Monday, December 23, 2024
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது.
தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் தான் நடைமுறைப்படுத்த உள்ளார்கள்!!
பள்ளிக் கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் அழிச்சாட்டியம் செய்து விரைவில் ஏற்க செய்தாலும் செய்வார்கள்!!
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு குழந்தை எப்படி படிக்கப் போகிறது என்பதை யார் தீர்மானம் செய்ய முடியும்?!
என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன் ஒன்பதாம் வகுப்பில் எழுத படிக்க திணறிய மெல்லக் கற்கும் மாணவர்கள் கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சியை எட்டிப் பிடித்து கைவசம் ஆக்கி விடுகிறார்கள்.
எட்டாம் வகுப்பில் என்ன , ஒன்பதாம் வகுப்பில்கூட அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் எங்கள் பள்ளியில் இருந்து கூட ஒரு ஐந்து மாணவர்களை இந்த வகையில் உதாரணம் காண்பிக்க முடியும்!!
அவ்வளவு ஏன் எனது மாணவன் பெயர் இளவரசன் என்று நினைக்கிறேன் (2003,2004 சமயம்) பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வுக்கு பிறகு திடீரென ஒரு நாள் அவன் கண்கள் ஒளி தோன்றியது!!
"அட, இவ்வளவு தானா சார் கணக்கு?!" என்பது போல கணக்கு பற்றி மிகப் பெரிய புரிதல் ஏற்பட்டு கணக்கோடு இருந்த பிணக்கு முடிந்து சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொண்டான்.
அதன் பிறகு எந்த கணக்காக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவான். அவனது இந்த வேகம் அவனை MSc கணிதம் மற்றும் பி எட் படிப்பு முடிக்கும் வரை இட்டுச் சென்றது!!
ஆக கண்களில் ஒளி தோன்றும் வரை குழந்தைகளை படிப்பில் தக்க வைத்து காத்திருப்பது அவசியம்.
எந்த வகையிலும் கல்வி என்பது வாழ்க்கைக்கு முக்கியமில்லை என்பதை மெல்ல மெல்ல பொது புத்தியில் ஆழமாக விதைத்துக் கொண்டு வருகிறார்கள்!!
ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் பெயில் போடுவது மிகப் பெரிய கொடுமை!!
குழந்தைகள் மனதைப் புண்படுத்தி விடக்கூடாது என்பதற்காக படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்களை மெல்லக் கற்போர் என்று அல்லவா கூறி வருகிறோம்!!
எதற்காக இந்த அவசர கறார்த்தனம்?! ஒரு குழந்தையை பத்து வயதில் அல்லது 13 வயதில் படிக்க லாயக்கு இல்லை என்று முடிவு செய்வது எவ்வளவு பெரிய அறிவீனம்?!
ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை சறுக்குப் பலகைப் பயணம் போல வந்தவர்களை ஒன்பதாம் வகுப்பில் வடிகட்டி பலபேர் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பாதை மாறிப்போக இந்த சென்டம் ரிசல்ட் மோகம் சிறிதளவாவது காரணமாக அமைந்து உள்ளது.
எனது அனுபவத்தில் கண்டவரை, ஒன்பதாவது வரை ஒரு மாதிரியாக திரிந்த பசங்க கூட பத்தாம் வகுப்பில் வந்து முற்றிலும் பொறுப்பாக மாறி இருக்கிறார்கள்.
அதேபோல பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவன். அவனது கணிதப்பாட மதிப்பெண் 98. குமரப்பருவ குறும்புகளால் படிப்பில் கவனம் சிதைந்து (எவ்வளவு அறிவுரை கூறியும் எடுபடவில்லை) கணிதப் பாடத்திலேயே பெயிலாகி இருக்கிறான்.
மற்றொரு மாணவன் தந்தை இல்லாதவன். சிறுவயதிலேயே கண்டிக்க ஆள் இல்லாததால் சென்னைக்கு சென்று பல வேலைகளை செய்து, பிறகு ஒரு மூன்று ஆண்டுகள் கழித்து எப்படியோ ஞானோதயம் பெற்று ப்ரைவேட்டாக பத்தாம் வகுப்பு எழுதி அனைத்துப் பாடங்களிலும் சிங்கிள் அட்டெம்ப்ட்டில் தேர்ச்சி பெறுகிறான்.
பதினோறாம் வகுப்பு சேர்க்கைக்கு வருகிறான். கணிதப் பிரிவு கேட்டதால் என்னிடம் அனுப்பினார்கள். அவன் தோற்றம் அப்புறம் ப்ரைவேட் மதிப்பெண் பட்டியல் இதெல்லாம் பார்த்து அவனை நிராகரிக்கும் எண்ணத்தோடு சில கேள்விகள் கேட்டேன்.
அவன் அதற்கு பதில் சொல்லவே முயலவில்லை. ”பயப்படாம என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் சார், நீங்க என்ன சொல்றீங்களோ அதுப்படி கேட்டு நான் பாஸ் பண்ணிக் காட்டுறேன்” என்று கூறிய நம்பிக்கையில் சேர்த்துக் கொண்டேன்.
வகுப்பில் இருந்து மற்ற மாணவர்களை பின்னுக்குத் தள்ளி வகுப்பிலேயே இரண்டாம் மதிப்பெண் பெற்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்.
ஆகவே குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் மேலே ஏறுவார்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சறுக்குவார்கள் அவர்களை பள்ளியில் இருந்து விலக்கி வைப்பது என்பது சமூகத்துக்கு பேராபத்தாக தான் முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...
No comments:
Post a Comment