Sunday, April 5, 2020


புத்தகம்:தோழர் சோழன்
ஆசிரியர்: எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)


      அமேசான் கிண்டில் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வான புத்தகங்களில் ஒன்றுதான் இந்த ”தோழர் சோழன்” நாவல். கிண்டில் புத்தகங்களை வைத்து வைத்து படிப்பது தான் எனது வழக்கம். ஆனால் இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு சுவாரசியம் விறுவிறுப்பு. மேலும் 1987 காலகட்ட எங்கள் மாவட்ட உண்மைச் சம்பவங்கள் என்பதால் இன்னும் ஆர்வம் மேலிட கதையோடு ஒன்ற முடிந்தது. இப்போது கிண்டிலில் இலவசமாக கிடைக்கிறது. உடனடியாக பதிவிறக்கி வைத்து படியுங்கள்.
      
நூலாசிரியர் சிவசங்கர் அவர்களை நான் முதன்முதலாக பார்த்தது தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான விழா ஒன்று மாளிகைமேட்டில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்றது. அப்போது அருகாமைப் பள்ளியான உட்கோட்டை பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் விழாவுக்குச் சென்றிருந்தோம். விழாவில் தங்கம் தென்னரசு பேசும் போது சிவசங்கர் அவர்களை குறிப்பிட்டு “மந்திரிக்கு முந்திரி மாலை போட்ட சிவசங்கர் அவர்களே“ என்று விளித்தார். ஆம் மிகப்பெரிய சைஸ் மாலை ஒன்றை முந்திரிப் பருப்புகளால் தயார் செய்திருந்தார். இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடக் காரணம் கதையில் நான் மேலே குறிப்பிட்ட மாளிகை மேடு கிராமம் வருகிறது. உட்கோட்டைப் பள்ளியை பற்றியும் வருகிறது.

      கல்கியின் வரலாற்று நாவல் படித்திருப்போருக்கு தெரியும். உண்மை வரலாற்று நிகழ்வுகளின் ஊடாக கற்பனைக் கதாப் பாத்திரங்கள் (பொன்னியின் செல்வன் – நந்தினி) மற்றும் சம்பவங்களை புகுத்தி கதையை சுவாரசியமாக முன்னெடுத்துச் செல்வார்.
      சிவசங்கர் அவர்களும் உண்மைச் சம்பவங்களை (1987ல் அரியலூர் மற்றும் தமிழக அளவில் நடந்தவை) எடுத்துக் கொண்டு அதில் கற்பனைக் கதாப்பாத்திரங்களைப் புகுத்தி ஒரு சுவாரசியமான விறுவிறுப்பான வரலாற்று புனைவை தந்துள்ளார்.
      மருதையாற்று ரயில் பால குண்டு வெடிப்பு, பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, வன்னியர் சங்கம் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டம் போன்ற உண்மைச் சம்பவங்களை எடுத்துக் கொண்டு சோழன் என்னும் புரட்சிகர எண்ணமும் தமிழர் விடுதலைப் படைஆதரவு நிலைப் பாடும் கொண்ட ஒரு இளைஞன் மூலமாக கதையை நகர்த்துகிறார்.
      1999ல் நான் பி.எட் டிரெய்னியாக பணிபுரிந்த பள்ளியில் இருந்த கணித ஆசிரியர் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் வகுப்புக்குள் நுழைந்து கடைசி இரண்டு பெஞ்ச் மாணவர்களை மட்டும் அடிப்பார் அல்லது முட்டிப் போடச்சொல்வார். என்னவென்று விசாரித்த போது தான் தெரிந்தது கடைசி இரண்டு பெஞ்ச் மாணவர்கள் அவரிடம் டியுசன் செல்லாதவர்கள். அவரே வகுப்பாசிரியர் (உள்ளுர் வேறு) என்பதால் “வேண்டாத” மாணவர்களை உடனடியாக கண்டு பிடிக்க இந்த உத்தி. அப்போது முடிவு செய்தேன் அரசுப் பள்ளி வேலைக்கு சென்ற பின்பு நான் நிச்சயமாக எனது மாணவர்களிடம் கணிதப் பாடத்தை விற்பதில்லை என்று. கதையில் தோழர் சோழன் முதல் முறையாக ஒரு சம்பவம் செய்கிறார். அந்த சூழலைப் படித்த போது சற்றே அதிர்ந்து போனேன். உட்கோட்டைப் பள்ளி கணக்கு வாத்தியார் டியுசன் போகாத பசங்களை குறி வைத்து அடிக்கிறார். மாணவர்களின் குமுறல் கேட்டு அந்த ஆசிரியரை சோழன் “தட்டி“க் கேட்கிறார். அப்போது நான் அங்கு பணிபுரியவில்லை என்றாலும் அந்த சம்பவம் எனக்கு உறுத்தலாக இருந்தது. இது சார்ந்த ஒரு முகநூல் பதிவு பின்னூட்டத்தில் அது கற்பனை என்று ஆசிரியர் கூறியிருந்ததைப் படித்த பின்பு தான் ஆறுதலாக இருந்தது.
      கதைக்களமாக தமிழர் விடுதலைப் படை போன்ற ஒரு புரட்சிகர அமைப்பின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டு கதை பின்னுவது சற்று சிக்கலான விஷயம். அதுவும் அரசியல் தலைவர் என்பதால் கதையில் வரும் கருத்துக்கள் இவரது அரசியல் சார்பாக புரிந்து கொள்ளப் படும் அபாயம் உள்ளது. எனவேதான் ஆழமான உரையாடல்களை திட்டமிட்டே தவிர்த்துள்ளார்.   
      
      கதையில் எனது பெயரில் ஒரு கதாப் பாத்திரம் வருகிறது. (போயும் போயும்

 அந்தப் பாத்திரத்திற்கா எனது பெயர் வைக்கவேண்டும்) பரியேறி சமர் செய்த அக்காலச் 

சோழனின் ஊரிலிருந்து சைக்கிளேறி சமருக்குச் செல்பவன் தான் நமது “தோழர் சோழன்”

No comments:

Post a Comment

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...