Friday, December 13, 2024

THE CHILDREN’S TRAIN – ITALIAN MOVIE

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு (1946) இருந்த இத்தாலியின் சமூக பொருளாதார சூழலின் பின்னணியில் இருந்து எடுக்கப் பட்ட உண்மைக் கதை அடிப்படையில் படம் செல்கிறது. இத்தாலிய கம்யுனிஸ்ட் கட்சியானது வறுமை சூழ்ந்த தெற்கு இத்தாலிய குழந்தைகளை ஒப்பீட்டளவில் வசதியாக இருக்கும் வடக்கு இத்தாலியில் (அங்கும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது தான் போலும்) இருந்த தன்னார்வம் உள்ள பெற்றோர் தற்காலிகமாக வைத்து வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறது(Foster Parenting). ஆனால் தெற்கு இத்தாலியில் சிலர் “இது மோசடி, இந்த குழந்தைகளை சைபீரியாவுக்கு நாடு கடத்தி விடுவார்கள், அங்கே மனித மாமிசம் சாப்பிடுவோர் இவர்களை சாப்பிட்டுவிடுவார்கள், வடக்கு இத்தாலி மக்கள் இந்த குழந்தைகளை ஓவனில் வைத்து எறித்து விடுவார்கள்” என்றெல்லாம் கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார்கள். படமானது சிறுவன் அமெரிகோவின் பார்வையில் விரிகிறது. தெற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள் நகரில் அமெரிகோவின் தாய் அன்டோனிட்டா ஒற்றை மனுசியாக சிறுவன் அமெரிகோ வை வளர்க்கிறாள். அவனது தந்தை அமெரிக்காவுக்கு சென்றிருப்பதாக சொல்கிறாள். TRAIN OF HAPPINESS என்கிற திட்டத்தின் கீழ் சிறுவன் அமெரிகோ வடக்கு இத்தாலியின் மொடெனா நகருக்கு மற்ற குழந்தைகளுடன் செல்கிறான். அங்கே அனைத்து குழந்தைகளையும் தன்னார்வலர்கள் அழைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். சிறுவன் அமெரிகோவை அழைத்துச் செல்ல ஆள் எவரும் இல்லாத காரணத்தினால் கம்யுனிஸ்ட் கட்சி பெண் டெர்னா விருப்பமே இல்லாமல் வேறு வழி இன்றி அழைத்துச் செல்கிறாள். டெர்னாவின் காதலன் போர்வீரன். அவன் இறந்து போய்விடுகிறான். இவள் தான் உண்டு கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகம் உண்டு என்று வாழ்ந்து வருகிறாள். டெர்னாவின் இல்லத்தில் சிறுவன் தனியாக இருப்பதால் அவள் தனது சகோதரன் அல்சைட் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே ஏற்கனவே மூன்று சிறுவர்கள் உள்ளனர். இரண்டு வீடுகளிலும் வளர்கிறான். நாளடைவில் டெர்னாவுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிப் போகிறான். டெர்னாவின் சகோதரன் அமெரிகோவிற்கு வயலின் கற்றுத் தருகிறான். அமெரிகோவின் பிறந்த நாளுக்கு அழகான வயலின் செய்து பரிசளிக்கிறான். போர் முடிந்து பள்ளிகள் திறக்கப் படுகின்றன. சில நாட்கள் பள்ளிக்கும் செல்கிறான். ஃபாஸ்டர் பேரன்டிங் நாட்கள் முடிவடைகின்றன. ஆர்வத்துடன் தனது தாயை பார்க்க மறுபடியும் நேப்பிளுக்கு மற்ற குழந்தைகளோடு பயணிக்கிறான். தற்போது அவனிடம் டெர்னா கொடுத்த உணவுப் பொருட்கள் அவளது சகோதரன் கொடுத்த வயலின் எல்லாம் இருக்கிறது. அன்டோனிட்டா சிறுவன் அமெரிகோவின் எந்தக் கதைகளையும் சுவாரசியமாக கேட்கும் மனநிலையில் இல்லை. அந்த வயலினையும் அலட்சியமாக கட்டிலுக்கு கீழே தள்ளி வைத்து விடுகிறாள். சிறுவன் அமெரிகோவை தச்சு வேலை கற்றுக் கொள்ள அப்ரண்டிசாக அனுப்புகிறள். வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்கிறான். அங்கே ஒரு ஆர்கெஸ்ட்ராவை பார்த்த உடன் வயலினை தேடி வீட்டிற்கு ஓடுகிறான். காணவில்லை. அவனது அம்மா அந்த வயலினை அடகு வைத்திருப்பாள். கோபத்தில் சிறுவன் அம்மாவுக்கு தெரியாமல் ரயில் ஏறி மொடெனா சென்று டெர்னாவிடம் சேர்ந்து விடுகிறான். அவள் அவனை வளர்த்து பெரிய வயலின் வித்வான் ஆக்கிவிடுகிறாள். படம் எவ்வாறு முடிகிறது என்பதாவது சஸ்பென்ஸாக இருக்கட்டும். படம் துவங்கும் போது ஒரு பெரிய அரங்கில் அமெரிகோவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கும். அரங்கில் உள்ள அறையில் இவன் தயாராக வரும் போது ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவனது தாய் இறந்து போய்விட்டார். உதவியாளர் நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிடலாம் என்பாள். இவன் வேண்டாம் நிகழ்ச்சி நடக்கட்டும் என்று கூறிவிடுகிறான். நிகழ்ச்சியில் இவன் வாசிக்கும் போது நிகழ்வுகள் அனைத்தும் இவனது ஞாபகத்தில் விரிவதாக படத்தில் காட்டுவார்கள். படத்தில் இத்தாலியை ஒரு பக்குவப்பட்ட சமூகமாக காட்டி இருப்பார்கள். நேப்பிளில் சிறுவர்கள் அனைவரும் ரயில் ஏறும் போது அவர்களுக்கு உணவும் ஸ்வெட்டரும் கொடுப்பார்கள். அனைத்து சிறுவர்களும் ஒன்று போலவே இவர்கள் மறுபடியும் ஒன்று கொடுத்தாலும் கொடுப்பார்கள் இந்த ஸ்வெட்டரை தனது உடன் பிறந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று டிரெயினில் இருந்து பெற்றோரிடம் வீசி விடை பெறுவார்கள். மொடெனாவில் இறங்கிய உடன் இவர்களுக்கு பெரிய விருந்தே ஏற்பாடு ஆகியிருக்கும். ஆனால் நேப்பிளில் இந்த பயணத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்தவர்கள் இவர்களை கொல்வதற்கு தான் கம்யுனிஸ்ட் பார்ட்டி அழைத்துச் செல்கிறது என்று கூறியிருப்பார்கள். எனவே உணவில் விஷம் இருக்குமோ என்கிற பயத்தில் அவ்வளவு பசியிலும் ஒருவரும் சாப்பிட மாட்டார்கள். பிறகு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் சாப்பிட்டு காண்பித்த பிறகு களத்தில் இறங்கி ஒரு வெட்டு வெட்டுவார்கள். ஒருமுறை டெர்னாவின் சகோதரன் வீட்டில் ஓவனில் சுடச்சுட ரொட்டி தயாரித்து கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இவனைக் கண்டவுடன் குழந்தைகள் இவனையும் அழைப்பார்கள். குழந்தைகள் துரத்தல் மற்றும் எறியும் ஓவன் இரண்டையும் பார்த்த உடன் இவர்கள் நம்மை எறிக்கத் தான் துரத்துகிறார்கள் என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிந்து கொள்வான். டெர்னா துவக்கத்தில் சிறுவன் அமெரிகோவை தொடுவதைக் கூட தவிர்ப்பாள். அவன் குளிக்கும் போது அந்தப் புறம் திரும்பிக் கொண்டு துணி கொடுப்பாள். அவன் அழும் போது அவனை தொட்டணைத்து தேற்றக் கூட மாட்டாள். இருவருக்கும் இடையே பிணைப்பு அதிகம் ஆனபிறகு அவள் துயரத்தில் இருக்கும் போது அமெரிகோவின் தோளில் சாய்ந்து கொள்ள அவன் தேற்றுவான். பள்ளி துவங்கியதும் டீச்சர் “16 இரண்டுகள் எவ்வளவு” என்பார். அங்கே படித்த சிறுவர்கள்கூட விழிப்பார்கள். நம்ம ஆள் அசால்ட்டாக முப்பத்தி இரண்டு என்பான். “ நீ தான் பள்ளிக்கே போகவில்லையே எப்படித் தெரியும்“ என்பார்கள். ”நான் ஜோடி ஜோடியாகத்தான் ஷூ பாலிஷ் போடுவேன் அதனால் இது தெரியும்” என்பான். “காசு பணம் எண்ணி எண்ணி கணக்க நான் கத்துக் கிட்டேன்“ என்கிற சினிமாப் பாடல் போல அனுபவமே சிறந்த ஆசான் என்பதை வெளிப்படுத்திய காட்சி. 1940 களிலேயே பாலினப் பாகுபாட்டை எதிர்க்கும் கதாப் பாத்திரமாக டெர்னாவை வடிவமைத்து இருப்பார்கள். பள்ளி சீருடை மாடல் அமெரிகோவிற்கு பிடிக்காது. “இது பெண்கள் டிரஸ் போல உள்ளது“ என்று எரிச்சல் அடைவான். "பள்ளியில் ஆண் பெண் எல்லாம் கிடையாது. அனைவரும் சமமாகத்தான் தெரிய வேண்டும்" என்று கூறுவாள். வடக்கு இத்தாலியில் குழந்தைகள் படிப்பு மற்றும் தங்களது ஆர்வத்திற்கு ஏற்ற செயல்பாடுகள் என்று இருக்கும் போது வறுமை சூழ் தெற்கு இத்தாலி “சோத்துக்கே வழி இல்லை என்னத்த ஸ்கூலு என்னத்த வயலினு“ என்று லெஃப்ட் ஹேண்டில் நகர்த்திவிட்டு வேலைக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் அந்த காலத்தில் காமராஜர் வயிற்றுக்கு சோறு போட்டு கல்வி புகட்ட வேண்டும் என்று கூறி வறுமையை குழந்தைகள் உலகில் இருந்து லெஃப்ட் ஹேண்டில் நகர்த்தி இருப்பார். இந்த ரயில் மூலம் குழந்தைகள் பரிமாற்ற நிகழ்வினால் வடக்கு இத்தாலியும் தெற்கு இத்தாலியும் உணர்வு பூர்வமாக ஒன்றி விடுவார்கள். குழந்தைகள் வீடு திரும்பிய பிறகும் அவர்களுக்கு பார்சலில் தீனி அனுப்புவதோடு தொடர்ச்சியாக கடிதங்கள் மூலமாக விசாரித்துக் கொள்வார்கள். இது உண்மை சம்பவம். நினைக்கும் போதே தித்திக்கிறது. இந்தியாவில் தற்போதும் அரசின் பொருளாதார உதவிகள் பெருமளவு சென்றும் கூட அங்கே இருந்து வளர்ந்த குழந்தைகள் தெற்கு நோக்கி வந்து தான் தங்கள் வறுமையை போக்கிக் கொள்கிறார்கள். இங்கே Train Of Happiness Scheme ரிவர்சில் ஒர்க் அவுட் ஆகிறது. படத்தில் வரும் அத்தனை குழந்தைகளும் கொள்ளை அழகு. சிறப்பாகவும் நடித்திருப்பார்கள். சிறுவன் அமெரிகோ பாத்திரத்தில் நடித்துள்ள சிறுவன் நடிப்பு பிச்சி ஒதறிட்டான்!! இரண்டு அம்மாக்கள் ரோலில் வருபவர்களும் நன்றாக நடித்திருப்பார்கள். அன்டோனிட்டா ரோலில் வரும் பெண் சுருள் முடியுடன் வறுமை தாண்டவமாடும் தோற்றத்தில் வந்தாலும் கொள்ளை அழகாக தெரிவார். வடக்கு இத்தாலியை வளமாகவும் கலர்ஃபுல்லாகவும் காண்பிக்கும் அதே வேளை நேப்பிளில் குண்டு துளைத்த சிதிலமடைந்த கட்டிடங்கள் அழுக்கான தெருக்களில் வறிய மக்கள் என கான்ட்ராஸ்ட்டாக காட்டி இருப்பார்கள். படத்தின் இறுதிக் காட்சி கண்களில் நீரை வரவழைத்துவிடும் அளவுக்கு உறுக்கமாக இருக்கும். சொல்ல மறந்துட்டேனே படம் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...