Wednesday, July 1, 2020

கருப்பி தற்கொலை செய்துகொண்டாள்



 ”அப்பப்பா, சரியான வெய்யில்”. பிப்ரவரி மாத முதல் வாரமே கதிரவன் தனது வேலையை முழுவீச்சில் பார்க்க ஆரம்பித்து விட்டான். என்னவோ பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் இருப்பதால் வெக்கையில் இருந்து ஓரளவு தப்பித்தோம்.
     வாதாங்கொட்டை மரநிழல் பந்தல் போல் படர்ந்திருந்த திறந்தவெளி வகுப்பில் அமர்ந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் முதலாவது திருப்புதல் தேர்வு கணிதப் பாட விடைத்தாளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தேன்.
     இந்த மல்லுக்கட்டு வருடா வருடம் செய்வது தான். எப்போதுமே அந்த 70 என்கிற எல்லைக் கோடு எட்டாக் கோடாக இருக்கும் மாணவர்களை கையைப் பிடித்து இழுத்து எட்ட வைக்கும் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆமாம், ’எப்போதுமே என்னால் கணிதப் பாடத்தில் பாஸ் பண்ணவே முடியாது’ என்கிற எதிர்மறை எண்ணத்தை ’அட என்னால கூட கணிதப் பாடத்தில் பாஸ் பண்ண முடியுதே’ என்கிற நேர்மறை எண்ணமாக மாற்றவே இந்த மல்லுக்கட்டு.
     சுதர்சன் என்கிற குட்டபாஸ் மற்றும் மணிமேகலை என்கிற கருப்பி இவர்களின் பேப்பர் தான் ரொம்ப சவாலாக இருந்தது. எழுதாத பக்கங்களில் மதிப்பெண் போட்டாக் கூட எழுபது வராது போல இருந்தது.
          இந்த கருப்பி என்னுடையச் செல்லப் பிள்ளை என்று ஆசிரியர்கள் அனைவருமே கிண்டல் பண்ணுவார்கள். கருப்பி ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தாள். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மாத்திரத்தில் யார் முதலில் சாருக்கு வணக்கம் வைப்பது என்ற போட்டி ஆறாம் வகுப்பு குழந்தைகளிடம் பார்க்க முடியும். நான் பைக் ஓட்ட ஆரம்பித்த புதிது, பள்ளியின் குறுகலான வாசலுக்குள் அந்த மிகக் குறுகலான சாரத்தின் மீது ஏற்றி நுழைக்க வேண்டும். அதனால் சற்று வண்டியை நிறுத்திவிட்டு நீள அகலங்கள் சார்ந்த சிந்தனை வயப்பட்டிருந்த நேரம் பார்த்து வணக்கம் வைக்கும் போட்டியில் விருட்டென வேகமாக சாரத்தில் சறுக்கியபடி வந்து பொத்தென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள் கருப்பியும் சிவப்பியும். ரெண்டு பேருக்கும் முட்டி சிராய்த்து காயம். அவர்களை பக்கத்து பி.எச்.சி க்கு அனுப்பி முதலுதவி செய்ய வைத்தேன். ரெண்டு பேர் பெயரும் மணிமேகலை எனவே கருப்பு மணிமேகலை சிவப்பு மணிமேகலை என்று அழைக்க ஆரம்பித்து பிறகு சோம்பேறித்தனம் காரணமாக கருப்பி சிவப்பி என்று நான் தான் நாமகரணம் சூட்டினேன். ரெண்டு பேருமே ஏழு வருடமாக இணைபிரியா தோழிகள்தான். நான் கருப்பீ.. என்று அழைத்த மாத்திரத்தில் அவள் முகத்தில் வெள்ளந்தியாய் ஒரு நூறு வாட்ஸ் வெளிச்சம் படரும். மேல்நிலை வகுப்பு வந்தபோது ஒரு முறை மணிமேகலை என்று அழைத்ததற்கு கோபித்துக் கொண்டாள்.
     இந்த குட்டபாஸ் மற்றும் கருப்பி எல்லாம் மாணவர்களை சகஜ நிலையில் பழக வைத்து என்னோடு நெருங்கவைக்க நான் வைத்திருக்கும் யுத்தி. தயக்கமின்றி பேசுவார்கள் சந்தேகம் கேட்பார்கள். அதே வகுப்பில் கும்கி என்கிற குபேந்திரனும் இருக்கிறான். நீங்கள் நினைப்பது சரிதான் அவன் உடல் சற்று பருத்தவன். அவனுக்கு சவால் விடும் வகையில் அஜித் என்கிற ”கொம்பனும்” உண்டு. ஒரு முறை வகுப்பே நிசப்தமாக வகைக்கெழு சமன்பாடுகள் பாடத்தை கவனித்தபடி இருந்தது. நிசப்தத்திற்கு காரணம் ஒரு பயலுக்கும் புரியலை என்கிற பெரும் கவலை தான். அந்த நேரம் பார்த்து அன்று தாமதமாக அஜித் உள்ளே நுழைய குட்டபாஸ் “கொம்பன் எறங்கிட்டான்டா” என்று கும்கி பட டயலாக்கை சரியான நேரத்தில் கூறவும் வகுப்பின் இறுக்கம் தளர்ந்து சிரிப்பலையில் மூழ்கியது. வகுப்பு முடியும் வரையில் அவ்வப்போது நடத்துவதை நிறுத்தி நிறுத்தி சிரித்தேன்.
”டேய் விருமாண்டி, இந்த குட்டபாஸ், கருப்பி எங்க இருந்தாலும் புடிச்சி இழுத்துக்கிட்டு வாடா, இவ்வளவு கேவலமா எழுதினா எப்படி பாஸ் ஆவாங்க, நான் எப்படி சென்டம் மெடல் வாங்குறது” என்ற படி மேசைக்கு அருகில் இருந்த குச்சியை துழாவினேன்.
     “சார்!... சார்!...சார்!...” என்று அழுதபடி திக்கித்திணறினாள் திவ்யா.
     “என்னம்மா பதட்டப்படாம சொல்லு”
     “சார், கருப்பி மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்துட்டா சார்” என்ற திவ்யாவின் கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தது.
     “என்னம்மா சொல்ற?“ நடுக்கம் எனது தொண்டைக்கு மாறியது.
     சற்று நேரத்தில் பள்ளி வளாகத்தை பதட்டம் தொற்றியது. அன்று தலைமையாசிரியர் மீட்டிங் சென்றிருந்த காரணத்தால் மூத்த வேதியியல் ஆசிரியை பொறுப்பில் இருந்தார். அவரும் சக பெண் ஆசிரியர்களும் பனிரெண்டாம் வகுப்பை நோக்கி ஓடினர்.
     நானும் பேப்பரை மேஜையினுள் வைத்து விட்டு, வேகவேகமாக நடந்து சென்று, வகுப்பறை வாசலில் கூட்டம் கட்டிய இதற வகுப்பு மாணவர்களை அப்புறப் படுத்தினேன். கருப்பிக்கு காற்று வருமளவு இடைவெளி இருக்குமாறு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினேன். உடலில் எந்த அசைவும் இன்றி துவண்டு போய் கிடந்தாள்.
     “இந்த மாத்திரையா தான் சார் இருக்கும், இந்த மாத்திரை அட்டைய தான் சார் அவ கையில சுருட்டி வச்சிருந்தா” என்று அழுதபடியே திவ்யா கூறினாள். பெண்பிள்ளைகள் அனைவரும் கண்ணீர் விட்டபடி கவலையோடு நின்றனர். முக்கியமாக செவப்பி தேம்பித் தேம்பி அழுதபடி நின்றாள்.
     மாத்திரை அட்டை பதினைந்து மாத்திரைகளுக்கு உரியது. அட்டையை பார்த்து எதுவும் விளங்கவில்லை. ஷெடியுல் ஹச் டிரக் என்று போட்டிருந்தது. விசாரித்ததில் கருப்பியின் தாத்தா அந்த மாத்திரையை பயன்படுத்துவார் என்று பிறகு தெரிந்தது
     முகத்தில் தண்ணி அடித்தும் அவள் கண்களில் அசைவு தெரிந்தாலும் பேச இயலவில்லை. கையை தூக்கி ஏதோ சொல்ல முயன்று திரும்ப துவண்டு விழுந்தது.
     சமயோசிதமாக ஓடிச்சென்று பக்கத்து மெடிக்கல் கடை காரரை அழைத்து வந்து மூச்சிறைத்தபடி நின்றான் கொம்பன்.
     “பல்ஸ் ஒண்ணும் டவுன் ஆகல, இது மனவியாதி உள்ளவர்கள் உறக்கத்திற்காக கொடுக்கும் தூக்க மாத்திரை மாதிரி தான் உள்ளது. எத்தனை மாத்திரை சாப்பிட்டுருப்பான்னு தெரியல. எதுக்கும் நூத்தியெட்ட கூப்பிட்டு விடுங்க சார்” என்றார் மெடிக்கல் கடைக் காரர்.  
     .     “என்னது நூத்தி எட்டா?“ என்று பதறினார் பொறுப்பில் இருக்கும் வேதியல் ஆசிரியை.
     “மேடம் அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணுங்க” என்றேன்.
     “சார் அவங்க கிட்ட போன் இல்ல, தமிழ் அம்மா கிட்ட போன் வாங்கி அவுங்க சித்திக்கு சொல்லிட்டேன் சார். கொல்லை வேலையா இருந்தாங்க, உடனே அவங்க அம்மாவோட வரேன்னு சொன்னாங்க” என்றாள் கருப்பியின் தெருவைச் சேர்ந்த கண்மணி.
     ”மேடம், வேணும்னா வண்டியில வச்சி பக்கத்து டவுன் பி.ஹெச்.சிக்கு கொண்டு போயிடலாம்” என்றபடி வந்தார் இவ்வளவு நேரம் தலைமறைவாக இருந்த இயற்பியல் ஆசிரியர்.
     பள்ளி வளாகத்தினுள் நூற்றி எட்டு ஆம்புலன்ஸ் வருவதை யாருமே விரும்ப வில்லை. ஏனென்றால் இந்த விஷயம் தீயாக ஊர் முழுவதும் பரவி பலவாறான கதைகளை கட்டி அதில் ஆசிரியர்களை வில்லனாக நிறுத்திவிட சமூகம் எப்போதும் தயாராகவே உள்ளது.
     மறுபடியும், இரண்டு விரல்களை நீட்டிய பின்பு கைகள் துவண்டு கீழே விழுந்தது. எல்லோரும் அவளது பின்புறத்தையே பார்த்த படி சற்ற அருவெறுப்போடு அசைந்தார்கள்.
     “மேத்ஸ் சார் உங்க வண்டிய எடுத்துக்கிட்டு வாங்க. சீக்கிரம் சார்” என்றார் வேதியியல் ஆசிரியை.
     “நானா?” என்ற சற்றே பதறினேன். என்னதான் கண்டிப்பான ஆசிரியர் மாணவர்களை பிரம்பினை எடுத்து தெறிக்க விடுபவர் என்றெல்லாம் பெயர் எடுத்து இருந்தாலும் ரத்தத்தையோ வாந்தியையோ கண்டால் எனக்கு கைகளில் நடுக்கமும் தலை சுற்றலும் ஏற்படும் அளவுக்கு பயந்த சுபாவம் கொண்டவன் நான் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம்.
     “சார், வெரசா வாங்க சார், வேற யாருக்கும் பெரிய வண்டி ஓட்ட தெரியாது. பசங்கள நம்பிலாம் அனுப்ப முடியாது. நானும் என்னோட ஸ்கூட்டியில பின்னாடியே வரேன்”
          “சார் எனக்கு டபுள்ஸ் அடிச்சே பழக்கம் இல்லை இதுல கருப்பியவும் திவ்யாவையும் சேத்து அதுவும் இந்த நிலமையில என்னால ஓட்டமுடியாது சார்” என்றார்.
     பைக்கில் ஆனமட்டும் முன்னால் நகர்ந்து நான் அமர்ந்து கொள்ள கருப்பிய அப்படியே தூக்கி அமர வைத்து பின்னால் அமர்ந்த திவ்யா கருப்பியோடு சேர்த்து என் சட்டையை பிடித்துக் கொண்டாள்.
     பக்கத்து ஊர் பி.ஹச்.சி சீருடையில் மயங்கிய நிலையில் ஒரு மாணவியைக் கண்டதும் பரபரப்பானது.
     அங்கே அந்த நேரம் மருத்துவர் இல்லை. பணியில் இருந்த நர்ஸ் பல்ஸ் பார்த்தார், மாத்திரை அட்டையை பார்த்தார் எத்தனை மாத்திரை என்று விசாரித்தார் எங்களுக்கு தெரியவில்லை என்றதும்  ஒரு டியுபை எடுத்து கருப்பியின் மூக்கில் சொருகி விட்டார்.
     உடனடியாக “சார் எத்தனை மாத்திரைன்னு தெரியாம நாம ரிஸ்க் எடுக்க இயலாது அதனால நீங்க மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல் கொண்டு போயிடுங்க” என்று அவரே நூத்தியெட்டுக்கும் போன் செய்தார்.
     கெமிஸ்ட்ரி டீச்சரையும், திவ்யாவையும் நூற்றி எட்டில் ஏற்றிவிட்டு நான் எனது வண்டியில் பின் தொடர்ந்தேன். அரைமணிநேரத்தில் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல் எமர்ஜென்ஸி வார்டில் இருந்தோம்.
     பள்ளிச் சீருடைக்கு ஒரு தனி மரியாதை உண்டு. குழந்தைகள் எந்த விதமான ஆபத்தில் இருந்தாலும் பள்ளிச் சீருடையில் இருக்கும் போது காப்பாற்றும் எண்ணம் எல்லோருக்கும் சற்று கூடுதலாகவே இருக்கும்.
     உடைமுழுவதும் ரத்த சகதியாய் அள்ளி வந்து போட்டிருந்த ஒரு ஆக்ஸிடெண்ட் கேசை பார்த்துக் கொண்டிருந்து மருத்துவர்களில் பாதிபேர் சீருடையில் மயங்கி கிடந்த கருப்பியை உடனடியாக அட்டெண்ட் செய்தார்கள்.
     “எப்போ சாப்பிட்டா?”
     “ஒன்றரை மணி நேரம் ஆயிடுச்சி சார்”
     “பல்ஸ் எல்லாம் நார்மலாத்தானே இருக்கு. எத்தனை மாத்திரைன்னு தெரியலன்னு சொல்றீங்க. ஒண்ணும் ஆபத்தில்ல, ஸ்டொமக் வாஷ் பண்ணினா சரியா போயிடும். கூட பேரண்ட்ஸ் வந்து இருக்காங்களா?“
     “இல்ல சார் வந்து கிட்டு இருக்காங்க”
     டாக்டரின் வார்த்தைகளில் எங்கள் பதட்டம் சற்றே தணிந்தது. பக்கத்து பேக்கரிக்கு போய் டீச்சருக்கும் திவ்யாவுக்கும் வெஜ் பஃப்ஸ் வாங்கி வந்து கொடுத்தேன். நான் அங்கேயே பஃப்ஸ் மற்றும் ஸ்ட்ராங்கா ஒரு காஃபியும் குடித்து விட்டுத் தான் வந்தேன்.
     கெமிஸ்ட்ரி டீச்சர் பதட்டத்தோடு ஓடி வந்தார்,”சார், சார், போலீஸ் எல்லா பெட்லயும் விசாரிச்சிக்கிட்டு வராங்க சார் வாங்க நாம வெளிய போயிடலாம்” என்றார்.
     “பரவால்ல, ஏன் டீச்சர் போகணும் நம்ம மேல ஒண்ணும் தப்பில்லையே!!”
     “சார், அதெல்லாம் கேக்கமாட்டாய்ங்க, எதாவது கோத்துவிட்டுடுவாய்ங்க” என்றார். அவர் சொல்வது நியாயமாகப் பட்டதால் நாங்கள் நைசாக வெளியேறினோம்.
     “சார், கருப்பியோட அம்மா தாத்தா எல்லாம் வராங்க சார்”
     ஒரு பாதி கிராமமே பதட்டத்தோடு ஓடிவந்து கொண்டு இருந்தது.
     “ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டாரு, அனேகமா நாளைக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்“ என்று தைரியம் சொல்லி உள்ளே அனுப்பினேன்.
     அன்றைய பொழுது வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு ஒன்பதாகியிருந்தது. வீட்டில் மனைவிக்கும் மக்களுக்கும் கதைசொல்லி முடித்து தூங்கப் போகையில் மணி பதினொன்று.
          ஒரு வாரத்தில் அனைத்து பரபரப்புகளும் மறைந்து போனது. ஒட்டு மொத்த பள்ளியும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.
     கடந்து போன ஒட்டு மொத்த சம்பவத்திலும் ஒரு அதி முக்கிய திருப்பம் ஒன்று உள்ளது. ஆமாம், கருப்பி அந்த அட்டையில் இருந்து இரண்டு மாத்திரைகளை மட்டும் விழுங்கி இருக்கிறாள். சும்மா விட்டிருந்தால் நன்றாக தூங்கி விழித்திருப்பாள். அவள் ரெண்டு மாத்திரை மட்டும் தான் சாப்பிட்டேன் என்று கூற மயக்க நிலையில் கூட முயன்றாள். நாங்கதான் வேறமாதிரி புரிந்து கொண்டோம். ஆனால் அந்த ரெண்டு மாத்திரை என்கிற விஷயம் அவளையன்றி யாருக்குமே தெரியாத நிலையில் எப்படி ரிஸ்க் எடுத்திருக்க முடியும். அடுத்த நாளே கருப்பி டிஸ்சார்ஜ் ஆகியிருந்தாலும் வெட்கப் பட்டுக் கொண்டு இந்த ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.
     “திவ்யா, இங்க வாம்மா”
     “சார், சொல்லுங்க சார்”
     “கருப்பி எப்போதான் ஸ்கூல் வரப்போறா?”
     “விஷயம் ஸ்கூல் ஃபுல்லா தெரிஞ்சி போனதால கூச்சப் பட்டுக்கிட்டு வரமாட்டேங்கிறா சார். முக்கியமா மேத்ஸ் சார் மூஞ்சியில எப்படி முழிப்பேன்னு புலம்பிக்கிட்டே இருக்குறா சார்”
     ”ஆமா, ஏன் மாத்திரை சாப்பிட்டாளாம்?”
     “சார் அவ ஃப்ரெண்டு செவப்பி ஒரு வாரமா பேசுலன்னுதான் அவள பயமுறுத்த மாத்திர சாப்பிட்டுருக்கா சார். ஆனா பசி நேரத்தில சாப்பிட்டதால ரொம்ப மயக்கமாகி களேபரம் ஆகிடுச்சி சார்”
     “என்னம்மா, இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டான வேலையாப் போச்சா? கிராம புரத்தில் உங்க வயது பிள்ளைகள் தற்கொலை முயற்சி என்றாலே அதற்கு ஒரே காரணம் தான் கற்பிப்பார்கள். வீணாக பெயரைக் கெடுத்துக் கொண்டாள்“
     “ஆமாம், சார் எல்லோரும் இஷ்டத்திற்கு கதைக் கட்டுறாங்க சார்”
     “நல்லா படிச்சி பாஸ்பண்ணி காலேஜ்ல சேர்ந்தா எல்லா கெட்ட பேரையும் மாத்திடலாம், அதனால நாளைக்கே ஸ்கூல் வரச்சொல்லு. நாளைக்கு வரலேன்னா மேத்ஸ் சார் வீட்டுக்கே வந்து ஒதப்பேன்னு சொன்னார்னு சொல்லு”
     “சரிங்க சார்”
     அன்று இரவு ஒன்பது மணிக்கு திவ்யாவிடம் இருந்து போன், “சார், கருப்பி நம்மள எல்லாம் விட்டுட்டு போய்ட்டா சார்!” என்ற படி வெடித்து அழுதாள்.
     எனக்கு நெஞ்சு படபடப்பில் வேர்த்துக் கொட்டியது. “என்னம்மா சொல்ற, நாளைக்கு ஸ்கூல் வருவான்னு நெனச்சனேம்மா!”
     இதுதான் நடந்தது. வேலை செய்யுற இடத்தில் நடந்த சண்டையில் கருப்பியோட அம்மாகிட்ட யாரோ ’ஓம் புள்ள மட்டும் யோக்கியமா? வவுத்துல புள்ள வாங்கி கிட்டு ஆஸ்பத்திரியில போயி கலைச்சிக்கிட்டு வந்தது எங்களுக்கென்ன தெரியாதுன்னு நெனக்கிறியா?’ ன்னு கேட்டுட்டாங்கன்னு அவங்கம்மா கருப்பிய போட்டு அடிச்சிட்டு போயி செத்துப்போடி ன்னு கோவத்துல சொல்லிட்டாங்களாம். அதனால அவ அதே மாத்திரைய பதினைந்தையும் சாப்பிட்டுட்டு கொல்லையில இருக்கிற கொட்டாயில படுத்துட்டாளாம். சாயங்காலம் காணோமேன்னு தேடிப்பாத்தா கொட்டாயில பொணமாத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க. போலீஸ் கேசாயிடும்னு நைட்டே எரிச்சிட்டாங்க.
     கருப்பி ஆறாம் வகுப்பில் வேகமாக ஓடிவந்து விழுந்து முட்டியை பெயர்த்துக் கொண்டதும்,  “என்ன சார் திடீர்னு மணிமேகலைன்னு வேற யாரோ மாதிரி கூப்பிடுறீங்க?” என்று கேட்டதும் மறுபடி மறுபடி நினைவுக்கு வந்து இரவு முழுவதும் தூக்கம் இல்லை. கட்டுப் பாடின்றி கண்களில் நீர் வழிந்தோடியது. எனது மனைவியும் கருப்பியோட அம்மாவை திட்டியபடி அழுதுவிட்டார்.
     கோபம், மகிழ்ச்சி, சோகம், கழிவிரக்கம் என எல்லா உணர்ச்சிகளுமே இந்த பதின் பருவத்தில் குழந்தைகளுக்கு உச்சத்தில் இருக்கும். தனக்கென்று ஒரு இமேஜை உருவாக்க முயலும் பருவம். பிரச்சனைகளை அணுகுவதில் பதட்டமே மேலோங்கி இருக்கும். பெரியவர்களுக்கு இருக்கும் பக்குவம் இருக்காது. பிரச்சனைகளை கையளுவதில் முதிர்ச்சியின்மை விபரீத நடத்தைகளாக வெளிப்படும். இதெல்லாம் என்னவென்று கூட படிப்பறிவு இல்லாத பெற்றோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. நாம தான் அவர்களையும் எஜூகேட் பண்ணனும்.இனிமே இந்த வெவரம் இல்லாத பெற்றோரிடம் இருந்து புள்ளைங்கள காப்பாத்தியாகணும். அடுத்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் பதின்பருவ குழந்தைகள் உளவியல் குறித்து பெற்றோருக்கும் விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதுதான் எனது செல்லப்பிள்ளையான கருப்பிக்கு நான் செலுத்தப் போகும் நிஜமான அஞ்சலி.

    

5 comments:

  1. Super sir ! Best emotional story sir,but this's real sir?

    ReplyDelete
  2. Not real as a full.
    Made up of various real incident.

    ReplyDelete
  3. அருமையான படைப்பு...சார்...

    ஒரு படைப்பின் வெற்றியே அந்தப் படைப்பில் உள்ள கதாபாத்திரத்திற்காக நாம் வருந்துவது தான்
    இல்லை
    அந்த கருப்பிக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என நினைப்பது தான்

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...