Sunday, December 2, 2018

பேட் ஜீனியஸ் – மோசமான அதிபுத்திசாலி கொரியன் பட விமர்சனம்.


பேட் ஜீனியஸ் – மோசமான அதிபுத்திசாலி கொரியன் பட விமர்சனம்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் பரிட்சை நடக்கும் போதெல்லாம் பிட் அடிக்கும் மாணவர்களை பிடிப்பதற்காக அறைகளை சுற்றி சுற்றி வருவோம் நானும் நண்பரும் அறிவியல் ஆசிரியருமான பன்னீர் செல்வம் சாரும். அப்போது நடந்த ருசிகரமான சம்பவம் ஒன்று.
     அறையில் உள்ளே நுழைந்த போது ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் பேப்பரை புரட்டி அடியில் ஏதோ பார்ப்பதும் பின்னர் சுற்றும் முற்றும் பார்ப்பதுமாக இருந்தான். அவன் பிட்அடித்து எழுதிக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க சிபிஐ வரவேண்டியதில்லை. போய் கொத்தாக அள்ளினோம். திடீரென ஒரு ஐடியா உதித்தது. இவனையே தூண்டிலாக வைத்து மற்ற யாரேனும் சிக்கினால் பிடிக்கலாமே என்று அவனிடம் ஒரு டீல் பேசினோம். “உங்க கிளாஸ் பசங்க வேற யாரெல்லாம் எந்தெந்த அறைகளில் பிட் அடிக்கிறார்கள் என்று சொன்னால் உன்னை விட்டுவிடுவோம் இல்லன்னா நீ ஏழாவதுல பெயில்தான்” என்றோம். இந்த டீலிங் அவனுக்கு பிடித்து போனதால் மலமலவென மற்றவர்களை காட்டிக் கொடுத்தான். அவன் பக்கத்து வீட்டில் இருந்து வரும் ஒன்பதாம் வகுப்பு அண்ணனை கூட அவன் காட்டிக் கொடுக்க தயங்க வில்லை.
     அடுத்த அறையில் நேரே சென்று ஒரு குறிப்பிட்ட மாணவனை எழுப்பி பேண்டை மேலே தூக்கினோம். முழங்காலுக்கு கீழே ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிலும் மடிக்கப் பட்ட பிட் காகிதங்களை சொருகி இருந்தான். ஆனாலும் நாங்க எப்படி சரியாக மடக்கினோம் என புரியாமல் விழித்தான்.
     இப்போது பள்ளிகளில் மோசமான அதிபுத்திசாலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்த படத்தில் ”லின்” என்கிற நடுத்தர குடும்ப மாணவி பணக்கார பள்ளியில் பயில உதவித் தொகை மூலமா வாய்ப்பு பெறுகிறாள். அவளது தோழி “பேட்“. அவள் படிப்பில் மக்கு. அவளுக்கு ஒரு முக்கியமான தேர்வில் இவள் தனது அழி ரப்பரில் விடைக்கான ஆப்ஷன்களை “ஏ, பி, சி” என எழுதித் தருகிறாள். அது அவள் நல்ல கிரேட் பெற உதவுகிறது. இது அவளது தோழர்களுக்கு தெரியவருகிறது. இந்த விடை காண்பிக்கும் வேலையை தொழில் முறையில் மேம்படுத்தி சம்பாதிக்கிறாள். வாழ்க்கை ஜோராக போகிறது. “பாங்க்“ என்னும் மற்றொரு புத்திசாலித்தனமும் சமரசம் இல்லா நேர்மையும் கொண்ட மாணவன் வரும் வரை. அவன் இவளது டகால்டி வேலைகளை பிரின்சிபல் இடம் போட்டுக் கொடுத்து விடுகிறான். இவளது ஸ்காலர்ஷிப் பரிபோவதோடல்லாமல் வெளி நாட்டில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போகிறது.
     இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் தேர்வான  STC உலகளாவிய அளவில் ஒரே நாளில் நடக்க இருக்கிறது. அதில் “பேட்“ தேர்வாகி அவளது பாய்பிரெண்டுடன் வெளிநாட்டுக்கு படிக்க செல்ல வேண்டிய அதிமுக்கிய வாய்ப்பு உள்ளது. அதனால் அவள் “லின்னை“ நாடுகிறாள். அப்போது லின்னுக்கு பொறி தட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பெரிய தொகை பார்த்து விடலாம் என ஒரு ஐடியா செய்கிறாள். அதற்கு “பாங்கும்“ இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாள். அவனையும் அடித்து மிரட்டி கெஞ்சி பணிய வைக்கிறார்கள். லின்னும் பாங்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தேர்வு எழுதுகிறார்கள். அப்போது கொரியாவில் நேரம் காலை 7 என்பதால் இந்த டைம் ஜோன் வித்தியாசத்தில் அவர்கள் பாதிப்பாதி விடைகளை மனப்பாடம் செய்து இடைவேளையில் கழிவரையில் ஒளித்து வைத்திருக்கும் மொபைல் வழியாக வாட்சப் குருப்பில் போடுகிறார்கள். அதை நம்பி கொரியாவில் ஒரு முப்பது பேர் மில்லியன் கணக்கில் அவர்களுக்கு பணம் போட்டுவிட்டு காத்திருக்கிறார்கள். நேர்மையின் சிகரமான பாங்க் பாதி விடையில் மற்றொரு மில்லியன் டிமாண்ட் செய்கிறான் வேறு வழியின்றி தரப்படுகிறது.
அடுத்த இடைவேளையில் விடை அனுப்பும் போது அதிக நேரம் கழிவரையில் இருப்பதால் சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்பட்டு மாட்டிக் கொள்கிறான். லின்னும் மாட்டி ஆதாரங்கள் இல்லாததால் தப்பி கொரியா வந்து சேர்கிறாள். மனம் வருந்தி திருந்தி ஆசிரியர் வேலைக்கான படிப்பில் சேர்கிறாள். அப்போது கால் வருகிறது. பாங்க் அழைக்கிறான். போனால் அவர்களது லாண்டரி கடையை பெரிய அளவில் டெவலப் செய்து இருக்கிறான். அடுத்து வரும் மற்றொரு எக்சாமுக்கு இந்த வேலையை செய்ய வற்புறுத்துகிறான். மறுத்ததும் மிரட்டுகிறான். இவள் வேறு வழியின்றி ஓப்புதல் வாக்குமூலம் தர அமர்கிறாள். என்பதோடு முடிகிறது.
ஆரம்பத்தில் நேர்மையாக இருக்கும் லின் சற்றே பணத்தால் சபலப்பாட்டு படிப்படியாக தவறுகளை செய்கிறாள். உச்சத்தில் வருந்தி திருந்துகிறாள். விடாப்பிடியாக நேர்மையாக இருந்த பாங்க் வற்புறுத்தி தவறான பாதையில் இழுத்து விடப்படுகிறான். பின்பு அதை அவன் ஒரு தொழில் வாய்ப்பாக பார்க்கிறான். திருந்த மறுக்கிறான்.
     படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக இருந்தாலும் அடுத்தடுத்த தேர்வுகள் இவர்களின் காப்பி அடிக்கும் யுத்திகள் என பரபரவென்று நகர்கிறது. அதுவும் அந்த சிட்னி தேர்வறை காட்சிகள் பரபரப்பின் உச்சம். அவர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற நம் மனம் பதட்டம் அடையும் போது நம்மை அறியாமலேயே நாமும் அநீதிக்கு துணைபோகிறோம். திரைக்கதை எனும் வெள்ளம் அதன் போக்குக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
காப்பியடிக்கும் காட்சிகளின் கேமரா கோணங்கள் அருமை. ஒளிப்பதிவு கனக்கச்சிதம் கண்ணுக்கு குளுமை.
காப்பியடிப்பதை வைத்து ஒரு பரபர சினிமா என்பது மிக வித்தியாசமான அனுபவம். பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும். கடைசியாக ஒன்று அந்த லின்னின் தோழியாக வரும் “பேட்“ கதாநாயகியை விட அழகு. பேசும் விழிகள்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...