Friday, December 30, 2016

டங்கல் அருமையான படைப்பு

அமீர்கானின் டங்கல் படம் எனக்கு ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா?!
மகாவீர் சிங் தேசிய அளவில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர், குடும்ப வறுமை சூழல் காரணமாக சர்வதேச போட்டிகளில் கவனம் குவிக்க இயலாமல் கிடைத்த அரசாங்க வேலையோடு மனதில் இருக்கும்  நெறுஞ்சி முள்ளோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். தனக்கு பிறக்கும் மகன் மூலம் தேசத்திற்கு மெடல் வாங்க வேண்டும் என எண்ணுகிறார். சோதனையாக நான்கும் பெண் குழந்தைகளாக பிறக்கிறது. கனவுகளை ஆழக் குழி தோண்டி புதைக்கிறார். அன்று தனது மகள்கள் கீதா போகட் மற்றும் பபிதா போகட் இருவருக்குள்ளும் குஸ்தி போடும் வலு இருப்பதை உணர்கிறார். அப்புறம் அவர்களை பயிற்றுவித்து சர்வதேச போட்டிகளில் தேசத்திற்காக தங்க மெடல் வாங்கச் செய்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார். பெண் குழந்தைகளை சுமை என நினைத்து கொலை செய்வதும் பால்ய விவாகங்களும் மலிந்த ஹரியானா மாநில பின் தங்கிய குக்கிராமத்தில் இருந்து வந்து பெண்களால் சாதிக்க இயலும் என்று ஆணாதிக்க எண்ணங்களை தோல்வியுறச் செய்கிறாள் கீதா போகட் என்கிற அந்த இளம் மங்கை.
1. வணிக சமரசங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை வரலாறு சார்ந்த படத்தை மிக சுவாரசியமான திரைக்கதையோடு எடுத்தது.
2. விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான் என்று இருக்கும் இளையோரின் கவனம் இனி குஸ்தி(wrestling) யின் மீதும் திருப்பும் வகையில் எடுத்தது.
3. ஆண் குழந்தை பிறக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என ஊரார் சடங்குகள் கூற தம்பதியரும் ஒன்று பாக்கி இல்லாமல் கடைபிடித்து மறுபடியும் ஒரு பெண் குழந்தைதான் பிறக்கிறது. சடங்குகள் பொய்த்து போகிறது. இருந்தாலும் யோசனை வழங்கிய ஊர் பெரிசுகள் தம்பதியினர் சடங்குகளை சரியான வகையில் செய்ய வில்லை என்பர். மூடநம்பிக்கை எவ்வாறு உயிர் வாழுகிறது என்கிற விஷயத்தை அழகாக காட்டி இருப்பார்.
4. 'கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் குதி' என்றாலும் குதிக்க தயாராக இருக்கும் மனைவி அவள். குஸ்தி பயிலும் குழந்தைகளுக்கு புரதம் வேண்டுமானால் மாமிசம் உண்ண வேண்டும் என கூறக் கேட்டு கோபமாகவும் ஆவேசமாகவும் சண்டை போடுகிறாள் தான் தெய்வமாக எண்ணும் கணவனிடம். எதைப் பொறுத்துக் கொண்டாலும் ஆச்சார அனுஷ்டானங்களுக்கு பங்கம் வருமானால் கிஞ்சிற்றும் சகியேன் என்கிறாள். மூடநம்பிக்கைகள் நமது மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அந்த காலத்தில் தந்தை பெரியாரின் பணி எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை உணரச் செய்தார் பி.கே படம் எடுத்த அமீர்கான்.
5. மகன்கள் புஜபலத்தாலும் தனது மூளை பலத்தாலும் பெற்றோருக்கு பெருமை தேடி தருவார்கள். பெண்கள் தன் உடலை 'தூய்மையாக' பேணி பெற்றோர் பார்க்கும் ஒருவனிடம் அவ்வுடலை ஒப்படைப்பது  மூலம் மட்டுமே பெற்றோருக்கு கவுரவம் தேடித்தர இயலும் என்ற நம்பிக்கைக்கு எதிரான 'சமர்' தான் இந்தப் படம். படத்தின் இறுதிக் காட்சியில் இதை சொல்லவும் செய்கிறார்.
6. பெண்கள் குஸ்தி போடுவது சார்ந்த ஒரு படத்தை மிகவும் கண்ணியமாக எடுத்துள்ளார்.
7. தனது பெண் குழந்தைகளுக்கு கடும் சவாலான குஸ்தி பயிற்சி அளிக்க ஆண்களுடன் மோத வைக்கிறார். கிளு கிளுப்போடு கிராமமே மைதானத்தில் கூடுகிறது. போட்டி ஆரம்பித்த உடன் அனைவர் கவனமும் அந்த கடுமையான போட்டியில் லயிக்கிறது. பாலியல் சீண்டலோ தீண்டலோ இல்லாத ஒரு ஆரோக்கியமான ஒரு சமரில் அந்தப் பெண் தோற்றாலும் அதன் பிறகு பல ஆண்களுடன் மோதி ஜெயிக்கிறார்.
8. நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்ந்த  பின்னர் தனது தந்தையின் யுத்திகளை கேள்விக்கு உள்ளாக்குகிறாள்  மகள். அதை தவறு என நிறுவ மகளுடன் மோதுகிறார் தந்தை. இளம் சிறுத்தையும் கிழட்டுச் சிங்கமும் மோதும் அந்த போட்டி மிக அருமை. இறுதியில் சிறுத்தை வெல்கிறது.ஆனால் உலக அளவிலான போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவுகிறாள். தன்னை முழுமையா அறிந்த தந்தையின் பயிற்சிதான் சிறந்தது என்று பிறகு உணர்கிறாள்.
9. போட்டிகள் அனைத்தும் நிஜம் போலவே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. கதையோட்டத்திலேயே ஆட்ட விதிகள் மற்றும் நுணுக்கங்கள் சொல்லப் பட்டு விடுவதால் எல்லோராலும் போட்டிளோடு ஒன்றி ரசிக்கப் முடிகிறது. இனி குஸ்தி போட்டிக்கு இலகுவாக ஸ்பான்ஸர்கள் கிடைப்பார்கள்.
10. இறுதியில் நிஜமான மகாவீர் சிங் , கீதா மற்றும் பபிதாவின் புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை காட்டி இருப்பது கச்சிதம்.
11. சிறுவயது கீதா ஆக்ரோஷம் பபிதா அழகு குழந்தை.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...