Tuesday, September 27, 2016

ஆச வச்சேன்.....-சொர்ணலதா.

என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்...")

கிராமிய தொனியிலான வைரமுத்துவின் பாடல். விரசமில்லா குறும்பு கொப்பளிக்கும் வரிகள்.

தேவாவின் இசை. டம்ளர்?!! சாரி சாரி தமிழர் சீமானின் இயக்கம் அனேகமாக நெருங்கி விட்டீர்கள்...

...

...

...

" பாஞ்சாலங்குறிச்சி " படத்தில் இடம் பெற்ற பாடல்.

முதலில் கவிதையை மட்டும் வாசியுங்கள்...

அடுத்து பாடலைக் கேளுங்கள்...

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்
கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்
பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்
உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்
குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்

மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்
மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்
மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்
ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக்கயிறு கட்ட ஆசை வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ணெய் தேய்சுவிட ஆசை வச்சேன்
வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்

BGM ல் நிறய ஆசை பட "புல்வெளி புல்வெளி..." சாயல் தென்படும்.

ஒருமுறை கேளுங்கள். செவிக்கு நல் விருந்து.

Friday, September 23, 2016

மருதாணி மூன்றாம் முறை சிவந்தது

மருதாணி மூன்றாம் முறை சிவந்தது.

”புத்தம் புது காலை பொன்னிற வேளை….” இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் அது நள்ளிரவு வேளையானால் கூட கதிரவன் தன் பொற்கரங்களால் நம்மை தீண்டுவது போல உணர்வோம். இசையும் பாடல் வரியும் இணைந்து காலை நேர குளிர்ச்சியாய் நம் இதயத்தில் ஊடாடிச்செல்லும்.

வெண்ணிற மலர்களை மரங்கள் உதிர்த்து தரையில் மெத்தை விரிக்க அந்த மெத்தை மேல் மலர்க் காம்புகள் தீண்டினால் கூட புண்ணாகும் மலரினும் மெல்லிய பாதமுடைய கதாநாயகி நடந்து கொண்டு அதிகாலை பனியை ரசித்தபடி இந்த பாடலை பாடுவதாக நானே கற்பனை செய்து கொண்டு அது தான் காட்சி என்ற எண்ணத்தில் இருந்து விட்டேன்.

திடீரென ஒரு நாள் இந்தப் பாடல் பிண்ணனியில் ஒலிக்க ஒரு திருமண வீட்டின் காட்சிகள் ஹைக்கூ கவிதைகளாய் பாடல் முழுவதும் மினுங்கிய படி படமாக்கப்பட்டிருந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்டேன். இளையராஜாவிடம் பாடலைக் கடன் வாங்கி பயன்படுத்தியிருந்தாலும் அதற்காக கூலி எதுவும் வாங்காமல் வெகுமதி அளித்து பெருமைபடுத்தத் தக்க விதத்தில் பாடல் பயன்படுத்தப் பட்டிருந்தது. இளையராஜா நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

பாடல் முழுவதும் மணமக்களை படம் பிடிக்க வேண்டிய கேமரா கதாநாயகியை படம் எடுத்துக் கொண்டு இருக்கும். பலவண்ண மலர்கள் நிறைந்த சோலையில் ஒரு வானவில் தரையில் நின்று கொண்டிருந்தால் வானவில்லை விடுத்து மலர்களை ரசிக்க முடியுமா? கடல் நீர் முழுவதையும் சிறிய பாட்டிலில் அடைக்க முயலும் மூடன் போல் கதாநாயகியின் அழகு முழுவதையும் அந்த சின்ன கேமராவில் சிறை பிடிக்க முயலுவான் கதாநாயகன்.

 நகலே இப்படி இருக்கிறதே அசல் எப்படி இருக்கும் என்ற ஆசையில் இந்தப் பாடல் இடம் பெற்ற படம் எது என்று பார்த்தால் படம் “அலைகள் ஓய்வதில்லை“. ஆனால் பாடல் காட்சியை ஒரு போதும் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் இல்லை. “யு டியுப்“ ஏ பஞ்சர் ஆகும் வகையில் தோண்டிப் பார்த்தும் கிடைக்க வில்லை.

 பிரிதொரு நாள் ஒரு நிகழ்ச்சியில் கங்கை அமரன் அவர்கள் தான் என் தேடலுக்கு விடை கொடுத்தார்.
 “மருதாணி“ என்றொரு பாதியில் நின்றுபோன படத்துக்காக போடப்பட்ட பாடல் தான் இது. அந்தப் படம் வெளியாகாமல் போனதால் அந்தப் பாடலை “அலைகள் ஓய்வதில்லை“ ஆல்பத்தில் பயன் படுத்திக் கொண்டோம். என்றார்.

எனவே அசல் பாடல் காட்சிப் படுத்தப் படவே இல்லை. அது நம் கற்பனையில் தான் வாழும்.

“Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter”

 Keats believes that imagining something brings more fulfilment and contentment than a “real” version ever could

Friday, September 16, 2016

பெரியார் 137வது பிறந்தநாள் பதிவு

பெரியார் 137வது பிறந்தநாள் பதிவு

“டேய் என் புக்க கிழிச்சது எவன்டா?“
“நான் இல்லை!“
“நான் இல்லை”
“யேய் ஞாயித்துக் கிழமை சாமியார்ட்ட சொல்லி மந்திரம் போட சொல்லிடுவேன்”
“நான் தாண்டா, சாமியார்ட்ட சொல்லிடாதடா!”

“லீடர்னா பெரிய இவனா? நான் பேசவே இல்லை ஏண்டா ஏம்பேர எழுதின“
“நீதான் பேசினல்ல?“
“நான் எப்போ பேசினேன்? என் பேர அழிக்கிறயா இல்லையா?“
“மீண்டும் மீண்டும் அடங்க வில்லை ன்னு எழுதுறேன் வா!”
“அப்படின்னா உன் பேரயும் சாமியார்ட்ட எழுதி குடுத்துட வேண்டியதுதான்”
“டேய் வேண்டான்டா உன் பேரய அழிச்சுடுறேன்”

மேலே சொன்ன இரண்டு சம்பவங்கள் போல பல சம்பவங்கள் நான் நான்காம் வகுப்பு படித்தபோது எனது வகுப்பில் நடக்கும். அதிலே மிரட்டுவது ஒரு கிருஸ்துவ மாணவன். மிரட்டப் படுவது வகுப்பில் இருந்த சக மாணவர்களான நாங்கள் அனைவரும் தான்.

எந்த ஒரு சின்ன பிரச்சனையையும் சாமியாரைக் கொண்டு இலகுவாக கடந்து விடுவான். ஆமாம் அந்த சாமியார் யார் தெரியுமா? சர்ச் ஃபாதர் தான். ஞாயிற்றுக் கிழமை சர்ச் போவது அவனது வழக்கம். அங்கே ஏசுநாதர் செய்த “அற்புதங்களை“ கதைகளாக கேட்டு வந்து எங்களிடம் கூறுவான். அதனால் சாமியார் பேரைக் கேட்டாலே ”சும்மா அதிருதுல்ல“ என்னும் அளவுக்கு நாங்கள் பக்குவப் பட்டிருந்தோம்.
அவனது “அட்ராசிட்டி“ எல்லை மீறிப்போய்க் கொண்டு இருந்தது. நான் ஒருநாள் அவனது நோட்டில் “சாமியார் ஒரு பன்றி“ என்று பெரிதாக எழுதி வைத்து விட்டேன். அவன் யார் என்று கேட்டு வழக்கமான ஆயுதம் கொண்டு மிரட்டினான். நான் ஒப்புக்கொள்ள வில்லை. இந்த ஞாயித்துக் கிழமை வரட்டும் என்று ஆய்வுக்கு தயாரானேன். திங்கள் கிழமை பள்ளி வந்ததும் அவனிடம் “நான் தான்டா எழுதினேன்” என்று சொன்னதோடல்லாமல் எல்லோரிடமும் சாமியாரின் சக்தி குறித்த “குட்டை“ உடைத்து விட்டேன். அதன்பிறகு சாமியாரை எந்த வம்புக்கும் அவன் இழுப்பதில்லை.
இந்த சம்பவம் நடந்தபோது எனக்கு நாத்திகம் பற்றியெல்லாம் பெரிய விழிப்புணர்வு கிடையாது. பயங்கர பக்திமான். சாமியென்று சொல்லி நெடுஞ்சாலையோர மைல் கல்லை காட்டினால் கூட “பொத் பொத்“ என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடுவேன். அங்கே கிடக்கும் மண்ணை எடுத்து திருநீராக இட்டுக்கொள்வேன்.
பின் எப்போது தான் நாத்திகவாதி ஆனேன். அதுகூட ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது “எங்கள் குடும்ப பெரியாராம்” காலஞ்சென்ற எங்கள் “நடு சித்தப்பா“ சிவசங்கர நாராயணன் அவர்களின் பேச்சைக் கேட்டுத்தான். வளர வளர அவரது பேச்சு, அவர் அழைத்துச் சென்ற மற்றும் கேசட் ப்ளேயரில் போட்டு காட்டிய “மேடைப் பேச்சுக்கள்“ மற்றும் புத்தகங்கள் இவையெல்லாம் என்னை முழுமையான பகுத்தறிவாளனாகவும் சுயமரியாதைக் காரனாகவும் மாற்றியது.
சிறுவயதில் “வாய்ப்பாடு“ புத்தகம் வைத்திருக்கும் போது அதில் உள்ள கண்டுபிடிப்புகள் பக்கத்தை புரட்டிப் படிப்பது வழக்கம். அதில் இந்தியாவின் பெயர் இல்லாதது கண்டு வருத்தமாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.
“புள்ள எப்படி பொறக்குது?“
“எல்லாம் கடவுள் படியளக்குறது தான்!”
“இடி ஏன் இடிக்குது?”
“அர்ச்சுனன் தேர் ஓட்டுறார் அர்ச்சுனா! அர்ச்சுனா! ன்னு சொல்லு ஒண்ணும் ஆகாது!”
“மழ இல்லாம வறண்டு போச்சே!”
“சாமி கோவமா இருக்கு விழா எடுத்து குளிர்விக்கணும்”
“வெள்ளம் வந்து எல்லாம் அழிஞ்சு போச்சே“
“கலி முத்திடுச்சி இனிமே இப்படித்தான் அழிக்கும்“
“அது என்ன காட்டுல தீ?“
“ஐய்யய்யோ அது கொல்லி வாய் பிசாசு பக்கத்தில போகாதிங்க!
“பயன்படுத்தாத பாழடைந்த கிணற்றில் இறங்குனவன் செத்துட்டானே?”
“அங்கே பேய் இருக்கு யாரும் எட்டிப் பாக்காதிங்க!”
“புள்ள பெத்த பிஞ்சு உடம்புக் காரிக்கு கோண கோண இழுக்குதே?“
“பேய் புடிச்சிருக்கு பேயோட்டுறவனுக்கு சொல்லிவிடுங்க!“
“சந்திர கிரகணம் புடிச்சிருக்கு!“
“அது ஒண்ணும் இல்ல நிலாவ பாம்பு முழுங்குது கொஞ்ச நேரத்தில விட்டுடும்”
இந்த மாதிரி ஆயிரக் கணக்கான ஆய்வுக்குறிய விஷயங்களை ஒன்று பயமுறுத்தியோ அல்லது கடவுள் பெயரால் புனிதப் படுத்தியோ விலக்கி வைத்து விட்டோம். அப்புறம் எப்படி அறிவியல் மனப்பான்மை வளரும். கண்டுபிடிப்புகள் நடக்கும்.
பல்வேறு மூடநம்பிக்கைகளால் மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் பெரியார் தம் கைத்தடியால் அடித்து நொறுக்கினார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கில் கூட்டம் கூடியது. ஆனால் கொள்கையை அவ்வளவுபேர் பின் பற்றவில்லையே? காரணம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் கடவுள் மீதான பயம் தான் காரணம். சென்ற வாரம் கூட அரியலுர் பேருந்து நிலையம் அருகில் ஒரு பொதுக்கூட்டத்தில் “பெரியார் தொண்டர்“ ஒருவர் அருமையாக உரையாற்றினார். எல்லோரும் ரசித்துக் கேட்டதோடு அல்லாமல் ஆமோதிக்கவும் செய்தனர். ஆனாலும் அவர்களைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் கடவுள் நம்பிக்கை என்னும் சுவற்றை உடைக்கும் “திராணி“ இல்லை.
நான் ஆசிரியர் இடையே விவாதிக்கும் போது கூட “நானும் கடவுள கும்பிடுவேனே ஒழிய இந்த மூட நம்பிக்கல்லாம் பிடிக்காது” என்று சொல்வார்கள். அதற்கு நான் “கடவுள் தான் சார் மூடநம்பிக்கையில் முதன்மையானது முதல்ல அத விட்டொழியுங்கள்“ என்பேன்.
கடவுள் நம்பிக்கை வெளியே சென்றுவிட்டால் “அறிவியல் மனப்பான்மை“ வளர்ந்து விடும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சப்படாத புதிர்களுக்கெல்லாம் நாம் கடவுளையல்லவா விடையாகக் கொள்கிறோம். அதனால் தானே “go damn particle” கடவுள் துகள் (god’s particle) ஆனது.
பெரியாரின் அறிவியல் மனப்பான்மை எத்தகையது தெரியுமா? அண்ணா பல்கலைக்கழகத்திலே ஒரு கருத்தரங்குக்கு செல்கிறார். அங்கே புதிதாக கணினி வந்துள்ளதாக கூறுகிறார்கள் அப்போதெல்லாம் அது “கம்ப்யுட்டர்“ என்றுதான் வழங்கப்பட்டது. அதைப்பார்க்க வேண்டமே என்கிறார். அது மாடியில் உள்ளது உங்களால் ஏற இயலாது என்று நாசுக்காக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பார்த்தே ஆவேன் என்று தன்னை எப்படியாவது கொண்டு போக சொல்கிறார். அது IBM வகை கம்ப்யுட்டர். ஒரு அறை முழுவதும் அடைத்துக் கொண்டிருக்கும். சென்று அதை இயக்கிக் காட்ட சொல்கிறார். தேதியை சொன்னால் கிழமையை சொல்லும் நிரல் அவருக்கு இயக்கி காட்டப்பட்டதாக படித்தேன்.
பெரியாரின் 137வது பிறந்தநாளாகிய இன்று சமூகத்தில் கடவுள் என்னும் இருள் சூழ்ந்திருக்கும் இடமெல்லாம் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்ச சபதமேற்போம்.



Friday, September 9, 2016

அ.முத்துலிங்கத்தின் கதைகள் மற்றும் கட்டுரைகள்

கட்டுரைகளை தனிமையில் வாசித்தோமானால் மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்க்கக்கூடும். ஏனெனில் நம்மையறியாமல் சிரித்து விடுவோம். நானெல்லாம் ஒரு நிலைத்தகவல் போடவே வார்த்தைகளை தேடுவேன். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் அணிவகுத்து நிற்கும் வார்த்தைகளில் யாருக்கு வாய்ப்பளிக்கலாம் என குழம்பிப் போவார் போலும். வெகு லாவகமான நகைச்சுவை ததும்பும் நடை. கட்டாயம் உங்கள் தனிமைக்கு நல்ல துணை வாசித்துப் பாருங்கள்.
http://www.4shared.com/office/Jw2Sy6P4ce/pm0419.html

http://www.4shared.com/office/zXNwOwK8ba/pm0420.html

http://www.4shared.com/office/KaEj_drsce/pm0514_01.html

http://www.4shared.com/office/yr08Q5nTce/pm0514_02.html





Free grammar book pdf

Get your free English grammar book by clicking the following link
http://www.4shared.com/office/B8pIEuhAce/FreeEnglishGrammar.htmlFreeEnglishGrammar

Sunday, September 4, 2016

ஒழுக்க நெறியோடு சேர்த்து உணர்வு நெறியையும் கற்பிப்போம்.


     அந்த மாணவி நன்றாக படிக்கக் கூடியவள், கட் ஆஃப் 200 எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதே இலட்சியம். ஆண்டுப் பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தது. கணிதத் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது. கட்டாய வினாவாக வந்திருந்த இரண்டு வினாக்களுக்கும் அவளுக்கு பதில் தெரியவில்லை. கட் ஆஃப் 200 அண்ணா பல்கலைக்கழக கனவு எல்லாமே அந்த ஒரு வினாவால் நொறுங்கிப் போனது. மூன்றாவது மாடியில் இருந்த தேர்வு அறைக்கு வெளியே ஓடிவந்து கீழே குதித்து விட்டாள்.
பெற்றோரின் எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்த பெற்றோருக்கு பொறியியல் படிப்பில் செலவு வைக்காமல் மதிப்பெண் குவிக்க வேண்டும். இரண்டாண்டு உழைப்பு. இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து புத்தியை பேதலிக்கச் செய்துவிட்டன. விளைவுகள் பற்றி யோசிக்க இயலாமல் போனது.
  அவன் சுமாராக படிக்கும் மாணவன்தான். ஆனால் ஆசிரியர்களிடம் பணிவு சக மாணவர்களிடம் நல்ல நட்பு என எல்லோருக்கும் பிடித்தமானவனாக வலம் வந்தான். திடீரென அவன் நடவடிக்கையில் மாற்றம். வேண்டுமென்றே தேர்வில் வெற்று காகிதத்தை கொடுத்துச் சென்றான். என்னவென்று கேட்ட ஆசிரியரை எதிர்த்துப் பேசிவிட்டான். அவனின் இந்த போக்கை பற்றி ஆசிரியர்கள் கூடி பேசினோம். ஒவ்வொருவரும் அவனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்ததாக கூறினார்கள்.
அவனை அழைத்து தனியே விசாரித்த போது, “---” என்ற பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். அதற்கு காரணம் காதலித்து பின் பாராமுகமாக இவன் நடந்து கொண்டது தான் என்றொரு வதந்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் உலாவியபடி இருந்துள்ளது. இந்த விஷயம் ஆசிரியர்களுக்கும் தெரிந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டான். அது தான் அவனின் மாற்றத்திற்கு காரணம். ”உன்னிடம் விரும்பத்தக்க எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்கும் போது இந்த சின்ன விஷயத்திற்காக உன்னை தப்பாக நினைப்போமா? நீ எப்போதுமே எங்கள் செல்லப் பிள்ளை தான்டா!”என சமாதானம் கூறி சகஜ நிலைக்கு திருப்பினோம்.

முதல் சம்பவத்தை Emotional Hijack என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உணர்வெழுச்சியால் கடத்தப்படுதல் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமா?
இது எப்போது எதனால் நடக்கிறது? உங்கள் சிந்தனையையும் செயலையும் உணர்வெழுச்சி வெற்றி கொள்ளும் போது நடக்கிறது. நம் விருப்பத்திற்கு மாறான சிந்தனையும் செயல்பாடும் அரங்கேறும். அடுத்தவர்களின் எண்ணவோட்டத்தை லட்சியம் செய்ய மாட்டோம். சரியான செயலையோ வார்த்தையையோ தேர்ந்தெடுக்க இயலாது. குமரப்பருவம்தான் என்றில்லை வயது வரம்பு பாராமல் நிறைய பேர் இந்த மாதிரி உணர்வெழுச்சியால் கடத்தப்படுவதை காண்கிறோம். இது மிகவும் ஆபத்தான சமூக விளைவை ஏற்படுத்தி விடும்.
இரண்டாவது சம்பவம் முதலாவதை விட சற்று மிதமானதுதான். தீவிர மனவெழுச்சி கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லையானாலும் சூழலுக்கு பொருத்தமான உணர்வை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்த தவறிவிட்டான்.
     நாம் எல்லோரும் மாணவர்களிடையே IQ வை அதாவது ”நுண்ணறிவு ஈவை”( intelligent quotient) பெரிய அளவில் வளர்த்து பெரிய பதவிகளில் அமர வைத்து அழகுபார்க்கவே ஆசைப் படுகிறோம். பாடம் சார்ந்த புலமையும் தொழில் நுட்ப அறிவு மட்டுமே வெற்றிகரமான எதிர்காலத்தை மாணவர்களுக்கு வழங்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்பேர்பட்ட “வெற்றிகரமான“ பிள்ளைகள் அனைவருமே வாழ்வில் வெற்றிகரமாக வலம் வருகிறார்களா என்றால் இல்லை. மனவலிமையோடு இருக்க வேண்டிய காவல் துறை மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடினமான தேர்வினை தங்களின் உயர்நிலை நுண்ணறிவால் வெற்றிகொண்ட IAS அதிகாரிகள் கூட தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளை நாளிதழ்களில் காண்கிறோம்.
காரணம் வளரிளம் பருவத்தே வளர்க்க வேண்டிய EQ வை வளர்க்காமல் போனது தான். “அப்படியா! அது என்ன?” என்ற அளவில் தான் EQ பிரபலமாகியுள்ளது. IQ க்கு இணையாக அத்தியாவசியமாக தேவை என்பதால் ரைமிங்குக்காக EQ என்று சொன்னாலும் அது “உணர்வு சார் நுண்ணறிவு“ என்னும் (Emotional Intelligence) என்பது தான். IQ வை அளக்க துள்ளியமான அளவுகோலாக நிறைய தேர்வுகள் இணையத்தில் கிடைக்கின்றன ஆனால் EQ வை வெளிப்படையாக அளந்து கூற அளவுகோல் எதுவும் இல்லாதது தான் பரிதாபம்.
     ”டேனியல் கோல்மேன்“ என்பவர் தான் முதன் முதலில் “உணர்வு சார் நுண்ணறிவு” என்ற கருத்தாக்கத்தை 90களில் அறிமுகப்படுத்தினார். “சரியான உணர்வுகளை இனங்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் நேர்மறையான விளைவுக்கு வழிகோலுதல்“ என்பது தனிநபர் சார் EQ ஆகும். அதுவே “மற்றவர்களின் உணர்வுகளை துல்லியமாக இனங்கண்டு அவர்களுடன் ஆரோக்கியமான நேர்மறை உறவினை பராமரிக்கும் திறனே“ சமூகம் சார்ந்த EQ ஆகும்.
இதனைப் பற்றி இணையத்தில் தேடியபோது எனக்கு கிடைத்த அழகான சின்னஞ்சிறு விளக்கம் “ எண்ணங்களையும் உணர்வுகளையும் சரியான வகையில் இணைத்து விரும்பத்தக்க முடிவுகளை எடுக்கும் திறமை தான் உணர்வு சார் நுண்ணறிவு“.
மாணவர்களின் குமரப்பருவம்  இரண்டு விஷயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒன்று சமூக வாழ்வு சார்ந்தது. மற்றொன்று உணர்வு ரீதியிலானது.
சமூக வாழ்வு சார்ந்து பின்வரும் மாற்றங்களை காணலாம். 1.அடையாளம் தேடிக்கொள்ளல். நான் யார்?, இந்த உலகில் எனக்கான இடம் எது? இவற்றுக்கான பதிலை பாலினம், வயதொத்த நண்பர்குழு, குடும்ப மற்றும் கலாச்சார பிண்ணனி போன்ற காரணிகள் சார்ந்து நிறுவிக் கொள்கிறார்கள்.
அதீத சுதந்திரமும் அதீத பொறுப்பும் தேவையென நினைக்கிறார்கள். மேலும் புதிய அனுபவங்களை செய்துணர துடிக்கிறார்கள்.
உணர்வு ரீதியிலான மாற்றங்கள்
     உணர்வு ரீதியிலான பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. சிரிப்பு, அழுகை, கோபம், மற்றும் கருணை எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸ் தான்.
     அவர்களின் மனநிலை வானிலை அறிக்கை போல் ஆகிவிடுகிறது. அதாவது கணிக்க இயலாதது ஆகிவிடுகிறது.
     “இளங்கன்று பயமறியாது“ என்பதற்கேற்ப எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வகையில் செய்து வைத்துவிடுவார்கள்.


எனவே தான் குமரப்பருவத்தில் இருக்கும் மாணவர்களின் ”உணர்வு சார் நுண்ணறிவை” வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரிருக்கு உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே பெருகிவரும் வன்முறைப் போக்கிற்கும் தற்கொலைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் ”உணர்வு சார் நுண்ணறிவு” குறைவே காரணம் என்று குற்றம் சாட்டினால் தவறாகாது. எனவே இது தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர் மத்தியில் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. 

ஆசிரியர் தின சிறப்புப் பதிவு

Teacher's day special:

எங்கள் அன்புக்குறிய எஸ்.எம் சார்

 எங்கள் கிராமம் சுத்தமல்லியில் உள்ள சின்னஞ்சிறு உயர்நிலைப்பள்ளியில் அவர் சமூகவியல் போதிக்கும் ஆசிரியர். முறுக்கிய மீசை கம்பீரமான முறுக்கேறிய தோற்றம் இவற்றுக்கு முரணாக முறுக்கிய மீசைக்கு கீழே கடும் பாறைகளுக்கிடையில் தவழ்ந்தோடும் அருவி போல இனிய புன்னகை-இதுதான் எஸ்.எம் சார்.
 வகுப்பில் நுழையும்போதே நேற்றைய பாடத்தில் இருந்து ஒரு கேள்வியை பந்து  போல வீசியபடி வருவார். நான் நீ என்று அனைவருமே அந்த கேள்விப் ’பந்தை’ கேட்ச் பிடிக்க முயற்சிப்போம். ஏன் என்றால் எங்கள் வகுப்பில் அனைவருமே சமூகவியல் பாடத்தில் ’கில்லி’. படிக்க தெரியாத மாணவர்கள் கூட செவி வழி கேட்டதை அழகாக நினைவு கூர்வார்கள்.
 உலக வரைபடமோ அல்லது இந்திய வரைபடமோ இல்லாமல் அவர் வகுப்பிற்கு வந்ததே இல்லை. எங்கள் வகுப்பில் அனைவருக்கும் உலக நாடுகளின் இருப்பிடங்கள் கடல்கள் மற்றும் இந்திய மாநிலங்கள் தலைநகரங்கள் என அனைத்துமே அத்துபடி. ஆசிரியர் இல்லாத பாடவேளையில் உலக வரைபடத்தில் உள்ள ஊர் பேரை ஒருவர் கூற மற்றவர் கண்டுபிடிப்பது என பொழுது போக்கும் அளவுக்கு எங்களை சமூக அறிவியல் பாதித்திருந்தது.
 வரலாறு பாடம் நடத்தும் போது குதிரைகளின் குளம்பொலி எங்கள் காதுகளில் ஒலிக்கும். போர்க்களக் காட்சிகளை மேப்பின் ஊடாக எங்களை அழைத்துச் சென்று நடத்துவார்.
 புவியியல் வகுப்பில் ஆற்று நீர் சலசலத்து சுழித்து ஓடும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காற்றுகள் ஏற்படுத்தும் புயல் சூழல் கண்முன் புழுதிபரப்பும்.
 குடிமையியல் வகுப்பு எங்களுக்கு அரசியல் பயிலரங்கம். இந்திய மற்றும் தமிழக அளவிலான பதவி படி நிலைகள், அதிகார வரம்புகள், தேர்தல் முறை அனைத்தையும் எங்களுக்கு அத்துபடியாக்கினார்.
 இவையனைத்தையும் புத்தகத்தை திறக்காம்லே செய்வார். சமூகவியல் புத்தகமே அவருக்கு மனப்பாடமாக உள்ளதாக நாங்கள் எங்களுக்குள் வியந்து பேசிக்கொள்வோம்.
 வகுப்பறையில் அவரது உச்சரிப்பு பேச்சு வழக்காக இல்லாமல் சுத்தமான உச்சரிப்புடன் கூடிய செந்தமிழில் இருக்கும். இரண்டுநாட்கள் நடத்தப்பட்ட பாடப்பகுதிகளுக்கு மூன்றாம் நாள் வினா விடை அவராகவே ’டிக்டேட்’ செய்வார். சமூகவியல் பாடத்திற்கு நாங்கள் நோட்ஸ் வாங்க வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லை.
 எங்களுக்கு அவரைப்பார்த்து பயம் வந்ததே இல்லை.
 “புவி உருண்டையாக உள்ளது என்கிறார்கள் ஆனால் மேப் மட்டும் எப்படி செவ்வக வடிவில் உள்ளது சார்?“
 “புயல் எவ்வாறு உருவாகிறது?“
 இப்படி பலநூறு கேள்விகள் கேட்டாலும் புன்னகை மாறாமல் பொறுமையாக விளக்குவார்.
 ஆசிரியரானவுடன் ”நாம் எப்படிபட்ட ஆசிரியராக இருக்கவேண்டும்?“ என்று எனக்குள் கேள்வி எழுந்தபோது எனக்கு “எஸ்.எம் சார்“ தான் நியாபகத்திற்கு வந்தார்.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...