Monday, July 20, 2020

சிறுகதை - குற்றமும் தண்டனையும்


 குற்றமும் தண்டனையும் - சிறுகதை

ஆசிரியர் - மு.ஜெயராஜ், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம்.
     அந்தக்குட்டிச் சுவற்றை அலேக்காகத் தாண்டி குதித்தார் செந்தில்நாதன்.
 ’என்னடா இது லேண்டிங் ஆக இவ்வளவு நேரம் ஆகுது?’
 முன் பக்கம் மூன்றடியாக இருந்து தவ்விக் குதிக்க ஆசை காட்டிய குட்டிச்சுவர் தனது மறுபுறம் பத்தடிக்கு மேல் பள்ளமான ஒரு கிராம சாக்கடைக் காவாயை ஒளித்து வைத்திருந்தது.
     “ச்ச்சை என்னடா இது” என்று முழங்கால் சாக்கடையில் ’சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக’ நின்றார்.
     ஓரடி ஆழத்தில் இருந்த காலை வலுவாக இழுத்து ஊன்றினால் மறுபடி அது இரண்டடி ஆழத்திற்கு பதிந்தது. இரண்டுகால்களையும் மாற்றி மாற்றி அந்த சாக்கடை சேற்றில் நாற்றாங்கால் தயார் செய்து கொண்டு திகைத்துப் போய் செய்வதறியாது நின்றார் செந்தில்நாதன்  மனதில் மெல்லத்திறந்தது கதவு படத்தின் அமலா இறந்துபோகும் காட்சி வேறு படமாக ஓடி பீதியை கிளப்பியது.
     “என்ன வாத்தியார, எங்க ஊரோட மொத்த சாக்கடையும் வந்து விழுற எடத்துல எறங்கி என்னத்த தேடுறீங்க?” என்றார் ஒரு நக்கல் புடிச்ச கிராமத்துப் பெருசு.
     “இந்தப் பக்கமா ஒரு பய ஓடினானா? அவனத்தான் தொரத்திக் கிட்டு வந்தேன் இங்க கால வச்சித் தொலச்சிட்டேன்”
     “என்னது கால வச்சீங்களா? அந்த செவுத்த அப்படியேப் பாய்ஞ்சி தாண்டுனீங்க!!  தூரத்தில் இருந்து பாத்துட்டு தான வரேன்”
     “சரி கொஞ்சம் கைய கொடுங்க”
     பெருசு பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்ததில் சேற்றில் இருந்து வெளியே வந்த வேகத்தில் தள்ளிக் கொண்டு அவர் மீதே குப்புற போய் விழுந்தார் வாத்தியார்.
     “ச்சே என்ன வாத்தியாரே, பழைய படத்துல வாத்தியார் லதா மேல விழுகுற கணக்கா விழுந்து அமுக்கிப் புட்டீங்க?”
     “சார் அவர என்னப் பண்றீங்க?” என்ற படி வந்து வண்டியை நிறுத்தினார் உடன் பணியாற்றிய சக ஸ்குவாட் ரவிக்குமார்.
     ”குற்றம் நடந்தது என்ன?” ன்னு கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போமா?
     இன்று பனிரெண்டாம் வகுப்பு கணக்குத் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஊர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாகும். செந்தில்நாதனுக்கு எப்போதும் போல ஹால் சூப்பர்வைசர் ட்யுட்டி தான் போட்டிருந்தார்கள். அலுவலகத்திற்குச் சென்று சண்டையிட்டு தனது பணி மூப்பு காலங்களை எல்லாம் காட்டி அங்கேயே நின்று ஸ்டேண்டிங் ஸ்குவாட் பணியேதான் வேண்டும் என்று வாங்கிக் கொண்டு “அதாம்ல வர்கீசு“ என்று கம்பீரமாக மீசையை முறுக்கியபடி வந்திருந்தார்.
     அவரே வந்து இந்த மாதிரி டிமாண்ட் செய்து பணியை மாற்றியதில் சற்றே காண்டான அந்த பிரிவு அலுவலர் தினந்தோறும் அவருக்கு நொட்டோரியஸ் சென்டராக (அதாங்க அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் பிட் பேப்பர்களாக சுரக்கும் எக்ஸாம் சென்டர்) பார்த்து பார்த்து பணி வழங்கினார்.
     அந்த வகையில் இன்றைக்கு இந்த கிராமத்துப் பள்ளியில் கணக்குப் பாடத் தேர்வுக்கு ஸ்குவாட் பணி.
     காலையில் தேர்வு ஆரம்பித்த பொழுதில் இருந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு புங்க மரத்தடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து ரவிக்குமாருடன் கதை பேசிக் கொண்டு இருந்தார் செந்தில்நாதன்.
     ”சார் டி.இ.ஓ தலைமையிலான பறக்கும் படை வராங்கலாம் சார்” என்று அலுவலக உதவியாளர் தனக்கு கிடைத்த உளவுத்துறைத் தகவலைக் கூறி உஷார் படுத்தினார்.
     அந்தத் தகவலை எல்லா அறைகளிலும் கூறி எல்லோரையும் ஒழுங்காக அமரச் சொல்லியபடிச் இருவரும் சென்றனர். அப்போது தான் அவரது கெட்ட நேரம் செந்தில்நாதனுக்கு பொறி தட்டியது. ஏற்கனவே தான் பணியாற்றும் பள்ளிக்கு டி.இ.ஓ விசிட் செய்த போது செந்தில் நாதன் தனது  ஆங்கிலப் பாடத்தில் குறைவான தேர்ச்சி காட்டியதற்காக கடிந்து கொண்டிருந்தார். அவரை இந்த சமயத்தில் இம்ப்ரஸ் செய்யலாமே என்று யோசனை செய்தார்.
     இன்னைக்கு எவனையாவது பிட்டும் கையுமா பிடித்து ஒப்படைத்து நல்ல பெயர் எடுத்து விடவேண்டும் என்று முடிவு கட்டி ஒவ்வொரு அறையாக பூனை போல மெதுவாக ஜன்னல் வழியே நோட்டமிட்ட படி சென்றார். இந்த பள்ளிக் கூடம் வேற நொட்டோரியஸ் சென்டர் என்பார்கள். பிட்டு பிடித்ததற்கான பின் விளைவுகள் எதுவும் மோசமாக அமைந்து விடக் கூடாது. எனவே இருப்பதிலேயே கொஞ்சம் அப்பிராணியாகவும் ஒல்லியாகவும் இருக்கும் பயலாக பிடித்து ஒப்படைத்துவிடுவோம் என்று கணக்கு பண்ணி நோட்டம் விட்டார்.
     பனிரெண்டாம் நம்பர் ரூமில் ஒரு பையன் பிட் பேப்பரை சட்டைக் காலர் மடிப்பில் சொருகினான். எழுதி முடித்திருப்பான் போல. ’சிக்கினாண்டா சிவனான்டி’ என்கிற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து உள்ளே ஓடினார். இவர் நுழைந்த மாத்திரத்தில் பிட்டை எடுத்து இவர் முன்னாலேயே ஜன்னல் வழியே எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எறிந்தான்.
     “டேய் எழுந்திரு, பிட் எடுத்து வெளிய போட்ட தானே?”
     “சார், நிறைய எழுதணும் தொந்தரவு பண்ணாதீங்க, நான் பிட் அடிக்கல”
     “இப்போ வெளியே தூக்கிப் போட்டியே”
     “நானா, நான் ஒண்ணும் வெளியே போடலையே”
     “டேய் நானே பாத்தேண்டா”
     “சார் நானெல்லாம் பிட் அடிக்கல எதையும் தூக்கியும் போடல சும்மா தொந்தரவு பண்ணாதீங்க வேற மாதிரி ஆயிடும்” என்றான் அதட்டலாக.
     ’ம்ம்… வெளிய போறப்ப வெட்டுவானோ’ என்று பயம் லேசாக கவ்வியது. ’
எவிடென்ஸ வேற அழிச்சிட்டான். இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான். மேற்கொண்டு கிளறாமல் போனால் தான் நாம பத்திரமா வீடு போய் சேரமுடியும்’ என்று சிந்தித்தவாறு,
”ஒழுங்கா பரிச்சை எழுது, இன்னொரு முறை பாத்தேன் புக் பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்றபடி மீசையை முறுக்கும் சாக்கில் மண்ணை தட்டிவிட்டபடி நடையைக் கட்டினார். 
     பதிமூன்றாம் நம்பர் ரூமை நோட்டமிட்டபோது அல்வாத்துண்டு மாதிரி அவர் எதிர் பார்த்த சர்வ லட்சணங்களோடு ஒருத்தன் சிக்கினான். அப்போது தான் அந்த பத்து மார்க் கேள்வியை முடித்து அந்த பேப்பரை பேண்ட்டுக்கும் ஜட்டிக்கும் இடையில் இருந்த ஒரு “மர்ம தேசத்தில்” சொருகினான்.
     “டேய் எழுந்திருடா, அந்த பிட்ட எடு”
     “சார் இல்ல சார், நான் பிட் அடிக்கல சார்!!“
     ”டேய் அதெல்லாம் ஜன்னல் வழியா பாத்துட்டு தான் உள்ள வரேன், நீயே எடுக்கிறாயா, இல்ல நானே கைய விட்டு எடுக்கட்டுமா?”
     “சார், சார், மன்னிச்சுடுங்க சார், தெரியாம பண்ணிட்டேன் சார்”
     “செந்தில் சார், டி.இ.ஓ வந்துடுவார் சார், அப்புறம் பேசிக்கலாம் சார், அவன விடுங்க சார்” என்றார் அந்த அறைக் கண்காணிப்பாளர் தெரிந்தவர் என்ற தோழமையோடு.
     “என்னது இவன விடச் சொல்றீங்களா? இவன இன்னைக்கு புக் பண்ணாம விடப் போறது இல்ல”
     “சார் என்ன விட்டுடுங்க சார் இனிமே செய்ய மாட்டேன் சார்” என்று காலில் விழ முயன்றான்.
     “ஏய் இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேணாம்” என்று அவனுடைய பரிட்சை அட்டையுடன் அவனை வெளியே இழுத்து வந்தார். தேர்வுக் கட்டுப் பாட்டு அறையில் தலைமைக் கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்து சில எழுத்து வேலைகள் செய்ய வேண்டும்.
     கள்ளச் சாராயத்தை பிடித்த போலீஸ்காரரின் தோரணையோடு மீசையை முறுக்கியபடி கம்பீரமாக நடை போட்டார். ஓ.ஏ வைக் கூப்பிட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட ஆசை மெல்ல எட்டிப் பார்த்தது. ஆனால் அதெல்லாம் சட்ட வரம்புகளுக்குள் வருமா என்கிற சந்தேகம் எழவே ’எதுக்கு வம்பு’ அந்த சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்.
     பையனை முன்னே விட்டு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்தார். மாணவர்கள் எல்லாரும் பரிட்சை எழுதுவதை சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தனர். காரிடாரின் இறுதியில் வெளிப்புறமாக இறங்கும் மாடிப்படி காம்பவுண்ட் சுவரை ஒட்டிச் செல்லும். அந்த மாடிப்படியை ஒட்டியுள்ள காம்பவுண்டை சட்டென தாண்டி குதித்து பரிட்சை பேப்பரோடு குற்றவாளி தப்பினான். செந்தில்நாதனுக்கு “கெதக்“ என்று ஆகிவிட்டது.
     இப்போது பையனை வெளியே தனது பொறுப்பில் கொண்டு வந்திருப்பதால் அந்த பிரச்சனையின் அனைத்து விளைவுகளுக்கும் செந்தில்நாதனே பொறுப்பாளி. மால்பிராக்டீஸ் செய்யும் மாணவர்களின் பேப்பரை சமர்ப்பிக்கத் தவறினால் பிரச்சனை நிச்சயமாக இவர்மீது திரும்பும். பையன் பரிட்சை முடிவடைய இரண்டு மணிநேரங்கள் இருக்கும் போதே வினாத்தாளோடு வெளியேறி இருக்கிறான். சோ, வினாத்தாள் அவுட் ஆவதற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட தலையாய பிரச்சினை டி.இ.ஓ சற்று நேரத்திற்கெல்லாம் வர இருக்கிறார். நடந்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாகப் போகிறார். இந்த நினைவுகள் எல்லாம் ஒரு மைக்ரோ வினாடி நேரத்தில் செந்தில்நாதன் மைண்டில் தோன்றி அவரின் க்ரைம் ரேட்டை பெட்ரோல் விலையைப் போல ஏற்றிக் கொண்டே போனது, ஆகவே சற்றும் யோசிக்காமல் காம்பவுண்டை தாண்டிவிட்டார்.
     ஊருல எதாவது ஒரு வீட்டினுள் மறைந்து கொண்டான் எனில் அவனை பிடிப்பது சிரமம். எனவே அவன் தன் பார்வையில் இருந்து மறைந்து விட்டால் சிரமம். ஓடிக்கொண்டே கைபேசியை எடுத்து சக ஸ்குவாடான ரவிக்குமாரை அழைத்து, “யோவ் ஒருத்தன பிட் அடிச்சதுக்கு புக் பண்ணலாம்னு பாத்தேன். அவன் பேப்பரோடு எஸ்கேப் ஆய்ட்டான்யா, நீ வண்டிய எடுத்துக் கிட்டு வா, அப்படியே எஸ்கார்ட் வந்திருக்கிற போலீஸ் காரரையும் வரச்சொல்லு” என்று மூச்சு வாங்கியபடியே பேசி முடித்தார்.
     “என்னய்யா டி.இ.ஓ வர நேரத்துல ஏழரைய கூட்டுற, சரி வரேன்” என்று வண்டியை எடுக்க விரைந்தார்.
     “போலீஸ் சார், ஒரு பய பேப்பரோட ஓடுறான் வாங்க போய் புடிக்கணும்”
     இந்த வேலை நம்ம பணிகளின் வரம்புக்குள் வருமா என்று ஒரு நிமிடம் யோசித்தார். நம்ம வேலை தேர்வு மையத்தை பாதுகாப்பது தான். இந்த தொரத்திப் புடிக்கிற வேலை எல்லாம் இல்லை என்று யோசித்தவர், “சார் கோவிச்சிக்காதீங்க, நான் எக்சாம் சென்டர் பாதுகாப்புக்குத் தான் வந்துருக்கேன். நான் இங்க இல்லாம இருந்தா சரிபடாது” என்று கறாராக மறுத்துவிட்டார்.
     தலையில் அடித்துக் கொண்டு வண்டியை விர்ரென்று கிளப்பிக் கொண்டு பறந்தார். செந்தில் நாதன் லொங்கு லொங்கு என்று மூச்சு வாங்க பரிதாபமாக ஓடிக் கொண்டு இருந்தார்.
     வண்டியை பார்த்தவுடன் அவசரமாக ஓடுகிற வண்டியிலேயே தாவி ஏறமுயன்று தலைகுப்புற விழுந்து தொலைத்தார். நல்வாய்ப்பாக அங்கே புல் தரையாக இருந்ததால் பற்களின் எண்ணிக்கைக்கு பங்கம் வரவில்லை.
“சார் இதென்ன சைக்கிளா?, நிறுத்துறேன், பொறமையாஏறுங்க, எந்தப் பக்கமா ஓடினான்?”
     “சார் இதே தெருவுல தான் ஓடினான்”
     இருவரும் வண்டியில் ஏறி அவனை துரத்திக் கொண்டு போனார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனை காணவில்லை. இவர் வேகத்திற்கும் அவன் வேகத்துக்குமான இடைவெளியில் அவன் மறைந்து விட்டான்.
     அங்கே பள்ளியில் பசங்க பரிட்சை எழுதிக் கொண்டு இருக்கும் போதே ஆசிரியர்கள் அவரவர் அறை வாசலில் வராண்டாவில் நின்றபடி வியந்து போய் இதே ரீதியிலான பழங்கதைகளை பேசலாயினர். செந்தில்நாதன் இன்று கொண்ட ஆவேசம் ஒட்டு மொத்த தேர்வையும் பாதித்து விட்டது எனலாம்.
     அந்த நேரம் சரியாக டி.இ.ஓ ஜீப் உள்ளே நுழைந்தது. வண்டியில் இருந்து இறங்கியதும் டி.இ.ஓ தேர்வுகள் நடைபெறும் அறைகள் நோக்கி விரைந்தார். அவரோடு ஐந்து பறக்கும் படை உறுப்பினர்களும் சென்றனர். முதன்மைக் கண்காணிப்பாளர் கடப்பாரையை விழுங்கியவராய் நின்று கொண்டு இருந்தார்.
     “என்னய்யா, உங்க சென்டருக்கு ஸ்குவாட் போடலையா, ஒருத்தரையும் காணல?“
     “சார். அது வந்து, பாத் ரூம் போயிருப்பாங்க சார்“ எதற்கும் இருக்கட்டும் என்று அப்போதைக்கு சமாளித்து வைத்தார்.
     சரியாக பதிமூன்றாம் அறைக்குள் நுழைந்து விட்டார். ஒரு இடத்தில் மட்டும் பேனா பென்சில் எல்லாம் இருக்கு பரிட்சை பேப்பரை காணோம்.
     “என்னய்யா, ஒரு பயல காணோம்?”
     “சார் பாத்ரூம் போயிருக்கான் சார்” என்று தட்டு தடுமாறினார் மு.க .
     “ச்சை என்னய்யாது எல்லாரும் யாரக் கேட்டாலும் பாத்ரூம்னு சொல்றீங்க?, ஆமாம், பாத்ரூம் போறவன் பேப்பர்லாம் எடுத்துக்கிட்டா போவான்“
     “சார், அது வந்து…”
     “என்னய்யா பித்தலாட்டம் பண்றீங்க என்ன நடந்ததுன்னு சொல்லித் தொலைங்களேன்” என்று டென்ஷன் ஆனார்.
     “சார், சரவணன் பிட் அடிச்சான்னு ஸ்குவாட் சார் புடிச்சிக்கிட்டு போனாரு, அவன் காம்பவுண்ட எகிறி குதிச்சி ஓடிட்டான் சார். ஸ்குவாட் சார் ரெண்டு பேரும் தொரத்திக்கிட்டு போயிருக்காங்க சார்” என்று சக மாணவன் புட்டு புட்டு வைத்துவிட்டான். முதன்மைக் கண்காணிப்பாளர், துறைஅலுவலர் இருவரும் ஒரே நேரத்தில் தலையை சொறிந்தனர்.
     “என்னய்யா சம்பவத்தோட சீரியஸ்னஸ் தெரியாம தலையை பிராண்டிக்கிட்டு நிக்கிறீங்க. ஒருத்தன் பரிட்சை முடியறதுக்குள்ள கொஸ்டின் பேப்பரோட வெளில ஓடிருக்கான். மால் பிராக்டிஸ்னா விடைத்தாள் வைக்கணும். இப்போ அதுவும் இல்ல. பிரச்சனை பெருசாச்சுன்னா நாறிடும்யா. உங்களோட சேத்து எந்தலையும் உருளப் போகுது” உடன் வந்த பறக்கும் படை ஆசிரியரிடம் ஜீப்பில் பிபி மாத்திரை எடுத்து வர பணித்தார். தனது சர்வீஸ்லயே அப்போது தான் ஒரு பறக்கும் படை ஆசிரியர் பறந்து போனார்.
     இப்போதுதான் துறைஅலுவலர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர் இருவருக்கும் விபரீதம் புரிந்தது. ’ஏண்டா, என்னைய சாவடிக்கிறீங்க, சுகர் பேஷண்ட்ரா நானு’ என்று நொந்து கொண்டார் மு.க.
     பிபி மாத்திரையை வாங்கி டி.இ.ஓ வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரை வாயில் ஊற்றினால், அது வாயைத் தவிர எல்லா இடங்களிலும் பட்டுச் சிதறியது. ’ம்க்கும் அவசரத்துல கைய விட்டா அண்டாவுல கூட கை நுழையாது போலருக்கே’ என்று யோசித்தவாறே வாயில் தண்ணீரால் கோல் போட்டார்.
     “யோவ் வாங்கய்யா என்னன்னு போய் பாத்துட்டு வந்துடுவோம்”
     “ஜீப்ப எடுத்து திருப்பி நிறுத்துறேன் வாங்க சார்” என்று டிரைவர் விரைந்தார்.
     “ஏன், ஒரு மோளம் வாங்கி ஊரு ஃபுள்ளா தண்டோறா போட்டுட்டு வாயேன், யாராவது ஒரு வாத்தியார்ட்ட வண்டி வாங்கிட்டு ஒருத்தர் மட்டும் என் கூட வாங்க”
     இதற்கிடையே தெருவுக்குள் செந்தில் நாதனும் ரவிக்குமாரும் பைக்கில் சைக்கிள் வேகத்தில் இரண்டு பக்கமும் கண்களால் துழாவியபடி சென்றார்கள். ’எங்காவது வீட்டுக்குள் நுழைந்து இருப்பானோ?’ என்ற சந்தேகத்தோடு சென்றார்கள்.
     ஒரு முக்கில் பாதை இரண்டாக பிரிந்தது.
     “சார் எந்தப் பாதையில போயிருப்பான் சார்?“ என்றார் செந்தில் நடுக்கத்துடன்.
     “தெரியலையே” என்று எந்த பதட்டமும் இன்றி பதில் அளித்தார். இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்கிற தெளிவோடு நிதானமாக இருந்தார்.
     ”சார் நான் லெஃப்ட் சைட் போறேன், நீங்க ரைட் சைட் போங்க. யார் கண்ணில் பட்டாலும் போன் பண்ணிக்கலாம்” என்று செந்தில் கூறிவிட்டு வண்டியில் இருந்து குதித்து இறங்கினார்.
     “மறுபடியும் பார்ரா, சார் பாத்து நிதானமா தேடுங்க” என்றபடி ரைட்சைட் வண்டியை திருப்பினார் ரவி.
     லெஃப்ட் சைட் ஓடிய செந்தில்நாதன் அந்தப் பயலை துரத்தி ஓடி ஒரு குட்டிச் சுவற்றை தாண்டி சாகசம் செய்த விஷயத்தை தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.
     ஆளுக்கொரு திக்கில் பிரிந்து தேடிய இருவரும் ஒன்று கூடினர். ரவிக்குமார் அப்பழுக்கில்லாமல் பளீர் வெண்மைநிற உடையில் இருந்தார். செந்தில்நாதனோ துணிவெளுக்கும் பவுடர் விளம்பரத்தில் வரும் சுட்டிப்பயலைப் போல இருந்தார். ’இருக்கட்டும் இந்தக் கறை அவருக்கு நல்லது செய்யும் தானே?’
     “என்ன வாத்தியாரே ஆச்சு, யார எதுக்கு தொரத்திக்கிட்டு ஒடியாந்திங்க?”
     “அய்யா, ஒரு பய பரிட்சை பேப்பரோட பப்ளிக் பரிட்சை ஹால்ல இருந்து ஒடியாந்துட்டான். அவன கூட்டிட்டு போகலன்னா பெரிய சிக்கலாயிடும்”
     “அட நம்ம சீனிவாசன் மொவன் சின்னவன்தான் இந்தப் பக்கம் ஓடினான். கையில பரிச்ச அட்ட வேற வச்சிருந்தான். வாங்க அவனோட அத்த வீட்டுப் பக்கமாத்தான் ஓடினான்” என்றபடி செந்தில்நாதன் காதில் தேனையும் வயிற்றில் பாலையும் ஏக காலத்தில் வார்த்தார்.
     அந்த புதைசாக்கடைக்கு பக்கத்தில் ஒரு இருநூறு அடி தொலைவில் அவனோட அத்தையின் ஒட்டு வீடு இருந்தது. பின்னால் ஆடுகள் அடைக்கும் பட்டி கீற்று வேய்ந்த கதவெல்லாம் போட்டு இருந்தது.
     இடது புறத்தில் இருந்து செந்தில்நாதன், ரவிக்குமார் மற்றும் கிராமத்து பெரியவர் அந்த வீட்டை நெருங்கினர். வலது புறத்தில் இருந்து, டி.இ.ஓ, உள்ளூர் ஆசிரியர் ஒருவர் மற்றும் துறை அலுவலர் நெருங்கினர். முதன்மைக் கண்காணிப்பாளர் மயக்கமுற்றதால் அவரை தெளிவித்து அங்கேயே அமர வைத்துவிட்டு வந்திருந்தனர்.
     ”ஏம்மா, சரவணன் இந்தப் பக்கம் பரிச்சைப் பேப்பரோடு வந்தானா? நாங்க எல்லோரும் அவனத் தேடிக்கிட்டுத் தான் வந்திருக்கிறோம்”
     வெள்ளையுஞ்சொள்ளையுமா ஏழெட்டு பேர் வந்த கேட்டதால், “சரவணன நான் பாத்தே ஒரு வாரம் ஆகுது. அவன் பரிச்சை ஆரம்பிச்சதில் இருந்து இந்தப் பக்கம் வரவே இல்லைங்க” என்று அண்ணன் மகனை காப்பாற்ற முயன்றார்.
     பெயரியவர் பால் வார்த்த வயிற்றில் இப்போது இந்தம்மா புளியை கரைத்தார். செந்தில்நாதனுக்கு கால்களுக்கு கீழே பூமி நழுவுவது போல் உணர்ந்தார். ரவிக்குமாரை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
     “ஏம்மா, நான்தான்மா மாவட்டக் கல்வி அதிகாரி, அவன் வந்திருந்தான்னா சொல்லிடு. அவன் செஞ்சது சாதாரண குற்றமில்ல. இருந்தாலும் அவன மன்னிச்சு பரிச்சை எழுத வைக்கிறேன். நீ என்னை நம்பலாம்” என்று டி.இ.ஓ உறுதியளித்தார்.
     அவர் வார்த்தைகளால் சற்று தெம்பான அந்த பாசக்கார அத்தை அவரது அண்ணன் மகனை வெளியே வரப் பணித்தார்.
     ”டேய் சரவணா, பயப்படாம வாடா, பரிச்சை எழுதலாமாம். இல்லன்னா உன் வாழ்க்கையே வீணாப் போயிடும்டா”
     “அறிவுக் கெட்ட அத்த, நீ ஏன் காட்டிக் கொடுத்த? அவங்களப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது அப்படித்தான் சொல்லுவாங்க, நாளைக்கு நான் பிட் அடிச்சேன்னு பேப்பரில் போட்டு மானத்தை வாங்கிடுவாங்க”
     “தம்பி, நான் சொல்றத கேளுடா, தயவு செய்து வந்துடுடா” என்று வாசல் படி வரை சென்று கெஞ்சினார் செந்தில்நாதன்.
     செந்தில்நாதன் வாசல் படி வரை வந்ததால் உள்ளே நுழைந்து பிடித்துவிடும் சாத்தியம் இருந்ததையும் அத்தை வீட்டில் பின்வாசல் இல்லாத பாதுகாப்பற்ற நிலையையும் எண்ணி நொந்துகொண்டான் சரவணன்.
     யாரும் எதிர்பாரா வண்ணம் ’குபீர்’ என்று பாய்ந்து வெளியே ஓடினான் சரவணன். ஓடிய வேகத்தில் ஆடு கட்டும் கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு ஆட்டுக் கொட்டாயில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.
     செந்தில்நாதனோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் மெல்ல உள்ளே சென்று பரிச்சை அட்டையோடு க்ளிப் போடப்பட்டிருந்த பரிச்சை பேப்பர் மற்றும் வினாத்தாள் இவற்றை சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டு கிளம்ப தயாராக பைக் அருகே வந்துவிட்டார்.
     “யோவ் என்னய்யா, கிளம்பிட்டே, அந்தப் பய அந்த கொட்டாய் உள்ளார கயிற்றோட போய் கதவ சாத்திக்கிட்டு இருக்கான். செத்து கித்து தொலைச்சிட்டான்னா நாம எல்லோரும் கூண்டோட உள்ள போக வேண்டியது தான்” என்று கடும் கோபத்தோடு சீறினார் டி.இ.ஓ
     “நாம என்ன சார் பண்ணமுடியும்”
     “அவன காப்பாத்த என்ன வழின்னு பாருய்யா? மேல ஏறி கீத்த பிரிச்சி உள்ள எறங்கலாமான்னு பாரு”
     சரவணனின் அத்தை போட்ட கூச்சல் குழுமியிருந்த மக்களில் எவரோ அளித்த தொலைபேசி தகவல்கள் என அங்கே பெரிய கும்பல் கூடிவிட்டது.
     “எம்புள்ளய கொல்லத்தான் இப்படி கும்பலா பொறப்பட்டு வந்தீங்களாய்யா?” என்று தலையில் அடித்துக் கொண்டு ஓடி வந்து பொத்தென்று ஆட்டுக் கொட்டாய் வசலில் வந்து விழுந்தார் சரவணன் அம்மா.
     கிராமத்து இளைஞர்கள் இருவர் ஏணிபோட்டு கூரையில் ஏறினார்கள். செந்தில்நாதனும் டி.இ.ஓ வின் கோபப் பார்வையை எதிர் கொள்ள இயலாமல் கூரை மேல் ஏறி ஒளிந்து கொண்டார்.
     அரிவாள் கொண்டு கீற்றுகளை அறுத்து எறிந்தனர். அங்கே உள்ளே, சரவணன் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு இருந்தான். இவர்கள் உள்ளே இறங்குவதற்குள் தட்டியினால் செய்யப்பட்ட கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே இரண்டு பேர் நுழைந்து அவனை கொத்தாக அள்ளி விட்டனர்.
     மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது. மீண்டும் ஒரு மூன்று பத்து மார்க் கணக்குகளை பிட் அடித்து எழுத அனுமதிக்க வேண்டும். மீண்டும் அறைக்குள் சென்று எழுதமாட்டேன், தேர்வுக் கட்டுப் பாட்டு அறையில் அமர்ந்து எழுத அனுமதிக்க வேண்டும். என்கிற முப்பெரும் கோரிக்கைகளுடன் பரிச்சை எழுத வருவதற்கு சம்மதித்தான்.
     இவர்கள் சைடில் இருந்தும் சரி என்று ஒப்புக் கொள்ளப் பட்டது.
     ஒரு பிரச்சனை சுமுகமாக முடிந்ததில் அனைவரும் நிம்மதியாக கலைந்தனர்.
     அன்று இரவு மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு செந்தில்நாதன் “சார், நாளைக்கு எனக்கு எங்க சார் ஸ்டேண்டிங் ஸ்குவாட் டியுட்டி போட்டு இருக்கீங்க” என பவ்வியமாக வினவினார்.
     “சர்வீஸ் முடியறவரைக்கும் தேர்வு சம்மந்தமான எந்த வேலைக்கும் உங்கள போடக்கூடாதுன்னு டி.இ.ஓ என்னைக் கூப்பிட்டு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்” என்ற டி.இ.ஓ அலுவலக சிப்பந்தி இவரது பதிலை எதிர்பாராமலே வெடுக்கென்று இணைப்பைத் துண்டித்தார்.
     ’அப்படி நாம என்ன தப்பு செஞ்சோம்?’ என்று யோசனை செய்தபடியே செந்தில் நாதன் புரண்டு படுத்தார்.
    
    
    
    
    
    



    

    
    
    
      
    
    
    

    

4 comments:

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...