புத்தகம்
– சிலேட்டுக்குச்சி (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்
– சக.முத்துக்கண்ணன்
பதிப்பகம்
– பாரதி புத்தகாலயம்
விலை
– 110
நூலாசிரியர் சக.முத்தக்கண்ணன் அரியலூர் மாவட்டம்
விக்கிரமங்கலம் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2020
ம் ஆண்டு விகடன் விருதுகள் பெற்ற பட்டாம் பூச்சிகள் என்கிற குழுவில் ஒருவராக இயங்கும்
களப்பணியாளர். (பட்டாம் பூச்சிகள் குழு விடுமுறை நாட்களில் இணைந்து சென்று அரசுப் பள்ளிகளின்
சுவர்களை வண்ணமயமாக மாற்றி பல அழகிய ஓவியங்கள் வரைவதை ஒரு சேவையாக தமிழகம் முழுவதும்
செய்து வருகிறது.) முகநூலில் ஒரு முறை சக.முத்துக்கண்ணன் தனது மாணவர்களுக்கு தண்ணீர்
பற்றிய பாடத்தை மாணவர்களின் அனுபவங்களில் இருந்து உள்வாங்கி அவர்களைக் கொண்டே பாடத்தை
நிறைவு செய்த விஷயத்தை முகநூலில் சுவைபட பதிந்து இருந்தார். (அந்தக் கட்டுரை இந்தத்
தொகுப்பில் இல்லை) பள்ளி விக்கிரமங்கலம் என்ற உடன் ஆர்வமாகி அவருக்கு நட்பழைப்பு விடுத்து
இணைந்தேன். அந்தப் பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலருடன் ஆண்டாய்வுக்கு ஆசிரியர் குழுவோடு
நான் சென்றிருந்த போது அவர்தம் பணியை பற்றி அருகிருந்து கேட்கவும் நல்வாய்ப்பு கிட்டியது.
சரி இந்த நூலுக்கு வருவோம்.
”சிலேட்டுக்குச்சி” என்னை மிகவும் வசீகரித்த தலைப்பு.
ஆமாம், சிறுவயதில் சிலேட்டுக் குச்சியை அவ்வப்போது கடித்து திண்ணும் பழக்கம் எனக்கு
இருந்தது. மனோஜ் என்கிற குறும்புக்கார சிறுவனில்
ஆரம்பிக்கிறது கட்டுரை. ஒரு பையனுக்கு தண்டனை கொடுக்கும் போது சற்று ஓவர் டோஸ் ஆகிவிட்டால்
ஆசிரியர்களுக்கு தூக்கம் தொலைந்து போகும் என்கிற நிதர்சனத்தை கூறும் நகைச்சுவையான கட்டுரை.
ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் சூட்டும் மாணவர்கள்
குறித்த கட்டுரையில், ஒரு கண்டிப்பான ஆசிரியருக்கு எல்லோரும் பெயர்வைக்க ஆலோசிக்கும்
மாணவர்கள் குழுவில் இருக்கும் ஒருவன் ஆசிரியரின் ஈரமான உள்மனதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்.
அவன் தனக்குப் பிடித்த திண்பண்டமான “தொக்குச்சிய்யம்“ என்கிற பெயரை அவருக்குச் சூட்டிவிடுவது
நெஞ்சைத் தொடும் பதிவு.
புத்தகம் முழுவதும் ஆங்காங்கே ”பன்னீர்
சார், பன்னீர் சார்” (யாரு சார் அவரு?! பாக்கணும் போல உள்ளது!!.) மாணவர்களை அவ்வளவு
அழகாக வழிநடத்தி இருக்கிறார். அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானவராக இருந்திருக்கிறார்.
பசங்களோட எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்திருக்கிறது. வாசித்தபோது “நான் இவரைப் போல ஒரு ஆசிரியராக இருந்திருக்கேனா?”
என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
பன்னீர் சாருக்கு அடுத்தது ராமரய்யா. குழந்தைகளோடு
குழந்தையாக ஆகிவிடும் ஒரு ஆசிரியர். ”இந்த வயது பிள்ளைகள் தான் எனக்கானவர்கள். இவர்களோடு
தான் எனது பணி” என்று பிடிவாதமாக பதவி உயர்வுகளை மறுத்து பணியாற்றுபவர். பார்வையற்ற
மாற்றுத்திறனாளி ஆசிரியர் முருகன் மற்றும் ராமரய்யா இணையைப் பற்றி படித்த போது சிலிர்த்துப்
போனேன்.
வயது வந்த பெண்பிள்ளைகள் இருக்கும் பள்ளிகளில்
நிச்சயமாக கழிவறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். “சார் ஒண்ணுக்கு” என்ற கட்டுரை
நகைச்சுவையாக ஆரம்பித்து சற்று அதிர்ச்சியாக பின்பு ஆறுதலாக முடியும் போது கழிவறை வசதி
இல்லாத பள்ளிகள் மாணவியருக்கு எவ்வளவு பெரிய உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான
அவஸ்தையை கொடுக்கின்றன என்று நமக்கு பொட்டில் அடித்தமாதிரி புரிய வைக்கிறது.
ஆணுக்குள் ஒரு எக்ஸ் கட்டுரையில் அறிவியல் ரீதியான
குரோமோசோம் இணைவில் தொடங்கி பாலினசமத்துவத்தை தொட்டுவிட்டு ஆணுக்குள் இருக்கும் பெண்மையை
கூறி சிறப்பாக முடிக்கிறார்.
வண்டி வண்டியாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கும்
பள்ளிகள் மாணவர்களின் சுதந்திரத்தை எவ்வளவு மூர்க்கத்தனமாக நசுக்குகின்றன என்பதை சொல்லும்
வீட்டுப்பாடம் கட்டுரை. காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் வினாத்தாளுக்கு விடை எழுதி
வரவேண்டும் என்கிற சம்பிரதாயத்தை நான் பலமுறை என்னளவில் உடைத்திருக்கிறேன். எனக்கும்
அதிக அளவிலான வீட்டுப் பாடங்கள் கொடுப்பதில் உடன்பாடில்லை. பயிற்சிக்காக சில கணக்குகள்
மட்டும் வழங்குவது எனது வழக்கம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறேன் பேர்வழி என்று
கோடை விடுமுறையை கொடுமையான விடுமுறையாக மாற்றும் பெற்றோரைப் பற்றி வரும் கடைசி கட்டுரையான
“அவன விட்ருங்க பாஸ்” அருமை.
முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று கடவுளுக்கு
கடிதம். பெயர் கூற வேண்டாம் ஆனாலும் மனதில் உள்ளதை கொட்டிவிடுங்கள் என்று கூறிவிட்டோம்
என்றால் மாணவர்களிடம் இருந்து எத்தனை எத்தனை உருக்கமான விஷயங்கள் மனத்தடைகளை தகர்த்து
வெளியே வரும் என்பதை எங்கள் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.
அதிலும் அப்பா அம்மா இல்லாத மாணவி ஒருத்தி கடினமான பல வேளைகளில் “நமக்கும் அப்பா அம்மா
இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்“ என்கிற சிந்தனை அடிக்கடி வந்து எனது படிப்பை
கெடுக்கிறது சார் என்று எழுதியிருந்ததை படித்த போது அழுதே விட்டேன். ஆசிரியர் எழுதியுள்ள
கட்டுரையில் அந்த “தொண்ணச்சோறு“ (வழங்குபவர் வேண்டா வெறுப்பாக போடும் சோறு) என்ற வார்த்தையை
பயன்படுத்திய இடம் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது. குடிகார அப்பாவுக்கு பயந்து இரவெல்லாம்
அத்தை வீட்டில் தங்கி சாப்பிட்ட தொண்ணச்சோறு பற்றி படித்த போது குடிநோயாளிகள் எவ்வளவு
தூரம் பொறுப்பற்று தங்கள் குடும்பத்தை நிர்கதியாக்குகின்றனர் என்பதை புரிய வைக்கிறது.
Born with the Silver Spoon வகை குழந்தைகள் அரசுப்
பள்ளிகளில் இருப்பது கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சிக்கலான குடும்பச் சூழல்.
அதையெல்லாம் புரிந்து கொண்டு அவர்களை அரவணைத்து அச்சம் நீக்கி படிப்பில் ஆர்வம் ஊட்டி
அவர்களை வளர்த்து எடுப்பது எவ்வளவு பெரிய வேலை என்பதை இந்த நூலின் வழி சொல்லாமல் சொல்லி
உள்ளார் நண்பர் முத்துக் கண்ணன். தங்கள் பள்ளிவளாக நினைவுகளை மீட்டிப் பார்க்க விரும்புவோர்
வாசிக்க வேண்டிய நூல். முக்கியமாக ஆசிரியர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நூல் என்று கூறினால்
அது மிகையில்லை.
No comments:
Post a Comment