Saturday, April 25, 2020

The Way Back – சைபீரியப் பனிப்பாலைவனத்தில் இருந்து தப்பிக்கும் போராட்டம்.




The Way Back – சைபீரியப் பனிப்பாலைவனச் சிறையில் இருந்து தப்பிக்கும் போராட்டம்.
தி வே பேக் – அருமையான சர்வைவல் போராட்டம் சார்ந்த படம். கலப்பில்லாத வெள்ளை சந்ததியினர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும். கடுகளவும் கருப்போ அல்லது ப்ரௌனோ கலப்பு ஏற்பட்டு புனிதம் பாழாகிவிடக் கூடாது என்கிற நோக்கில் நடத்தப்படும் கேம்பிற்குள் அடைபடும் சிறுமிகள் 1300 கிமீ தூரம் நடந்தே தப்பித்து தங்கள் ஊருக்கு வருவது போல சித்தரிக்கப் பட்ட The Rabbit Proof Fence படத்தினைப் போன்ற ஒரு படம். ஆனால் இங்கே இந்தப் படத்தில் கடும் குளிர், கடும் பாலை அப்புறம் மலைகள் என நிலத்தோற்றம் மாறிய வண்ணம் இருக்கும்.
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் எப்போதும் உண்டு. அது வெளியே வந்து கம்பீரமாக உலா வருவதற்கான வாய்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கிறது. வாய்ப்பு கிட்டும் போது நிச்சயம் வெளியே வருகிறது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் மற்றும் இந்தியாவில் ஆதிக்க சாதியினரால் கீழ் சாதியினருக்கு செய்யப்பட்ட கொடுமைகள் மேலும் வர்க்கப் பாகுபாட்டில் செய்யப் படும் கொடுமைகள் போன்றவை மேலே நான் கூறியவற்றை மெய்ப்பிக்கும் சான்றுகள்.
Licensed To Kill – என்ன இது ஜேம்ஸ் பாண்ட் படப்பெயராக உள்ளதே என்று பார்க்கிறீர்களா? யுத்த காலங்களில் இராணுவத்தினர் செய்யும் கொலைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வன்முறையைத் தானே சேரும். ஆயுதமும் அதிகாரமும் ஒருங்கே ஒரு மனிதனிடம் கிடைக்கும் போது அவனிடம் இருந்து மிருகம் வெளியே வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
எனவே எந்த நாட்டு இராணுவத்தினரும் அனைத்து நாட்டவர்க்கும் ஹீரோவாக இருந்துவிட முடியாது. நமக்கு ஹீரோவாக இருக்கும் அதே ராணுவம் மற்றொரு நாட்டுக்கு வில்லனாக தோன்றலாம்.
ரஷிய ராணுவம் இரண்டாம் உலகப் போரின் போது புரிந்த கொடூரங்களை The Last Witness என்கிற படத்தில் காணமுடியும். அதற்கு பிறகு இந்த படத்தில் அதே காலகட்டத்தில் பல்வேறு நாட்டவர் ரஷிய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சைபீரிய பனிப் பாலைவன சிறையில் சொல்லொனாத்துயர் அடையும் விஷயங்கள் கூறப்பட்டுள்ளன( நான் கண்ட வரையில்).
போலந்து நாடு ரஷியாவின் ஆதிக்கத்திற்குட்பட்டு கம்யுனிச ஆட்சிக்கு உள்ளாகிறது. உளவு குற்றம் சாட்டப்பட்டு தனது மனைவி சாட்சியம் அளிக்கவே நிருபிக்கப்பட்டு சிறைபடுகிறான் ஜானஸ்ஜானஸ் சிறைக்கு வந்த முதல் நாளில் இருந்தே தப்பிக்க என்ன வழி என்கிற ஒரே சிந்தனையோடே இருக்கிறான்.
. அவனோடு ஒரு ஐந்து பேர் (ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்) நடந்தே சைபீரியா, மங்கோலியா, சீனா, திபெத் என்று இந்தியா வந்து ஆங்கிலேய அரசிடம் தஞ்சம் அடைந்து தப்பிக்க என்னுகிறார்கள்.
கடுமையான பனிக்காற்றில் தடம் தெரியாமல் மறைந்து தப்பிக்கிறார்கள். பைகால் ஏரியை ஒட்டி தென்புறமாக நடக்கிறார்கள். வழியில் கிடைத்ததை உண்ணுகிறார்கள். இடையில் ஐரின் என்கிற ஒரு பெண் இவர்களோடு இணைகிறாள். ஆரம்பத்தில் ஒருவருக்கும் அவளை பிடிக்காது. அவளால் தங்கள் வேகம் தடைபடும் என எண்ணுகிறார்கள். பிறகு அனைவருக்கும் பிடித்தமானவளாக ஆகிறாள்.
கடும் குளிரைத் தாக்குபிடித்த அவர்களால் பாலை நிலத்தை தாக்குபிடிக்க இயலவில்லை. பசி, வறட்சி என்று அலைக்கழிக்கப்பட்டு ஒரு மூன்று பேர் இறந்து போகிறார்கள்.
மீதம் நால்வரும் இந்தியா வந்தடைகிறார்கள். வழியில் அனைத்தும் கம்யுனிச நாடு என்பதால் ஊர்களை தவிர்த்து மறைந்து மறைந்து தப்பிக்கிறார்கள்.
திபெத்தில் உள்ளுர் மக்கள் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள். பருவநிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு மோசமாக இருக்கும் இமயமலை வழிப் பயணம் ஆபத்தானது எனவே அதுவரை எங்களிடம் விருந்தினராக தங்கிவிட்டு பிறகு புறப்படுங்கள் என்கிறார்கள். ஆனாலும் எல்லோரும் அடுத்தநாளே இந்தியா நோக்கி நடையை கட்டுகிறார்கள்.
இந்தியாவில் நுழைந்த உடனேயே தேயிலைத் தோட்டத்தில் உள்ள மக்கள் இவர்களை சுற்றி சுற்றி வந்து வேடிக்கை பார்க்கின்றனர். ஊர்த்தலைவர் இவர்களை வரவேற்று அழைத்துச் செல்கிறார். காலங்கள் உருண்டோடுகின்றன. 1989 ல் கம்யுனிச வீழ்ச்சிக்குப் பிறகு தனது சொந்த நாடான போலந்து சென்று தன்னைக் காட்டிக் கொடுத்த குற்ற உணர்ச்சியில் இருக்கும் மனைவியை தழுவிக் கொள்கிறான் ஜானஸ்.
படத்தில் வயதானவராக வரும் “மிஸ்டர்“ எப்போது வாயைத் திறந்தாலும் “சுருக் சுருக்“ என்று உண்மையை மிகக் கூர்மையாக கூறுவார்.
சிறையில் உணவு பிடுங்கிக் கொள்ளப்படும் ஒரு வயதானவருக்கு தன்னுடைய உணவைத் தரும் ஜானஸ் இடம் ‘The kindness will kill You here” என்பார்
Survival is my protest; Living is the punishment’ என்று இன்னும் நிறைய கூறுவார்.
படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை இரண்டும் படத்திற்கு கூடுதல் பலம்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...