புத்தகம்
: ஏழரைப் பங்காளி வகையறா
ஆசிரியர்:
அர்ஷியா (சையத் உசேன் பாஷா)
பதிப்பகம் : நியு
செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழில் வந்த முதல் உருது முஸ்லிம் நாவல் என்று
புத்தக உரையில் போட்டிருந்தார்கள். மற்ற நேரம் என்றால் இந்த புத்தகத்தை எடுத்திருப்பேனா
என்று தெரியாது. இப்போது கொரோனா காலத்தில் புத்தகங்கள் எதுவும் ஸ்டாக் இல்லாத காரணத்தால்
பள்ளியில் இருந்து எடுத்து வந்திருந்த இந்த 400 பக்க நாவலைக் கையில் எடுத்தேன். ஒரு
நான்கு நாட்களில் படித்து முடித்து விட்டேன்.
நூலாசிரியர் அர்ஷியா என்கிற சையது உசேன் பாஷா
அவர்கள் பல பத்திரிக்கைகளில் வேலை பார்த்துள்ளார். மேலும் பல சிறுகதைகளும் சில நாவல்களும்
எழுதியுள்ளார்.
”வெயில்” படம் பார்த்திருக்கிறீர்களா?. இந்த
கதையின் மையஓட்டமும் ஒரு தோல்வியுற்றவனின் கதைதான். “குந்தித் தின்றால் குன்றும் மாளும்”
என்கிற பழமொழிக்கு ஏற்றாற்போல ஒருவன் வாழ்க்கையை வாழ்வதற்கான எந்த ஒரு வேலையோ, தொழில்
திறமையோ இல்லாமல் சும்மா விட்டத்தைப் பார்த்து உக்காந்து பத்து பிள்ளைகள் பெற்று நம்பி
உள்ள அனைவரையும் கொடுமையான ஏழ்மையில் தள்ளி மாண்டு போகிறான்.
அது என்ன ஏழரைப் பங்காளி வகையறா? 15ம் நூற்றாண்டு
வாக்கில் மதுரைக்கு வந்து செட்டில் ஆகிறார் இஸ்மாயில்.( இவர் வந்தது குறித்து நான்கு
விதமான ஊகக் கதைகளை சொல்கிறார் ஆசிரியர்) அவருக்கு ஏழு மகன்கள் ஒரு மகள். பெரியவர்
நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இறக்கும் தருவாயில் சொத்து பிரித்து கொடுக்க
எல்லா பிள்ளைகளையும் அழைக்கிறார். சொத்தினை சரிபாதியாக பிரிக்கச் சொல்கிறார். அதில்
ஒரு பாதியை மறுபடி ஏழாக பிரிக்கிறார். அந்த பங்கினை மகன்களுக்கு கொடுக்கிறார். சரிபாதியாக
பிரிக்கப் பட்ட மற்றொரு பங்கினை மகளுக்கு வழங்குகிறார்(பெண் குழந்தைகளுக்கு சொத்துரிமை
இல்லாத காலகட்டம் அது என்பதை அறிக) . அதில் இருந்து கிளைத்து பெருகியது தான் இந்த ஏழரைப்
பங்காலி வகையறா.
சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னர் இருந்த காலத்தில்
ரஜாக் சாயபுவிடம் கதை தொடங்குகிறது. சொந்தமாக இரண்டு செக்குகள் வைத்த எண்ணை ஆட்டி ஏவாரம்
செய்து செழிப்பாக இருக்கிறார் ரஜாக்.ஜொகரா அவரது மனைவி. தம்பதியருக்கு சொத்து பத்தெல்லாம்
இருந்தும் குழந்தை இல்லை. பிறகு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. சையது தாவூத் என்று பெயரிட்டு
மகிழ்கிறார்கள். ரஜாக் பணக்கொழுப்பில் பெண்கள் தொடர்பில் நிறய இழக்கிறார். மனைவி ஜொகராவும்
வீடு வீடாக சென்று அமர்ந்து பொழுது போக்குகிறாள். தாவூத் தானாகவே பணக்கார மெருகு குறையாமல்
வளர்கிறான். சொத்து தான் அழிந்தது போக இன்னும் இருக்கே. ரஜாக் சாயபுவும் “மௌத்(இறப்பு)“
ஆகிறார்.
இந்த நிலையில் தான் குத்தூஸ் வருகிறார். இளைஞனாக
இருக்கும் தாவூத்தை அழைத்துக் கொண்டு மீதம் இருக்கும் சொத்து பத்தை பராமரிக்க முன்வருகிறார்.
நாம்மால முடியல யாராவது செஞ்சி சாப்பாட்டுக்கு கொடுத்தா சரிதான் என்று தாவூத்தும் சம்மதிக்கிறான்.
“ஆபில்பீ” என்கிற பெண்ணை பார்த்து தாவூத்துக்கு
ஊரே வியக்கும் வண்ணம் விமரிசையாக திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்குப் பிறகு
வாழ்க்கை சில ஆண்டுகள் நல்லபடியாகத் தான் போகிறது. பிறகு தான் குத்தூஸ் பாயின் உண்மையான
முகம் தெரிகிறது. தாவூத் இடம் பவர் பத்திரம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர் அவனது உரிமையில்
இருக்கும் அனைத்து இடங்களையும் தனது மனைவி பெயரில் எழுதிக் கொள்கிறார்.
இந்நிலையில் வருடம் தவறாமல் தாவூத் ஆபில்பீ தம்பதியினர்
புள்ளையா பெற்று தள்ளுகிறார்கள். மீதம் இருக்கும் கொஞ்சம் இடத்தில் இருந்து வரும் வருமானத்தில்
பத்து பிள்ளைகளை வளர்க்கிறார். பிள்ளைகள் வளர வளர நிலம் தேய்ந்த வண்ணம் வந்து அதுவும்
இல்லாமல் போகிறது. மூத்த மகள் அனார்கலி திருமணக் கடனில் வீட்டில் இருந்த பாத்திர பண்டங்களும்
வீடும் விற்பனையாகிறது.
திரும்ப ஓப்பனாகும் கதை குட்டிப் பயல் சையத் உசேன் பாஷா பள்ளியில் மதிய உணவுக்காக ஆர்வத்தோடு காத்திருக்கையில் ஆரம்பிக்கிறது.
யார் ஊட்டு புள்ளையோ சோத்துக்கு ஆளா பறக்குதே என்று நினைக்கும் வேளையில் அது தாவூத்
மகன்களில் ஒருவன் என்பதை திறக்கிறார் ஆசிரியர். திரும்ப சில அத்தியாயங்களில் அவனுடைய
பார்வையில் அவர்களது ஏழ்மை விவரிக்கப் படுகிறது. வீட்டை விற்ற பின்பு வீட்டில் உள்ள
ஆபில்பீ மற்றும் குழந்தைகளுக்கு போக்கிடம் இல்லாத நிலையில் தவித்து நிற்கிறார்கள்.
தாவூத் விரக்தியோடு காணாமல் போகிறார். ஆபில்பீயும் ஏழு குழந்தைகளும் உற்றார் உறவினர்
எவரும் அவர்களுக்கு உதவ முன்வராத சூழலில் காணாமல் போகிறார்கள்.
ஒருமாதம் கழித்து திரும்ப வரும் தாவூத் குடும்பமே
காணாமல் போனது குறித்து அறிந்து தவித்து போகிறான். இந்த நிலையில் அவனது நிலை குறித்து
வருந்தி குற்ற உணர்ச்சியில் குத்தூஸ் பாயே அவனது கடன்களை தானே அடைத்து விட்டு பிள்ளைகளை
தேடிக் கண்டு பிடிக்க ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து உதவுகிறார்.
பிள்ளைகளை கண்டு பிடித்து வந்து ஒரு இடத்தில்
குடிசை போட்டு மீண்டும் ஏழ்மை வாழ்க்கை வாழ்கிறார்கள். உசேன் மட்டும் மிகுந்த முயற்சியோடு
நன்றாக படிக்கிறான். கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் தனக்காகவும் குடும்பத்துக்காகவும்
பயன்படுத்த எத்தனிக்கிறான். ( உசேன் கதாப்பாத்திரத்தை காணும் போது “Capernaum” படத்தில்
வரும் சிறுவன் “சைன்” ஐ தான் நான் உருவகப்படுத்திக் கொண்டேன். இந்தக் கதையில் வரும்
உசேனுக்கும் அந்தப் படத்தில் வரும் “சைன்“ க்கும் அவ்வளவு பொருத்தம்) இறுதியில் ஏழ்மை
நிலையில் இருந்து மீளாமலேயே ஒரு நாள் தாவூத் இறந்தும் போகிறார் என்று கதையை முடிக்கிறார்.
விக்ரமன் படங்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு
கதையை படிக்கும் போது ஏதாவது ஒரு புள்ளியில் அற்புதம் நடந்து தாவூத் குடும்ப நிலை மாறிவிடாதா?
என்கிற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அற்புதங்கள் சினிமாவில் தான் எளிதாக சாத்தியப்
படுகிறது. நிஜத்தில் நாம் தான நமது உழைப்பால் நமது வாழ்வை அற்புதமாக மாற்ற வேண்டும்.
இந்தக் கதையில் வரும் தாவூத் எந்த முயற்சியோ தொழில் திறமையோ இல்லாமல் இருப்பதோடு குறைந்த
பட்ச சாமர்த்தியம் கூட இல்லாமல் இருப்பதையும் அநியாயமாக இழந்து ஏழ்மையில் விழுகிறான்.
படத்தில் வரும் குத்தூஸ் பாத்திரம் மிக நுணுக்கமாக
விவரிக்கப் பட்டிருக்கிறது. ஏமாற்றி பிடுங்கிக் கொள்வோரின் உளவியலை அவ்வளவு அழகாக வர்ணித்திருப்பார்
ஆசிரியர். இவ்வளவு தூரம் அடித்துப் பிடித்து சொத்து சேர்த்த குத்தூஸ் இறக்கும் போது
பிரேதத்தில் இருந்த வைர மோதிரத்தை மகள்களில் ஒருவள் லவட்டிக் கொள்கிறாள். மகள் மருமகள்கள்
என அனைவரும் இவளாக இருக்குமோ அவளாக இருக்குமோ என்று ஒருவரை ஒருவர் மனதிற்குள் சந்தேகப்
பட்டவண்ணம் இருப்பார்கள்.
ஆபில்பீ திருமணமான புதிதில் தாவூத்தை வேலைக்குச்
செல்ல வலியுறுத்துகிறாள். அதனால் அவன் பல நாட்கள் கோபித்துக் கொண்டு முகம் கொடுத்து
பேசாமல் போகிறான். பின்னர் வருடத்திற்கு ஒன்று என்று குழந்தை பெறும் வேலையில் இருவரும்
மும்மரமாகிப் போகிறார்கள்.
நாவலில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறை திருமண,
சாவு சடங்குகள் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளன. மேலும் அவர்கள் குடும்பங்களில் புழக்கத்தில்
உள்ள பல “உருது“ சொற்களையே ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். அவ்வண்ணம் பயன்படுத்துகையில்
அடியில் அவற்றுக்கான அர்த்தங்களையும் தந்துள்ளார்.
ஆழ்ந்து வாசிக்க விரும்பினால் இந்த நாவல் ஒரு
நல்ல சாய்ஸ்.