Saturday, April 18, 2020

“உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே….”



என்னதான் மூளையை தலைமைச் செயலகம் என்று அழைத்தாலும் அந்த தலைமைச் செயலகத்திற்கு மகுடம் சூட்டியது போல இருக்கும் கேசம் தான் நமது புற அழகிற்கு அணி சேர்க்கிறது. ஆனால் அத்தகைய மகுடங்களில் தான் எத்தனை வகை? நாம் நமக்கான உடையை தேர்வு செய்து அணிந்து கொள்ள முடியும் அனால் தலைமுடி மரபுபடி (genetically) அதுவாக அழகாக வளர்ந்தால் தான் உண்டு. நாம் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை தான்.
குருவிகள் கட்டும் கூட்டினில் கூட எளிதாக குச்சியை நுழைத்து விடலாம் ஆனால் சிலரது தலைமுடிக்குள் சீப்பினை நுழைத்து எடுப்பது வெகு சிரமம் தான். அப்படியும் நுழைத்து மல்லுக்கட்டும் போது பல்போன சீப்பையும் முதுகுநாண் ஒடிந்த சீப்பையும் கூட கண்டிருக்கிறேன். இதெல்லாம் சுருள் முடிகாரர்களுக்கு உள்ள “சிக்கல்“.
ஆனால் கோரைமுடி காரர்களின் முடியை பார்க்கும் போதெல்லாம் பொறாமை பொத்துக் கொண்டு வந்துவிடும். அவர்களின் முடி அலைஅலையாக சரிந்து நெற்றியில் விழும். அதனை அவர்கள் தள்ளிக் கொண்டு பேசுவது அவ்வளவு அழகு. அவர்களின் முடி சீப்போடு எப்போதும் சினேகத்துடன் தான் இருக்கும்.
இரண்டுக்கும் இடைபட்டோரும் உண்டு. அவர்களின் முடி சிறிதாக இருக்கும் போது கோரைமுடிக்கான பண்புகளையும் வளர்ந்தபின்பு சுருட்டை முடிக்கான பண்புகளையும் வளர்த்துக் கொண்டுவிடும். ”நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் போகுதேடா..” என்று வடிவேலுவைப் போல புலம்ப வைத்துவிடும்.
“காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா
குருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டுவா…”
என்கிற ரைம்ஸ் எல்லாம் படித்து தான் நாம் வளர்ந்திருக்கிறோம்.
“கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய்யழகு“ என்கிற வைரமுத்துவின் கவிதையும் கேட்டிருக்கிறோம்,
தலையில் கை வைத்து சொல்லுங்கள் இப்போது மை கண்ணுக்கு மட்டுமா தேவைப் படுகிறது. தலைக்கும் சேர்த்தல்லவா தேவைப்படுகிறது.( தலையில் வைத்திருந்த கையை போய் கழுவுங்க மை ஒட்டியிருக்க போவுது). நானெல்லாம் தலைமையாசிரியர் ஆகுமுன்னே தலை“மை“ஆசிரியர் ஆகிவிட்டேனாக்கும்.
எங்களது சக நண்பர் ஒருவருக்கு ஓவியர் ஹூசைனி போலவோ அல்லது முன்னால் மத்திய அமைச்சர் நட்வர்சிங் போலவோ முழு வெள்ளை முடி. ஆனால் அவர் தனது முடியை அவ்வளவு அழகாக டை அடித்து பராமரிப்பார். சும்மா கரு கரு வென்று இருக்கும். அந்த வெண்மை ரகசியமே அவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்ட போது தான் கண்டு கொண்டேன்.( அது என்ன கணக்கு, மாலை போட்டால் டை அடிக்க கூடாதா?)
தலைக்கு மை அடித்து விடலாம் மீசைக்கு என்ன செய்வது? மீசைக்கு டை அடிப்பது சற்றே சவாலான வேலைதான். எனவே சிம்பிளாக ஒரு ”ஐப்ரோ” பென்சிலை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தலை வாரி பவுடர் எல்லாம் போட்ட பிறகு ஒரு சின்ன டச் அப் செய்தால் போதும். (ஒரு அசம்பர்த்தமான சூழலில் ஒரு நண்பரின் ஐப்ரோ பென்சில் வெளியே வந்து விழ நான் துருவி துருவி கேட்கப் போய் அவர் வெளியிட்ட தகவல் தான் மேற்படி உள்ளது)
அது சரி தாடியை என்ன செய்வது? அது ரொம்ப சிம்பிள் தினசரி காலை மழுங்க சிரைத்து விட வேண்டியது தான். மிலிட்டரி டிசிப்ளினோடு தினசரி ஷேவ் செய்வோரின் சூழல் இந்த மாதிரி கூட இருக்கலாம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் தீபாவளி பொங்கல் கல்யாணம் காது குத்து என விசேஷ நாட்களில் மட்டும் டை அடிப்பார்கள். டை அடித்த நாளில் இருந்து நாளாக நாளாக அவர்களின் கேசத்தில் வானவில்லில் உள்ள அனைத்து வண்ணங்களும் தோன்றி இறுதியில் வெள்ளையாகி அடுத்த விசேஷநாளில் கருமையாகும்.
ஆக, தலைமைச்செயலகத்திற்கு அணிசேர்க்க தலை“மை“ப் பண்பு அவசியம் தேவைப் படுவது என்னவோ உண்மைதான் போங்கள்.
“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்” அந்த சுவரே “டேமேஜ்” ஆகிப் போனால் என்னாவது?
“உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே…” இந்தப் பாடல் கேட்டுருக்கிறீர்களா?
காதலிகள் தாங்குகிறார்களோ இல்லையோ சம்மந்தப் பட்ட ஆண் தலைமுடி விழும் போதெல்லாம் பதறித்தான் போகிறான்.
ஒரு முறை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது அனுபவம் சார்ந்த ஒரு மேற்கோல் சொல்லலாமே என்று “அனுபவம் என்பது தலை வழுக்கையான பின்பு கையில் கிடைக்கும் சீப்பு போன்றது” என்ற கூற வாயெடுத்தேன், ஆனால் கூட்டத்தில் நிறய பேருக்கு தலை வறண்ட நிலமாக இருந்ததால் ஒரு மிடறு உமிழ்நீரோடு நாவிற்கு வந்த வார்த்தைகளையும் சேர்த்து விழுங்கி விட்டேன்.
இளம் பிராயத்தில் என்னவோ தலைமுடி அடர்ந்த புதர்கள் நிறைந்த அமேசான் காடுகள் போலத்தான் உள்ளது. நாளாக நாளாகத்தான் சகாரா பாலைவனக் காடுகள் போல மாறிவிடுகிறது.
வறண்ட நிலப் பரப்பில் கூட afforestation மூலம் பசுமையை பேணலாம். ஆனால் தலைக்கு ஒன்லி deforestation தான்.
சென்னையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் ஒரு ஒர்க் ஷாப்புக்காக பெங்களுர் சென்றிருக்கிறார். அதே ஒர்க் ஷாப்புக்கு வந்த வேறு ஒரு அலுவலக நண்பர் ஒருவர் இரயிலில் சினேகமாகியிருக்கிறார். அந்த புதிய நண்பர் சுமார் ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் அழகிய கேசத்துடன் ஹேண்ட்சம்மாக இருந்திருக்கிறார். இருவரும் ஒருஅறையில் தங்குவதாக கேட்டு வாங்கி கொண்டார்கள்.
நமது நண்பருக்கு விடியற்காலை ஒரு 4 மணி சுமாருக்கு விழிப்பு தட்டியிருக்கிறது. சரி பாத்ரூம் போய்ட்டு வந்து படுக்கலாம் என்று எழுந்தவருக்கு பக்கத்து கட்டிலை பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டிருக்கிறது.
முற்றிலும் புதிய நபர் உயரமாக பழைய ரஜினி பட வில்லன் கணக்காக மொட்டைத் தலையுடன் ஒரு உறங்கிக் கொண்டு இருக்கிறான். இரவு அருந்திய மதுவின் தாக்கத்தினால் அறை மாறி வந்து படுத்து விட்டோமா என்று வெளியே போய் பார்த்திருக்கிறார் நண்பர். ஆனால் அறையெல்லாம் மாறவில்லை.
’எழுப்பினால் எழுந்து கோபத்தில் அடிப்பானோ!’ என்ற கலக்கத்தில் எழுப்ப கூட பயந்தபடி வௌவௌத்து போய் விடிய விடிய நாற்காலியில் அமர்ந்தபடி உறங்கிவிட்டார்.
காலையில் புதிய நண்பர் குளித்து முடித்து ஜோராக ஆடை அணிந்து எழுப்பியிருக்கிறார்.
”என்னப்பா நைட் எங்கே போன? இங்க ஒரு புது ஆளு படுத்திருந்தான், பாக்கவே திருடன் மாதிரி இருந்தான்”
“யோவ் நான்தான்யா அது நைட் “விக்கை” கழட்டி வச்சுட்டு படுத்திருந்தேன்” என்று தலைமுடியை காண்பிக்க நண்பரோ நம்ப இயலாமல் சடங்கு சுத்துவது போல அந்த புதிய நண்பரை சுற்றி சுற்றி வந்து பார்த்து மாய்ந்து போனதாக கூறினார்.
ஆனால் பெரும்பாலானோருக்கு “விக்“ வைத்தால் இது “விக்“ தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவதோடு பார்க்கவே சற்று நெருடலாக நகைப்புக்குரிய வகையில் இருக்கிறது. எல்லோருக்குமே இந்தி நடிகர் “அனுபம்கெர்” மாதிரி அழகான வழுக்கை தலை இருக்காது தான் என்றாலும் வழுக்கை ஒன்றும் இழுக்கல்ல.
இன்னும் சிலரோ தலைக்கு பின்புறம் அடர்ந்து வளர்ந்திருக்கும் கேசத்தை இழுத்து முன்தலையில் வைத்து படிய வைத்து சீவி இருப்பார்கள். இவர்களுக்கு காற்று என்றாலே அலர்ஜி தான். வறுமையில் இருப்பவர் தனது சேமிப்பினை பாதுகாப்பது போல பல நிமிடங்கள் செலவழித்து முன்னுக்க கொண்டு வந்த எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் சாய்த்து விடும்.
இளம் வயதினர் கூட வழுக்கையை கண்டு கொள்ளாமல் முடியை க்ளோசாக வெட்டிக்கொண்டு கம்பீரமாக வலம் வரும் போது இந்த வயதானோர் மட்டும் இந்த வறண்ட முன் பகுதியை உண்டு இல்லை என பண்ணி விடுகிறார்கள்.
வழுக்கையோ வெள்ளை முடியோ எதுவுமே இயல்பாக இருக்க விடுவதுதான் நல்லது. எனக்கெல்லாம் டை அடிக்க ஆரம்பித்த பின்புதான் முடி உதிர்வு அதிகமாகிவிட்டது.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...