Friday, July 3, 2020

கிளுக்கி (சிறுகதைத் தொகுப்பு)


புத்தகம் – கிளுக்கி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் – பாப்லோ அறிவுக்குயில்
பதிப்பகம் – NCBH

     தோழர் பாப்லோ அறிவுக்குயில் அவர்கள் அரியலூர் மாவட்டம் வென்மாண்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் கவிஞராக பல பரிசுகளும் பாராட்டும் பெற்றுள்ளார்.
“உடல்நலிவின் காரணமாக பண்ணை வேலைக்கு வரமறுத்த ஒரு ஏழைக் கூலி விவசாயியை அவரது முதலாளி அடித்து இழுத்துச் சென்ற காட்சியை கண்ணுற்றதே எனக்கு எழுதுவதற்கான முதல் விதையை தூவியது” என்கிறார்.
     தொண்ணூறுகளில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து இருக்கிறார். இவரது முதல் சிறுகதை “கிராமம் நகரம்” 93 நவம்பரில் கணையாழியில் வெளி வந்து இருக்கிறது.
     இவரது சிறுகதைகள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் வலிகளை ரத்தமும் சதையுமாக பதிவு செய்கிறது. அனேகமாக எவர் எழுத்திலும் இதுவரை பிரதிபலிக்காத அரியலூர் மாவட்ட கிராமங்களின் வட்டார வழக்குகள் மிக அழகாக துள்ளியமாக இவரது கதைகளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வட்டார வழக்கு என்றாலே சென்னை நெல்லை பாஷைகள் தான் நம்ம ஏரியாவெல்லாம் அந்த எல்லைக்குள் அடங்காது என்று இருந்த எனக்கு இவரது கதைகள் படித்த பின்புதான் ”அடடே நம்ம ஏரியாவுல இப்படித்தானே பேசுவோம்” என்று உரைத்தது.
     சமீப காலங்களாக இவரது பேனா ஏனோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.
     கிராமம் நகரம்
“குடியான பசங்களெல்லாம் அசிங்கமா வய்யரானுவம்மா, தூரப்போயி குந்துடான்னு அடிக்கிறானுவ” என்கிறான் வாசு. அவனது அம்மா, “வாத்தியார்ட்ட சொல்ல வேண்டியது தானடா” என்கிறார்
     “காலனித் தெருதானடா நீ தூர ஒக்காந்தா என்ன கொறஞ்சாப் போயிடுவே, படிக்குறதுல ஒரு மயிரையும் காணல, ஒனக்கெல்லாம் எதுக்குடா ரோஷம்” – இது வாத்தியார்
     இப்படியாக பல புறக்கணிப்புகளால் வரலாற்றில் பல ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு காணாமல் போனது. அவ்வாறே வாசுவும் ஏழாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்கு போடுகிறான்.
   அந்த காலகட்டங்களில் பெரும்பான்மையானோர் வேலை தேடி போகும் ஊர் சென்னை தான். வாசுவும் அங்கே போய் ஒரு ஹோட்டலில் கிளீனராக வேலைக்குச் சேர்கிறான்.
     கிராமத்தில் அவனது அப்பா சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகி அடிபட்டுச் செத்தது, இவன் ஆண்டுக்கு ஐநூறு ரூபாய் பண்ணை வேலைக்கு ஆண்டை வீட்டில் சென்றது என கிராமத்து கொடுமைகளும், வேலைசெய்வோர் தங்குமிடத்தின் நாற்றம் குமட்டும் சூழல், அங்கு நடக்கும் ஓரினச்சேர்க்கை பாலியல் அத்து மீறல் உழைப்புச் சுரண்டல் என நகரத்துக் கொடுமைகளும் மாறி மாறி அவனது நினைவில் நிழலாடுகின்றன.
     கிராமத்தில் இருக்கும் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைகள் மிகத்துல்லியமாகவும் எதார்த்தமாகவும் கதையில் படம் பிடித்துக் காட்டப் பட்டிருக்கின்றன.
 பொதி
     இந்தக் குறுநாவலில் கலியன் வடிவு தம்பதியினர். கிராமத்தில் விவசாயக் கூலி வேலை என கைக்கும் வாய்க்கும் எட்டாமலே பொழப்பை நடத்துகின்றனர். பிள்ளைகள் வளர்ப்பு தம்பி படிப்பு என செலவு மேல் செலவு ஆனால் வரவுக்கு வழியில்லை.
     எல்லோரும் போவது போல சென்னைக்குச் சென்று மூட்டை தூக்கிப் பிழைக்கப் போகிறான் கலியன். அங்கேயும் ஒரு நாள் நள்ளிரவு வேளையில் வயிறு கலக்கியதால் “ஒதுங்க“ செல்கிறான். அந்த நேரம் பார்த்து போலீஸ்காரர் பார்த்து விடுகிறார். சந்தேகக் கேஸ் போட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். கையில் சுத்தமாக காசு இல்லை. எட்டணா மட்டுமே இருக்கிறது எனக் காட்டுகிறான். லத்தியை சுழற்றுகிறார் போலீஸ் காரர். இவ்வளவு நேரமும் அடக்கப்பட்ட வயிற்றுப் போக்கு வந்து விடவே எதேச்சையாக போலீஸ்காரரை தள்ளி விடுகிறான். போலீஸ் லாக்கப்பில் வைத்து பொள பொளவென்று பொளந்து விடுகிறார்கள். உழைத்து கொடுத்து வைத்திருந்து காசு அம்புட்டும் கொடுத்து வெளியே எடுத்து ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள். வடிவோ, “நீ பொழச்சி வந்ததே போதும்” என்கிறாள். இவரது பெரும்பாலான கதைகளில் போலீஸ் காரர்கள் வில்லன் ரோலில் தான் வருகிறார்கள்.
நடவு
     இந்தக் கதையில் கிராமத்து பெண் வேலையாட்களிடம் ஆண்டைகள் செய்யும் பாலியல் அத்து மீறலைக் கூறியிருக்கிறார்.
கிளுக்கி
     வயல்வெளியில் கிளுக்கியை ஆட்டிக் காண்பித்து நண்டு பிடிக்கும் சுதாகர். அவனுக்கு அம்மா அப்பா இல்லை. உடல்நலிவுற்ற தாத்தாவிடம் தான் வளர்கிறான். அப்பா மனைவியை விட்டுவிட்டு வேறு யாருடனோ குடும்பம் நடத்திக் கொண்டு சுத்தமாக ஊர்ப்பக்கம் வருவதில்லை. சுதாகர் சிறுவனாக இருக்கும் வரை இருந்த அம்மா காணாமல் போய்விட்டாள். அதற்கான விடை இரண்டு இளைஞர்கள் பேசியதை கேட்டபோது கிடைக்கிறது.
     மனைவியை சந்தேகப் பட்டு அடித்து உதைத்து விட்டு சுதாகரின் அப்பா போனவர்தான் வரவில்லை. தனியே இருந்த அம்மா வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் ஒடிவிட்டார். மறைந்திருந்து கதையை கேட்ட சுதாகர் அழுதபடி செல்கிறான்.
வெயில் பறவை
     ஒரு மரப் பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு வளையல் விற்கும் செட்டியார்களை அந்தக் காலங்களில் கிராமங்களில் பார்க்கலாம். அவர்கள் தான் அந்தக் கால நடமாடும் ஃபேன்சி ஸ்டோர்.
     அதுமாதிரியான ஒரு வளவிக்காரர் ஆதரவின்றி ஒண்டிக்கட்டையாக இருக்கிறார். பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஒற்றை மகன்.
     ஒரு உச்சி வெயில் நாளில் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது. கையில் காசு இல்லை. எப்படியாவது இன்று வளையல் விற்று காசு தேத்தி சாயங்காலம் ஆஸ்பத்திரி கூட்டிப் போய்விடலாம் என்று சொல்லிச் செல்கிறார்.
     ஓரளவு வியாபாரமும் நடக்கிறது. பேருந்தில் வீடு திரும்பினால் செலவாகிவிடுமே என்று யோசித்து காசை மிச்சம் பிடிக்க தலையில் வளவி பெட்டியோடு நடந்து செல்கையில் போலீஸ்காரர் வழியில் பார்த்து மிரட்டுகிறார். பையனுக்கு உடம்பு சரியில்லை வைத்தியம் பார்க்கத்தான் காசு வைத்திருக்கிறேன் என்று கெஞ்சியும் விடாமல் காசை பறித்துக் கொள்கிறார் போலீஸ்காரர். தாமதமாக சலிப்போடு வீடு திரும்பினால் வீட்டின் முன்னால் ஒரே கூட்டம். பையன் இறந்து கிடக்கிறான்.
     சூரி
     இந்தக் கதையில் வரும் மூப்பாத்தி என்கிற பாட்டியின் கணவன் சாதிய அடக்குமுறையை எதிர்த்த காரணத்தால் கொல்லப் படுகிறான். தனியாளாய் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறாள் மூப்பாத்தி. இறுதியில் அவளது பேரன் மூப்பாத்தியின் கணவனை கொன்றவனின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான் என்று “திக்“ என முடிக்கிறார்.
வீடு
     இந்தக் கதையில் ஆர்பிஎஃப் போலீசாக இருக்கும் கோபால் ரேவதி தம்பதியினர். குவார்ட்டர்ஸ் பாதுகாப்பாக இல்லை என்று சொந்த ஊருக்கு அருகாமை டவுனில் தங்கி வேலைக்குப் போகிறான் கோபால்.
     தினந்தோறும் வரும் ஊர்க்காரர்கள் உறவினர்கள் அவர்களுக்கான சாப்பாடு மற்றும் வழிச் செலவு என்று திக்குமுக்காடிப் போகிறார்கள்.
     அப்பப்பா இந்த ஊரே வேண்டாம் நாம பாதுகாப்பா இல்லைன்னாலும் பரவால்லை என்று குவார்ட்டர்ஸ்க்கே போய்விடலாம் என்று எண்ணமிட்டு இருக்கையில் கணவன் தற்போது இருக்கும் டவுனுக்கே மாற்றல் வாங்கி வந்து விடுகிறான்.
     அடி
     இந்தச் சிறுகதையில் வயதானவர்கள் எவ்வளவு தூரம் அனைவராலும் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள் என்பதை உருக்கமாக சொல்லி இருக்கிறார்.
     வயதான பாட்டி ஒருவர் தனது மகளையும் பேரனையும் பார்க்க தின்பண்டம் நிறைந்த பையோடு பேருந்து ஏற நெடுஞ்சாலையோர சிற்றூரில் காத்து நிற்கிறார். எந்த பேருந்தும் நிற்கவில்லை. நிற்கும் பேருந்திலும் பிதுங்கும் கூட்டம். அப்படி அடித்து பிடித்து ஏறிய பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடப்படுகிறார். கீழே விழுந்து அடிபடுகிறார்.
     இந்தக் கதையை படிக்கும் ஒருவர் டிரைவராக இருந்தால் சிற்றூரில் காத்திருக்கும் வயதானவர்களை நிறுத்தி ஏற்றிக் கொள்வார். சக பயணியாக இருந்தால் வயதானவர்களை பரிவுடன் நடத்துவார்கள். அவ்வளவு உருக்கமான படைப்பு
வலி

அனைத்துக் கதைகளும் ஏதோ பொசுக் பொசுக் கென்று சின்னஞ்சிறிதாக இருப்பதாக நினைக்காதீர்கள். எல்லாக் கதைகளும் வழக்கமான சிறுகதைகளை விட நீளமானவை தான. அந்தக் கதையில் வரும் வாழ்வியல் அனுபவங்களோடு படிக்கும் போது நீங்களும் அந்த கிராமத்து வாசத்தில் அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தை கிட்டுவீர்கள். அவ்வளவு விரிவாக கதைக்களத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.
நூல் அனேகமாக அனைத்து நூலகங்களிலும் கிடைக்கிறது.


No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...