Saturday, July 11, 2020

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(அறிவியல் புனைவு சரித்திர நாவல்)


புத்தகம் – வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(அறிவியல் புனைவு சரித்திர நாவல்)
ஆசிரியர் – தமிழ்மகன்
பதிப்பகம் – உயிர்மை பதிப்பகம் (கிண்டில் அன்லிமிட்டட் லும் வாசிக்க கிடைக்கிறது)

     நாவலாசிரியர் தமிழ்மகன் ஒரு பத்திரிக்கையாளரும் கூட. ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த படைப்பு 2017 ல் வெளியாகி உள்ளது. பாட்ஷா மாதிரி இவருக்கு இன்னும் இரண்டு புனைப் பெயர்கள் உள்ளன. வளவன் மற்றும் தேனீ.
     ஒரு முறை அ.முத்துலிங்கம் அவர்கள் இந்த நாவல் குறித்து மிக அழகாக கூறியிருந்தார். அன்றைய தினமே சில ஆன்லைன் நூல் விற்பனை முனையங்களை நாடிய போது நோ ஸ்டாக் என வந்தது. அப்புறம் அமேசான் கிண்டிலில் வாங்கியிருந்தேன். ஆனால் நூல் டவுன்லோட் ஆகவில்லை. அப்புறம் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. திரும்பவும் சென்ற மாதம் இந்த நூல் குறித்து முகநூலில் வாசித்தேன். நூலகம் வேறு திறக்காத காரணத்தால் கிண்டில் அன்லிமிட்டட் ஒரு ஆறு மாதத்திற்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டேன். முதல் வேலையாக இந்த நூலை பதிவிறக்கி வாசித்து முடித்துவிட்டேன்.
     ஆமாம் நாவல் எதைப் பற்றியது?
     தமிழர்களுக்கு மட்டும் மொழிப் பற்றும் மொழி மீதான பெருமையும் அதிகமாக இருப்பது ஏன்? ஒரு வேளை ரத்தத்தில் கலந்து இருக்குமோ? அல்லது ஜீன் வழியாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்திருக்குமோ? என்ற ஐயங்களின் பால் நின்று ஒரு அறிவியல் புனைவாக தமிழே உலகின் தொன்மையான மூத்த மொழி என்று நிறுவுகிறது இந்த நாவல்.
     கதை நடக்கும் காலகட்டம் 2037. நாவலின் நாயகன் தேவ் ஒரு தமிழன். செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கும் செயல் திட்டத்தை இறுதி செய்து தென் கொரியாவுக்கு வழங்க உள்ளான். இந்த வேலையை ஜப்பானில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருந்து இறுதி செய்து முடிக்கும் வேளையில் ஜப்பானில் பெரிய சுனாமிக்கான எச்சரிக்கை விடப்படுகிறது. செவ்வாய் கிரக காலனி ப்ராஜக்ட்டுக்கான கோப்பை ஓட்டலில் விட்டுவிட்டு தப்பிச் சென்று திரும்பவும் ஒரு போலீஸ்காரரோடு வந்து மீட்கும் வேளையில் கோப்போடு போலீஸ் காரர் தப்பிக்க இவன் சுனாமியால் தூக்கி வீசப்படுகிறான். பிறகு காப்பாற்றப் படுகிறான். சுனாமியால் வீசப்பட்டதால் அவனுடைய மூளையில் ஒரு வித்தியாசமான பாதிப்பு ஏற்படுகிறது. ஆம், அவனுக்கு தமிழர் நாகரிகம் மற்றும் மொழியின் தோற்றம் சார்ந்த விஷயங்கள் அவ்வப்போது நான்லீனியராக கனவாக வருகிறது. இந்த யுத்தியின் பால் நின்று நாவலாசிரியர் நமது மொழியின் தோற்றம், வளர்ச்சி, தமிழர் நாகரிகம் போன்ற அனைத்தின் வரலாற்றையும் சுவைபட பதிவு செய்துள்ளார். நாவலில் கூறப்பட்ட விஷயங்கள்
     புவியில் மனித இனம் தோன்றிய பின் வந்த முதல் மொழியின் தோற்றம் குறித்து ஒலி, சொல் பின்னர் அதனை ஞாபகம் வைத்துக் கொள்ள குறியீடு எண்களின் தோற்றம் போன்ற அனைத்தையும் சுவைபட கற்பனை செய்து பதிவு செய்து இருக்கிறார்.
     அடுத்தது நெருப்பை உண்டாக்குவது, அதனை பயன்படுத்துவது குறித்தும் அழகாக கூறியுள்ளார்.
     நாவலில் திருவள்ளுவர் தோன்றி,“ நான் எந்த மதக் குறியீடுகளும் இன்றி அறம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய புதிய பாணியிலான செய்யுளை உருவாக்குவேன்” என்று தனது சமகால தமிழறிஞர்களிடம் கூறி எழுத்தாணியுடன் அமர்கிறார்.
     உலகில் உள்ள பல நாகரிகங்கள் மற்றும் அவர்தம் மொழிகளில் தமிழில் இருந்து அவை தோன்றி இருப்பதற்கான கூறுகளை ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
     ஆரியர்கள் என்கிற நாடோடி மக்கள் ஆடு மேய்த்து வந்த போது இங்கே ஹரப்பா மொகஞ்சதாரோ நகர நாகரிகங்களை பார்த்து அதிர்கிறார்கள். அழிக்க சூளுரைக்கிறார்கள்.
     வேத(அ)நாகரிகம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் இரண்டுக்கும் உள்ள துல்லியமான வேறுபாடுகளை ஆதாரப் பூர்வமாக முன்வைக்கிறார். நிச்சயமாக சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமல்ல திராவிடர் நாகரிகம் என்று அடித்து கூறியுள்ளார். அதே நேரத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் சொந்தம் கொண்டாட விழைந்த நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
     கீழடி அகழாய்வு தமிழர் நாகரிக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிருபித்துவிடும் என்று பயந்த சங்கிகள் கீழடியில் செய்த உள்ளடியை எடுத்துக் கூறவும் தவறவில்லை.
     இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் மற்றும் ராஜீவ் காந்தி கொலைவழக்கு ஆகியவற்றையும் கூட தமிழர் மீதான ஒடுக்குமுறை என்கிற நிலையில் நின்று பேசியிருக்கிறார். வழக்கம்போல ஆதாரங்களுடன் தான்.
     ஆக நாவலை மிகுந்த கவனத்தோடு வாசித்தீர்களானால் தமிழர் தொன்மை நாகரிக வரலாறும் அன்மைகால சங்கிகளின் மங்கித்தனமான சதிச் செயல்களையும் புரிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் அழகான கதையோடு சேர்ந்து முடிச்சிட்டு இருக்கிறார்.
     வெண்ணிக்குயத்தி என்று ஒரு சோழர் கால கவிஞர் தமிழர் வரலாற்றை கவிதை நடையில் எழுதி வைத்திருந்திருக்கிறார். அது எங்கே இருக்கிறது என்கிற குறிப்பினை வேங்கை நங்கூரத்தில் குறியீடாக வைத்திருந்திருக்கிறார். அதனை கண்டுபிடித்து காப்பாற்றி மணிலாவுக்கு ஒரு முத்துகள் ஏற்றுமதியாகும் பேழையில் அனுப்புகிறாள் ஒருத்தி. அதன் பிறகு அது என்ன ஆனது என்பது தெரியவில்லை. தமழிரின் தொன்மை வரலாற்றை மறைக்க எண்ணிய சக்திகள் யார்?
     ஆரியர்களா? அல்லது புத்திசாலித்தனத்திலும் சூழ்ச்சியிலும் மேன்மை பெற்று விளங்கும் இஸ்ரேலியர்களா என்கிற அளவில் முடிவினை நம்மிடமே விட்டு நாவலை முடித்திருக்கிறார்.
     தமிழில் ஒரு “வால்கா முதல் கங்கை வரை” போன்ற ஒரு அற்புதமான படைப்பு. வால்கா முதல் கங்கை வரை நாவலில் பெரும்பாலான விஷயங்கள் கற்பனைக் கதை தான். ஆனால் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகளில் ஆதாரப்பூர்வமான உண்மைகளை அறிவியல் புனைவு என்கிற பாவில் நெய்து அழகான ஒரு சுவாரசியமான நாவலாக வழங்கியிருக்கிறார்.
     நாவலில் உள்ளவற்றில் நான் கோடிட்டு காட்டி இருப்பது “TIP OF AN ICEBERG”தான் என்பதை நீங்கள் வாசிக்கும் போது அனுபவித்து இன்புறுவீர்கள்.
    
    

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...