Saturday, December 22, 2018

Be With You (2018) கொரியன் படம் ஒரு பார்வை


Be with You (2018)


கொஞ்சம் ஃபேண்டசி நிறைய சென்டிமென்ட் மற்றும் காதல் நிரம்பிய ஒரு அருமையான கொரியன் படம்.
நான் பொதுவாக இப்போது மொபைலில் பார்க்கும் படங்களை பிட் பிட்டாகத் தான் பார்ப்பேன். ஒரேடியாக உட்கார நேரம் கிடைப்பதில்லை. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து மொபைல் நோண்டுவது படம் பார்ப்பது போன்றவற்றிற்கெல்லாம் சென்ற ஆண்டோடு முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது.
இந்த படம் பற்றி கேள்விப் பட்ட போது உங்கள் கைக்குட்டையை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்பது போல படித்ததால் ”என்னய்யா தமிழ்ல நாம பார்க்காத சென்டிமென்ட் சீனா” என்று பார்த்து விடுவது என்று தேடி படத்தை எடுத்து விட்டேன். ஆனா சப்டைட்டில் கிடைக்கவே இல்லை. அப்புறம் பல வகையாக தேடும் வார்த்தைகளை வடிவமைத்து கண்டேன் சப்டைட்டிலை.

இந்த கொரியன் மொழியிலும் அம்மாவை “அம்மா“ன்னுதான் சொல்றாங்க அப்பாவையும் “அப்பா“ என்று தான் சொல்றாங்க.
சரி படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்தவுடன் ஒரு பென்குவின் கார்ட்டூன் வருகிறது. எனக்கோ அச்சச்சோ இது கார்ட்டூன் படமா என்ற பயந்து விட்டேன். ஆனால் படத்தின் மையக்கரு அந்த கார்ட்டூன் கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் அந்த கார்ட்டூன் கதை இன்றியமையாதது ஆகிவிடுகிறது.
இறந்து போய் “மேக“ நாட்டில் இருக்கும் தாய் பென்குவின் தனது குட்டியை அங்கிருந்தே பார்த்து கண்ணீர் வடித்தபடி இருக்கிறது. மழைக்கால முதல் மழைத்துளியின் போது “மேக“நாட்டில் இருந்து புவிக்கு ஒரு ரயில் போகிறது. அதில் ஏறிப் போய் குட்டியுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறது தாய். வெயில் காலம் ஆரம்பிக்கும் போது “மேக“நாட்டிற்கான கடைசி இரயில் கிளம்புகிறது அதில் ஏறி நாடு திரும்புகிறது அந்த தாய் பென்குவின்.
படம் இந்த கதையை குட்டிப் பையன் ஜி-ஹோ படித்து மூடி வைக்கம் போது கதை திறக்கிறது. வூ-ஜின் தனது தாயில்லா பையன் ஜி-ஹோ வை மிகவும் கஷ்ட்டப் பட்டு வளர்த்து வருகிறார். பையனும் அப்பாவும் அம்மா நினைவாகவே இருக்கிறார்கள். அந்த பென்குவின் கதையில் வருவது போல மழைக்கால துவக்கத்தில் தனது தாய் “மேக“நாட்டில் இருந்து இரயிலில் வருவாள் என்று நம்புகிறான். அவனை டிசப்பாய்ன்ட் செய்ய வேண்டாமே என்ற தந்தையும் அதை ஆமோதிக்கிறார்.
            மழைக்காலம் துவங்குகிறது. ஆர்வத்தோடு பிள்ளை ஜி-ஹோ இரயில் நிலையம் ஓடுகிறான் தாயை வரவேற்க. இரயில் போகிறது தாய் இறங்க வில்லை. பிள்ளை ஏமாற்றத்தோடு இரயில் பாதையில் ஓடுகிறான். அங்கே இவனது தாய் சூ-ஆ அமர்ந்திருக்கிறாள். ஆனால் நினைவுகள் எதுவும் இல்லை. இவர்கள் யார் என கேட்கிறாள்.

            சூ-ஆ வீட்டிற்கு வந்து தங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களோடு ஒன்றுகிறாள். கணவருடன் மீண்டும் காதல் அரும்புகிறது. ஊராருக்கு தெரியாமல் அவளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள்.  கணவன் வூ-ஜின் அவளுடனான அவனது காதல் கதைகளை கூறுகிறான்.
            மழைக்காலம் முடிவை நெருங்க நெருங்க அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பதட்டம் அதிகமாகிறது. அவள் அவர்களுடன் நிரந்தரமாக தங்கினாளா அல்லது “மேக“நாட்டிற்கு திரும்பிச் செல்கிறாளா? என்பதை மீதிப்படத்தில் நம்மை கண்ணீரில் ஆழ்த்தி சொல்கிறார்கள்.
            படத்தின் ஆரம்பத்திலேயே இறந்து போன  சூ-ஆ வந்துவிடுகிறார். அவர் உண்மையா டபுள் ஆக்டா என்கிற கேள்வி நம்மை குடைய ஆரம்பிக்கிறது. அவர்களிடையேயான கடந்த கால காதல் ஹீரோ சூ-ஆ விடம் சொல்கிறான். ரொமான்ஸ் சீனெல்லாம் மிக அருமை. ஹீரோ மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் கூச்சத்தை வென்று சூ-ஆ விடம் பேசவே நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிடுகிறது.
            சூ-ஆ எப்படி இறந்து போனாள் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. வீட்டில் இருக்கும் பழைய சூ-ஆ வின் டைரி வழியாக மீதிக் கதையை தெரிந்து கொள்கிறாள். அதன் பின்பு மீண்ட ஞாபகங்களை டைரியில் எழுதிச் செல்கிறாள்.
            அருமையான ஒளிப்பதிவு. மழைப் பின்னணியில் பழைய வீட்டின் முன்பு ரோஸ் வண்ண நாயகி மெரூன் கலர் குடையில் செல்லும் சீன் படத்தில் இரண்டு முறை வருகிறது. அந்த சீன்கள் அழகிய ஓவியம் போல் அமைந்து இருக்கும். அவர்களின் வீடு இருக்கும் இடத்தையொட்டி செல்லும் மலையடிவார சாலை அதற்கு கீழே பள்ளத்தாக்கு அங்கே ஓடும் ஆறு இவற்றை ஒரு சீனில் மாலை நேர வெயிலின் மஞ்சள் வெளிச்சத்தில் காண்பித்து இருப்பார்கள். மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சி.
            வூ-ஜின் சும்மா ஏழடி உயரம் இருப்பார் போல. நல்ல ஹேண்ட்சம். தேவதைகள் எப்படி இருப்பார்கள் என்று அறியாதவர்கள் இந்தப் படத்தில் சூ-ஆ வாக வரும் நாயகியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் குட்டிப்பயல் ஜி-ஹோ அருமையாக நடித்திருக்கிறான். சில நேரங்களில் கண்களில் நீர் கட்டிக் கொள்கிறது என்றால் பாருங்களேன்.
            இந்த கதை இதே பெயரில் 2004ல் ஒரு முறை கொரியாவிலேயே எடுத்திருக்கிறார்கள். இதே பெயரில் டிவி சீரியல் கூட வந்திருக்கிறதாம்.
            ஒரு நல்ல சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த ஒரு தமிழ்ப் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் ஒரு முறை பாருங்கள்.
           
           

No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...