Sunday, April 12, 2020


புத்தகம்  சர்க்கரை (நாவல்)
ஆசிரியர் கு.சின்னப்பபாரதி
பதிப்பகம் NCBH

கொரானா விடுமுறை காலத்தில் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லாமல் திண்டாடிவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் சம்பள பில் போடப் போன போது லைப்ரரி பீரோவில் இருந்து கொஞ்சம் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்று தான் இந்தப் புத்தகம்
இந்த நூலின் ஆசிரியர் கு.சின்னப்பபாரதி அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கொல்லிமலையில் ஹில்டேல் பள்ளியில் வேலை பார்த்த போது நாங்கள் பள்ளி செல்லும் வழியில் “பாரதிக் காடு“ என்கிற ஒரு பெரிய தோட்டம் உண்டு. அது இவரது தோட்டம் என்பது அந்த தோட்ட பணியாளர் ஒருவர் எங்கள் பள்ளி தமிழாசிரியர் இளவரசு அவர்களிடம் SPOKEN ENGLISH வகுப்புக்கு மாலை வேளைகளில் வருவார் அவர் மூலமாகத் தான் தெரியும். ஆனால் அவரின் நாவல் ஒன்றை இப்போது தான் படிக்கிறேன்.
நாவலின் பெயரில் மட்டும் தான் இனிப்பு உள்ளதே ஒழிய கதைமாந்தர்களின் வாழ்க்கை முழுக்க கசப்பாகத்தான் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அரசாங்கமே முதலாளிகள் போல ஊழியர்களின் போராட்டங்களை கையாளுகிறது. தொழிலாளர்கள் சுரண்டல் சமூகத்தில் எந்த வகையில் எல்லாம் நடக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த நாவலைப் படியுங்கள்.
கரும்பு ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.  தங்கள் கரும்பு பருவம் வந்து வெட்டப்படாமல் நட்டமாகின்றது என விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிராக அணிவகுக்கின்றனர். பொது ஜனமோ ’நாமே நித்தம் வேலை என்பது இல்லாமல் கால் வயிறு கூட நிரம்பாமல் கெடக்கோம் மொல்லாளி இவனுங்களுக்கு எவ்வளவு கொட்டிக் கொடுக்கிறாரு அதுவும் பத்தலன்னு திமிரு எடுத்துப் போயி வேலை நிறுத்தம் பண்றானுவ, அவனுங்கள எல்லாத்தையும் தொரத்தி விட்டுட்டு புது ஆளுங்கள போட்டா தான் இவனுவ திமிரு அடங்கும்’. முதலாளி வர்க்கமோ இவனுங்களுக்கு பணிஞ்சி போயிட்டம்னா இதக் காட்டியே ஒவ்வொரு முறையும் எதாவது பண்ணுவானுவ என்கிற நிலையில் இருக்கின்றனர்.
2002ல் நான் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்த ஆண்டில் அம்மையார் ஜெ அவர்களின் ஆட்சி. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல உரிமைகள் நீக்கப்பட்டன. அதற்காக ஊழியர்கள் ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அரசு போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. அத்தோடல்லாமல் அரசு நிதியில் இருந்து 98 விழுக்காடு பணமானது அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்ற அவதூறான விஷமப் பிரச்சாரத்தை முதல்வரே செய்தார். இதனால் பொது மக்கள் “இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மிக அதிகம், நாங்கள் அதில் கால்வாசி சம்பளத்தில் பணிபுரியத் தயாராக இருக்கிறோம்” என்றெல்லாம் கூறினார்கள். இந்த பேட்டியை மர்மப் புன்னகையோடு எதிர் கொண்ட ஜெ அவர்கள் 2003க்குப் பிறகு பணியில் சேர்வோருக்கு பங்களிப்பு ஓய்வு ஊதியம் என்கிற அறிவிப்பை வெளியிட்டு ஓய்வு ஊதியத்திற்கு ஆப்பு வைத்தார். அத்தோடல்லாமல் கால்வாசி சம்பளத்தில் மக்கள் வேலை பார்க்க தயாராக உள்ளனரே என்று 2004ல்தேர்வு செய்யப் பட்ட ஆசிரியர்களை கன்சாலிடேட்டட் பே என்கிற அடிப்படையில் பணியில் சேர்த்து 4000 மற்றும் 4500 ஐ சம்பளமாக கொடுத்தார். எந்த வாய் கால்வாசி சம்பளத்தில் பணிபுரிய தயார் என்றதோ அதே வாய் ”எங்கள் உழைப்பை குறைந்த சம்பளத்திற்கு சுரண்டாதே முழு நேர காலமுறை ஊதியம் கொடு” என்று போராட்டத்தில் இறங்கியது. தேர்தல் நெருங்கிய போதும் கூட அவர்களின் கோரிக்கைக்கு ஜெ அவர்கள் செவி சாய்க்க வில்லை. பிறகு வந்த கலைஞர் ஆட்சியில் தான் அவர்கள் காலமுறை ஊதியம் பெற்றார்கள் என்பது வரலாறு.
இந்த மாதிரி சமூகநாவல்களில் எப்போதும் அடித்தளம் விரிவாக போட்டுத் தான் கதையை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் கதையின் சில அத்தியாயங்களை பிடித்து தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும். அதன் பிறகு நமது கண்கள் ரெக்கை கட்டிக் கொண்டு நாவலில் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விடும்.
ஒரு விவசாயம் சார்ந்த கிராமப் பகுதியில் கரும்பு ஆலை துவங்கப் படுகிறது. அதில் முதலாளி தொழிலாளர்களையும் கரும்பு விவசாயிகளையும் எப்படி சுரண்டுகிறார். தொழிலாளர்களின் எழுச்சி எவ்வாறு போராட்டமாக உருகொள்கிறது, முதலாளி வர்க்கம் போராட்டத்தை எப்படி எதிர்கொள்கிறது போராட்டத்திற்கு பிந்தைய நிலவரங்கள் என்று நாவல் முழுவதும் சிவப்பு சிந்தனை நிறைந்து வழிகிறது. ஒடுக்கப்பட்ட கீழ் வர்க்கமும் ஒடுக்கப்பட்டு சாதி அடுக்கில் கீழே கிடக்கும் வர்க்கமும் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து மேலே இருப்போரை எதிர்க்காமல் இருக்க எந்த மாதிரியான அரசியல் சூழ்ச்சி அவர்கள் இருவரையும் தொலைவிலேயே நிறுத்தி வைத்து உள்ளது என்பதையும் கதைக் கட்டமைப்பிலேயே தொட்டுச் செல்கிறார்.
நாவலில் அவர் ஒரு கிராமத்தில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களின் தெரு வாழ்க்கை முறை, உயர்சாதி ஏழை விவசாயக் குடும்பம், ஜமீன் குடும்பம், ஆலை உள்கட்டமைப்பு மற்றும் முதலாளிகளின் உளவியல் போன்ற அனைத்தையும் மிக அருமையாக எழுத்தில் வடித்துள்ளார். முக்கியமாக செத்த மாட்டைக் கொண்டு போய் அறுத்து பங்கிட்டு உண்ணும் விஷயத்தை அவ்வளவு நுணுக்கமாக விவரித்துள்ளார். தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களது வாழ்க்கை நிலை குறித்து எந்தப் புகாரும் இன்றி ’இது நமக்கு விதிக்கப்பட்டது’ என்கிற நிலையில் தான் அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் ஏற்கின்றனர் என்று அவர்தம் உளவியலை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.
மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், கதையில் அவர் பயன் படுத்தியுள்ள சொலவடைகள், “ஆகா“ என ஆச்சரியத்துடன் வாயை பிளக்க வைக்க வல்லவை. உதாரணத்திற்கு சிலவற்றை கீழே கொடுக்கிறேன் பாருங்கள்
“அம்மியில் குத்தினா என்ன ஆட்டுரலில் குத்தினா என்ன, நெல் அரிசியானா சரி தான்”
“கொட்டு முழக்கு பெரிசுதான் ஆனா கோமணத்துக்கு பஞ்சந்தான்”
“பெருமைக்கு புல்லுபோட்டா எருமைக்கு வயிறு நிறையுமா?”
“மச்சாம் பாலு குடிக்கத்தான் மாடு செனைபட்டுதுங்குற கதையா இருக்கே”
“கூதலுக்கு இல்லாத சேலை கூடாரம் கட்டப் போச்சாம்”
“எலி இல்லாத வலைய நாய் பறிக்காது தெரியுமா”


No comments:

Post a Comment

First Look முக்கியம் பாஸ்!!

First Look ரொம்ப முக்கியம்!! காதல் கொண்டேன் படத்தில் வரும் வகுப்பறை காட்சி பெரிய கைத்தட்டலுடன் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது!! ஒரு பேராசிரியர் ...