Tuesday, April 30, 2019

100க்கு 100 தேர்ச்சி அல்ல எங்கள் முயற்சி

காலையில் ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு, " சார், நான் கமலோட (பெயர் மாற்றப் பட்டுள்ளது)அம்மா பேசறேன் சார்"
"எந்த கமல் அம்மா?!"
" பத்தாம் வகுப்பு கமல்"
"ஓ, உங்க பையன்தான் பாஸாயிட்டானே ம்மா!"
"ரொம்ப நன்றி சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியிலை,
ரொம்ப ரொம்ப நன்றி சார்" என உடைந்து அழுதார்.

யார் இந்த கமல்?!
தாத்தா வீட்டில் தங்கி படிப்பவன், வயதான தாத்தாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஊர் சுற்றினான்.
ஆசிரியர்களோ விட்டேனா பார் என அவன் வீட்டில் போய் அமர்ந்து விட்டார்கள்.
அவனோட அம்மாவுக்கும் தொலை'பேசி' வரச்செய்து கொத்தாக தூக்கிக் கொண்டு வந்தனர்.
அவனோட அம்மாவுக்கும் அவனுக்கும் அறிவுரை கூறி திரும்பவும் பள்ளிக்கு வரச்செய்தோம்.
தேர்வுக்கு 10 நாள் இருக்கும் போது மீண்டும் வம்பு பண்ணி ஓடிவிட்டான். பள்ளிக்கு வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான்.
இருக்கும் ஒரே வாய்ப்பாக அவன் அம்மாவுக்கு விஷயத்தை எடுத்து சொல்லி 'இனிமே வந்தா கூட பாஸ்பண்ண வச்சிடுவோம் ' என்று உறுதியளித்தனர் தம் முயற்சியில் சற்றும் தளராத எங்கள் ஆசிரியர்கள்.
ஆனாலும் நம்பிக்கையின்றியே என்னிடம் விஷயத்தை கூறினார்கள்.

அடுத்தநாள் "மஃப்டியில்" சோல்டர் பேகோடு ஃபேர்வெல் பார்ட்டிக்கு காலையிலேயே வந்து விட்டான்.
இந்த மாதிரி பல "உள்ளே வெளியே" போராட்டத்தோடு அவனோடு மல்லுக் கட்டி அவனை கடை தேற்றி விட்டார்கள் எமது ஆசிரியர்கள்.

தேர்வு முடிவுகள் வந்த அன்று காலை ரொம்ப பிசியாக பல போன்கால்களுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்த போது ஒரு அம்மா வந்து கை கூப்பியபடி நின்றார்.
"என்னம்மா?!"
"என் பொண்ணு பாஸ் பண்ணிட்டாளா சாரு?!"
"பேர் என்னங்கம்மா?!"
"---"
" ஓ நல்லாவே பாஸ பண்ணிடுச்சிம்மா, 320 மார்க்"
சில நிமிட நேரம் தேம்பி தேம்பி அழுதார்
"ரொம்ப நன்றி சாமிவுளா" என்று கரம் கூப்பினார்.
"நான் இங்க துப்புரவு தொழிலாளியா இருக்குறேன் சாமி, நான் படிக்கல என் பொண்ணு படிச்சிக்கிட்டா" என்று தழுதழுத்தபடி கூறினார்
"பொண்ண  மேல படிக்க வைங்க, பொண்ணுங்களுக்கு நகை நட்டை விட படிப்புதான் பெரிய சொத்து"
"கடன  ஒடன வாங்கியாவுது படிக்க வச்சிடுறேன் சாமி" என்று கூறிச் சென்றார்.

"பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல?!"
இப்படியும் ஒரு பெண் மாலதி (பெயர் மாற்றப் பட்டுள்ளது)
ரொம்ப ட்ரிக்கா கட் அடிப்பார். நீண்ட நாள் வரலேன்னா தானே பெயரை நீக்குவாங்க, வாரத்தில் ரெண்டு நாள் உள்ளே மூன்று நாள் வெளியே.
ஆசிரியர்களும் மாலதி வீட்டுக்கு நடையாய் நடந்து சலித்து விட்டார்கள்.
மாலதியின் அம்மா, அப்பா, அக்கா, அப்பாயி, அம்மாயி, அத்தை என எல்லோரும் வாரா வாரம் வந்து பரிந்து பேசி உள்ளே அனுப்புவார்கள். எல்லாம் இரண்டு நாள் தான், அடுத்த வாரம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிடுவாள்.
அவுங்க வீட்டு ரேஷன் கார்டுல தான் பெயர் இல்லையே ஒழிய அவுங்க குடும்ப உறுப்பினர் போல ஆகிவிட்டேன்.
கடைசியாக பரிட்சைக்கு இடைப்பட்ட நாட்கள் பயிற்சிக்கும் வரவில்லை.
ஆசிரியப் பெருமக்களின் பகீரத பிரயத்தனத்திற்கு பயனில்லாமல் போயிற்று.
ஆம், இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தாள்.
நூறு சத தேர்ச்சியை எதிர் நோக்கி மாலதிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் எம் பள்ளியில் இல்லை.
சற்று அசட்டையாக இருந்திருந்தால் மாலதியே இடை நின்றிருப்பார்.
ஆனால் தேர்வு எழுதியதால் 3 பாடங்களில் தேறினார். நிச்சயமாக உடனடித் துணைத் தேர்வில் தேறி விடுவார்.
தலைமையாசிரியராக முதலாம் ஆண்டில் 100 விழுக்காடு பெற முடியாமல் போனாலும் அனைத்து குழந்தைகளையும் அரவணைத்து விடா முயற்சியோடு பணியாற்றிய ஆசிரியர் குழுவோடு இணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய திருப்தியே பல விருதுகளுக்கு இணையானது.

Sunday, April 28, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை – 2








 முன்குறிப்பு
முதல் பகுதியில் கருந்துளை என்பது என்ன என்கிற புரிதலை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி கண்டள்ளதாக எண்ணுகிறேன். கருந்துளை பற்றி என் பையன் அருண் இடம் அவ்வப்போது அளவளாவியது உண்டு. எனவே இந்த பகுதியை எனக்கும் அவனுக்குமான ஒரு கற்பனை உரையாடலாக வழங்கலாம் என்றுள்ளேன்.
ஞாயிறு மதியம் ஃபுல் கட்டு கட்டி விட்டு உறங்க எத்தனித்த நேரம் கெடுவாய்ப்பாக அருண் கண்ணில் தி இந்து வில் வந்த கருந்துளையின் புகைப்படம் பட்டுத் தொலைத்து விட்டது. அப்புறம் என்ன என் தூக்கம் தொலைந்தது தான் மிச்சம்.
“அப்பா, இந்த கருந்துளையை முதல்ல யாருப்பா கண்டு புடிச்சாங்க?”
“நியுட்டன் முதன் முதல்ல ஈர்ப்பு விதியை கண்டு பிடிச்சது தான் முதல்ல நடந்தது, அதுக்கப்புறம் அதில தொடங்கி சங்கிலித் தொடர் மாதிரி ஒவ்வொரு நிகழ்வா நடந்து இப்போ கருந்துளையை போட்டோ புடிச்சதுல வந்து நிக்கிறோம், போதுமா ? எனக்கு தூக்கம் வருது நீ போய் படு”
“அப்பா, இத மட்டும் சொல்லுப்பா, நியுட்டனுக்கு அப்புறம் யாரெல்லாம் கருந்துளையை பற்றி ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சாங்க?”
”நியுட்டன் இறப்பதற்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் போது பிறந்த ஒருவர் தான் ஆங்கிலேய விஞ்ஞானி ஜான் மிஷல்(இவர் ஒரு சர்ச் ஃபாதர்), இவர் தான் கருந்துளை என்ற ஒன்று இருக்கிறது என்கிற கருத்தை முன் வைத்தார். ஆனால் அதற்கு அவர் வைத்த பெயர் “இருள் நட்சத்திரம்“ (Dark Star)”

“இருள் நட்சத்திரம் அவருக்கு மட்டும் எப்படிப்பா தெரிஞ்சுது?”
”டேய், முதல்ல அந்த விஞ்ஞானி பெரிய கில்லாடிடா, பூமியோட எடைய கண்டுபிடிக்க ஒரு மிஷின கண்டு பிடிச்சவரு, செயற்கை காந்தம் தயாரிக்கும் வழிமுறையை முதலில் சொன்னவர்”
“அதெல்லாம் சரிப்பா, டார்க் ஸ்டார் இருக்குன்னு எப்படி சொன்னார்?”
“உனக்கு கோள்களின் விடுபடு திசை வேகம் (Escape velocity) பற்றி தெரியும் இல்லையா?“
     “ஆமாம்பா, சூரியனில் இருந்து ஒரு பொருள் எஸ்கேப் ஆகணும்னா ஒரு விநாடிக்கு 618 கிமீ ஸ்பீட்ல  போகணும்னு சொன்னீங்களே”
“வெரிகுட், அதையே நம்ம மிஷல் கொஞ்சம் டெவலப் பண்ணினார்.”
“எப்படிப்பா?”
”ஒரு நட்சத்திரத்தின் விடுபடு திசைவேகம் ஒளியின் திசைவேகத்தை விஞ்சி இருக்குமானால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பில் இருந்து ஒளி கூட தப்ப இயலாது அந்த மாதிரி ஒரு நட்சத்திரம தான் டார்க் ஸ்டார் அப்படின்னு சொன்னார்”
“அந்த மாதிரி ஸ்டார் இருக்குமாப்பா?”
“ஏன் இல்லாம, ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3 லட்சம் கிமீ, நம்ம சூரியனோட விடுபடு திசைவேகம் 618 கிமீ”
“சரி அதனால”
“உத்தேசமா சொன்னா சூரியன போல 500 மடங்கு பெரிய நட்சத்திரத்தோட விடுபடு திசைவேகம் 3 லட்சத்தை தாண்டும் (500X618=309000) அந்த ஒரு நட்சத்திரம் ஒளிய கூட வெளிய விடாம இருக்கறதால அது ஒளிராது எனவே ’டார்க் ஸ்டார்’ உண்டு என்கிற முடிவுக்கு வந்துட்டார்”
“அப்புறம் யாருப்பா இந்த விஷயத்தை இன்னும் தெளிவா கண்டுபிடிச்சாங்க?”
“மிஷல் கண்டு பிடிச்ச ஒரு பத்தாண்டுக்கு பின்னால் கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் “சகலகலா வல்லவரான “லாப்லாஸ்” ம் இதே விஷயத்தை முன்னிருத்தினாரு”

“அப்புறம்பா?”
“அப்புறம் என்ன 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகள்ல நடந்த இந்த விஷயங்கள மேல கொண்டு போற அளவில் நம்ம ஆராய்ச்சிகள் அந்த காலகட்டத்தில் முன்னேறாத காரணத்தால மேற்கொண்டு எந்த கருத்தும் யாரும் கூறாம கிடப்பில் போட்டுட்டாங்க”
“யாருமே கண்டுகலயா?”
“ஆமா, அப்புறம் 20ம் நூற்றாண்டு இயற்பியல் துறையையே புரட்டிப் போடும் 4 முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டார் நம்ம ஹீரோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்”
”ஐன்ஸ்டீன் எந்த நாடுப்பா?”

“ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து ஸ்விட்சர்லாந்துல வளர்ந்து, ஹிட்லரோட யூதவெறிக்கு தப்பி அமெரிக்காவில் குடியேறியவருதான் நம்ம ஹீரோ ஐன்ஸ்டீன்”
“அவரோட சார்பியல் கோட்பாடு(Theory of Relativity) நியுட்டனின் ஈர்ப்பு விதியை வேற விதமா நிறுவியது“
“சார்பியல் கோட்பாடுன்னா என்னப்பா?”
” அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது, கருந்துளைக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்குவோம். அவர் தான் ஸ்பேஸ்ல இருக்கிற முப்பறிமாணங்களில் நான்காவது பறிமாணமாக நேரத்தை கொண்டு வந்தார்“
”கோள்களின் நிறைகள் சமதளமாக இருக்கும் நேர வரைபடத்தில் ஒரு வளைவை ஏற்படுத்துகின்றன என்றார். அதாவது நேர்க்கோட்டில் போகும் காலமானது கோள்களின் நிறைக்கேற்ப வளைகின்றன”

”புரியலப்பா”
“இன்டெர்ஸ்டெல்லார் படம் பார்த்தியா இல்லையா?“
“ஆமாம்பா, ஹீரோ 40 வயசிலேயே இருப்பான் ஆனா அவன் பொண்ணு 108 வயசாயிடுவாளே”
“அதே தான், ஹீரோ போகிற அந்த கோளில் ஒரு மணிநேரம் பூமியில் 20 ஆண்டுகள், அதாவது அந்த கோள் நேரத்தை அதிகமாக வளைத்து விடுகிறது“
“சரி கருந்துளைக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?”
”நட்சத்திரம் எவ்வளவு அதிக நிறையுள்ளதாக உள்ளதோ அந்த அளவுக்கு காலத்தை வளைக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் நிறையை அந்த நட்சத்திரம் எட்டும் போது காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. அந்த எல்லை நிறையில் தான் நேரத்தின் கடைசி எல்லைக் கோடு முடிகிறது. அதன் பிறகு காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்”
“என்னது காலம் இல்லாமல் போய்விடுமா?”
”ஆமாம் அதனால் தான் கருந்துளையானது “நிகழ்வு எல்லை“ (EVENT HORIZON) என்று ஐன்ஸ்டீனால் அழைக்கப் பட்டது”

“அப்பா, அப்புறம்,,,,”
”இன்னைக்கு இது போதும், இதுவே தலைசுத்துற மாதிரிதான் இருக்கும், மீதிய அப்புறம் பாப்போம். இந்திய விஞ்ஞானி ஒருத்தர் கூட கருந்துளை ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லை நட்டு வச்சுட்டு போயிருக்காரு அவர பத்தி அடுத்த பகுதியில் பார்ப்போம்”


Thursday, April 25, 2019

கருந்துளை என்னும் பெருந்துளை-1



     சமீபத்தில் ஒரு செய்தி செய்தித் தாள்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. கருந்துளையை புகைப்படம் எடுத்து விட்டார்களாம்.
     ”என்னாது, ஒரு போட்டோ புடிச்சதுக்கா இவ்வளவு அளப்பறைய குடுக்குறாய்ங்க?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
     ”ஆமாம் பின்ன, ஒரு மெதுவடைய அந்தக் கால மொபைல் கேமராவுல கேவலமா எடுக்கத் தெரியாதவன் எடுத்த மாதிரி ஒரு போட்டோவ காமிச்சி பீத்திக்கிறாய்ங்களே!!”
     “சரி, சரி, டென்ஷன் ஆவாத, மொதல்ல இந்த கருந்துளை பற்றி தெரிஞ்சிகிட்டா நீயும் விஞ்ஞானிகள் செஞ்ச செயல பாராட்டுவ”
     ”ஆமாம், அது இன்னாப்பா, கருந்துளைன்னா கருப்பா ஓட்டையா இருக்குமா?”

     “முதல்ல, கருந்துளை கருப்பா இருக்கும் என்கிற எண்ணத்த மாத்திக்க அது கருப்பா ஒண்ணும் இல்ல, அது தக தகன்னு ஜொலிச்சிக்கிட்டு தான் இருக்கும், ஆனா ஒரு வேள நம்மாள பாக்க முடிஞ்சாக் கூட அது கருப்பா தான் தெரியும்”
     “இன்னாப்பா நீ ரொம்ப கொயப்புர”
     “நாம ஒரு பொருள பாக்கணும்னா வெளிச்சம் வேணும், அதாவது ஒளி அந்தப் பொருள் மேல பட்டு பிரதிபலிக்கணும்”
     ”ஆமாம்பா, அதனால தானே நம்மாள இருட்டுள ஒண்ணியும் பாக்க முடில”
     “இந்த கருந்துளை மேல ஒளி பட்டாலோ அல்லது அதுவே ஒரு ஒளியை வெளியிட்டாலோ நமக்கு தெரியாது கருப்பா தான் தெரியும், அதாவது கருப்புன்னா, அங்கிருந்து எந்த ஒளியும் நம்மள வந்து சேராது அதனால கருப்பு”
“ஒண்ணும் புரியலபா”
     “சரி, கருந்துளைய விடு, புவி ஈர்ப்பு சக்தி பற்றி ஏதாவது தெரியுமா?”
     “தெரியும்பா, இந்த நியுட்டன் மேல ஆப்பிள் விழுந்த போது அவரு பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்குனு கண்டுகினாறு, நிலா நம்ம பூமிய சுத்தறது, நம்ம பூமி சூரியன சுத்தறது எல்லாமே ஒரு ஈர்ப்பு தான் காரணம்னு இஸ்கூல்ல படிச்சிருக்கேன்பா”
     “சரி, சரி இது போதும் ஒனக்கு கருந்துளை பற்றி புரிய வச்சுடலாம்”
     “சூரியன், கோள்கள் என்று இல்லை, எந்த இரண்டு பொருள்களுக்கும் இடையில ஒரு ஈர்ப்பு இருக்கும்னு நியுட்டன் சொல்லிட்டு கையில ஒரு சூத்திரத்தையும் கொடுத்துருக்காரு”
     “அப்படியா, இந்த தரையில கிடக்குற இரண்டு கல்லுக்கும் இடையில கூட ஈர்ப்பு விசை இருக்கா, இன்னாப்பா கத உடுற”
     “ஆமாம், இருக்கு! ஆனா உணரத்தக்க அளவில் இல்லாம ரொம்பவும் குறைவா இருக்கும், அதுதான் நியுட்டன் கொடுத்த சூத்திரம்”
     “என்னாப்பா அந்த சூத்திரம் a2+b2 மாதிரியா”
     “இரண்டு பொருள்களுக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு அவற்றின் நிறைக்கு நேர் விகிதத்திலும் (நிறை அதிகம்னா ஈர்ப்பும் அதிகம் குறைவுன்னா, குறைவு) அவற்றிற்கு இடைப்பட்ட தூரத்தின் இருமடி(ஸ்கொயர்)க்கு எதிர்விகிதத்திலும்(நெருக்கமா இருந்து அதிக ஈர்ப்பு, தொலைவா இருந்தா குறைவான ஈர்ப்பு) இருக்கும்”
     “அதாவது, வெய்ட் அதிகமா இருந்தா நல்லா இஸ்துக்கும், அதுவே நெருக்கமா இருந்தா இன்னும் நல்லா இஸ்துகுனு இருக்கும் அதானே?!”
     “இப்போ புரியுதா பூமி ஏன் தன்னை நோக்கி ஈர்க்குதுன்னு?”
     “இது பிரியுது, ஆனா கருந்துளைன்னு சொல்லிப்புட்டு டக்குன்னு ரூட்ட மாத்திட்டியேப்பா”
     “தோ அங்கதான் வரேன், இந்த பூமி எல்லா பொருளையும் ஈர்ப்பதால் இந்த பூமிய விட்டு பிச்சிகிட்டு வெளியே போகனும்னா அதுக்கு ஒரு செகண்டுக்கு 11.2 கிமீ ஸ்பீட்ல போகணும் அது தான் பூமிக்கான விடுபடு திசைவேகம்”

     “அப்படின்னா நிலாவுக்கு ராக்கெட் விடசொல்லோ பூமிய விட்டு வெளிய கிளம்ப 11.2 கிமீ ஸ்பீட்ல போயிருப்பாங்களா”
     “அதேதான், இதுவே வியாழன்னு ஒரு கோள் (சூரியமண்டலத்திலேயே பெரிய கோள்) இருக்கு இல்லையா அந்த கோளோட விடுபடு திசைவேகம் 59.5 கிமீ”
     “அடேங்கப்பா, அப்ப வியாழன்ல இருந்து ராக்கெட் உடுணும்னா இன்னும் கஷ்டமா இருக்குமே”
     “நம்ம பூமிய விட்டு கிளம்ப 11.2 கிமீ ஸ்பீட் வேணும்ல, அதுவே 13 லட்சம் பூமிவே உள்ள வச்சி அடைக்கிற சைஸ்ல இருக்கிற சூரியன விட்டு எஸ்கேப் ஆவணும்னா எவ்வளவு ஸ்பீட் தேவைன்னு தெரியுமா?”
     “ரொம்ப அதிகமா இருக்குமே”
     “ஆமாம்,  வினாடிக்கு 618 கிமீ”
     “சரி நீ இப்போ இன்னாதான சொல்ல வர்ர, முதல்ல கருந்துளைன்ன, அடுத்து ஈர்ப்பு விசைன்ன, இப்பொ விடுபடு திசைவேகம் அதாவது எஸ்கேப் ஆவறதுக்கு தேவையான இஸ்பீடு ன்ற”
     “இதோ இப்போ கனெக்ட் பண்றேன், இந்த விடுபடு திசைவேகம் கோள்களோட எடை மட்டுமில்லாம எந்த பொருள் எஸ்கேப் ஆகி போகுதோ அந்த பொருளோட எடையையும் பொருத்தது அப்படின்னு சைன்டிஸ்ட் எல்லரும் சொல்றாங்க“
     “சரி மேல போ”
     “விடுபடு திசைவேகத்துக்கான சூத்திரத்தில் மதிப்ப அதிகமா போட்டுகிட்டே போய் பாக்குறாங்க, அப்போ ரொம்ப ரொம்ப (கற்பனைக்கு எட்டாத) அதிக அடர்த்தியும் நிறையும் உள்ள ஒரு பொருள் இருந்தா அந்த பொருள் எதையும் தப்பிக்க விடாம புடிச்சி வச்சிக்கும், ஏன் ஒளி கூட அதோட புலத்தில் இருந்து தப்பிச்சி வெளிய ஓடிவரமுடியாது அப்படின்னு கண்டு பிடிச்சாங்க”
     “ அப்படின்னா அதுல இருந்து ஒளி வரலன்னா நமக்கு அந்த மாதிரி ஒரு பொருள் இருக்கறதே தெரியாதே”
     “ஆமாம், வினாடிக்கு 3 லட்சம் கிமீ ஸ்பீட்ல போகிற ஒளி கூட தப்பிச்சி வரமுடியாத – அதாவது அந்த பொருளோட விடுபடு திசை வேகம் 3 லட்சம் கிமீ க்கும் மேல – அந்த வானியல் பொருள் தான் கருந்துளை”
     “இன்னாபா அதிசயமா கீது, அந்த மாதிரி ஒரு கருந்துளை இருக்குன்னு எப்படிப்பா கண்டுகினாங்க”
     “இன்னைக்கு இது போதும், கருந்துளை பற்றி முதல்ல யாரு கருத்து சொன்னாங்க, எப்படி அத நிருபிச்சாங்க, அப்புறம் அத எப்படி போட்டோ பிடிச்சாங்க எல்லாத்தையும் விளாவாரியா அடுத்தடுத்த பகுதியில ஆற அமர பாக்கலாம்”
     “ஐ யாம் வெய்ட்டிங் பா”

Tuesday, April 23, 2019

சர்வதேச புத்தக தின சிறப்பு புத்தக விமர்சனம்


உலக புத்தக நாளாகிய இன்று நான் சமீபத்தில் வாசித்த இரண்டு நூல்கள் குறித்து பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
சி.சு.செல்லப்பாவின்வாடிவாசல்


இந்த நாவலைப் பற்றிபரவலாக அனைவரும் அறிந்திருக்க இயலும். பேரைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா?
ஆம்,  இதுஜல்லிக்கட்டுபற்றியஒருபெரியசிறுகதைஅல்லதுகுறுநாவல்என்றும்சொல்லலாம்.
எர்னஸ்ட்ஹெமிங்வேவின்நோபல்பரிசுபெற்றபடைப்பானகடலும்கிழவனும்அல்லதுபிரபலமானஆங்கிலநாவலானமொபிடிக்“ (திமிங்கிலவேட்டைதமிழில்) இவற்றோடுஒப்பிடத்தக்கது.
விலங்குக்கும்மனிதனுக்குமானநேருக்குநேர்ஒத்தைக்குஒத்தையாகமோதும்யுத்தத்தைமிகவும்நுணுக்கமாகஎழுத்துவழிகாட்சிபடிமமாகமாற்றும்ஜாலவித்தையைபுரிந்துஇருப்பார்.
தனதுதந்தையின்உயிரைகாவுவாங்கியஒருகுறிப்பிட்டஜல்லிக்கட்டுகாளையைகளத்தில்சந்தித்துவீழ்த்தும்மகனின்கதைதான்.
ஜல்லிக்கட்டுவின்முன்னேற்பாடுகள், மாடுபிடித்தலின்நுணுக்கங்கள், அன்றையகாலகட்டஅரசியல்எனநாவல்எல்லாதளத்தையும்தொட்டுச்சென்றுவிடுகிறது.
இலால்குடியில்விடுதியில்தங்கிப்படித்தகாலத்தில்நானும்ஜல்லிக்கட்டுபார்த்திருக்கிறேன். ஆனால்இந்தநாவலைப்படித்தபோதுதான்நான்ஜல்லிக்கட்டைஎவ்வளவுமேம்போக்காகபார்த்திருக்கிறேன்என்பதேபுரிகிறது.
ஒவ்வொருமாட்டையும்அதன்தனித்தன்மையையும்சரியாகஅடையாளம்சொல்கிறார்கள். அதோடல்லாமல்மாடுபிடிவீரனைநம்மபசங்கதலதோனியைகொண்டாடுவதுபோல்கொண்டாடுகிறார்கள். அவரதுபழையரெக்கார்டுமற்றும்பட்டகாயங்கள்அனைத்தையும்சொல்லிசிலாகிக்கிறார்கள்.
வாய்ப்புஉள்ளவர்கள்வாசியுங்கள். நான்அரியலூர்மாவட்டமையநூலகத்தில்தான்எடுத்துவாசித்தேன்.

தேவதாஸ்- சரத்சந்திரசட்டர்ஜி

பேரப் பார்த்தாலே தெரியலையா? சட்டர்ஜி என்று வருகிறதல்லவா எனவே இது வங்காள மொழி நாவல் தான். இந்த வார மொழி பெயர்ப்பு நாவல் வகையில் நூலகத்தில் எடுத்து வந்தேன்.

இந்தநாவலைத்தழுவிஎத்தனைபடங்கள்தான்வரும்என்றுதெரியவில்லை.
எவனாவதுதாடிவச்சிருந்தாலேஎன்னப்பாகாதல்தோல்வியா, தேவதாஸ்மாதிரிதாடியெல்லாம்வச்சிருக்க?” என்றுகேட்பதைபார்த்திருக்கிறோம்.
தேவதாஸ்என்றால்காதல்தோல்வியால்வாழ்க்கையைதொலைத்தவன்என்றுயாரைக்கேட்டாலும்கூறிவிடுவார்கள். அந்தஅளவுக்குநாவலைபடிக்காதவர்களுக்கும்அந்தபாத்திரம்பற்றிதெரிந்திருக்கிறது.
இவ்வளவுஎதிர்பார்ப்போடுநாவலைபடிக்கஎடுத்தஎனக்குபெருத்தஏமாற்றம்தான்விஞ்சியது.
இளம்பிராயத்தில்அருகமைவீட்டுகுழந்தைகள்சேர்ந்துவிளையாடுவதுபோலதேவதாஸ்மற்றும்பார்வதிவிளையாடுகிறார்கள். இருவருக்குமேபடிப்பில்நாட்டமில்லை. பொழுதுக்கும்விளையாடுகிறார்கள்.
பதின்பருவத்தில்பார்வதிக்குதேவதாஸ்மேல்காதல்அரும்புகிறது. அவனோதனதுவசதியானபெற்றோரின்வற்புறுத்தலால்கல்கத்தாவுக்குபடிக்கபோகிறான்.
இந்ததருணத்தில்தேவதாஸ்க்குபார்வதிமேல்உள்ளஅபிமானம்ஒருநட்புஎன்கிறவகையில்தான்கருதுகிறான். ஆனால்பார்வதியோஅவனதுபாராமுகம்கண்டுவேதனைஅடைகிறாள்.
திருமணவயதுவந்ததும்பார்வதியின்தாய்தேவதாஸ்ன்தாயிடம்இவர்களுக்குதிருமணம்செய்துவைத்துவிடலாம்என்கிறார். ஆனால்ஒரேசாதியாகஇருந்தாலும்அவர்களின்பழக்கவழக்கம்கோத்திரம்எனகாரணம்சொல்லி (உள்ளபடியானகாரணம்பார்வதியின்ஏழ்மை) மறுத்துவிடுகிறார்.
எனவேபார்வதிக்குவேறுஊரில்உள்ளபெரியவயதானஜமீன்ஒருவருடன்இரண்டாம்திருமணம்பேசப்படுகிறது. இதற்கிடையில்பார்வதியேதேவதாஸ்அறைக்குதனியாகசென்றுஎன்னைதிருமணம்செய்துகொள்என்றுகெஞ்சுகிறாள். அவனோஎனதுபெற்றோருக்குவிருப்பம்இல்லை, எனவேஉன்பெற்றோர்சொல்கிறபடிதிருமணம்செய்துகொள்என்றுஅலட்சியமாகமறுத்துவிடுகிறான்.
இதற்குப் பிறகு கல்கத்தா சென்ற தேவதாஸ் அவளின் காதலை புரிந்து கொண்டு உடனடியாக ஊர் திரும்புகிறான். ஆனால் நிலவரம் எல்லை கடந்து விட்டது.
அடுத்த நாள் திருமணம், ஆற்றங்கரையில் சந்தித்து திருமணம் செய்து கொண்டு எங்காவது போய்விடலாம் என்று அழைக்கிறான். அவள் மறுத்து விடுகிறாள். தேவதாஸ் அவளை அடித்து நெற்றியில் ஒரு தழும்பை ஏற்படுத்துகிறான். அவள் அதனை அவர்களின் காதல் சின்னமாக எண்ணிக் கொள்கிறாளாம் ( என்ன எழவு உளவியலோ போங்க, ஆசிட் அடிப்பதன் பண்டைய வடிவமாக இருக்குமோ)
பார்வதி திருமணமான வீட்டில் ராணி மாதிரி வாழ்கிறாள். புதிய வாழ்க்கையோடு ஒன்றிவிடுகிறாள். இங்கே தேவதாஸ் குடித்து குடித்து பாழாகிறான். ஒரு பாலியல் தொழிலாளியை சந்திக்கிறான். அவள் இவன் பால் காதல் கொண்டு தனது “தொழிலை“ விட்டு விட்டு இவனுக்காக பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தபடி காத்திருக்கிறாள்.
இறுதியில் பார்வதியை ஒருமுறையாவது பார்த்து விடுவது என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்று அவள் வீட்டு தோட்டத்தில் உயிரை விட்டு அனாதைப் பிணமாகிறான்.
இதயத்தில் சுத்தமாக அமரா காவியமான இதுதான் அமர காவியமா?
இந்தக் கதையை பொறுத்தவரையில் தேவதாஸ் பெரிதாக பார்வதியை காதலிக்க வில்லை. ஆனால் பார்வதி காதலை சொன்னதை நினைத்து பார்த்து அவள் மேல் காதல் வந்து படாத பாடு படுகிறான்.
ஒரு வேளை இந்தக் கதையை படமாக்கிய இயக்குனர்கள் செலுத்திய ஓவர் டோஸ் தான் இந்த கதாப்பாத்திரம் பிரபலமாக காரணமாக இருக்கலாம்.
அப்படி ஒன்றும் காவியத்தன்மை இதில் இல்லை என்பதே எனது கருத்து.


Thursday, April 4, 2019

கோவணமும் களவாடப்பட்டது




“அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது”
இந்தியாவின் சுதந்திரம் பற்றிய ஒரு புதுக்கவிஞனின் இந்த கவிதை கடந்த ஐந்து ஆண்டு கால மோடி ஆட்சிக்குத் தான் கன கச்சிதமாக பொருந்துகிறது.
மோடி அவர்கள் தனது டிரேட் மார்க் 56” இஞ்ச் மார்பைத் தட்டிக் கொண்டு உரத்துப் போட்ட முக்கியக் கூச்சல்களில் இன்றியமையாதது “மேக் இன் இண்டியா”. இதோட அர்த்தம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
ஏற்கனவே நல்ல சந்தை வாய்ப்புகளோட “மேக்கி கிட்டு” இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களை அழித்து ஒழித்து அந்த வேலையை நம்ம இந்திய தனியார் கார்ப்பரேட் கையில் அல்வாத் துண்டு போல ஒப்படைத்து “நீ நல்லா மேக்குடா கண்ணு” என்பது தான்.
இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் “நாட்டை உலுக்கிய ரபேல் ஊழல்“ என்கிற புத்தகத்தில் படித்த தகவல்களை சுருக்கித் தருவது தான்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகம் தழுவிய இராணுவ தளவாட வணிகத்தின் மொத்த மதிப்பு 126 லட்சம் கோடி ரூபாய்.
ராணுவ தளவாட உலகச்சந்தையில் இந்தியா மிக முக்கிய இறக்குமதி நாடு ஆகும். அதனால நாம யார் வம்பு தும்புக்கும் போகவேண்டாம். வெள்ளைக் கொடி ஆட்டிக் கிட்டு புறா பறக்க விடுவோம் என்று பொசுக்குன்னு முடிவெடுத்துட்டேம்னு வைங்க ஏற்றுமதி நாடுகளுக்கு பெரிய நஷ்டம். அவன் வீட்டுல அடுப்பெரியனும்னா நாம இங்க சண்ட போட்டுக் கொண்டு சாகணும். இல்லன்னா அட்லீஸ்ட் டெய்லி ஒருத்தன ஒருத்தன் பாத்து மொறச்சிகிட்டாவது இருக்கணும்.
இந்த சூழல்லதான் இதுக்கு முன்னாடி இருந்த காங்கிரஸ் அரசாங்கம் “பொழச்சி போ நாங்க ஒரு 126 விமானம் வாங்கி போடுறோம், வந்து வரிசையில் நில்லுங்கடா“ அப்படின்னு சொல்லுச்சு.
அப்போ 1. ரஷ்யாவின் மிக் 35 2. சுவீடன் ஜாஸ் 39 3. ஃப்ரான்ஸ் ரஃபேல் 4. அமெரிக்கா ஃபால்கன் எஃப்-16 5. அமெரிக்கா போயிங் எஃப்ஏ -19 6. ஐந்து ஐரோப்பிய நாடுகளின் கம்பெனியான  EURO FIGHTER TYPHOON (பு ன் நெடில் பாமினி யுனிகோடில் வரமாட்டேங்குது )
இந்த ஆறுபேறும் வந்து கூப்பில் அமர்ந்தார்கள். ரஷ்யாவின் மிக் 35 இந்தியா கோரிய அனைத்து மேம்பட்ட வசதிகளையும் தர முன்வந்தும் நிராகரிக்கப்பட்டது.
கடைசியில் எல்லா பஞ்சாயத்தையும் பேசி முடிச்சா டி 20 மேட்ச் டையில் முடிஞ்சமாதிரி ரஃபேலும் டைஃபுனும் சமமாக வந்து நின்னாங்க.
அப்போது தான் சூப்பர் ஓவர் போட்.ட மாதிரி விலை குறித்து பேசப்பட்டது. அதுல ரஃபேல் ஜெயிச்சி விசில் போட்டு சந்தோசமா போச்சு. (அதுக்கப்புறம் டைஃபுன் 20 விழுக்காடு விலை குறைச்சு தர முன்வந்தது. ஆனா பஞ்சாயத்து முடிஞ்சு நாட்டாம சொம்புல வெத்தல பாக்கு எச்சிய துப்பியாச்சி. அதனால சம்பிரதாயப்படி  மேட்டர் ஓவர்)
சரி அந்த “டீல்“ என்ன?
அப்போ இந்தியாவுக்கு ஒற்றை எஞ்சின் பொருத்திய மேம்பட்ட வசதிகள் உடைய 126 போர் விமானங்கள் தேவைப்பட்டன. ரஃபேல் 18 விமானங்களை “சொய்ங்“னு பறந்து வந்து நிறுத்துவது. மீதி 108 இந்தியாவின் பொதுத்துறை விமான தயாரிப்பு நிறுவனமான HAL உடன் சேர்ந்து தயாரிப்பது. ஒரு விமானம் 400 ரூபாய் னு முடிவாகியிருந்தது( என்னாது 400 ரூபாயான்னு வாய பொளக்காதீங்க, 1000 த்தையும் லட்சத்தையும் நாம ஒரு ரூபாய்னு சொல்வதில்லையா அதுபோலத்தான். அது ஆக்சுவலி 400 கோடிப்பா )

2014ல் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறின. நாம தமிழ் நாட்டில் பார்த்திருப்போம் இல்லையா. முந்திய ஆட்சி போட்ட ஒப்பந்தங்களை புதிய ஆட்சி நிராகரிக்கும். அப்போதானே புது ஆளுங்களும் கமிஷன் பார்க்க முடியும். அதே போல தான். பல லட்சம் கோடி புரளும் இராணுவ தளவாட வணிகத்தின் கமிஷன் ஒற்றை இலக்க விழுக்காடாக இருந்தாலும் பல ஆயிரம் கோடி தேறும். எனவே இராணுவத்துறை ஆட்சியாளர்களுக்கு அட்சய பாத்திரம்.
”ஃப்ரான்ஸ் நாட்டு டசால்ட் கம்பெனியுடனான ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தம் இரத்து. அதற்கு பதிலாக சுகோய் ரக விமானங்கள் வாங்கப்படும்” அப்படின்னு மோடி அரசின் அப்போதைய இராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரஃபேல் கம்பெனி காரன் வயித்தில் புளியை கரைக்கிறார்.
மார்ச் 2015ல் இந்தியா வந்த அந்த கம்பெனி ஓனர் “ என்னப்பா அநியாயம் பண்றீங்க ஏற்கனவே ஒப்பந்தம் பேச்சு வார்த்தை 95 விழுக்காடு முடிஞ்சு போச்சு” என்று கதறுகிறார்.
இந்திய இராணுவமும் சுகோய் விமானங்களைக் காட்டிலும் மேம்பட்ட தரம், காலதாமதம் இவற்றைக் காரணம் காட்டி “நாட்டாம தீர்ப்பை மாத்திச் சொல்லு” என்று ஒப்பந்த இரத்தை எதிர்த்தது.
“மோடி பேசி விலையை குறைப்பார்”
“மேக் இன் இந்தியா“ என்ற கர்ஜனையை ஊக்குவிக்கும் விதமாக எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு வாய்ப்பளிப்பார்”
என்றெல்லாம் வின்னர் பட கைபுள்ளையை ஊர் நம்புவது போல எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஏப்ரல் 2015 ல் ஃப்ரான்ஸ் நாட்டிற்கு தனது கார்ப்பரேட் நண்பர் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்றார்.
போறதுக்கு முன்னாடி நம்மஆளு அம்பானி ஒரு வேலையை செய்தார். அது என்ன தெரியுமா ரிலயன்ஸ் டிஃபென்ஸ் அப்படிங்குற பேருல ஒரு கம்பெனி ஆரம்பிச்சது தான்.
நம்ம பிரதமர் மோடி அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் இருந்தே மீடியாவில் அறிவிக்கிறார். ( பயந்துடாதிங்க)
பறக்கும் நிலையில் 36 ரஃபேல் விமானங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். என்று அறிவிக்கிறார்.
July 2015 ல் பார்லிமெண்டில் மனோகர் பாரிக்கர்  126 விமானம் ரபேல் ஒப்பந்தம் இரத்து. மாறாக 36 விமானங்கள் வாங்கும் புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம். ஜனவரி 2016 ல் புரிந்துணர்வு ஒப்பந்தம், செப்டம்பர் 2016ல் 36 விமானங்களுக்கான இறுதி ஒப்பந்தம்.
2014ல் ஒரு விமானத்தின் விலை 428 கோடி 2016 ல் ஒரு விமானத்தின் விலை 1600 கோடி. விமானத்தின் எண்ணிக்கை தான் குறைவோ ஒழிய மொத்த செலவு அதே தான். ”126 ஓட விலையில் நீ 36 மட்டும் கொடு என் தெய்வமே” என்று கேட்ட டீலிங் பிடித்துப் போனதால் டசால்ட் கம்பெனி ஒப்புக் கொண்டது. அதோட மட்டும் இல்லை, விமான தயாரிப்பில் ஒரு திருகாணி கூட தயாரிக்காத புதிய கத்துக்குட்டியான ரிலையன்ஸ் டிபென்ஸ் உடன் இணைந்து தயாரிக்க ஒப்புக் கொண்டு டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் என்கிற கம்பெனி ரிலையன்ஸ் 51 டசால்ட் 49 என்கிற விழுக்காட்டுப் பங்கீட்டில் உதயமானது.
இப்படியாக பொதுத்துறை நிறுவனமான HAL ஒட்டு மொத்த சீனிலிருந்து கழட்டி விடப்பட்டது. இதனால் விமான தயாரிப்பின் புதிய தொழில் நுட்பங்களை டசால்ட் இடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் பறிபோனது.
எல்லாம் சரிப்பா நமக்கு தேவை 126 விமானம், ஆனா தல 36 விமானம் வாங்கத் தான் ஒப்பந்தம் போட்டிருக்கு மீதி 90 விமானம் என்னாச்சு??
90 என்ன 110 ஆவே வாங்கிடுவோம். ஆனால் புதிய டெண்டர் விடுவோம். இப்போ கூப்பில் அமர்ந்திருக்கும் சுவீடனின் SAB கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியின் புதிய கூட்டாளி அதானி தயார் நிலையில் உள்ளார்.
ஆக “பாகிஸ்தான், போர் போர் தீவிரவாதி, பயங்கரவாதி” என்று மோடி வாயால வட சுட்டால் தான் இராணுவ கொள்முதலை அதிகரிக்கலாம். அப்போதான் ……
சரி நாம படுத்து உறங்கி “பட்டு வேட்டி” பற்றி கனவு காண்போம், ஆனாலும் கூட  கோவணம் பத்திரம்டா யப்பா!!.

Tuesday, April 2, 2019

அப்பாவின் சைக்கிள்



எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பா ஒரே சைக்கிள் தான் வைத்திருந்தார். ஆனால் அது பார்ப்பதற்கு புத்தம் புதிதாகவே எப்போதும் காட்சியளிக்கும். ஹேண்ட் பார் கவர், கம்பி கவர், மட்கார்ட் கவர், சீட் கவர் பின்புறம் தொங்கும் மாடல் என ஜிலு ஜிலு கண்கவர் வண்ணத்தில் காட்சியளிக்கும்.
தான் எண்ணை தேய்த்து குளிக்கிறாரோ இல்லையோ சைக்கிள் வாராவாரம் எண்ணைக் குளியல் போட்டுவிடும். வீட்டில் ஓய்வாக இருக்கும் நாளில் ஆற அமர உட்கார்ந்து ஒரு தியானம் போன்ற அமைதியான மனநிலையில் எந்த அவசரமும் காட்டாமல் சைக்கிளை சுத்தம் செய்வார். கை நுழையாத இடங்களைக் கூட துணியை திரி போல சுருட்டி உள்ளே நுழைத்து குழந்தையின் காது குடும்பியை எடுக்கும் லாவகத்துடன் அழுக்கு நீக்குவார்.
வீலை வேகமாக சுழலவிட்டு அதன் ஓரத்தில் துணியை வைத்தால் அத்தனை புழுதியும் துணிக்கு இடம் பெயரும். அந்த நாட்களில் சைக்கிள் சுத்தம் செய்வதை பார்ப்பது எனக்கு பிடித்தமான வேடிக்கை.
அப்புறம் எண்ணைக் குளியல். சைக்கிளுக்கென்று பிரத்தியேகமான ஒரு மூக்கு நீண்ட எண்ணை டப்பா ஒன்று இருக்கும். அதில் தேங்காய் எண்ணையை நிரப்பி அடிப்புறத்தில் உள்ள தகரத்தை டப் டப் என்று அடித்தால் எண்ணை சொட்டும். அதிகம் உராய்வை சந்திக்கும் இடங்களில் எண்ணை இடுவார். எண்ணை விட்ட பின்பு அந்த பாகத்தை மற்றும் சுழல விட்டு அதன் உராய்வு இல்லாத சத்தம் கேட்டு திருப்தி அடைந்த பின்பு தான் அடுத்த பகுதி செல்வார். முக்கியமாக பெடலில் எண்ணை விட்டு அதனை வேகமாக சுழல விடுவார்.
அப்புறம் செயினின் ஒவ்வொரு கண்ணியிலும் ஒரு சொட்டு எண்ணை விடுவார். வழிகின்ற எண்ணையை துணியால் வழித்து எடுத்து வைத்திருப்பார். இறுதியாக எவர் சில்வர் போல மினுங்கும் இடங்களில் அந்த எண்ணை தோய்ந்த துணியால் துடைத்த பின்பு சூரிய ஒளி பட்டு சைக்கிள் பளிச் என்று மின்னும்.
இவ்வளவும் செய்தபின்பு சைக்கிள் பெடலைக் கொண்டு சுழற்றிப் பார்ப்பார். சைக்கிள் வீல் எந்த சத்தமும் செய்யாமல் அழகாய் சுழலும். திருப்தி புன்னகையோடு செல்வார்.
எனக்கெல்லாம் சைக்கிளை எடுத்தாலே வேகமாக செல்லவே தோன்றும் மெதுவாக பெடல் போட்ட நினைவு இல்லை. ஒரு வயலின் வித்வான் எந்த சிரத்தையும் காட்டாமல் இசையில் லயித்தபடி இசைப்பார் அல்லவா அது போலத்தான் அப்பா சைக்கிள் மிதிப்பார். எந்த சிரத்தையும் இல்லாமல் கால் வைப்பார் அது பாட்டுக்கு அனிச்சையாக கீழே செல்லும் ஒரு கால் மேலே வரும். சைக்கிள் மிக மெதுவாகத்தான் ஓட்டுவார்.
அப்பா சைக்கிளை யாருக்கும் இரவல் கொடுத்ததாக நினைவு இல்லை. அப்பா சைக்கிளை பராமரிக்கும் ஈடுபாட்டைப் பார்த்து யாரும் சைக்கிளை ஓசி கேட்கவே பயப்படுவார்கள்.
அடுத்தது அப்பா சைக்கிள் மணியோசை. மாலை வேளைகளில் தெருவில் விளையாடிக்கொண்டு இருப்பேன். அந்த பெல் சத்தம் கேட்டவுடன் பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடிவிடுவேன். இத்தனைக்கும் எங்க அப்பா என்னை அடித்ததே இல்லை. ஆனாலும் ரொம்ப பயப்படுவேன். திட்டுதல் மிரட்டல் அதட்டல் எல்லாவற்றுக்கும் வார்த்தைகளை விரயம் செய்யாமல் ஒற்றைப் பார்வைதான் பதில்.
அப்பாவோடு சைக்கிளில் அமர்ந்து தா.பழூர் மருத்துவமனை சென்றிருக்கிறேன். கோரைக்குழியில் இருந்த எங்கள் வயலுக்கு சென்றிருக்கிறேன். சைக்கிள் கேரியரில் மெத்தென்று துண்டு பரப்பி அமரச் செய்வார். வயல் நாத்துவிடும் சமயத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் போது அழைத்துச் செல்வார். அப்போது கம்பியில் அமர்ந்து கொண்டு சென்றிருக்கிறேன். மிக மெதுவாகத்தான் ஓட்டுவார்.
அப்பா சைக்கிள் பராமரிக்கும் விதத்தை  பார்க்கும் போதெல்லாம் அப்பாவுக்கு சைக்கிள் பெரிதா நான் பெரிதா என்று லேசாக பொறாமை எட்டிப் பார்க்கும். நான் தான் பெரிது என்பதை ஒரு முறை கண்டு கொண்டேன்.
சைக்கிள் ஓட்டப் பழகும் போது அவர் சொல்லிக் கொடுத்த பால பாடம் “விழுற மாதிரி இருந்தால் சைக்கிளை கீழே போட்டுவிடு” என்பது தான். அந்தப் பாடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் தான் சைக்கிள் பலமுறை காயம் பட்ட போதிலும் நான் காயம் படாமல் சைக்கிள் கற்றுக் கொண்டேன்.
அப்பாவின் சைக்கிள் எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்துள்ளது. ஆமாம், “ஏசி டைனமோ வேலை செய்யும் விதத்தை படத்துடன் விவரி” என்பது அறிவியலில் ஒரு அரை நூற்றாண்டு காலமாக முக்கியமான கேள்வியாகும். அந்த கேள்வி படித்த பின்பு அப்பா சைக்கிள் டைனமோவை அப்பா ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் கழற்றி பார்த்து காந்தபுலம் மின்சுற்று, நழுவு வளையங்கள் என எல்லாவற்றையும் பாடத்தோடு பொருத்திப் பார்த்து புரிந்து கொண்டேன்.
பிரபஞ்சன் அவர்கள் எழுதிய “சைக்கிள்“ சிறுகதை படித்தபோது எனது அப்பாவின் சைக்கிளும் அதனூடான அனைத்து விஷயங்களும் ஞாபகத்திற்கு வந்தன.


மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...