Wednesday, December 8, 2010

குழந்தைகள் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியா?

பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் உண்டு. அதற்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்களும் உண்டு. நான் பேசிப்பார்த்த வரையில் தன் குழந்தை ஓர் டாக்டராக, சாப்ட்வேர் என்ஜினியராக, ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக, ஓர் கலெக்டராக பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சிறுவயதில் நி..றை..ய சாப்பிடும் கொழுகொழு குண்டு குழந்தையாக தன் குழந்தை இருக்க வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் மிக குறைவு. எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் குழந்தை அனைத்திலும் முதல் பரிசே பெற வேண்டும் என எண்ணாத பெற்றோர்களே இல்லை எனலாம்.


ஒரே குழந்தை கொண்ட பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்ததாக உள்ளன. ஓர் தாய் தன் மகனை பாட்டு, நடனம், யோகா, கராட்டே, கீ போர்டு, கையெழுத்து, டென்னிஸ் என இன்னும் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை பெருமையாகவும் மகன் மீது தனக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவும் கூறிக்கொண்டிருக்கிறார். அப்பையனுக்கு அதிகபட்சம் 9 வயதிருக்கலாம். இந்த வயதில் இவையெல்லாம் சுமையாக இருக்குமே தவிர சுகமாக இருக்க வாய்ப்பில்லை. வெகு விரைவிலெயெ இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு ஏற்பட்டு நான் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்ல மாட்டேன் என அப்பையன் கூற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெற்றோர்களின் நேரப் பற்றாக்குறை காரணமாக சகோதர சகோதரிகளைக் கொண்ட குழந்தைகள் இது போன்ற தொந்தரவுகளிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்கிறார்கள்.


பெற்றோர்களுக்கு என்ன அனுபவங்களும் விஷய ஞானங்களும் உள்ளனவோ அதைப் பொறுத்தே அவர்கள் தங்கள் குழதைகள் பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளும் அமையும். இவ்வுலகில் தனக்கு தெரியாத விஷயங்களை தன் குழந்தை மீது எந்த பெற்றோரும் திணிக்க வாய்ப்பே இல்லை. நல்ல விஷயங்களுக்கும் இதுவே விதி. டாக்டர், என்ஜினியர், போலிஸ் அதிகாரி, கலெக்டர் போன்ற உத்தியோகங்களெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவை அதனாலேயே அதையே அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கான குறிக்கோளாக கொள்கிறார்கள். ஆனால் அதைவிட தெரியாத, அதிக சம்பாத்தியம் கொடுக்கக்கூடிய, மதிப்பும் மரியாதையும் வாய்ந்த எத்தனையோ உத்தியோகங்கள் இந்த உலகில் உள்ளன. உங்களுக்கு அவையெல்லாம் தெரியாது என்பதற்காக உங்கள் குழந்தை அவ்வுயர்ந்த உத்தியோகங்களை அடையக்கூடாதா?


ஓர் தந்தை தினமும் தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். வகுப்பறைக்குள் சென்று புத்தகப்பைகளை வைத்துவிட்டு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வகுப்பறையை நோட்டமிடுவார் தந்தை. ஒரு நாள் வகுப்பறை சுவர்களில் நான்கு அட்டைகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பல மாணவ மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்டு அதற்கு நேராக ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய கட்டத்தில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன. சில மாணவ மாணவிகள் அதிக புள்ளிகளையும் பெற்றிருந்தனர். தந்தை தன் மகன் பெயரை நான்கு அட்டைகளிலும் தேடினார். எதிலும் அவர் மகன் பெயர் இல்லை. இவ்வட்டைகள் மாணவர்களின் எதோவொரு செயலை குறிப்பதாக இருக்கலாம். சிறப்பாக செய்துள்ளவர்களுக்கு புள்ளிகள் அளித்து பாராட்டுகிறார்கள் போல், நம் மகன் அதில் இடம் பெறவில்லை ஆயினும் மகனிடம் இதுபற்றி கேட்க வேண்டாம். அவன் மனம் கஷ்டப்படும் என தனக்குத்தானே பேசிக்கொண்டு தந்தை சென்று விட்டார். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவ்வறிவிப்பு அட்டைகளை பார்ப்பது அவருக்கு வழக்கம். அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் திடீரென அவர் மகன் பெயர் ஓர் அட்டையில் கடைசியாக எழுதப்பட்டு இருந்தது. பெயருக்கு நேராக ஓர் புள்ளியும் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்து போன தந்தை தன் மகனிடம் இந்த அட்டைகளில் பெயர்கள் எழுதி வைத்திருக்கிறார்களே! எதற்காக? என தன் மகனை கேட்டார். மகன் ஆசிரியர் சொன்ன வேலைகளை சரியாக செய்யாத மாணவ, மாணவியரின் பெயர்கள் அவ்வட்டைகளில் எழுதப்படும். ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை தவறுகள் செய்கிறார்களோ அதற்கேற்றவாறு புள்ளிகளும் வைக்கப்படும். அவைகள் “கரும்புள்ளிகள்” நான் கரும்புள்ளிகள் வாங்காமல் இருந்தேன். சென்ற மாதம் ஓர் தவறு செய்ததால் என் பெயரும் எழுதப்பட்டு கரும்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சோகமாக கூறி முடித்தான். தந்தை எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்று விட்டார்.


இப்படித்தான் பெற்றோர்களின் பல எதிர்பார்ப்புகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நம் மன எண்ணமே அவர்களை எதிர் மறையாக உருவாக்கலாம். எனவே குழந்தைகள் பொருட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தவறு. சிறுவயது முதலே “நீ இதுவாக வேண்டும்” என ஏதோவொன்றை கூறி அவர்களை வளர்ப்பது தவறு. ஏனெனில் பெரியார்களாகும் போது ஏதோவொரு காரணத்தினால் நினைத்தது போல் நடக்கவில்லையெனில் அதை அவர்களால் ஏற்று வாழ இயலாது.


இவ்விஷயத்தில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?


பரந்த உலகத்தில் இருப்பவற்றை எல்லாம் திறந்த உள்ளத்துடன் நம் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும். உலகத்தில் இத்தனையும், இன்னும் பலவும் உண்டு. தேவையானவற்றை தேடிப் பெறு அதற்கு தேவைப்பட்ட உதவியை நாங்கள் செய்கிறோம். என உங்கள் குழந்தைக்கு கூற வேண்டும். அதுவே பெற்றோர் கடமையும். அப்போதுதான் பெற்றோரை விட பல மடங்கு உயர்ந்தவராக குழந்தைகள் உருவெடுப்பார்கள். அதற்கு மாறாக நம் அனுபவமும், அறிவும் என்ற வட்டத்திற்குள் குழந்தைகளை அடைக்கக்கூடாது.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...