Saturday, December 27, 2025
சிறை - பட விமர்சனம்
சிறை - தமிழ்ப்படம்
சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம்
அதில் நமக்கு
முதுகு சொறியத்தான் சம்மதம்!!
தங்க மீனுக்கான தூண்டிலில்
தவளை பிடித்துக் கொண்டிருந்தோமா!!
என்றெல்லாம் சினிமாவின் போக்கு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவித்துவமாக அங்கலாய்த்து கொண்டிருந்தார்!!
ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் படங்கள் சினிமாவின் போக்கை ஓரளவு நல்வழியில் நெறிப்படுத்தி செல்கின்றன.
ஜெய்பீம் படத்தில் தமிழ் அவர்களைப் பார்த்து எவ்வளவு பெரிய கொடூரன் என்றெல்லாம் சபித்திருப்போம்.
ஆனால் அவர் தோற்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் மனிதர் பேரன்பும் பெருங்கருணையும் உள்ளவராக அல்லவா இருக்கிறார்!!
ஏற்கனவே டாணாகாரன் படத்தில் பயிற்சி காவலர்களின் நிலை பற்றி பேசியவர் இந்த படத்தில் கைதிகளை கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்துச் சென்று வரும் ஏ ஆர் போலீஸ் மற்றும் அவர்கள் அழைத்துச் செல்லும் கைதியின் பின்புலம் என்றெல்லாம் அழகான ஒரு கதையை படைத்துள்ளார். திரைக்கதையிலும் வசனத்திலும் கூட உதவி செய்துள்ளார்.
ஆனால் இயக்குனர் சுரேஷ் ராஜ்குமாரி.
விக்ரம் பிரபு கெரியரில் மிகச் சிறந்த ஒரு படம் என்று கூறலாம். அவருக்கு இணையராக நடித்தவர் அவ்வளவு பிரபலம் இல்லாத ஒரு நடிகை போலத்தான் இருக்கிறார்.
மற்றும் ஒரு இளம் நடிகராக அக்சய குமார் ஒன்று ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார் ஒரு அறிமுக நடிகரிடமிருந்து இவ்வளவு ஒரு தேர்ந்த நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
அந்த இளம் நடிகருக்கு இணையாக நடித்திருந்த இளம் அழகாக நடித்திருந்தார்.
படத்தில் யாருக்கும் பெரிய மேக்கப் இல்லை புத்தம் புது ஆடைகள் எல்லாம் இல்லை.
படத்தின் முதல் காட்சியே பட்டாசாக இருந்தது.
அது போல இன்டெர்வெல் ப்ளாக்கும் லப்டப்பை எகிறச்செய்யும்.
வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை கோர்ட்டுக்கு விசாரணை கைதி அழைத்துச் செல்லப்படுகிறார் இந்த பயணத்தில் ஊடாக அவரது ஃப்ளாஷ் பேக் கதையும் சொல்லப்படுகிறது.
துவக்கத்தில் கைதி தப்பிவிட போலீஸ் காரர்கள் மாட்டிக் கொள்வார்களோ என்று நினைக்கும் நாம் பிறகு கைதி சிறையில் இருந்து வெளியே வந்துவிடமாட்டானா என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள்.
"நம்மிடம் சிறிதளவு அதிகாரம் இருந்தால் கூட நம்மிடம் வந்து நிற்கும் எளிய மனிதர்களின் துயர் துடைக்க அந்த அதிகாரத்தை பயன்படுத்த தயங்க கூடாது" என்று கூறுவதோடு படம் முடிகிறது.
நான் எப்போதும் எனது மனதில் ஆழமாக பதிய வைத்து இருப்பது இதைத்தான்.
ஆசிரியர் பணி என்பது வேலை அல்ல அது ஒரு பொறுப்பு. நம்மிடம் கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு பாடத்தையும் வாழ்வியல் அறங்களையும் போதிக்க வேண்டியது நமது கடமை.
ஆகவே படத்தின் இறுதிக் காட்சி இதயத்தில் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டது.
படத்தை அருணும் நானும் திருச்சி மாரிஸ் ராக் தியேட்டரில் பார்த்தோம். தியேட்டரின் நட்ட நடுவில் அமர்ந்து பார்த்தோம்.
டால்பி ஸ்டீரியோ எஃபெக்ட் அவ்வளவு அற்புதமாக இருந்தது.
படத்தின் ஒளிப்பதிவு நாம் திரைக்குள் இருந்தவாறே நடப்பதை பார்க்கிறோமோ?! என்கிற மயக்க நிலையை தருவது போன்று மெஸ்மெரைசிங் ஆக உள்ளது.
படத்தின் பின்னணி இசை பதட்டத்தை நம்முள் கடத்துகிறது.
அவ்வளவு பெரிய அரங்கம் முழுதும் நிறைந்திருந்தது.
வருட இறுதியில் வந்துள்ள சிறந்த படைப்பு அனைவரும் பாருங்கள்.
கதாநாயகியின் அக்கா ரோலில் வருபவர் இந்தப் படத்தில் வரும் இதே சூழலில் இதே கதாபாத்திரத்தில் ஏற்கனவே வேறு ஒரு பிரபலமடையாத ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை கூட நான் பார்த்திருந்ததால் எனக்கு தோன்றியது.
Thursday, December 25, 2025
இடைநிறுத்தமும் இடைமுடுக்கமும்
இடை நிறுத்தம்
"சார் இவன் கடைசியா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் பள்ளிக்கூடம் வந்திருக்கான் அதுக்கப்புறம் வரவே இல்ல இப்ப அவன் பெயர் ஐந்தாம் வகுப்பு வந்தாச்சு டிசி வாங்கவும் இல்லை" என்று பள்ளிக்கு சென்ற உடனே எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிறுவனை அறிமுகம் செய்தார்கள்
பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்கள் பட்டியல் (OOSC - OUT OF SCHOOL CHILDREN)என்ற ஒன்று எமிஸ் தளத்தில் உள்ளது அது மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து நிலை கல்வித்துறை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
எனவே நெருக்குதல் காரணமாக அவனை அரையாண்டு பரிச்சை தொடங்கிய அன்று அட்மிஷனுக்கு அழைத்து வந்தார்கள்
உடை கலைந்து முடி எல்லாம் வளர்ந்து பள்ளிக்கூடத்திற்கு எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றான்.
அவனிடம் காமெடியாக பேசி ஆசுவாசப்படுத்தி அட்மிஷன் போட்டு உடனடியாக பாட புத்தகங்கள், மூன்று செட் சீருடைகள் விலையில்லா புத்தகப் பை விலையில்லா ஷூ ஜாமென்ட்ரி பாக்ஸ் என கைநிறைய பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பினோம்.
பரீட்சை முடியும் வரை தொடர்ச்சியாக தொய்வில்லாமல் வந்ததோடு தேர்வு எவ்வாறு எழுத வேண்டும் என்பதை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க அவன் தேர்வு தாளில் வினாத்தாளிலிருந்து எழுத்துக்களை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தான்.
சரி பார்த்துக் கொள்ளலாம் என்று அவ்வப்போது கண்ணில் படும் போதெல்லாம் அவனை விசாரித்துக் கொண்டே இருக்கிறேன் அவன் தொடர்ச்சியாக வருவானா இல்லை மீண்டும் நின்று விடுவானா என்பது ஜனவரி மாதம் தெரியும்.
சரியாக இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு முன்னால் அதாவது நவம்பர் துவக்கத்தில் ஒரு பாட்டி தனது பேரனை அழைத்துக் கொண்டு வந்தார்.
"சார் இவன் என்னோட பேரன் இவங்க அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் கிரக வாட்டம் சரியில்ல அப்படின்னு ஜோசியக்காரர் சொல்லிட்டார்"
"ஓ ஜோசியக்காரரே சொல்லிட்டாரா அப்போ சரியா தான் இருக்கும்"
"ஆமா சார், அதனால அவனை என் கூடவே வச்சுக்கிட்டேன்"
"அவங்க அப்பா அம்மா எங்க பதுங்கி இருக்காங்க?!"
"அவங்க அப்பா அம்மா மெட்ராஸ்ல இருக்காங்க இவன் மெட்ராஸ்ல ஏழாவது வரைக்கும் படிச்சிருக்கான் சார் இந்த வருஷம் ஸ்கூலுக்கு போகல இங்கே சேர்த்துக்க முடியுமா சார்?!"என்று கேட்டார்
இப்படித்தான் ஜோசியக்காரனுங்க பல குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிட்டு பணத்த வசூல் பண்ணிக்கிட்டு போயிட்டே இருக்கானுங்க!!
அவனை அழைத்து தமிழ் ஆங்கிலம் இரண்டையும் வாசிக்க செய்து பார்த்தால் இரண்டையும் எந்த தொய்வு இன்றி கடகடவென்று வாசிக்கிறான் வாய்ப்பாடும் தெள்ளத்தெளிவாக சொல்கிறான். 'அடப்பாவிகளா ஒரு நல்லா படிக்கிற பிள்ளையை இப்படி வீணடிச்சு வச்சிருக்கானுவ' என்று நொந்து கொண்டு அட்மிஷன் போட்டேன்.
"இந்த வாரம் சென்னைக்கு போயி டிசி எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விடனும் சரியா?!"
"சரிங்க சார்!!" என்றார் பாட்டி.
"சார்.."
"என்னடா?!"
"எங்க அக்காவும் அங்க ஒன்பதாம் வகுப்பு படிச்சிது சார்" என்று தயங்கியபடி கூறினான்.
"ஏம்மா ஆம்பள பிள்ளைங்கறதுக்காக இவன மட்டும் நைசா கொண்டு வந்து அட்மிஷன் போட்டுட்டீங்க பாப்பா வீட்ல இருக்குறத என்கிட்ட சொல்ல கூட இல்லையே, அதையும் அழைச்சிட்டு வாங்கம்மா அட்மிஷன் போட்டறலாம்" என்று கடிந்து கொண்டேன்.
தம்பி அளவிற்கு இல்லை என்றாலும் அந்த பெண்ணும் சுமாராக படித்தார்.
சில நாட்கள் கழித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது, "சார் அந்த பையன் சூப்பரா படிக்கிறான் சார் ரொம்ப ஆர்வமா இருக்கா அந்த பாப்பா கொஞ்சம் சுமாரா படிக்கிறா ஆனா கொண்டு வந்துடலாம் சார்"
இதுதான் எங்கள் ஆசிரியர்கள்!!
நவம்பர் மாதத்தில் அட்மிஷன் போடுகிறேன் டிசம்பர் மாதத்தில் அட்மிஷன் போடுகிறேன் என்றெல்லாம் என் மீது கோபித்துக் கொள்வதில்லை.
எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை அரவணைத்து அவர்களால் இயன்ற அளவுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கொண்டு வந்து விடுகிறார்கள்.
மேலும் எந்த தருணத்தில் யாரைப் பற்றி கேட்டாலும் அவனுடைய ஜாதகத்தை எடுத்து வைக்கும் அளவுக்கு மனதிலேயே தகவல்களை பொதித்து வைத்துள்ளார்கள்.
இடை முடுக்கம்!!
இடைநிறுத்தம் மாணவர்கள் செய்யும் நமக்கு நாமே திட்டம் என்றால் இடைமுடுக்கம் என்பது பொதுத் தேர்வுகள் நடக்க இருக்கும் வகுப்புகளில் படிக்கும் மெல்ல கற்போருக்கு ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் செய்யும் "செய்வினை" ஆகும்.
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி என்கிற ஒரு மோசமான புகழ் மயக்கம் தான் இதற்கு எல்லாம் அடிப்படை!!
எல்லா பாடங்களிலும் 100% தேர்ச்சி கிடைக்கணும்!!
அதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் உடைக்கணும்!!
என்பது பல பள்ளிகளின் தாரக மந்திரம்.
அதுபோன்ற ஒரு இடைமுடுக்கம் செய்யப்பட்ட மாணவி காலாண்டு பரீட்சை துவங்க ஒரு பத்து நாட்கள் இருக்கும் போது வந்தார்.
அந்த மாணவி எங்களிடம் ஏற்கனவே எட்டாம் வகுப்பில் படித்தவர். அந்த ஆண்டே ஒரு தனியார் பள்ளிக்கு சென்று விட்டு அதற்கு அடுத்த ஆண்டு ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு சென்று சேர்ந்தார்.
இதுபோல ஆண்டுக்கு ஒரு முறை பள்ளிகளை மாற்றுவது மாணவர்களின் படிப்பில் எந்த விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக அந்த மாணவர் ஒவ்வொரு புது பள்ளிக்கு செல்லும் போது தன்னை அங்கே நிலை நிறுத்திக் கொள்வது சக மாணவர்களில் இருந்து நண்பர்களை கண்டடைவது ஆசிரியர்களின் மனதை கவர்வது என்று பல விஷயங்கள் செய்ய வேண்டியது இருக்கும்.
அவ்வாறு செட்டில் ஆகும் தருணத்தில் மறுபடியும் பள்ளியை மாற்றுவது என்பது அவர்களை கடுமையான ஆளுமை சிக்கலுக்கு உள்ளாக்கும். அவரது படிப்பும் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
மறுபடியும் அந்த மாணவி பிரச்சனைக்கு வருவோம் அந்த மாணவி முதல் இடைப்பருவத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளார்.
அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர் அதிகாலை சிறப்பு வகுப்புகளுக்கு வர கோரியிருந்தனர் ஆனால் அந்த மாணவி தினமும் பேருந்தில் சென்று வருபவர் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று அவரது தந்தை கூறி இருக்கிறார்.
இந்த சூழலில் எங்கள் பள்ளிக்கு சேர்க்கை கோரி அந்த மாணவியின் தந்தை வந்திருந்தார்.
"ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி விட்டது. இது நிர்வாக ரீதியான சிக்கல் அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளிகள் வாரியாக வெவ்வேறு வேகங்களில் படங்கள் நடத்தி இருப்பார்கள். அதனால் அவர் இங்கே வந்து பொருந்துவது சிரமமாக இருக்கும்"
"இப்போ என்ன சார் பண்றது அங்கேயும் அழைச்சிட்டு போக சொல்லி சொல்றாங்களே?!"
"பள்ளியில் கொஞ்சம் பேசி பாருங்க அப்படி இல்லன்னா முதன்மை கல்வி அலுவலர் இடத்தில் சென்று முறையிட்டு பாருங்கள் என்றேன்"
"ஏழை மாணவர்களுக்கும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் நம்மை விட்டால் வேறு எங்கே சார் போவார்கள் நாம தான் சார் அவர்களை அரவணைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்!!" இது முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய வார்த்தைகள்.
அந்த பள்ளி நிர்வாகத்தை பேசி உடன்பட செய்வதை விட என்னிடம் பேசி விடுவது இலகுவாக இருக்கும் என்று சார் நினைத்து இருப்பார் போலும்.
அன்று மாலையே மாணவியை பள்ளியில் சேர்த்துக்கொண்டு சில அறிவுரைகள் வழங்கி ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி வகுப்பில் அமர வைத்தோம்.
காலை நேர மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள்& பள்ளியில் நடைபெறும் அலகுத் தேர்வுகள் என எல்லாவற்றிலும் அந்த மாணவிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அவரும் உள்ளூரில் இருந்து பள்ளி வந்து சென்றதால் எல்லாவற்றையும் சிரமம் இன்றி கேட்டுக் கொண்டார்.
காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று விட்டார். அழைத்து பேசியபோது மிகவும் நம்பிக்கையோடு நல்ல மதிப்பெண்கள் பெறுவதாக என்னிடம் உறுதியளித்துள்ளார்.
தேர்ச்சி விழுக்காட்டினை வைத்து ஆசிரியர்களை எடை போடுவது என்பது ஆசிரியர்களை பதட்டத்துக்கு உள்ளாக்குவதோடு பாடங்களை அதற்குரிய வழிமுறைகளைக் கொண்டு அனுபவித்து நடத்தும் முறையை கைவிட்டு தேர்வு & மதிப்பெண்கள் நோக்கிய வழிமுறைகளை கை கொள்கிறார்கள்.
இது என்ன ஆகிறது என்றால் மெல்ல மெல்ல மற்ற வகுப்புகளையும் இது வழிமுறை ஆட்கொள்கிறது.
அதனால் மாணவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள்.
ஆமாம் அவர்களுக்கு மதிப்பெண்கள் எடுக்கும் வழிமுறைகள் தெரியும் ஆனால் பாடங்களில் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாது. புரிந்து கொண்டு மதிப்பெண்கள் எடுப்பவர் என்பது பாதி பேர்தான்.
அதனால்தான் மெல்லக் கற்கும் மாணவர்களை பார்க்கும் போதெல்லாம் மிகுந்த கோபம் கொள்வதோடு பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். அவர்கள் கற்ற உளவியல் வழிமுறைகள் எல்லாம் கோபத்தில் கரைந்து போகிறது.
Curiosity kills the cat என்பது போல பொது தேர்வுகளுக்கு என்றுள்ள மதிப்பீட்டு வழி முறைகள் மாணவர்கள் பாடங்களை ஒழுங்காக புரிந்து கொண்டு படிக்காமல் இருப்பதற்கு காரணமாக அமைவது வேதனை.
இடைமுடுக்கங்களும் இடைநிறுத்தங்களும் ஒன்பதாம் வகுப்பில் ஏற்படுவதற்கு பொதுத் தேர்வு தேர்ச்சி விழுக்காடு பயம் மட்டுமே காரணம்.
எனவே இனிவரும் காலங்களில் கல்வி அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது முக்கியமாக மதிப்பீட்டு முறையிலும் இருக்க வேண்டும்.
Friday, December 12, 2025
எனது போராட்டம் -Mein Kampf
ரத்த கலப்பு தாண்டவம் ஆடி வரும் ஒரு சகாப்தத்தில் தங்கள் இனம் அதனால் அசுத்தம் அடையாது பாதுகாக்கும் கடமையில் தவறாது செல்லும் ஒரு அரசாங்கம் இந்த உலகையே ஆட்சி செய்யும் நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.
இனவெறியில் உச்சம் தொட்ட ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி ஒரு விஷயத்தை சிந்திக்க முடியும்.
அந்த நபரின் இதர பல தத்துவ முத்துக்கள்:
மக்கள் தொகையை செயற்கையாக கட்டுப்படுத்த நினைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே கருத்தடை என்பது தவறு மாறாக இயற்கை சீற்றம் வறட்சி போன்ற நிகழ்வுகளால் அவ்வப்போது இயற்கையே தனது மக்கள் தொகையை சமன் செய்து கொள்ளும்.
ஒரு தேசத்தில் வலிமை என்பது தாக்குதல் திறனில் தான் உள்ளதேயன்றி தற்காப்பில் இல்லை.
ஒரு கொள்கை பரவுவதை தடுக்க கலப்பற்ற பலாத்காரம் பயன்படும் என்றால் அதை இடைவிடாமல் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாடு தன் வாழ்விற்காக போராடும்போது கருணை என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே அதை அனுமதித்தால் போராட்டம் பலகீனமாகிவிடும்.
உறுதியுடனும் விடாமுயற்சியுடன் ஒருமைப்பாட்டு முறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும் அதற்கு முதலில் அரசாங்க ஆட்சி மொழி ஒரே ஒரு பொது மொழியாக இருக்க வேண்டும்.
மத விஷயங்களில் தலையிட அரசியல் கட்சிகளுக்கு உரிமை இல்லை மத விஷயங்கள் தேசங்களுக்கு விரோதமாக இருந்தால் அதை ஆட்சேபிக்கலாமே தவிர மத விஷயங்களில் தலையிடுவது மக்களுக்கு பிடிக்காது.
ஒரு நாடு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் உணவு தேவைக்காகவும் விவசாய நிலப் பரப்பை விஸ்தீரப்படுத்தவும் அண்டை நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.
ஒரு சொற்பொழிவில் மக்கள் பகுத்தறிவுக்கு திருப்தி உண்டாவதை காட்டிலும் அவர்கள் உணர்ச்சி வெள்ளம் பொங்க வேண்டும். அதாவது நோ லாஜிக் ஒன்லி மேஜிக்.
வலிமை உள்ளவர்கள் என்றென்றும் பலவீனமானவர்களின் எஜமான்களாக இருந்து வருவார்கள் இது யாராலும் மாற்ற தேவைப்படாத இயற்கை நியதி.
எப்போதுமே பிரச்சாரமானது எதிரிகளின் அநீதியை மாத்திரமே இடைவிடாமல் வலியுறுத்தி கூறுவதாக இருக்க வேண்டும். எதிரிகளின் நல்ல அம்சம் ஏதேனும் இருந்தாலும் அதை கூறக்கூடாது. தங்கள் கட்சிக்கு சாதகமாக இருக்கும் உண்மைகளை மட்டுமே கூறி வர வேண்டும்.
உயர் வம்சத்தினர் தாழ்ந்த வம்சத்தினருடன் புணர்வதன் மூலம் காலப்போக்கில் உயர்ந்த வம்சம் சிறப்பியல்புகள் குன்றி நசிந்து விடும்.
பரம்பரை நோயாளிகளையும் புத்தி சுவாதீனம் அற்றவர்களையும் மலடாக்கிவிட வேண்டும்.
பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கலாம் வேலைக்கு செல்ல அனுமதிக்கலாம் ஆனால் கூட அவர்களின் இறுதி லட்சியம் குழந்தை பெற்றுக் கொள்வது தான்.
மனித குலத்தின் உயர்ந்த வம்சத்தினரான ஜெர்மானியருக்கு தான் உலகிற்கே எஜமானவர்களாக இருக்கும் உரிமை உண்டு.
ஒரு வழியாக இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்தவர் யார் என்ற யூகத்திற்கு கடைசி வாக்கியமாவது உங்களை தள்ளி இருக்கும்.
ஆமாம் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் மெயின் காம்ஃப் என்ற தனது ஆட்டோ பயோகிராபியில் எழுதியுள்ள விஷயங்களில் சாராம்சம் தான் நான் மேலே கூறியுள்ளது.
ஜெர்மனி ஆஸ்திரியா இரண்டுக்கும் நடுவில் இருக்கும் எல்லை கிராமமான இன் பிரானோவில் பிறந்துள்ளார். இரண்டு தேசமும் ஜெர்மனியர்களின் தேசம் என்பதால் இரண்டும் ஒன்று சேர வேண்டும் என்பது அவரது கனவாக இருந்துள்ளது.
(முதல் உலகப்போருக்கு பின் அதாவது 1918இல் ஜெர்மன் குடியரசுடன் தாம் இணைவதாக ஆஸ்திரியா பிரகடனம் செய்தது ஆனால் பிரிட்டன் முதலான நேச நாடுகள் அதை தடை செய்துவிட்டன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப் போர் துவங்கும் தருவாயில் ஜெர்மன் துருப்புகள் ஆஸ்திரியாவில் பிரவேசித்தன. இவ்வாறாக ஹிட்லர் ஆஸ்த்ரியாவை ஜெர்மனியுடன் இணைத்து தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டார்)
தனது இளமை பருவம் ஹிட்லர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தான் வளர்ந்துள்ளார். ஏராளமான புத்தகங்கள் வாசித்துள்ளார். புத்தகங்களை அவர் வாங்கி வாசித்துள்ளார்.
17 வயதில் காரல் மார்க்ஸ் ன் கொள்கை அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளது. கம்யூனிச அமைப்பிலும் ஈடுபாடு காட்டியுள்ளார் . ஆனாலும் அவர் நூலில் குறிப்பிடாத ஏதோ ஒரு காரணத்தினால் அங்கிருந்து விலகி உள்ளார். (விதியின் முரட்டு கரங்களால் திடீரென ஓங்கி ஒரு அடி வாங்கிய பின்னர் விதியினீ கரங்களால் எனது கண்கள் திறக்கப்பட்டன என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்)
அதன் பிறகு பொதுமக்களை வஞ்சிப்பதற்கான இறையற்ற தன்மை என்று கம்யூனிசத்தை குறிப்பிடுகிறார்.
மார்க்ஸ் கொள்கை மனித குலத்தின் அழிவுக்கான ஒரு தத்துவம் என்று கடுமையாக சாடுகிறார்.
மார்க்ஸ் கொள்கையின் இறுதி நோக்கம் யூதர் அல்லாத தேசிய அரசுகளை அழிப்பது தான் என்றெல்லாம் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு இணையாக கம்யூனிசம் என்றாலே கதறி துடிக்கும் ஆளாக ஹிட்லர் இருந்துள்ளார்.
தனது பதின் பருவங்களில் அவருக்கு பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. யூதர்கள் நடத்திய பத்திரிகைகளை விரும்பி வாசித்துள்ளார் "அவர்கள் வேற்று மதத்தவர் என்பதால் துவேஷம் கொள்ளக்கூடாது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கூட எண்ணி உள்ளார்.
நமது தினத்தந்தி போல யூதர்கள் நடத்திய பத்திரிக்கையும் அரசாங்கத்தை காக்காய் பிடிப்பது அவருக்கு சற்று நெறுடலாக இருந்தது. அதோடல்லாமல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெர்மனியின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது போலவும் வீரர்களின் உற்சாகத்தை குன்றச் செய்வது போலவும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்துள்ளதால் முற்றிலும் யூதர்களையும் அவர்கள் நடத்தி வந்த பத்திரிக்கைகளையும் வெறுத்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி யூதர்களை சதிகாரர்கள் சகுனிகள் என்கிற அளவுக்கு கடும் ஒவ்வாமையோடு பார்த்து வந்துள்ளார்.
முதலாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் மன்னருக்கு விண்ணப்பம் செய்து பவேரிய ராணுவத்தில் சேர அனுமதி கோரியுள்ளார். வடிவேல் போல வான்டனாக வண்டியில் ஏறி யுள்ளார்.
முதலாம் உலகப் போரில் கடைநிலைப் போராளியாக இருந்த ஒருவர் இரண்டாம் உலகப்போரை முன் நின்று வழி நடத்தியுள்ளார் என்பதும் ஒரு துயர சாதனை வரலாறு.
முதலாம் உலகப் போர் முடிந்து வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி மாபெரும் அவமானத்தையும் பொருளாதார நஷ்டத்தையும் சந்தித்த பிறகு தான் ஹிட்லர் அரசியலில் நுழைவது என்று முடிவு செய்வது படிப்படியாக காய்களை வெகு நேர்த்தியாக நகர்த்துகிறார்.
சொற்பொழிவு ஒன்றை மட்டுமே ஆயுதமாக கொண்டு ஜெர்மனியையே கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இதுகுறித்து மேலே கூறியுள்ளேன்.
மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொண்ட கலந்துரையாடல் துவங்கி 50,60,100 ,150 என்று வளர்ந்து 60 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் பேசியது வரை வளர்ந்துள்ளார்.
கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூட்டத்துக்கு இடையூறு செய்யும் எதிரிகளை பந்தாடவும் பவுன்சர்களை நியமித்ததில் நமது இளைய தளபதிக்கு முன்னோடி ஹிட்லர்.
ஒரு கூட்டத்தின் போது நூற்றுக்கு குறைவான எண்ணிக்கையிலான பவுன்சர்களை கொண்டு ஆயிரக்கணக்கான எதிரிகளை பந்தாடியதை பதிவு செய்துள்ளார்.
சற்றும் சுவையில்லாத எழுத்து நடை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது என்று வாசிக்கவே அயர்ச்சியான ஒரு நூலாக தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
ஹிட்லரின் இந்த நூலில் நாம் எடுத்துச் செல்ல (take away) என்று எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லை.
எவர் ஒருவர் மோசமான தலைவர் என்பதை அடையாளம் காண உதவும் பண்பு நலன்களை வேண்டுமானால் இங்கிருந்து கற்றுக்கொள்ள இயலும். (நீங்க யாரையாவது அடையாளம் கண்டுகினீங்களா).
நூல்: எனது போராட்டம் (Mein Kamph )- ஹிட்லர்
Wednesday, December 10, 2025
நெருங்கி விலகும் பருவம் – வளரிளம் பருவத்தின் மனநலம்
நூலாசிரியர் – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
உயிர்மை பதிப்பகம்.
டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களுடைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஹோட்டல் சவேராவில் தம்பி இனியனால் ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு வளரிளம் பருவத்தினர் பற்றிய பயிற்சி பட்டறையில் அவரை நேரில் பார்த்தேன். அந்த பயிற்சி பட்டறையில் வழங்கப் பட்டது தான் இந்த சிறு நூல் ஆனால் செறிவான கருத்துகளை கொண்டது.
மூளை என்ற வன்பொருளை இயக்கும் மென் பொருள் தான் மனம் என்று துவங்குகிறார். மனம் ஆனது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் புத்தி (intelligence) ஆகியவற்றின் சமநிலைகளால் ஆனது. இவற்றின் சமநிலை தவறும் போது மன ஆரோக்கியம் குன்றுகிறது.
ஆரோக்கிய மனதின் பண்புகளாக பின் வரும் மூன்றை மருத்துவர் கூறுகிறார். 1. நம்மை நாமே முழுமையாக உணர்வது. 2. எண்ணங்களும் செயல்களும் பிறருக்கு உதவியாக அமைவது. குறைந்தபட்சம் யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருப்பது. 3. சக மனிதர்களுடன் சுமுகமான உறவை பேணுதல்.
அடுத்ததாக வளரிளம் பருவத்தினர் பற்றிய அறிமுகத்திற்கு வருகிறார்.
வளரிளம் பருவத்தில் அபரிமிதமான ஹார்மோன்கள் சுரப்பு காரணமாக உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான வளர்ச்சிகள் துரிதமாக ஏற்படுகின்றன.
உடலை பொருத்தவரை கிடுகிடுவென உயரமாக வளர்ந்து செல்போன் டவருக்கு சவால் விடுவது. குரலில் உள்ள குழந்தைத் தனம் மறைந்து கரகரப்பாக மாறுவது. புதிய இடங்களில் ரோம வளர்ச்சி, எலும்பு உறுதி அடைவது, தசைகள் வலுவடைவது மற்றும் பாலுறுப்பு வளர்ச்சி என நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்த விஷயங்கள் தான்.
உளவியல் வளர்ச்சி என்பதை பெரும்பாலான பெற்றோருக்கு சரியாக அடையாளம் காண முடிவதில்லை.
சுய அடையாளம் குறித்த தேடல். தனது உண்மையான அடையாளம் குறித்த தெளிவு இல்லாமல் எந்த மாதிரியான அடையாளத்தை கைக்கொண்டால் கெத்தாக இருக்குமோ அதை தன் அடையாளமாக கருதிக் கொள்வது. பின் அது போல இருக்க முனைவது என்கிற குழப்பமான செயல்பாடுகள் பெரும்பாலான பதின்பருத்தினரிடம் காணலாம்.
அம்மாவின் முந்தானையை பிடித்துக் கொண்டே திரிந்த பிள்ளைகள் அவர்களை விடுத்து தனியே இருக்க முனைவார்கள். அவர்கள் தனியே செய்ய முனையும் செயல்பாடுகளால் சிக்கல்களையும் இழுத்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறான தருணங்களில் அந்த சிக்கல்களை குறித்து பேசும் அளவுக்கான இடத்தை பெற்றோர் அளிக்க வேண்டியது அவசியம்.
எதெற்கெடுத்தாலும் எதிர் கேள்வி, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது. அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறுவது போன்றவையும் இவர்களிடத்தில் காணமுடியும்.
இளம் கன்று பயமறியாது என்பதற்கு இணங்க மிதமிஞ்சிய ஆற்றலும் எதையும் செய்துவிடும் துணிச்சலும் என பெற்றோருக்கு பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களது ஆற்றலையும் துணிச்சலையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். எனவே வளரிளம் பருவத்தினர் அவர்களுக்கு ஆர்வமுள்ள கலை செயல்பாடுகளிலோ அல்லது விளையாட்டுகளிலோ ஈடுபடுவது நலம் பயக்கும்.
அவர்களது செயல்பாடுகளில் கவனம் ஈர்க்கும் தன்மை இருக்கும். முக்கியமாக எதிர்பாலினத்தவரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே சில காரியங்களை செய்வார்கள்.
எதிர்பாலினத்தவர் மீதான ரகசிய கிளர்ச்சி ஏற்படுவது இயல்பானது. அந்த ஈர்ப்பினை காதல் என்று தவறாக அர்த்தப் படுத்திக் கொள்ளும் போக்கு காணப்படும்.
பின்வரும் இதர குறிப்பிடத்தக்க அம்சங்களையும் காணமுடியும்.
மூளை வளர்ச்சி முழுமையடையும் பருவம். உளவியல் பிரச்சனைகள், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவை மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன.
அதே வேளையில் ஆதரவான நம்பிக்கைக்குரிய நேர்மறையான சமத்துவமான சமூக உறவாடல் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.
இந்த பருவத்தினர் எதையும் வேகமாக கற்றுக் கொள்கின்றனர். அதே போல் புதிய இடங்களில் தங்களை எளிதாக பொருத்திக் கொள்ள ஏதுவாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர்.
ஏமாற்றம், தோல்வி இவற்றில் இருந்து எளிதில் மீண்டு எழும் பருவம். எனவே தோல்வி, ஏமாற்றம் போன்ற அனுபவங்களை பெற்று உணர ஏதுவாக அவர்களை தனித்தியங்க அனுமதிக்க வேண்டும்.
அதேவேளையில் பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லி தீர்வுகளுக்கு உதவி கோரும் உரையாடல் வெளியை பெற்றோர் குழந்தைகளுக்கு தரவேண்டியது அவசியம்.
வளரிளம் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கும் புறக்காரணிகள்.
நள்ளிரவில் அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பது. காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை இவர்களிடம் பரவலாக காணலாம். சரிவிகித உணவு உண்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை. இதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
அதீத திரை நேரம் – டிவி, கம்ப்யுட்டர் மற்றும் மொபைல் என மாறி மாறி பார்த்துக் கொண்டு இருப்பது. இந்த விஷயத்தில் தற்போதைய பெற்றோர் ஒரு கட்டுப் பாட்டை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் எடுத்துக் கூறி அவர்களிடம் கலந்தாலோசித்து ஒரு நேர அட்டவணையை உருவாக்கி அதனை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களில் உள்ள நிகழ்வுகள். அடொலெசன்ட் வெப் சீரிஸ் பார்த்தவர்களுக்கு தெரியும். வளரிளம் பருவத்தினரின் ஆளுமையில் சமூக வலைதளங்கள் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே இவர்களின் நடவடிக்கைகள் உணர்வெழுச்சிகள் இவற்றை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
இவர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள், விருப்பு, வெறுப்பு முதலானவை தொடர்ச்சியாக மாறிக் கொண்டே வரும். அதனால் இவர்களின் நடத்தைகளை கணிப்பது சவாலாக இருக்கும்.
அனைத்தையும் பரிசோதித்து பார்த்துவிட வேண்டும் என்கிற குறுகுறுப்பு காரணமாக எளிதில் போதைப் பொருட்கள் வசம் சென்றுவிட வாய்ப்புகள் உண்டு. இதில் வயதொத்த நண்பர்களின் தாக்கம் இருக்கும்.
வளரிளம் பருவத்தினரை வெற்றிகரமாக வழிநடத்த பின்வரும் விஷயங்களை செய்யலாம் என்று டாக்டர் சிவபாலன் அவர்கள் கூறியுள்ளார்.
1. அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களையே செய்ய விடுங்கள்.
2. உறவினர்கள் மற்றும் சக மனிதர்களுடன் உரையாடும் திறனை அனுபவப் பூர்வமாக பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.
3. பெற்றோர்களுக்கு இடையே உள்ள ஆரோக்கியமான உறவு குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பெற்றோரின் மன அழுத்தங்கள் குழந்தைகளை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4. வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். பாடங்களைத் தாண்டி இதர விஷயங்களை வாசித்து அறிந்து கொள்வது அவர்களின் மொழியாளுமையை வளர்ப்பதோடு புத்திக் கூர்மையையும் வளர்க்கிறது.
நூலில் மருத்துவர் சிவபாலன் அவர்கள் கூறிய விஷயங்களில் சில குறிப்பிடத்தக்க பகுதிகளை மட்டுமே எடுத்துக் கூறி உள்ளேன். நூலில் இன்னும் ஏராளமான அரிய பயனுள்ள தகவல்கள் உள்ளன. பெற்றோரும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய நூல்.
Wednesday, December 3, 2025
ஸ்கூட்டர் சைக்கிள் டயரீஸ்"
சேகுவேரா வின் வாழ்க்கை வரலாற்று நூல் "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" அதற்கு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று இந்த பெயர் வைத்தேன்.
எழுதி ரொம்ப நாள் ஆச்சே ன்னு ஒரு "கற்பனை" சம்பவத்தை முயற்சித்தேன்.
டிஸ்கி: "பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையேனும் குறிப்பிடுவதாக எனது மாணவர்களோ நண்பர்களோ உணர்ந்தால் அது முற்றிலும் தற்செயலே"
"ஸ்கூட்டர் சைக்கிள் டயரீஸ்"
ஒரு ஊர்ல ஒரு மேல்நிலைப் பள்ளி இருந்தது. அங்க மிஸ்டர் எக்ஸ் னு ஒரு தலைமையாசிரியர் இருந்தார். சிலருக்கு செலக்டிவ் அம்னீசியா மாதிரி அவருக்கு செலக்டிவ் ஞாபக சக்தி இருந்துச்சு.
அதென்ன செலக்டிவ் ஞாபக சக்தி?
அதொன்னுமில்ல, சில விஷயங்கள் அபாரமான நுணுக்கங்களுடன் ஞாபகத்தில் இருக்கும். பல விஷயங்கள் என்ன யோசித்தாலும் ஞாபகத்திற்கு வராது.
“சார், உங்க போன் நம்பர் சொல்லுங்க சார்?“
“9…8….56….76… , இருங்க சார் பார்த்துட்டு சொல்றேன்?“
“பிஎஸ் சார் இங்க வாங்க“
“சார் நான் ஜிஎஸ்”
இந்த லட்சணத்தில் தான் இருக்கும் அவரது ஞாபக சக்தி.
அப்புறம் ஒரு நாள் பள்ளி மைதானத்தில் நடந்த உரையாடலில் எனக்கு மயக்கமே வந்து விட்டது.
“ஏம்மா, ராதிகா எங்கம்மா கொஸ்டின் பேப்பர் காசு இருவது ரூவா இன்னும் கொடுக்காம இருக்க!!“
“கொடுத்துடறன் சார்”
“எப்ப கொடுப்ப, ஆகஸ்ட் மாசம் முப்பது ரூவா கொடுத்த இருவது ரூவாக்கு ரெண்டு மாசமா இழுத்து அடிக்கிற. ஒண்ணன் ராஜேஷ் ஆகஸ்ட் மாசமே கொடுத்துட்டான் பாரு”
என்ற துல்லிய தாக்குதலைக் கண்டு துள்ளி குதித்து விட்டேன். இத்தனைக்கும் அந்த பள்ளியில் அப்போது 700+ மாணவர்கள்.
அவர்கிட்ட ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்கிட்டா என்னோட பேர ரிட்டையர்மெண்டுக்கு பிறகும் ஞாபகம் வச்சிக்குவார்னு நினைக்கிறேன். அதுவே திருப்பி கொடுக்காம விட்டா அடுத்த ஏழு ஜென்மங்களிலும் நினைவில் வைத்திருப்பார். இல்லன்னா அவரோட “ஹார்ட் டிஸ்க்கில்“ நம்ம பேரு நிச்சயமா இடம் பிடிக்காது.
இப்படியாக இருந்த அந்த ஊர் தலைமையாசிரியர் எக்ஸ் வசம் ஒரு பழைய்ய்ய ஸ்கூட்டர் ஒன்று இருந்தது. பெட்ரோல் போட்டா எஞ்சின் வேலை செய்யும் அம்புட்டு தான். ஆஜானுபாகுவான அவரை சுமந்து கொண்டு அந்த வண்டி ஓடுவதே அதிசயம் தான்.
அந்த வண்டியை பார்க்கும் போது தான் “உழைத்து உழைத்து ஓடாகிவிட்டேன்“ என்ற சொலவடையின் அர்த்தமும் ஆழமும் எனக்கு பிடிபட்டது.
அந்த வண்டியை அவர் ஸ்டார்ட் பண்ணும் அழகில் சர்க்கஸ் ல வித்தை காட்டும் வீரர்களே புறமுதுகிட்டு ஓட வேண்டி இருக்கும்.
பள்ளியின் கொடிக்கம்பம் அருகே மண் சற்று மேடாக இருக்கும். வண்டியை காதைப் பிடித்து தர தர வென்று இழுத்து வந்து (அவர் உயரத்திற்கு ஸ்கூட்டரை தள்ளுவது அப்படித்தான் இருக்கும்) அந்த மேட்டில் பள்ளத்தை பார்த்த வண்ணம் நிறுத்துவார். வண்டி ஏதோ சூசைட் பாய்ண்ட்டில் நிற்பது போல இருக்கும்.
வண்டியில் உக்காந்து காலால் உந்தி தள்ளுவார். அது புவியீர்ப்பு சக்தியை கொண்டே காம்பவுண்ட் வரை சென்றுவிடும். அந்த இடத்தில் ஆக்சிலேட்டரை ஒரு சொடுக்கு சொடுக்குவார். வண்டி விர்ரென்று கிளம்பிவிடும்.
வழியில் எங்கானும் வண்டி நின்றுவிட்டால் என்ன செய்வார் என்று அடிக்கடி விசனப்பட்டுக் கொள்வேன்.
இப்படிப் பட்ட தலைமையாசிரியருக்கு ஒரு சோதனை. அறையில் தொலைபேசி (அப்போது செல்பேசி வந்த புதிது. தொலைபேசியும் பயன்பாட்டில் இருந்தது) மணி அடித்தது.
“ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…“ என்று முணுமுணுத்தபடி தொலைபேசியை எடுத்தார். அவர் எதிர்பார்த்தது போல இல்லத்தரசியிடம் வந்திருந்த அழைப்பு இல்லை. ஏதோ ஒரு அதிமுக்கிய தபாலுக்கு பதில் அளிக்க மறந்திருப்பார் போல. உரிய தபாலை மாலைக்குள் டவுனில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மிகுந்த 'அன்போடு' உயரதிகாரி பேசியுள்ளார்.
போர்க்கால அடிப்படையில் தபாலை எல்லாம் ரெடி பண்ணிவிட்டார். ஆனால் டவுனுக்கு அனுப்ப ஆள் தேடினார்.
அந்த கிராமத்துக்கு அடுத்த மினி பஸ் வந்த பிறகு சென்றால் டவுனில் ஆபீஸ் மூடிவிடுவார்கள்.
3 கிமீ தொலைவில் உள்ள மெயின் ரோட்டுக்கு சென்றால் அடிக்கடி பேருந்து உண்டு.
பிஎஸ் சார் தான் தொலைவில் இருந்து பேருந்தில் வந்து செல்கிறார். அவரிடம் கொடுத்தால் அலுவலகத்தில் தபாலை ஒப்படைத்துவிட்டு சீக்கிரமே வீட்டுக்கும் சென்றுவிடுவார்.
அவரை மெயின் ரோட்டில் கொண்டுபோய் விட வேண்டுமே!!
“ஜிஎஸ் சார்!!“
“சார், நான் பிஎஸ் சார்!!” என்று புன்முறுவலுடன் வந்தார்.
இன்று அலுவலகம் செல்ல ஜாக்பாட் அடித்து விட்டது. சீக்கிரமாக வீட்டுக்கு போய்விடலாம் என்று உற்சாகம் ஆகிவிட்டார்.
“சார் என் வண்டியை எடுத்துக்கிட்டு…”
“என்ன, உங்க வண்டியா?!“ என்று பீதி அடைந்தார்.
“சார் நானே ஸ்டார்ட் பண்ணி தரேன் சார்“
சரி சீக்கிரமா வீட்டுக்கு போகணும்னா சில பல சிரமங்களை சகிச்சிக்கிட்டுத்தான் ஆகணும் என்று தயார் ஆகிவிட்டார்.
“சரி சார் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொடுங்க“
“நீங்க வண்டியை கூட்டு ரோட்டில் நிறுத்திவிட்டு கிளம்புங்க நம்ம வண்டிய யாரும் எடுக்க மாட்டாங்க, நான் கேஆர் சார் கூட சாயங்காலம் வந்து எடுத்துகிட்டு வீட்டுக்கு போய்க்குவேன்”
“நான் நாம வழக்கமா டீ சாப்பிடுற கடையிலேயே நிறுத்திவிட்டு கடைகாரரிடம் சொல்லிட்டே போறேன்“ என்றார்.
கடமை உணர்ச்சியில் “கன்“ மாதிரி
இருக்கியேப்பா என்று கண் கலங்கிவிட்டார் மிஸ்டர் எக்ஸ்.
மிஸ்டர் எக்ஸ் வழக்கம் போல வண்டியின் காதை பிடித்து இழுத்து வந்தார். ஒரே உந்தில் காம்பவுண்ட் போய்விட்டார். பிஎஸ் மூச்சு வாங்க பின்னாடியே ஓடினார்.
“அப்படியே ஆக்சிலேட்டரை விடாம என்கிட்ட கொடுங்க“ என்று வண்டியில் அமர்ந்து கொண்டு கிளப்பினார். வண்டி திணறிய படி கிளம்பியது. என்ன என் வெயிட்டுக்கே திணறுது என்று ஆச்சரியப் பட்டார்.
தபால் பிரச்சனை சுளுவாக தீர்ந்து போனதில் திருப்திகரமாக தனது நாற்காலியில் சாய்ந்தார்.
பிஎஸ் போன ஐந்தாவது நிமிடத்தில் அவரிடம் இருந்து செல்போன் அழைப்பு. “சார் என்ன பெட்ரோல் இல்லையா வண்டி நின்னு போச்சே!”
“அட ஆமா சார் காலையிலேயே வண்டிய சாச்சி போட்டு ஸ்டார்ட் பண்ணினேன்“
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க“
“பிஎஸ் சார் ஒண்ணும் கவலைப் படாதீங்க, அப்படியே பெட்ரோல் டேங்க் மூடிய கழட்டி வாய் வச்சி நல்லா ஊதுங்க. அதுக்கே நாளு கிலோமீட்டர் ஓடும்“
“என்னாது வாய வச்சி ஊதணுமா?“
முதலில் தேர்ந்த நாதஸ்வர வித்வான் கணக்காக ஊதினார். அப்படியே காலால் உந்திக் கொண்டே ஓடி திருகி பார்த்தார். ஒரு சிறு முனகல் கூட இல்லை.
அப்புறம் ஒரு சாக்ஸபோன் வித்வான் கணக்காக ஊதி ஓடி உந்தியும் வேலைக்கு ஆகவில்லை.
உலைக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதை ஆகிப்போச்சே என்று நொந்து நூலாகிப் போனார்.
“சார் என்ன பண்ணினாலும் ஸ்டார்ட் ஆக வில்லை”
“இன்னும் அர கிலோ மீட்டர் தான் வரும், சரி பிஸ் வண்டியை ஓரமா நிறுத்தி ஸ்டேண்ட் போட்டு விட்டு கோவிச்சுக்காம நடந்து போயிடுங்க“
ஆனாலும் மனசு கேட்காமல் வண்டியை தள்ளிக் கொண்டு அவர் ஏற்கனவே சொன்ன தேனீர் கடையில் விட்டுவிட்டு கிளம்பி விட்டார்.
அடுத்த ஒரு வாரத்திற்கு ஸ்டாஃப் ரூம் அரட்டையில் பிஎஸ் தான் கன்டென்ட் ஆகிப் போனார்.
ஆனாலும் அந்த “உலைக்கு பயந்து….“ சொலவடையை நினைத்து நினைத்து சிரித்து மாய்ந்து போனோம்.
இந்த உரையாடல் வராண்டாவில் நடந்து போன மிஸ்டர் எக்ஸ் காதில் விழவே நேரடியாக வந்து ஸ்டாஃப் ரூமில் அமர்ந்துவிட்டார். எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
“அப்படித்தான் ஒரு முறை மெட்ராஸ் கிளம்பிக்கிட்டு இருந்தேன். வீட்டில் இருந்து வந்து ரோட்டு ஓரத்தில் நண்பர் ஒருவருடன் வண்டியை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தேன். ஏதோ நினைப்பில் அந்த இடத்திலேயே வண்டியை ஸ்டேண்டு போட்டு நிறுத்திவிட்டு ஓடிப் போய் பஸ் ஏறிட்டேன்“
“சனி ஞாயிறு ரெண்டு நாள் மெட்ராஸ்ல வேலை. திங்க கிழமை விடியற்காலை பஸ்ல இருந்து இறங்கி பாக்குறேன் வண்டி ரோட்டிலேயே நான் நிறுத்தியது போலவே நின்று கொண்டு இருக்கு“
“அப்போது தான் நான் வெள்ளி இரவு வண்டியை ரோட்டில் அனாதையா தவிக்க விட்டுச் சென்றது ஞாபகம் வந்தது“
“அதனால நம்ப வண்டிய எவனும் எடுக்க மாட்டாங்க“
அந்த வண்டி ரிட்டயர்மெண்ட் வரையில் அவருக்காக உழைத்து ஓடாக தேய்ந்த வண்ணம் இருந்தது.
ரிட்டயர் ஆன பிறகு ரிட்டயர்மெண்ட் பணத்தில் ஒரு புது டிவிஎஸ் எக்ஸெல் வாங்கினார்.
பிரிதொரு நாள் நாங்க டவுனில் அவரை எதேச்சையாக பார்த்த போது “சார் அந்த வண்டிக்கு விடிவு காலம் வந்து விட்டது போல. புது வண்டி சூப்பர் சார்“ என்று கலாய்த்தோம்.
“சார் வண்டி புதுசு நேத்து தான் எடுத்தேன் நல்லா இருக்கா?”
“செம்மயா இருக்கு சார்”
“என்ன விஷயமா வந்தீங்க சார்?“
“சும்மா ஒரு கல்யாணம் சார்”
அன்று மதியப் பொழுதில் கடைத்தெரு சென்றபோது மிகுந்த சோகமாக மிஸ்டர் எக்ஸ் நின்று கொண்டு இருந்தார்.
“போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வந்தேன் சார்“
“ஏன் சார் என்ன ஆச்சு?”
“காலையில் கல்யாணத்துக்கு வந்தப்போ மண்டபத்துக்கு வெளிய ரோட்டு ஓரமா புது வண்டிய நிறுத்திவிட்டு பழக்க தோசத்தில சாவிய எடுக்காம போய்ட்டேன். வந்து பாத்தா வண்டிய காணோம்“ என்றார் விசனத்தோடு.
Subscribe to:
Comments (Atom)
சிறை - பட விமர்சனம்
சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...



