Monday, July 6, 2020

இந்து மதம் எங்கே போகிறது?



புத்தகம் –இந்து மதம் எங்கே போகிறது?
ஆசிரியர் – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்
பதிப்பகம் – நக்கீரன் பதிப்பகம் (நக்கீரனில் தொடராக வந்தது.
முன்குறிப்பு- நண்பர்களே இந்த நூல் இந்து மத சாஸ்திரங்களில் நிலவும் பல விஷயங்களை உள்ளதை உள்ளபடி ஆதாரப் பூர்வமாக போட்டு உடைத்துள்ளது. அதனால் இந்து மதத்தின் மீது மாறாத பற்று கொண்டுள்ள மென்மனத்தினர் இந்த பதிவினை தவிர்ப்பது நலம்
352 பக்கங்களை உடைய பல்க்கான புத்தகம் இது. இரண்டு மாதங்களுக்கு முன் வாசிக்க எடுத்து இரண்டு அத்தியாயங்களோடு மூடிவிட்டேன். நேற்று ஞாயிறு முழு ஊரடங்கில் அடக்கமாக அமர்ந்து வாசித்து முடித்துவிட்டேன்.
 நூலாசிரியர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். வைணவ குடும்பத்தைச் சார்ந்தவர். சிறுவயது முதல் வேதபாராயணம் மற்றும் அதன் அர்த்தங்கள் குறித்த ஆய்வுகள் செய்தவர். மகாபெரியவா என்று அழைக்கப் பட்ட “சந்திரசேகரேந்திர சுவாமிகள் உடன் நல்லதொரு நட்பை பேணியவர்.
     இந்து மதத்தில் உள்ள வேதங்கள் மற்றும் மநு இவற்றில் உள்ள கருத்துக்களை உள்ளது உள்ளபடி போட்டு உடைத்திருக்கிறார்.
     நூலில் கண்ட சில குறிப்பிடத் தகுந்த விஷயங்களை மட்டும் உங்கள் அறிமுகத்திற்காக வைக்கிறேன். (இதில் உள்ள விஷயங்களை வைத்து ஒரு தொடர் எழுதலாம் என்ற உள்ளேன்.)
     இந்த மநு என்ன சொல்கிறது? மநு என்றால் என்ன?
மநு என்பது வேதங்களின் எளிமைப் படுத்தப் பட்ட வடிவம். அதாவது வேதங்களுக்கான “கோனார் நோட்ஸ்” என்கிறார். ஆனால் நூலின் பல இடங்களில் வேதமும் மநுவும் முரண்பட்டு இருக்கும் இடங்களையும் சுட்டுகிறார்.
     அசுவமேத யாகம் குறித்து அவர் எழுதியவற்றையே இங்கே வைக்கிறேன். சற்று கவிச்சு (சற்று அடல்ட்ஸ் ஒன்லி) தூக்கலாக இருக்கும்.
     அரண்மனையில் இருக்கும் குதிரையை ஓடவிடுவார்கள். அது ஓடி திரும்பிவரும் இடம் வரையில் மன்னர் போரிட்டு வெல்வார். அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக செய்வதே அசுவமேதயாகம்.
     இதுவரையில் ஓ.கே தான். ஆனால் யாகம் செய்யும் விதம்???
     யாகத்தின் போது ஒரு ஆண்குதிரையை நிற்க வைப்பார்கள். அதன் அருகே ஒரு பெண்குதிரை இருக்கும். ஆண்குதிரையின் விரைத்திருக்கும் குறியை அரண்மனையின் ராணி அல்லது இளவரசி இரவு முழுவதும் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். யாகம் முடிந்தவுடன் யாகம் செய்த அய்யருடன் சென்று அவர்களுடன் தேகஸம்பந்தம் (அதே மேட்டர் தான்)  செய்து அவர்களை மகிழ்வித்து பின் திரும்ப வேண்டும்.
     ஆகமவிதியை காரணம் காட்டி கோவிலுக்குள் சூத்திரர்கள் (இவர்கள் தலித்துகளுக்கு மேல் பிராமணர்களுக்கு கீழ்) நுழையக் கூடாது என்கிறார்கள் அல்லவா? அப்படி நுழைந்தால் என்னவாம்?
     விக்ரகத்தில் இருக்கும் தெய்வ சக்தி வெளியேறிவிடும். பிறகு வெறும் கற்சிலை தான் அங்கே இருக்கும். இதற்கு பரிகாரம் குடமுழுக்கு செய்து கற்சிலைக்கு சக்தி அளிப்பது தான்.
     நேருவின் ஆட்சியில் பெண்களுக்கான சொத்துரிமை மசோதா கொண்டுவந்தபோது பெரியவா அதனை தீவரமாக எதிர்த்திருக்கிறார். அவர் கூறியது ” அசட்டுத்தனமா பேசாதீர், இந்தச் சட்டம் வந்தா ஸ்த்ரீ தர்மமே பாழாகிவிடும். ஸ்த்ரீகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்க கூடாது என்று மநுஸ்மிருதி சொல்லியிருக்கிறது. ஆம்படையானுக்கு அடிமையாக இருப்பது தான் பெண்ணுக்கு அழகு. பெண்கள் சொத்து இருக்கிற தைரியத்தில் இஷ்டப்பட்டவா கூட ஓடத்தான் போறா” என்று பொறிந்து தள்ளியிருக்கிறார்.
பெண்களைத் திரட்டியே “பெண்களுக்கு சொத்துரிமை வேண்டாம்” என்று கோஷம் போடவைத்து போராட்டம் செய்ய வைத்த கூத்தெல்லாம் அரங்கேறி இருக்கிறது. (இப்போ வேலையில் இருக்கும் பிராமண பொம்மனாட்டியெல்லாம் மநுஸ்மிருதியையோ ஸ்த்ரீ தர்மத்தையோ மதிக்க வில்லை என்றல்லவா அர்த்தம்?)
     ஒரு ஆதிக்க சாதியினரின் வீட்டில் தலித்துகள் நுழைந்தால் தீட்டு என்ற கருத்து நிலவி வந்த அதே காலத்தில்  அந்த ஆதிக்க சாதியினர் அய்யர் வீட்டில் நுழைந்தால் தீட்டு தான். அவர்கள் ஒருவேளை சென்று வந்தாலும் அந்த இடத்தை “ஜலம்“ விட்டு நன்னா அலம்பிடுவா தெரியுமோ?
இதே நிலை பெரியவா விற்கும் நேர்ந்துள்ளது. அதாவது சிருங்கேரி மடத்திற்கு இந்திய மடங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் நிமித்தமாக சென்றார். “வெளியூர் ஆட்டக்காரன உள்ளுர் ஆட்டக்காரன் மதிக்கறது தானே மொற” என்கிற குறைந்த பட்ச மேனர்ஸ் கூட இல்லாமல்  “இவன் திராவிட தேசத்தவன், இவனை உள்ளே அனுமதித்தால் தீட்டு” என்று கூறி வாசலோடு அசிங்கப் படுத்தி அனுப்பிவிட்டார்கள்.
     சரி என்று தமிழக அளவிலான மடங்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கிவிட்டார். ஆண்டுதோறும் மடங்களின் வருவாயில் இருந்து கூட்டமைப்பின் நிர்வாக செலவுகளுக்காக ஐந்து சதவீதம் வழங்க வேண்டும். ஆனால் மதுரை ஆதீனம் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் தெய்வத்தை தொட்டு வழிபடும் உரிமை என்கிற கோரிக்கையை வைத்த மாத்திரத்தில் “டேய், சங்கத்த கலைங்கடா” என்று நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து கவிழ்த்துவிட்டார் பெரியவா.
     இன்னொரு விஷயம் தெரியுமா?
     பெரியவா தமிழில் பேச வேண்டிய சூழல் எழுமானால் பேசிய பின்பு ஸ்நானம் பண்ணிட்டு தான் பூசை செய்வாராம். ஆமாம், நீஷ பாஷை பேசியதால் ஏற்பட்ட தீட்டை கழிப்பதற்கான பரிகாரம்.
     கணக்கில் எத்தனையோ சூத்திரங்களை பார்த்திருப்பீர்கள், ஆனால் பிரம்ம சூத்திரம் என்றால் என்னவென்று தெரியுமா?
     இதற்கு உரை எழுத ராமானுஜர் பட்ட பாடு இருக்கே. ஆமாம், காஷ்மீரில் ஒரு ஞானியிடம் கற்று தேர்ந்து உரை எழுதியிருக்கிறார். அப்படி என்னதான் அதில் உள்ளதாம்?
     “பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்து வரும் பிராமண ஆண்களுக்கே மோட்சம் கிட்டும். அய்யர் ஆத்துப் பெண்கள் ஆயினும் அவர்கள் சூத்திரர்களுக்கு நிகரானவர்கள். எனவே பெண்களும் சூத்திரர்களும் இந்தப் பிறவி போகட்டும், அடுத்த ஜென்மத்தில் நான் பிராமண ஆணாக பிறந்து மோட்சத்தை கிட்டும் வாய்ப்பை அடைய நித்தமும் வேண்டிக் கொள்ள வேண்டியது”
மோட்சம் என்றால் என்ன?
பிறப்பு இறப்பு என்ற துன்பச் சுழலில் சிக்கி சீரழிந்து நொந்து நூடுல்ஸாகி விடாமல் மீண்டும் பிறவாமை என்ற நிலையை அடைந்து ஆன்மா இறைவனோடு இன்புற்று இருக்கும் உன்னத நிலைதான் அது.
ச்சை!! இந்த நேரம் பார்த்து ”எல்லோருக்கும் மோட்சத்திற்கு செல்ல ஆசை உள்ளது, ஆனால் ஒரு பயலும் சாகத்தயாராக இல்லை” என்கிற சொலவடை ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
பிரம்மஹத்தி தோஷம் தான் இருப்பதிலேயே பெரும் தோஷமாம். (இது குறித்து பிறகு ஒரு தனி பதிவே போடலாம்) ஒன்றுமில்லை பிராமணனை கொன்றால் தொற்றிக்கொள்ளும் தோஷம். (எவ்வளவு பெரிய Defense mechanism?)
பெண்களுக்கு எட்டு வயதிற்குள் திருமணம் முடிந்தால் தான் கன்னிகாதானம் என்று பெயர். வயதுக்கு வந்த பெண்ணை மணமுடிக்காமல் வைத்திருப்பது பெரும் பாவமாம். அதற்கு தண்டனை திருமணம் ஆகும் வரை அந்தப் பெண்ணின் மாதவிடாய் உதிரத்தை அவளது தந்தை வாங்கி அருந்த வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு மாதவிடாய்க்கும் ஒரு பசுவினை பிராமணனுக்கு தானமாக வழங்க வேண்டும் (அப்பா, எவ்வளவு பெரிய தில்லாலங்கடி பாத்தீங்களா?)
தங்கமகன் படத்தில் ரஜினியும் பூர்ணிமாவும் ஆடும் போட்டிப்பாடல் ஞாபகம் உள்ளதா? அந்தப் பாடலின் இறுதியில் ஒவ்வொரு சட்டையாக இருவரும் மாற்றி மாற்றி கழட்டுவார்கள். இறுதியில் பனியனையும் கழட்டி போங்கு ஆட்டம் ஆடி ரஜினி வெற்றி பெறுவார். (பூர்ணிமா இரண்டாவது சட்டையின் போதே உஷார் ஆகியிருக்க வேண்டும்)
இதே போன்றதொரு போட்டி சிதம்பரம் நடராஜராம் சிவனுக்கும் தில்லைக்காளிக்கும் நடந்திருக்கிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் ஆடுகிறார்கள். தில்லைக்காளி வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். சிவனுக்கு பொறுக்க வில்லை. உடனே வலதுகாலை ஊன்றி இடதுகாலை ஆனமட்டும் உயர்த்துகிறார். தலைவர் ஜட்டி போடல போல, சிவனின் “சிஷ்டம்” (அய்யோ இது ரஜினி சொல்றது இல்ல, சிஷ்டம் என்றால் ஆண்குறி) வெளியே தெரிகிறது. தில்லைக்காளி நிலைகுலைந்து போய் தோற்கிறாள்.
நடராஜ மகாத்மியம் என்கிற நூலை மேற்கோல் காட்டியே தாத்தாச்சாரியார் இதை எழுதியுள்ளார்.
இன்னும் நிறை விஷங்களை தேங்காய் உடைத்தமாதிரி படீரென போட்டு உடைத்துள்ளார். அவை ஒவ்வொன்றையும் தனிப்பதிவுகளாக போடலாம் என்று உள்ளேன்.

    

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...