புத்தகம்-
ஓநாய்குலச்சின்னம்
ஆசிரியர்
– ஜியாங் ரோங்(சீன மொழியில்)
-
ஹோவர்ட் கோல்ட்ப்ளாட் (ஆங்கிலம்)
-
சி.மோகன் (தமிழில்)
நூலாசிரியர் ஜியாங் ரோங் 1946ல் பிறந்தார். குடும்பம் 1957 ல் பீஜிங் க்கு
இடம் பெயர்கிறது. 1966 ல் சென்ட்ரல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ல் படிக்கிறார்.
சீனப் பண்பாட்டுப் புரட்சிக்கு பிந்தைய காலத்தில் மாவோ அவர்களின் அழைப்பை
ஏற்று உள் மங்கோலியாவில் உள்ள ஓலான்புலாக் மேய்ச்சல் நிலப்பண்ணைக்கு ஆடு மேய்க்க அனுப்ப
பட்ட மாணவர்குழுவோடு செல்கிறார்.
11 ஆண்டுகள் அந்த மேய்ச்சல்
நிலப் பகுதியில் வாழ்கிறார். பிறகு 1978 ல் சைனீஸ் அகாடமி ஆஃப் சோசியல் சைன்ஸ் ல் சேர்ந்து
படித்து பின்பு கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு தனது 11 ஆண்டு கால மேய்ச்சல்
நில அனுபவங்களை வைத்து ஓநாய்குலச் சின்னம் என்கிற இந்த மகத்தான நாவலைப் புனைகிறார்.
2004 ல் வெளியான இந்த நாவல்
சீனாவில் மட்டும் 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இந்த நாவலுக்கு மேன்
ஆசியன் அவார்ட் கிடைத்த போதுதான் நாவலைப் பற்றியும் தன்னைப் பற்றியும் தனது புகைப்படத்தையும்
பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார் நாவலாசிரியர். (ஹேன் சீனர்கள் மீது குற்றம் சுமத்தும்
தொனி நாவலில் இருப்பதால் அச்சமடைந்து இருக்கலாம்)
இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்
பட்டு பெருவெற்றி பெற்றது. ஆங்கில மூலத்தை படித்து வியந்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்
சி.மோகன் அவர்களிடத்தில் இந்த நாவலை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். இந்த
மொழி பெயர்ப்பை வெளியிடுவதற்கென்றே அதிர்வு என்கிற பதிப்பகத்தை தானே துவங்கி அதில்
வெளியிட்டு இருக்கிறார்.
எழுத்தாளர் மாமல்லன் அவர்களின்
வழிகாட்டுதலின் பேரில் கிண்டிலில் மின்னூலாகவும் வெளியாகி ஏராளமானோர் வாசிக்கும் ஒரு
நாவலாக மாறியுள்ளது.
பெரிய அளவிலான படிப்பறிவோ
அல்லது ஆயுத தொழில் நுட்பமோ இல்லாத மங்கோலியர்கள் எப்படி பாதி உலகத்தை கதற விட்டிருக்கிறார்கள்?
அவர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல் துணிச்சல் மற்றும் போர் வியூக முறைகள் எல்லாம்
எங்ஙனம் கற்றனர். இவர்களுக்கு பயந்து தானே சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதாக படித்திருக்கிறோம்.
இவர்களின் வேட்டை மற்றும் போர் வியூகம் இவை எல்லாவற்றையும் இவர்கள் கற்றது ஓநாய்களிடம்
இருந்து தான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த நாவலைப் படித்தால் நிச்சயமாக நம்புவீர்கள்.
சீனாவின் துயரம் என்று மஞ்சள்
நதி பற்றி பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். அடிக்கடி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில்
ஈடுபட்டாலும் சீனர்களின் வளத்திற்கு பெரிய பங்களிப்பை வழங்குவது அந்த நதி என்பதால்
அதன் மீது சீனர்களுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு உண்டு. அவ்வாறானது தான் மங்கோலியர்களுக்கு
ஓநாய் மீதான பக்தி. அவற்றை தங்களது குலச்சின்னமாகவே பாவிக்கிறார்கள்.
ஓலான் புலாக் மேய்ச்சல் நிலப்பகுதியின்
பசுமையை தக்கவைப்பதற்கும் அங்கே நிலவும் பல்லுயிர்ச் சமநிலையை நீடித்திருக்கச் செய்வதற்கும்
ஓநாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை நாவலை படிக்கும் போது உணர முடிகிறது. ஆமாம்,
அந்தப் பகுதிகளில் ஓநாய்கள் அழித்தொழிக்கப்
பட்ட இருபது ஆண்டுகளுக்குள்ளாக அந்தப் பகுதியே பாலைவனமாக மாறிவிட்டிருப்பதே அதற்குச்
சான்றாகும்.
மங்கோலியர்கள் தங்கள் ஆட்டுப்பண்ணைகள்
ஓநாய்களால் தாக்குண்டாலும் கூட அவர்களுக்கு ஓநாய் குல தெய்வம் தான்.
“ஒரு ஓநாய்த் தோல் தரும் வெப்பத்தை
இரண்டு ஆட்டுத் தோல்களால் கூடத் தர இயலாது. ஆனாலும் கூட மங்கோலியர்கள் அதனை ஒருகாலும்
பயன்படுத்த துணிய மாட்டார்கள். ஓநாய்த் தோலில் படுப்பதை விடவும் குளிரில் உறைந்து சாவதையே
மங்கோலியன் தேர்ந்தெடுப்பான். இல்லாவிட்டால் அவனது ஆன்மா “டெஞ்ஞரை”(மங்கோலியர்களின்
தெய்வம்) போய்ச் சேராது என்று திடமாக நம்புகிறார்கள் என ஜியாங் ரோங் குறிப்பிட்டுள்ளார்.
அது போல மங்கோலியர்கள் இறந்த
பின் அவர்களது சடலத்தை ஓநாய்களுக்கு உணவாக ஒரு திறந்தவெளியான இடத்தில் வைத்துவிடுகிறார்கள்.
ஓநாய்கள் சாப்பிட்டால் தான் அவர்களது ஆன்மா “டெஞ்ஞரை” அடையும் என்ற நம்பிக்கை அவர்களிடம்
உள்ளது.
சரி கதைக்கு வருவோம். மாவோவின்
கட்டளைப்படி மேய்ச்சல் நிலத்திற்கு வரும் ஜென்சென் அங்கே இருக்கும் முதியவர் பில்ஜியுடன்
தங்கி ஓநாய்கள் குறித்த ஏராளமான செய்திகளையும் மங்கோலிய இன மக்களின் வாழ்வியலையும்
அறிந்து கொள்கிறான்.
ஓநாய்கள் ஆயிரக்கணக்கான அதிவேகமாக
ஓடும் மான் கூட்டத்தை கச்சிதமாக வியூகம் அமைத்து துரத்திச் சென்று தாக்கி நிலைகுலையச்
செய்து பனிச்சரிவில் வீழ்த்தி அவைகளை நீண்ட நாட்களுக்கு இரையாக்குவதை அவ்வளவு தத்ரூபமாக
விவரித்துள்ளார்.
இதே போல குதிரைக் கூட்டத்தை
அதன் மேய்ப்பர்கள் இருக்கும் போதே ஒரு முன்னிரவில் துரத்தி தாக்கி நிலைகுலையச் செய்கிறது.
குதிரையின் பின்னங்கால்களுக்கிடையில் சிக்கி நிச்சயமான மரணம் என்கிற தருவாயில் அது
ஒரு தாக்குதல் உத்தியை நிறைவேற்றுகிறது. பாய்ந்து குதிரையின் வயிற்றில் தனது முன் பற்களை
பதித்து கொக்கி போல பயன்படுத்தி தொங்கிக் கொண்டே சென்று வயிற்றை கிழித்து குதிரையை
வீழ்த்தி விட்டு போய் விழுகிறது. குதிரைகளுடனான அதன் யுத்தத்தை படிக்கும் போது அவ்வளவு ரணகளமாகவம் ரத்தக் களரியாகவும் உள்ளது.
ஓநாய்களின் மீது மங்கோலியர்கள்
நடத்தும் வீரப் பிரயோகத்தையும் நாவலில் அழகாக காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர். பில்ஜியின்
மகளான கஸ்பாய் தன்னந்தனியாக ஆடுகளைத் தாக்க வந்த ஓநாயை வாலைப் பிடித்து தடுத்து நிறுத்தி
பின் தனது மகன் மற்றும் நாய்களின் துணைகொண்டு அதன் வாலை முறித்து பின்பு நாய்களால்
கடிக்கப் பட்டு அந்த ஓநாய் உயிர் விடுகிறது. தனது குலச் சின்னம் ஆயினும் ஓநாயை வேட்டையாடுவது
தங்கள் வீரத்தின் தவிர்க்க இயலா உரைகல் என்று நம்புகின்றனர்.
ஓலான் புலாக்கில் பல்வேறு மாற்றங்கள்
அரங்கேறுகின்றன. இவர்களும் சிறிது காலம் தங்கள் முகாமை வேறு ஒரு இடத்திற்கு நகர்த்துகிறார்கள்.
இதற்கிடையில் பில்ஜியின் எதிர்ப்பையும் மீறி ஓநாய் வேட்டைக்குச் செல்லும் ஜென்சென்
ஒரு குட்டி ஓநாயை எடுத்து வந்து வளர்க்கிறான். தனது பிள்ளையைப் போல அதனை பாதுகாக்கிறான்.
ஒரு முறை அது அவனது கையை கடித்து விடவே அவன் வேண்டாம் என்று சொன்னால் கூட அவனது நண்பன்
யங் அதன் கூறான பற்களை மழுக்கி விடுகிறான்.
அனைவரின் தீவிர எதிர்ப்பால்
அதை காட்டில் விடலாம் என்றாலும் அதன் வேட்டை ஆயுதமான பற்கள் இல்லாமல் அது பசியில் வீழ்ந்து
மடிவது உறுதி என்பதால் அதனை தன்னுடனேயே வைத்து வளர்க்கிறான்.
மீளவும் இடமாற்றம் நடக்கும்
போது அந்த குட்டி ஓநாய் மூர்க்கத்தனமாக வர மறுக்கிறது. வண்டியில் கட்டி அழைத்துச் சென்றாலும்
நடக்கமறுத்து கால்களை தேய்த்தபடி முரண்டு பிடிப்பதால் ரத்தம் வருகிறது. கழுத்தை பிணைத்த
சங்கிலியில் மாட்டி தேய்ந்து கழுத்திலும் காயம். ஆனாலும் கூட அது விடாமல் போராடுகிறது.
இடமாற்றம் வாயில் ஏற்பட்ட புண்ணால்
சரியாக உணவு எடுத்துக் கொள்ள இயலாமை என ஓநாய் வலுவிழந்து போகிறது. கடுமையான காயங்கள்
உடல் ரணம் வலி பசி என அது துடிப்பதை காணச் சகியாது ஜென்சென்னே ஒரு மண்வெட்டியால் பலம்
கொண்ட மட்டும் தலையில் தாக்கி அதன் ஆன்மாவை “டெஞ்ஞரிடம்” சென்று சேர உதவுகிறான்.
பிறகுக அவனும் பீஜிங் சென்று
படித்து வேலை குடும்பம் என வாழ்க்கையை ஓட்டுகிறான். ஓய்வு பெற்றபிறகு ஒரு சமயம் தனது
நண்பனுடன் ஓலான் புலாக் வருகிறான். அங்கே கஸ்மாயின் இல்லத்தைக் காண்கிறான். ஓலான் புலாக்
மேய்ச்சல் நிலங்கள் வறண்ட பாலையாக காட்சியளிக்கிறது. அந்த ஓநாய்க் குட்டியை எடுத்த
குகைக்கு செல்கிறான். ஒரு மாணவன் தனது ஆசிரியரை சந்திக்கும் நிகழ்வு என அந்த நிகழ்வை
விவரிக்கிறார் நாவலாசிரியர். மேலும் இந்த நூலின் கையெழுத்து பிரதியை அந்தச் சுரங்க
வாயிலில் வைத்து வழிபட்டு எடுத்து வருவதாக கதையின் பின்குறிப்போடு புத்தகம் நிறைவுறுகிறது.
நான் எழுதியிருப்பவை யாவுமே
நுனிப்புல் மட்டுமே. நாவலை வாசிக்கும் போது இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. இது சற்றே
பெரிய நாவல். மேலும் மங்கோலிய மேய்ச்சல் நில வாழ்வியலை அணுவணுவாக விவரிக்கும் படைப்பு
ஆதலால் ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போல ஒரே சிட்டிங்கில் வாசிக்க இயலாது. நான்
அநேகமாக ஒரு மாதகாலம் சிறுக சிறுக இந்த நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். ஜென்சென்
ஓலான் புலாக்கில் 11 வருடங்கள் தங்கி அனுபவித்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். நானோ
கடந்த ஒரு மாதகாலமாக அவ்வப்போது எனது கற்பனையில் ஓலான்புலாக்கில் உலாவி இருக்கிறேன்.
ஓநாய்களோடு சேர்ந்து கொண்டு மான் வேட்டை குதிரை வேட்டை என ஆடி இருக்கிறேன். ஜென்சென்னோடு
சேர்ந்து கொண்டு மலைக்குகைகளில் வசிக்கும் மர்மோட்டுகளை பொறிவைத்து பிடித்திருக்கிறேன்.
மர்மோட் எண்ணையில் பொறித்த இறைச்சிகளை வாயில் நீரொழுக உண்டு களித்திருக்கிறேன். சொல்ல
மறந்துவிட்டேன் ஆளையே அலேக்காக தூக்கிச்சென்று கடித்து சுவைக்கும் மங்கோலிய மேய்ச்சல்
நிலக் கொசுக்களிடம் இருந்து தப்பி வந்து தான் இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டு இருக்கிறேன்.
சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பு
அபாரம். வேற்றுமொழி நாவலை வாசிக்கிறேன் என்பது பெயர்களை வாசிக்கும் போது மட்டுமே உணர்ந்தேன்.
அனைவருமே தவறவிடக் கூடாத ஒரு அருமையான படைப்பு.
No comments:
Post a Comment