Wednesday, December 10, 2025

நெருங்கி விலகும் பருவம் – வளரிளம் பருவத்தின் மனநலம்

நூலாசிரியர் – டாக்டர் சிவபாலன் இளங்கோவன் உயிர்மை பதிப்பகம்.
டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களுடைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஹோட்டல் சவேராவில் தம்பி இனியனால் ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு வளரிளம் பருவத்தினர் பற்றிய பயிற்சி பட்டறையில் அவரை நேரில் பார்த்தேன். அந்த பயிற்சி பட்டறையில் வழங்கப் பட்டது தான் இந்த சிறு நூல் ஆனால் செறிவான கருத்துகளை கொண்டது. மூளை என்ற வன்பொருளை இயக்கும் மென் பொருள் தான் மனம் என்று துவங்குகிறார். மனம் ஆனது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் புத்தி (intelligence) ஆகியவற்றின் சமநிலைகளால் ஆனது. இவற்றின் சமநிலை தவறும் போது மன ஆரோக்கியம் குன்றுகிறது. ஆரோக்கிய மனதின் பண்புகளாக பின் வரும் மூன்றை மருத்துவர் கூறுகிறார். 1. நம்மை நாமே முழுமையாக உணர்வது. 2. எண்ணங்களும் செயல்களும் பிறருக்கு உதவியாக அமைவது. குறைந்தபட்சம் யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருப்பது. 3. சக மனிதர்களுடன் சுமுகமான உறவை பேணுதல். அடுத்ததாக வளரிளம் பருவத்தினர் பற்றிய அறிமுகத்திற்கு வருகிறார். வளரிளம் பருவத்தில் அபரிமிதமான ஹார்மோன்கள் சுரப்பு காரணமாக உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான வளர்ச்சிகள் துரிதமாக ஏற்படுகின்றன. உடலை பொருத்தவரை கிடுகிடுவென உயரமாக வளர்ந்து செல்போன் டவருக்கு சவால் விடுவது. குரலில் உள்ள குழந்தைத் தனம் மறைந்து கரகரப்பாக மாறுவது. புதிய இடங்களில் ரோம வளர்ச்சி, எலும்பு உறுதி அடைவது, தசைகள் வலுவடைவது மற்றும் பாலுறுப்பு வளர்ச்சி என நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்த விஷயங்கள் தான். உளவியல் வளர்ச்சி என்பதை பெரும்பாலான பெற்றோருக்கு சரியாக அடையாளம் காண முடிவதில்லை. சுய அடையாளம் குறித்த தேடல். தனது உண்மையான அடையாளம் குறித்த தெளிவு இல்லாமல் எந்த மாதிரியான அடையாளத்தை கைக்கொண்டால் கெத்தாக இருக்குமோ அதை தன் அடையாளமாக கருதிக் கொள்வது. பின் அது போல இருக்க முனைவது என்கிற குழப்பமான செயல்பாடுகள் பெரும்பாலான பதின்பருத்தினரிடம் காணலாம். அம்மாவின் முந்தானையை பிடித்துக் கொண்டே திரிந்த பிள்ளைகள் அவர்களை விடுத்து தனியே இருக்க முனைவார்கள். அவர்கள் தனியே செய்ய முனையும் செயல்பாடுகளால் சிக்கல்களையும் இழுத்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறான தருணங்களில் அந்த சிக்கல்களை குறித்து பேசும் அளவுக்கான இடத்தை பெற்றோர் அளிக்க வேண்டியது அவசியம். எதெற்கெடுத்தாலும் எதிர் கேள்வி, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது. அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறுவது போன்றவையும் இவர்களிடத்தில் காணமுடியும். இளம் கன்று பயமறியாது என்பதற்கு இணங்க மிதமிஞ்சிய ஆற்றலும் எதையும் செய்துவிடும் துணிச்சலும் என பெற்றோருக்கு பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களது ஆற்றலையும் துணிச்சலையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். எனவே வளரிளம் பருவத்தினர் அவர்களுக்கு ஆர்வமுள்ள கலை செயல்பாடுகளிலோ அல்லது விளையாட்டுகளிலோ ஈடுபடுவது நலம் பயக்கும். அவர்களது செயல்பாடுகளில் கவனம் ஈர்க்கும் தன்மை இருக்கும். முக்கியமாக எதிர்பாலினத்தவரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே சில காரியங்களை செய்வார்கள். எதிர்பாலினத்தவர் மீதான ரகசிய கிளர்ச்சி ஏற்படுவது இயல்பானது. அந்த ஈர்ப்பினை காதல் என்று தவறாக அர்த்தப் படுத்திக் கொள்ளும் போக்கு காணப்படும். பின்வரும் இதர குறிப்பிடத்தக்க அம்சங்களையும் காணமுடியும். மூளை வளர்ச்சி முழுமையடையும் பருவம். உளவியல் பிரச்சனைகள், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவை மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன. அதே வேளையில் ஆதரவான நம்பிக்கைக்குரிய நேர்மறையான சமத்துவமான சமூக உறவாடல் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இந்த பருவத்தினர் எதையும் வேகமாக கற்றுக் கொள்கின்றனர். அதே போல் புதிய இடங்களில் தங்களை எளிதாக பொருத்திக் கொள்ள ஏதுவாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர். ஏமாற்றம், தோல்வி இவற்றில் இருந்து எளிதில் மீண்டு எழும் பருவம். எனவே தோல்வி, ஏமாற்றம் போன்ற அனுபவங்களை பெற்று உணர ஏதுவாக அவர்களை தனித்தியங்க அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லி தீர்வுகளுக்கு உதவி கோரும் உரையாடல் வெளியை பெற்றோர் குழந்தைகளுக்கு தரவேண்டியது அவசியம். வளரிளம் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கும் புறக்காரணிகள். நள்ளிரவில் அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பது. காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை இவர்களிடம் பரவலாக காணலாம். சரிவிகித உணவு உண்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை. இதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். அதீத திரை நேரம் – டிவி, கம்ப்யுட்டர் மற்றும் மொபைல் என மாறி மாறி பார்த்துக் கொண்டு இருப்பது. இந்த விஷயத்தில் தற்போதைய பெற்றோர் ஒரு கட்டுப் பாட்டை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் எடுத்துக் கூறி அவர்களிடம் கலந்தாலோசித்து ஒரு நேர அட்டவணையை உருவாக்கி அதனை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள நிகழ்வுகள். அடொலெசன்ட் வெப் சீரிஸ் பார்த்தவர்களுக்கு தெரியும். வளரிளம் பருவத்தினரின் ஆளுமையில் சமூக வலைதளங்கள் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே இவர்களின் நடவடிக்கைகள் உணர்வெழுச்சிகள் இவற்றை கவனமாக கண்காணிக்க வேண்டும். இவர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், விருப்பு, வெறுப்பு முதலானவை தொடர்ச்சியாக மாறிக் கொண்டே வரும். அதனால் இவர்களின் நடத்தைகளை கணிப்பது சவாலாக இருக்கும். அனைத்தையும் பரிசோதித்து பார்த்துவிட வேண்டும் என்கிற குறுகுறுப்பு காரணமாக எளிதில் போதைப் பொருட்கள் வசம் சென்றுவிட வாய்ப்புகள் உண்டு. இதில் வயதொத்த நண்பர்களின் தாக்கம் இருக்கும். வளரிளம் பருவத்தினரை வெற்றிகரமாக வழிநடத்த பின்வரும் விஷயங்களை செய்யலாம் என்று டாக்டர் சிவபாலன் அவர்கள் கூறியுள்ளார். 1. அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களையே செய்ய விடுங்கள். 2. உறவினர்கள் மற்றும் சக மனிதர்களுடன் உரையாடும் திறனை அனுபவப் பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். 3. பெற்றோர்களுக்கு இடையே உள்ள ஆரோக்கியமான உறவு குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பெற்றோரின் மன அழுத்தங்கள் குழந்தைகளை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 4. வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். பாடங்களைத் தாண்டி இதர விஷயங்களை வாசித்து அறிந்து கொள்வது அவர்களின் மொழியாளுமையை வளர்ப்பதோடு புத்திக் கூர்மையையும் வளர்க்கிறது. நூலில் மருத்துவர் சிவபாலன் அவர்கள் கூறிய விஷயங்களில் சில குறிப்பிடத்தக்க பகுதிகளை மட்டுமே எடுத்துக் கூறி உள்ளேன். நூலில் இன்னும் ஏராளமான அரிய பயனுள்ள தகவல்கள் உள்ளன. பெற்றோரும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய நூல்.

No comments:

Post a Comment

சிறை - பட விமர்சனம்

சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...