Wednesday, December 3, 2025

ஸ்கூட்டர் சைக்கிள் டயரீஸ்"

சேகுவேரா வின் வாழ்க்கை வரலாற்று நூல் "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" அதற்கு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று இந்த பெயர் வைத்தேன்.
எழுதி ரொம்ப நாள் ஆச்சே ன்னு ஒரு "கற்பனை" சம்பவத்தை முயற்சித்தேன். டிஸ்கி: "பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையேனும் குறிப்பிடுவதாக எனது மாணவர்களோ நண்பர்களோ உணர்ந்தால் அது முற்றிலும் தற்செயலே" "ஸ்கூட்டர் சைக்கிள் டயரீஸ்" ஒரு ஊர்ல ஒரு மேல்நிலைப் பள்ளி இருந்தது. அங்க மிஸ்டர் எக்ஸ் னு ஒரு தலைமையாசிரியர் இருந்தார். சிலருக்கு செலக்டிவ் அம்னீசியா மாதிரி அவருக்கு செலக்டிவ் ஞாபக சக்தி இருந்துச்சு. அதென்ன செலக்டிவ் ஞாபக சக்தி? அதொன்னுமில்ல, சில விஷயங்கள் அபாரமான நுணுக்கங்களுடன் ஞாபகத்தில் இருக்கும். பல விஷயங்கள் என்ன யோசித்தாலும் ஞாபகத்திற்கு வராது. “சார், உங்க போன் நம்பர் சொல்லுங்க சார்?“ “9…8….56….76… , இருங்க சார் பார்த்துட்டு சொல்றேன்?“ “பிஎஸ் சார் இங்க வாங்க“ “சார் நான் ஜிஎஸ்” இந்த லட்சணத்தில் தான் இருக்கும் அவரது ஞாபக சக்தி. அப்புறம் ஒரு நாள் பள்ளி மைதானத்தில் நடந்த உரையாடலில் எனக்கு மயக்கமே வந்து விட்டது. “ஏம்மா, ராதிகா எங்கம்மா கொஸ்டின் பேப்பர் காசு இருவது ரூவா இன்னும் கொடுக்காம இருக்க!!“ “கொடுத்துடறன் சார்” “எப்ப கொடுப்ப, ஆகஸ்ட் மாசம் முப்பது ரூவா கொடுத்த இருவது ரூவாக்கு ரெண்டு மாசமா இழுத்து அடிக்கிற. ஒண்ணன் ராஜேஷ் ஆகஸ்ட் மாசமே கொடுத்துட்டான் பாரு” என்ற துல்லிய தாக்குதலைக் கண்டு துள்ளி குதித்து விட்டேன். இத்தனைக்கும் அந்த பள்ளியில் அப்போது 700+ மாணவர்கள். அவர்கிட்ட ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்கிட்டா என்னோட பேர ரிட்டையர்மெண்டுக்கு பிறகும் ஞாபகம் வச்சிக்குவார்னு நினைக்கிறேன். அதுவே திருப்பி கொடுக்காம விட்டா அடுத்த ஏழு ஜென்மங்களிலும் நினைவில் வைத்திருப்பார். இல்லன்னா அவரோட “ஹார்ட் டிஸ்க்கில்“ நம்ம பேரு நிச்சயமா இடம் பிடிக்காது. இப்படியாக இருந்த அந்த ஊர் தலைமையாசிரியர் எக்ஸ் வசம் ஒரு பழைய்ய்ய ஸ்கூட்டர் ஒன்று இருந்தது. பெட்ரோல் போட்டா எஞ்சின் வேலை செய்யும் அம்புட்டு தான். ஆஜானுபாகுவான அவரை சுமந்து கொண்டு அந்த வண்டி ஓடுவதே அதிசயம் தான். அந்த வண்டியை பார்க்கும் போது தான் “உழைத்து உழைத்து ஓடாகிவிட்டேன்“ என்ற சொலவடையின் அர்த்தமும் ஆழமும் எனக்கு பிடிபட்டது. அந்த வண்டியை அவர் ஸ்டார்ட் பண்ணும் அழகில் சர்க்கஸ் ல வித்தை காட்டும் வீரர்களே புறமுதுகிட்டு ஓட வேண்டி இருக்கும். பள்ளியின் கொடிக்கம்பம் அருகே மண் சற்று மேடாக இருக்கும். வண்டியை காதைப் பிடித்து தர தர வென்று இழுத்து வந்து (அவர் உயரத்திற்கு ஸ்கூட்டரை தள்ளுவது அப்படித்தான் இருக்கும்) அந்த மேட்டில் பள்ளத்தை பார்த்த வண்ணம் நிறுத்துவார். வண்டி ஏதோ சூசைட் பாய்ண்ட்டில் நிற்பது போல இருக்கும். வண்டியில் உக்காந்து காலால் உந்தி தள்ளுவார். அது புவியீர்ப்பு சக்தியை கொண்டே காம்பவுண்ட் வரை சென்றுவிடும். அந்த இடத்தில் ஆக்சிலேட்டரை ஒரு சொடுக்கு சொடுக்குவார். வண்டி விர்ரென்று கிளம்பிவிடும். வழியில் எங்கானும் வண்டி நின்றுவிட்டால் என்ன செய்வார் என்று அடிக்கடி விசனப்பட்டுக் கொள்வேன். இப்படிப் பட்ட தலைமையாசிரியருக்கு ஒரு சோதனை. அறையில் தொலைபேசி (அப்போது செல்பேசி வந்த புதிது. தொலைபேசியும் பயன்பாட்டில் இருந்தது) மணி அடித்தது. “ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…“ என்று முணுமுணுத்தபடி தொலைபேசியை எடுத்தார். அவர் எதிர்பார்த்தது போல இல்லத்தரசியிடம் வந்திருந்த அழைப்பு இல்லை. ஏதோ ஒரு அதிமுக்கிய தபாலுக்கு பதில் அளிக்க மறந்திருப்பார் போல. உரிய தபாலை மாலைக்குள் டவுனில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மிகுந்த 'அன்போடு' உயரதிகாரி பேசியுள்ளார். போர்க்கால அடிப்படையில் தபாலை எல்லாம் ரெடி பண்ணிவிட்டார். ஆனால் டவுனுக்கு அனுப்ப ஆள் தேடினார். அந்த கிராமத்துக்கு அடுத்த மினி பஸ் வந்த பிறகு சென்றால் டவுனில் ஆபீஸ் மூடிவிடுவார்கள். 3 கிமீ தொலைவில் உள்ள மெயின் ரோட்டுக்கு சென்றால் அடிக்கடி பேருந்து உண்டு. பிஎஸ் சார் தான் தொலைவில் இருந்து பேருந்தில் வந்து செல்கிறார். அவரிடம் கொடுத்தால் அலுவலகத்தில் தபாலை ஒப்படைத்துவிட்டு சீக்கிரமே வீட்டுக்கும் சென்றுவிடுவார். அவரை மெயின் ரோட்டில் கொண்டுபோய் விட வேண்டுமே!! “ஜிஎஸ் சார்!!“ “சார், நான் பிஎஸ் சார்!!” என்று புன்முறுவலுடன் வந்தார். இன்று அலுவலகம் செல்ல ஜாக்பாட் அடித்து விட்டது. சீக்கிரமாக வீட்டுக்கு போய்விடலாம் என்று உற்சாகம் ஆகிவிட்டார். “சார் என் வண்டியை எடுத்துக்கிட்டு…” “என்ன, உங்க வண்டியா?!“ என்று பீதி அடைந்தார். “சார் நானே ஸ்டார்ட் பண்ணி தரேன் சார்“ சரி சீக்கிரமா வீட்டுக்கு போகணும்னா சில பல சிரமங்களை சகிச்சிக்கிட்டுத்தான் ஆகணும் என்று தயார் ஆகிவிட்டார். “சரி சார் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொடுங்க“ “நீங்க வண்டியை கூட்டு ரோட்டில் நிறுத்திவிட்டு கிளம்புங்க நம்ம வண்டிய யாரும் எடுக்க மாட்டாங்க, நான் கேஆர் சார் கூட சாயங்காலம் வந்து எடுத்துகிட்டு வீட்டுக்கு போய்க்குவேன்” “நான் நாம வழக்கமா டீ சாப்பிடுற கடையிலேயே நிறுத்திவிட்டு கடைகாரரிடம் சொல்லிட்டே போறேன்“ என்றார். கடமை உணர்ச்சியில் “கன்“ மாதிரி இருக்கியேப்பா என்று கண் கலங்கிவிட்டார் மிஸ்டர் எக்ஸ். மிஸ்டர் எக்ஸ் வழக்கம் போல வண்டியின் காதை பிடித்து இழுத்து வந்தார். ஒரே உந்தில் காம்பவுண்ட் போய்விட்டார். பிஎஸ் மூச்சு வாங்க பின்னாடியே ஓடினார். “அப்படியே ஆக்சிலேட்டரை விடாம என்கிட்ட கொடுங்க“ என்று வண்டியில் அமர்ந்து கொண்டு கிளப்பினார். வண்டி திணறிய படி கிளம்பியது. என்ன என் வெயிட்டுக்கே திணறுது என்று ஆச்சரியப் பட்டார். தபால் பிரச்சனை சுளுவாக தீர்ந்து போனதில் திருப்திகரமாக தனது நாற்காலியில் சாய்ந்தார். பிஎஸ் போன ஐந்தாவது நிமிடத்தில் அவரிடம் இருந்து செல்போன் அழைப்பு. “சார் என்ன பெட்ரோல் இல்லையா வண்டி நின்னு போச்சே!” “அட ஆமா சார் காலையிலேயே வண்டிய சாச்சி போட்டு ஸ்டார்ட் பண்ணினேன்“ “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க“ “பிஎஸ் சார் ஒண்ணும் கவலைப் படாதீங்க, அப்படியே பெட்ரோல் டேங்க் மூடிய கழட்டி வாய் வச்சி நல்லா ஊதுங்க. அதுக்கே நாளு கிலோமீட்டர் ஓடும்“ “என்னாது வாய வச்சி ஊதணுமா?“ முதலில் தேர்ந்த நாதஸ்வர வித்வான் கணக்காக ஊதினார். அப்படியே காலால் உந்திக் கொண்டே ஓடி திருகி பார்த்தார். ஒரு சிறு முனகல் கூட இல்லை. அப்புறம் ஒரு சாக்ஸபோன் வித்வான் கணக்காக ஊதி ஓடி உந்தியும் வேலைக்கு ஆகவில்லை. உலைக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதை ஆகிப்போச்சே என்று நொந்து நூலாகிப் போனார். “சார் என்ன பண்ணினாலும் ஸ்டார்ட் ஆக வில்லை” “இன்னும் அர கிலோ மீட்டர் தான் வரும், சரி பிஸ் வண்டியை ஓரமா நிறுத்தி ஸ்டேண்ட் போட்டு விட்டு கோவிச்சுக்காம நடந்து போயிடுங்க“ ஆனாலும் மனசு கேட்காமல் வண்டியை தள்ளிக் கொண்டு அவர் ஏற்கனவே சொன்ன தேனீர் கடையில் விட்டுவிட்டு கிளம்பி விட்டார். அடுத்த ஒரு வாரத்திற்கு ஸ்டாஃப் ரூம் அரட்டையில் பிஎஸ் தான் கன்டென்ட் ஆகிப் போனார். ஆனாலும் அந்த “உலைக்கு பயந்து….“ சொலவடையை நினைத்து நினைத்து சிரித்து மாய்ந்து போனோம். இந்த உரையாடல் வராண்டாவில் நடந்து போன மிஸ்டர் எக்ஸ் காதில் விழவே நேரடியாக வந்து ஸ்டாஃப் ரூமில் அமர்ந்துவிட்டார். எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. “அப்படித்தான் ஒரு முறை மெட்ராஸ் கிளம்பிக்கிட்டு இருந்தேன். வீட்டில் இருந்து வந்து ரோட்டு ஓரத்தில் நண்பர் ஒருவருடன் வண்டியை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தேன். ஏதோ நினைப்பில் அந்த இடத்திலேயே வண்டியை ஸ்டேண்டு போட்டு நிறுத்திவிட்டு ஓடிப் போய் பஸ் ஏறிட்டேன்“ “சனி ஞாயிறு ரெண்டு நாள் மெட்ராஸ்ல வேலை. திங்க கிழமை விடியற்காலை பஸ்ல இருந்து இறங்கி பாக்குறேன் வண்டி ரோட்டிலேயே நான் நிறுத்தியது போலவே நின்று கொண்டு இருக்கு“ “அப்போது தான் நான் வெள்ளி இரவு வண்டியை ரோட்டில் அனாதையா தவிக்க விட்டுச் சென்றது ஞாபகம் வந்தது“ “அதனால நம்ப வண்டிய எவனும் எடுக்க மாட்டாங்க“ அந்த வண்டி ரிட்டயர்மெண்ட் வரையில் அவருக்காக உழைத்து ஓடாக தேய்ந்த வண்ணம் இருந்தது. ரிட்டயர் ஆன பிறகு ரிட்டயர்மெண்ட் பணத்தில் ஒரு புது டிவிஎஸ் எக்ஸெல் வாங்கினார். பிரிதொரு நாள் நாங்க டவுனில் அவரை எதேச்சையாக பார்த்த போது “சார் அந்த வண்டிக்கு விடிவு காலம் வந்து விட்டது போல. புது வண்டி சூப்பர் சார்“ என்று கலாய்த்தோம். “சார் வண்டி புதுசு நேத்து தான் எடுத்தேன் நல்லா இருக்கா?” “செம்மயா இருக்கு சார்” “என்ன விஷயமா வந்தீங்க சார்?“ “சும்மா ஒரு கல்யாணம் சார்” அன்று மதியப் பொழுதில் கடைத்தெரு சென்றபோது மிகுந்த சோகமாக மிஸ்டர் எக்ஸ் நின்று கொண்டு இருந்தார். “போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வந்தேன் சார்“ “ஏன் சார் என்ன ஆச்சு?” “காலையில் கல்யாணத்துக்கு வந்தப்போ மண்டபத்துக்கு வெளிய ரோட்டு ஓரமா புது வண்டிய நிறுத்திவிட்டு பழக்க தோசத்தில சாவிய எடுக்காம போய்ட்டேன். வந்து பாத்தா வண்டிய காணோம்“ என்றார் விசனத்தோடு.

No comments:

Post a Comment

ஸ்கூட்டர் சைக்கிள் டயரீஸ்"

சேகுவேரா வின் வாழ்க்கை வரலாற்று நூல் "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" அதற்கு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று இந்த பெயர் வைத்தேன். எழுதி ர...