Wednesday, December 11, 2024

Second show cinema in poovalur Kaveri

இலால்குடியில் எங்கள் விடுதியில் அட்டெண்டர் ஆக இருந்தவர் பவுல்ராஜ் அவர்கள். சில மேல்வகுப்பு மாணவர்கள் கூட அவரைவிட பெரிதாக தெரிவார்கள். அவ்வளவு ஒல்லி. வார்டன் அவரை எங்களுடன் தங்க பணித்திருந்தார். ஆனால் அவர் இரவு 9.30 பேருந்தை பிடித்து சொந்த ஊருக்குச் சென்று காலை திரும்பி விடுவார். அவ்வாறு அவர் ஊருக்குச் செல்வது எங்களுக்கு மிகப்பெரிய அனுகூலம். காலையில் போஸ்டர் பார்த்திருந்தோம் விஜயகாந்த் நடித்த சர்க்கரைத் தேவன் (*மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் ..., நல்ல வெள்ளி கிழமையில... ஆகிய பிரபல பாடலகள் இடம்பெற்ற படம் *) பூவாளூர் காவேரி தியேட்டரில் போட்டிருந்தார்கள். இந்த படத்தை சுடச்சுட பார்த்து விட வேண்டும் என்று காலையிலேயே சங்கல்பம் செய்து கொண்டோம். “டேய் செல்வம், அட்டெண்டர் இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாராடா?” இது விஜயகாந்த் அவர்களின் டை ஹார்ட் ஃபேன் பாலு. “கிளம்பறதா சொன்னார்டா“ இது ஏஜன்ட் செல்வம் எங்கள் உளவுத்துறை நிபுணர். “படத்துக்கு டயம் ஆச்சுடா” ஹஸ்கி வாய்ஸ் ல் அவசர அவஸ்தையில் இருந்தேன். “பேண்ட் சர்ட் போடுறாருடா” வார்டன் ரூமை உளவு பார்த்து லைவ் அப்டேட் கொடுத்தான். “சரி சரி படத்துக்கு வர்றவனுங்கள கூப்பிடுறேன்“ என்று விரைந்தேன். அரியலூரில் இருந்து எங்களுடன் விடுதியில் தங்கியிருந்த சக நண்பன் செல்வம். சற்று முரட்டுத்தனம் நிரம்பிய வெகுளி. செல்வமும் பாலுவும் அட்டெண்டரை பஸ் ஏற்றிவிட பஸ் ஸ்டாண்ட் சென்று அவர் பஸ் ஏறியதும் வந்து விடுவார்கள். நாங்கள் குறுக்கு வழியில் சென்று பெட்ரோல் பங்கில் காத்திருந்து அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு. பேருந்து கிடைக்காமல் அட்டெண்டர் விடுதி திரும்பி விட்டால், படம் விட்டு வரும் நாங்கள் அவரிடம் தொக்காக மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. “ஏய் ஸ்ட்ரீட் லைட் எரியலடா நாய கீய மிதிச்சிடாம வாடா“ என்றபடி TELC சர்ச் தாண்டி கிழக்கு நோக்கி செல்லும் தெருவில் விரைந்து நடந்து கொண்டு இருந்தோம். “மணி என்னடா?” ”மணி 9.30 டா“ “பஸ் ஏறி இருப்பாராடா?” “பஸ் ஏறி இருந்தா பெட்ரோல் பங்க் க்கு சீக்கிரம் செல்வமும் பாலுவும் வந்து விடுவானுங்க” “சரி சரி வேகமா போ” மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாக பெட்ரோல் பங்க் வந்து சேர்ந்தோம். இந்த பெட்ரோல் பங்க் முனையோடு லால்குடி முடிந்துவிடும். பிறகு ஆள் அரவம் இருக்காது. (1993-94ல்) ”டேய் செல்வம் டா!” “என்னடா அதுக்குள்ள பஸ் ஏத்தி விட்டுட்டிங்களாடா?“ ஆச்சரியத்தில் வாயை வானம் வரை பிளந்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் திரு திரு என்று பார்த்து விழித்தபடி “பஸ் ஏத்தி விட்டு பஸ் புறப்பட்ட பிறகுதாண்டா வரோம்” சரி பிரச்சனை தீர்ந்தது என்று அரியலூர் சாலையில் விரைவாக நடக்க ஆரம்பித்தோம். பூவாளூர் காவேரி தியேட்டர் எப்போதும் சற்று புதிய படங்களை போடுவார்கள். அப்போது கேபிள் டிவிக்கள் இங்கொன்றும் அங்கொன்றும் முளைத்த காலம். டி.வி யே ஊரிலேயே ஒரு சில வீடுகளில் தான் இருக்கும். மக்கள் படம் பார்க்க தியேட்டருக்குத் தான் வருவார்கள். படம் பெரிய நகரங்களில் முதலில் ரிலீஸ் ஆகி 50,100, மற்றும் 200 நாட்கள் என்று படத்தின் தரத்திற்கு ஏற்ப ஓடும். மரண மொக்கை படமாக இருந்தாலும் 50 நாட்கள் தாக்குப் பிடித்து ஓடும். “உள்ளத்தை அள்ளித்தா“ படம் 225 நாட்கள் திருச்சி சோனா மீனா தியேட்டரில் ஓடிய வரலாற்றை எல்லாம் கண்ணாற கண்டதுடன் அல்லாமல் அந்த படத்தை மூன்று முறை சோனா மீனா தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.. அதனால் பூவாளூர் காவேரி மாதிரியான தியேட்டருக்கு படங்கள் ஓராண்டு கழித்து அல்லது ஆறு மாதங்கள் கழித்து தான் வரும். இப்போவெல்லாம் இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று ஒரு மாதத்தில் கூட போட்டு விடுகிறார்கள். நாங்கள் இருட்டிலே அரியலூர் சாலையில் ஓடிக்கொண்டு இருந்தது அந்தமாதிரியான ஒரு வயதே ஆன ஓரு புதுப் படமான சக்கரைத் தேவனுக்குத்தான். இருப்பதில் மினிமம் காஸ்ட் உள்ள டிக்கட் தான் எப்போதும் எங்கள் சாய்ஸ். இரவு இரண்டாவது காட்சி என்பதால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இல்லை. ஸ்கிரீனுக்கு வெகு அருகில் தான் என்றாலும் எங்கள் பட்ஜெட் அதற்குத் தான் இடமளிக்கும். முதல் வகுப்பு கட்டணத்தில் இன்னோரு படம் பார்த்து விடலாம் என்கிற தொலை நோக்கு சிந்தனையும் ஒரு காரணம். இன்டர்வெல் தீனி முறுக்கு தேநீர் இவற்றுக்கெல்லாம் பட்ஜெட் இடம் தராது. இப்படியெல்லாம் கறார்த்தனமாக இருந்தால் தான் வீட்டில் கொடுக்கும் சொற்ப காசில் சில படங்களை பார்த்து ரசிக்க முடியும். படம் முடிந்து மறுபடியும் அரிலூர் இலால்குடி சாலையில் இரவு 1.30 சுமாருக்கு ஓட ஆரம்பித்தோம். எனக்கு இருளைப் பார்த்து பயம் எப்போதும் இருந்தது கிடையாது. நள்ளிரவு நேரம் என்பதால் குறுக்கு வழி உகந்தது அல்ல. ஏனென்றால் திருடன் என்று நினைத்து எங்களை நையப்புடைத்து விடும் அபாயம் அதில் உண்டு. எனவே நேரா போயி கடைசி லெஃப்ட். பேசி கும்மாளமிட்ட படி இரவின் இறுகிய மௌனத்தை கிழித்து கிடாசியபடியே விடுதி வாசலை எட்டினோம். “உஷ்…டேஏஏய் சத்தம் போடாத, அங்கபாரு ஃபேன் சத்தம் கேட்குது“ பட்டாசு பாலு பதட்டமான பாலுவாக ஹஸ்க்கினான். “டேய் ஆமாண்டா, அப்படின்னா பதினோறாம் வகுப்பு ஹால்ல அட்டெண்டர் படுத்துருக்கார்” இது செல்வம். “டேய் செல்வம் என்னடா, பஸ் ஏத்தி விட்டிங்களா இல்லயாடா?” பார்வையால் பஸ்பமாக்கியபடியே கடிந்து கொண்டேன். செல்வம் எங்க உளவு ஏஜெண்ட் தான் ஆனா முக்கியமான சமயங்களில் சிறப்பாக சொதப்பிவிடுவான். “படத்துக்கு டயம் ஆச்சின்னு பஸ்டாண்ட் வந்தவுடன் போயிட்டு வரோம்னு சார்ட்ட சொல்லிட்டு வந்துட்டோம்டா” என்றான் பரிதாபமாக. “டேய் சைலண்டா போய் லுங்கி மாத்திக் கிட்டு போர்வைய எடுத்துக் கிட்டு வந்து வராண்டாவில் படுத்துக்கலாம் வாடா“ இது நான். “வேணாம்டா அப்படியே வராண்டாவில் படுத்துக்கலாம்“ மறுபடி ஒரு வீக்கான டேமேஜ் கன்ட்ரோல் மெக்கானிசம் ஃப்ரம் செல்வம். “ஏண்டா ஏற்கனவே சொதப்பி வச்சதெல்லாம் பத்தாதா?!எல்லோரும் பேண்ட் சர்ட்ல இருக்கோம் காலையில் எந்திரிக்கும் போது மாட்டிக்குவோம், சரி வா உள்ள பாத்து மிதிச்சிடாம வா“ என்றபடி நான் முன்னே சென்றேன். இது என்னடா இது சம்மந்தம் இல்லாம இங்க நீளமா குச்சி மாதிரி என்று காலால் இடறினேன் “ஆத்தாடி அட்டண்டர் காலூஊஊ” “ம்ம்… யாருப்பா அது…” உறக்கம் களைந்தார் அட்டெண்டர். எனது இரும்புப் பெட்டிக்கும் அமிர்தராஜின் பெட்டிக்கும் இடையில் இருந்த பள்ளத்தாக்கில் பட்டென பதுங்கினேன். அப்படியே சம்மணமிட்டு சுவற்றோடு சாய்ந்து கொண்டேன். எல்லோரும் கிடைத்த இடத்தில் அப்படியே தரையோடு தரையாக பதுங்கிக் கொள்ள கடைசியாக வந்த செல்வம் கேப் கிடைக்காததால் செய்வதறியாமல் விழித்தபடி நின்று கொண்டு இருந்தான். “டேய் செல்வம் என்னப்பா இந்த நேரத்தில?“ “சார் …. அது வந்து…சார்… ஒன்னுக்கு..” “என்ன பேண்ட் போட்டுக்கிட்டா?!" நள்ளிரவு நேரத்திலும் லாஜிக் மாறாமல் சிந்தித்தார். " சினிமாவுக்கு போனிங்களாப்பா?“ அக்கரையோடு பஸ்டாண்ட் வந்தது இப்போ நள்ளிரவில் விழித்தபடி நிற்பது ஒன்னும் ஒன்னும் இரண்டு என்று கண்டு பிடித்து விட்டார். “சரி சரி போய் படு காலையில் பேசிக் கொள்ளலாம்“ பஞ்சாயத்தை காலையில் கூட்டலாம்னு அர்த்தம். ஏறக்குறைய ஒரு அரைமணி நேரம் இருந்த பொசிஷனில் அசையாமல் இருந்த நாங்கள் எல்லோரும் அரவம் அடங்கிய பின் மெதுவாக உடை மாற்றி வராண்டாவில் வந்து படுத்துக் கொண்டோம். காலையில் எழுந்த போது மணி ஏழு. வார்டன் ரூமில் கூட்டம். எட்டிப் பார்த்தால் செல்வம் கைக்கட்டிக் கொண்டு நின்றான். யார் பெத்த புள்ளையோ எங்க சார்பில் சிலுவை செமக்குரானே!! “யார் யார் சினிமாவுக்குப் போனது நீயும் பாலுவும் போனிங்களா?” “இல்லசார் வந்துக சார்...நான் மட்டும் தான் சார்” என்று எங்களை காப்பாற்றும் முனைப்பில் இருந்தான். அவன் காட்டிக் கொடுக்காமலே அவராக யூகிக்கும் அளவுக்கு பாலு அவரோட “பேட் புக்கில்“ இருந்தான். இந்த கசமுசா எதிலும் கிஞ்சிற்றும் சம்மந்தம் இல்லை என்கிற தோரணையில் நான் மெல்ல அறையில் தலையை நீட்டினேன். “பாருப்பா ஜெயராஜ் இந்த பையன் நைட்டு சினிமாவுக்குப் போயிருக்கான்” என்று என்னிடமே முறையிட்டார். என்ன ரியாக்சன் கொடுக்குறதுன்னே விளங்காமல் மையமாக லைட்டா சிரிச்சி வச்சேன். “செல்வம், ஜெயராஜ பாரு நல்லா படிக்கிறான். எந்த பாடத்திலும் பெயில் ஆகறது இல்ல ரேங்கும் பத்துக்குள்ள வந்துடறான். அவன் கூட சேர்ந்து படி மத்த பசங்க கூட சேர்ந்து வீணாப் போயிடாதே” படத்திற்கு செல்லும் திட்டம் வகுத்த சூத்திர தாரியே நான் தான் என்றாலும் என் மீது கிஞ்சிற்றும் சந்தேகம் வராத வகையில் அவருடைய “குட் புக்கில்“ இருந்தேன். எந்த சூழ்நிலையிலும் நண்பர்களை காட்டிக் கொடுக்காத செல்வம் ஒரு 90's சசிக்குமாராக எங்கள் மனதில் உயர்ந்தான். கண்களால் ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து நழுவினேன்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...