Thursday, September 28, 2023

நீதியரசர் சந்துரு கமிட்டிக்கு என்னுடைய பரிந்துரைகள்!!

 நீதியரசர் சந்துரு கமிட்டிக்கு என்னுடைய  பரிந்துரைகள்!!


சமூக நீதி குறித்த புரிதல் மாணவர்களுக்கு இல்லாமல் இருந்தால் வியப்பில்லை. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கே இல்லாமல் இருக்கிறது. 

எனவே சமூக நீதி, கலாச்சார பாகுபாடுகளை மதித்தல் போன்ற விஷயங்களில் ஆசிரியர்களுக்கே விழிப்புணர்வு தேவையாக உள்ளது.  ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சாதி அடிப்படையிலான குழுக்களாக செயல்படுவது, சாதி அடிப்படையில் ஓய்வறையை பகிர்வது  (உதாரணமாக அறிவியல் ஆசிரியர்கள் ஆய்வகத்தை ஓய்வறையாக பயன்படுத்தினால் தனது இனம் சார்ந்தோரை மட்டும் அங்கே நிரந்தரமாக அனுமதிப்பது)


இட ஒதுக்கீடு பற்றிய புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது நல்லது. சமூகத்தில் பெரும்பாலான இடைசாதியினர் (MBC & BC வகையறா) இட ஒதுக்கீட்டில் பெருவாரியான விகிதாச்சாரத்தை பயன்படுத்தி பயன் அடைந்தாலும் இடஒதுக்கீடு சார்ந்த விஷயங்களில் பட்டியல் இனத்தாரை குற்றவாளிகளாக நிறுத்துகின்றனர். 

அல்லது அவ்வாறு பேசப்படும் இடங்களில் கள்ள மௌனத்தோடு வாளாவிருந்து விடுகிறார்கள். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதை கற்றுத் தரும் பள்ளிகளில் சாதிச் சான்றினை கேட்கிறார்கள் – என்பது போன்ற செய்திகள் திட்டமிட்டு பரப்ப படுகிறது. 


முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏன் அவசியம், அதிகாரப் பரவலாக்கத்தில் இட ஒதுக்கீட்டின் பங்கு என்ன என்பது பற்றி பெரும்பாலான ஆசிரியர்களுக்கே சரியான புரிதல் இருப்பதில்லை.  எனவே எனது முதல் இரண்டு பரிந்துரைகளிளும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிருத்துகிறேன்.


பள்ளிகளில் கலை இலக்கிய போட்டிகள் வருடம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. சமூக நல்லிணக்கத்தை கருப்பொருளாக கொண்ட பல்வகைப் போட்டிகளை பள்ளி தோறும் நடத்த ஆவண செய்ய வேண்டும். பள்ளி அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க நிதியுதவி அளிக்கப் பட வேண்டும்.

UBUNTUISM  என்ற கருத்தாக்கத்தை வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளில் முன்னிருத்த வேண்டும். 


(UBUNTUISM ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றிருந்த ஒரு மானுடவியல் ஆய்வாளர் அங்கிருந்த பழங்குடி சிறுவர்களுக்கு முன்னால் சுவையான இனிப்புகள் நிறைந்த கூடையை வைத்து அவர்களுக்கு பந்தயம் வைத்துள்ளார். ”துவக்க கோட்டில் இருந்து யார் வேகமாக ஓடிவந்து கூடையை முதலில் தொடுகிறார்களோ அவர்களுக்கே கூடையில் உள்ள அனைத்து இனிப்புகளும் சொந்தம்” என்று கூறியுள்ளார். ஆனால் சிறுவர்கள் அனைவரும் கைகோர்த்தபடி ஒன்றாக ஓடி வந்து இனிப்பை எடுத்து சமமாக பகிர்ந்து உண்டனராம். அனைவரையும் அரவணைத்து இணைந்து முன்னேறும் இந்த கோட்பாடு UBUNTUISM எனப்படுகிறது.) 


வகுப்பறைகளில் மாணவர்கள் குழுவாக செய்யும் செயல்பாடுகள், தாங்களே கற்கும் செயல்பாடுகள், Team Project  போன்ற அனைத்திலும் அனைத்து இன மாணவர்களும் இணைந்த குழுவை ஏற்படுத்தித் தர வேண்டும்.  குழுவில் உள்ள கடைசி மாணவரையும் அரவணைத்து செல்ல சொல்லித் தர வேண்டும்.


“Remembering the Titans” என்கிற ஆங்கிலப் படத்தில் கருப்பின மாணவர்களும் வெள்ளையின மாணவர்களும் கலந்த ஒரு அணியை கட்டமைத்து அவர்களுக்குள் ஒரு உணர்வு பூர்வமான ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி நாட்டிலேயே வெற்றிகரமான அணியாக உருவாக்கி சாதிப்பார் அந்த அணியின் பயிற்சியாளர். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்ட திரைப்படமாகும்.


விளையாட்டினைப் போல மாணவர்களை ஒருமித்த குழுவாக உணர்வுப்பூர்வமாக இணைக்கும் விஷயம் வேறில்லை. எனவே பள்ளிகளில் விளையாட்டிற்கு போதுமான முக்கியத்துவம் வழங்கி பள்ளி அளவிலான பல்வகை விளையாட்டு அணிகளை உருவாக்க வேண்டும். அணியில் அனைத்து சமூக மாணவர்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


சமய மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மதிக்கும் பக்குவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் நீதி போதனை வகுப்புகளிலோ அல்லது மொழிப்பாட வகுப்புகளிலோ போதனை செய்ய ஆசிரியர்களை வலியுறுத்துவதோடு அது சார்ந்த கற்பித்தல் கையேடுகளைக் கூட வழங்கலாம்.  சமூக நல்லிணக்க நட்பினை ஏற்படுத்திக் கொள்ள மாணவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.


”சமூக நல்லிணக்க சிற்றுலா” கல்லூரி படிக்கும் காலங்களில் இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருமுறை சென்று விருந்துண்டு வருவார்கள். அது போல வகுப்பில் உள்ள அனைத்து சமூக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஒவ்வொரு நாள் ( ஒரு தெருவில் 4 மாணவர்கள் இருந்தால் அவர்கள் அனைவர் வீட்டிற்கும் ஒரே நாள்) சென்று பார்த்து சிற்றுண்டி சாப்பிட்டு வருதலை ஒரு செயல்பாடாக நடத்தலாம். ஆசிரியர்கள் மூலமாக ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் சிற்றுண்டி செலவினை பள்ளியே ஏற்கத்தக்க வகையில் நிதியுதவியும் செய்யலாம்.


பள்ளி நூலகங்களில் சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் சிறுகதை நூல்களை பெருமளவு வைக்க வேண்டும். குறிப்பாக அந்த நூல்களை குறிவைத்து நூல் திறனாய்வு போட்டிகளை நடத்தலாம்.

Wednesday, September 27, 2023

ஆயிஷா - குறுநாவல்


ஆயிஷா - குறுநாவல்



ஆசிரியர் – “ஆயிஷா“ நடராசன்


அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்களில் இந்தக் கதையை அறியாதவர்கள் எவரும் இருக்க இயலாது. ஏனென்றால் அனைத்துப் பயிற்சிகளிலும் இந்தக் கதை குறித்து பேசி இருக்கிறார்கள்.


 மேலும் இந்தக் கதை குறும்படமாகவும் பல பயிற்சிகளில் திரையிடப் பட்டிருக்கிறது.


நூலாசிரியரைப் பற்றி கல்விப் புலம் சார்ந்தவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அறிவியல் மற்றும் கல்விமுறைகள் சார்ந்து நிறைய நூல்கள் எழுதியுள்ளார். நிறைய நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். சமீபத்தில் லாக்டவுன் சமயத்தில் இவர் பேசிய Zoom meeting பார்த்தேன். நாம் கொண்டாட மறந்த ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் சுவாரசியமாக பேசினார். 


தனது மாணவர்கள் குறித்து தி இந்து தமிழ்திசையில் தொடர் ஒன்று எழுதினார். அப்போது செவ்வாய்க் கிழமைகளில் நான் முதலில் திறக்கும் பக்கம் அதுதான். இவர் எழுதிய ”இது யாருடைய வகுப்பறை?” என்கிற நூல் அற்புதமான கல்வி சார்ந்த கட்டுரைகள் நிறைந்தது. அதில் இவர் ஃபின்லாந்து கல்வி முறை குறித்து எழுதிய கட்டுரைதான் வாட்சாப்பில் பகிரப்பட்டு ஃபின்லாந்து கல்விமுறை குறித்து ஏராளமான பேர் சிலாகித்துப் பேச காரணமானது.


நான் பத்தாம் வகுப்பு படித்தபோது (1992) எனது கணித ஆசிரியரிடம் பாடம் சார்ந்து சற்று நுணுக்கமான சந்தேகம் (அநேகமாக திரிகோணமிதி என்று நினைக்கிறேன்.) கேட்டதற்கு ஒரு அருமையான பதில் கிடைத்தது. ஆமாம், அதற்குப் பிறகு அந்த ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் தைரியம் ஒரு பயலுக்கும் வந்ததே இல்லை.


“அப்படி என்ன பதில் கிடைத்ததாம்?”

ஒரு முறைப்பு, ஒரு அலட்சிய உடல்மொழி அப்புறம் வேறுபல கேள்விகள் கேட்டுவிட்டு “அதெல்லாம் தெரியுமா உனக்கு? ச்சீ உக்காரு”


ஆனால் எனக்கு டியுஷன் எடுத்த ஆசிரியர் சீமான் சாரிடம் (அவர் தொழில்முறை ஆசிரியர் அல்ல ஒரு டிப்ளமோ இன்ஜினியர், வேலை கிடைக்கும் வரை டியுஷன் எடுத்தார்) என்ன கேள்வி வேண்டுமானாலும் தைரியமாக கேட்கலாம்.


அப்புறம் நான் “அந்த“ ஊரில் பி.எட் பயிற்சி ஆசிரியராக இரண்டுமாதம் பயிற்சியில் இருந்த போது ஒரு வினோதமான ஆசிரியர் ஒருவர் இருந்தார். வகுப்பில் எந்த ஒரு சிறு ஒழுங்கீன செயல் நடந்தாலும் (அப்போது நானே உள்ளே இருந்தாலும்) திடுமென நுழைந்து ”கடைசி மூணு பெஞ்ச் முட்டி போடு”, “கடைசி மூணு பெஞ்ச் கையை நீட்டு”, “கடைசி மூணு பெஞ்ச் வெளில போ” இப்படியேத்தான் தண்டனை வழங்குவார்.


”அடடே பூரா ரவுடிப் பயலுகளையும் புடிச்சி கடைசில போட்டு வைத்திருக்கிறாரே, மத்த பசங்கள கெடுக்காம இருக்க என்னா ஐடியா” என்று வியந்துபோய் முதல் பெஞ்ச் பசங்களை விசாரித்தேன்.


“அட அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், நாங்க எல்லாம் அவர்கிட்ட டியுசன் படிக்கிறோம், அந்த பசங்க டியுசன் படிக்காதவங்க சார்”

அதிர்ச்சியில் மயக்கமே வந்து விட்டது. 


என்ன ஒரு அருவருக்கத்தக்க செயல் என்று ஆச்சர்யப் பட்டு போனேன். “பாடம் எல்லோருக்கும் எப்படிடா நடத்துவார்?”

“ஸ்கூல்ல கொஞ்சமா நடத்துவார் சார், அதோட தொடர்ச்சிய டியுசன்ல நடத்துவார் சார்”

நான் மேலே சொன்ன ஆசிரியர்களின் பொறுப்பற்றத் தனத்தை சுட்டிக்காட்டும் கதைதான் ஆயிஷா.


கதையை ஒரு இயற்பியல் ஆசிரியை செல்ஃப் நேரேஷன் செய்வது போல இருக்கும்.


ஆயிஷா வின் தோற்றம் அப்படி ஒன்றும் வசீகரம் இல்லை. அப்பா அம்மா இல்லாத அநாதைப் பெண். அம்மாவின் தங்கை வீட்டில் இருந்து படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி.


 பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டே பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கே கணிதத்தில் வீட்டுப்பாடம் செய்து கொடுக்கிறாள்.


அதே நடத்திய பாடம், சிறிதும் சுவாரசியம் இல்லாத வகுப்பறைகள், ஆசிரியர்கள் தங்கள் பணியின் மீது சிறிதும் பற்றோ அல்லது புதுமையோ இன்றி கடனே என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியான பள்ளி வளாகத்தில் உள்ள “மீத்திறக்குழந்தை“  ஆயிஷா கேள்விகளால் வேள்விகள் செய்தவண்ணம் இருக்கிறாள்.


கிங்லீங் என்பவர் எழுதிய ட்ருத் ஆஃப் மேக்னெட் புத்தகத்தை ஆசிரியருக்கே பரிந்துரை செய்கிறாள்.


“கம்பி வழியே பாயும் மின்சாரத்திற்கும் மின்னல் மூலமாக பாயும் மின்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்?”


“குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் மெழுகுவர்த்தி அதிக பிரகாசத்தை அளிக்கிறது, ஆனால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் விறகு நெருப்பு குறைந்த வெளிச்சத்தை அளிக்கிறது ஏன்?”


“அசோகரை புத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?”

இப்படி பல கேள்விகள் கேட்டு, சில ஆசிரியர்களின் எளிய வகுப்பறை சூழலை கடுமையானதாக மாற்றிவிடுகிறாள்.


எனக்குத் தெரிந்து ஒரு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒரு பதினோறாம் வகுப்பு மாணவி வகுப்பில் ரொம்ப பணிவாகவே கரும்பலகையில் உள்ள தவறை சுட்டிக் காண்பித்ததற்கு கடுமையாக தண்டிக்கப் பட்டாள். 


பிறகு ஆசிரியர் அறை வரையில் வந்து புத்தகத்தை ஆதாரமாக காண்பித்து தனது வாதத்தை நிலை நாட்டிய குற்றத்திற்காக மீண்டும் கடுமையாக தண்டிக்கப்பட்டாள். விடை தெரியாதபோது கேள்விகள் ஆசிரியர்களின் ஈகோவை தட்டி எழுப்பி விடுகிறது.


இதுபோலவே ஆயிஷாவும் எல்லா ஆசிரியர்களாலும் வெறுக்கப் பட்டாள், தாக்கப்பட்டாள்.


“ஆபரேஷன் செய்யும் போது வலிக்காமல் இருக்க கொடுக்கும் மருந்து என்ன  மிஸ்?” என்று கேட்கிறாள்.


அடுத்த நாள் ஒரு எலிக்கு அந்த மருந்தை ஊசிமூலம் கொடுத்து சோதிக்கிறாள், மரத்துப் போய் கிடக்கிறது..

“மிஸ் மிஸ், ஆயிஷா மயங்கி கிடக்கிறா மிஸ்” என்று பதட்டத்தோடு மாணவிகள் ஓடி வருகின்றனர்.

ஆயிஷாவின் பரிசோதனை எலி இறந்து கிடக்கிறது, ஆயிஷாவும் தான்.


மாணவர்களின் வினாக்கள் ஆசிரியரை தன்னை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்களின் கேள்விகளால் நான் நிறைய வாசித்துள்ளேன். 


பிறகு மாணவர்கள் கேள்விகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே நிறைய விஷயங்களை படித்து வகுப்பில் அறிமுகப் படுத்துவேன். அந்த மாதிரியான தருணங்கள் மனது லேசானது போல உணர்ந்த தருணங்கள். மாணவர்களோடு நட்புறவு அதிகமான தருணங்கள்.


எனவே குழந்தைகளின் கேள்விகளை ஆர்வத்தோடு எதிர்கொள்ளுங்கள். தெரியவில்லை என்றால், “தெரியலேப்பா, நாளைக்கு படிச்சிட்டு வந்து சொல்றேன்“ என்று நேர்மையாக கூறுங்கள் ஒன்றும் குறைந்து விடாது.


வகுப்பறையை உரையாடல் நிறைந்த கலகலப்பான ஒன்றாக மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள் மலர்களில் இருந்து வண்டுகள் தேன் உறிஞ்சுவது போல பாடங்களை கிரகித்துக் கொள்வார்கள் மாணவர்கள்.


இந்தக் கதை இலவசமாக வழங்கப்படும் புத்தகம் ஆகும். ஆயிஷா குறுநாவல் என்று கூகுளிடம் கேளுங்கள் கிடைக்கும்.

Wednesday, September 20, 2023

பொதுத்தேர்வு எனும் பெரும்பூதம்!!

 


இளமை பருவத்தின் துவக்கத்தில் புது புது சிந்தனைகளோடும் வண்ண வண்ண கனவுகளோடும் இருக்கும் பதின் பருவ குழந்தைகளை முற்றிலுமாக முடக்கி போடுவது 10, 11 & 12 தேர்வுகள் குறித்த அதீத பயமும் எதிர்பார்ப்பும் சூழலியல் அழுத்தமும் ஆகும்.


"ஆறு ஏழு எட்டு மாதிரி இதுவும் ஒரு வகுப்பு தான் இங்கேயும் நீ பாடங்களை படி நன்கு புரிந்து கொண்டு படி மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள் மற்றபடி தேர்வு குறித்த எந்த பயமும் வேண்டாம் நீ சிறப்பாக படித்து தேர்வு எழுது அது போதும் வருகிற மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு ஏதேனும் பாடத்தை எடுத்து கல்லூரியில் படித்துக் கொள்ளலாம்" என்று யாரேனும் பெற்றோர் கூறியிருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ஆனால் அவர்கள் அரிதிலும் அரிதாகவே இருப்பார்கள். 


 பெரும்பாலானோர் " ஓடு, ஓடு, ஓடு!! இது போட்டி நிறைந்த உலகம் ஓடிக்கொண்டே இரு யாரையும் திரும்பிப் பார்க்காதே ஓட்டம் ஒன்றே உன்னுடைய முழு நேர வேலை முதலிடம் ஒன்றே உன்னுடைய இலக்கு" என்று ஹார்மோன் சுரப்புகள் உச்சத்தை தொட்டிருக்கும் ஒரு உணர்ச்சி மிகுந்த பருவத்தில் இருக்கும் குழந்தையை உளவியல் ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குகிறோம்.


முதலில் ஒரு கணக்கு போடுவோம்.


”ஜூன் முதல் டிசம்பர் வரையில் மொத்தம் எத்தனை மாதங்கள்?”


”7”


”காலாண்டு பரிட்சை- செப்டம்பர் மாதம் போச்சு, அப்புறம் அரையாண்டு பரிட்சை – டிசம்பர் மாதம் போச்சு அப்புறம் இடைத்தேர்வு மற்றும் வடைத்தேர்வு அதுக்கு ஒர அரை மாதம் போச்சா? இப்போ ஏழில் மீதி என்ன?”


”நான்கரை மாதங்கள்”


”சோ, இந்த நான்கரை மாதங்களுக்குள் நூற்றைம்பது பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் புத்தகங்களை முடிக்கவேண்டும்”


”ஏய் நிறுத்து, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் என்னாச்சு?”


“ஏம்பா, அரையாண்டுத் தேர்வுக்கே முழு சிலபஸ்லயும் கேள்வித்தாள் அமையும்னு தெரியாதா? அதனால நவம்பரில் பாடங்களை முடிச்சாத்தான் அரையாண்டுத் தேர்வுக்கு முழு புத்தகத்தையும் படித்து தேர்வு எழுத மாணவர்களை தயார் செய்யலாம்”


“பாடங்களை முடிக்க டைம் இருக்குமா?”


”எங்கங்க டைம் இருக்கு, எல்லாம் சனிக்கிழமை, காலை மாலை வகுப்புகள் மற்றும் விளையாட்டு பீரியட், நீதி போதனை பீரியட் எல்லாத்தையும் கடன் வாங்கித்தான் முடிக்கணும்”


“அடப்பாவிகளா அந்தப் பசங்கள விளையாடக்கூட விடமாட்டீங்களா?”


”என்ன பண்றது பப்ளிக் எக்சாம்ல,”


அப்புறம் இந்த மெல்லக் கற்போருக்கு அனா ஆவன்னாவில் இருந்து ஆரம்பிக்கணும். நல்லா படிக்கிற பசங்களோட அறிவுப் பசிக்கும் தீனி போடணும். நான்கரை மாதத்தில் சிலபஸ் முடிக்க மூச்சு வாங்க ஓடியாகணும்.


இங்க ஒரு முக்கியமான விஷயம். இந்த விளையாட்டுத்துறை, நீதித்துறையை பிரிச்சி மேயுறதுலதான் கட்டப்பஞ்சாயத்தெல்லாம் நடக்கும். அப்புறம் யாராவது விடுப்பு எடுத்தால் அந்த பீரியடை யார் எடுப்பது என்று ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும். அடிச்சி புடிச்சி ஓடினா அங்க அந்த சார் ஏற்கனவே தொலைபேசித் தகவல் மூலமாக வேலை கொடுத்து வைத்திருப்பார்.


விதைநேர்த்தி செய்த விதைகளை மட்டுமே பத்தாம் வகுப்பில் வைத்திருக்கும் தனியார் பள்ளிகளையும் எல்லாவித மாணவர்களையும் (சமயங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் வகுப்பு பாஸ்போட்டு விரட்டப்பட்டவர்களையும்) வைத்திருக்கும் அரசுப் பள்ளிகளையும் ஒரே தட்டில் வைத்து எடைபோட்டு தேர்ச்சி விகிதங்களை வெகுஜன ஊடகங்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது தான் பிரச்சினை தொடங்கியது.


”நூறுசதவீத ரிசல்ட்டை உருவாக்குவது எப்படி?” என்கிற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சியெல்லாம் 2004க்குப் பிறகு வைக்க ஆரம்பித்தார்கள்.


கருத்தாளராக வேறொரு மாவட்டத்தில் இருந்து “சென்டம்“ என்கிற அடைமொழியோடு பெயர் கொண்ட ஒருவர் பேச வந்திருந்தார். ப்ளு ப்ரிண்ட் படி தேர்ச்சிக்குத் தேவையான 35 மதிப்பெண்களுக்கு தேவையான பகுதிகள் இவைதான். நான் இவற்றை ஜூனிலேயே முடித்து விடுவேன். அப்புறம் எல்லா மாதங்களும் கோச்சிங் தான் என்று அவர் கூறி முடித்த போது கைத்தட்டலில் கட்டிடமே அதிர்ந்தது. அவருடைய வகுப்பில் இருக்கும் மெல்லக் கற்போர் தவிர்த்த ஏனைய மாணவர்களை நினைத்து கவலை கொண்டேன்.


இந்த பயிற்சிகளில் நான் கற்றுக் கொண்ட முக்கிய வித்தைகளில் ஒன்று ”மல்டிபில் சாய்ஸ் புக்பேக் கொஸ்டின்ஸ காரணகாரியமெல்லாம் நோண்டாம அப்படியே ஆன்சர மனப்பாடம் செய்ய வைங்க போதும்”


பாடம் பாடத்திட்டம் எல்லாம் படித்து உணர்வதற்கு அல்ல, தேர்வெழுதி அடுத்த வகுப்பை அடையத்தான் என்கிற விஷயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆழ்மனதில் பதிந்து போனது.


ஒண்ணுமே புரியாம மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைவதற்கும் பிட் அடித்து தேர்ச்சி அடைவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. ரெண்டு பேருக்கும் பாடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.


இப்போ சிலபஸ் மாறிப் போனதில் கத்துக்கிட்ட மொத்த வித்தைகளும் வீணாகப் போய்விட்டன. (நீட் என்கிற செறுப்புக்குத் தக்கவாறு கால்களை வெட்டிக்கொண்ட கதையை தனிப் பதிவாக எழுதியிருக்கிறேன்)


"சிலபஸ் அருமையாத்தான் இருக்கு. புத்தகம் சிறப்போ சிறப்பு க்யு.ஆர் கோட் மூலமா வீடியோ லிங்க் எல்லாம் வேற லெவல் ம்ம்... பிச்சிட்டாங்க!!"  ஆனா அதையெல்லாம் என்ஜாய் பண்ணி நடத்த நேரம் இருக்கான்னா இல்ல என்பது தான் துயரமான எதார்த்தம்.


சுதந்திரப் போராட்ட கால அவஸ்தைகளைவிட இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுதந்திரம் படும் பாடு இருக்கே அய்யய்யோ, சொல்லி மாளாதுங்க!!


அதிகாலை நடைப்பயிற்சிக்கு செல்லும்போது ஆட்டோவில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் செல்லும் காட்சியைக் காணும் போதெல்லாம், "வீட்டில் இருக்கும் கைபுள்ளைக்கே இந்த நெலமன்னா , விடுதியில் இருக்கும் கைபுள்ளைங்க  ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவாவது நேரம் இருக்குமா?!" என்று யோசிப்பேன்.


கல்யாணம் காதுகுத்து என்று எந்த விழாவும் கிடையாது, டிவி, சினிமா மற்றும் பாடல் என எந்த ஒரு கேளிக்கையும் கிடையாது. குமரப் பருவத் துவக்கத்தில் கொண்டாட்டமான வண்ண வண்ண சிந்தனைகள் விரியும் வயதில் பொதுத்தேர்வு என்கிற “துறவு வாழ்க்கை” மேற்கொள்ள வற்புறுத்தப் படுகிறார்கள்.


ஒரு முறை எனது மாணவன் ஒருவன் பையில் இருந்து ஹான்ஸ் பொட்டலம் ஒன்றை எடுத்தேன். அப்புறம் தனியே அழைத்து விசாரித்தபோது, “சார் போன வருசம் பத்தாவது “---“பள்ளியில் படிச்சப்ப நைட் ஸ்டடி வைப்பாங்க சார், நான் அடிக்கடி தூங்கி விழுந்து அடி வாங்குவேன். அப்போது தான் மத்த பசங்கள கேட்ட போது ஹான்ஸ் போட்டா தூக்கம் வராது என்று சொன்னாங்க சார். அப்போ பழகியது சார்” என்று கூறினான்.


இந்த வலுக்கட்டாய நைட் ஸ்டடியின் பக்க விளைவுகள் மைய விளைவுகள் என்ன என்று தனியார் பள்ளி விடுதியில் தங்கி பணிபுரியும் ஆசிரியர்களைக் கேட்டால் பல புத்தகங்கள் போடும் அளவுக்கு கதை தேறும்.


பப்ளிக் பரிட்சை பற்றிய பில்டப்புகளில் ஆகச் சிறந்த கண்றாவியான ஒன்று என்றால் பெற்றோருக்கு பாதபூஜை என்று இவர்கள் அடிக்கும் கூத்து தான். ( அப்பா அம்மா கால்ல விழுந்து வணங்கறதா இருக்கட்டும் இல்ல கால்களில் விழுந்து கால்களுக்கு முத்தம் கொடுப்பதாக இருக்கட்டும் அதெல்லாம் பையன் வீட்டிலேயே பண்ணிக்க மாட்டானா?!) கிருஸ்துவ பள்ளிகளிலும் இது சற்று வேறு வடிவில் இருக்கும். கேரளத்து மாந்திரீகர்களிடம் மந்திரிச்ச தாயத்து வாங்கி கட்டாதது தான் பாக்கி. மற்ற எல்லா மந்திர தந்திர கூத்துகளும் பொதுத்தேர்வை மையப்படுத்தி அரங்கேற்றுகிறார்கள்.


இந்த விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்திய உளவியல் ரீதியான தாக்கத்தில் அவர்கள் வீடே பரீட்சை முடியும் வரையில் அரவிந்தர் ஆசிரமம் போல ஆகிவிடும்.


இவ்வளவு கூத்து அடிக்கிற நேரத்தில் பாடத்தை மாணவர்கள் என்ஜாய் பண்ணி புரிந்து கொள்ளும் அளவுக்கு நடத்திவிட்டால் அவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு மனப்பாடம் செய்ய வேண்டியது இல்லை.. புரிந்த விஷயங்களை மீட்டுருவாக்கம் செய்து விடைத்தாளில் எழுத பெரிதாக ஒன்றும் மெனக்கெட தேவை இல்லை என்கிற உண்மை இந்த பரபரப்புகளுக்கு இடையில் ஏறாது.


பத்தாம் வகுப்புக்கென கைக்கொண்ட தேர்வு மையக் கற்பித்தலை ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் அமல் படுத்தி தொலைப்பதால் அடிப்படை மிகவும் பலகீனமாகிப் போகிறது.


பொதுத்தேர்வுகள் இல்லாத வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வாய்ப்பு பெற்ற ஆசிரியர்கள் பாக்கியவான்கள். அவர்களின் அனைத்து விதமான கற்பித்தல் சோதனைகளையும் பரிசோதித்து கற்றல் கற்பித்தலை இன்பமயமாக மாற்றிவிட வாய்ப்பு உள்ளது.


பின்குறிப்பு: நான் ஆசிரியப் பணியிலும் தலைமை ஆசிரியர் பணியிலும் பணிபுரிந்த 21 ஆண்டுகால அனுபவத்தில் கண்ட கேட்ட விஷயங்களை இந்த கட்டுரையில் கொடுத்துள்ளேன். விதிவிலக்குகள் இனுக்கலாம் ஆனால் அவை பெரும்பான்மை அல்ல எனவே விதிவிலக்குகள் குறித்து விவாதிக்க வேண்டாம் மற்றபடி ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.

அறிவியல் பூர்வமான(?!) கம்பி கட்டும் கதைகள்

 


"அண்ணே விஷயம் தெரியுமா, விஷயம் தெரியுமா...."


"சொன்னாத்தானேடா தெரியும்?!"


"அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சதுர வடிவில் இருப்பதால் வட்டமாக பூமியை சுற்றும் செயற்கோள்களால் படம் புடிக்க முடியலயாம்னே"


"இதென்னடா புதுப் புரளியா இருக்கு?!"


"அதனால கெப்ளர் என்பவர் சதுரமா ஒரு சேட்டிலைட் செய்து லாஞ்ச் பண்ணாராம்..."


"அடேய், அதுவும் வட்டமாத்தானேடா சுத்தும்"


"குறுக்கால பேசாதண்ணே"


"சரி மேக்கொண்டு சொல்லு "


"ஆனா, அந்த சேட்டிலைட் புடிச்ச படத்தில கோவில் வட்ட வடிவமா இருந்துச்சாம்ணே, நம்ம ஆளுவ அந்த காலத்திலேயே கோளாறான ஆளுவலா இருந்திருக்காம்ணே"


"மறுபடியும் ஒரு கம்பி கட்டுற கதையா?!

அம்மன் டி ஆர் ஒய் கம்பிகள போட்டு நல்லா கட்றீங்கடா"


"அம்புட்டும் சைன்ஸ் ணே, கோவிலில் இருக்கும் எல்லா கோபுரமும் மின்காந்த அலைகள மொட்ட கோபுரத்துக்கு அனுப்புமாம்ணே, அந்த மொட்ட கோபுரம் சாட்டிலைட்டுக்கு அனுப்பும் போது அப்படியே திரிச்சி அனுப்பி கொளப்பி உட்ருமாம்ணே"


"அடேய், சாட்டிலைட்,மின்காந்த அலைகள், கெப்ளர் இத வச்சே செம்மயா கம்பி கட்றீங்களேடா"


"சும்மா கேலி பேசாதண்ணே எல்லாம் விஞ்ஞானம்"


"சரிடா சரிடா அப்படியே காஸ்மிக்  கதிர்கள், நியூட்ரினோக்கள் னு டெவலப் ஆகுங்கடே!!"


***†***********†*****†***†***********


ஒரு பெட்ரோல் பங்கில் two wheeler ல் கணவன் மனைவி குழந்தை மூவரும் பெட்ரோல் போடுகின்றனர்.


திடீரென அந்த இடத்தில் தீப்பற்றி எரிந்து அந்த குழந்தை மேல் தீ பிடிக்கிறது எல்லோரும் சேர்ந்து அந்த குழந்தையை காப்பாற்ற முயல்கிறார்கள்.


 இந்த மாதிரி ஒரு காணொளியோடு ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது.


 அதாவது பெட்ரோல் பங்க் அருகில் செல்போன் பயன்படுத்துவதால் இந்த மாதிரியான தீ விபத்து ஏற்படும் என்று சொல்வதோடு அல்லாமல் அக்கறையோடு நீங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போதும் சரி எப்போதுமே பாக்கெட்டில் ஃபோனை வைத்தாலே நீங்கள் டேட்டாவை அணைத்து வையுங்கள் என்று அக்கறையான ஒரு அறிவுரை வேறு.


 ஆனால் உண்மை என்னவென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பம்ப் அருகிலேயே பேடிஎம் பேமென்ட் டிவைஸ் இருக்கிறது.


அது வயர்லெஸ் டேட்டா இணைப்போடு தான் இயங்குகிறது அந்த டிவைஸ் எப்போதுமே பெட்ரோல் பம்ப் பக்கத்திலேயே இருக்கும்போது அதில் பற்றாத தீ யா  செல்போனில் பற்றுகிறது.


செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியேஷன் அயனியாக்காத (non ionization radiation) ரேடியேஷன் ஆகும்.


****கொஞ்சம் புரிதலுக்காக******


( அணு என்பது எப்போதும் நடுநிலையாக இருக்கும். அதற்கு எந்த ஒரு மின்சுமையும் இருக்காது.

 அணுவின் உள்ளே எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் போன்ற துகள்கள் இருப்பது நமக்கு தெரியும்.


 அதில் புரோட்டான் நேர்மின் சுமையும் எலக்ட்ரான் எதிர் மின்சுமையும் உடையது.


 புரோட்டானும் எலக்ட்ரானும் சமமான எண்ணிக்கையில் இருப்பதால் அணு எப்போதும் நடுநிலையாக இருக்கும்.


 அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை வெளியே தூக்கி விட்டால் புரோட்டானின் கை ஓங்குகிறது எனவே அணு நேர்மின் அயனியாக மாறுகிறது.


அல்லது ஒரு புரோட்டானை வெளியே தள்ளினால்  எலக்ட்ரான் கை ஓங்குகிறது எனவே அணுவானது எதிர்மின் அயனியாக மாறுகிறது.


  மேகத்திலிருந்து மின்னல் என்கிற மின்சாரம் பூமியை நோக்கி பாயும் போது காற்றில் மின்சாரத்தை கடத்துவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் அது தனது வழியை தானே போட்டுக் கொள்கிறது.


 அதாவது காற்றில் உள்ள நடுநிலை அணுக்களை அயனியாக மாற்றி அதாவது நடுநிலை அணுவை மின்சாரத்தை கடத்தவல்ல அயனியாக மாற்றி கீழ் நோக்கி இறங்குகிறது.


 அணுகுண்டு மற்றும் அணு உலைகளில்  வெளிப்படும் கதிர்வீச்சுகள் அயனியாக்கம் செய்ய வல்லவை.


 ஆனால் செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் அயனியாக்கம் செய்ய இயலாதவை என்பதுதான் உண்மை.)


****** நன்றி *****


அகவே பெட்ரோல் பங்க் தீவிபத்து வழக்கில் செல்போன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்குமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்ததாக ஒரு விசயம், இந்த யார்க்கருக்கு எனக்கு மிகவும் நெருக்கமான அறிவியல் ஆர்வலர்கள் கூட போல்ட் ஆகிவிட்டனர்.


மின்சார ரயில் பாதைக்கு அருகே நின்று செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது அப்படி எடுத்தால் அந்த மின்சாரம் செல்போன் ஃப்ளாஷ் வழியாக போட்டோ  எடுப்பவரையோ அல்லது  போட்டோ எடுக்கப்படுபவரையோ தாக்கி ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.  ஆதாரமாக ஒரு காணொளியும் காட்டுகிறார்கள்.


வண்டில போறப்ப கார்ல போறப்ப நடந்து போறப்ப எல்லா இடத்திலும் விடாம செல்போனை யூஸ் பண்ணாலும் ஊர்ல எந்த பிரச்சனை வந்தாலும் முதல் குற்றவாளியா செல்போனை தான் முன்னிருத்துகிறாங்க நம்ம ஆளுங்க.


ஆமாம் வாட்சாப் யூனிவர்சிட்டியின் அடுத்த கண்டுபிடிப்பு செல்போனில் உள்ள ஃப்ளாஷ் மின்சாரத்தை கடத்தும் என்பதுதான்.


செல்போனில் உள்ள பிளாஷ் லைட் சாதாரண எல்.இ.டி பல்பு தான்.


 ஒரு எல்இடி பல்பு வெளிச்சம் மின்சாரத்தை கடத்தும்னா ரயில்வே ஸ்டேஷன்ல நூற்றுக்கணக்கான எல்இடி பல்பு அங்கங்க மாட்டி வச்சிருக்காங்களே!!


அப்போ அது மின் விபத்துகளை ஏற்படுத்தாதா?!


வாட்ஸ் அப்பில் வரும் எந்த தகவலாக இருந்தாலும் அதில் ஏதேனும் நாசா விஞ்ஞானி பெயரே இருந்தாலும்கூட, அல்லது அறிவியல் பூர்வமான சில வார்த்தைகள் அங்கங்கே தெளிக்கப்பட்டு இருந்தாலும் கூட அதனை உடனடியாக நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை.


 அதை முழுமையாக படித்து சிந்தித்து தேவையானால் கூகுள் செய்து பார்த்து உண்மையை உணர்ந்த பிறகு பரப்புங்கள் நான் மேலே சொன்ன இந்த இரண்டு whatsapp வதந்திகளும் பல வருட காலமாக வற்றாத ஜீவநதியாக வாட்ஸ் அப்பில் பாய்ந்து கொண்டுள்ளது!!


***************************


"சும்மா எதையாவது சொல்லி கடவுள் சக்திய கேலி பண்ணப்டாது ஆமா, உட்டா திருநல்லாறு கோவில் கோபுரத்தை கடக்கும் போது சாட்டிலைட் நின்னுடுது ங்கறது கூட பொய்யின்னு சொல்வீங்க போலயே"


"என்னாது,சாட்டிலைட் ப்ரேக் அடிக்குதா,  ஸ்பீடு கொறஞ்சாலே விழுந்திடுமேடா"


"அப்படி ஒத்துக்க,  அதனாலதான் நாசா விஞ்ஞானிகள்கூட பயப்படுறாங்களாம்"


"என்னடா உங்கூட ரோதனையா போச்சு, நான் எதடா ஒத்துக்கிட்டேன்?! உனக்கு அறிவியலும் தெரியல, அறிவியல் அறிஞர்கள் சொல்றதும் தெரியல ஆனா வதந்திகள மட்டும் விலாவாரியா தெரிஞ்சி வச்சிருக்கீங்களேப்பா, இதுக்கு இஸ்ரோ  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையே விளக்கம் சொல்லிட்டாரேடா!!"


"இத்த கூட புரிஞ்சிக்கிற அளவுக்கு நாலெட்ஜ் இல்ல என்னதான் டிகிரி வாங்குனயோ  போ "


"யப்பா டேய் விட்ருடா....!!!"


இன்னும் சுவாரசியமான கம்பி கட்டும் கதைகளை வாட்சாப் யுனிவர்சிட்டியில் கண்டவர்கள் பின்னூட்டத்தில் கூறுங்கள். சிறந்த ஒன்றுக்கு ஒரு கிலோ தரமான கட்டுக் கம்பி பரிசாக வழங்கப்படும்!!

Wednesday, September 13, 2023

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.

 


ஒரு நாள் மாலை நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழி எங்கும் வானத்தில் மேகக் கூட்டங்களின் வர்ணஜாலங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.

 எங்கே மழை வந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆங்காங்கே நிறுத்தி எனது மொபைலில் படம் எடுத்துக் கொண்டே வந்தேன்.

 வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வினாடி வானம் பொத்துக் கொண்டது. 

 வீட்டில் சென்று உடை மாற்றிய பின் மொட்டை மாடிக்கு வந்து மழையை ரசிப்பதும் மொட்டை மாடியில் தேங்கிய நீரில் காலால் செதுக்கி விளையாடுவதும் குட்டியாக பேப்பரில் கப்பல் செய்து விடுவதும் என்று ஜாலியாக விளையாண்டு கொண்டிருந்தேன்.

 இதற்கிடையே சூடான தேநீரும் தயாரித்து மிடறு மிடறாக ரசித்து ரசித்து தொண்டையில் இறக்கியபடியே வானத்தை & மழையை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தேன்!!


அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு பிளாஷ் பேக் போகிறோம்.

 ஜூன் மாதம் முதல் நாள் பள்ளிக்கு சரியான நேரத்தில் சென்று சேர வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு,  முதல் நாள் என்பதால் கூட்டம் பேருந்தில் அப்பிக்கொண்டிருக்கும் எனவே அரியலூர் இருந்து உடையார்பாளையம் பள்ளிக்கு செல்ல எனது டூவீலரை எடுத்துக் கொண்டு சென்றேன்.

 மாலை பள்ளி முடிந்து திரும்பும் போது விளாங்குடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளியது.

 தேநீர் கடையில் ஒண்டிக் கொண்டு நின்றேன் தலையைத் தவிர உடலின் அத்தனை பாகங்களும் மழை சாரலில் நனைந்து போயின. 

 ஈரமான உடை நசநசத்து கொண்டிருந்தது.

 வண்டியோ மழையில் குளித்தது. கை கால் எல்லாம் லேசான நடுக்கம். இன்னும் ஒரு 15 கிலோமீட்டர் தூரத்தை இந்த மழையில் கடக்க வேண்டுமே என்கிற கவலை.  சிமெண்ட் ஆலைகளுக்கு மண் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் சாலையில் செம்மண் குழம்பு தயாரித்து வைத்திருக்கும், அதில் சறுக்கியபடி கவனமுடன் செல்ல வேண்டுமே என்கிற கவலையோடு தேனீர் கடைக்காரர் கோபித்துக் கொள்ள கூடாது என்பதற்காக இரண்டு முறை தேநீரும் அருந்திய படி மழையை மனதுக்குள் வைதபடி நின்றிருந்தேன் .


அப்படியே கட் பண்ணி மற்றொரு ஃபிளாஷ்பேக் அரியலூரில்,  அரியலூர் முதல் முறை புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட ஆண்டு கண்காட்சி முடிந்த அடுத்த வாரத்தில் ஒரு மாலை நேரம் சுமார் 2 மணி நேரம் வானம் மழையை கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளி விட்டது. பேருந்திலிருந்து இறங்கி கலெக்டர் ஆபீஸ் நிழல் குடையில் தஞ்சமடைந்தேன்.


ஆனால் நிழல் குடையில் உள்ள அத்தனை பேரும் தொப்பலாக நனைந்திருந்தோம். தலை மட்டும் நனையவில்லை அவ்வளவுதான். சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது சார்ஜ் இல்லாமல் மொபைல் அணைந்து போயிருந்தது.

 ஏரியா முழுவதும் மின்சாரம் வேறு இல்லை நான் எங்கே இருக்கிறேன் வீட்டுக்கு எப்போது வருவேன் என்கிற தகவலை கூட சொல்ல முடியாத ஒரு சூழல்.

ஒரு பக்கம் பசி,  கூட்டம் வேறு நெருக்கி அடித்துக் கொண்டிருந்தது. இந்த மழை எப்போது விடும் எப்போது வீட்டுக்கு செல்வோம் வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் சுழித்து ஓடுமே சிறுவயதில் கற்றுக் கொள் நீச்சலை இப்போது அடிக்க வேண்டிய வேளை வந்துவிடும் போல தெரிகிறது என்றெல்லாம் சிந்தித்தபடி சோகமான முகத்தோடு இரண்டு மணி நேரமாக பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். 

ஆக மழையை ரசிக்கும் மனநிலை என்பது நாம் இருக்கும் இடத்தை பொறுத்தது தான்.

மழை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை விவசாயிகள் வேண்டும்போது மழை பொழிவதில்லை மழை பெய்து விடுமோ என்று அஞ்சி கொண்டிருக்கும் போது சரியாக வந்து பெய்து கெடுத்து விடும். ஆகவே வானத்திலிருந்து கிடைக்கும் மழை எல்லோருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை தருவதில்லை.

 சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்தால் சிலருக்கு நெருக்கடியாக இருக்கலாம் சிலருக்கு துன்பத்தை கூட தரலாம்.

 ஆகவே மழை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரத்தை வழங்குவது கிடையாது.


 சாய்ரத் மற்றும் ஃபன்றி (FANRY)  (இரண்டு படங்களையும் கொரோனா சமயத்தில் பார்த்து முடித்து விட்டேன்😀) ஆகிய படங்களின் மூலமாக பிரபலம் அடைந்த நாகராஜ் மஞ்சுலே என்கிற மராத்திய பட இயக்குனர் இயக்கிய ஒரு அரை மணி நேர குறும்படம் Essay On the rain என்பதாகும் அந்த படத்தில் படம் துவங்கும் போது அடிக்கும் மழை படம் முடியும் வரை விடவே விடாது.

ஒரு நிஜ மழை காலத்தில் மழை பிரவாகமாய் அடித்து பெய்யும் ஒரு மலையடிவார பசுமை நிறைந்த கிராமத்தில் முழு படத்தையும் நிஜமான மழையிலேயே எடுத்திருப்பார்.

படத்தின் துவக்கத்தில் ஒரு ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருப்பார் அது மழையை பற்றி ஒரு கவிஞர் எழுதிய ஒரு செய்யுள் பகுதியை நடத்துவார். நீங்கள் எல்லோரும் இப்போது பெய்து கொண்டிருக்கும் மழையை பற்றி ஒரு கட்டுரை எழுதி வாருங்கள் என்று வீட்டுப்பாடம் கொடுப்பார்.

 நீங்கள் இந்த மழையை ரசித்து கட்டுரை எழுதவில்லை என்றால் அது இந்த கவிஞருக்கு நாம் இழைக்கும் பெரிய துரோகம் என்றெல்லாம் வேற பில்டப் கொடுப்பார்.


 படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் சிறுவன் பள்ளி முடிந்து வீடு செல்லும் போது அவனது தங்கை அவனை வேகமாக அழைப்பாள் அவளோடு போய் பார்த்தால் அவர்களுடைய தந்தை குடித்து மட்டையாகி சாலையோரத்தில் சுழித்தோடும் வெள்ளத்தில் கிடைப்பார் அவரை தூக்கி அழைத்துச் செல்லும் அளவுக்கு அவருக்கு அவர்களுக்கு தெம்பு இருக்காது.

 அப்படியே விட்டு விட்டு போகவும் மனசு இருக்காது. எனவே தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவர்களுடைய அம்மாவை அழைத்து வருமாறு தங்கை அவனை அனுப்பி வைப்பாள்.

 அவன் தன் தாயை அழைக்க அவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடம் நோக்கி செல்வான்.

 வீதி எங்கும் வெள்ளம் சுழித்து ஓடிக் கொண்டிருக்கும். 


மாலை மற்றும்  இரவு முழுவதும் மழையோடு ஒழுகும் வீட்டில்  போராட்டத்திலேயே கழிந்து விடும். ஆனால் கட்டுரை எழுதிச் சொல்ல முடியாது.


 வகுப்புக்கு போனால் ஒவ்வொருவரும் மழையை பற்றிய கட்டுரையை வாசிப்பார்கள். அதில் முந்தைய தினம் அந்த சிறுவன் சிறுமி அவனுடைய அம்மா தந்தை இவர்கள் வீதி வழி சென்றதும் விழுந்ததும் மாடுகளை மேய்த்துக் கொண்டு சென்றதும் போன்ற அனைத்து விஷயங்களும் காட்சிகளாக ஒவ்வொரு மாணவர்களும் சொல்லிக் கொண்டு வருவார்கள்.

இவன் மட்டும் எழுதி இருக்க மாட்டான். மழை பற்றி கட்டுரை எழுதாதற்காக அவனை வெளியில் முட்டி போட வைப்பார் என்பதோடு படம் முடியும்.


 கண்களுக்கு விருந்தாகவும் அதே நேரத்தில் மழையால் அந்த குடும்பம் படும் பாட்டையும் மிகச் சிறப்பாக செதுக்கியிருப்பார் இயக்குனர். இந்தப் படத்தை எங்களுக்கு தலைமையாசிரியருக்கான தலைமை பண்பு பயிற்சியில்  எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள்   திரையிட்டு சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்!!

Saturday, September 2, 2023

கோட்டா ஃபேக்டரி என்னும் கோச்சிங் இண்டஸ்ட்ரி!!

 

(இது இந்து ஆங்கில பத்திரிக்கையில்  "Kota's crash course"  என்கிற தலைப்பில் வந்த நடுப்பக்க கட்டுரையின் சாராம்சம்)



கோட்டா என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் ஐஐடி மற்றும் நீட் கோச்சிங் அளிக்கும் ஏராளமான சென்டர்களை கொண்டுள்ள நகரம்.


ராஜஸ்தான், உத்தர பிரதேஷ் 

,மத்திய பிரதேஷ், ஹரியானா, பஞ்சாப் போன்ற அருகமை மாநிலங்கள் கிட்டத்தட்ட மொத்த வட இந்திய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கோட்டாவிற்கு படையெடுக்கிறார்கள்!!( பெற்றோர்களால் வீரத் திலகம் இட்டு தள்ளிவிடப்படுகிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும்) 


அங்கே படிக்கும் ஜோதி (17 வயது) என்கிற மாணவியின் ஸ்டேட்மென்ட்

" கோட்டாவில் இது எனக்கு இரண்டாவது வருடம், என்னுடைய கவனம் முழுவதும் டெல்லி எய்ம்ஸ் இல் மருத்துவ சீட் வாங்க வேண்டும் என்பதுதான்!!

ஹாஸ்டலில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது.

 கோட்டாவில் எந்த இடத்தையும் நான் சுற்றி பார்க்க சென்றதே இல்லை.

 குடும்பம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் நான் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் படிக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை என்றால் நான் இன்னும் கூடுதலாக படித்து வருகிறேன்"

ஜோதி மேலும் கூறிய போது அவளது வகுப்பு மாணவி ஒருவர் தனது சொந்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று வந்தததற்காக நிர்வாகத்தால் கடுமையாக கடிந்து கொள்ள பட்டாராம்.


அங்கு தனது பையனை படிக்க வைத்திருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரிய பெற்றோர் கூறுவது " இங்கே ஏராளமானவர்கள் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை பார்க்கும்போது நமது பிள்ளைகளும் இன்னும் போட்டி போட்டுக் கொண்டு கடுமையாக உழைத்து மெடிக்கல் சீட்டு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லவா" 

ஆனால் அதுவே பிள்ளைகளின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை தரும் என்பதை வசதியாக மறந்துவிட்டார் அந்த ஆசிரியர்.


லடாக்கில் இருந்து இரண்டு 18 வயது மாணவர்கள் பெங்களூரு நாராயணா கோச்சிங் சென்டரில் இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து சீட் கிடைக்காமல் தற்போது கோட்டாவில் சேர்ந்துள்ளார்கள். 


மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம் ரூப்பா பருய் என்கிற பெண்மணி தனது மகனை கோட்டாவில் 2019ல் பயிற்சிக்கு சேர்த்து இருக்கிறார். அவரது மகன் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து சென்று விட்டார். நிர்வாகம் அவருக்கு ஹாஸ்டல் வார்டன் பணியை கொடுத்துள்ளது. வசதியாக அங்கே செட்டில் ஆகிவிட்டு தற்போது தனது ஏழாம் வகுப்பு படிக்கும் (?!)மகளை அங்கே பயிற்சிக்கு சேர்த்துள்ளார்.


அங்கே பயிற்சியில் இருக்கும் மாணவர்களை அழைப்பதற்கான சொலவடைகள் பவுண்டேஷன் என்பது ஏழு முதல் பத்து வரை உள்ள மாணவர்கள், ரன்னிங் என்பது 11 & 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் டிராப்பர்ஸ் என்பது பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் நாம் இங்கே ரிப்பீட்டர்ஸ் என்று கூறுகிறோம் அல்லவா அது!!


ஏழாம் வகுப்பில் இருந்து பயிற்சி நடைபெறுகிறது என்கிறீர்கள், அப்போ அவர்களது பள்ளி படிப்பு என்று கேட்பீர்கள், அவர்களது பெயர்கள் எல்லாம் டம்மி பள்ளிகளில் enroll ஆகி இருக்கும் ஏனென்றால் அவர்களின் Board exam எழுத வேண்டும் அல்லவா? Board exam  போதுமட்டும் போய் எழுதிவிட்டு வந்து விடுவார்கள்!!


மெரிட் என்றாலே மாணவர்களை தரப்படுத்தி வர்ணாசிரம அடுக்குகளை போல ஒரு அடுக்குகளை உருவாக்குவது தானே?!

 கோட்டாவிலும் இந்த நடைமுறை உண்டு அங்கே மாணவர்களுக்கு மூன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

 ஒன்று அடையாளத்திற்கு மற்றொன்று வருகை பதிவுக்கு. மூன்றாவதாக சில மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் ஸ்டார் பேட்ச். இந்த மாணவர்கள் மட்டும் அங்கே extra facilities பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நூலகத்தை வரம்பின்றி பயன்படுத்தலாம். ஆய்வகங்களை பயன்படுத்தலாம். அவர்களுக்கு மட்டும் Best teachers கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்கள் நிர்வாகத்திற்கு பணம் தருவது வழக்கமான ஒன்று . ஆனால் அந்த ஸ்டார் பேட்ச் மாணவர்களுக்கு நிர்வாகம் பணம் தரும். என்றால் அவர்கள் இந்த கொச்சின் இல்லாமலே கூட தேர்வாகி விடுவார்கள். அவர்கள் டாப் ரேங்கில் செலக்ட் ஆனால் அவர்களின் பெயர்களை போட்டு விளம்பரப்படுத்தி இன்னும் பல மாணவர்களை ஈர்ப்பதற்கு பயன்படும் அல்லவா?!

 அங்கே இருக்கும் ஒரு விடுதி சொந்தக்காரர் கூறுவது "சில மையங்கள் பரீட்சை முடியும் வரை மாணவர்களை பெற்றோர் சந்திக்க அனுமதிப்பதில்லை"


" உனக்காக இவ்வளவு செலவு பண்ணி இருக்கேன் கவனத்தில் வைத்துக்கொள் நல்ல காலேஜ்ல செலக்ட் ஆகாமல் வீட்டு பக்கம் வந்துராத" என்று சில பெற்றோர்கள் கூறிச் செல்வதாக அங்கே உள்ள ஒரு மருத்துவர் கூறுகிறார்.

சிலர் கூறுவார்கள் பலர் கூறுவதில்லை அவ்வளவுதான் மேட்டர். ஆனால் அதன் பின்னால் இருக்கும் பொருள் எல்லாம் ஒன்றுதான்.


 இதுதான் மாணவர்களை மிகப்பெரிய குற்ற உணர்விற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்குகிறது இந்த கட்டுரையின் சொல்ல வந்த முக்கியமான விஷயம் இதுதான் நீட் பரீட்சை வந்ததுக்கப்பிறகு அது சார்ந்த தற்கொலை மரணங்கள் தமிழகத்தில் நடந்தேறிய வண்ணம் உள்ளது.

 சமூக வலைதளங்களில் எழுதுவார் பலர் இந்த தற்கொலை மரணங்கள் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்றும் அதற்கு என்னவோ ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதல் தான் காரணம் என்றெல்லாம் மனம் போன போக்கில் எழுதுகிறார்கள்.

 எங்கெல்லாம் வளரிளம் பருவ (adolescent) மாணவர்களுக்கு பெரிய அழுத்தத்தை தருகிறோமா அங்கெல்லாம் இது நடந்தேறிய வண்ணம் உள்ளது.


கோட்டாவின் தற்கொலை மரணங்களின் புள்ளி விவரங்களை பாருங்கள், இந்த ஆண்டு மட்டும் 23 குழந்தைகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். அதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே ஆறு பேர்.   2013 துவங்கி அங்கே நடந்தேறி வரும் தற்கொலை மரணங்களில் இந்த ஆண்டு அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். சென்ற ஆண்டில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் 2014 இல் இருந்து 2023 வரை 118 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

 உயர்ந்து வரும் இந்த மரணங்களால் விழித்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம் கோட்டா இண்டஸ்ட்ரியில் இரண்டு மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் வைக்க கூடாது என்று உத்தரவு போடும் அளவுக்கு நிலைமை விபரீதமாக சென்றுள்ளது.

 ஆனால் மாணவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த இரண்டு மாதங்கள் தேர்வு எழுதவில்லை என்றால் இனிவரும் மாதங்களில் இந்த தேர்வுகளுக்கான பகுதிகளும் சேர்த்து எங்களை இன்னும் வேகமாக அழுத்தும் என்கிறார்கள்.

இந்த நுழைவு தேர்வுகளால் மாணவர்களின் மெரிட்டை தான் கண்டுபிடிக்கிறோம் என்று மனசாட்சி இல்லாமல் கூறுபவர்களே கேளுங்கள், அங்கே ஆலன் என்கிற ஒரு தனிப்பட்ட கோச்சிங் சென்டரில் மட்டும் ஒன்னேகால் லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள் கோட்டாவில் அவர் அவர்களுக்கு 23 வளாகங்கள் உள்ளதாம், ஒவ்வொரு வளாகத்திலும் கிட்டத்தட்ட 6000 மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். 6000 மாணவர்கள் என்றால் அவர்களுக்கான விடுதி சாப்பாடு கழிவறை என எவ்வளவு வசதிகள் செய்து தர வேண்டி உள்ளது.  அதை எல்லாம் அவர்கள் எந்த அளவுக்கு செய்கிறார்கள்.

 1.25 லட்சம் மாணவர்கள் என்றால் ஒவ்வொருவரிடம் டியூஷன் பீஸ் விடுதி கட்டணம் என்று குறைந்தபட்சம் வருடத்திற்கு ஐந்து லட்சத்துக்கு மேலாவது கறப்பார்கள் அப்படி என்றால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவை எண்ணி பாருங்கள்!!


ஏழாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையில் அந்த கோச்சிங் ஃபேக்டரியில் கச்சா பொருட்களாக இடப்படும் மாணவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!!


 பள்ளி என்றால் என்னவென்றே தெரியாமல் முழுக்க முழுக்க கோச்சிங் என்ற பல்சக்கரத்துக்குள் சிக்கி சின்னா பின்னமாகும் அவர்களது மன வளர்ச்சியை எண்ணும்போது சற்று பீதியாகத் தான் உள்ளது!!


கோட்டா நடைமுறைகள் பற்றி இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள netflix ல் கோட்டா ஃபேக்டரி என்ற ஒரு வெப் சீரிஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது பாருங்கள்.


( படத்தில் இருப்பது கோட்டாவில் உள்ள பிரபலமான கோவிலில் பிரகாரத்திற்கு அடுத்ததாக உள்ள சுவரில் மாணவர்கள் தங்களது ஆசையை எழுதியுள்ளார்கள்)

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...