அன்பென்ற ஆயுதம்
”டேய் இந்த லாக்டவுன்ல வாத்தியாருவல்லாம் சும்மா
தானே இருக்கானுவ, அவனுங்களுக்கு இப்போ எதுக்குடா சம்பளம் கொடுக்குறாய்ங்க?“- இது குப்பன்.
”டேய் அவனுங்க எப்போ தாண்டா வேலை செஞ்சிருக்கானுவ,
சும்மா சாக்பீஸ பிடிச்சி அப்படியும் இப்படியும் எழுதிட்டு பரிச்சைன்னா செவப்பு இங்க்கால
ரெண்டு கோடு போடுறானுவ. அவனுங்களுக்கு இப்போ மட்டும் இல்ல எப்பவுமே கொடுக்குற சம்பளம்
வேஸ்ட்டு டா” – இது சுப்பன்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த பெரும்பாலான
மிஸ்டர் பொதுஜனத்தின் மதிப்பீடு தான் மேலே உள்ளது.
“டேய் இந்த மருதமுத்து வாத்தியார தெரியுமா உனக்கு?
நமக்கு கூட கணக்கு நடத்துனாரே!” என்று ஏதோ சொல்ல வந்தான் ரவி.
“ஏய் அவரு வாத்தியாரே இல்லடா” என்று இடை மறித்தான்
அன்பு.
சிங்கப்பூரில் பெரிய கப்பல்கட்டும் நிறுவனத்தில்
சீனியர் மெக்கானிக்காக ஆறு இலக்க சம்பளம் பெறும் அன்பு என்கிற அன்புச்செல்வன் விடுமுறைக்காக
தாயகம் வந்திருந்தான். மேலே கண்டது அவனுடைய பள்ளிகால சிநேகிதன் ரவிச்சந்திரனுடனான உரையாடல்
தான் அது. ரவி மருதமுத்து வாத்தியாரை நினைவு படுத்திவிட்டான். எப்போது அவரை நினைத்தாலும்
அந்த பள்ளி கால சம்பவம் நினைவுக்கு வந்து விடும். அப்புறம் தூக்கம் கெட்டுவிடும். மீண்டும்
அவனது நினைவுகள் அந்த நாளை நாடிச் சென்றது.
அன்று அரையாண்டு பரிட்சை விடைத்தாட்கள் வழங்கிக்
கொண்டு இருந்தார் மருதமுத்து.
“டேய் என்னடா பரிட்சை எழுதி இருக்கீங்க? ஒரு பயலும்
அவனுக்கான உண்மையான தகுதி என்னவோ அதை எட்டவே இல்லை. எல்லோரையும் நூற்றுக்கு நூறு வாங்கவா
சொல்றேன். அட்லீஸ்ட் பாசாவது செய்ய க்கூடாதா?” என்றபடி அடுக்கி வைக்கப் பட்ட விடைத்தாட்களை
நீளவாக்கில் மடித்து சணல் போட்டுக் கட்டியிருந்த பண்டலை பிரித்தார். மேசையில் பிரம்பு
வீற்றிருந்தது.
”பத்தாயிரத்து இருநூற்றி ஒன்று, வாடா, ஆதி ஒரு கிராஃப் ஜாமண்ட்ரி கூட போடமாட்டியாடா. ஒனக்கு
இந்த இருபது மார்க்க போடறதுக்குள்ள எனக்கு வேர்த்து வடிஞ்சிடுச்சி”
“சார், என்ன அடிங்க சார்” என்றபடி பிரம்பை எடுத்த
சார் கையில் கொடுத்து கையை நீட்டினான். வகுப்பே கொள்ளென்று சிரித்தது.
“ஒன்ன அடிக்கறதால இந்த இருபது இருபத்தி அஞ்சா
ஆகும்னா கூட அடிக்கலாம், உனக்கு வி.எம்.எஸ்.எஸ் எதுவுமே கிடையாது போடா” என்று பேப்பரை
விசிறியடித்தார். வகுப்புக்கே அவர் கூறியதற்கான அப்ரிவேஷன் “வெட்கம் மானம் சூடு சொரணை
என்று தெரியும் என்பதால் மறுபடியும் சிரித்து அடங்கினர்.
“இருநூற்றி ரெண்டு, அன்பு, நீ வாடா என்ன நீ ஒரு
ஐம்பதையாவது தொடுவன்னு பாத்தா,நீ சரியா முப்பத்தி அஞ்சு வாங்கி இருக்கே. வா கைய நீட்டு,
அடுத்த முறை நிச்சயமா ஒரு எண்பதாவது எடுக்கணும் எடுப்பியா, எடுப்பியா” என்று இரண்டு
கைகளிலும் பட்டையாக இழுத்தார்.
இரண்டாவது அடியை எதிர் பார்க்காத காரணத்தினால்
சரியாக வாங்காமல் கட்டை விரல் கணுவில் விழுந்தது. பயல் துடித்து போனான். எதிர் பாராத
இந்த தண்டனையால் கோபமாகிவிட்டான்.
உடனடியாக டோட்டல் சரிபார்த்தான். பேஜ்வைஸ் டோட்டலுக்கு
போட்டு வைத்த இரண்டையும் சேர்த்து கூட்டிக் கொண்டு சென்று முறையிட்டான். ஏற்கனவே இவன்
மிகச் சரியாக பாஸ் மார்க் மட்டுமே எடுத்ததால் கோபத்தில் இருந்த மருதமுத்து சார் மறுபடியும்
முதுகில் ஒன்று வைத்து அவனை வெறும் கையோடு அனுப்பினார்.
நூற்றுக்கு நூறு எடுத்தால் மருதமுத்து சார் ஹீரோ
பேனா பரிசு வழங்குவார். அவரிடம் ஹீரோ பேனா பரிசு பெற்றோர் எல்லாம் பெரிய ஆளாகி விட்டார்கள்
என்கிற பேச்சு பழைய மாணவர்கள் மத்தியில் உண்டு. எனவே ஒவ்வொரு ஆண்டும் சாரிடம் ஹீரோ
பேனா வாங்குவதை இலக்காக வைத்து படிப்பார்கள். படிப்பில் கெட்டிக்கார மாணவர்களில் ஒருத்தியான
செல்வி நூற்றுக்கு நூறு வாங்கி இருந்தாள். அவளுக்கு ஒரு ஹீரோ பேனா பரிசளித்தார். மாணவர்கள்
கைதட்டி பாராட்டினர்.
ஒவ்வொருத்தர் பேப்பரையும் ஆய்வு செய்து பாராட்டி
திட்டி எச்சரித்து வழங்கி பின்னர் திருத்தங்களை செய்து முடிக்கவும் அந்த பாடவேளைக்கான
பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
என்னதான் வகுப்பறைகள் அழகாக இருந்தாலும் மதியத்துக்கு
பின்னர் பள்ளிக்கு முன்னால் கம்பீரமாக நிற்கும் நேச்சுரல் ஏசியான இந்த நான்கு புங்க
மரங்களின் நிழலில் வகுப்புகளை வைத்துக் கொள்ள ஆசிரியர்களுக்குள் பெரும் போட்டி நிலவும்.
“டேய் இந்த மரங்கள நான் வேலைக்குச் சேர்ந்த வருஷத்தில
வச்சோம்டா, எவ்வளவு ஜில்லுன்னு இப்போ நிழல் கொடுக்குது பாத்தீங்களா? அதனால ஒவ்வொருத்தனும்
உங்க கொல்ல, வீடு, வீதி எங்கயாவது மரத்தை நட்டு வளக்கணும். பின்னாடி அது நிழல் கொடுக்குறப்ப
உங்களுக்கே பெருமையா இருக்கும்” என்ற டயலாக்கை இதுவரை ஆயிரம் முறையாவது பசங்களிடம்
சொல்லி இருப்பார்.
“டேய் கிருபா, உங்க எய்ட்த் பி கிளாஸ் எல்லோரும்
பைய கொண்டு வந்து புங்க மரத்துக்கு அடியில போட்டுட்டு இண்டெர்வெல் போங்க. அப்புறம்
வேற யாராவது வந்து புடிச்சிக்குவாங்க” என்று ஒரு மரத்தடிக்கு துண்டு போட்டு வைத்தார்
மருதமுத்து.
நான்கு புங்க மரத்தடிகளும் அரங்கு நிறைந்த காட்சிகள்
ஓடும் சினிமா தியேட்டர் கணக்காக இருந்தது. சற்றேரக்குறைய பாதி பள்ளிக் கூடமே அங்கே
குழுமியிருந்து.
எட்டாம் வகுப்புக்குக ஆங்கிலப் பாடம் எடுப்பார்
மருதமுத்து சார். எப்போதும் மதியவேளைகளில் கதைபேசுவார். அதனுள் ஆயிரம் நீதிக் கருத்துகள்
பொதிந்து இருக்கும். வகுப்பே சுவாரசியமாக வாயைப் பிளந்து கொண்டு சுவாரசியமாக கதை கேட்டுக்
கொண்டு இருந்தது.
அந்த நேரம் பார்த்து தலைமுடியெல்லாம் கலைந்து அழுதபடி ஓடிவந்தாள் காலையில்
பேனா பரிசு வாங்கிய செல்வி.
“என்னம்மா ஆச்சு?”
“என்னொட மேத்ஸ் நோட்ட இந்த அன்பு பய அக்குச்சுக்கா
கிழிச்சி வச்சிட்டான் சார், என்னன்னு கேட்டதுக்கு தலையில கொட்டிட்டான் சார். வாடி போடின்னு
வேற திட்டுறான் சார்” என்று சொல்லி தேம்பித் தேம்பி அழுதாள்.
”டேய் கிருபா, ஓடிப் போய் அந்த அன்பு பயல கூட்டிக்கிட்டு
வாடா” என்றபடி முழுக்கை சட்டை பட்டனை கழட்டி சுருட்டி விட்டுக் கொண்டார்.
“டேய் அன்பு அண்ணன் இன்னைக்கு செம்மயா வாங்கப்
போறாங்கடோய்” என்று எட்டாம் வகுப்பு மாணவர்கள் கிசுகிசுத்தார்கள்.
அன்பு கொஞ்சம் திமிறாகவே வந்து அலட்சியமாக பார்த்தபடி
நின்றான்.
“என்னடா செல்விய அடிச்சியா?, அவ நோட்ட கிழிச்சியா?”
“அடிச்சது உண்ம ஆனா நோட்ட நான் கிழிக்கல” என்று
திமிறாக பதில் சொல்லி மருதமுத்துவின் கோபத்தை ஏற்றினான்.
“என்னடா நான் கேக்குறன் நீ திமிறா பதில் சொல்ற”
என்று வெடுக்கென்று எழுந்து அவனை முடியை பிடித்து இழுத்து முதுகில் விலாசிவிட்டார்.
“சார், செல்வி நோட்ட கிழிச்சது அன்பு இல்ல சார்
லெட்சுமி சார்” என்று ராஜேஷ் ஓடிவந்த போது அன்புக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்து.
இந்த கலேபரத்தில் நான்கு வகுப்புகளும் அன்பை பரிதாபமாக பார்க்க அவனோ அவமானத்தில் கோபத்தின்
உச்சிக்கே சென்றுவிட்டான்.
“என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடிக்கமாட்டீங்களா”
என்று சுல்லென்று கேட்டு விட்டுச் சென்றுவிட்டான்.
“டேய் என்னடா, மேத்ஸ் சாரையே எதுத்து பேசிட்டாங்க
அந்த அண்ணன்?!” என்று மறுபடியும் மருதமுத்து சார் காதுபடவே கிசுகிசுத்தனர்.
மருதமுத்து சார் இந்த சிச்சுவேஷனை இதுவரை எதிர்
கொண்டது கிடையாது. தப்பு செய்யாத ஒருத்தனை தண்டித்து விட்டோமே என்று மிகுந்த குற்ற
உணர்வுக்கு ஆளாகியிருந்தார். அவனை கூப்பிட்டு சமாதானப் படுத்துவதா இல்லை அப்படியே விட்டுவிடுவதா
என்கிற குழப்பத்தில் இருந்தார். சரி போவட்டும் நாளைக்கு கூப்பிட்டு பேசிக்குவோம் என்று
அமைதியானார். ஆனாலும் மனது குற்றவுணர்ச்சியில் கொந்தளித்தவண்ணம் இருந்தது.
அறிவியல் ஆசிரியர் அறிவழகனும் மருதமுத்துவும்
நண்பர்கள். இருவரும் வசிப்பதும் பக்கத்து டவுன்தான், எனவே இருவரும் ஒரே வண்டியில் வருவதுதான்
வழக்கம். ஒரு வாரம் இவர் வண்டி எனில் மறுவாரம் அவர் வண்டி.
“சார் கௌம்பலாமா?“ என்ற படி பையோடு வந்து விட்டார்.
“சார் வாங்க போலாம்” என்ற படி தனது வண்டியை ஸ்டார்ட்
செய்தார். இந்த வாரம் அவர் வண்டி என்பதால் அவரே ஒட்டினார்.
வண்டியை எடுத்துக் கொண்டு காம்பவுண்டைத் தாண்டி
வந்து நிறுத்தி அறிவழகனை ஏற்றிக் கொண்டார்.
“கேன“ என்று தொடங்கும் கெட்ட வார்த்தையில் தொடங்கி
சில கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்டி விட்டு ”என்னடா என்னையே பொழுதனிக்கும் அடிப்பியா?”
எனக் கூறிவிட்டு ஓடிவிட்டான் அன்பு.
அறிவியல் ஆசிரியர் அவனை ஓடிப் பிடிக்க எத்தனித்தார். ஆனால் மருதமுத்து
அவரை தடுத்து, ”வேண்டாம் விடுங்க சார், சீன் கிரியேட் பண்ண வேண்டாம்” என்று கூறிவிட்டார்.
“என்னடா சார இப்படி வஞ்சிபுட்ட, அவரு நம்ம சாருடா”
“போடா தேவையில்லாம என்னையே அடிக்கிறான் அந்தாளு”
“ச்சீ போடா அவரப் போயி டா போட்டு பேசுற, அவரு நம்மகிட்ட எவ்வளவு ஃபிரண்ட்லியா
நடந்துகிறாரு. அவரு ரெண்டாவது அடி அடிச்சப்ப நீ கைய இழுத்துக்கிட்ட அதனால கட்டை விரல்ல
விழுந்துடுச்சி”
“ஆனா, செல்விய குட்டிட்டேன்னு அவ்வளவு பேரு முன்னால அடிச்சிட்டாருல்ல“
“டேய் அதுக்குன்னு அவர கெட்ட
வார்த்தையில திட்டுவியா? போடா”
அன்புவுக்கு தான் தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வு லேசாக மேலெழுந்தது.
அடுத்த நாள் அந்த குற்றவுணர்விலும் பயத்திலும் பையோடு கிளம்பி கொல்லைப்புறம் சென்று
விட்டு சரியாக பள்ளி விடும் நேரம் வீடு திரும்பிவிட்டான்.
பள்ளியில் நுழைந்தவுடனே மருதமுத்து அன்பைத் தேடினார். ப்ரேயர் டைமிலும்
அந்த வகுப்பு நிற்கும் வரிசையை கண்களால் துழாவினார். காணவில்லை. ஒரு வேளை இந்த பிரச்சினையால்
அவன் வரமாட்டானோ என்று பயந்தது போலவே அவன் இன்று வரவில்லை.
இந்த விஷயம் பள்ளியில் தீயாய் பரவியது. பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அறை
மற்றும் அலுவலக அறை எங்கு பார்த்தாலும் அன்பு திட்டிய விஷயம் தான் தலைப்புச் செய்தியாக
ஓடிக்கொண்டு இருந்தது.
“சார், அந்தப் பயலோட அப்பாவ கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க சார் அவன் டிசிய
கிழிச்சிடுவோம். உங்களயே திட்டிட்டான்னா மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி பயப்படுவான்”
என்று தமிழாசிரியர் ரங்கநாதன் ஆவேசமானார். ஜன்னலுக்கு வெளியே இருந்த ரமேஷ் என்கிற பத்தாவது
மாணவன் இதை நின்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
“சார், அவன் சின்னப் பய சார், இந்த அடோலசன்ட் பீரியட்ல எல்லா உணர்ச்சியும்
ரொம்ப அதிகமாத்தான் பொங்கும். நேத்து வேற அவன நான்கு முறைக்கும் மேல அடிச்சிட்டேன்
வேற அதனால கொஞ்சம் அப்சட் ஆகிட்டான். திங்க கிழமை நான் பேசிக்கிறேன். இது சம்மந்தமா
வேற யாரும் அவன்கிட்ட எதுவும் கேக்காதீங்க சரியா?” என்று கறாராக கூறிவிட்டார்.
மருதமுத்து சாருக்கும் மனசு பாரமாகவே இருந்தது. இந்தப் பிரச்சனையால் அவன்
வராமல் போய்விடுவானோ என்று பயந்தார். திங்கள் கிழமை வரவில்லை என்றால் வீட்டுக்கேச்
சென்று அழைத்து வருவது என்று தீர்மானித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்புவின் நண்பன் ரமேஷ் அவனை கரும்புக் கொல்லைக்கு அழைத்துச்
சென்றிருந்தான். பொங்கல் சீசன் தொடங்கியிருந்தது. செங்கரும்பை கொல்லையிலேயே வெட்டிச்
சாப்பிடலாம் என்ற ஆசைக்காட்டி அழைத்துச் சென்றிருந்தான்.
“டேய் மேத்ஸ் சார் ஒன்னய வெள்ளிக் கிழமை கேட்டுக்கிட்டே இருந்தாருடா, பசங்க
எல்லாம் நீ சார கெட்ட வார்த்தையில வஞ்சதால ஒன்ன ஸ்கூல விட்டு நீக்கப் போறாங்கன்னு பேசிக்கிறானுங்கடா.
சாருங்க கூட அவங்க ரூம்ல உனக்கு டிசி கொடுக்கணும்னு பேசிக்கிட்டு இருந்தத நானே பார்த்தேன்டா”
“அதெல்லாம் பண்ணமாட்டாங்கடா, நான் நாளைக்கு ஸ்கூல் வருவேன்”
“டேய் வந்தீன்னு வை மேத்ஸ் சார் உன் தோல உரிச்சிடுவார், வெள்ளிக் கிழமையே
உன்ன வெறித்தனமா கேட்டுக் கிட்டே இருந்தாருன்னு பசங்க சொன்னானுங்க, அத்தோட மட்டும்
இல்ல உங்க அப்பாவ அழைச்சிக்கிட்டு வரச்சொல்லி டிசிய கிழிக்கப் போறாங்க”
“திங்க கிழமை வருவேண்டா, கட்டடிச்சேன்னு தெரிஞ்சா எங்கப்பா விசாரிப்பாரு,
சார கெட்ட வார்த்தையில வஞ்சேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான் என்ன கொன்னே புடுவாரு” என்றான்.
ரமேஷ் தூவிய பய விதை அன்புவின் மனதில் விருட்சமாய் வளர ஆரம்பித்தது.
’வஞ்சதுக்கு டிசி குடுத்துடுவாங்களா? டிசி குடுக்கறதுக்கு முன்னாடி எப்படியும்
அப்பாகிட்ட சொல்லிடுவாங்க. அவரு என்ன கொன்னே போடுவாரு. என்ன பண்றதுன்னு தெரியலையே’
என்று பலவாறாக சிந்தித்தபடி இருந்தான்.
“டேய் அன்பு சாப்பிட வாடா,
என்ன ரொம்ப சிந்தனையா இருக்கற?” என்றார் அன்புவின் அம்மா.
“புள்ள ரொம்ப நல்ல மார்க் வாங்கி
இருக்காருல்ல, அதான் பப்ளிக் பரிச்சையில எப்படி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கறதுன்னு யோசனையில
இருக்காரு”
’இவரு பேசறத பார்த்தா நாளைக்கு விஷயம் தெரிஞசதும் என்ன கொல்லத்தான் போறாரு’
’போனாலும் போகாட்டியும் நாளைக்கு பிரச்சனைதான்’
அப்போதுதான் அன்பு தன் எதிர்வீட்டில் இருந்த சிவக்குமார் ஒன்பதாம் வகுப்பு
படித்த போது பணத்தை எடுத்துக் கொண்டு மெட்ராஸ் ஓடிவிட்டது நினைவுக்கு வந்தது. அப்புறம்
அந்த வருச தீபாவளிக்குத்தான் வந்தான். ஜீன்ஸ் ஷூ வெல்லாம் போட்டுக்கிட்டு பந்தாவா வந்தான்.
’ஆனா, படிப்பு வீணா போகுமே’ என்கிற சிந்தனையும் வராமல் இல்லை.
’நாளைக்கு பள்ளிக்கு போவோம், அந்த ஆளு எதாவது திரும்பவும் என்கிட்ட வம்பு
பண்ணுனாருன்னா கத்தியால சொருகிட்டு மெட்ராஸ் ஓடிவிட வேண்டியது தான். என் வாழ்க்கையே
வீணாப் போகப் போகுது அந்த ஆள சும்மா விடலாமா?’ என்ற சிந்தனையே இரவு முழுவதும் அவனை
ஆட்கொண்டது.
’என் படிப்பே பாழாக போறது அந்த ஆளால் தான் அதுக்கு பழிவாங்காம நான் ஓட
மாட்டேன்’ என்று தனக்குத் தானே சத்தியம் செய்து கொண்டான்.
புத்தகப் பைக்குள் வீட்டில் இருந்த நல்ல கூர்மையான காய்கறி வெட்டும் கத்தியை
எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான். அம்மா பணம் வைக்கும் டப்பாவில் இருந்து ஒரு ஐநூறு
ரூபாய் எடுத்துக் கொண்டான். கிட்டத்தட்ட விடியற்காலைதான் உறங்கினான்.
அடுத்தநாள் பள்ளிக்கு கிளம்பும் போது வீட்டை ஒரு முறை கடைசியாக பார்ப்பது
போல பார்த்துக் கொண்டான். திரும்பவும் இரவு நினைத்தவற்றை எல்லாம் மீளவும் நினைவுக்கு
கொண்டுவந்து சற்று கோபத்தை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு நடந்தான்.
ப்ரேயரில் நிற்கும் போதே மருதமுத்து சார் கண்களால்
பத்தாம் வகுப்பு பி வரிசையை துழாவி அவனைக் கண்டு கொண்டு திருப்தி அடைந்தார்.
’ஆகா, இப்போதே என்னைப் பார்த்து வைத்துக் கொள்கிறாயா?
நீ மட்டும் என்மேல கைய வை இன்னைக்குத்தாண்டா உனக்கு கடைசி நாள்’ என்று கறுவிக் கொண்டான்
அன்பு. இப்போது அவனது பெயரில் மட்டுமே அன்பு இருந்தது.
திங்கள் கிழமை முதல் பாடவேளையே பத்தாம் வகுப்பு
பி பிரிவிற்கு கணக்கு பாடம் தான்.
“குட்மார்னிங் சார்” என்று கோரஸ் பாடினார்கள்
மாணவர்கள்.
“வெரி குட் மார்னிங், உக்காருங்க”
“இன்னைக்கு தொடு கோடு ரிவிஷன் பண்றோம். இந்த வகுப்புக்கு
அப்புறம் ஒரு பயலுக்கும் தொடுகோடு வரையத் தெரியாம இருக்க கூடாது. அப்படி எவனாவது இருந்தீங்கன்னா
அவனுக்கு டிசி தான் பாத்துக்கோங்க” என்று விளையாட்டாக எச்சரித்தார்.
’எனக்குத்தான் தொடுகோடு ப்ராப்ளம், அந்த ஆளு என்னய
தான் ஜாடையா திட்டுறார். இன்னைக்கு என்ன தொடுகோடு வரையத் தெரியல என்பதை காரணம் காட்டி
பழி வாங்கப் போறார்’ என்று எண்ணமிட்டபடி பேண்ட்
பாக்கெட்டில் இருந்த ஐநூறையும் புத்தகப் பையில் இருந்த கத்தியையும் தடவிப் பார்த்துக்
கொண்டான்.
“இவ்வளவு தாண்டா தொடு கோடு, சொல்லிக் கொடுத்தா
கழுத கூட கப்புன்னு புடிச்சிக்கும்” என்று வரைந்து முடித்து விட்டு பசங்களுக்கு அதே
மாதிரி இரண்டு படங்களுக்கான அளவுகளை எழுதிப் போட்டு பசங்களை வரையச் சொன்னார்.
கோபம், பயம், பதட்டம் என்கிற கலவையான உணர்ச்சியில்
இருந்த அன்புவிற்கு வகுப்பில் சார் நடத்தியது ஊமைப் படமாகத்தான் ஓடியது. அவனுக்கு ஒன்றும்
விளங்கவில்லை. அவன் இப்போது இருக்கும் நிலையில் ஒரு நேர்க்கோடு கூட வரைய முடியாது.
வெறுமனே நோட்டை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
பாடம் நடத்தியதில் பாதி நேரம் அன்பை பார்த்து
பார்த்து தான் பேசினார் மருதமுத்து சார். அவன் ஒன்றும் வரையவில்லை என்பதையும் மிகுந்த
சிந்தனை வயப் பட்டிருக்கிறான் என்பதையும் கண்டுகொண்டார்.
“என்னடா இதக் கூட வரையத் தெரியாம உக்காந்து இருக்கே”
என்று பொய்க் கோபம் காட்டியபடி அன்பை நெருங்கினார் மருதமுத்து சார்.
அன்புவிற்கு அந்தக் கோபம் உண்மைக் கோபமாகவே தெரிந்தது.
அவர் அவன் பெஞ்சை நோக்கி நெருங்கி வந்தார். அவர் தன்னை நோக்கித்தான் வருகிறார் என்பதை
அறிந்து கொண்டு தனது பையில் இருக்கும் கத்தியின் கைப்பிடியில் கை வைத்துக் கொண்டான்.
நேராக அவனது பெஞ்சுக்கு அருகில் வந்து அவனது தோள்பட்டையை
அழுத்தி அவனை தள்ளி அமர வைத்துவிட்டு பெஞ்சில் அமர்ந்து அவனது பையில் கை விட்டார்.
அன்பு பதறியபடி அவனது கையை இழுத்து விட்டு, “சார்
என்னசார் வேணும்” என்றான் பதட்டத்தோடு
“ஏன்டா இப்படி வேர்க்குது உனக்கு? ஜாமென்ட்ரி
பாக்ஸ எடுடா உனக்கு நான் வரைஞ்சி தரேன்” என்று உரிமையாக கூறினார்.
அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரியும் படி மெதுவாக
தொடுகோடு வரைந்து காண்பித்தார்.
“என் முகத்தில என்ன இருக்கு நோட்ட பாருடா”
“சரிங்க சார்” என்றபோது கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது.
குரலும் உடைந்து விட்டது.
“அவ்வளவு தான் தொடு கோடு, ஒண்ணும் கம்ப சித்திரமில்ல
புரியுதா? நான் அன்னைக்கே சொன்ன மாதிரி அடுத்த பரிட்சையில எண்பது வாங்கி காட்டணும்”
என்றபடி வரைந்து முடித்து எழுந்து கொண்டார்.
“நூறு எடுத்துக் காட்டுறேன் சார்” என்று நம்பிக்கையோடு
நிமிர்ந்து அமர்ந்தான்.
அன்றோ அதற்கு பின்போ ஒரு போதம் அந்த சம்பவம் குறித்து
மருதமுத்து சார் கேட்கவே இல்லை. எதுவும் நடக்காதது போலவே அவனிடம் இன்னும் நெருக்கமாகவும்
அன்பாகவும் நடந்து கொண்டார்.
நினைவலைகளில் இருந்து மீண்டு தற்காலத்திற்கு வந்தான்.
“என்ன சொன்னேன் ரவி?“
“மருதமுத்து சார, அவரு வாத்தியார் இல்லன்னு சொன்ன”
“ஆமாண்டா, அவரு வாத்தியாரு இல்லடா, என் சாமிடா
அவரு. அவரு மட்டும் என்ன சரியான நேரத்தில சரியான முறையில ஹேண்டில் செய்யாம விட்டுருந்தா
என்னோட வாழ்க்கையே மாறிப் போயிருக்கும்”
“என்னடா சொல்ற?”
அவனிடம் முழுக்கதையையும் சொல்லி முடித்தான்.
”இது
தாண்டா வாத்தியாருங்க செய்யும் வேலை. சரியான நேரத்தில் மாணவர்களை தடம் மாறாம காப்பாத்தி
நெறிபடுத்துவதைவிடவா பெரிய வேலை இருக்க போகுது?”
”பிள்ளைங்களுக்குள்ள இருக்குற திறமைய கண்டு பிடிக்கிறது,
சோர்வுற்று இருப்பவர்களுக்கு உற்சாகமளிப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது, நம்முடைய பலம்
என்னவென்று நாம் அறியச் செய்வது என்று பல வேலைகளை அவர்கள் பாடப்புத்தகத்த தாண்டியும்
செய்யுறாங்க”
“ஆமாண்டா, நானும் கூட அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கேன்”
“ஆனா, இப்போ ஆசிரியர்கள் என்பவர்கள் இந்த சமூகத்திற்கே
தேவையில்லை அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் வேஸ்ட் என்றெல்லாம் பேசறத பாக்கும் போது
சிரிப்பாத்தான் வருது”
“இவங்க இவ்வளவு வேலை செஞ்சி இருக்காங்க, இவர்களால
இவ்வளவு லாபம் என்று அளவிட்டு அளக்குற வேலையா வாத்தியார் வேலை?, அவர்களின் வேலைகளை
அளந்து பார்க்க அளவுகோல் எல்லாம் கிடையாது. அவர்களுக்கு இதுதான் வேலை என்றெல்லாம் இல்லை.
இதப் புரியாத சமூகம் அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை பார்த்து பொருமுவதால் வெளிப்படும்
வார்த்தைகள் தான் அவை”
“டேய் சார பத்தி எதுவோ சொல்ல வந்தியே?“
“ஆமாடா, அவரு நம்ம ஊரு பள்ளிக்கு எதோ வேலையா வந்து
இருக்காரு. அதான் உன்னக் கூட்டிப் போகலாம்னு வந்தேன்”
“அப்படியா, வா போய் பார்த்துவிட்டு வருவோம்” என்று “சாமி“ பார்க்க புறப்பட்டான் அன்பு.
“அப்படியா, வா போய் பார்த்துவிட்டு வருவோம்” என்று “சாமி“ பார்க்க புறப்பட்டான் அன்பு.
Superb.கணித ஆசிரியர்களின் மனநிலை மிக தெளிவாய்
ReplyDelete