேண்டும். மிளகாய் எவ்வளவு சத்தமாய் பொறிகிறதோ அவ்வளவு கண்கள் பட்டிருக்கிறதாம். நன்கு காயாத மிளகாயை உபயோகித்தால் மிஷன் ஃபெயிலியர் ஆக வாய்ப்பு உள்ளது. இதில் மற்றுமோர் அபாயம் உள்ளது , வாய் நிறைய எதையாவது குதப்பிக் கொண்டிருக்கும் போது துப்ப சொல்லி மிரட்டுவீர்கள் ஆயின் மொத்த எச்சிலையும் கவிழ்த்து விடுவார்கள். அப்புறம் மொத்தமும் பாழ்.
புது வீடு குடி புகுவோர் 'கண்ணடி' யில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வேலையை நிறைவு செய்யாமல் விட்டு விடுவார்கள். பாவம் வீடு கட்டிக் கொண்டு நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள் என பரிதாபமாக எண்ணவேண்டுமாம்.
எங்கள் சித்தப்பா புது வீடு கட்டி குடி போன போது ஒரு சிறு குண்டு பல்பு பாக்கியில்லாமல் அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார். விழாவுக்கு வந்திருந்த எங்கள் மாமா ஒருவர் "ஏதேனும் ஒரு வேலைய பாக்கி வச்சி முடிக்கணும் பா எல்லார் கண்ணும் ஒரு மாதிரி இருக்கறதில்லையே" என்று செல்லமாக கடிந்து கொண்டார்.
எலுமிச்சை யானது திருஷ்டி பரிகாரம் செய்வோருக்கு உற்ற நண்பன். எலுமிச்சையை சரிபாதியாய் வகுந்து உள்ளே குங்குமம் நிரப்பினால் இன்ஸ்டன்ட் திருஷ்டி பரிகார எந்திரம் தயார். ஏனென்றால் வாகனங்களில் ஓட்டுனர் இருக்கைக்கு முன்னால் ஒரு குண்டு பூசணிக்காயை படம் வரைந்து தொங்க விடுவதை கற்பனை செய்தாலே தலை கிர்ரென்று சுற்றுகிறது. அதனால்தான் வைப்பதில்லை போல.
குழந்தைகள் விஷயத்தில் இவர்கள் செய்யும் கூத்து அலாதியானது. சில பேர் குழந்தையை கொஞ்சும் தோரணையை வைத்தக் கண் வாங்காமல் குறு குறு என பார்ப்பார்கள். அவர்கள் போனதும் "அவ கண்ண பாரேன், புள்ளயை குறு குறுன்னு பாக்குறா இனிமே புள்ளய இவகிட்ட காட்டாதே" என்று பேசிக் கொள்வார்கள்.
குழந்தைகளை கொஞ்சுவது மிகவும் அலாதியான செயல். பெருக்கெடுக்கும் அன்பை அடக்க இயலாது. அவ்வளவு அன்பையும் பற்களுக்கிடையில் அழுத்திக் கொண்டு செல்லமாக கன்னத்தை கிள்ளி வாயில் இட்டு முத்தமிடும் போது தான் அந்த அன்பு வேட்கை தனியும். வேறு சிலரோ அதே கட்டுக்கடங்காத அன்பை தேக்கி இரு கைகளாலும் குழந்தையின் கன்னத்தை தடவி காது மடல் அருகே கைகளை மடக்கி 'மட மட' வென நெட்டி முறிப்பார்கள். 'மட மட'வின் எண்ணிக்கையும் விழுந்த கண்களின் எண்ணிக்கை யும் நேர் விகித தொடர்பில் இருப்பதாக கதைவேறு.
இவ்விதமாக இவர்களால் கிள்ளப் பட்டும் தடவப்பட்டும் அந்த பிஞ்சு கன்னங்கள் மேலும் சிவந்து போகும். பொக்கை வாய் சிரிப்புடன் குழந்தை இவற்றை எல்லாம் வேடிக்கை பார்க்கும்.
நிறைவாக குழந்தைக்கு வைக்கப்படும் திருஷ்டிப் பொட்டு பற்றி சொல்லியாக வேண்டும். உதட்டின் கீழே ஒரு மைப்பொட்டு அல்லது கண்ணையும் காதையும் இணைக்கும் நேர்க் கோட்டின் மையப்புள்ளியில் ஒரு மைப் பொட்டு வைத்து விடுவார்கள். ஆனால் அது குழந்தையின் அழகை இன்னும் கூட்டி, படுகிற 'கண்ணடி' இன்னும் வீரியமாக வழி வகுத்து மிஷனை டோட்டல் ஃபெயிலியர் ஆக்கிவிடும்.
நகைச்சுவையை புறந்தள்ளுங்கள். இந்த செய்கையின் அடியில் உள்ள உளவியல் என்ன?! சக மனிதர்கள் உங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் , ஏதாவது கண்ணுக்கு தெரியாத முட்டுக்கட்டையை பாதையில் போடுவார்கள். நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தானே?!
சக மனிதர்களை அவ நம்பிக்கையோடு பார்க்கச் செய்யும் இம்மாதிரி செயல்களை இனியும் தொடர வேண்டுமா?!
மொபைல் கேமராவால் படம் எடுத்ததால் ஷாக் அடித்து இறந்தார்கள் என்பது போலத்தான் பார்த்தாலே கெடுதல் நடக்கும் என்பதுவும் ஒரு பொய் நம்பிக்கை.
No comments:
Post a Comment