Monday, April 13, 2020

அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு பதிவு-இடஒதுக்கீடு சலுகையல்ல உரிமை என உரக்கச் சொல்வோம்



   
  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் நமக்கு பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமையே என்பதை நாம் ஐயத்திற்கு இடமின்றி புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பெற்று பயனடைவது நமது கடமை. இது குறித்து குற்ற உணர்வோ இழிநிலை உணர்வோ கொள்ள வேண்டியதில்லை.

    1994-97 ல் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை வந்திருந்தது. பெயர் “சலுகை“ என்பது நன்றாக ஞாபகம் உள்ளது. ஆசிரியர் எஸ்.ரா என நினைக்கிறேன்.(நானும் கூகுளில் தேடிவிட்டேன் இந்த கதை சார்ந்த எந்த ஒரு இழையும் கண்ணில் படவில்லை. தெரிந்த நண்பர்கள் உறுதி படுத்துங்கள் ப்ளீஸ்!)
ஒரு தாழ்த்தப் பட்ட வகுப்பு இளைஞன் ஐ.ஏ.எஸ் பாஸ்பண்ணி கலெக்டர் ஆகிறான். ஒரு பிராமணப் பெண்ணை காதலிக்கிறான். அவளது தந்தையிடம் திருமணம் குறித்து பேசச்செல்லும் போது அவர்,“நீ உனது சாதிக்குறிய இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் பாஸ் செய்திருக்கிறாய். ஆனால் திருமணத்திற்கு மட்டும் சாதி வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கிறாய். நீ திரும்ப போய் பொதுப்பிரிவில் தேர்வெழுதி பாஸ் செய்து விட்டு வந்தால் தான் பெண் கொடுப்பேன்” என்கிறார்.(கதையில் இவ்வளவு வெளிப்படையாக இன்றி பாலிஷாக சொல்லி இருப்பார்கள் ஆனா மேட்டர் இது தான்) அந்த ஆபீசரும் நம்பிக்கையோடு திரும்பவும் தேர்வு எழுத செல்வதாக கதை முடிகிறது.
 அந்த கதையைப் படித்தபோது நானும் கூட அதுதானே சரி?! என்கிற மனநிலையில் இருந்தேன் என்பது தான் சோகம்.(அப்போ நம்ம அறிவு அவ்வளவுதான்!). உணர்ச்சி வசப்பட்டு தினமலர் காரன் கூறுவது போல சாதிச் சான்றிதழை கிழித்தெரிந்து சாதியை ஒழிக்க முயலாமல் விட்டேனே என்று இப்போது பெருமூச்சு விடுகிறேன்.
2002 ஜனவரியில் நான் வேலைக்கு தேர்வாகி சேர்ந்த போது எனக்கு வயது 25. பெரிய ஓடை பாலம் பழுதடைந்து இருந்த காரணத்தால் எங்கள் ஊருக்கு (ஜெமின்.சுத்தமல்லி) செல்ல அப்போது காக்கா பாளையத்தில் இறங்கி நடந்து செல்ல வேண்டும். அன்று பள்ளிக்குச் சென்று திரும்பிக் கொண்டு இருந்தேன். இருட்டி விட்டது. என்னுடன் எங்கள் ஊர் நபர் ஒருவர் நடந்து வந்தார். “ஒங்களுக்கெல்லாம் ஈசியா வேலை போட்டு கொடுத்துடுறாங்கல்ல?” என்றார். அதோட அர்த்தம் உனக்கு எந்த திறமையும் இல்லேன்னா கூட சாதிய வச்சி வேலை கொடுத்துடுறாங்க தானே என்பதுதான். இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால் நான் எங்கள் சுத்தமல்லி பள்ளியில் படித்தபோது நன்கு படிப்பவன் என்பது ஊருக்கே தெரியும்.
ஜென்டில்மேன் படம் வந்தபோது அந்தப் படம் பேசும் உள்ளார்ந்த அரசியல் புரியாமல் சில்லறையை சிதறவிட்டிருக்கிறேன் என்பதை இப்போது எண்ணி நாணுகிறேன். ’நல்லா படிச்ச எனக்கு இடம் கிடைக்கவில்லை ஆனா என்னைவிட கம்மியான மார்க் வாங்கினவங்க எல்லாம் காலேஜில் சேந்துட்டாங்க’ என்கிற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக் கொள்கிறான் ஒருவன்.
முக்கியமா ஒரு லாஜிக்கை இந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு போராளிகள் மறந்து விடுகிறார்கள். ஒரு மேல்சாதி பையனுக்கு இடம் கிடைக்க வில்லை என்றால் என்ன அர்த்தம்? பொதுவில் இருக்கும் 100 ல் 50 இடங்களுக்குள் (த.நா எனில் 31 இடங்களுக்குள்) வர திராணி இல்லை. அவனைத் தாண்டி 50 பேர் மார்க் வாங்கிட்டான் என்று தானே அர்த்தம். அவன் தனது திறமையின்மையை மறைக்க மற்றவர்கள் அவரவர்களுக்கான உணவை சாப்பிடுவதை பார்த்து ஏமாந்து எச்சில் ஒழுகிக் கொண்டு அநாகரிகமாக ஏளனம் செய்கிறான்.
அடுத்து இந்த கதைத் திருட்டில் கொடிகட்டி பறக்கும் முருகதாஸ் எடுத்த ஏழாம் அறிவு படத்தில் “ரிசர்வேஷன், ரெக்கமண்டேஷன், கரப்ஷன் இந்த மூன்றினால் தான் இந்தியா வல்லரசு ஆகல“என்று கமல் பொண்ணு கேட்டப்ப அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சி போச்சி. அப்பு முருகதாசு, என்னா ஒரு அறிவுப்பா உனக்கு என்று வியந்து போனேன்.
ஏன்னா ரிசர்வேஷன்ல வந்த இஞ்சினியர்கள் கட்டிய பாலங்கள் உடைந்து போகின்றன. டாக்டருங்க ஆப்பரேஷன் பண்ணியதால் தான் நோயாளிங்க பரலோகம் அடைகிறார்கள். ஆமாம். இதுவும் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்திதான்.
இஞ்சினியரிங் காலேஜில் எல்லோருக்கும் பரிட்சையில் பாஸ் மார்க்  40 ன்னா ரிசர்வ்டு கேட்டகரியில் வருவோருக்கு தனியா  10 மார்க் வாங்கினாவே பாஸ் என்று தூக்கிப் போட்டு விடுகிறார்கள். மெடிக்கல் காலேஜிலும் அப்படித்தான் ரிசர்வ்டு ஆட்கள் உள்ளே வந்த உடனேயே டிகிரிய பிரிண்ட் பண்ணி ஒரு பேருக்கு ஐந்து ஆண்டுகள் உட்கார வைத்து கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். வேண்டுமானால் சம்பந்த பட்ட ரிசர்வ்டு இஞ்சினியரையோ அல்லது மருத்துவரையோ கேட்டு பாருங்கள்.
இடஒதுக்கீட்டு உரிமை உள்ளே நுழைவதற்கு மட்டும் தான், உள்ளே நுழைந்த பின்பு பார்த்தசாரதிகளுக்கும் பஞ்சத்து சாரதிகளுக்கும் ஒரே தேர்வுத்தாள் தான், ஒரே பாஸ் மார்க் தான். அப்புறம் எப்படி இவனுங்கு இப்படி கிளப்பி விடுறானுங்க?
இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெற்ற ஒரு எம்பிசியோ அல்லது பிசியோ எஸ்ஸி ஆட்கள் இருக்கும் இடத்தில் அவர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும். அதனாலதான் திறமை இல்லாதவன் எல்லாம் வேலைக்கு வந்துடுறான் என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதன் காரணம் ஆயிரம் ஆண்டு கால வரலாறு கொண்டது. பார்ப்பனீயம் மேல் மாடியில் நிலையாக வீற்றிருக்க வேண்டுமெனில் ஏனைய கீழ் அடுக்கினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருத்தல் ஆகாது. இணக்கமாக இருந்தா அவனுங்க சூழ்ச்சி தெரிந்து போய் கும்மாங்குத்து விழுந்து விடும் அல்லவா? எனவே சூழ்ச்சி செய்து அவர்களிடையே தொடர்ச்சியாக ஒரு பகை நெருப்பை புகைய விட்ட வண்ணம் இருப்பார்கள். அது இப்போதும் தொடரத்தான் செய்கிறது.
புராணக் கதைகளோடு சட்டப் பாதுகாப்பும் கூட அவர்கள் வசம் இருந்தது. ஆம், “பெண்களும் சூத்திரர்களும்(ஓ.சி பிரிவு நீங்களாக அனைவருமே இதற்குள் அடங்குவார்கள் என்பதை அடிகோடிட்டு வாசித்துக் கொள்க) சொத்து சேர்ப்பது பாவம். அவர்களது உழைப்பிற்கு கூலியாக சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி. மனுநீதியின் படி பிராமண பெண்களும் கூட சூத்திரர்களுக்கும் கீழானவர்களே. பெண்கள் பிறக்கும் போது தந்தை, மணமானபின்பு கணவன், வயதான காலத்தில் மகன்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுத் தான் நடக்க வேண்டும். அவர்கள் எப்போதும் ஆணுக்கு அடிபணிந்து சேவையாற்ற வேண்டியது என்கிறது மனுநீதி.
இப்போது நடப்பது மன்னராட்சி அல்ல மக்களாட்சி. நாடு எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் பொதுவான நாட்டில் ஒரு வர்ணத்தார் மட்டும் எல்லா நிலைகளிலும் அமர்ந்து கொண்டு அதிகாரம் செலுத்திக் கொண்டு இருப்பது நியாயம் ஆகாது. எனவே தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற முன்மொழியப்பட்டது. இதனை வலியுறுத்தி முடியாமல் தானே காங்கிரசில் இருந்து பெரியார் வெளியேறினார்.
நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இருந்தால் தான் அதிகாரப் பரவலாக்கம் சாத்தியமாகும். ஈராயிரம் ஆண்டு காலமாக பல்வேறு மதப் புரட்டுகளால் வேற்றுமையும் ஒடுக்குமுறையும் ஆழமாக வேரூன்றி இருக்கும் நாட்டில் சட்டப் பாதுகாப்பு இருந்தும் கூட அதிகாரப் பரவலாக்கத்தை முழுமையாக அமல் படுத்துவது குதிரைக் கொம்பாக உள்ளது.
நாடு எல்லோருக்கும் பொதுவானது. அனைத்து சாதி மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்யும் போது தான் சமத்துவத்தை நிலை நாட்ட முடியும். அதற்கு இடஒதுக்கீடு கட்டாயமாக தேவை. எனவே இட ஒதுக்கீடு நமது அடிப்படை உரிமை. அது நம்மீது இரக்கப்பட்டு அரசாங்கத்தால் வழங்கப் படும் சலுகை அல்ல என்பதை அம்பேத்கர் பிறந்த நாளான இன்று தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்வோமாக.
 இன்னமும் இடஒதுக்கீடு கொடுக்கத் தான் வேண்டுமா?
ஆமாம் நிச்சயமாக கொடுக்கத் தான் வேண்டும். ஏதோ திராவிட இயக்கங்கள் இருந்த காரணத்தினால் தமிழ்நாட்டில் அதிகாரப் பரவலாக்கம் 50 விழுக்காடு அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வட இந்தியாவில் நிலமை மிகவும் மோசம்.
இடஒதுக்கீட்டு உரிமையை பயன்படுத்துவது என்பது முழுமையாக வெற்றி பெற்றால் மட்டும் சமத்துவம் முழுமையாக வந்துவிடாது. எப்போது வர்ணாசிரம (அ)தர்ம அடித்தளத்தில் வலுவாக கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்து மத மூட நம்பிக்கைகள் உடைகிறதோ அப்போது தான் உண்மையான சமத்துவம் அடைய முடியும்.
இன்று கூட பாருங்கள் தமிழ்ப்புத்தாண்டு என்று நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஆண்டின் பெயர் தமிழில் உள்ளதா? 
ஒரு பழைமையும் பாரம்பரியமும் மிக்க மொழியின் பெயரில் ஆண்டுகளை செத்த மொழியான சமஸ்கிருத பெயரிட்டு அழைக்கிறோம் என்றால் நம் மொழியை எந்த அளவுக்கு இழிவு படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் அளவுக்கு அறிவு வேண்டும். 

2 comments:


  1. PUTHTHANDU NALVAZTHTHUKKAL SIR, IDA OTHUKKEEDU SALUGAI ALLA, URIMAI ENBATHAI PURIYAVAITHAMAIKKU NANDRI SIR. SUPERB.😍😍😍

    ReplyDelete

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...