Monday, July 13, 2020

அன்பென்ற ஆயுதம்


அன்பென்ற ஆயுதம்

     ”டேய் இந்த லாக்டவுன்ல வாத்தியாருவல்லாம் சும்மா தானே இருக்கானுவ, அவனுங்களுக்கு இப்போ எதுக்குடா சம்பளம் கொடுக்குறாய்ங்க?“- இது குப்பன்.
     ”டேய் அவனுங்க எப்போ தாண்டா வேலை செஞ்சிருக்கானுவ, சும்மா சாக்பீஸ பிடிச்சி அப்படியும் இப்படியும் எழுதிட்டு பரிச்சைன்னா செவப்பு இங்க்கால ரெண்டு கோடு போடுறானுவ. அவனுங்களுக்கு இப்போ மட்டும் இல்ல எப்பவுமே கொடுக்குற சம்பளம் வேஸ்ட்டு டா” – இது சுப்பன்.
     அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த பெரும்பாலான மிஸ்டர் பொதுஜனத்தின் மதிப்பீடு தான் மேலே உள்ளது.
     “டேய் இந்த மருதமுத்து வாத்தியார தெரியுமா உனக்கு? நமக்கு கூட கணக்கு நடத்துனாரே!” என்று ஏதோ சொல்ல வந்தான் ரவி.
     “ஏய் அவரு வாத்தியாரே இல்லடா” என்று இடை மறித்தான் அன்பு.
     சிங்கப்பூரில் பெரிய கப்பல்கட்டும் நிறுவனத்தில் சீனியர் மெக்கானிக்காக ஆறு இலக்க சம்பளம் பெறும் அன்பு என்கிற அன்புச்செல்வன் விடுமுறைக்காக தாயகம் வந்திருந்தான். மேலே கண்டது அவனுடைய பள்ளிகால சிநேகிதன் ரவிச்சந்திரனுடனான உரையாடல் தான் அது. ரவி மருதமுத்து வாத்தியாரை நினைவு படுத்திவிட்டான். எப்போது அவரை நினைத்தாலும் அந்த பள்ளி கால சம்பவம் நினைவுக்கு வந்து விடும். அப்புறம் தூக்கம் கெட்டுவிடும். மீண்டும் அவனது நினைவுகள் அந்த நாளை நாடிச் சென்றது.
     அன்று அரையாண்டு பரிட்சை விடைத்தாட்கள் வழங்கிக் கொண்டு இருந்தார் மருதமுத்து.
     “டேய் என்னடா பரிட்சை எழுதி இருக்கீங்க? ஒரு பயலும் அவனுக்கான உண்மையான தகுதி என்னவோ அதை எட்டவே இல்லை. எல்லோரையும் நூற்றுக்கு நூறு வாங்கவா சொல்றேன். அட்லீஸ்ட் பாசாவது செய்ய க்கூடாதா?” என்றபடி அடுக்கி வைக்கப் பட்ட விடைத்தாட்களை நீளவாக்கில் மடித்து சணல் போட்டுக் கட்டியிருந்த பண்டலை பிரித்தார். மேசையில் பிரம்பு வீற்றிருந்தது.
     ”பத்தாயிரத்து இருநூற்றி ஒன்று, வாடா, ஆதி  ஒரு கிராஃப் ஜாமண்ட்ரி கூட போடமாட்டியாடா. ஒனக்கு இந்த இருபது மார்க்க போடறதுக்குள்ள எனக்கு வேர்த்து வடிஞ்சிடுச்சி”
     “சார், என்ன அடிங்க சார்” என்றபடி பிரம்பை எடுத்த சார் கையில் கொடுத்து கையை நீட்டினான். வகுப்பே கொள்ளென்று சிரித்தது.
     “ஒன்ன அடிக்கறதால இந்த இருபது இருபத்தி அஞ்சா ஆகும்னா கூட அடிக்கலாம், உனக்கு வி.எம்.எஸ்.எஸ் எதுவுமே கிடையாது போடா” என்று பேப்பரை விசிறியடித்தார். வகுப்புக்கே அவர் கூறியதற்கான அப்ரிவேஷன் “வெட்கம் மானம் சூடு சொரணை என்று தெரியும் என்பதால் மறுபடியும் சிரித்து அடங்கினர்.
     “இருநூற்றி ரெண்டு, அன்பு, நீ வாடா என்ன நீ ஒரு ஐம்பதையாவது தொடுவன்னு பாத்தா,நீ சரியா முப்பத்தி அஞ்சு வாங்கி இருக்கே. வா கைய நீட்டு, அடுத்த முறை நிச்சயமா ஒரு எண்பதாவது எடுக்கணும் எடுப்பியா, எடுப்பியா” என்று இரண்டு கைகளிலும் பட்டையாக இழுத்தார்.
     இரண்டாவது அடியை எதிர் பார்க்காத காரணத்தினால் சரியாக வாங்காமல் கட்டை விரல் கணுவில் விழுந்தது. பயல் துடித்து போனான். எதிர் பாராத இந்த தண்டனையால் கோபமாகிவிட்டான்.
     உடனடியாக டோட்டல் சரிபார்த்தான். பேஜ்வைஸ் டோட்டலுக்கு போட்டு வைத்த இரண்டையும் சேர்த்து கூட்டிக் கொண்டு சென்று முறையிட்டான். ஏற்கனவே இவன் மிகச் சரியாக பாஸ் மார்க் மட்டுமே எடுத்ததால் கோபத்தில் இருந்த மருதமுத்து சார் மறுபடியும் முதுகில் ஒன்று வைத்து அவனை வெறும் கையோடு அனுப்பினார்.
     நூற்றுக்கு நூறு எடுத்தால் மருதமுத்து சார் ஹீரோ பேனா பரிசு வழங்குவார். அவரிடம் ஹீரோ பேனா பரிசு பெற்றோர் எல்லாம் பெரிய ஆளாகி விட்டார்கள் என்கிற பேச்சு பழைய மாணவர்கள் மத்தியில் உண்டு. எனவே ஒவ்வொரு ஆண்டும் சாரிடம் ஹீரோ பேனா வாங்குவதை இலக்காக வைத்து படிப்பார்கள். படிப்பில் கெட்டிக்கார மாணவர்களில் ஒருத்தியான செல்வி நூற்றுக்கு நூறு வாங்கி இருந்தாள். அவளுக்கு ஒரு ஹீரோ பேனா பரிசளித்தார். மாணவர்கள் கைதட்டி பாராட்டினர்.
     ஒவ்வொருத்தர் பேப்பரையும் ஆய்வு செய்து பாராட்டி திட்டி எச்சரித்து வழங்கி பின்னர் திருத்தங்களை செய்து முடிக்கவும் அந்த பாடவேளைக்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
     என்னதான் வகுப்பறைகள் அழகாக இருந்தாலும் மதியத்துக்கு பின்னர் பள்ளிக்கு முன்னால் கம்பீரமாக நிற்கும் நேச்சுரல் ஏசியான இந்த நான்கு புங்க மரங்களின் நிழலில் வகுப்புகளை வைத்துக் கொள்ள ஆசிரியர்களுக்குள் பெரும் போட்டி நிலவும்.
     “டேய் இந்த மரங்கள நான் வேலைக்குச் சேர்ந்த வருஷத்தில வச்சோம்டா, எவ்வளவு ஜில்லுன்னு இப்போ நிழல் கொடுக்குது பாத்தீங்களா? அதனால ஒவ்வொருத்தனும் உங்க கொல்ல, வீடு, வீதி எங்கயாவது மரத்தை நட்டு வளக்கணும். பின்னாடி அது நிழல் கொடுக்குறப்ப உங்களுக்கே பெருமையா இருக்கும்” என்ற டயலாக்கை இதுவரை ஆயிரம் முறையாவது பசங்களிடம் சொல்லி இருப்பார்.
     “டேய் கிருபா, உங்க எய்ட்த் பி கிளாஸ் எல்லோரும் பைய கொண்டு வந்து புங்க மரத்துக்கு அடியில போட்டுட்டு இண்டெர்வெல் போங்க. அப்புறம் வேற யாராவது வந்து புடிச்சிக்குவாங்க” என்று ஒரு மரத்தடிக்கு துண்டு போட்டு வைத்தார் மருதமுத்து.
     நான்கு புங்க மரத்தடிகளும் அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடும் சினிமா தியேட்டர் கணக்காக இருந்தது. சற்றேரக்குறைய பாதி பள்ளிக் கூடமே அங்கே குழுமியிருந்து.
     எட்டாம் வகுப்புக்குக ஆங்கிலப் பாடம் எடுப்பார் மருதமுத்து சார். எப்போதும் மதியவேளைகளில் கதைபேசுவார். அதனுள் ஆயிரம் நீதிக் கருத்துகள் பொதிந்து இருக்கும். வகுப்பே சுவாரசியமாக வாயைப் பிளந்து கொண்டு சுவாரசியமாக கதை கேட்டுக் கொண்டு இருந்தது.
அந்த நேரம் பார்த்து தலைமுடியெல்லாம் கலைந்து அழுதபடி ஓடிவந்தாள் காலையில் பேனா பரிசு வாங்கிய செல்வி.
     “என்னம்மா ஆச்சு?”
     “என்னொட மேத்ஸ் நோட்ட இந்த அன்பு பய அக்குச்சுக்கா கிழிச்சி வச்சிட்டான் சார், என்னன்னு கேட்டதுக்கு தலையில கொட்டிட்டான் சார். வாடி போடின்னு வேற திட்டுறான் சார்” என்று சொல்லி தேம்பித் தேம்பி அழுதாள்.
     ”டேய் கிருபா, ஓடிப் போய் அந்த அன்பு பயல கூட்டிக்கிட்டு வாடா” என்றபடி முழுக்கை சட்டை பட்டனை கழட்டி சுருட்டி விட்டுக் கொண்டார்.
     “டேய் அன்பு அண்ணன் இன்னைக்கு செம்மயா வாங்கப் போறாங்கடோய்” என்று எட்டாம் வகுப்பு மாணவர்கள் கிசுகிசுத்தார்கள்.
     அன்பு கொஞ்சம் திமிறாகவே வந்து அலட்சியமாக பார்த்தபடி நின்றான்.
     “என்னடா செல்விய அடிச்சியா?, அவ நோட்ட கிழிச்சியா?”
     “அடிச்சது உண்ம ஆனா நோட்ட நான் கிழிக்கல” என்று திமிறாக பதில் சொல்லி மருதமுத்துவின் கோபத்தை ஏற்றினான்.
     “என்னடா நான் கேக்குறன் நீ திமிறா பதில் சொல்ற” என்று வெடுக்கென்று எழுந்து அவனை முடியை பிடித்து இழுத்து முதுகில் விலாசிவிட்டார்.
     “சார், செல்வி நோட்ட கிழிச்சது அன்பு இல்ல சார் லெட்சுமி சார்” என்று ராஜேஷ் ஓடிவந்த போது அன்புக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்து. இந்த கலேபரத்தில் நான்கு வகுப்புகளும் அன்பை பரிதாபமாக பார்க்க அவனோ அவமானத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
     “என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடிக்கமாட்டீங்களா” என்று சுல்லென்று கேட்டு விட்டுச் சென்றுவிட்டான்.
     “டேய் என்னடா, மேத்ஸ் சாரையே எதுத்து பேசிட்டாங்க அந்த அண்ணன்?!” என்று மறுபடியும் மருதமுத்து சார் காதுபடவே கிசுகிசுத்தனர்.
     மருதமுத்து சார் இந்த சிச்சுவேஷனை இதுவரை எதிர் கொண்டது கிடையாது. தப்பு செய்யாத ஒருத்தனை தண்டித்து விட்டோமே என்று மிகுந்த குற்ற உணர்வுக்கு ஆளாகியிருந்தார். அவனை கூப்பிட்டு சமாதானப் படுத்துவதா இல்லை அப்படியே விட்டுவிடுவதா என்கிற குழப்பத்தில் இருந்தார். சரி போவட்டும் நாளைக்கு கூப்பிட்டு பேசிக்குவோம் என்று அமைதியானார். ஆனாலும் மனது குற்றவுணர்ச்சியில் கொந்தளித்தவண்ணம் இருந்தது.
     அறிவியல் ஆசிரியர் அறிவழகனும் மருதமுத்துவும் நண்பர்கள். இருவரும் வசிப்பதும் பக்கத்து டவுன்தான், எனவே இருவரும் ஒரே வண்டியில் வருவதுதான் வழக்கம். ஒரு வாரம் இவர் வண்டி எனில் மறுவாரம் அவர் வண்டி.
     “சார் கௌம்பலாமா?“ என்ற படி பையோடு வந்து விட்டார்.
     “சார் வாங்க போலாம்” என்ற படி தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார். இந்த வாரம் அவர் வண்டி என்பதால் அவரே ஒட்டினார்.
     வண்டியை எடுத்துக் கொண்டு காம்பவுண்டைத் தாண்டி வந்து நிறுத்தி அறிவழகனை ஏற்றிக் கொண்டார்.
     “கேன“ என்று தொடங்கும் கெட்ட வார்த்தையில் தொடங்கி சில கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்டி விட்டு ”என்னடா என்னையே பொழுதனிக்கும் அடிப்பியா?” எனக் கூறிவிட்டு ஓடிவிட்டான் அன்பு.
அறிவியல் ஆசிரியர் அவனை ஓடிப் பிடிக்க எத்தனித்தார். ஆனால் மருதமுத்து அவரை தடுத்து, ”வேண்டாம் விடுங்க சார், சீன் கிரியேட் பண்ண வேண்டாம்” என்று கூறிவிட்டார்.   
“என்னடா சார இப்படி வஞ்சிபுட்ட, அவரு நம்ம சாருடா”
“போடா தேவையில்லாம என்னையே அடிக்கிறான் அந்தாளு”
“ச்சீ போடா அவரப் போயி டா போட்டு பேசுற, அவரு நம்மகிட்ட எவ்வளவு ஃபிரண்ட்லியா நடந்துகிறாரு. அவரு ரெண்டாவது அடி அடிச்சப்ப நீ கைய இழுத்துக்கிட்ட அதனால கட்டை விரல்ல விழுந்துடுச்சி”
“ஆனா, செல்விய குட்டிட்டேன்னு அவ்வளவு பேரு முன்னால அடிச்சிட்டாருல்ல“
     “டேய் அதுக்குன்னு அவர கெட்ட வார்த்தையில திட்டுவியா? போடா”
அன்புவுக்கு தான் தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வு லேசாக மேலெழுந்தது. அடுத்த நாள் அந்த குற்றவுணர்விலும் பயத்திலும் பையோடு கிளம்பி கொல்லைப்புறம் சென்று விட்டு சரியாக பள்ளி விடும் நேரம் வீடு திரும்பிவிட்டான்.
பள்ளியில் நுழைந்தவுடனே மருதமுத்து அன்பைத் தேடினார். ப்ரேயர் டைமிலும் அந்த வகுப்பு நிற்கும் வரிசையை கண்களால் துழாவினார். காணவில்லை. ஒரு வேளை இந்த பிரச்சினையால் அவன் வரமாட்டானோ என்று பயந்தது போலவே அவன் இன்று வரவில்லை.
இந்த விஷயம் பள்ளியில் தீயாய் பரவியது. பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அறை மற்றும் அலுவலக அறை எங்கு பார்த்தாலும் அன்பு திட்டிய விஷயம் தான் தலைப்புச் செய்தியாக ஓடிக்கொண்டு இருந்தது.
“சார், அந்தப் பயலோட அப்பாவ கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க சார் அவன் டிசிய கிழிச்சிடுவோம். உங்களயே திட்டிட்டான்னா மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி பயப்படுவான்” என்று தமிழாசிரியர் ரங்கநாதன் ஆவேசமானார். ஜன்னலுக்கு வெளியே இருந்த ரமேஷ் என்கிற பத்தாவது மாணவன் இதை நின்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
“சார், அவன் சின்னப் பய சார், இந்த அடோலசன்ட் பீரியட்ல எல்லா உணர்ச்சியும் ரொம்ப அதிகமாத்தான் பொங்கும். நேத்து வேற அவன நான்கு முறைக்கும் மேல அடிச்சிட்டேன் வேற அதனால கொஞ்சம் அப்சட் ஆகிட்டான். திங்க கிழமை நான் பேசிக்கிறேன். இது சம்மந்தமா வேற யாரும் அவன்கிட்ட எதுவும் கேக்காதீங்க சரியா?” என்று கறாராக கூறிவிட்டார்.
மருதமுத்து சாருக்கும் மனசு பாரமாகவே இருந்தது. இந்தப் பிரச்சனையால் அவன் வராமல் போய்விடுவானோ என்று பயந்தார். திங்கள் கிழமை வரவில்லை என்றால் வீட்டுக்கேச் சென்று அழைத்து வருவது என்று தீர்மானித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்புவின் நண்பன் ரமேஷ் அவனை கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றிருந்தான். பொங்கல் சீசன் தொடங்கியிருந்தது. செங்கரும்பை கொல்லையிலேயே வெட்டிச் சாப்பிடலாம் என்ற ஆசைக்காட்டி அழைத்துச் சென்றிருந்தான்.
“டேய் மேத்ஸ் சார் ஒன்னய வெள்ளிக் கிழமை கேட்டுக்கிட்டே இருந்தாருடா, பசங்க எல்லாம் நீ சார கெட்ட வார்த்தையில வஞ்சதால ஒன்ன ஸ்கூல விட்டு நீக்கப் போறாங்கன்னு பேசிக்கிறானுங்கடா. சாருங்க கூட அவங்க ரூம்ல உனக்கு டிசி கொடுக்கணும்னு பேசிக்கிட்டு இருந்தத நானே பார்த்தேன்டா”
“அதெல்லாம் பண்ணமாட்டாங்கடா, நான் நாளைக்கு ஸ்கூல் வருவேன்”
“டேய் வந்தீன்னு வை மேத்ஸ் சார் உன் தோல உரிச்சிடுவார், வெள்ளிக் கிழமையே உன்ன வெறித்தனமா கேட்டுக் கிட்டே இருந்தாருன்னு பசங்க சொன்னானுங்க, அத்தோட மட்டும் இல்ல உங்க அப்பாவ அழைச்சிக்கிட்டு வரச்சொல்லி டிசிய கிழிக்கப் போறாங்க”
“திங்க கிழமை வருவேண்டா, கட்டடிச்சேன்னு தெரிஞ்சா எங்கப்பா விசாரிப்பாரு, சார கெட்ட வார்த்தையில வஞ்சேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான் என்ன கொன்னே புடுவாரு” என்றான். ரமேஷ் தூவிய பய விதை அன்புவின் மனதில் விருட்சமாய் வளர ஆரம்பித்தது.
’வஞ்சதுக்கு டிசி குடுத்துடுவாங்களா? டிசி குடுக்கறதுக்கு முன்னாடி எப்படியும் அப்பாகிட்ட சொல்லிடுவாங்க. அவரு என்ன கொன்னே போடுவாரு. என்ன பண்றதுன்னு தெரியலையே’ என்று பலவாறாக சிந்தித்தபடி இருந்தான்.
     “டேய் அன்பு சாப்பிட வாடா, என்ன ரொம்ப சிந்தனையா இருக்கற?” என்றார் அன்புவின் அம்மா.
     “புள்ள ரொம்ப நல்ல மார்க் வாங்கி இருக்காருல்ல, அதான் பப்ளிக் பரிச்சையில எப்படி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கறதுன்னு யோசனையில இருக்காரு”
’இவரு பேசறத பார்த்தா நாளைக்கு விஷயம் தெரிஞசதும் என்ன கொல்லத்தான் போறாரு’
’போனாலும் போகாட்டியும் நாளைக்கு பிரச்சனைதான்’
அப்போதுதான் அன்பு தன் எதிர்வீட்டில் இருந்த சிவக்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்த போது பணத்தை எடுத்துக் கொண்டு மெட்ராஸ் ஓடிவிட்டது நினைவுக்கு வந்தது. அப்புறம் அந்த வருச தீபாவளிக்குத்தான் வந்தான். ஜீன்ஸ் ஷூ வெல்லாம் போட்டுக்கிட்டு பந்தாவா வந்தான்.
’ஆனா, படிப்பு வீணா போகுமே’ என்கிற சிந்தனையும் வராமல் இல்லை.
’நாளைக்கு பள்ளிக்கு போவோம், அந்த ஆளு எதாவது திரும்பவும் என்கிட்ட வம்பு பண்ணுனாருன்னா கத்தியால சொருகிட்டு மெட்ராஸ் ஓடிவிட வேண்டியது தான். என் வாழ்க்கையே வீணாப் போகப் போகுது அந்த ஆள சும்மா விடலாமா?’ என்ற சிந்தனையே இரவு முழுவதும் அவனை ஆட்கொண்டது.
’என் படிப்பே பாழாக போறது அந்த ஆளால் தான் அதுக்கு பழிவாங்காம நான் ஓட மாட்டேன்’ என்று தனக்குத் தானே சத்தியம் செய்து கொண்டான்.
புத்தகப் பைக்குள் வீட்டில் இருந்த நல்ல கூர்மையான காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான். அம்மா பணம் வைக்கும் டப்பாவில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் எடுத்துக் கொண்டான். கிட்டத்தட்ட விடியற்காலைதான் உறங்கினான்.
அடுத்தநாள் பள்ளிக்கு கிளம்பும் போது வீட்டை ஒரு முறை கடைசியாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டான். திரும்பவும் இரவு நினைத்தவற்றை எல்லாம் மீளவும் நினைவுக்கு கொண்டுவந்து சற்று கோபத்தை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு நடந்தான்.
     ப்ரேயரில் நிற்கும் போதே மருதமுத்து சார் கண்களால் பத்தாம் வகுப்பு பி வரிசையை துழாவி அவனைக் கண்டு கொண்டு திருப்தி அடைந்தார்.
     ’ஆகா, இப்போதே என்னைப் பார்த்து வைத்துக் கொள்கிறாயா? நீ மட்டும் என்மேல கைய வை இன்னைக்குத்தாண்டா உனக்கு கடைசி நாள்’ என்று கறுவிக் கொண்டான் அன்பு. இப்போது அவனது பெயரில் மட்டுமே அன்பு இருந்தது.
     திங்கள் கிழமை முதல் பாடவேளையே பத்தாம் வகுப்பு பி பிரிவிற்கு கணக்கு பாடம் தான்.
     “குட்மார்னிங் சார்” என்று கோரஸ் பாடினார்கள் மாணவர்கள்.
     “வெரி குட் மார்னிங், உக்காருங்க”
     “இன்னைக்கு தொடு கோடு ரிவிஷன் பண்றோம். இந்த வகுப்புக்கு அப்புறம் ஒரு பயலுக்கும் தொடுகோடு வரையத் தெரியாம இருக்க கூடாது. அப்படி எவனாவது இருந்தீங்கன்னா அவனுக்கு டிசி தான் பாத்துக்கோங்க” என்று விளையாட்டாக எச்சரித்தார்.
     ’எனக்குத்தான் தொடுகோடு ப்ராப்ளம், அந்த ஆளு என்னய தான் ஜாடையா திட்டுறார். இன்னைக்கு என்ன தொடுகோடு வரையத் தெரியல என்பதை காரணம் காட்டி பழி வாங்கப் போறார்’ என்று எண்ணமிட்டபடி  பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஐநூறையும் புத்தகப் பையில் இருந்த கத்தியையும் தடவிப் பார்த்துக் கொண்டான்.
     “இவ்வளவு தாண்டா தொடு கோடு, சொல்லிக் கொடுத்தா கழுத கூட கப்புன்னு புடிச்சிக்கும்” என்று வரைந்து முடித்து விட்டு பசங்களுக்கு அதே மாதிரி இரண்டு படங்களுக்கான அளவுகளை எழுதிப் போட்டு பசங்களை வரையச் சொன்னார்.
     கோபம், பயம், பதட்டம் என்கிற கலவையான உணர்ச்சியில் இருந்த அன்புவிற்கு வகுப்பில் சார் நடத்தியது ஊமைப் படமாகத்தான் ஓடியது. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவன் இப்போது இருக்கும் நிலையில் ஒரு நேர்க்கோடு கூட வரைய முடியாது. வெறுமனே நோட்டை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
     பாடம் நடத்தியதில் பாதி நேரம் அன்பை பார்த்து பார்த்து தான் பேசினார் மருதமுத்து சார். அவன் ஒன்றும் வரையவில்லை என்பதையும் மிகுந்த சிந்தனை வயப் பட்டிருக்கிறான் என்பதையும் கண்டுகொண்டார்.
     “என்னடா இதக் கூட வரையத் தெரியாம உக்காந்து இருக்கே” என்று பொய்க் கோபம் காட்டியபடி அன்பை நெருங்கினார் மருதமுத்து சார்.
     அன்புவிற்கு அந்தக் கோபம் உண்மைக் கோபமாகவே தெரிந்தது. அவர் அவன் பெஞ்சை நோக்கி நெருங்கி வந்தார். அவர் தன்னை நோக்கித்தான் வருகிறார் என்பதை அறிந்து கொண்டு தனது பையில் இருக்கும் கத்தியின் கைப்பிடியில் கை வைத்துக் கொண்டான்.
     நேராக அவனது பெஞ்சுக்கு அருகில் வந்து அவனது தோள்பட்டையை அழுத்தி அவனை தள்ளி அமர வைத்துவிட்டு பெஞ்சில் அமர்ந்து அவனது பையில் கை விட்டார்.
     அன்பு பதறியபடி அவனது கையை இழுத்து விட்டு, “சார் என்னசார் வேணும்” என்றான் பதட்டத்தோடு
     “ஏன்டா இப்படி வேர்க்குது உனக்கு? ஜாமென்ட்ரி பாக்ஸ எடுடா உனக்கு நான் வரைஞ்சி தரேன்” என்று உரிமையாக கூறினார்.
     அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரியும் படி மெதுவாக தொடுகோடு வரைந்து காண்பித்தார்.
     “என் முகத்தில என்ன இருக்கு நோட்ட பாருடா”
     “சரிங்க சார்” என்றபோது கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது. குரலும் உடைந்து விட்டது.
     “அவ்வளவு தான் தொடு கோடு, ஒண்ணும் கம்ப சித்திரமில்ல புரியுதா? நான் அன்னைக்கே சொன்ன மாதிரி அடுத்த பரிட்சையில எண்பது வாங்கி காட்டணும்” என்றபடி வரைந்து முடித்து எழுந்து கொண்டார்.
     “நூறு எடுத்துக் காட்டுறேன் சார்” என்று நம்பிக்கையோடு நிமிர்ந்து அமர்ந்தான்.
     அன்றோ அதற்கு பின்போ ஒரு போதம் அந்த சம்பவம் குறித்து மருதமுத்து சார் கேட்கவே இல்லை. எதுவும் நடக்காதது போலவே அவனிடம் இன்னும் நெருக்கமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார்.
     நினைவலைகளில் இருந்து மீண்டு தற்காலத்திற்கு வந்தான்.
     “என்ன சொன்னேன் ரவி?“
     “மருதமுத்து சார, அவரு வாத்தியார் இல்லன்னு சொன்ன”
     “ஆமாண்டா, அவரு வாத்தியாரு இல்லடா, என் சாமிடா அவரு. அவரு மட்டும் என்ன சரியான நேரத்தில சரியான முறையில ஹேண்டில் செய்யாம விட்டுருந்தா என்னோட வாழ்க்கையே மாறிப் போயிருக்கும்”
     “என்னடா சொல்ற?”
     அவனிடம் முழுக்கதையையும் சொல்லி முடித்தான்.
”இது தாண்டா வாத்தியாருங்க செய்யும் வேலை. சரியான நேரத்தில் மாணவர்களை தடம் மாறாம காப்பாத்தி நெறிபடுத்துவதைவிடவா பெரிய வேலை இருக்க போகுது?”
     ”பிள்ளைங்களுக்குள்ள இருக்குற திறமைய கண்டு பிடிக்கிறது, சோர்வுற்று இருப்பவர்களுக்கு உற்சாகமளிப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது, நம்முடைய பலம் என்னவென்று நாம் அறியச் செய்வது என்று பல வேலைகளை அவர்கள் பாடப்புத்தகத்த தாண்டியும் செய்யுறாங்க”
     “ஆமாண்டா, நானும் கூட அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கேன்”
     “ஆனா, இப்போ ஆசிரியர்கள் என்பவர்கள் இந்த சமூகத்திற்கே தேவையில்லை அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் வேஸ்ட் என்றெல்லாம் பேசறத பாக்கும் போது சிரிப்பாத்தான் வருது”
     “இவங்க இவ்வளவு வேலை செஞ்சி இருக்காங்க, இவர்களால இவ்வளவு லாபம் என்று அளவிட்டு அளக்குற வேலையா வாத்தியார் வேலை?, அவர்களின் வேலைகளை அளந்து பார்க்க அளவுகோல் எல்லாம் கிடையாது. அவர்களுக்கு இதுதான் வேலை என்றெல்லாம் இல்லை. இதப் புரியாத சமூகம் அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை பார்த்து பொருமுவதால் வெளிப்படும் வார்த்தைகள் தான் அவை”
     “டேய் சார பத்தி எதுவோ சொல்ல வந்தியே?“
     “ஆமாடா, அவரு நம்ம ஊரு பள்ளிக்கு எதோ வேலையா வந்து இருக்காரு. அதான் உன்னக் கூட்டிப் போகலாம்னு வந்தேன்”
     “அப்படியா, வா போய் பார்த்துவிட்டு வருவோம்” என்று “சாமி“ பார்க்க புறப்பட்டான் அன்பு.

    
    

Sunday, July 12, 2020

ஓநாய்குலச்சின்னம்


புத்தகம்- ஓநாய்குலச்சின்னம்
ஆசிரியர் – ஜியாங் ரோங்(சீன மொழியில்)
-    ஹோவர்ட் கோல்ட்ப்ளாட் (ஆங்கிலம்)
-    சி.மோகன் (தமிழில்)

நூலாசிரியர் ஜியாங் ரோங் 1946ல் பிறந்தார். குடும்பம் 1957 ல் பீஜிங் க்கு இடம் பெயர்கிறது. 1966 ல் சென்ட்ரல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ல் படிக்கிறார்.
     சீனப் பண்பாட்டுப் புரட்சிக்கு பிந்தைய காலத்தில் மாவோ அவர்களின் அழைப்பை ஏற்று உள் மங்கோலியாவில் உள்ள ஓலான்புலாக் மேய்ச்சல் நிலப்பண்ணைக்கு ஆடு மேய்க்க அனுப்ப பட்ட மாணவர்குழுவோடு செல்கிறார்.
     11 ஆண்டுகள் அந்த மேய்ச்சல் நிலப் பகுதியில் வாழ்கிறார். பிறகு 1978 ல் சைனீஸ் அகாடமி ஆஃப் சோசியல் சைன்ஸ் ல் சேர்ந்து படித்து பின்பு கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு தனது 11 ஆண்டு கால மேய்ச்சல் நில அனுபவங்களை வைத்து ஓநாய்குலச் சின்னம் என்கிற இந்த மகத்தான நாவலைப் புனைகிறார்.
     2004 ல் வெளியான இந்த நாவல் சீனாவில் மட்டும் 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இந்த நாவலுக்கு மேன் ஆசியன் அவார்ட் கிடைத்த போதுதான் நாவலைப் பற்றியும் தன்னைப் பற்றியும் தனது புகைப்படத்தையும் பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார் நாவலாசிரியர். (ஹேன் சீனர்கள் மீது குற்றம் சுமத்தும் தொனி நாவலில் இருப்பதால் அச்சமடைந்து இருக்கலாம்)
     இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு பெருவெற்றி பெற்றது. ஆங்கில மூலத்தை படித்து வியந்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் சி.மோகன் அவர்களிடத்தில் இந்த நாவலை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். இந்த மொழி பெயர்ப்பை வெளியிடுவதற்கென்றே அதிர்வு என்கிற பதிப்பகத்தை தானே துவங்கி அதில் வெளியிட்டு இருக்கிறார்.
     எழுத்தாளர் மாமல்லன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கிண்டிலில் மின்னூலாகவும் வெளியாகி ஏராளமானோர் வாசிக்கும் ஒரு நாவலாக மாறியுள்ளது.
பெரிய அளவிலான படிப்பறிவோ அல்லது ஆயுத தொழில் நுட்பமோ இல்லாத மங்கோலியர்கள் எப்படி பாதி உலகத்தை கதற விட்டிருக்கிறார்கள்? அவர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல் துணிச்சல் மற்றும் போர் வியூக முறைகள் எல்லாம் எங்ஙனம் கற்றனர். இவர்களுக்கு பயந்து தானே சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதாக படித்திருக்கிறோம். இவர்களின் வேட்டை மற்றும் போர் வியூகம் இவை எல்லாவற்றையும் இவர்கள் கற்றது ஓநாய்களிடம் இருந்து தான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த நாவலைப் படித்தால் நிச்சயமாக நம்புவீர்கள்.
     சீனாவின் துயரம் என்று மஞ்சள் நதி பற்றி பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். அடிக்கடி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டாலும் சீனர்களின் வளத்திற்கு பெரிய பங்களிப்பை வழங்குவது அந்த நதி என்பதால் அதன் மீது சீனர்களுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு உண்டு. அவ்வாறானது தான் மங்கோலியர்களுக்கு ஓநாய் மீதான பக்தி. அவற்றை தங்களது குலச்சின்னமாகவே பாவிக்கிறார்கள்.
     ஓலான் புலாக் மேய்ச்சல் நிலப்பகுதியின் பசுமையை தக்கவைப்பதற்கும் அங்கே நிலவும் பல்லுயிர்ச் சமநிலையை நீடித்திருக்கச் செய்வதற்கும் ஓநாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை நாவலை படிக்கும் போது உணர முடிகிறது. ஆமாம், அந்தப் பகுதிகளில் ஓநாய்கள்  அழித்தொழிக்கப் பட்ட இருபது ஆண்டுகளுக்குள்ளாக அந்தப் பகுதியே பாலைவனமாக மாறிவிட்டிருப்பதே அதற்குச் சான்றாகும்.
     மங்கோலியர்கள் தங்கள் ஆட்டுப்பண்ணைகள் ஓநாய்களால் தாக்குண்டாலும் கூட அவர்களுக்கு ஓநாய் குல தெய்வம் தான்.
     “ஒரு ஓநாய்த் தோல் தரும் வெப்பத்தை இரண்டு ஆட்டுத் தோல்களால் கூடத் தர இயலாது. ஆனாலும் கூட மங்கோலியர்கள் அதனை ஒருகாலும் பயன்படுத்த துணிய மாட்டார்கள். ஓநாய்த் தோலில் படுப்பதை விடவும் குளிரில் உறைந்து சாவதையே மங்கோலியன் தேர்ந்தெடுப்பான். இல்லாவிட்டால் அவனது ஆன்மா “டெஞ்ஞரை”(மங்கோலியர்களின் தெய்வம்) போய்ச் சேராது என்று திடமாக நம்புகிறார்கள் என ஜியாங் ரோங் குறிப்பிட்டுள்ளார்.
     அது போல மங்கோலியர்கள் இறந்த பின் அவர்களது சடலத்தை ஓநாய்களுக்கு உணவாக ஒரு திறந்தவெளியான இடத்தில் வைத்துவிடுகிறார்கள். ஓநாய்கள் சாப்பிட்டால் தான் அவர்களது ஆன்மா “டெஞ்ஞரை” அடையும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.
     சரி கதைக்கு வருவோம். மாவோவின் கட்டளைப்படி மேய்ச்சல் நிலத்திற்கு வரும் ஜென்சென் அங்கே இருக்கும் முதியவர் பில்ஜியுடன் தங்கி ஓநாய்கள் குறித்த ஏராளமான செய்திகளையும் மங்கோலிய இன மக்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்கிறான்.
     ஓநாய்கள் ஆயிரக்கணக்கான அதிவேகமாக ஓடும் மான் கூட்டத்தை கச்சிதமாக வியூகம் அமைத்து துரத்திச் சென்று தாக்கி நிலைகுலையச் செய்து பனிச்சரிவில் வீழ்த்தி அவைகளை நீண்ட நாட்களுக்கு இரையாக்குவதை அவ்வளவு தத்ரூபமாக விவரித்துள்ளார்.
     இதே போல குதிரைக் கூட்டத்தை அதன் மேய்ப்பர்கள் இருக்கும் போதே ஒரு முன்னிரவில் துரத்தி தாக்கி நிலைகுலையச் செய்கிறது. குதிரையின் பின்னங்கால்களுக்கிடையில் சிக்கி நிச்சயமான மரணம் என்கிற தருவாயில் அது ஒரு தாக்குதல் உத்தியை நிறைவேற்றுகிறது. பாய்ந்து குதிரையின் வயிற்றில் தனது முன் பற்களை பதித்து கொக்கி போல பயன்படுத்தி தொங்கிக் கொண்டே சென்று வயிற்றை கிழித்து குதிரையை வீழ்த்தி விட்டு போய் விழுகிறது. குதிரைகளுடனான அதன் யுத்தத்தை படிக்கும்  போது அவ்வளவு ரணகளமாகவம் ரத்தக் களரியாகவும் உள்ளது.
     ஓநாய்களின் மீது மங்கோலியர்கள் நடத்தும் வீரப் பிரயோகத்தையும் நாவலில் அழகாக காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர். பில்ஜியின் மகளான கஸ்பாய் தன்னந்தனியாக ஆடுகளைத் தாக்க வந்த ஓநாயை வாலைப் பிடித்து தடுத்து நிறுத்தி பின் தனது மகன் மற்றும் நாய்களின் துணைகொண்டு அதன் வாலை முறித்து பின்பு நாய்களால் கடிக்கப் பட்டு அந்த ஓநாய் உயிர் விடுகிறது. தனது குலச் சின்னம் ஆயினும் ஓநாயை வேட்டையாடுவது தங்கள் வீரத்தின் தவிர்க்க இயலா உரைகல் என்று நம்புகின்றனர்.
     ஓலான் புலாக்கில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறுகின்றன. இவர்களும் சிறிது காலம் தங்கள் முகாமை வேறு ஒரு இடத்திற்கு நகர்த்துகிறார்கள். இதற்கிடையில் பில்ஜியின் எதிர்ப்பையும் மீறி ஓநாய் வேட்டைக்குச் செல்லும் ஜென்சென் ஒரு குட்டி ஓநாயை எடுத்து வந்து வளர்க்கிறான். தனது பிள்ளையைப் போல அதனை பாதுகாக்கிறான். ஒரு முறை அது அவனது கையை கடித்து விடவே அவன் வேண்டாம் என்று சொன்னால் கூட அவனது நண்பன் யங் அதன் கூறான பற்களை மழுக்கி விடுகிறான்.
     அனைவரின் தீவிர எதிர்ப்பால் அதை காட்டில் விடலாம் என்றாலும் அதன் வேட்டை ஆயுதமான பற்கள் இல்லாமல் அது பசியில் வீழ்ந்து மடிவது உறுதி என்பதால் அதனை தன்னுடனேயே வைத்து வளர்க்கிறான்.
     மீளவும் இடமாற்றம் நடக்கும் போது அந்த குட்டி ஓநாய் மூர்க்கத்தனமாக வர மறுக்கிறது. வண்டியில் கட்டி அழைத்துச் சென்றாலும் நடக்கமறுத்து கால்களை தேய்த்தபடி முரண்டு பிடிப்பதால் ரத்தம் வருகிறது. கழுத்தை பிணைத்த சங்கிலியில் மாட்டி தேய்ந்து கழுத்திலும் காயம். ஆனாலும் கூட அது விடாமல் போராடுகிறது.
     இடமாற்றம் வாயில் ஏற்பட்ட புண்ணால் சரியாக உணவு எடுத்துக் கொள்ள இயலாமை என ஓநாய் வலுவிழந்து போகிறது. கடுமையான காயங்கள் உடல் ரணம் வலி பசி என அது துடிப்பதை காணச் சகியாது ஜென்சென்னே ஒரு மண்வெட்டியால் பலம் கொண்ட மட்டும் தலையில் தாக்கி அதன் ஆன்மாவை “டெஞ்ஞரிடம்” சென்று சேர உதவுகிறான்.
     பிறகுக அவனும் பீஜிங் சென்று படித்து வேலை குடும்பம் என வாழ்க்கையை ஓட்டுகிறான். ஓய்வு பெற்றபிறகு ஒரு சமயம் தனது நண்பனுடன் ஓலான் புலாக் வருகிறான். அங்கே கஸ்மாயின் இல்லத்தைக் காண்கிறான். ஓலான் புலாக் மேய்ச்சல் நிலங்கள் வறண்ட பாலையாக காட்சியளிக்கிறது. அந்த ஓநாய்க் குட்டியை எடுத்த குகைக்கு செல்கிறான். ஒரு மாணவன் தனது ஆசிரியரை சந்திக்கும் நிகழ்வு என அந்த நிகழ்வை விவரிக்கிறார் நாவலாசிரியர். மேலும் இந்த நூலின் கையெழுத்து பிரதியை அந்தச் சுரங்க வாயிலில் வைத்து வழிபட்டு எடுத்து வருவதாக கதையின் பின்குறிப்போடு புத்தகம் நிறைவுறுகிறது.
     நான் எழுதியிருப்பவை யாவுமே நுனிப்புல் மட்டுமே. நாவலை வாசிக்கும் போது இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. இது சற்றே பெரிய நாவல். மேலும் மங்கோலிய மேய்ச்சல் நில வாழ்வியலை அணுவணுவாக விவரிக்கும் படைப்பு ஆதலால் ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போல ஒரே சிட்டிங்கில் வாசிக்க இயலாது. நான் அநேகமாக ஒரு மாதகாலம் சிறுக சிறுக இந்த நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். ஜென்சென் ஓலான் புலாக்கில் 11 வருடங்கள் தங்கி அனுபவித்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். நானோ கடந்த ஒரு மாதகாலமாக அவ்வப்போது எனது கற்பனையில் ஓலான்புலாக்கில் உலாவி இருக்கிறேன். ஓநாய்களோடு சேர்ந்து கொண்டு மான் வேட்டை குதிரை வேட்டை என ஆடி இருக்கிறேன். ஜென்சென்னோடு சேர்ந்து கொண்டு மலைக்குகைகளில் வசிக்கும் மர்மோட்டுகளை பொறிவைத்து பிடித்திருக்கிறேன். மர்மோட் எண்ணையில் பொறித்த இறைச்சிகளை வாயில் நீரொழுக உண்டு களித்திருக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் ஆளையே அலேக்காக தூக்கிச்சென்று கடித்து சுவைக்கும் மங்கோலிய மேய்ச்சல் நிலக் கொசுக்களிடம் இருந்து தப்பி வந்து தான் இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டு இருக்கிறேன்.
     சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பு அபாரம். வேற்றுமொழி நாவலை வாசிக்கிறேன் என்பது பெயர்களை வாசிக்கும் போது மட்டுமே உணர்ந்தேன். அனைவருமே தவறவிடக் கூடாத ஒரு அருமையான படைப்பு.

Saturday, July 11, 2020

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(அறிவியல் புனைவு சரித்திர நாவல்)


புத்தகம் – வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(அறிவியல் புனைவு சரித்திர நாவல்)
ஆசிரியர் – தமிழ்மகன்
பதிப்பகம் – உயிர்மை பதிப்பகம் (கிண்டில் அன்லிமிட்டட் லும் வாசிக்க கிடைக்கிறது)

     நாவலாசிரியர் தமிழ்மகன் ஒரு பத்திரிக்கையாளரும் கூட. ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த படைப்பு 2017 ல் வெளியாகி உள்ளது. பாட்ஷா மாதிரி இவருக்கு இன்னும் இரண்டு புனைப் பெயர்கள் உள்ளன. வளவன் மற்றும் தேனீ.
     ஒரு முறை அ.முத்துலிங்கம் அவர்கள் இந்த நாவல் குறித்து மிக அழகாக கூறியிருந்தார். அன்றைய தினமே சில ஆன்லைன் நூல் விற்பனை முனையங்களை நாடிய போது நோ ஸ்டாக் என வந்தது. அப்புறம் அமேசான் கிண்டிலில் வாங்கியிருந்தேன். ஆனால் நூல் டவுன்லோட் ஆகவில்லை. அப்புறம் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. திரும்பவும் சென்ற மாதம் இந்த நூல் குறித்து முகநூலில் வாசித்தேன். நூலகம் வேறு திறக்காத காரணத்தால் கிண்டில் அன்லிமிட்டட் ஒரு ஆறு மாதத்திற்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டேன். முதல் வேலையாக இந்த நூலை பதிவிறக்கி வாசித்து முடித்துவிட்டேன்.
     ஆமாம் நாவல் எதைப் பற்றியது?
     தமிழர்களுக்கு மட்டும் மொழிப் பற்றும் மொழி மீதான பெருமையும் அதிகமாக இருப்பது ஏன்? ஒரு வேளை ரத்தத்தில் கலந்து இருக்குமோ? அல்லது ஜீன் வழியாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்திருக்குமோ? என்ற ஐயங்களின் பால் நின்று ஒரு அறிவியல் புனைவாக தமிழே உலகின் தொன்மையான மூத்த மொழி என்று நிறுவுகிறது இந்த நாவல்.
     கதை நடக்கும் காலகட்டம் 2037. நாவலின் நாயகன் தேவ் ஒரு தமிழன். செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கும் செயல் திட்டத்தை இறுதி செய்து தென் கொரியாவுக்கு வழங்க உள்ளான். இந்த வேலையை ஜப்பானில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருந்து இறுதி செய்து முடிக்கும் வேளையில் ஜப்பானில் பெரிய சுனாமிக்கான எச்சரிக்கை விடப்படுகிறது. செவ்வாய் கிரக காலனி ப்ராஜக்ட்டுக்கான கோப்பை ஓட்டலில் விட்டுவிட்டு தப்பிச் சென்று திரும்பவும் ஒரு போலீஸ்காரரோடு வந்து மீட்கும் வேளையில் கோப்போடு போலீஸ் காரர் தப்பிக்க இவன் சுனாமியால் தூக்கி வீசப்படுகிறான். பிறகு காப்பாற்றப் படுகிறான். சுனாமியால் வீசப்பட்டதால் அவனுடைய மூளையில் ஒரு வித்தியாசமான பாதிப்பு ஏற்படுகிறது. ஆம், அவனுக்கு தமிழர் நாகரிகம் மற்றும் மொழியின் தோற்றம் சார்ந்த விஷயங்கள் அவ்வப்போது நான்லீனியராக கனவாக வருகிறது. இந்த யுத்தியின் பால் நின்று நாவலாசிரியர் நமது மொழியின் தோற்றம், வளர்ச்சி, தமிழர் நாகரிகம் போன்ற அனைத்தின் வரலாற்றையும் சுவைபட பதிவு செய்துள்ளார். நாவலில் கூறப்பட்ட விஷயங்கள்
     புவியில் மனித இனம் தோன்றிய பின் வந்த முதல் மொழியின் தோற்றம் குறித்து ஒலி, சொல் பின்னர் அதனை ஞாபகம் வைத்துக் கொள்ள குறியீடு எண்களின் தோற்றம் போன்ற அனைத்தையும் சுவைபட கற்பனை செய்து பதிவு செய்து இருக்கிறார்.
     அடுத்தது நெருப்பை உண்டாக்குவது, அதனை பயன்படுத்துவது குறித்தும் அழகாக கூறியுள்ளார்.
     நாவலில் திருவள்ளுவர் தோன்றி,“ நான் எந்த மதக் குறியீடுகளும் இன்றி அறம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய புதிய பாணியிலான செய்யுளை உருவாக்குவேன்” என்று தனது சமகால தமிழறிஞர்களிடம் கூறி எழுத்தாணியுடன் அமர்கிறார்.
     உலகில் உள்ள பல நாகரிகங்கள் மற்றும் அவர்தம் மொழிகளில் தமிழில் இருந்து அவை தோன்றி இருப்பதற்கான கூறுகளை ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
     ஆரியர்கள் என்கிற நாடோடி மக்கள் ஆடு மேய்த்து வந்த போது இங்கே ஹரப்பா மொகஞ்சதாரோ நகர நாகரிகங்களை பார்த்து அதிர்கிறார்கள். அழிக்க சூளுரைக்கிறார்கள்.
     வேத(அ)நாகரிகம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் இரண்டுக்கும் உள்ள துல்லியமான வேறுபாடுகளை ஆதாரப் பூர்வமாக முன்வைக்கிறார். நிச்சயமாக சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமல்ல திராவிடர் நாகரிகம் என்று அடித்து கூறியுள்ளார். அதே நேரத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் சொந்தம் கொண்டாட விழைந்த நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
     கீழடி அகழாய்வு தமிழர் நாகரிக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிருபித்துவிடும் என்று பயந்த சங்கிகள் கீழடியில் செய்த உள்ளடியை எடுத்துக் கூறவும் தவறவில்லை.
     இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் மற்றும் ராஜீவ் காந்தி கொலைவழக்கு ஆகியவற்றையும் கூட தமிழர் மீதான ஒடுக்குமுறை என்கிற நிலையில் நின்று பேசியிருக்கிறார். வழக்கம்போல ஆதாரங்களுடன் தான்.
     ஆக நாவலை மிகுந்த கவனத்தோடு வாசித்தீர்களானால் தமிழர் தொன்மை நாகரிக வரலாறும் அன்மைகால சங்கிகளின் மங்கித்தனமான சதிச் செயல்களையும் புரிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் அழகான கதையோடு சேர்ந்து முடிச்சிட்டு இருக்கிறார்.
     வெண்ணிக்குயத்தி என்று ஒரு சோழர் கால கவிஞர் தமிழர் வரலாற்றை கவிதை நடையில் எழுதி வைத்திருந்திருக்கிறார். அது எங்கே இருக்கிறது என்கிற குறிப்பினை வேங்கை நங்கூரத்தில் குறியீடாக வைத்திருந்திருக்கிறார். அதனை கண்டுபிடித்து காப்பாற்றி மணிலாவுக்கு ஒரு முத்துகள் ஏற்றுமதியாகும் பேழையில் அனுப்புகிறாள் ஒருத்தி. அதன் பிறகு அது என்ன ஆனது என்பது தெரியவில்லை. தமழிரின் தொன்மை வரலாற்றை மறைக்க எண்ணிய சக்திகள் யார்?
     ஆரியர்களா? அல்லது புத்திசாலித்தனத்திலும் சூழ்ச்சியிலும் மேன்மை பெற்று விளங்கும் இஸ்ரேலியர்களா என்கிற அளவில் முடிவினை நம்மிடமே விட்டு நாவலை முடித்திருக்கிறார்.
     தமிழில் ஒரு “வால்கா முதல் கங்கை வரை” போன்ற ஒரு அற்புதமான படைப்பு. வால்கா முதல் கங்கை வரை நாவலில் பெரும்பாலான விஷயங்கள் கற்பனைக் கதை தான். ஆனால் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகளில் ஆதாரப்பூர்வமான உண்மைகளை அறிவியல் புனைவு என்கிற பாவில் நெய்து அழகான ஒரு சுவாரசியமான நாவலாக வழங்கியிருக்கிறார்.
     நாவலில் உள்ளவற்றில் நான் கோடிட்டு காட்டி இருப்பது “TIP OF AN ICEBERG”தான் என்பதை நீங்கள் வாசிக்கும் போது அனுபவித்து இன்புறுவீர்கள்.
    
    

Monday, July 6, 2020

இந்து மதம் எங்கே போகிறது?



புத்தகம் –இந்து மதம் எங்கே போகிறது?
ஆசிரியர் – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்
பதிப்பகம் – நக்கீரன் பதிப்பகம் (நக்கீரனில் தொடராக வந்தது.
முன்குறிப்பு- நண்பர்களே இந்த நூல் இந்து மத சாஸ்திரங்களில் நிலவும் பல விஷயங்களை உள்ளதை உள்ளபடி ஆதாரப் பூர்வமாக போட்டு உடைத்துள்ளது. அதனால் இந்து மதத்தின் மீது மாறாத பற்று கொண்டுள்ள மென்மனத்தினர் இந்த பதிவினை தவிர்ப்பது நலம்
352 பக்கங்களை உடைய பல்க்கான புத்தகம் இது. இரண்டு மாதங்களுக்கு முன் வாசிக்க எடுத்து இரண்டு அத்தியாயங்களோடு மூடிவிட்டேன். நேற்று ஞாயிறு முழு ஊரடங்கில் அடக்கமாக அமர்ந்து வாசித்து முடித்துவிட்டேன்.
 நூலாசிரியர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். வைணவ குடும்பத்தைச் சார்ந்தவர். சிறுவயது முதல் வேதபாராயணம் மற்றும் அதன் அர்த்தங்கள் குறித்த ஆய்வுகள் செய்தவர். மகாபெரியவா என்று அழைக்கப் பட்ட “சந்திரசேகரேந்திர சுவாமிகள் உடன் நல்லதொரு நட்பை பேணியவர்.
     இந்து மதத்தில் உள்ள வேதங்கள் மற்றும் மநு இவற்றில் உள்ள கருத்துக்களை உள்ளது உள்ளபடி போட்டு உடைத்திருக்கிறார்.
     நூலில் கண்ட சில குறிப்பிடத் தகுந்த விஷயங்களை மட்டும் உங்கள் அறிமுகத்திற்காக வைக்கிறேன். (இதில் உள்ள விஷயங்களை வைத்து ஒரு தொடர் எழுதலாம் என்ற உள்ளேன்.)
     இந்த மநு என்ன சொல்கிறது? மநு என்றால் என்ன?
மநு என்பது வேதங்களின் எளிமைப் படுத்தப் பட்ட வடிவம். அதாவது வேதங்களுக்கான “கோனார் நோட்ஸ்” என்கிறார். ஆனால் நூலின் பல இடங்களில் வேதமும் மநுவும் முரண்பட்டு இருக்கும் இடங்களையும் சுட்டுகிறார்.
     அசுவமேத யாகம் குறித்து அவர் எழுதியவற்றையே இங்கே வைக்கிறேன். சற்று கவிச்சு (சற்று அடல்ட்ஸ் ஒன்லி) தூக்கலாக இருக்கும்.
     அரண்மனையில் இருக்கும் குதிரையை ஓடவிடுவார்கள். அது ஓடி திரும்பிவரும் இடம் வரையில் மன்னர் போரிட்டு வெல்வார். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக செய்வதே அசுவமேதயாகம்.
     இதுவரையில் ஓ.கே தான். ஆனால் யாகம் செய்யும் விதம்???
     யாகத்தின் போது ஒரு ஆண்குதிரையை நிற்க வைப்பார்கள். அதன் அருகே ஒரு பெண்குதிரை இருக்கும். ஆண்குதிரையின் விரைத்திருக்கும் குறியை அரண்மனையின் ராணி அல்லது இளவரசி இரவு முழுவதும் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். யாகம் முடிந்தவுடன் யாகம் செய்த அய்யருடன் சென்று அவர்களுடன் தேகஸம்பந்தம் (அதே மேட்டர் தான்)  செய்து அவர்களை மகிழ்வித்து பின் திரும்ப வேண்டும்.
     ஆகமவிதியை காரணம் காட்டி கோவிலுக்குள் சூத்திரர்கள் (இவர்கள் தலித்துகளுக்கு மேல் பிராமணர்களுக்கு கீழ்) நுழையக் கூடாது என்கிறார்கள் அல்லவா? அப்படி நுழைந்தால் என்னவாம்?
     விக்ரகத்தில் இருக்கும் தெய்வ சக்தி வெளியேறிவிடும். பிறகு வெறும் கற்சிலை தான் அங்கே இருக்கும். இதற்கு பரிகாரம் குடமுழுக்கு செய்து கற்சிலைக்கு சக்தி அளிப்பது தான்.
     நேருவின் ஆட்சியில் பெண்களுக்கான சொத்துரிமை மசோதா கொண்டுவந்தபோது பெரியவா அதனை தீவரமாக எதிர்த்திருக்கிறார். அவர் கூறியது ” அசட்டுத்தனமா பேசாதீர், இந்தச் சட்டம் வந்தா ஸ்த்ரீ தர்மமே பாழாகிவிடும். ஸ்த்ரீகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்க கூடாது என்று மநுஸ்மிருதி சொல்லியிருக்கிறது. ஆம்படையானுக்கு அடிமையாக இருப்பது தான் பெண்ணுக்கு அழகு. பெண்கள் சொத்து இருக்கிற தைரியத்தில் இஷ்டப்பட்டவா கூட ஓடத்தான் போறா” என்று பொறிந்து தள்ளியிருக்கிறார்.
பெண்களைத் திரட்டியே “பெண்களுக்கு சொத்துரிமை வேண்டாம்” என்று கோஷம் போடவைத்து போராட்டம் செய்ய வைத்த கூத்தெல்லாம் அரங்கேறி இருக்கிறது. (இப்போ வேலையில் இருக்கும் பிராமண பொம்மனாட்டியெல்லாம் மநுஸ்மிருதியையோ ஸ்த்ரீ தர்மத்தையோ மதிக்க வில்லை என்றல்லவா அர்த்தம்?)
     ஒரு ஆதிக்க சாதியினரின் வீட்டில் தலித்துகள் நுழைந்தால் தீட்டு என்ற கருத்து நிலவி வந்த அதே காலத்தில்  அந்த ஆதிக்க சாதியினர் அய்யர் வீட்டில் நுழைந்தால் தீட்டு தான். அவர்கள் ஒருவேளை சென்று வந்தாலும் அந்த இடத்தை “ஜலம்“ விட்டு நன்னா அலம்பிடுவா தெரியுமோ?
இதே நிலை பெரியவா விற்கும் நேர்ந்துள்ளது. அதாவது சிருங்கேரி மடத்திற்கு இந்திய மடங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் நிமித்தமாக சென்றார். “வெளியூர் ஆட்டக்காரன உள்ளுர் ஆட்டக்காரன் மதிக்கறது தானே மொற” என்கிற குறைந்த பட்ச மேனர்ஸ் கூட இல்லாமல்  “இவன் திராவிட தேசத்தவன், இவனை உள்ளே அனுமதித்தால் தீட்டு” என்று கூறி வாசலோடு அசிங்கப் படுத்தி அனுப்பிவிட்டார்கள்.
     சரி என்று தமிழக அளவிலான மடங்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கிவிட்டார். ஆண்டுதோறும் மடங்களின் வருவாயில் இருந்து கூட்டமைப்பின் நிர்வாக செலவுகளுக்காக ஐந்து சதவீதம் வழங்க வேண்டும். ஆனால் மதுரை ஆதீனம் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் தெய்வத்தை தொட்டு வழிபடும் உரிமை என்கிற கோரிக்கையை வைத்த மாத்திரத்தில் “டேய், சங்கத்த கலைங்கடா” என்று நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து கவிழ்த்துவிட்டார் பெரியவா.
     இன்னொரு விஷயம் தெரியுமா?
     பெரியவா தமிழில் பேச வேண்டிய சூழல் எழுமானால் பேசிய பின்பு ஸ்நானம் பண்ணிட்டு தான் பூசை செய்வாராம். ஆமாம், நீஷ பாஷை பேசியதால் ஏற்பட்ட தீட்டை கழிப்பதற்கான பரிகாரம்.
     கணக்கில் எத்தனையோ சூத்திரங்களை பார்த்திருப்பீர்கள், ஆனால் பிரம்ம சூத்திரம் என்றால் என்னவென்று தெரியுமா?
     இதற்கு உரை எழுத ராமானுஜர் பட்ட பாடு இருக்கே. ஆமாம், காஷ்மீரில் ஒரு ஞானியிடம் கற்று தேர்ந்து உரை எழுதியிருக்கிறார். அப்படி என்னதான் அதில் உள்ளதாம்?
     “பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்து வரும் பிராமண ஆண்களுக்கே மோட்சம் கிட்டும். அய்யர் ஆத்துப் பெண்கள் ஆயினும் அவர்கள் சூத்திரர்களுக்கு நிகரானவர்கள். எனவே பெண்களும் சூத்திரர்களும் இந்தப் பிறவி போகட்டும், அடுத்த ஜென்மத்தில் நான் பிராமண ஆணாக பிறந்து மோட்சத்தை கிட்டும் வாய்ப்பை அடைய நித்தமும் வேண்டிக் கொள்ள வேண்டியது”
மோட்சம் என்றால் என்ன?
பிறப்பு இறப்பு என்ற துன்பச் சுழலில் சிக்கி சீரழிந்து நொந்து நூடுல்ஸாகி விடாமல் மீண்டும் பிறவாமை என்ற நிலையை அடைந்து ஆன்மா இறைவனோடு இன்புற்று இருக்கும் உன்னத நிலைதான் அது.
ச்சை!! இந்த நேரம் பார்த்து ”எல்லோருக்கும் மோட்சத்திற்கு செல்ல ஆசை உள்ளது, ஆனால் ஒரு பயலும் சாகத்தயாராக இல்லை” என்கிற சொலவடை ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
பிரம்மஹத்தி தோஷம் தான் இருப்பதிலேயே பெரும் தோஷமாம். (இது குறித்து பிறகு ஒரு தனி பதிவே போடலாம்) ஒன்றுமில்லை பிராமணனை கொன்றால் தொற்றிக்கொள்ளும் தோஷம். (எவ்வளவு பெரிய Defense mechanism?)
பெண்களுக்கு எட்டு வயதிற்குள் திருமணம் முடிந்தால் தான் கன்னிகாதானம் என்று பெயர். வயதுக்கு வந்த பெண்ணை மணமுடிக்காமல் வைத்திருப்பது பெரும் பாவமாம். அதற்கு தண்டனை திருமணம் ஆகும் வரை அந்தப் பெண்ணின் மாதவிடாய் உதிரத்தை அவளது தந்தை வாங்கி அருந்த வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு மாதவிடாய்க்கும் ஒரு பசுவினை பிராமணனுக்கு தானமாக வழங்க வேண்டும் (அப்பா, எவ்வளவு பெரிய தில்லாலங்கடி பாத்தீங்களா?)
தங்கமகன் படத்தில் ரஜினியும் பூர்ணிமாவும் ஆடும் போட்டிப்பாடல் ஞாபகம் உள்ளதா? அந்தப் பாடலின் இறுதியில் ஒவ்வொரு சட்டையாக இருவரும் மாற்றி மாற்றி கழட்டுவார்கள். இறுதியில் பனியனையும் கழட்டி போங்கு ஆட்டம் ஆடி ரஜினி வெற்றி பெறுவார். (பூர்ணிமா இரண்டாவது சட்டையின் போதே உஷார் ஆகியிருக்க வேண்டும்)
இதே போன்றதொரு போட்டி சிதம்பரம் நடராஜராம் சிவனுக்கும் தில்லைக்காளிக்கும் நடந்திருக்கிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் ஆடுகிறார்கள். தில்லைக்காளி வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். சிவனுக்கு பொறுக்க வில்லை. உடனே வலதுகாலை ஊன்றி இடதுகாலை ஆனமட்டும் உயர்த்துகிறார். தலைவர் ஜட்டி போடல போல, சிவனின் “சிஷ்டம்” (அய்யோ இது ரஜினி சொல்றது இல்ல, சிஷ்டம் என்றால் ஆண்குறி) வெளியே தெரிகிறது. தில்லைக்காளி நிலைகுலைந்து போய் தோற்கிறாள்.
நடராஜ மகாத்மியம் என்கிற நூலை மேற்கோல் காட்டியே தாத்தாச்சாரியார் இதை எழுதியுள்ளார்.
இன்னும் நிறை விஷங்களை தேங்காய் உடைத்தமாதிரி படீரென போட்டு உடைத்துள்ளார். அவை ஒவ்வொன்றையும் தனிப்பதிவுகளாக போடலாம் என்று உள்ளேன்.

    

Friday, July 3, 2020

கிளுக்கி (சிறுகதைத் தொகுப்பு)


புத்தகம் – கிளுக்கி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் – பாப்லோ அறிவுக்குயில்
பதிப்பகம் – NCBH

     தோழர் பாப்லோ அறிவுக்குயில் அவர்கள் அரியலூர் மாவட்டம் வென்மாண்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் கவிஞராக பல பரிசுகளும் பாராட்டும் பெற்றுள்ளார்.
“உடல்நலிவின் காரணமாக பண்ணை வேலைக்கு வரமறுத்த ஒரு ஏழைக் கூலி விவசாயியை அவரது முதலாளி அடித்து இழுத்துச் சென்ற காட்சியை கண்ணுற்றதே எனக்கு எழுதுவதற்கான முதல் விதையை தூவியது” என்கிறார்.
     தொண்ணூறுகளில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து இருக்கிறார். இவரது முதல் சிறுகதை “கிராமம் நகரம்” 93 நவம்பரில் கணையாழியில் வெளி வந்து இருக்கிறது.
     இவரது சிறுகதைகள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் வலிகளை ரத்தமும் சதையுமாக பதிவு செய்கிறது. அனேகமாக எவர் எழுத்திலும் இதுவரை பிரதிபலிக்காத அரியலூர் மாவட்ட கிராமங்களின் வட்டார வழக்குகள் மிக அழகாக துள்ளியமாக இவரது கதைகளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வட்டார வழக்கு என்றாலே சென்னை நெல்லை பாஷைகள் தான் நம்ம ஏரியாவெல்லாம் அந்த எல்லைக்குள் அடங்காது என்று இருந்த எனக்கு இவரது கதைகள் படித்த பின்புதான் ”அடடே நம்ம ஏரியாவுல இப்படித்தானே பேசுவோம்” என்று உரைத்தது.
     சமீப காலங்களாக இவரது பேனா ஏனோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
     கிராமம் நகரம்
“குடியான பசங்களெல்லாம் அசிங்கமா வய்யரானுவம்மா, தூரப்போயி குந்துடான்னு அடிக்கிறானுவ” என்கிறான் வாசு. அவனது அம்மா, “வாத்தியார்ட்ட சொல்ல வேண்டியது தானடா” என்கிறார்
     “காலனித் தெருதானடா நீ தூர ஒக்காந்தா என்ன கொறஞ்சாப் போயிடுவே, படிக்குறதுல ஒரு மயிரையும் காணல, ஒனக்கெல்லாம் எதுக்குடா ரோஷம்” – இது வாத்தியார்
     இப்படியாக பல புறக்கணிப்புகளால் வரலாற்றில் பல ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு காணாமல் போனது. அவ்வாறே வாசுவும் ஏழாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்கு போடுகிறான்.
   அந்த காலகட்டங்களில் பெரும்பான்மையானோர் வேலை தேடி போகும் ஊர் சென்னை தான். வாசுவும் அங்கே போய் ஒரு ஹோட்டலில் கிளீனராக வேலைக்குச் சேர்கிறான்.
     கிராமத்தில் அவனது அப்பா சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகி அடிபட்டுச் செத்தது, இவன் ஆண்டுக்கு ஐநூறு ரூபாய் பண்ணை வேலைக்கு ஆண்டை வீட்டில் சென்றது என கிராமத்து கொடுமைகளும், வேலைசெய்வோர் தங்குமிடத்தின் நாற்றம் குமட்டும் சூழல், அங்கு நடக்கும் ஓரினச்சேர்க்கை பாலியல் அத்து மீறல் உழைப்புச் சுரண்டல் என நகரத்துக் கொடுமைகளும் மாறி மாறி அவனது நினைவில் நிழலாடுகின்றன.
     கிராமத்தில் இருக்கும் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைகள் மிகத்துல்லியமாகவும் எதார்த்தமாகவும் கதையில் படம் பிடித்துக் காட்டப் பட்டிருக்கின்றன.
 பொதி
     இந்தக் குறுநாவலில் கலியன் வடிவு தம்பதியினர். கிராமத்தில் விவசாயக் கூலி வேலை என கைக்கும் வாய்க்கும் எட்டாமலே பொழப்பை நடத்துகின்றனர். பிள்ளைகள் வளர்ப்பு தம்பி படிப்பு என செலவு மேல் செலவு ஆனால் வரவுக்கு வழியில்லை.
     எல்லோரும் போவது போல சென்னைக்குச் சென்று மூட்டை தூக்கிப் பிழைக்கப் போகிறான் கலியன். அங்கேயும் ஒரு நாள் நள்ளிரவு வேளையில் வயிறு கலக்கியதால் “ஒதுங்க“ செல்கிறான். அந்த நேரம் பார்த்து போலீஸ்காரர் பார்த்து விடுகிறார். சந்தேகக் கேஸ் போட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். கையில் சுத்தமாக காசு இல்லை. எட்டணா மட்டுமே இருக்கிறது எனக் காட்டுகிறான். லத்தியை சுழற்றுகிறார் போலீஸ் காரர். இவ்வளவு நேரமும் அடக்கப்பட்ட வயிற்றுப் போக்கு வந்து விடவே எதேச்சையாக போலீஸ்காரரை தள்ளி விடுகிறான். போலீஸ் லாக்கப்பில் வைத்து பொள பொளவென்று பொளந்து விடுகிறார்கள். உழைத்து கொடுத்து வைத்திருந்து காசு அம்புட்டும் கொடுத்து வெளியே எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள். வடிவோ, “நீ பொழச்சி வந்ததே போதும்” என்கிறாள். இவரது பெரும்பாலான கதைகளில் போலீஸ் காரர்கள் வில்லன் ரோலில் தான் வருகிறார்கள்.
நடவு
     இந்தக் கதையில் கிராமத்து பெண் வேலையாட்களிடம் ஆண்டைகள் செய்யும் பாலியல் அத்து மீறலைக் கூறியிருக்கிறார்.
கிளுக்கி
     வயல்வெளியில் கிளுக்கியை ஆட்டிக் காண்பித்து நண்டு பிடிக்கும் சுதாகர். அவனுக்கு அம்மா அப்பா இல்லை. உடல்நலிவுற்ற தாத்தாவிடம் தான் வளர்கிறான். அப்பா மனைவியை விட்டுவிட்டு வேறு யாருடனோ குடும்பம் நடத்திக் கொண்டு சுத்தமாக ஊர்ப்பக்கம் வருவதில்லை. சுதாகர் சிறுவனாக இருக்கும் வரை இருந்த அம்மா காணாமல் போய்விட்டாள். அதற்கான விடை இரண்டு இளைஞர்கள் பேசியதை கேட்டபோது கிடைக்கிறது.
     மனைவியை சந்தேகப் பட்டு அடித்து உதைத்து விட்டு சுதாகரின் அப்பா போனவர்தான் வரவில்லை. தனியே இருந்த அம்மா வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் ஒடிவிட்டார். மறைந்திருந்து கதையை கேட்ட சுதாகர் அழுதபடி செல்கிறான்.
வெயில் பறவை
     ஒரு மரப் பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு வளையல் விற்கும் செட்டியார்களை அந்தக் காலங்களில் கிராமங்களில் பார்க்கலாம். அவர்கள் தான் அந்தக் கால நடமாடும் ஃபேன்சி ஸ்டோர்.
     அதுமாதிரியான ஒரு வளவிக்காரர் ஆதரவின்றி ஒண்டிக்கட்டையாக இருக்கிறார். பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஒற்றை மகன்.
     ஒரு உச்சி வெயில் நாளில் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது. கையில் காசு இல்லை. எப்படியாவது இன்று வளையல் விற்று காசு தேத்தி சாயங்காலம் ஆஸ்பத்திரி கூட்டிப் போய்விடலாம் என்று சொல்லிச் செல்கிறார்.
     ஓரளவு வியாபாரமும் நடக்கிறது. பேருந்தில் வீடு திரும்பினால் செலவாகிவிடுமே என்று யோசித்து காசை மிச்சம் பிடிக்க தலையில் வளவி பெட்டியோடு நடந்து செல்கையில் போலீஸ்காரர் வழியில் பார்த்து மிரட்டுகிறார். பையனுக்கு உடம்பு சரியில்லை வைத்தியம் பார்க்கத்தான் காசு வைத்திருக்கிறேன் என்று கெஞ்சியும் விடாமல் காசை பறித்துக் கொள்கிறார் போலீஸ்காரர். தாமதமாக சலிப்போடு வீடு திரும்பினால் வீட்டின் முன்னால் ஒரே கூட்டம். பையன் இறந்து கிடக்கிறான்.
     சூரி
     இந்தக் கதையில் வரும் மூப்பாத்தி என்கிற பாட்டியின் கணவன் சாதிய அடக்குமுறையை எதிர்த்த காரணத்தால் கொல்லப் படுகிறான். தனியாளாய் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறாள் மூப்பாத்தி. இறுதியில் அவளது பேரன் மூப்பாத்தியின் கணவனை கொன்றவனின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான் என்று “திக்“ என முடிக்கிறார்.
வீடு
     இந்தக் கதையில் ஆர்பிஎஃப் போலீசாக இருக்கும் கோபால் ரேவதி தம்பதியினர். குவார்ட்டர்ஸ் பாதுகாப்பாக இல்லை என்று சொந்த ஊருக்கு அருகாமை டவுனில் தங்கி வேலைக்குப் போகிறான் கோபால்.
     தினந்தோறும் வரும் ஊர்க்காரர்கள் உறவினர்கள் அவர்களுக்கான சாப்பாடு மற்றும் வழிச் செலவு என்று திக்குமுக்காடிப் போகிறார்கள்.
     அப்பப்பா இந்த ஊரே வேண்டாம் நாம பாதுகாப்பா இல்லைன்னாலும் பரவால்லை என்று குவார்ட்டர்ஸ்க்கே போய்விடலாம் என்று எண்ணமிட்டு இருக்கையில் கணவன் தற்போது இருக்கும் டவுனுக்கே மாற்றல் வாங்கி வந்து விடுகிறான்.
     அடி
     இந்தச் சிறுகதையில் வயதானவர்கள் எவ்வளவு தூரம் அனைவராலும் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள் என்பதை உருக்கமாக சொல்லி இருக்கிறார்.
     வயதான பாட்டி ஒருவர் தனது மகளையும் பேரனையும் பார்க்க தின்பண்டம் நிறைந்த பையோடு பேருந்து ஏற நெடுஞ்சாலையோர சிற்றூரில் காத்து நிற்கிறார். எந்த பேருந்தும் நிற்கவில்லை. நிற்கும் பேருந்திலும் பிதுங்கும் கூட்டம். அப்படி அடித்து பிடித்து ஏறிய பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடப்படுகிறார். கீழே விழுந்து அடிபடுகிறார்.
     இந்தக் கதையை படிக்கும் ஒருவர் டிரைவராக இருந்தால் சிற்றூரில் காத்திருக்கும் வயதானவர்களை நிறுத்தி ஏற்றிக் கொள்வார். சக பயணியாக இருந்தால் வயதானவர்களை பரிவுடன் நடத்துவார்கள். அவ்வளவு உருக்கமான படைப்பு
வலி

அனைத்துக் கதைகளும் ஏதோ பொசுக் பொசுக் கென்று சின்னஞ்சிறிதாக இருப்பதாக நினைக்காதீர்கள். எல்லாக் கதைகளும் வழக்கமான சிறுகதைகளை விட நீளமானவை தான. அந்தக் கதையில் வரும் வாழ்வியல் அனுபவங்களோடு படிக்கும் போது நீங்களும் அந்த கிராமத்து வாசத்தில் அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தை கிட்டுவீர்கள். அவ்வளவு விரிவாக கதைக்களத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.
நூல் அனேகமாக அனைத்து நூலகங்களிலும் கிடைக்கிறது.


Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...