தலைப்பை பார்த்து
பயந்து போகாதீர்கள். சுசித்ரா பட்டாச்சார்யா அவர்கள் எழுதிய ANDHAR BELA என்கிற வங்காள
நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இருட்டு வேளை என்கிற நாவல். சு.கிருஷ்ணமூர்த்தி என்பவரின்
மொழிபெயர்ப்பு அம்ருதா பதிப்பக வெளியீடு. நான் வாங்க வில்லை நூலகத்தில் தான் எடுத்து
படித்தேன்.
டாடா நானோ ஃபேக்டரிக்காக
வளமான விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி டாடாவுக்கு கொடுத்தது மற்றும்.(மக்கள்
எதிர்ப்பு கண்டு பின்வாங்கி பின்னர் குஜராத்துக்கு ஓடியது) அதன் பின் விளைவுகள் பற்றி
பேசும் நாவல்.
செகரட்ரியேட்டில்
வேலை பார்க்கும் பிரபாஸ் அவரது மனைவி ஜெயா அப்புறம் அவரது மகன் அயன் மருமகள் ஆங்கி
ஆகியோர் ஒரு எளிமையான ஃப்ளாட்டில் மூன்றாவது மாடியில் குடியிருக்கிறார்கள்.
மகன் அயன் கல்லூரி
விரிவுரையாளர் பி.எச்டிக்கு பதிவு செய்து ஆய்வுக்கான முஸ்தீபுகளிலும் ஆளுங்கட்சி சார்ந்த
சங்கத்தில் முழு ஈடுபாட்டுடனும் இருக்கிறான்.
ஆங்கி அயனின் காதல்
மனைவி. அவளது அப்பாவும் அம்மாவும் வங்கிப் பணியாளர்கள். சற்று பெரிய இடம். ஆங்கி பள்ளி
ஆசிரியை பகுதி நேர நாடக நடிகை. சற்று சுதந்திரமாகவும் சுயசார்போடும் இருக்க விரும்புபவள்.
பிரபாஸ்க்கு ஒரு
தம்பி தங்கை உண்டு. கிராமத்து பூர்வீக நிலம் உண்டு. அதை குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டு கார் கம்பெனிக்காக எடுக்கப் படும் நிலத்தில் இவர்களுடையதும் வருகிறது. தம்பியும்
தங்கையும் செக் வாங்க “எப்போ எப்போ” என்று ஏங்குகிறார்கள். பிரபாஸ் கிராமத்திற்கு நேரில்
சென்று அங்கு நிலத்தை இழக்க இருக்கும் விவசாயிகளின் உணர்வுகளை நேரில் பார்த்து கலங்குகிறார்.
முக்கியமாக அவரது நிலத்தில் குத்தகை விவசாயம் பார்க்கும் இருவரில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
வரும் தொகையில் குத்தகைதாரர்களுக்கு குறிப்பிட்ட அளவு நஷ்ட ஈடு தர சம்மதித்தும் அந்த
தற்கொலை நடந்து விடுகிறது.
இது சார்ந்த கதைமாந்தர்களின்
மனப்போக்கு கதையோட்டத்தில் மிக ஆழமாக அலசி விவாதிக்கப் படுகிறது.
ஆங்கியின் நாடகக்குழுவில்
அரசாங்கத்தை கண்டிக்கும் காட்சியை சேர்க்கிறார்கள். அயனோ தொழிற்சாலை நல்லது. நாடு வளர்ச்சி
பாதையில் செல்வதை தடுப்பது பிற்போக்கானது என வாதம் செய்கிறான். அவன் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை
சேர்ந்தவன் அல்லவா. காதல் தம்பதியினரிடையே இந்த விஷயம் சூடான விவாதங்களை கிளப்புகிறது.
ஆங்கியின் தாய்
அரசுக்கு ஆதரவாகவும் தந்தை எதிராகவும் பேசுகிறார்கள். பிரபாஸின் தம்பியும் தமக்கையும்
இன்னும் செக் வாங்காமல் தாமதம் செய்து தங்கள் நலனையும் சேர்த்தே கெடுக்கும் அண்ணனை
கண்டிக்கிறார்கள்.
இப்படியாக செல்லும்
நாவல் பிரபாஸ் மனசாட்சியின் உறுத்துதல் தாங்க இயலாமல் இறுதியில் தனது பங்கான அந்த
10 லட்ச ரூபாய் செக்கை கிழித்து எரிவதாக முடித்திருப்பார்.
ஜோதிபாசுவுக்கு
பிறகு வந்த ”புத்த தேவ் பட்டாச்சார்யா” அவர்களின் ஆட்சிகாலத்தில் டாடா நானோ தொழிற்சாலைக்கு
நிலம் கல்கத்தாவுக்கு அருகிலேயே உள்ள வளமான சிங்கூர் நில பகுதியை மக்களின் எதிர்ப்பை
மீறி தாரைவார்க்கிறார். 30 சதவீத மக்களிடம் அவர்களின் சம்மதம் இல்லாமலே நிலம் எடுக்கப்
பட்டிருக்கிறது. பின்னர் வந்த மம்தா பானர்ஜி ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று
நிலம் அனைத்தும் உரியோரிடம் ஒப்படைப்பு செய்தது வேறு கதை.
இதற்கு பின்னர்
ஒரு இரசாயன ஆலைக்காக நந்திகிராம் பகுதியில் நிலம் ஒதுக்கப் பட்டு மக்கள் எதிர்ப்பு
கிளம்பி 11 பேர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள்.
ஆட்சி அதிகாரம்
கம்யூனிஸ் கட்சியின் கையில் இருந்தாலும் அரசு எந்திரம் கார்ப்பரேட்டுக்கு வாலாட்டும்
நாய்க்குட்டி தான் என்பது நிருபணம் ஆன தருணத்தை பதிவு செய்யும் நாவல் தான் இது.
கூர்மையான அறிவு
தெளிவான வசனங்கள். அருமையான பாத்திரப் படைப்பு. சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது மொழிபெயர்ப்பும்
அருமை. வங்காளம் சார்ந்த பண்பாட்டு மற்றும் உணவு பழக்க வழக்கங்களை அங்கங்கே அடியில்
விளக்கி கூறி நாவலை வாசிப்போருக்கு எளிமை படுத்தியிருப்பார்.