Friday, December 30, 2016

டங்கல் அருமையான படைப்பு

அமீர்கானின் டங்கல் படம் எனக்கு ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா?!
மகாவீர் சிங் தேசிய அளவில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர், குடும்ப வறுமை சூழல் காரணமாக சர்வதேச போட்டிகளில் கவனம் குவிக்க இயலாமல் கிடைத்த அரசாங்க வேலையோடு மனதில் இருக்கும்  நெறுஞ்சி முள்ளோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். தனக்கு பிறக்கும் மகன் மூலம் தேசத்திற்கு மெடல் வாங்க வேண்டும் என எண்ணுகிறார். சோதனையாக நான்கும் பெண் குழந்தைகளாக பிறக்கிறது. கனவுகளை ஆழக் குழி தோண்டி புதைக்கிறார். அன்று தனது மகள்கள் கீதா போகட் மற்றும் பபிதா போகட் இருவருக்குள்ளும் குஸ்தி போடும் வலு இருப்பதை உணர்கிறார். அப்புறம் அவர்களை பயிற்றுவித்து சர்வதேச போட்டிகளில் தேசத்திற்காக தங்க மெடல் வாங்கச் செய்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறார். பெண் குழந்தைகளை சுமை என நினைத்து கொலை செய்வதும் பால்ய விவாகங்களும் மலிந்த ஹரியானா மாநில பின் தங்கிய குக்கிராமத்தில் இருந்து வந்து பெண்களால் சாதிக்க இயலும் என்று ஆணாதிக்க எண்ணங்களை தோல்வியுறச் செய்கிறாள் கீதா போகட் என்கிற அந்த இளம் மங்கை.
1. வணிக சமரசங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை வரலாறு சார்ந்த படத்தை மிக சுவாரசியமான திரைக்கதையோடு எடுத்தது.
2. விளையாட்டு என்றாலே கிரிக்கெட்தான் என்று இருக்கும் இளையோரின் கவனம் இனி குஸ்தி(wrestling) யின் மீதும் திருப்பும் வகையில் எடுத்தது.
3. ஆண் குழந்தை பிறக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என ஊரார் சடங்குகள் கூற தம்பதியரும் ஒன்று பாக்கி இல்லாமல் கடைபிடித்து மறுபடியும் ஒரு பெண் குழந்தைதான் பிறக்கிறது. சடங்குகள் பொய்த்து போகிறது. இருந்தாலும் யோசனை வழங்கிய ஊர் பெரிசுகள் தம்பதியினர் சடங்குகளை சரியான வகையில் செய்ய வில்லை என்பர். மூடநம்பிக்கை எவ்வாறு உயிர் வாழுகிறது என்கிற விஷயத்தை அழகாக காட்டி இருப்பார்.
4. 'கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் குதி' என்றாலும் குதிக்க தயாராக இருக்கும் மனைவி அவள். குஸ்தி பயிலும் குழந்தைகளுக்கு புரதம் வேண்டுமானால் மாமிசம் உண்ண வேண்டும் என கூறக் கேட்டு கோபமாகவும் ஆவேசமாகவும் சண்டை போடுகிறாள் தான் தெய்வமாக எண்ணும் கணவனிடம். எதைப் பொறுத்துக் கொண்டாலும் ஆச்சார அனுஷ்டானங்களுக்கு பங்கம் வருமானால் கிஞ்சிற்றும் சகியேன் என்கிறாள். மூடநம்பிக்கைகள் நமது மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அந்த காலத்தில் தந்தை பெரியாரின் பணி எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை உணரச் செய்தார் பி.கே படம் எடுத்த அமீர்கான்.
5. மகன்கள் புஜபலத்தாலும் தனது மூளை பலத்தாலும் பெற்றோருக்கு பெருமை தேடி தருவார்கள். பெண்கள் தன் உடலை 'தூய்மையாக' பேணி பெற்றோர் பார்க்கும் ஒருவனிடம் அவ்வுடலை ஒப்படைப்பது  மூலம் மட்டுமே பெற்றோருக்கு கவுரவம் தேடித்தர இயலும் என்ற நம்பிக்கைக்கு எதிரான 'சமர்' தான் இந்தப் படம். படத்தின் இறுதிக் காட்சியில் இதை சொல்லவும் செய்கிறார்.
6. பெண்கள் குஸ்தி போடுவது சார்ந்த ஒரு படத்தை மிகவும் கண்ணியமாக எடுத்துள்ளார்.
7. தனது பெண் குழந்தைகளுக்கு கடும் சவாலான குஸ்தி பயிற்சி அளிக்க ஆண்களுடன் மோத வைக்கிறார். கிளு கிளுப்போடு கிராமமே மைதானத்தில் கூடுகிறது. போட்டி ஆரம்பித்த உடன் அனைவர் கவனமும் அந்த கடுமையான போட்டியில் லயிக்கிறது. பாலியல் சீண்டலோ தீண்டலோ இல்லாத ஒரு ஆரோக்கியமான ஒரு சமரில் அந்தப் பெண் தோற்றாலும் அதன் பிறகு பல ஆண்களுடன் மோதி ஜெயிக்கிறார்.
8. நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்ந்த  பின்னர் தனது தந்தையின் யுத்திகளை கேள்விக்கு உள்ளாக்குகிறாள்  மகள். அதை தவறு என நிறுவ மகளுடன் மோதுகிறார் தந்தை. இளம் சிறுத்தையும் கிழட்டுச் சிங்கமும் மோதும் அந்த போட்டி மிக அருமை. இறுதியில் சிறுத்தை வெல்கிறது.ஆனால் உலக அளவிலான போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவுகிறாள். தன்னை முழுமையா அறிந்த தந்தையின் பயிற்சிதான் சிறந்தது என்று பிறகு உணர்கிறாள்.
9. போட்டிகள் அனைத்தும் நிஜம் போலவே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. கதையோட்டத்திலேயே ஆட்ட விதிகள் மற்றும் நுணுக்கங்கள் சொல்லப் பட்டு விடுவதால் எல்லோராலும் போட்டிளோடு ஒன்றி ரசிக்கப் முடிகிறது. இனி குஸ்தி போட்டிக்கு இலகுவாக ஸ்பான்ஸர்கள் கிடைப்பார்கள்.
10. இறுதியில் நிஜமான மகாவீர் சிங் , கீதா மற்றும் பபிதாவின் புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை காட்டி இருப்பது கச்சிதம்.
11. சிறுவயது கீதா ஆக்ரோஷம் பபிதா அழகு குழந்தை.


Sunday, December 18, 2016

கண்ணு பட போகுதய்யா சின்னக் க*#*#*ரே....


”கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது“ என்ற சொலவடையானது ’ஈவ்டீசிங்’ தொடர்பானது என்று ரொம்ப நாள் விவரம் அறியாமல் எண்ணிக் கொண்டு இருந்து விட்டேன்.
 நண்பன் ஒருவன் தான் “அட மக்குப் பயலே அது யார் கண்ணும் படாம பாத்து நடந்துக்கணும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதுடா“
“அடேய் கண்ணு இருக்கிறவன் பாக்கத் தானடா செய்வான்“ என்றேன்
“நீ ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு தரம் நிருபிக்கிறாய், நம்முடைய வளர்ச்சிய பார்த்து ஒருத்தன் ’ஆ’ ன்னு வயித்தெறிச்சலோடு பாத்தான்னா நமக்கு கேடு நிச்சயம் ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கடா”
“ஐய்யய்யோ இதுக்கு என்னடா பரிகாரம்”
“ அவுங்க கண்ண திசை திருப்புற மாதிரி பண்ணனும் அல்லது கண்ணேறு கழிக்கனும்” என்றான்
அன்றிலிருந்து எனது மூன்றாவது கண் (அய்யய்யோ நெத்தியில இல்லங்க அகக்கண் தாங்க) திறந்து கொண்டது. போகும் இடம் எல்லாம் எப்படியெல்லாம் கண்ணேறு கழிக்கிறாங்க என்பதை பார்த்து ஆய்வு செய்வது எனது வழக்கமாகிப் போனது.
நான் சிறுபிள்ளையாக இருந்த போது வாரம் ஒரு முறை எனது அம்மா எங்கள் அனைவரையும் வரிசையாக உட்கார வைத்து சூடம் ஏற்றி சுற்றிக் காண்பித்து கொண்டு போய் தெருவில் போடுவார். கண் வைத்தோரின் கண்ணெல்லாம் இதனால் பொசுங்கி போய்விடும் என்று அவர்கள் எண்ணம். ஆனால் எங்கே சூடம் காண்பிக்கிறேன் என்று முடியை பொசுக்கிடுவாங்களோ என்பதுதான் எனது பயம்.“ஊரு கண்ணெல்லாம் எம்புள்ளைங்க மேல தான்“ என்று பெருமையோடு அலுத்துக் கொள்வார். கோடை விடுமுறை சமயத்தில் எங்கள் சித்தப்பா நடுசித்தப்பா என்று பெரிய ’கெட் டுகெதர்’ இருக்கும். அப்போதும் கூட எல்லோரையும் உட்கார வைத்து கோயில் பிரகாரம் சுற்றுவது போல சுற்றிப் போடுவார்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டில் கவனித்தது, வீட்டின் வாயிற்படியில் ஒரு சிறு தேங்காய் அதன் கீழ் ஒரு எலுமிச்சை, அடுத்து நான்கு காய்ந்த மிளகாய் அப்புறம் ஒரு கறித்துண்டு என்று பவுதிக விதிப்படி நிறைக் கிரமமாய் அழகாய் கட்டி தொங்க விட்டிருந்தார். என்னடா இது ஒரு மினி ’புரவிஷன் ஸ்டோரையே’ கட்டித் தொங்க விட்டுருக்கானே என்று நினைத்தால்  அது திருஷ்டி பரிகாரமாம்.
’வருவோர் எல்லாம் வவுத்தெரிச்சல் பிடிச்சவனுவ அவனுங்க கண்ணு போட்டா பரிகாரம் வேண்டாமா?’(குடுத்த காபியை குடிக்கலாமா வேண்டாமா அவ்வ்வ்...) நண்பர்கள் மற்றும் உறவினர் பற்றி எவ்வளவு ஆரோக்கியமான உயரிய எண்ணம் கொண்டுள்ளார் என்று வியந்து போனேன். என் கவலையெல்லாம் என்றைக்காவது அவசரத்துக்கு சட்னிக்கு சாமான் இல்லைன்னு அவுங்க வீட்டம்மா அதை சரத்தோட எடுத்துக் கொண்டு போய் வேலைய பாத்துடக் கூடாதேன்னுதான்.
திருஷ்டி கழிக்கிற பசங்க கையில மாட்டிக் கிட்டு இந்த பூசணிக்காய் படுற பாட்டை நினைத்தாலே கண்ணெல்லாம் வேர்த்துக் கொட்டுது போங்க. காயின் மேல் ஒரு சிறு துவாரமிட்டு அதனுள் குங்குமத்தை கொட்டி பிறகு அந்த துவாரத்தை மூடி அதன் மேல் சூடம் வைத்து கொளுத்தி நல்ல ஒர அழகான சாலையின் நடுவில் கொண்டு போய் ’தொபுக்ட்டீர்’ என்று போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கிறார்கள். ’சட்டுன்னு’ பாத்தா ஏதோ ரத்த சகதி போல தெரியும். ரோட்டுல வண்டில போறவன் அதில வழுக்கி எங்கியாவது போய் மண்டை உடைச்சிக்கிட்டா நமக்கென்ன கவலை.
அப்புறம் இந்த வீடு கட்டிக் கொண்டு இருப்போர் ஒரு பூசணிக்காய் வாங்கி அதன் மேல் ’கர்ண கொடூரமாக’ ஒரு படம் வரைந்து தொங்க விட்டு விடுவார்கள். வருவோர் போவோர் எல்லாம் வீட்டை பார்க்காமல் அந்த பூசணிக்காய் ராட்சசனை பார்த்து சென்று விடுவார்கள். பார்வை அஸ்திரத்தை பூசணிக்காய் அஸ்திரம் கொண்டு முறியடித்தாயிற்று. எனது மகன் சிறு பிராயத்தில் இதை பார்க்கும் போதெல்லாம் வீறிட்டு அழ ஆரம்பித்து விடுவான்.
கண்ணேறு கழித்தலில் ஒரு அபாயகரமான வழிமுறை ஒன்று உள்ளது. யாருடைய பார்வை மிக மோசம் என்பதை எல்லையை காக்கும் வீரன் போல உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மோசமான கண்ணை இனம் கண்டு விட்டபின் வாலாவிருக்கலாகாது, உடனே துரிதமாக செயல்பட்டு சம்பவத்தோடு தொடர்புடையவரின் காலடி மண்ணை சேகரிக்க வேண்டும். அந்த மண்ணைக் கொண்டு சுற்றிப் போடுவதால் 99 விழுக்காடு பலன் கிடைக்குமாம். சம்பத்தப் பட்டவர் நீங்கள் மண் சேகரிக்கும் போது பார்த்து விட்டால் அவர் உங்கள் பரம விரோதியாகும் வாய்ப்பு உள்ளது. பாத்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள்.
மற்றுமொரு இலகுவான வழிமுறை ஒன்று உண்டு. முக்கியமாய் சோம்பேறிகளுக்கானது. நான்கு வற்றல் மிளகாயை எடுத்து கையில்  வைத்து மூடிக்கொண்டு சும்மா 'சர் சர்ர்..' னு இப்படியும் அப்படியுமாக மூன்று சுற்று சுற்றி அதிலேயே எச்சில் துப்பச் சொல்லி வாங்கி கொண்டு போய் அடுப்பில் போட வேண்டும். மிளகாய் எவ்வளவு சத்தமாய் பொறிகிறதோ  அவ்வளவு கண்கள் பட்டிருக்கிறதாம். நன்கு காயாத மிளகாயை உபயோகித்தால் மிஷன் ஃபெயிலியர் ஆக வாய்ப்பு உள்ளது. இதில் மற்றுமோர் அபாயம் உள்ளது , வாய்   நிறைய எதையாவது குதப்பிக் கொண்டிருக்கும் போது துப்ப சொல்லி   மிரட்டுவீர்கள் ஆயின் மொத்த எச்சிலையும் கவிழ்த்து விடுவார்கள். அப்புறம் மொத்தமும் பாழ்.
புது வீடு குடி புகுவோர் 'கண்ணடி' யில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வேலையை நிறைவு செய்யாமல் விட்டு விடுவார்கள். பாவம் வீடு கட்டிக் கொண்டு நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள் என பரிதாபமாக எண்ணவேண்டுமாம்.
எங்கள் சித்தப்பா புது வீடு கட்டி குடி போன போது ஒரு சிறு குண்டு பல்பு பாக்கியில்லாமல் அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார். விழாவுக்கு வந்திருந்த எங்கள் மாமா ஒருவர் "ஏதேனும் ஒரு வேலைய பாக்கி வச்சி முடிக்கணும் பா எல்லார் கண்ணும் ஒரு மாதிரி இருக்கறதில்லையே" என்று செல்லமாக கடிந்து கொண்டார்.
எலுமிச்சை யானது திருஷ்டி பரிகாரம் செய்வோருக்கு உற்ற நண்பன். எலுமிச்சையை சரிபாதியாய் வகுந்து உள்ளே குங்குமம் நிரப்பினால் இன்ஸ்டன்ட் திருஷ்டி பரிகார எந்திரம் தயார். ஏனென்றால் வாகனங்களில் ஓட்டுனர் இருக்கைக்கு முன்னால் ஒரு குண்டு பூசணிக்காயை படம் வரைந்து தொங்க விடுவதை கற்பனை செய்தாலே தலை கிர்ரென்று  சுற்றுகிறது. அதனால்தான் வைப்பதில்லை போல.
குழந்தைகள் விஷயத்தில் இவர்கள் செய்யும் கூத்து அலாதியானது. சில பேர் குழந்தையை கொஞ்சும் தோரணையை வைத்தக் கண் வாங்காமல் குறு குறு என பார்ப்பார்கள். அவர்கள் போனதும் "அவ கண்ண பாரேன், புள்ளயை குறு குறுன்னு பாக்குறா இனிமே புள்ளய இவகிட்ட காட்டாதே" என்று பேசிக் கொள்வார்கள்.
குழந்தைகளை கொஞ்சுவது மிகவும் அலாதியான செயல். பெருக்கெடுக்கும் அன்பை அடக்க இயலாது. அவ்வளவு அன்பையும் பற்களுக்கிடையில் அழுத்திக் கொண்டு செல்லமாக கன்னத்தை கிள்ளி வாயில் இட்டு முத்தமிடும் போது தான் அந்த அன்பு வேட்கை தனியும். வேறு சிலரோ அதே கட்டுக்கடங்காத அன்பை தேக்கி  இரு கைகளாலும் குழந்தையின் கன்னத்தை தடவி காது மடல் அருகே கைகளை மடக்கி 'மட மட' வென நெட்டி முறிப்பார்கள். 'மட மட'வின் எண்ணிக்கையும் விழுந்த கண்களின் எண்ணிக்கை யும் நேர் விகித தொடர்பில் இருப்பதாக கதைவேறு.
இவ்விதமாக இவர்களால் கிள்ளப் பட்டும் தடவப்பட்டும் அந்த பிஞ்சு கன்னங்கள் மேலும் சிவந்து போகும். பொக்கை வாய் சிரிப்புடன் குழந்தை இவற்றை எல்லாம் வேடிக்கை பார்க்கும்.
நிறைவாக குழந்தைக்கு வைக்கப்படும் திருஷ்டிப் பொட்டு பற்றி சொல்லியாக  வேண்டும். உதட்டின் கீழே ஒரு மைப்பொட்டு அல்லது கண்ணையும் காதையும் இணைக்கும் நேர்க் கோட்டின் மையப்புள்ளியில் ஒரு மைப் பொட்டு வைத்து விடுவார்கள். ஆனால் அது குழந்தையின் அழகை இன்னும் கூட்டி, படுகிற  'கண்ணடி' இன்னும் வீரியமாக வழி வகுத்து மிஷனை டோட்டல் ஃபெயிலியர் ஆக்கிவிடும்.
நகைச்சுவையை புறந்தள்ளுங்கள். இந்த செய்கையின் அடியில் உள்ள உளவியல் என்ன?! சக மனிதர்கள் உங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் , ஏதாவது கண்ணுக்கு தெரியாத முட்டுக்கட்டையை பாதையில் போடுவார்கள். நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தானே?!
சக மனிதர்களை அவ நம்பிக்கையோடு பார்க்கச் செய்யும் இம்மாதிரி செயல்களை இனியும் தொடர வேண்டுமா?!
மொபைல் கேமராவால் படம் எடுத்ததால் ஷாக் அடித்து இறந்தார்கள் என்பது போலத்தான் பார்த்தாலே கெடுதல் நடக்கும் என்பதுவும் ஒரு பொய் நம்பிக்கை.


         

Tuesday, December 13, 2016

அடடே அப்படியா?!

21ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை பூமி இருளில் மூழ்கப் போகிறது-நாசா பகீர் தகவல்.
தலைப்பை பார்த்ததும் தினமலர் செய்தியின் காபி பேஸ்ட் என்று எண்ணிவிடாதீர்கள்!
 எனது இல்லத்தரசி “கேயாஸ் தியரியையே” கரைத்து குடித்தவர். துபாயிலிருந்து கிளம்ப வேண்டிய நியுயார்க் விமானம் தாமதமானால் கூட அதற்கு நான் ’செல்லை நோண்டியது’ தான் காரணம் என்று நிறுவும் சாமர்த்திய சாலி என்பதால் எனது வழக்கமான பஸ் பயணங்களில் தான் அன்றைய அப்டேட்ஸ் பார்ப்பேன். எனவே டேட்டாவை ஆன் பண்ணி வாட்ஸ்அப் ஓபன் பண்ணினேன். ’கொய்ங்.. கொய்ங்..’ என்று செய்திகள் வந்து விழுந்து கொண்டே இருந்தது. பேருந்தில் எனது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்து வந்தார், எனது செய்கையை பார்த்தது முதலே  'நெட்ல' போட்ருக்கான், வாட்ஸ்அப்பில் வந்தது என்றபடியே வந்தார். வயதான 'பெருசு' என்று எண்ணிவிடாதீர் நானும் tech savvy தான் எனக்காட்டிக் கொள்வதே அவர் நோக்கமாகப்பட்டது.
பேருந்து வி.கைக்காட்டி தாண்டி விரைந்து கொண்டிருந்தது, பக்கத்து சீட்டு காரரும் தான் கடைவிரித்த வாட்ஸ்அப் தகவல் உபயத்தால் ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே கூட்டியிருந்தார். அடுத்த தகவலாகத்தான் ஒரு பெரிய குண்டைப் போட்டார்.
 '21ந்தேதி முதல் 26 ந்தேதி வரை 6 நாட்களுக்கு உலகம் முழுவதும் இரவாகத்தான் இருக்கும். சூரியன்ல ஏதோ காந்த புயலாம். என்ன பண்ண போறோம்னு தெரியல! இன்றைக்கு வாட்ஸ்அப்ல வந்தது'
'பயப்படாதீங்க அப்படிலாம் ஆகாது' என்றேன்.
'அட ஏம்பா நான் என்ன பொய்யா சொல்றேன், இங்கே பார்!' என்றபடி வாட்ஸ்அப் தகவலை காண்பித்தார்.
'இது எனக்கும் வந்ததுங்க, பிள்ளையார் பால் குடிச்ச கதையோட லேட்டஸ்ட் வெர்ஷன் தாங்க இந்த வாட்ஸ்அப் புரளில்லாம்'என்று சுற்றிலும் நின்ற அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவியர்களை கம்பீரமாக பார்த்தவாறு கூறினேன்.
'என்னப்பா புரளிங்குற?! அமெரிக்காவிலேருந்து நாசா விஞ்ஞானிகளே சொல்லியிருக்காங்க! நம்மாளுங்கன்னா கூட நான் நம்பியிருக்க மாட்டேன்' என்றவாறு 'நாசா' என்கிற வார்த்தையை  பெரிதாக்கி என்னை ஏளனமாக பார்த்துக்கொண்டே காண்பித்தார்.
'விளாங்குடி இறங்கு..' நடத்துனரின் குரல் எங்கள் விவாதத்தை கலைத்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் கூட்டம் மொத்தமாக இறங்கியது. மீனாட்சிராமசாமி கல்லூரி மாணவர்கள் மீதமிருந்தனர். விளாங்குடியில் எம்பள்ளி மாணவர்கள் ஏறி எனக்கு வணக்கம் கூறியவாறு நெருக்கியடித்து நின்றுகொண்டனர்.
'இல்லங்க நாசா பேரைப் பயன்படுத்தி வர பொய்யான தகவல்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான், ஏற்கனவே நடனமாடும் நடராஜரின் ஊன்றியிருக்கும் காலில் தான் பூமியின் மையப்பகுதி உள்ளதுன்னு நாசாகாரங்க சொன்னதாக கெளப்பிவிட்டாய்ங்க, பிறகு ஆலங்குடி கோயில் அபரிமிதமான காந்த சக்தி உள்ளதாகவும் செயற்கை கோள்கள் எல்லாம் இந்த இடத்தை கடக்கும் போது செயலிழந்து போவதாகவும் ரீல் விட்டாய்ங்க'
'என்னசார் சொல்றீங்க அதுவும் புரளிதானா?!' என்றார் ஏமாற்றத்துடன். “ப்பா“ என்றது “சார் என்றாகிவிட்டது. காரணம் எனது மாணவர்களின் “குட்மார்னிங் சார்“.
“நாசா விஞ்ஞானிங்க ஏன் சார் பொய் சொல்லப் போறாறங்க?”

“இந்த தகவல நாசா விஞ்ஞானிகள் தான் சொன்னாங்கன்னு எப்படி உறுதியாக நம்புறீங்க? சிவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு காமெடி வருமே அது மாதிரி வாட்ஸ்அப் ல வரது பொய்யா இருக்காது என்று ஒரு கூட்டமே நம்பிகிட்டு இருக்கு”

”இந்த தகவல் பொய்ன்னு நீங்க எப்படி சொல்றீங்க சார்?“

” தோ ஒரு நிமிஷம் இருங்க” என்றவாறு எனது ப்ரவுசரில் நாசா இணையதளத்தை தட்டினேன். படங்களும் ஆங்கிலமுமாக விரிந்தது. அதை அவரிடம் காண்பித்தேன். “இங்க பாருங்க சார், நீங்க சொன்னது அதிமுக்கியம் வாய்ந்த தகவல் தானே, ஆனால் அவுங்க “வெப்சைட்ல“ காணோமே!“
 “எனக்கு அந்த அளவு ஆங்கிலம் எல்லாம் தெரியாது. ஆனாலும் நீங்க இவ்வளவுதூரம் ஆதாரம் எல்லாம் காண்பிக்கிறீங்க அதனால நீங்க சொல்றத நம்புறேன் சார். இந்த பயலுவ ஏன் இந்த மாதிரி செய்திலாம் போட்டு பீதியை கிளப்புறாங்க?“ என்றவாறு பம்மினார்.

“இன்னும் நீங்க நம்பலன்னா இதையும் கேளுங்க, புவி 6 நாட்களுக்கு இருளாக வேண்டுமானால்,

சூரியன் அணைந்து விட வேண்டும். ஆனால் அது நடக்க சாத்தியமே இல்லை.

அல்லது புவி தன் சுழற்சியை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக பஸ் சடன் பிரேக் போட்டாலே மண்டை மோதிக் கொண்டு பற்களை உடைத்துக் கொள்கிறோம். பஸ்ஸை விட பல நூறு மடங்கு வேகத்தில் சுற்றும் புவி நின்றால் நாமெல்லாம் விண்வெளியில் வீசி எரியப்படுவோம். பௌதிக விதிகளின் படி அதுவும் சாத்தியமில்லை.
சூரிய கிரகணம் என்றால் கூட சில நொடிகள் தான் சூரியன் மறைக்கப்படும். பிறகு “வைரமோதிரம்” போட்டுக் கொண்டு ஜோராக வெளியே வந்து விடும். சூரியனை மறைக்கும் நிலா சூரியனை மறைத்தவாறே ஆறு நாட்களுக்கெல்லாம் நிற்கலாகாது. புவியின் துணைக்கோள் என்பதால் புவியின் காந்த சக்தியை கைப்பற்றி சுற்றி வரும் நிலா பிரேக் போட்டால் புவியின் மீது வந்து விழுந்து விடும் “ஸ்கைலேப்“ விழுந்த மாதிரி. மேலும் கெப்ளர் என்பவர் கூறிய விதிப்படி அதுவும் சாத்தியமில்லை.

புவி இருளடையும் அளவிற்கு மேகம் சூரியனை மறைத்ததே இல்லை. மேலும் மொத்த புவியையும் மேகம் போர்வையாய் போர்த்த வாய்ப்பில்லை”
என்று மூச்சு வாங்கியபடி முடித்தி தண்ணீர் பாட்டிலை எடுத்தேன்.

“சார் என்ன பேச்சு சுவாரசியத்தில நாச்சியார் பேட்டையை விட்டுட்டிங்களே!, பாருங்க மணகெதியே வரப்போகுது, ஏந்திரிங்க”
“ஐயயோ, வழி விடுங்கப்பா, நவுருங்கப்பா...” என்றவாறே அந்த பெரியவர் வாசற்படியை நோக்கி சென்றார்.
அவருக்கு புரிந்த்தோ இல்லையோ சுற்றிலும் நின்ற பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு புரியவைப்பதே நோக்கம்.

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா அவர்களின் ஆணைப்படி….



பயிற்சி ஆசிரியராக சங்ககிரி பள்ளியில் பயிற்சிக்கு சென்றிருந்த சமயம் ஒரு ஆசிரியர்,“தம்பி உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்க எப்படியும் 36 வயது ஆகிவிடும் அதனால சப்ஜெட் மறக்காமல் இருக்க எங்காவது தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்துடுங்க“ என்றார். எனக்கு ’ஐயோ’ என்றாகிவிட்டது. விடுதிக்கு வந்த உடன் பொது அறிவு சார்ந்த புத்தகங்களை தூசி தட்டினேன். இன்னுமோர் மாமாங்கம் காத்திருக்க இயலாது. உடனடியாக வேலைக்கு போக வேண்டுமே.
பி.எட் முடித்தவுடன் தஞ்சையில் உள்ள ’ஸ்பாடிக்ஸ்’ மெட்ரிக் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னை நம்பி பனிரெண்டாம் வகுப்பு கணிதமே வழங்கப்பட்டது. கூடவே விடுதியிலும் தங்கிக் கொண்டேன். சம்பளம் மிக குறைவாக இருந்தாலும் ’டியுசன்’ வருமானம் சம்பளத்தைப் போல இருமடங்கு. நாள் தோறும் ஒவ்வொருவராக கொடுப்பார்கள். பாக்கெட்டில் எப்போதும் 100ரூபாய் தாள்கள் இருக்கும். ஆனாலும் ’இது போதாது தேங்கி நிற்காதே’ என்ற உள்ளுணர்வு கூறியதால் அடுத்த கல்வி ஆண்டில் இடம் மாற முடிவு செய்தேன். போட்டித் தேர்வுகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து படித்தேன். இப்போது போல் அடிக்கடி வேலைக்கான தேர்வுகள் நடத்தப் படுவது இல்லை.
2001-2002 ம் கல்வி ஆண்டில் ’‘ஹில்டேல் மெட்ரிக் பள்ளி’ கொல்லி மலையில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த அன்று முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் (இவர் ம.இளவரசு என்கிற எனது உற்ற நண்பர்) இடையே நடந்த உரையாரடல் இன்னும் என் நினைவில் உள்ளது.
“என்ன சார் எலக்ஷன் ரிசல்ட்லாம் எப்படி?“ முதல்வர்
“எங்களுக்கு அரசு வேலை கிடைப்பது இன்னும் ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போகப் போகிறது?“ இளவரசு சார்
“ஆனாலும் சேஞ்ச் வேணும் இல்லையா?“ என்கிற ரீதியில் சென்றது. 2001 மே மாதம் இரண்டாம் முறை ஜெயலலிதா அவர்கள் முதல்வராக பணியேற்ற போது நடந்த சம்பவம் அது.
தஞ்சையில் 950 ரூபாய் சம்பளம் என்றால் இங்கு 2250ரூபாய். அது உண்டு உறைவிடப் பள்ளியாதலால் விடுதி வாசம் மறுபடியும். ரம்மியமான சீதோஷ்ண நிலை, எழில் கொஞ்சும் இயற்கை சூழல் நம் வேலைக்கு உரிய அங்கீகாரம் வழங்கி மரியாதையாக நடத்தும் நிர்வாகம் என 100 விழுக்காடு மனதுக்கு பிடித்த பள்ளி. நிர்வாகத்தினர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் என் மேல் அளவு கடந்த பிரியமாக இருந்தார்கள். ஆசிரியர் பணியில் நான் புதுப் புது யுத்திகளை எல்லாம் வெற்றிகரமாக பரிசோதித்துக் கொண்டு இருந்தேன்.
’ஆசிரியர் நியமனம் இனி போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாகத் தான் நடைபெறும் ’ என்ற முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு காதில் தேனாய் பாய்ந்தது.
உடனடியாக மலையில் இருந்து இறங்கி விண்ணப்பித்து விட்டு வந்தேன். பள்ளியில் காலாண்டுத் தேர்வு நடத்தினோம். டி.ஆர்.பி தேர்வுக்கு பத்து நாட்களே இருந்தது. பள்ளி வேலைக்கு இடையில் தேர்வுக்கு படிக்க இயலவில்லை. இனி முழு மூச்சாக படிக்க வேண்டும்.வரும் வழியில் திருச்சியில் ’சக்தி கைடு கணிதம்’ வாங்கினேன். காலாண்டு விடுமுறை முழுவதுமாக புத்தகத்தை அட்டை டு அட்டை புரட்டி விட்டேன். புத்தகத்தில் உள்ள பிழைகள் அனைத்தையும் கூட பேனாவால் திருத்தி இருந்தேன். இந்த வேகம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
பரீட்சையில் கேள்வித் தாளை பார்த்தால் அனைத்தும் தெரிந்த வினாக்கள். தெரியாத வினாக்கள் 10க்குள் அடக்கம். கண்டிப்பாக எழுத்து தேர்வில் பாஸ் என்று தீர்மானமாக தெரிந்து விட்டது. அடுத்து நேர்காணல்.(அங்கே நான் அரங்கேற்றிய கூத்துகளை ஒரு நகைச்சுவை கட்டுரையாக வெளியிட உத்தேசம். அப்படிப் பட்ட சொதப்பல் அது) அங்கு வந்திருந்த சக பணி நாடுனர் பெரும்பாலானோர் ’ஏற்கனவே போஸ்டிங் எல்லாம் வித்தாச்சு ஒரு போஸ்ட் 3 லட்சம். இது சும்மா ஐ வாஷ்தான்’ என்று வயிற்றில் புளியை கரைத்தனர். நம்பிக்கை இல்லாமல் மறுபடியும் கொல்லி மலை ஏறினேன்.(அந்த சமயத்தில் 750 இடங்களும் சுத்தமான மெரிட்டில் போடப்பட்டவை. தோல்வியுற்றோர் இதை ஏற்க தயாரில்லை)
பள்ளி திரும்பியபின் ஏற்கனவே SSC ல் தேர்ச்சி பெற்று பிறகு ஒரு டைப்பிங் தேர்வு பாக்கி இருந்தது அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். காலையில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அழைத்தார்கள். என் நடு சித்தப்பா அழைத்தார். ”டேய் ஜெயராஜ் நீ இன்டர்வியு வில் பாஸ் பண்ணிட்டே ஜனவரி 11 ம் தேதி சென்னை போய் அப்பாய்ண்ட்மன்ட் ஆர்டர் வாங்கனும்”
மாத்தி நம்பர் பாத்திருப்பாரோ? ” என்னப்பா சொல்றீங்க நம்பர் சரியா பாத்தீங்களா? எங்கே என் நம்பர் சொல்லுங்க பார்ப்போம்?”
”……” சரியாத் தானே இருக்கு. ’அவ்வளவு தூரம் சொதப்பியும் வேலை கொடுத்து இருக்காங்களே!’
எனக்கு 36 ல் தான் வேலை என்று இருந்து நிலை மாறி 25ல் கிடைக்க செய்தது முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு தான்.
     கணித ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்க எப்படியும் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். ஏனெனில் கணித பாட ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு 100 பேருக்குள் தான் பதவி உயர்வு கிட்டும்.
     2011 ல் மீண்டும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் அந்த ஆண்டில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள 250 பேருக்கு கணித முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிட்டியது. இது தற்செயல் தான். இருந்தாலும் நான் அரசுப் பணிக்கு வந்தது அவரின் துணிச்சலான முடிவால்தான். அவரது இரண்டாவது ஆட்சி கால முதலாம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தது என்றால் எனது பதவி உயர்வு அவர்களின் மூன்றாவது ஆட்சி காலத்தின் முதல் வருடத்தில்.

     ஆயிரக்கணக்கான மாணவர்களின் அன்புக்கு பாத்திரமான ஆசிரியராக நான் இருக்கிறேன் என்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ஜெயலலிதா அவர்களால் தான். இருந்த போதிலும் அவர்களுடன் கோட்பாடு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முரண்பட்டவனாகவே இருந்து வந்துள்ளேன். நன்றி செலுத்துவது என்பது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு கண்மூடித் தனமாக ஆதரிப்பது அல்ல என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும் அவரைக் காணும் போதெல்லாம் நன்றியோடு எனது கையில் ஒட்டியிருக்கும் சாக்பீஸ் கரைகளை பார்த்துக் கொள்வேன்.

Thursday, December 1, 2016

பொய்யும் புரட்டும் எதற்கு?!! #பழைய முகநூல் பதிவு

பொய்யும் புரட்டும் எதற்கு?!

'NASA விஞ்ஞானிகள் அறிவிப்பு
1.'சிதம்பரம் நடராஜரின் நடனமாடும் போது ஊன்றியிருக்கும் கால் பெருவிரலில் தான் ஒட்டுமொத்த புவியின் ஈர்ப்பு மையம் உள்ளது'
2. 'ஆலங்குடி கோயிலை கடக்கும் போது செயற்கைகோள்களே ஸ்தம்பித்து போகின்றன. ஏனென்றால் கோயிலின் காந்த சக்தி அப்படி.
3. பசுமாட்டின் மூத்திரத்தில் ஆண்டிபயாட்டிக் தன்மை கொட்டி கிடக்கிறது.
அடுத்ததாக விஞ்ஞானி விலாடி மீரின்(அப்படி ஒரு விஞ்ஞானி இருப்பது கூகுலுக்கே தெரியவில்லை#தட் கடல்லயே இல்லையாம் மொமன்ட்!)
ரஷ்யாவிலிருந்து வந்து நம்ம ஊர் சிவலிங்கத்தை பார்த்து வியந்து போய் ஒரு முழுநீள ஆராய்ச்சி கட்டுரை எழுதி நம்ம சோசியல் நெட்வொர்க் சயின்டிஸ்ட்களிடம் சமர்ப்பித்துள்ளார்! பாத்து ரெக்கமண்ட் பண்ணுங்க பாஸு ஒரு டாக்டரேட் வாங்கி பொழச்சிட்டு போகட்டும்!(ஆமாம் எனக்கு ஒரு டவுட்டு வழக்கம் போல், லிங்கத்தின் தோற்றம் பற்றி உங்கள் புராணங்களில் கூறப்பட்ட பலான பலான கதைகள் எல்லாம் பொய்யா பாஸூ)
வடிவ கணித பௌதிக அறிவியல் எல்லாம் கோள வடிவ பொருட்கள் அனைத்துக்கும் அதன் மையம் எங்கே இருக்கும் என தடுமாறி(!!) கொண்டு இருக்கும் போதுதான் இந்த கட்டுரை வராது வந்த மாமணி போல் கைகொடுத்துள்ளது. மெயில் பண்றேன் பரிசு வருமா இல்ல வேறு ஏதாவது வருமா?!
#மக்களின் அறிவு வளர்ச்சி பார்த்து பயந்து போன ஆன்மீக வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை தக்கவைக்க இந்தமாதிரி புரட்டுகளை அரங்கேற்றம் செய்வார்கள்!
இந்த survival techniques தான் நம்ம வீட்டில் வந்து நம்ம தலைமேலேயே உக்காந்து ஆட்டம் போட வைக்கிறது. என் தலை மேலிருந்து நான் விரட்டிவிட்டேன். அப்போ நீங்க.....!

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...