Saturday, December 1, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம் – 4 கூகுள் டிரைவ்



பதட்டம் வேண்டாம் உங்க கிட்ட டிரைவிங் லைசன்ஸ் இல்லேன்னா கூட கூகுள் டிரைவ் பயன்படுத்தலாம்.
இதுக்கு அப்ளிகேஷன் லிங்க் எல்லாம் இணைக்கவில்லை. ஏன்னா ஆண்ட்ராய்ட் போன் வாங்கினாலே இதெல்லாம் டீஃபால்ட்டா வந்துடும். அதனால இது உங்க போனில் ஏற்கனவே இருக்கு என்று அறிக.
ஆமாம் அந்த வெள்ளை, பச்சை, ஊதா முக்கோணம் தான் கூகுள் டிரைவ். ஆமாம் இது எதுக்கு?
பேங்க்ல அக்கௌண்ட் ஆரம்பிச்சாக்க நாமதான் அதுல பணம் போட்டு வைக்கணும். ஆனால் கூகுள்ள இ-மெயில் அக்கவுண்ட் ஆரம்பிச்சா உடனடியா பத்து சென்ட் எடத்த நம்ம பேர்ல பட்டா போட்டு கொடுத்துடறான்.
என்னாது?
ஆமாம்பா, ஆமாம் டிஜிட்டல் உலகத்துல நமக்குன்னு பத்து ஜிபி எடத்த பட்டா போட்டு எதவேன்னா போட்டு வச்சிக்கோ அதோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. நீ எப்போ கேட்டாலும் எங்கேருந்து கேட்டாலும் தருவேன் என்று நமக்கு இதயத்துல கூட இடங்கொடுக்காதவங்க மத்தியில இணைய உலகத்துல பத்து ஜி-பி இடத்தை கூகுள் தர்ரான்.
சரி அத எப்படி பயன்படுத்துறது?
அந்த மூவர்ண முக்கோணத்த அமுக்கினீங்கன்னா உங்க பத்து சென்ட் எடம் திறக்கும். அதுல ஏற்கனவே எதாவது போட்டு வச்சிருந்திங்கன்னா காமிக்கும்.
இடது கீழ் மூலையில் ஊதாகலர்ல வட்டத்துக்குள் கூட்டல் குறி ஒண்ணு இருக்கும். அத அழுத்துனீங்கன்னா Folder(கோப்புரை), Upload(பதிவேற்றுக), Scan என்று மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும். அதற்கு கீழே மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும் கழுத கிடக்கட்டும் விடுங்க. அத பத்தி நீங்களே பின்னாடி தெரிஞ்சுக்குவீங்க.
முதல்ல கோப்புரை –Folder
உங்க பத்து ஜிபி எடத்துல கோப்புகளை போட்டு வைக்க ஒரு பெட்டி வேண்டும் அல்லவா அது தான் இது. நம்மிடம் பல விதமான கோப்புகள் இருக்கலாம். உதாரணமாக Mark sheets, Degree, Driving licence, voter ID, Aadhar ID என அனைத்தையும் ஸ்கேன் செய்து Certificates என்கிற கோப்புரையில் போட்டு வைக்கலாம். இது போல நீங்கள் சேமிக்க நினைக்கும் கோப்புகளை ரக வாரியாக கோப்புரைக்குள் இட்டு வைத்தால் பின்னால் தேடி எடுப்பது எளிது அதனால் தான் முதலில் நம் பயன் படுத்துவதற்கு ஏற்றவாறு பலதரப்பட்ட கோப்புரைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டோம் என்றால் கோப்புகளை பதிவேற்றும் போது உரிய கோப்புரைக்குள் இட்டு வைக்கலாம்.
பதிவேற்றுக Upload
இந்த Upload பட்டனை அமுக்கினால் உங்கள் போனில் இருக்கும் சமீபத்திய டாக்குமெண்ட் எல்லாம் திரையில் தோன்றும். இடது மேல் மூலையில் உள்ள பட்டை நாமத்தை தொட்டால் இடப்புறத்தில் உள்ள அந்தப்புரம் ஒன்று வெளியே வரும். அதில் உங்க போனில் உள்ள டாக்குமெண்டின் ரகங்கள்(images, videos, documents, mp3) என்று காண்பிக்கும். அதில் எது வேண்டுமோ சென்று தேர்வு செய்து பதிவேற்றலாம். உங்க போனுடைய டிரைவ், அல்லது மெமரி கார்டும் கூட காண்பிக்கும். வேண்டுமானால் அதில் உள்ளே நுழைந்து துழாவி எடுத்து அப்லோட் செய்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு பதிவேற்றும் முன்பாக எந்த கோப்புரையில் பதிவேற்றி வைக்க வேண்டுமோ அந்த கோப்புரையை டிரைவில் சென்று திறந்து வைத்துக் கொண்டு அப்லோட் ஆப்ஷனை அழுத்த வேண்டும். பின்பு மேற்கூறிய வண்ணம் அப்லோட் செய்ய வேண்டும்.
ஸ்கேன்
மேற்சொன்ன அப்லோட் பயன்படுத்திய அதே மாதிரி செய்ய வேண்டும். ஆனால் இங்கு கேமரா ஓப்பன் ஆகும். எதை ஸ்கேன் செய்ய வேண்டுமோ அதை போட்டோ எடுத்தால் போதுமானது.
ஒவ்வொரு கோப்புரைக்கும் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டோம் என்றால் அந்த கோப்புரையில் Add people என்கிற ஆப்ஷன் மூலம் பல இ-மெயில் முகவரிகளை கொடுத்து யாரோடு வேண்டுமானாலும் பகிரலாம். பகிரவேண்டிய தகவல்களை இவ்வாறு ஒரு கோப்புரைக்குள் இட்டு ஆட் பீப்பில் ஆப்ஷன் மூலம் பகிரலாம். Copy link மூலமாக முகவரியை காப்பி செய்து தேவைப்படுவோருக்கு வாட்சப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்ப இயலும்.
மற்றவைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி கற்றுக் கொள்ளலாம்.
நம்முடைய கோப்புகள் அனைத்தும் கூகுள் கம்பெனியின் சர்வரில் பத்திரமாக இருக்கும். அதனால் கவலை வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய இணைப்பைக் கொண்டு உங்கள் மெயில் முகவரி மூலமாக உள்ளே நுழைந்து எடுத்துக் கொண்டு வந்து விடலாம்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...