Tuesday, December 13, 2016

அடடே அப்படியா?!

21ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை பூமி இருளில் மூழ்கப் போகிறது-நாசா பகீர் தகவல்.
தலைப்பை பார்த்ததும் தினமலர் செய்தியின் காபி பேஸ்ட் என்று எண்ணிவிடாதீர்கள்!
 எனது இல்லத்தரசி “கேயாஸ் தியரியையே” கரைத்து குடித்தவர். துபாயிலிருந்து கிளம்ப வேண்டிய நியுயார்க் விமானம் தாமதமானால் கூட அதற்கு நான் ’செல்லை நோண்டியது’ தான் காரணம் என்று நிறுவும் சாமர்த்திய சாலி என்பதால் எனது வழக்கமான பஸ் பயணங்களில் தான் அன்றைய அப்டேட்ஸ் பார்ப்பேன். எனவே டேட்டாவை ஆன் பண்ணி வாட்ஸ்அப் ஓபன் பண்ணினேன். ’கொய்ங்.. கொய்ங்..’ என்று செய்திகள் வந்து விழுந்து கொண்டே இருந்தது. பேருந்தில் எனது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்து வந்தார், எனது செய்கையை பார்த்தது முதலே  'நெட்ல' போட்ருக்கான், வாட்ஸ்அப்பில் வந்தது என்றபடியே வந்தார். வயதான 'பெருசு' என்று எண்ணிவிடாதீர் நானும் tech savvy தான் எனக்காட்டிக் கொள்வதே அவர் நோக்கமாகப்பட்டது.
பேருந்து வி.கைக்காட்டி தாண்டி விரைந்து கொண்டிருந்தது, பக்கத்து சீட்டு காரரும் தான் கடைவிரித்த வாட்ஸ்அப் தகவல் உபயத்தால் ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே கூட்டியிருந்தார். அடுத்த தகவலாகத்தான் ஒரு பெரிய குண்டைப் போட்டார்.
 '21ந்தேதி முதல் 26 ந்தேதி வரை 6 நாட்களுக்கு உலகம் முழுவதும் இரவாகத்தான் இருக்கும். சூரியன்ல ஏதோ காந்த புயலாம். என்ன பண்ண போறோம்னு தெரியல! இன்றைக்கு வாட்ஸ்அப்ல வந்தது'
'பயப்படாதீங்க அப்படிலாம் ஆகாது' என்றேன்.
'அட ஏம்பா நான் என்ன பொய்யா சொல்றேன், இங்கே பார்!' என்றபடி வாட்ஸ்அப் தகவலை காண்பித்தார்.
'இது எனக்கும் வந்ததுங்க, பிள்ளையார் பால் குடிச்ச கதையோட லேட்டஸ்ட் வெர்ஷன் தாங்க இந்த வாட்ஸ்அப் புரளில்லாம்'என்று சுற்றிலும் நின்ற அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவியர்களை கம்பீரமாக பார்த்தவாறு கூறினேன்.
'என்னப்பா புரளிங்குற?! அமெரிக்காவிலேருந்து நாசா விஞ்ஞானிகளே சொல்லியிருக்காங்க! நம்மாளுங்கன்னா கூட நான் நம்பியிருக்க மாட்டேன்' என்றவாறு 'நாசா' என்கிற வார்த்தையை  பெரிதாக்கி என்னை ஏளனமாக பார்த்துக்கொண்டே காண்பித்தார்.
'விளாங்குடி இறங்கு..' நடத்துனரின் குரல் எங்கள் விவாதத்தை கலைத்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் கூட்டம் மொத்தமாக இறங்கியது. மீனாட்சிராமசாமி கல்லூரி மாணவர்கள் மீதமிருந்தனர். விளாங்குடியில் எம்பள்ளி மாணவர்கள் ஏறி எனக்கு வணக்கம் கூறியவாறு நெருக்கியடித்து நின்றுகொண்டனர்.
'இல்லங்க நாசா பேரைப் பயன்படுத்தி வர பொய்யான தகவல்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான், ஏற்கனவே நடனமாடும் நடராஜரின் ஊன்றியிருக்கும் காலில் தான் பூமியின் மையப்பகுதி உள்ளதுன்னு நாசாகாரங்க சொன்னதாக கெளப்பிவிட்டாய்ங்க, பிறகு ஆலங்குடி கோயில் அபரிமிதமான காந்த சக்தி உள்ளதாகவும் செயற்கை கோள்கள் எல்லாம் இந்த இடத்தை கடக்கும் போது செயலிழந்து போவதாகவும் ரீல் விட்டாய்ங்க'
'என்னசார் சொல்றீங்க அதுவும் புரளிதானா?!' என்றார் ஏமாற்றத்துடன். “ப்பா“ என்றது “சார் என்றாகிவிட்டது. காரணம் எனது மாணவர்களின் “குட்மார்னிங் சார்“.
“நாசா விஞ்ஞானிங்க ஏன் சார் பொய் சொல்லப் போறாறங்க?”

“இந்த தகவல நாசா விஞ்ஞானிகள் தான் சொன்னாங்கன்னு எப்படி உறுதியாக நம்புறீங்க? சிவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு காமெடி வருமே அது மாதிரி வாட்ஸ்அப் ல வரது பொய்யா இருக்காது என்று ஒரு கூட்டமே நம்பிகிட்டு இருக்கு”

”இந்த தகவல் பொய்ன்னு நீங்க எப்படி சொல்றீங்க சார்?“

” தோ ஒரு நிமிஷம் இருங்க” என்றவாறு எனது ப்ரவுசரில் நாசா இணையதளத்தை தட்டினேன். படங்களும் ஆங்கிலமுமாக விரிந்தது. அதை அவரிடம் காண்பித்தேன். “இங்க பாருங்க சார், நீங்க சொன்னது அதிமுக்கியம் வாய்ந்த தகவல் தானே, ஆனால் அவுங்க “வெப்சைட்ல“ காணோமே!“
 “எனக்கு அந்த அளவு ஆங்கிலம் எல்லாம் தெரியாது. ஆனாலும் நீங்க இவ்வளவுதூரம் ஆதாரம் எல்லாம் காண்பிக்கிறீங்க அதனால நீங்க சொல்றத நம்புறேன் சார். இந்த பயலுவ ஏன் இந்த மாதிரி செய்திலாம் போட்டு பீதியை கிளப்புறாங்க?“ என்றவாறு பம்மினார்.

“இன்னும் நீங்க நம்பலன்னா இதையும் கேளுங்க, புவி 6 நாட்களுக்கு இருளாக வேண்டுமானால்,

சூரியன் அணைந்து விட வேண்டும். ஆனால் அது நடக்க சாத்தியமே இல்லை.

அல்லது புவி தன் சுழற்சியை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக பஸ் சடன் பிரேக் போட்டாலே மண்டை மோதிக் கொண்டு பற்களை உடைத்துக் கொள்கிறோம். பஸ்ஸை விட பல நூறு மடங்கு வேகத்தில் சுற்றும் புவி நின்றால் நாமெல்லாம் விண்வெளியில் வீசி எரியப்படுவோம். பௌதிக விதிகளின் படி அதுவும் சாத்தியமில்லை.
சூரிய கிரகணம் என்றால் கூட சில நொடிகள் தான் சூரியன் மறைக்கப்படும். பிறகு “வைரமோதிரம்” போட்டுக் கொண்டு ஜோராக வெளியே வந்து விடும். சூரியனை மறைக்கும் நிலா சூரியனை மறைத்தவாறே ஆறு நாட்களுக்கெல்லாம் நிற்கலாகாது. புவியின் துணைக்கோள் என்பதால் புவியின் காந்த சக்தியை கைப்பற்றி சுற்றி வரும் நிலா பிரேக் போட்டால் புவியின் மீது வந்து விழுந்து விடும் “ஸ்கைலேப்“ விழுந்த மாதிரி. மேலும் கெப்ளர் என்பவர் கூறிய விதிப்படி அதுவும் சாத்தியமில்லை.

புவி இருளடையும் அளவிற்கு மேகம் சூரியனை மறைத்ததே இல்லை. மேலும் மொத்த புவியையும் மேகம் போர்வையாய் போர்த்த வாய்ப்பில்லை”
என்று மூச்சு வாங்கியபடி முடித்தி தண்ணீர் பாட்டிலை எடுத்தேன்.

“சார் என்ன பேச்சு சுவாரசியத்தில நாச்சியார் பேட்டையை விட்டுட்டிங்களே!, பாருங்க மணகெதியே வரப்போகுது, ஏந்திரிங்க”
“ஐயயோ, வழி விடுங்கப்பா, நவுருங்கப்பா...” என்றவாறே அந்த பெரியவர் வாசற்படியை நோக்கி சென்றார்.
அவருக்கு புரிந்த்தோ இல்லையோ சுற்றிலும் நின்ற பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு புரியவைப்பதே நோக்கம்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...