Sunday, April 19, 2020

ஆண்பால் பெண்பால் அன்பால்


புத்தகம்: ஆண்பால் பெண்பால் அன்பால்
பதிப்பகம்:  விகடன் பதிப்பகம்
ஆசிரியர்:   53 பேர் தங்கள் பாலின சமத்துவம் குறித்த அனுபவங்கள் மற்றும் பார்வையை பதிவு செய்து வாரம் தோறும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
510 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். முதல் 15 நாட்களுக்குள் முடிக்க முடியாமல் 5 நாட்கள் தாமதமாக லைப்ரரி யில் அபராதத்துடன் திருப்பிக் கொடுத்து விட்டு “சார் இன்னும் முடிக்கல திரும்பவும் எடுத்துக் கொள்ள முடியுமா ப்ளீஸ்” என தலையை சொறிந்தேன். ”சரி எடுத்துக்கோங்க சார்” என்று புன்னகைத்தப் படி கூறினார் நூலகர்.
வேலை பளு அதிகமான மாதம் ஆதலால் மறுபடியும் 15 நாட்களுக்குள் முடிக்க இயலவில்லை. புத்தகம் திருப்பித் தரவேண்டிய வேளையில் லாக்டவுன் அறிவிப்பு தேனாக பாய்ந்தது. எப்படியோ முடித்துவிட்டேன்.
புத்தகத்தின் அணிந்துரை பிரபஞ்சன் அவர்களால் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. “கள்ளக் காதல்“, “குழந்தை பாக்கியம்”, ”கற்பு“, “காதல் வேறு காமம் வேறு” போன்ற சொல்லாடல்களையும் அதற்கு பின்னால் உள்ள போலித்தனங்களையும் சாடியுள்ளார்.
கட்டுரை எழுதிய ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்க்கை அனுபவங்கள் வழியே தங்கள் சக எதிர்பாலினத்தவரிடம் எந்த மாதிரி அனுகுமுறையை கொண்டிருந்தார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள்.
இயக்குனர் ராம் அவர்கள் கூறியவற்றில் மிக அருமையானதாக நான் உணர்வது-
 நான் என் மகளிடம் சொல்வது இதுதான்,”ஒரு வேளை யாராவது உன்னை புகைப்படம் (நிர்வாணமாக புகைப்படம் எடுத்து பெண்களை மிரட்டும் கான்டெக்ஸ்ட் ல் ) எடுத்தால், அச்சதம் பொள்ளாதே நீ என்னிடம் சொல். அதனால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. என்னிடம் சொல்ல முடியவில்லையா, உன் அம்மாவிடமோ, ஆசிரியரிடமோ அல்லது உன் நண்பர்களிடமோ சொல். அதனால் உன் மரியாதைக்கும் பெயருக்கும் எந்தப் பாதகமும் விளையாது. அது உன் தவறு அல்ல. எடுத்தவரை சட்டம் பார்த்துக் கொள்ளும். அதற்காக நாம் பயப்பட வேண்டியது இல்லை”
     இன்றைய சூழலில் பெண்களிடம் கூற வேண்டிய அதி முக்கியமான ஆதரவு வார்த்தைகள் இவை.
     ஜெயராணி அவர்களின் கட்டுரையில் பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தும் ஆண்களைப் பற்றிய இந்தப் பதிவு குறிப்பிடத் தக்கது, “பெண்ணைத் தாக்குவதன் மூலம் தனது வலிமையை நிருபிக்க முனையும் ஆணுக்கு, அதற்கென ஒரு காரணமும் தேவை இல்லை“
     ஒவ்வொரு ஆளுமையும் தன் வாழ்வில் சந்தித்த எதிர்பாலின நட்பு குறித்து சிலாகித்து உள்ளார்கள். பெண் ஆளுமைகளைப் பொறுத்தவரையில் டொமஸ்டிக் வயலன்ஸ் பொது இடங்களில் நடைபெறும் சீண்டல்கள் குறித்து நிறைய பதிவு செய்திருந்தார்கள். அவர்களே தாங்கள் சந்தித்த நல்ல பிற ஆண் நண்பர்களைக் குறிப்பிடவும் தவறவில்லை.
     நமது குடும்ப அமைப்பானது மாறிவரும் சமூக சூழலைத் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்குமா என்கிற சந்தேகம் சில வருடங்களாகவே எனக்கு வந்த வண்ணம் உள்ளது.
     பெண் பிள்ளைகளை ”இன்னொருத்தன் ஊட்டுக்கு பொங்கிப் போடப் போறவ தானே” என்கிற அலட்சியமாய்ப் பேசும் பழைமைவாதப் பெற்றோர் இப்போது அருகி உள்ளனர். இது விரும்பத்தக்க முன்னேற்றமே.
     என்ன மாதிரியான ’டொமஸ்டிக் வயலன்ஸ்’ நடந்தாலும் ’இது நமக்கு விதிக்கப் பட்டது’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு ’கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருசன்’ என்கிற பழமொழியை பிடித்துத் தொங்கிய பெண்கள் வழக்கொழிந்து போய்விட்டனர். எதிர் காலத்தில் கை குலுக்கிப் பிரியும் அளவுக்கு திருமண முறிவு எளிமையாகிப் போகலாம்.
திருமணத்திற்கென்று செய்யப்படும் அதிக அளவிலான செலவு மற்றும் முக்கியத்துவம் அதனைப் புனிதப் படுத்தி விடுகிறது. காதல் திருமணமோ பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ ஆண் பெண் இருவரின் புரிதல் பரஸ்பர ஒளிவு மறைவு இன்மை போன்ற குணங்களால் வலுவாக்கப் பட வேண்டும். ஆனால் 50 விழுக்காடு தம்பதியினர் மனதுக்குள் சடுகுடு ஆடியபடி அந்தப் புனிதமான திருமண பந்தத்தை கட்டிக் காக்கின்றனர்.

     ”ஆண்பால் பெண்பால் அன்பால்” என்கிற தலைப்பின் கீழ் நான் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
     இப்போது ஆண்களுக்கும் பெண்களுக்குமான பிரத்தியேகப் பள்ளிகளின் பெருக்கம் விரும்பத்தக்கது அல்ல. இது இருபாலருக்குமான ஆரோக்கியமான நட்பு குறித்த புரிதலற்ற ஒரு தலைமுறையை உருவாக்கிவிடுகிறது. இதில் உச்சக் கட்ட கொடுமை என்னவென்றால் இருபாலர் படிக்கும் தனியார் கல்லூரிகளில் கேமரா வைத்து இருபாலரும் பேசாவண்ணம் பாதுகாக்கும் வேலை நடப்பது தான்.
     குமரப் பருவத்தில் ஆண் பெண் நட்பில் ஆர்வக் கோளாறினால் சிறு அளவில் எல்லை மீறும் சம்பவங்கள் உண்டுதான். ஆனாலும் அதற்காக இருபாலரையும் ஒருவரை ஒருவர் பார்க்க கூடாது என்று பிரித்து வைத்து வளர்ப்பது ஆரோக்கியமான இருபால் உறவு குறித்த புரிதல் இல்லாத பிள்ளைகளை வளர்த்து வைப்பது இன்னும் ஆபத்தானது.
     நிச்சயமாக இந்தப் புத்தகத்தை படித்தோமானால் ஆண்பால் பெண்பால் நட்பு குறித்த பல பரிமாணங்களை புரிந்து கொள்ள இயலும்.

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...