Thursday, December 23, 2021

பெண் ஏன் அடிமையானாள்– தந்தைப் பெரியார்


 பெரியாரின் நினைவுநாளான இன்று அவரது ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான "பெண் ஏன் அடிமையானாள்?!" என்கிற நூல் பற்றிய எனது மதிப்புரையை மீள்பதிவு செய்கிறேன்.



 எனக்கு அடிக்கடி ஒரு பெருத்த சந்தேகம் எழுவதுண்டு. பொதுவாழ்க்கையில் இருக்கும் நிறைய ஆளுமைகள் தங்கள் பெயருக்கு முன்னால் ஒரு டாக்டர் பட்டம் வாங்கிப் போட்டுக் கொள்வதை பார்த்திருக்கிறோம். தகுதியுடையோர் சிலர் தகுதியற்றோர் பலர் எனினும் அதை நாம் பெரிதாக கருதவில்லை. ஆனால் உள்ளபடியே அகில உலக அளவில் முன்வரிசையில் வைக்கத்தக்க பழுத்த சிந்தனையாளர் புரட்சியாளர் தந்தைப் பெரியார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ஏன் வழங்கப்படவில்லை. அவரது இந்தப் பெண் ஏன் அடிமையானாள் என்கிற ஒரு நூலின் பத்து அத்தியாயங்களும் தனித்தனியே ஒரு முனைவர் பட்டம் வழங்கத் தகுதியானவை என்பதை மறுக்க இயலுமா?


கற்பு


 இந்த ஒரு சொல்லை வைத்து பூச்சாண்டி காட்டியபடியே தானே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தச் சொல்லின் ஆணிவேர் வரை சென்றும் மாற்றுமொழியில் உள்ள இணைச் சொற்களின் வழி நின்றும் ஆய்ந்து பார்த்தவரையில் எங்குமே இந்த வார்த்தை பிரத்தியேகமாக பெண்களை மட்டும் குறிக்கும் என்கிற தகவல் இல்லாதபோது மோசடியாக இதனை பெண்களை மையப்படுத்தி குறிக்கும் வார்த்தையாக மாற்றியது ஆரிய கைங்கர்யம் என்று “பதிவிரதை“ என்கிற வார்த்தை கொண்டு ஓங்கி அடிக்கிறார். மேலும் ஆண்களை கற்புடையவர்கள் என்பதற்கு தனிவார்த்தைகள் இல்லாமல் இருப்பதற்கு ஆணாதிக்கம் அன்றி வேறு காரணம் இல்லை என்கிறார்.


வள்ளுவரும் கற்பும்


 வாழ்க்கைத் துணைநலம் மற்றும் பெண்வழிச் சேறல் என்கிற அதிகாரங்களில் வரும் குறட்பாக்களின் பொருள்வழி வள்ளுவரையும் “அவர் ஒரு வேளை பெண்ணாக இருந்திருந்தால் இந்த வகையில் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பாடல் எழுதியிருப்பாரா என கேள்வி எழுப்பவும் தவறவில்லை. “பெண்வழிச் சேறல்“ என்கிற அதிகாரத்தில் “இமையாரின் வாழினும்“ எனத் தொடங்கும் பாடல் மனைவிக்கு அஞ்சுபவன் ஆண்மையற்றவன் என்று கூறும் அதே வேளை கணவன் காலடியை தொழுது நிற்பவள் பெய் என்றதும் மழை பெய்யும் என்றல்லவா கூறுகிறார். 


காதல்


 கண்டதும் காதல், காணாமலே காதல் என்றெல்லாம் கலர் கலராக கதைகளைக் கட்டி காதல் என்கிற ஒன்றைப் பற்றி ஒரு தெய்வீக பிம்பம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. தனது கைத்தடியால் அந்த பிம்பத்தை “டமார்“ என்று உடைத்து நொறுக்குகிறார். விக்ரமன் பாணி ”பூ ஒரு முறைதான் பூக்கும்” என்பதையெல்லாம் முற்றாக நிராகரிக்கிறார். காதல் என்பது நிலையில்லாதது யார் மீது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். மேலும் அது மாறாத ஒன்று அல்ல என்கிறார். இது காதல் அல்ல, அது காதலுக்கு விரோதம், இது காம இச்சை, இது விபச்சாரம் என்றெல்லாம் காதலைக் கூறி அடக்குமுறைக்கு முயற்சி நடப்பதால் காதல் குறித்தும் இந்த ஆய்வில் எழுதிச் சென்றிருக்கிறார்.


கல்யாண விடுதலை


 அன்பு மற்றும் புரிதலில் பேதம் ஏற்படுகையில் காதலில் இருந்து விடுவித்துக் கொள்ள அஞ்சக் கூடாது என்று போன அத்தியாயத்தில் கூறிய பகுத்தறிவு பகலவன்  சேர்ந்து வாழ இயலாத ஒரு சூழலில் பெண்கள் கையில் மட்டும் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்” என்ற பழமொழியை திணித்து விட்டு சமூகம் வாளாவிருப்பதை பெரியார் ஏற்கவில்லை. பொருத்தப்பாடு இல்லாத சூழலில் கல்யாண விடுதலை பெற்று இருவரும் பரஸ்பர சுதந்திரத் தன்மையுடன் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளக் கடவது என்கிறார்.


மறுமணம் தவறல்ல


 மணமுறிவு செய்து கொண்ட ஒரு பெண் தனக்கு பொருத்தமான ஒரு துணை கிடைக்கும் போது மறுமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். பொருந்தாத வாழ்க்கையை சகித்துக் கொண்டு சமூக கட்டுப்பாட்டையும் மாண்பையும் பெண்களைக் கொண்டு தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு ஆண்கள் மட்டும் இஷ்டத்திற்கு செயல்படும் பித்தலாட்டத்தை கண்டிக்கிறார்.


விபச்சாரம்


 விபச்சாரத்தைப் பொறுத்தவரை இதில் ஆண் பெண் இருபாலரும் சம்மந்தப் பட்டிருந்தாலும் மொத்த பழிப்புக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகிறவர் பெண் தான். (விபச்சார வழக்குகளில் கூட பெண்களைத் தானே காவல்துறை கைது செய்கிறது) ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் கூடும் பெண்களை விளிப்பதற்கு இந்தச் சொல்லாடல் இழிவாக பயன்படுத்தப்படும் அதே வேளை ஆண்களின் பல பெண்கள் சேர்க்கை வீரத்தின் கம்பீரத்தின் ஆண்மையின் அடையாளமாக விதந்தோதப்பட்டு வந்துள்ளது. ”தேவிடியா” என்கிற வார்த்தை மிகப்பிரபலமாக இன்றளவும் புழக்கத்தில் இருக்கும் வசைச் சொல். ஒரு பெண்ணின் தூய்மையை கேள்விக்கு உள்ளாக்க பயன்படுத்தப் படுகிறது. இதே போல ஆண்களைக் கூறி வசைபாட முடியுமா. அப்படிக் கூறினால் அதை பாராட்டாக எடுத்துக் கொள்ளும் கண்றாவியான சூழல் தானே சமூகத்தில் இன்றளவும் உள்ளது.


விதவைகள் நிலை


 அந்தக் காலத்தில் பதினைந்து வயதுக்குள்ளாக திருமணம் செய்து கொண்டு விதவைநிலையடையும் பெண்கள் குடும்ப கவுரவம் மற்றும் நம்பிக்கை என்கிற பித்தலாட்டங்களால் தங்கள் வாழ்க்கையையே வெறுமையாக கழிப்பது குறித்து மிகுந்த சினமும் கவலையும் கொள்கிறார். காந்தியாரும் இந்த நிலை ஒழிய வேண்டும் என்று தனது பத்திரிக்கையில் எழுதியதை மேற்கோல் காட்டி மறுமணம் தவறல்ல என்கிறார். நம்பிக்கைகளை காரணமாக காட்டி ஒரு பெண்குழந்தையின் வாழ்க்கையையே வெறுமையாக்குவது முற்றிலும் தவறு என்கிறார்


சொத்துரிமை


 இதுகுறித்த சட்டம் இயற்றப்பட்ட போது “எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம்” என்று பெண்களை வைத்தே கோஷம் போடவைத்த வெட்க கேடு அரங்கேறி இருக்கிறது. அதெற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றால் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப் பட்டாக வேண்டும் என்றும் இதற்கு முன்னோடியானதொரு சட்டம் மைசூர் சமஸ்தானத்தில் இயற்றப் பட்டிருப்பதை எடுத்துக் காட்டி கூறுகிறார். ஆனால் சங்கர மடமோ “அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா இஷ்ட்ட பட்டவாள இழுத்துண்டு ஓடத்தான் போறா என்ன பண்றது ஓய் கலி முத்திடுத்து” என்று அங்கலாய்த்தது வரலாறு.


கர்ப்பத்தடை


 பெண்களை பிள்ளைப் பெற்றுப் போடும் கருவியாக கருதிய நிலை இருந்த அந்த காலக்கட்டத்தில் கர்ப்பத்தடை என்கிற வார்த்தையை உச்சரித்தாலே பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டது. அப்படி செய்வது தெய்வ நிந்தனையாக கருதப்பட்டது. கர்ப்பத்தடை விஷயத்தில் முற்போக்க சிந்தனையாளரான முத்துலெட்சுமி அம்மையார் தனக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த தையும் வருத்தத்தோடு பதிவு செய்கிறார். இன்று சர்வசாதாரணமாக நடக்கும் கர்ப்பத்தடை அன்றைய முற்போக்கு சிந்தனையாளர் ஒருவரே தவறு என்று கருதிய விஷயம் பெரியாரால் முன்மொழியப் பட்டிருக்கிறதென்றால் அவரது தொலைநோக்குப் பார்வை எவ்வளவு விசாலமானதாகவும் வியப்புக்குரியதாகவும் இருந்திருக்கிறது.

பெண்விடுதலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும்


 எந்த ஒரு ஆணும் பெண் விடுதலைக்காக முழுமையான ஈடுபாட்டுடன் போராடமாட்டான். எனவே பெண்கள் தாங்களே தங்கள் விடுதலைக்காக துணிந்து போராட வேண்டும். பெண்கள் தங்களை ஆண்களை விட கீழானவர்கள் என்கிற எண்ணிக் கொள்வது பெரும் பிழை என்று கடிந்து கொள்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் பிள்ளைப் பெற்றுக் கொள்ளும் வேலையினால் ஆண்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்கள் பிள்ளைப் பெறுவதை நிறுத்த வேண்டும். இந்த சமத்துவமற்ற சமுதாயம் பெருகவில்லை என்றால் என்ன கேடு? என்று அறச்சீற்றத்தோடு முடிக்கிறார்.


பாலின சமத்துவம் சார்ந்து பெரியார் கூறிய பல விஷயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால் அவர் அது குறித்த கருத்துக்களை வெளியிட்ட காலகட்டத்தில் நிலவிய பொதுச்சமுதாய சிந்தனை போக்கை கவனித்தோம் என்றால் பெரியாரின் கருத்துக்கள் எவ்வளவு புரட்சிகரமானவை என்பது விளங்கும். பாலின சமத்துவம் சார்ந்த சிந்தனையில் முன்னோடியாக இருக்கும் இந்த “பெண் ஏன் அடிமையானாள்?“ என்கிற ஆய்வு நூல் ஆயிரம் டாக்டர் பட்டங்களுக்கு தகுதியானது என்றால் மிகையில்லை

Saturday, November 27, 2021

ரெட் இங்க்

 

புத்தகம் – ரெட் இங்க்

ஆசிரியர் – சக.முத்துக்கண்ணன்



ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் அவர்களை ஆரம்பத்தில் எனக்கு நேரில் பரிச்சயம் இல்லை. தண்ணீர் பற்றிய பாடத்தை மாணவர்களுக்கு அவர் விளக்கி கூறிய விதம் பற்றிய முகநூல் பதிவால் ஈர்க்கப் பட்டு அவருடன் முகநூல் நட்பானேன்.


 அருகமை பள்ளியில் அறிவியல் ஆசிரியர். ஆசிரியரின் முதல் நூலான சிலேட்டுக் குச்சியை வாசித்து சிலிர்த்துப் போனேன். இவரது கட்டுரைகளோ, கதைகளோ இல்லை முகநூல் பதிவுகளோ எதுவாக இருந்தாலும் நாம் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். “அட பசங்க கிட்ட இந்த விஷயத்தை கவனிக்காம விட்டோமே” என்ற குற்ற உணர்ச்சியை இவரது பதிவுகள் நமக்கு தந்துவிடும்.


இரண்டாவது நூலாக சிறுகதை தொகுப்பாக “ரெட் இங்க்“ வரும் என்கிற செய்தியை கேட்டவுடன் எனக்கு பத்து காப்பி சொல்லி வைத்துவிட்டேன். பள்ளிக்கு அலுவல் ரீதியாக வரும் முக்கியஸ்தர்களுக்க கொடுக்க இதைவிட பொருத்தமான பரிசு உண்டா? 


புத்தகத்தை திறந்தவுடன் தோழர் ச.மாடசாமி அவர்களின் அணிந்துரை. “கரைத்தக் கஞ்சி போல லகுவான நடை” என்று அவர் ஆசிரியரின் நடையைப் பற்றி கூறியிருப்பது வெகுப் பொருத்தம்.

புத்தகத்தில் மொத்தம் முத்தான பத்து சிறுகதைகள் உள்ளன. கடைசிச் சிறுகதை தவிற மற்றவை எல்லாமே பள்ளி, மாணவர்கள், ஆசிரியப் பணி இவற்றையே மையம் கொண்டு இருக்கிறது. அதனால் தான் “ரெட் இங்க்“


“அவனே சொல்லட்டும்“ கதையில் வரும் முருகேசு என்கிற பத்து வயது வாயாடிப் பயலை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆசிரியருக்கும் அவனுக்குமான அந்த உறவு அவ்வளவு ரசிக்கத் தக்கதாக இருக்கும்.


“ஆசிரியர்கள் தினம்“ கதையை வாசித்து கலங்காத யாரும் இருக்க இயலாது. டி.ஆர்.பி மதிப்பெண்ணுக்கும் ஆசிரியரின் திறமைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை என்பதை பலமுறை கண்டுள்ளேன். புத்தகம் வாசிக்காத, புதுமையான யுத்திகளை முயற்சிக்காத, சென்ற ஆண்டின் பாடக்குறிப்பேட்டை காப்பி அடித்து எழுதும் பல ஆசிரியர்களை பார்த்து நொந்து போயிருக்கிறேன்.


 உள்ளபடியே பி.எட் படிக்காத ஆசிரியர்கள் பலரை பள்ளிக்கு வெளியே சந்தித்துள்ளேன். 89 க்கும் 90க்குமான இடைவெளியில் ஆசிரியப் பணி வாய்ப்பை இழந்தவர்களும் நல் ஆசிரியர்களே. 


நமது தேர்வு முறைகள் அனைத்தும் Aptitude ஐ சிறப்பாக சோதிக்கிறதே ஒழிய Attitude ஐ சோதிப்பதே கிடையாது. ஆசிரியர் கனவோடு வாழ்ந்து 89க்கும் 90க்கும்  இடையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெயிண்டர் ஆன குமரவேலின் கதையை வாசித்து கலங்கிப்போனேன். 


“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? தனியார் பள்ளிக்கு வேலைக்கு போனால் என்ன?” அவர் பெயிண்ட்டர் வேலை பார்த்து அவரது குடும்பம் முக்கால் வயிறு கழுவிக் கொள்ளலாம். ஆனால் தனியார் பள்ளி சம்பளத்தில் அரைவயிறே கழுவ இயலாது.


“கீச் கீச்“ கதையில் வரும் கலர் கலரான போந்தா குஞ்சுகளை நான் பார்த்து ரசித்திருக்கிறேன். சிறு வயதில் வாங்கி வளர்க்க ஆசையாக இருக்கும். ஆனால் பத்து பைசா கூட பாக்கெட் மணி என்னிடம் இருந்தது கிடையாது. கதையில வரும் பயபுள்ளைக செய்வது போல பாடபுஸ்தகத்தை எடைக்கு போடும் தைரியம் இல்லை. ஆனால் கோடை விடுமுறையில் சென்ற ஆண்டின் புத்தகங்களை போட்டு தேங்கா புண்ணாக்கு வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.


கதை தொடங்கி ரசனையோடு கொண்டு சென்று இறுதியில் அந்த வில் தராசில் முடித்தவிதம் ரசிக்கத் தக்கதாக இருந்தது.


“டிராப் அவுட்“ அரசுப் பள்ளிகளில் அடிக்கடி கேட்கும் வார்த்தை. மாணவர்கள் டிராப் அவுட் ஆக பல காரணங்கள் உண்டு. 15 வயது பையனின் வருமானத்தில் ருசி கண்ட அம்மாவே பையன் பள்ளிக்கு போய் அம்மஞ்சல்லி பிரயோசனமில்லை வேலைக்குப் போகட்டும் என்று ஆசிரியர்களிடமே கடிந்து பேசும் விஷயத்தையே கடந்து வந்துள்ளேன்.


 ஆனால் டிராப் அவுட் கதையில் வரும் கார்த்தி கடந்து வந்த விஷயம் “ஒரு பாலா படம்” 


கதைக்கு “அன்று கார்த்திக் ஏன் பள்ளிக்கு வந்தான்?“ என்று தலைப்பு வைத்திருக்கலாம்.


“புடிச்சி அவன ஜெயில்ல போடுங்க சார்” என்று ஒரு படத்தில் சந்தானம் சொல்வதற்கு சற்றும் உணர்ச்சி குறையாமல் “புடிச்சி அவன பெயில் போடுங்க சார்” என்கிற வன்முறையை ஆரம்ப கால ஆசிரியப் பணியில் நானே கூறியுள்ளேன்.


 ஆனால் அனுபவங்கள் கூடக் கூட “பெயில்“ போடுவது அப்படி ஒன்றும் விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை மாறாக குழந்தைகளை பள்ளியில் இருந்து விலக்கி வைக்கவே உதவுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.


 தற்போது கூட ஒன்பதாம் வகுப்பில் “பெயில்“ போட்டு பத்தாம் வகுப்பில் 100 விழுக்காடு மெடல் வாங்கி குத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.


நீலப் பந்து கதையில் வரும் சிறுவன் நான்காம் வகுப்பில் பெயிலாகிறான். அது அவனது தந்தைக்கு தெரியும் வரையிலான இடைவெளியை சந்தோஷமாக கழிக்க விரும்பும் குழந்தைத் தனத்தை ஆசிரியர் அவ்வளவு அழகாக எழுதியுள்ளார்.


 நீலப்பந்து நீரில் மூழ்கும் போது நாமும் சோகத்தில் மூழ்கிப் போகிறோம்.


பதின்பருவ எதிர்பாலின ஈர்ப்பு குறித்த கதைக்கு “பரு“ என்பது எவ்வளவு அழகான தலைப்பு.


 மெர்லின் ஆசிரியரின் எழுத்துக்களால் வடிவம் பெற்று என் கண்களுக்குள் நிற்கிறாள். பதின்பருவ குறும்புகள், அதற்கு ஆசிரியப் பெருமக்களின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஆசிரியரின் பேனா அழகாக படம் பிடித்துள்ளது.


“ஜெயந்தி டீச்சர்“ கதையை வாசித்த போது எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த சிறுமி “நான் ஆசிரியராகத்தான் ஆவேன்“ என்று கூறியது நினைவில் வந்து போனது. ஏனெனில் அவளுக்கும் ஜெயந்தி வயது தான். அவளும் கூட ஜெயந்தி போலவே ஆசிரியராவது பற்றி கனவுகள் கண்டிருக்கலாம்.


 பள்ளியில் வயதுக்கு வந்த பிள்ளைகளை பொறுப்பாக ஆற்றுப் படுத்தி வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்பது அத்தியாவசியமான விஷயம். எங்கள் பள்ளி ஆசிரியர்கள் கச்சிதமாக செய்து விடுவார்கள்.


ஜெயந்தி டீச்சர் கதையின் தொடர்ச்சியாகவே “மே ஐ கம் இன் சார்“ கதையை பார்க்கிறேன். இந்த கதையிலும் நன்றாக படிக்கும் ஜெயந்தி வீட்டில் தன் மீது விழுந்த அன்றாட பணிச்சுமைகளை முடித்து விழி பிதுங்கி ஓட்டமும் நடையுமாக லேட்டாக பள்ளி வந்து மூச்சு வாங்க கூறும் “மே ஐ கம் இன் சார்“ என்பதை கேட்கும் போது நமக்கும் மூச்சு வாங்குகிறது.


“சில்லிப்பு“  கதையை இதற்கு மேல் இடக்கரடக்கலோடு யாரும் எழுதிவிட இயலாது. சிலர் எங்கு சென்றாலும் வம்பு வளர்ப்பது இயல்பு. அத்தகையோர் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு வந்து சத்தம் போடுவதும் நடக்கும். அந்த சமயங்களில் அந்த மாணவர்கள் படும் தர்ம சங்கடத்தை சிறப்பாக எழுதியுள்ளார். 


சிறப்பாக படிக்கும் பொறுப்பான மாணவிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கலை தீர்த்து அவளை மீட்டு எடுக்கிறார்கள் ஆசிரியர்கள். இறுதிவரை அந்த சிக்கலை ஆசிரியர் வெளிப்படையாக சொல்லிவிடக் கூடாதே என்று பதறினேன். அவரும் அவ்வாறே அந்த கதையை அழகாக நிறைவு செய்திருந்தார்.


“வெள்ளைப் பூக்கள்“ என்கிற பத்தாவது கதை பள்ளி, மாணவர் என்கிற கதைக்களம் சாராத அருமையான கதை. பேருந்து நிறுத்தும் நிழற்குடைகளில் எப்போதாவது கிழிசல் உடைகளுடன் மனநிலை பிறழ்ச்சி கொண்டோரை கண்டிருப்போம். அந்த சுற்றுப் புறத்தில் அவருக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள். அந்த நபருக்குள்ளே ஒரு கதை இருக்கும். அதைத்தாண்டி அவருக்கு ஒரு உண்மை பெயர் இருக்கும்.


 தாச்சி – சீமான் இவர்களின் பாத்திர வார்ப்பு கல்கோனா மிட்டாயின் சுவை போல மிடறு மிடறாக இன்னமும் இறங்கிக் கொண்டு உள்ளது.


நமது பணிச் சூழலில் கடந்து வந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை உள்ளது. ஆனால் அதனை எல்லோராலும் கவனித்துவிட இயலாது. கவனித்தாலும் அதனை சுவைபட எழுத்தில் வடித்துவிட இயலாது. ஆனால் சக.முத்துக்கண்ணன் சார் கவனித்து சுவைபட எழுதி நமது நினைவலைகளில் அவரது கதாப் பாத்திரங்களை நிரந்தரமாக நீந்தச் செய்துள்ளார்.


நூறு பக்கங்களே கொண்ட நூல். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமின்றி அனைவருமே வாசிக்கலாம். ஆசிரியரல்லாதோர் தங்கள் பள்ளி வாழ்வை சுவையாக மீட்டிப் பார்க்க உதவலாம்.

Tuesday, November 23, 2021

கவிப்பேரரசு வைரமுத்துவின் மனதில் இருந்த பாரங்கள் (ச்சும்மா ஜாலியா ஒரு ஆராய்ச்சி)

 



 சில படங்களில் ஒரு பாடலை மட்டும் கேட்டுவிட்டு போய்விட இயலாது. ஆமாம், பாருங்களேன் இந்த "கையில் மிதக்கும் கனவா நீ..." பாடலை கேட்டுவிட்டு அப்படியே விட்ற முடியாது. "சந்திரனை தொட்டது யார்..."  பாடலை கேட்டே ஆகவேண்டும். இரண்டையும் கேட்ட பின்பு "சோனியா சோனியா..." பாடலின் இரண்டு வகை காதல் ஆராய்ச்சி செய்யாமல் போகவே முடியாது. மூன்றையும் கேட்ட பின்பு ஜேசுதாஸ் பாடிய "நெஞ்சே நெஞ்சே ..." கேட்டு உருகாமல் இருக்க நாம் என்ன இரும்பா?!!


 இந்த அருமையான பாடல்கள் இடம்பெற்ற படம் "ரட்சகன்"

படம் பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட ரொம்ப சுமாரான படம் என்பது எனது எண்ணம்.


ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் பிரமாதமாக  இருக்கும்.(அதாவது வேற லெவல்)


அடிக்கடி இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்பதுண்டு.


இந்தப் படத்தின் பாடல்களை எழுதியபோது வைரமுத்து அவர்களின் மனதில் ஏதும் பாரம் இருந்திருக்குமோ என அடிக்கடி சிந்தனைவயப் படுகிறேன்.


 நீங்களே பாருங்களேன்:


நாயகனுக்கும் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆனதோ இல்லையோ பிசிக்ஸ் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கும்போல!! காமுறும் வேளையில் கூட  நாயகன் இயற்பியல் விதிப்படியே சிந்திக்கிறான்.  "தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே

என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்?"  "சிறு கோட்டுப் பெரும்பழம்" என்பது போல, " தாமரை மலர் போல மென்மையான நீ எப்படிம்மா எருமை கனம் இருக்கும் என்னை தாங்குகிறாய்" என்கிறான்.


அதற்கு நாயகி, "அதெல்லாம் ரொம்ப சுளுவான மேட்டருப்பா!" என்பது போல்

"மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை

காதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை!" என்று நாயகனின் சந்தேகத்தை போக்குகிறாள்.


இந்தப் பாட்டோடு ஆராய்ச்சியை முடித்தாரா என்றால் இல்லை!!


அடுத்தப் பாடலில் ஒரு பாரம் தாங்குவது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதிவிட்டார்.


கையில் மிதக்கும் கனவா நீ பாடல். நாகார்ஜூன் சுஷ்மிதாவை தூக்கிக்கொண்டே மாடி ஏறும் பாடல்தான். 


"நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி..

அதை கண்டு கொண்டேனடி..." போன பாடலில் நாயகி சொன்ன மேட்டரை தீசிஸ் ல சேர்த்துக் கொண்டுள்ளார் பாத்தீங்களா?!


"காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது.." ரொம்பவும் ரொமான்டிக் நெடி தூக்கலாக இருப்பதால் தாய்மையை சேர்த்துக் கொண்டுவிட்டார் போல.


ஆராய்ச்சின்னா ஒரு கால்கலேஷன் வேண்டுமில்லையா?! கவிஞர் கால்குலேஷனும் போட்டு "நாயகனின் உச்சபட்ச சுமை தாங்கு திறனை" நான்கு இலக்க துல்லியத்தோடு கண்டறிகிறார். அதாவது 


"உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..

உயரம் தூரம் தெரியாது...

உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..

என்னால் தாங்க முடியாது.."


கதாநாயகியின் எடையைவிடக் கூடுதலாக ஒரு கிராம்கூட சுமக்க இயலாது என்று கறாராக  கூறிவிடுகிறார்.


ரிசர்ச்ன்னு இருந்தா ஒரு முடிவு இருக்க வேண்டாமா?! இந்த ஆராய்ச்சியின் முடிவை எங்கே ஒளித்து வைத்துள்ளார் என்று காதைத் தீட்டிக் கொண்டு மறுபடியும் பாடல்களைக் கேட்டுப்பார்த்தேன். "யுரேகா...." கண்டேன் முடிவை, எங்கே தெரியுமா "சோனியா சோனியா..." இரண்டுவகை காதல் பற்றிய ஆராய்ச்சியின் ஊடாக கவிஞர் தனது ஆய்வு முடிவை முத்தாய்ப்பாக மூன்றே வார்த்தைகளில் பளிச்சென்று சொல்லிவிட்டார். 


"பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை" என்று ட்விஸ்ட்டாக கூறிவிடுகிறார். 

 

சில தியரிகள் நடைமுறையில் சிக்கலாகி விடுகின்றன. கவிஞருக்கு என்ன சிக்கலோ போங்க "தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாள் வாங்கவோ" என்று சோகமா எழுதி வேகமா வெளியேறுகிறார்.


Sunday, October 31, 2021

“இல்லம் தேடிக் கல்வி“ – நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?

 


தமிழக அரசு கொண்டு வந்துள்ள இல்லம் தேடிக் கல்வி என்கிற திட்டமானது கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாண்டுகள் பாழ்பட்ட குழந்தைகளின் கல்வியை சீர் செய்ய கொண்டுவந்துள்ள ஒரு தற்காலிக ஏற்பாடு என்றே அரசு சொல்கிறது.

சரி இதனை எப்படி செயல்படுத்த போகிறது?

அந்தந்த ஊரில் தெருவில் உள்ள பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த தன்னார்வலர்களை ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் டிகிரி முடித்த தன்னார்வலர்களை எட்டாம் வகுப்பு வரையில் உள்ள குழந்தைகளுக்கும் மாலை வேளைகளில் ஒரு மணிநேரம் டியுசன் எடுக்கச் செய்யப் போகிறார்கள்.

அவர்கள் செயல்படுத்த வேண்டிய பாடத்திட்டம் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழுவினால் தொகுத்து வழங்கப் பட உள்ளது. அவர்களுக்கான பயிற்சி ஆசிரியர்களால் வழங்கப் பட உள்ளது. மேலும் அந்த வகுப்புகளை மேற்பார்வை செய்து நெறிபடுத்தப் போவது அந்தந்த ஊர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்.

இது தேவையா?

கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம் இரண்டாண்டுகள் பள்ளிக் குழந்தைகளின் கல்வியை பெரிய அளவில் பாதித்து விட்டது.

ஆன்லைன் கல்வியை தனியார் பள்ளிகள் பெரிய அளவில் செயல்படுத்தினாலும் அவர்களது உண்மையான நோக்கம் பெற்றோர் கட்டும் கட்டணத்திற்கு நியாயம் செய்வதாக மட்டுமே இருந்தது. பெரும்பாலான பெற்றோர்கள் ஆன்லைன் கல்வி திருப்தி இல்லை என்றே கூறினார்கள்.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்த அளவில் பெரிய வகுப்புகளுக்கு வாட்சாப் குழுக்கள் அமைத்து பெரும்பாலான பள்ளிகள் கல்வியை தொடர்ந்தனர். அரசு அதனை மறைமுகமாக பாராட்டினாலும் வெளிப்படையாக செயல்படுத்த எந்த ஆணையையும் வழங்க வில்லை. ஏனெனில் ஐம்பது விழுக்காடு பெற்றோரிடம் ஆண்டிராய்டு மொபைல் கிடையாது. கல்வியில் சமச்சீர் தன்மை கெடும்.

எந்தக் குழந்தைகளுக்கு அரசு கல்வி வழங்க வேண்டியது அவசியமோ அந்த குழந்தைகளின் கற்றல் தான் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு கூடுதலாக ஏதேனும் ஒரு வடிவில் கற்பித்தலை நிகழ்த்த வேண்டியது அரசின் தலையாயக் கடமை. எனவே நிச்சயமாக இது அவசியம் தான்.

புதியக் கல்விக் கொள்கையோடு இதனை ஏன் முடிச்சு போடுகிறார்கள்?

    புதியக் கல்விக் கொள்கையில் மாணவர்களின் அடிப்படைக் கல்வி செயல்பாடுகளில் ஏற்படும் இடைவெளியை சரிசெய்ய Peer Tutoring என்கிற வடிவில் குழந்தைகளே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை ஊக்குவிக்கலாம். (சிறு சிறு குழுக்களை அமைத்து மாணவர்கள் தங்களுக்குள் இணைந்து கற்கும் முறையை நான் 2004 லேயே அமுல் படுத்தி விட்டேனாக்கும். உள்ளபடியே அது சிறப்பான உத்தி) மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள படித்த தன்னார்வலர்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கலாம். என்று கூறியுள்ளார்கள்.

அந்தந்த பகுதியில் உள்ள படித்த தன்னார்வலர்கள் என்கிற வார்த்தைகள் இரண்டிலும் பொதுவாக வந்துள்ள காரணத்தினால் இந்த சலசலப்பு ஏற்படுகிறது.

நாம் இந்த தன்னார்வலர்கள் என்கிற வார்தையை புதிய கல்விக் கொள்கை தன்னார்வலர்களோடு ஒப்பிடுவதை விடுத்து அறிவொளி இயக்கத்தை வெற்றிகரமான இயக்கமாக மாற்றிய தொண்டர்ளோடு ஒப்பிட்டு பாருங்களேன்.

தன்னார்வலர்கள் தங்கள் விரும்பும் அரசியலையோ அல்லது மதம் சார்ந்த விஷயங்களையோ பரப்பி பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைத்து விடுவார்களோ என்று கி.வீரமணி அவர்கள் கூட அச்சம் தெரிவித்துள்ளாரே?

தன்னார்வலர்கள் அனைவரும் அந்தந்த பகுதி இளையோர் தான். இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளின் “அக்கா, அண்ணா, அத்தை, மாமா” தான் தன்னார்வலராக இயங்கப் போகிறார்கள்.

அவர்கள் போதிக்க வேண்டிய விஷயங்களும் உத்திகளும் அரசு அவர்களுக்கு பயிற்சிகள் வாயிலாக வழங்க உள்ளது. மேலும் அவர்களது வகுப்புகளை கண்டு நெறிபடுத்த ஆசிரியர்கள் குழுவுக்கு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளன.

இதற்கு செலவுப் பண்ணுற பணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கலாம் அல்லவா?

பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் ஆசிரியர்கள் நியமனம் என்பதெல்லாம் வழக்கமாக பள்ளிக் கல்வித் துறை கண்காணித்து செயல்படுத்தி வருகிறது.

மேலும் பள்ளிக் கல்விக்கு வெளியே கூடுதலாக ஏதாவது வழங்குவதற்கான முயற்சிதானே இது?

ஆசிரியர்களிடம் ஏதேனும் ஐயம் கேட்க முனையும் குழந்தைகள் மற்ற குழந்தைகள் கேளி செய்வார்களோ என்று எண்ணியோ அல்லது கூச்ச சுபாவத்தால் தயங்கியோ கேட்காமலே விட்டுவிடுவார்கள். ஆனால் தங்களது அண்ணன்மார்களிடமும் அக்காமார்களிடமும் எந்த கூச்சமும் இன்றி நட்புறவோடு வாஞ்சையாக கற்றுக் கொள்வார்கள் இல்லையா?

ஆனா இந்த புதிய கல்விக் கொள்கை….

ஆமாம், NISHTHA என்கிற பெயரில் கொரானாவுக்கு முந்தைய ஆண்டில் தமிழகம் முழுவதும் நடத்தப் பட்ட பயிற்சியின் நோக்கம் தெரியுமா? அது முழுக்க முழுக்க புதிய கல்விக் கொள்கையின் ஷரத்துகளுக்கு ஆதரவான மனநிலையை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துவதற்கான மறைமுக ஏற்பாடே.

மாநில கருத்தாளராக நான் பயிற்சியில் கலந்து கொண்டபோது இதனை உணர்ந்தேன். அப்போதெல்லாம் இவ்வளவு தொலைவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

இதனால் தன்னார்வலர்களுக்கு என்ன பயன்?

தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் அரசு வழங்க உள்ளது. அதோடு மட்டுமின்றி அவர்களுக்கு இது நிச்சயம் ஒரு பயனுள்ள பொழுது போக்கு.

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை புரியவைக்கும் போது ஏற்படும் திருப்தி மகத்தானது.

தற்போது போட்டித் தேர்வு எழுதும் பல இளைஞர்கள் என்னிடம் தொலைபேசியில் ஆறு முதல் பத்து வகுப்புக்கான புத்தகங்கள் கிடைக்குமா என்று வினவுவார்கள். ஏனெனில் போட்டித் தேர்வு வினாக்கள் அந்த பாடத்திட்டத்தையொட்டியே வருகிறது. ஒரு விஷயத்தை படிப்பதை விட படித்து மற்றொருவருக்கு நடத்திவிட்டோமானால் அது மறக்கவே மறக்காது. நிச்சயமாக அது அவர்களின் போட்டித் தேர்வு தயாரிப்புக்கு கை கொடுக்கும்.

மேலும் இந்த ஆண்டிராய்டு யுகம் இளைஞர்களின் ஓய்வு நேரத்தை எவ்வளவு சீரழிக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம் தான். இந்த மாதிரியான திட்டங்களில் தன்னார்வலராக இணையும் போது அந்த நேரம் அவர்களுக்கு அந்தப் பகுதி குழந்தைகளுக்கு பொன்னான நேரமாகிவிடும்.

ஆனால் அனுபவமற்ற இந்த இளைஞர்களிடம் குழந்தைகளை எப்படி ஒப்படைப்பது?

எங்க ஊரில் நான் பத்தாம் வகுப்பு டியுசன் படித்தது டிப்ளமோ படித்த சீமான் என்ற ஆசிரியரிடம் தான். எனது ஆங்கிலப் புலமைக்கு அடித்தளம் இட்டதே அவர்தான். நான் பனிரெண்டாம் வகுப்பிலேயே கதையை தெரிந்து கொண்டு சொந்தமாக Essay எழுத டிப்ளமோ படித்த அந்த ஆசிரியர்தான் காரணம்.

எங்கள் ஊரில் மற்றொரு ஆசிரியரும் கணித டியுசன் எடுத்தார். அவர் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர் தான். அவரிடம் டியுசன் படித்த பசங்களை கணக்கில் புலி என்று ஆக்கி விடுவார்.

கற்றுக் கொடுப்பதற்கு படிப்போ அனுபவமோ தேவையில்லை. ஆர்வமும் மனப்பான்மையும் இருந்தால் போதுமானது.

அறிவொளி இயக்கம் எப்படி  எழுதப் படிக்க தெரிந்தவர்களை எல்லாம் சிறப்பான ஆசிரியராக செயல்படச் செய்து வெற்றி பெற்றதோ அப்படி இந்த இல்லம் தேடிக் கல்வி இயக்கமும் பெரிய அளவில் வெற்றி பெற்றால் பள்ளிகளில் எழுதப் படிக்கத் தெரியாத மெல்லக் கற்போர் எண்ணிக்கை மெல்லக் குறைந்து மறைந்தோடிப் போகும்.

குழந்தைகளுக்கு நிச்சயமாக பயன்தரக் கூடிய திட்டம் என்று உணர்வதால் தான் ஒரு அரசுப் பள்ளி தலைமையாசிரியராக இதனை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

குழந்தைகளின் பாதுகாப்பு….

நிச்சயமாக குழந்தைகளின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருபது குழந்தைகளை பொதுவான இடத்திலோ அல்லது கிடைக்கும் இடத்திலோ தான் வைத்து சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். குழந்தைகள் அனைவரும் நிச்சயமாக ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு உறவினர்தான் எனவே அவர்களின் பாதுகாப்பில் தன்னார்வலர்கள் கூடுதல் அக்கரையாகவே இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு:

1.   தங்கள் அக்கா அண்ணன்களிடம் கற்றுக் கொள்ள அமரும்போது அச்சமோ கூச்சமோ இருக்காது.

2.   இந்த மாலை நேர வகுப்புகளை காணும் போது இடை நின்ற குழந்தைகளுக்கும் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டு பள்ளி திரும்ப ஏதுவாகும்.

3.   சில குழந்தைகள் இந்த கொரோனா காலத்தில் வேலைக்கு சென்று கொண்டுள்ளார்கள். ( என்னதான் சட்ட திட்டங்கள் இருந்தாலும் இது நடந்து கொண்டுதான் உள்ளது) அவர்களையும் இது மீண்டும் உள்ளே கொண்டு வரும்.

4.   இதுவரையில் பாடம் சார்ந்த விஷயங்களில் சந்தேகம் என்றாலோ ஏதேனும் அறிவியல் கண்காட்சி போன்ற வெளி செயல்பாடுகளுக்கோ ஆசிரியர்களது வழிகாட்டல் மட்டுமே என்றிருந்த நிலை மாறி குழந்தைகள் தன்னார்வலர் ஆசிரியர்களை தொந்தரவு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

5.   குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்ய இனி கூடுதல் வழிகாட்டிகள் உள்ளனர்.

 

தன்னார்வலர்களுக்கு:

1.   இது நிச்சயமாக ஒரு பயனுள்ள பொழுது போக்கு.

2.   போட்டித் தேர்வுகளுக்கு ஆறு முதல் எட்டு வகுப்பு பாடங்களை தனியாக படிக்க வேண்டியது இல்லை

3.   குழந்தைகளுக்கு வழிகாட்டியாக செயல்படவும் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு செயலை செய்யவும் நல்லதொரு வாய்ப்பு

4.   பயனற்ற முறையில் காலத்தை வீணாக்காமல் இளைஞர்கள் நெறிபட இது ஒரு வாய்ப்பு.

5.   குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் நாம் முதலில் திருந்த வேண்டும் என்கிற குற்ற உணர்வில் கெட்ட பழக்க வழக்கங்கள் வீதிச் சண்டைகள் போன்றவைகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுவது குறையும்.

துஇல்லம் தேடிக் கல்வியை மனதார வரவேற்போம், செயலாக்கத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவோம். சுட்டிக் காட்டுவதை எல்லாம் சரிசெய்து கொள்ளும் அரசு தான் இது என்பதை கண்கூடாக காண்கிறோம் இல்லையா?

து

Sunday, July 11, 2021

நீட் தேர்வு முட்டுகளை பிரித்து மேய்வோமா?!!

 நீட் தேர்வுக்கு முட்டு கொடுக்கும் வாட்சாப் பகிர்வுகள் நம்பத் தகுந்தவைகளா?


டி.பெரியசாமி பிராக்கெட்ல ஐஐடி சென்னை னு முன்னாடியும் பின்னாடியும் தலைப்பிட்டு ”நீட் தேர்வு மட்டும் இல்லன்னா தகுதி தரம் என்ன ஆவது?” என்கிற ரீதியில் ஒரு லென்த்தி வாட்சாப் செய்தி ஒன்று உலாவருகிறது. 


அந்த பெரியசாமி ஐஐடி ல பட்டப் படிப்பு படிக்கல. படிப்பெல்லாம் முடித்து பி.எச்டி தான் செய்துள்ளார். அதாவது ஐஐடிக்கான நுழைவுத்தேர்வில் தேர்வாகாத காரணத்தால் ஐஐடி யில் கால் பதிக்க இயலவில்லை. பி.எச்டி ஐ பொறுத்தவரை திறமையானவர்களை எங்கிருந்தாலும் ஆய்வு மாணவராக சேர்த்துக் கொள்வது பெரும்பாலான புரபசர்களின் வழக்கம்.


 அந்த பெரியசாமிதான் இதை எழுதியவரா இல்லை பெரியசாமியின் போர்வையில் பார்த்தசாரதி எழுதினாரா என்கிற சந்தேகமும் எனக்கு உள்ளது. மொத்தத்தில் ”ஐஐடி ல படிச்சவன் அறிவாளி அதனால் அவன் சொல்வது சரியாக இருக்கும்” என்கிற கலரை இந்த வாட்சாப் செய்திக்கு வழங்க முயன்றுள்ளனர் என்பது தெளிவு. 


சரி அவர் கூறியுள்ள விஷயத்திற்கு வருவோம். முதல் பாய்ண்ட்டாக கல்வித்துறைக்கு ஒதுக்கப் படும் நிதியின் அளவு அவரது கண்களை உறுத்துகிறது. இவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்டு யாரையும் டாக்டர் ஆக்கல என்று அரசுப் பள்ளிகளைப் பார்த்து பொங்க முயல்கிறார்.


 இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே இவ்வளது சமூகநீதி சார்ந்த நலத்திட்டங்கள் நிறைவேற்றப் படும் கல்வித்துறை எங்காவது உண்டா. அனைத்து தரப்பு பிள்ளைகளும் எந்த செலவும் இன்றி பள்ளிப் படிப்பை முடிக்க வழிவகை செய்துள்ளோமே. அத்தோடல்லாமல் மிதிவண்டி லேப்டாப் என மாணவர்கள் தங்கள் வசதி படிப்புக்கு தடையாக என்றும் அமையாது என்கிற ஊக்கத்தை கொடுத்துள்ளோம். 


ஐஐடி கண்ணாடியை கழட்டிவிட்டு ஏழைகளை கொஞ்சம் பாருங்கள்.


பத்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து 213 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி சென்றுள்ளார்கள் என்று சொல்லி உங்களுக்கு கொடுத்த சம்பளம் தண்டம் என்று சொல்ல வருகிறார். 


ஐஐடி மேதாவிகளுக்கு சில நுணுக்கமான விஷயங்கள் தெரியாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எண்ணுவார்கள். 


பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில் மாவட்டத்திற்கு 30 பட்டியலின மாணவர்களையும் 30 பிற்பட்ட வகுப்பு மாணவர்களையும் அரசு செலவில் அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் திட்டம் இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. 


எனது இரண்டு மாணவர்கள் இந்த திட்டத்தில் படித்து இன்று மருத்துவர்களாக உள்ளனர். அவர்களது எண்ணிக்கை தனியார் பள்ளி கணக்கில் தான் வரும். இது நான் அறிந்த எனது மாணவன். அறியாதோர் நிறைய உண்டு. 


அப்புறம் சில பெற்றோர் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டால் கடன் வாங்கியாவது மேல்நிலைக் கல்வியை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். அவர்களிலும் மருத்துவர்கள் உருவாவது உண்டு. அரசு பள்ளி தனியார் பள்ளி ஒப்பீடு என்கிற இந்த செயலால் மாவட்டத்திற்கு 60 மீத்திற மாணவர்களை அரசே எங்களிடம் இருந்து எடுத்து தனியாரில் போட்டுவிடுகிறது. பிறகு பெற்றோரும் கூட. அதையும் மீறி இந்த 213 பேர் என்பது எங்களுக்கு சாதனை எண்ணிக்கையே.


அப்புறம் இந்த NCERT,CBSE  என்கிற சிலபஸ் வெங்காயங்கள். பாடத்திட்ட வடிவமைப்பு என்பது மாணவர்கள் எளிமையாக சிரமம் இன்றி விரும்பி படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேல்நிலைப் பாடங்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கொள்ள தேவையான அடிப்படைக் கருத்துகளை மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. 


இன்று உள்ள மேல்நிலை சிலபஸ் (2017-2018 ல் மாற்றியது) நீட்டுக்காக மாற்றப் பட்டுள்ளது. சென்ற ஆண்டு நீட் தேர்வின் போது தமிழக சிலபஸ் நீட் தேர்வை கவர் செய்து விட்டது கால்வாய் வெட்டி விட்டது என்று பீத்திக் கொண்டனர். ஆனால் இந்த சிலபஸ் ஏராளமான ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி அறிவியல் புலத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டது என்பது தான் உண்மை. பதினோறாம் வகுப்போடு வெளியே சென்று ஐடிஐ க்கும் பாலி டெக்னிக் கல்லூரிகளுக்கும் துரத்தியடித்துள்ளது. வேண்டுமானால் ஆர்டிஐ போட்டு கேட்டுப் பாருங்கள்.


 3000 பேர் வயிற்று வலிக்காக ஐந்து லட்சம் பேருக்கும் மருந்து கொடுக்க முயல்வது முட்டாள்தனம்.


அப்புறம் பதினோறாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை என்று ஒரு பாய்ண்ட்டை போட்டு சேம்சைட் கோலுக்கு வழிவகுத்துள்ளார். பழைய முறையால் பதினோறாம் வகுப்பு கெட்டது என்றால் இந்த நுழைவுத் தேர்வு முறையால் பதினொன்று பனிரெண்டு இரண்டுமே கெட்டது. பள்ளிகளில் டோக்கன் போட்டுவிட்டு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் பட்டரையை போடும் வழக்கம் தொடங்கியாச்சு. 


ஏற்கனவே இது ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் செய்து கொண்டிருப்பது தான். ஆக, ஒன்பதாம் வகுப்பு முதலே தனது பிள்ளைகளை டாக்டராக்க விரும்பும் பெற்றோர் ஆகாஷ் பைஜூஸ் சைத்தன்யா என்று ஓட வேண்டும். மேல்நிலை பாடப்புத்தகங்கள் பரணில் தூங்கும். 


அனிதாவின் மரணத்திற்கு தனி பத்தியே ஒதுக்கியுள்ளார். சென்ற ஆண்டு வரை 1150 க்கு மேல் வாங்கி டாக்டர் முடிந்தது ஆனால் நான் வரும் போது அது முடியாது போனது. உச்ச நீதி மன்ற கதவுகளைத் தட்டியும் எந்த தீர்வும் இல்லை. 


ஒரு பதின்பருவ குழந்தையை அலைக்கழித்தது இந்த நீட் என்கிற புதிய முறைதானே. சரி இது அனிதாவோடு முற்று பெற்றதா. சென்ற ஆண்டு கூட ரிப்பீட்டர்ஸ் ஆக பயிற்சி எடுத்த மாணவி பதட்டத்தில் தன்னை மாய்த்துக் கொண்டது தெரியவில்லையா. 


ப்ளஸ் டூ படிச்சோமா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தோமா என்று இருந்தவர்களை நீட் என்கிற தடையை ஏற்படுத்தியதோடு இல்லாமல் ரிப்பீட்டர்ஸ் என்று தங்களை விட அதிக ஆண்டுகள் பயிற்சி எடுத்தவர்களோடு புதியவர்களையும் போட்டி போடச் செய்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. 


அடுத்ததாக இடஒதுக்கீடு புள்ளி விவரத்தை கொடுத்து பாத்தீங்களா செல்லத்துக்கு (இடஒதுக்கீட்டுக்கு) ஒன்னுமே ஆகல என்கிறார். ஏம்பா ஏற்கனவே பிஜி நீட்டில் பத்து சத அரிய வகை ஏழைகளுக்கு லட்டும் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு அல்வாவும் கொடுத்துவிட்டார்களே. அது யுஜிக்கும் வராது என்று உத்திரவாதம் தருவீரா மிஸ்டர் பெரியசாமி எம்பிசி. இந்த இடத்தில் அவரே தனது சாதியையும் சொல்லி இருக்கிறார். (நீங்க அரிய வகை ஏழை இல்லை என்பதை பெயரை பார்த்த உடனே கண்டு கொண்டோமே)


தமிழகத்தின் GER Ratio அதிகமாக இருப்பதை கிண்டலடித்துள்ளார். ஜஸ்ட் பாஸ் பண்ணி காலேஜ் போய் அங்கே அரியர் வைக்கிறார்கள். இதில் வடமாநில ஒப்பீடு வேறு. பள்ளிக் கல்வி டூ கல்லூரிக் கல்வி செல்லும் போது போதனா மொழி, Spoon Feeding to Self Eating என்று ஆயிரம் பஞ்சாயத்து இருக்கு. அரியர் வைத்தாலும் படித்து முடித்து வேலைக்கு சென்று கொண்டு தானே உள்ளனர். 


இறுதியாக ஒன்று, ஏற்கனவே பையன் வர்ரான், ப்ளஸ் ஒன் டூ படிக்கிறான். மார்க் வாங்குறான் அவன்பாட்டுக்கு டாக்டர் ஆயிடுறான். இப்போ பாருங்க, பையன் வர்ரான், பளஸ் ஒன் டூ படிக்கிறான், நீட் கோச்சிங் ஒன்று இரண்டு மூன்று ஆண்டுகள் என்று லட்சக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் போறான், அப்புறம் அரை கிழவனாவதற்குள்ளாக ஒரு வழியாக டாக்டர் ஆகிடுறான். 


பாருங்க அந்த முறைக்கும் இந்த முறைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்த. அங்க ஸ்கூல் ஃபீஸ் மட்டும் கட்டுறான். இங்க பாருங்க, எத்தன லட்சம் செலவு பண்றான். இந்திய பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி புழங்குது. (இந்த மாதிரி நடுத்தர மக்கள் பாக்கெட்ல பணத்தை ஆட்டய போட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதாக சீன் போடுவது பாஜக வுக்கு புதுசா என்ன?)


பழைய முறையால் ஏதாவது பெரிய கேடு விளைந்தால் புதிய சேர்க்கை முறைக்கு மாறலாம். நீட் எழுதாத மருத்துவர்கள் தானே கொரானா காலத்தில் மக்களின் இன்னுயிரைக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐஐடி பெரியசாமி சொன்னாலும் சரி  எய்ம்ஸ் ஏகாம்பரம் சொன்னாலும் சரி, கோச்சிங் சென்டர்களின் கல்லா நிறைந்ததை விட வேறு எந்த கேசமும் நீட்டால் ஏற்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூறி முடிக்கிறேன்


(இந்த எசப்பதிவுக்கான மூலப்பதிவுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்)


https://m.facebook.com/story.php?story_fbid=10218176695682718&id=1648805816


மு.ஜெயராஜ்

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப்பள்ளி,

நாகமங்கலம்.

Saturday, June 12, 2021

எனக்குரிய இடம் எங்கே

 

புத்தகம் – எனக்குரிய இடம் எங்கே? (வகுப்பறை உறவுகளும் உரையாடல்களும்)


ஆசிரியர் – ச.மாடசாமி

பதிப்பகம்- பாரதி புத்தகாலயம்

“பூக்களின் மீது புயல் வீசுவது போல” இந்த உதாரணம் 1999 ல் பி.எட் படித்தபோது நான் படித்த ஒன்று. எதைப் பற்றி தெரியுமா? லெக்சர் மெத்தட் ல் பாடம் நடத்துவது பற்றிய ஒன்றுதான் அது.


ஏட்டில் எத்தனை எத்தனை வழிமுறைகளை படித்திருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த லெக்சர் மெத்தடில் தான் பாடம் நடத்துகிறோம்.  பூக்கள் மீது வீசும் புயல் சூராவளியாக மாறுகிறதே ஒழிய அது ஒருபோதும் கரையை கடப்பதாக தெரியவில்லை. எந்த முன்தயாரிப்பும் திட்டமிடலும் இன்றி பெரிதாக மெனக்கெடாமல் வண்டியை ஓட்டலாம். சிலபஸ் என்கிற பிறவிப் பெருங்கடலை மோட்டார் படகில் கடக்க உதவும் வழிமுறை அல்லவா?


சிலபஸ், தேர்வுகள், பொதுத்தேர்வுகள், மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விழுக்காடுகள் இந்த விஷயங்கள் யாவும் தரும் அழுத்தம் மகத்தானது. ஆமாம் என்னதான் பல புதுமைகளை ஆசிரியர்கள் மனதில் உருவேற்றிக் கொண்டு சென்றாலும் இந்த விஷயங்கள் யாவும் அவ்வாசிரியரை மாற்றத்தை நோக்கி முதலடி வைப்பதையே தடுத்தாட்கொண்டு விடுகின்றன.


தோழர் ச.மாடசாமி அவர்களின் “எனது சிவப்பு பால்பாய்ண்ட் பேனா” என்கிற அற்புதமான நூல் கற்பித்தல் குறித்த எனது பார்வையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்திய நூலாகும். இந்த நூலை ஒரு பயிற்சி வகுப்பில் இறையன்பு அவர்கள் பரிந்துரை செய்தார்.


தோழர் மாடசாமி அவர்களின் நூல்கள் யாவும் ஜனநாயக வகுப்பறையை வலியுறுத்துபவை. வகுப்பறையில் ஆசிரியரின் சர்வாதிகார போக்கு இருத்தலாகாது. அங்கே மாணவர்களுக்கும் இடம் உண்டு. அவர்களையும் பேச, கேள்வி கேட்க வைக்கவேண்டும் என்கிறார். தோழரின் நூல்களில் நான் வாசித்தவற்றில் இது ஏழாவது நூல். 


அய்யப்பராஜ் என்கிற விரிவுரையாளரை முன்னிருத்தி நாவல் வடிவில் எழுதப்பட்ட சுவாரசியமான ஜனநாயக வகுப்பறை குறித்த நூல் தான் இது. இதில் வரும் அய்யப்பராஜ் தோழராகத்தான் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு எழாமல் இல்லை.


முதல் அத்தியாயத்தில் அய்யப்பராஜ் ஒரு சாதாரண ஆசிரியர். ஆதிமூலம் அடங்காத மாணவன். வெளியே போ என்றதற்கு ஒப்புக்கு கூட காத்திருக்காமல் விருட்டென்று வெளியேறியவன்.


“எத்தனை திறமை இருந்தால் என்ன? ஒரு முன்கோபம் போதும் வகுப்பறையின் முகத்தில் கீறலை உண்டுபண்ண” எவ்வளவு அருமையான உண்மை.


வெங்கடேசன் என்கிற ஆசிரியர் ஓய்வு பெறுகிறார். அவருக்கான பிரிவு உபச்சார விழா நடக்கிறது. சந்திரன் என்கிற பேராசியரியர் பேச எழுகிறார். வழக்கமான வாழ்த்துரையில் இருந்து விலகிய பேச்சு.


“வெற்றி, தோல்வி, மனஸ்தாபம்,நட்பு, எழுச்சி,வீழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு ஜீவனுள்ள சந்திப்பு வகுப்பறை“ என்கிறார்.


கற்பவரும் கற்றுத்தருபவரும் ஒரு சேர வளரும் இடம். ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாதிரியே பத்தாம் வகுப்பில் ஒரு மாணவன் வெளியேறுவது எவ்வளவு மோசமானதோ அதைவிட மோசமானது பணிக்குச் சேர்ந்த அன்று போலவே பணிநிறைவு வரை ஒரே மாதிரி பணியாற்றும் ஆசிரியர்கள்.


ஆனால் ஆசிரியர்கள் எப்போதுமே, “இது என்ன சாதாரண வாய்ப்பா? உருவாக்குவது என்றால் சாதாரண காரியமா? பணிகளில் உயர்ந்த பணி அது. படைப்புக்கு இணையான பணி” என்கிற பெருமித த்தோடும் உற்சாகத்தோடும் ஆண்டுதோறும் தங்களது அறிவையும் வழிமுறைகளையும் மேம்படுத்திக் கொண்டே வளரவேண்டும்.


சந்திரனின் பேச்சைக் கேட்ட அய்யப்பராஜ் தனது வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் செய்து வகுப்பறையில் மாணவர்களுக்கும் இடம் தருகிறார். கேள்வி கேட்க, பேச, பாட, விமர்சிக்க, ஆய்வு செய்ய என்று பல வாய்ப்புகளை வழங்குகிறார். அவரது வகுப்புகள் உற்சாகமான ஒன்றாக மாறுகிறது. மாணவர்கள் அவரது வகுப்புக்கு ஏங்கும் நிலை வருகிறது. ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைகிறது. வகுப்பறை சுவர்களைத் தாண்டி அவரது வெளி விரிவடைகிறது. ஆதிமூலம் அவரது செல்லப்பிள்ளை ஆகிறான்.

 

சுதந்திர வகுப்பறையில் தானே, “திணிப்பதல்ல கல்வி, வசப்படுத்துவது அல்ல கல்வி, பங்கேற்க வைப்பது கல்வி, உருவாக்குவது கல்வி” என்பதெல்லாம் சாத்தியம்.


வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களின் முகங்களையும் உற்று நோக்கி கண்டறியும் வண்ணம் “ஆயிரம் கண்ணுடையாள்” ஆக ஆசிரியர் இருக்க வேண்டும். 


பொதுத்தேர்வு என்கிற பூதம் காக்கும் தேர்ச்சி விகிதம் என்கிற புதையல் இருக்கும் வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்புகளிலாவது ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை செய்து பார்க்கலாம் அல்லவா? அனைத்து குழந்தைகளையும் பங்கேற்பாளராக மாற்றுவல்ல யுத்திகளை சிந்திக்க வேண்டும். திட்டமிட வேண்டும். ஒவ்வொரு மாணவனின் முகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்தும் வித்தைகளை கற்று அறிந்து செயல்படுத்தி வகுப்பறையை மகிழ்ச்சிக்குறிய இடமாக மாற்ற முயலவேண்டும்.


இதுமாதிரி எல்லாம் யாரு சார் செய்யுறாங்க? என்று கேட்டால் என்னிடமே நிறைய உதாரணங்கள் உண்டு. விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவரும் சக.முத்துக்கண்ணன் என்கிற அறிவியல் ஆசிரியர் தண்ணீர் பற்றிய பாடம் நடத்திய விதத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். அவ்வளவு சிறப்பாக இருந்தது. முயன்றால் எல்லோருக்கும் சாத்தியம் தான். வகுப்பறையை தனது படைப்புக்கான களமாக கருதியதால் தான் அவரால் “சிலேட்டுக்குச்சி” என்கிற அனுபவ கட்டுரை நூலை எழுத முடிந்தது. 


நூலின் இரண்டாம் பாகத்தில் “மாணவர்களிடம் கற்போம்” என்கிற பகுதி உள்ளது. அதில் திலீப் நாராயணன் என்கிற முன்னால் மாணவன் தோழரின் பத்திரிக்கை கட்டுரைக்கு எழுதிய கடிதம் ஒன்றை நமது பார்வைக்கு வைத்துள்ளார். வகுப்பறையின் வலிமையை உணர அந்த கடிதம் ஒன்று போதும். எனது மாணவன் முருகானந்தம் எனது கண்முன்னால் வந்து போனான்.


கல்வியியல் கல்லூரிகளில் கல்வி உளவியல், எஜுகேஷன் டெக்னாலஜி, கற்பித்தலில் புதுமைகள் என்று அரைத்த மாவையே போட்டு அரைத்து அறுத்தெடுக்காமல் இந்த மாதிரி நூலையும் வையுங்கள். அல்லது பாடத்துக்கு வெளியேயான வாசிப்பு என்கிற அளவில் வாசித்து மதிப்புரை எழுதச் செய்யுங்கள். மாதம் ஒரு முறையாவது கல்வி மீது உண்மையான அக்கரை உள்ளவர்களை அழைத்து எதிர்கால ஆசிரியர்கள் மத்தியில் பேச வையுங்கள். 


குறைந்தபட்சம், “வகுப்புக்கே வராமல் நேராக தேர்வறைக்குச் செல்ல நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?” என்கிற டீலிங் இல்லாமலாவது கல்வியியல் கல்லூரிகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.


ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள கற்பித்தல் சார்ந்த பல அருமையான நூல்கள் உள்ளன. அவற்றில் தோழர் ச.மாடசாமி அவர்களின் நூல்களும் ஏராளம் உண்டு. நிறைய வாசிப்போம், கற்றல் கற்பித்தலை சுவாரசியமான ஒன்றாக மாற்றுவோம். தன்னம்பிக்கை மிளிரும் ஆளுமைகளாக குழந்தைகளை உருவாக்குவோம்.

Thursday, April 8, 2021

சிந்திய வெண்பனி வேளையும் சிந்தாமணியின் அதிகாலையும்!!

 



     பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை செய்தித்தாளில் பார்த்த அதே பரபரப்பும் குறுகுறுப்பும் நமக்கான தேர்தல் பணி எந்த ஊரில் என்று தெரிந்து கொள்வதிலும் இருக்கும். அதிலும் ரிசர்வ் டூட்டி என்றால் கும்மாளம் தான். சிலருக்கு மெயின் ரோட்டில் இருக்கும் ஊர்களில் இருக்கும், சிலருக்கு டவுன் பள்ளிகளில் இருக்கும் வேறு பலருக்கு குக்கிராமங்களில் உள்ள ஈராசிரியர் பள்ளிகளில் இருக்கும் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டுக் கட்டிடத்தில் கிடைக்கும். எங்கே கிடைத்தாலும் சென்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய ஏற்பாடுகளை விதிமுறைகளை கறாராக கடைபிடித்து செய்ய வேண்டும்.

     சிந்தாமணி என்கிற முக்கிய சாலையோர கிராமத்தில் எனக்கான பணி வழங்கப் பட்டிருந்தது. நான் பலநூறு முறை பயணம் செய்த சாலை அது என்பதால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மதியம் 2.00 மணியளவில் எனக்கு பணி வழங்கப் பட்ட பள்ளிக்கு சென்றால் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம், புத்தம் புதிய கட்டிடத்தில் மாணவர்கள் கூட அமராத நிலையில் நாங்கள் தான் முதன்முதலாக சென்று அமர்ந்தோம். வழ வழ டைல்ஸ், ஜிலு ஜிலு ஃபேன் என்று அருமையாக இருந்தது.

     சரி கழிவறை வசதி எப்படி இருக்கிறது என்று சாம்பிள் பார்த்து விடுவோம் என்று சிறுநீர் கழிக்க சென்றேன். நேராக சற்று புதிய வண்ணம் பூசிய அறைக்குள் நுழைந்தேன். கழிவறைக் கதவை ஒரு பத்து செமீ திறந்தால் கதவு எங்கேயோ சிக்கியது. எனக்குள் இருந்த இஞ்சினியர் மூளையை பிராண்டி யோசித்தேன். அப்போது தான் கதவின் மேல் நுனி மேற்கூரையான இரும்பு ஷீட்டை உரசியபடி சிக்கித் தவித்தது. வேலை முடிந்த காரணத்தினால் இஞ்சினியரை உள்ளே அனுப்பி விட்டு பாகுபலியை வெளியே கொணர்ந்து ஆனமட்டும் முக்கி மேற்கூரையை உயர்த்தி கதவை சற்று விரித்து திறந்தேன். அங்கே நான் கண்ட கழிவறையின் கோலத்தை விளக்கமாக சொன்னால் ஒரு வாரத்திற்கு உங்களுக்கு சோறு தொண்டைக்குழிக்குள் இறங்காது. ”அடப்பாவிகளா இதற்காகத்தான் மேற்கூரையை கீழே தட்டி கதவையே கைது செய்து வைத்திருந்தீர்களா?” என்று அவர்களின் ராசதந்திரத்தை வியந்தபடி வலது புறம் திறந்து இருந்த இரண்டு அறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். நான்கில் இரண்டு திறந்தும் மற்ற இரண்டு பூட்டியும் கிடந்ததன. பூட்டிக் கிடந்ததற்கு காரணத்தை நான் கூறவும் வேண்டுமோ?

     “திறந்திடு சீசே“ என்று மந்திரம் சொல்லாமல் திறந்தவுடன் அந்த அறையின் ”நறு”மணம் என்னை திக்குமுக்காடச் செய்தது. சரி என்று பிராணயாமம் செய்தவண்ணம் ஒரு வாளி தண்ணீரை சுற்றிலும் ஊற்றி நாற்றத்தை குறைக்க எண்ணினேன். “சூரியனை நீர் ஊற்றி அணைக்க இயலுமா” என்ற படி நான் ஊற்றிய தண்ணீர் அப்படியே குழியை நிறைத்து நின்றது. ஏற்கனவே பிடித்த பிராணயாமம் மூச்சு முட்டியது. அப்புறம் ஒரு வழியாக முழுதாக மூன்று நிமிடங்களில் மொத்த நீரும் இறங்கியது. அத்தோடு என்னுடைய “மைக்ரோ இர்ரிகேஷனை“யும் (எச்.ராஜாவிடம் மீனிங் கேட்டுக் கொள்க) சங்கமித்துவிட்டு பின்னங்கால் பிடறியில் பட வெளியே ஓடிவந்தேன்.

     நல்வாய்ப்பாக பெண் ஆசிரியர்களை பக்கத்து வீட்டினர் அழைத்து நல்ல படுக்கை வசதி செய்து கொடுத்ததோடு அவர்கள் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை உபயோகித்துக் கொள்ள அனுமதித்தனர். அப்போ எங்க கதி? இரவு பத்து மணிக்கு ஒரு பிராணயாமம் அப்புறம் அதிகாலை ஒரு பிராணயாமம். மைக்ரோ இர்ரிகேஷனுக்காகவெல்லாம் கழிவறையை திறக்க மனம் துணியவில்லை. திறந்தவெளி புல்வெளிக்கழகம் தான். அதிகாலை நான்கு மணிக்கு குளியல் என்பதால் டேங்க் அருகில் ஒரு பக்கெட் வைத்து குளித்துக் கொண்டேன்.

     கழிவறை விஷயம் மட்டும் தான் மோசம். மற்றபடி பூத் லெவல் ஆபீசராக இருந்த வில்லேஜ் அசிஸ்டெண்ட் மற்றும் பிரசிடெண்ட் இவர்களின் ஏற்பாட்டில் சரியான நேரங்களில் சுவையான உணவுகள் வழங்கப் பட்டன. மொத்த வாக்காளர்களே ஐநூறு சொச்சம் தான் என்பதால் வாக்குப் பதிவு எந்த குழப்பமும் இன்றி சென்றது. எனவே வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிட்ட படி பணியாற்றினோம். சில ஊர்களில் கன்ட்ரோல் யூனிட்டை சீல் செய்த அடுத்த நிமிடம் 17 சி படிவத்தை நிரப்பி பெற்றுக் கொண்டு அனைவரும் சிட்டாக பறந்து விடுவார்கள். கடைகளும் கூட பெரும்பாலும் இருக்காது. பட்டினியோடு விடியற்காலை வரும் சோனல் ஆபீசருக்காக காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை எல்லாம் ஏற்பட்டதுண்டு. ஆனால் சிந்தாமணியில் இரவு உணவாக இரண்டு சப்பாத்திகள் மற்றும் நான்கு இட்டிலிகள் என்று சிறப்பாக பார்சல் கொண்டு வந்தார்கள். உபசரிப்புக்கு நன்றி கூறி விடை கொடுத்தோம்.

     நான் மேலே சொன்னது போலவே சோனல் ஆபீசர்கள் எங்க பூத்துக்கு வந்த நேரம் நள்ளிரவைத் தாண்டி 3.00 மணி. ஒரு வழியாக பொட்டியை ஒப்படைத்து பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டோம்.

     தேர்தல் பணிக்கு செல்லும் போதெல்லாம் நான் அரசியல் சார்ந்து மறந்தும் பேசுவதில்லை. அந்த வழியாக செல்லும் யாரேனும் நமது அரசியல் நிலைப்பாடு பற்றி அறிந்து கொண்டால் நமது பணிமீதான நம்பகத்தன்மையை சந்தேகிப்பார்கள் என்பது ஒரு காரணம். இந்த முறை தெருவில் நின்று பேசும் போது சீமான் குறித்து நகைச்சுவையாக பேசிவிட்டு பிறகு நாக்கை கடித்துக் கொண்டேன். தம்பிகள் யாரேனும் “காத்திரு பகையே“ என்று வீட்டிற்கு சென்று ஆயுதத்தோடு வந்துவிட்டால் எங்க கதி அதோ கதிதான். ஆனா பாருங்க எங்க மையத்தில் முக்கிய இரண்டு எதிரெதிர் கட்சிகளுக்கு மட்டுமே ஏஜெண்ட் இருந்தனர்.

     மற்றொரு சம்பவம், சோனலுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்த போது ஒரு ஒன்பது மணிவாக்கில் எங்க மைய ஏஜென்ட் வந்து “சாப்பிட்டு விட்டீர்களா?“ என்று பரிவோடு கேட்டார். “சாப்பிட்டேன் சார்” என்று கூறினேன். ”தண்ணி வேணுமா சார்?“ என்று நமுட்டு சிரிப்பு சிரித்தார். ”அதான் ரெண்டு கேன் வாங்கி குடுத்துருக்காங்க சார் இன்னும் பத்து லிட்டருக்கு மேல இருக்கும்” என்றேன். சிரித்தபடி சென்று விட்டார். அவர் சென்ற பிறகு ஒரு ஐம்பது அடி ஆழத்திற்கு சென்று யோசனை செய்த போது தான் அவரது கேள்வியில் பொதிந்திருந்த உண்மை வௌங்கியது.

 ”அடச்சே, அதுக்குத்தான் நான் சரிபட்டு வரமாட்டேனே!!”

 

 

Wednesday, February 17, 2021

அணு அற்புதம்-அதிசயம்-அபாயம்

 

புத்தகம் – அணு  அற்புதம்-அதிசயம்-அபாயம்

ஆசிரியர் – என்.ராமதுரை

பதிப்பகம்- கிழக்கு பதிப்பகம் (கிண்டில் அன்லிமிட்டடிலும் கிடைக்கிறது)


இந்த நூலின் ஆசிரியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார். இவரது எழுத்து எனக்கு ஒரு இருபது ஆண்டுகாலமாக பரிச்சயம். ஆமாம், கொல்லி மலையில் உள்ள ஹில்டேல் பள்ளியில் 2000-2001 ம் ஆண்டில் ஒரு ஆறு மாதங்கள் மட்டும் ஆசிரியராக இருந்தேன். அப்போது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நூலகப் புத்தகங்கள் அடங்கிய ஒரு பீரோவை குடைந்தேன். அள்ள அள்ள ஏகப்பட்ட அருமையான புத்தகங்கள். அதில் தினமணிக் கதிரில் வந்த அப்பல்லோ -13 மிஷன் பற்றிய தொடர் கட்டுரை கத்தரித்து தைக்கப் பட்ட தொகுப்பு ஒன்று கையில் சிக்கியது. கையில் எடுத்தவுடன் என்னை “கப்“ என்று பிடித்துக் கொண்டது. முடிக்காமல் வைக்க இயலவில்லை. அவ்வளவு விறுவிறுப்பான அறிவியல் கட்டுரைத் தொகுப்பு. அறிவியல் கட்டுரை ஆசிரியரின் எழுத்து அப்போதுதான் எனக்கு அறிமுகம்.

அதன் பிறகு அவ்வப்போது தினமணி நடுப்பக்க கட்டுரையில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இணையம் பரவலான பிறகு www.ariviyal.in (இப்போதும் இந்த தளம் காணக்கிடைக்கிறது சென்று பாருங்கள்) என்கிற வலைப்பூவைத் தொடங்கி தொடர்ந்து எழுதி வந்தார். அறிவியல் சார்ந்த விஷயங்களை அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் எழுதுவது அவரது பாணி. அதிலும் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆழம் வரை சென்று அலசி ஆராய்ந்து அனைவருக்கும் விளங்கும் வண்ணம் சுவாரசியமாக எழுதி இருப்பார். அதுபோல வலைப்பூவில் கமெண்ட் பகுதியில் கேள்விகள் கேட்போருக்கு பொறுமையாக தெளிவாக தேவைப்பட்டால் விரிவாக பதில் அளிப்பார்.

இந்த நூலை கிண்டிலில் நான் தரவிரக்கம் செய்து வாசிக்க இனிமேலும் ஏதேனும் காரணம் வேண்டுமா என்ன?

லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லப்படும் அணுகுண்டு திடீரென நழுவி கீழே விழுந்துவிட்டால் பட்டென்று வெடித்து நகரையே நாசம் செய்து விடுமோ? என்கிற சந்தேகம் நான் மாணவனாக இருந்த போது அடிக்கடி எழும். அதுவும் பொக்ரான் சோதனையின் போது இந்த வினா என்னுள் அடிக்கடி எழுந்தது. ஆசிரியரும் தனது கட்டுரையை இங்கே தான் தொடங்குகிறார்.

அப்படியெல்லாம் வெடித்துவிடாது என்பது தான் நெசம். ஆமாம், கிரிட்டிக்கல் மாஸ் (நிலைமாறு நிறை) என்னும் நிறை வரும் வரை கம்முன்னு இருக்கும் யுரேனியம் அந்த நிறை வந்தவுடன் தன்னாலே கட்டுப்படுத்தப்படாத தொடர்வினையை தொடங்கி வெடித்துச் சிதறிவிடும். ஆமாம், ஐந்து கிலோ நிலைமாறு நிறை என வைத்துக் கொண்டால் அணுகுண்டில் 2 கிலோ தனியே 3 கிலோ தனியே என்று பிரித்து வைத்திருப்பார்கள். சாதாரண வெடிகுண்டு மூலமாக வெடிக்க வைத்து பிரிந்து இருக்கும் இரண்டும் மூன்றும் ஒன்று கூடி ஐந்தாக மாற வழிவகுப்பார்கள். அப்புறம் என்ன அணுகுண்டு வெடித்து எல்லாவற்றையும் துவம்சம் செய்யத் துவங்கிவிடும்.

அதனால் தான் அணுஉலைகளில் (அணு மின்சாரம் தயாரிக்க பயன்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுண்டு) யுரேனிய எரிபொருள் சிறு சிறு பெல்லட்களாக நீண்ட குழாய்களில் வைத்து அவை வட்ட வடிவ தாங்கிகளில் சொருகி வைக்கப் பட்டிருக்கும். செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம், அணுஉலைகளில் எரிபொருள் நிரப்பும் வேலை தொடங்கியது என்று. அது கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும் வேலை.

அணுகுண்டில் ஆரம்பித்து சுவாரசியம் காட்டிவிட்டு அடுத்த அத்தியாயத்திலேயே அதன் அடிப்படை மற்றும் காலக்கிரமப்படியான அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் என்று அலச ஆரம்பிக்கிறார். கதிரியக்கத்தை (ரேடியேஷனை) வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிக்கப் பட்ட போது கதிரியக்கத்தின் ஆபத்து குறித்த தெளிவான அறிவு விஞ்ஞானிகளுக்கு கூட இல்லை. ஆமாம், ரேடியம் இருளில் ஒளிர்வதைப் பார்த்து, அதனை ஒளிர்வதற்கு ஏதுவாக வீட்டின் படுக்கை அறை வரையில் கொண்டு சென்று வைத்திருந்திருக்கிறார்கள்.

ரேடியம் கலந்த நீரில் குளித்தால் மருத்துவ குணம் என்றெல்லாம் பீலா விட்டு கள்ளா கட்டியுள்ளனர் அந்த காலத்தில். படுக்கை அறையில் கட்டிலுக்கு அலங்காரமாக மேலே தொங்க விட்ட கூத்தெல்லாம் அரங்கேறியுள்ளது.

மூன்றாவது அத்தியாயத்தில் அணுவின் அடிப்படைகளை அலசி ஆராய்கிறார். நியுட்ரான் என்பது ஒரு புரோட்டானும் ஒரு எலக்ட்ரானும் கலந்த ஒரு துகள் என்பதும் ஒரு நியுட்ரானை பிதுக்கினால் ஒரு புரோட்டானும் எலக்ட்ரானும் வெளியே வரும் என்கிற உண்மையையே நான் சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.

கதிரியக்கத் தனிம அணுக்கள் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வெளியிடுவதன் மூலமாக அவை வேறு தனிம அணுக்களாக உரு மாறுகின்றன என்கிற உண்மையை கண்டறிந்தவர்கள் ரூதர்ஃபோர்டு மற்றும் ஃபிரெடெரிக் சோடி ஆவர். ஆனால் இந்த உண்மையை அவர்கள் கூறிய போது அவர்களை பெரிய விஞ்ஞானிகளே கூட கழுவி கழுவி ஊற்றியுள்ளனர். கடைசியில் அவர்கள்  கூறியது தான் உண்மை என்றானது.

செயற்கை முறையில் ஆல்ஃபா கதிர்கள் கொண்டோ அல்லது நியுட்ரான் கொண்டோ தாக்குவதன் மூலமாக எந்த ஒரு தனிமத்தின் ஐசோட்டோப்பையும் (ஒத்த புரோட்டான் எலக்ட்ரான் எண்ணிக்கை ஆனால் வேறுபட்ட நியுட்ரான் எண்ணிக்கை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோட்டோப்புகள் ஆகும்) செயற்கையாக உருவாக்க இயலும் என்று மேரிக்கியுரியின் மகளான ஐரின் கியுரி தனது கணவருடன் இணைந்து ரூதர்ஃபோர்டின் வழிகாட்டலின் கீழ் கண்டறிந்தார். (ரூதர்ஃபோர்டின் சீடகோடிகளில் 11 போர் நோபல் பரிசு பெற்றவர்கள் என்றால் அவர் எவ்வளவு அருமையான வழிகாட்டியாக இருந்திருப்பார் என்று பாருங்கள்)

அடுத்ததாகத்தான் என்ரிகோ ஃபெர்மி, லிசே மைட்னர் மற்றும் ஆட்டோஹான் முதலியவர்கள் நியுட்ரான்களைக் கொண்டு அணுப்பிளவை சாத்தியமாக்கினர். 5 கிலோ யுரேனியத்தை இரண்டாக பிளந்தால் இரண்டு வேறு வேறு தனிமங்களாகின்றன. ஆனால் அவையிரண்டின் கூட்டு எடை 4.8 கிலோ என்று இருக்கும். மீதமுள்ள 200 கிராம் (இந்த அளவுகள் உதாரணம் தான்) ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாடான E=Mc2 வழி ஆற்றலாக மாறி விடுகிறது என்பது தான் அணுப் பிளவில் வெளிப்படும் ஆற்றலின் தத்துவம்.

அப்புறம் அமெரிக்கா மான்ஹாட்டன் புராஜக்ட் என்கிற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் ரகசிய திட்டத்தை துவங்கியது. ஜெர்மனி விஞ்ஞானிகள் எவரும் அணுகுண்டை தயாரிப்பதற்கு முன்பாக அமெரிக்கா தயாரித்து உலகத்தை ரட்சிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீனை கடிதம் எழுத வைத்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அவர்களிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த மான்ஹாட்டன் திட்டம் துணை அதிபரான ட்ருமெனுக்கு கூட தெரியாதாம். ரூஸ்வெல்ட் திடீரென மண்டையை போட்டதால் அதிபரான ட்ருமென் அதன் பிறகு தான் அறிந்து கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன் அந்த திட்டத்தில் பணியாற்றிய மேல்மட்ட விஞ்ஞானிகள் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு கூட அவர்களுக்கான பணி பற்றி மட்டுமே தெரியுமாம்.

அணுகுண்டு தயாரிப்பு, ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் அணு உலைகள் என்று பலவற்றையும் புத்தகம் பேசுகிறது. இவர் அணு உலைகள் காலத்தின் கட்டாயம் அவை ஏராளமாக அமைக்கப் படவேண்டும் என்கிற கட்சி. அணு உலை விபத்தை  சாலை விபத்துடன் ஒப்பிட்டு அணு உலைகள் ஆபத்தானவை என்பது வீண் கற்பனை என்று போகிற போக்கில் சொல்கிறார்.

என்ன தான் எனக்கு பிடித்த அறிவியல் எழுத்தாளர் என்றாலும் அவரது அணுஉலை ஆதரவு கருத்தில் நான் முற்றிலும் முரண்படுகிறேன். உலகில் 15 விழுக்காடே பயன்படுத்தப் படும் அணுமின் சக்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

அணுக்கரு இயற்பியல் பாடத்தை கண்டாலே பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளியும் பசங்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ளவற்றை கூறினால் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்பது திண்ணம்.

ஒரு சுவாரசியமான அறிவியல் கட்டுரை தொகுப்பு அனைவரும் வாசியுங்கள்.

Sunday, February 14, 2021

புத்தகம் – நவீன அறிவியலின் எழுச்சி

 



ஆசிரியர் – த.வி.வெங்கடேஸ்வரன்

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

     என்.ராமதுரை அவர்களுக்கு அடுத்ததாக எனது அறிவியல் தாகத்திற்கு பிஸ்லரி வாட்டர் ஊற்றி தாகசாந்தி செய்தது த.வி.வெங்கடேசன் அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் தான் என்றால் அது மிகையில்லை.

     சென்ற ஆண்டு பாரதிபுத்தகாலயத்தில் இருந்து ஒரு நான்காயிரத்து ஐநூறு ரூபாய்க்கான புத்தகத்தை மூவாயிரம் ரூபாய்க்கு தருவித்துத் தந்தார் நண்பர் முத்துக்கண்ணன். அவர் கொடுத்த பட்டியிலில் என்னிடம் இருந்தவை நீங்களான ஏனைய தவிவெ அவர்களின் அனைத்து புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.

     இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உலகில் பல மாற்றங்களை கண்டு வியந்த நூற்றாண்டு. ஏனென்றால் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நியுட்டன் கட்டி வைத்து விட்டுச் சென்ற பாரம்பரிய இயற்பியல் என்னும் எஃகு கோட்டையை செங்கல் செங்கல்லாக பிரித்து மேய்ந்து விட்டனர் சென்ற நூற்றாண்டு விஞ்ஞானிகள்.

     “Nature and Nature’s Laws lay hid in night

     God said, let Newton be! And all was light”

     இதுதான் நியுட்டன் கல்லறையில் பொறிக்கப் பட்டிருக்கும் வாசகம்.

     இயக்கவியல் மற்றும் ஈர்ப்பியல் சார்ந்த பல அறிவியல் பிரிவுகள் நியுட்டன் போட்டுத்தந்த ராஜபாட்டையில் கம்பீரமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது வரை அணு என்பது மேலும் பகுக்க இயலாத சிறிய துகள்தான்.

     1895 ராண்ட்ஜென்ட் எக்ஸ்கதிரை கண்டறிந்த பின்னர் ஏற்பட்ட பற்பல அடுத்தடுத்த ஆய்வுகள் நியுட்டனின் பாரம்பரிய இயற்பியலின் போதாமையை உணரத் தொடங்கின. சிறுவயதில் எனது கையில் சிக்கிய எங்க வீட்டு பிளிப்ஸ் ரேடியோ போல குரூக்ஸ் என்பவர் கண்டறிந்த குடுவை (வெற்றிடக்குழாய் மின்னோட்ட ஆய்வுக்கு பயன்படுத்தப் பட்டது) நம்ம விஞ்ஞானிகள் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டது. அப்படித்தான் நம்ம ராண்ட்ஜென்ட் கையில் சிக்கியது. அவர் மின்னோட்டத்தை நிகழ்த்தியபோது கேத்தோடு கதிர்கள் (இது வேற ஒன்றும் இல்லைப்பா, எலக்ட்ரான் தான். ஆனா அப்போதுதான் எலக்ட்ரான் என்றால் என்னவென்றே தெரியாதே!!) புறப்பட்டு ஆனோடு நோக்கிச் சென்றது. வழக்கமாக எல்லோருக்கும் அந்த ரிசல்ட் தான். ஆனால் ராண்ட்ஜென்ட் கவனித்தது குழாயை தாண்டி ஒன்பது அடி தள்ளி உள்ள சுவற்றில் ஒளிர்தலை ஏற்படுத்தியது. துணி, கறுப்பு காகிதம் அட்டை என எதை வைத்தாலும் ஒளிர்தல் நிற்கவில்லை ”அடப்பாவி மக்கா யாருலே நீ செத்தப்பயலே என்ன வச்சி மறச்சாலும் நிக்கமாட்டேக்கிற பேதில போவான்” என்று திட்டிக் கொண்டே கையைக் கொண்டு போனபோது எலும்புக் கூடாக தெரிந்தது. வாடா என் செல்லக் குட்டி, நீ யார்னே தெரியல இருந்தாலும் உனக்கு எக்ஸ் என்று பெயர் வைக்கிறேன் என்றாராம்.

     “நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்“ என்று கவிஞர் எழுதியது போல எலக்ட்ரான்கள் மோதி வினைபுரிவதால் உருவாவது தான் எக்ஸ் கதிர்கள் என்று பிற்கால விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தாலும் அது கண்டுபிடிக்கப் பட்ட காலகட்டத்தில் எலக்ட்ரான் என்ற ஒன்று கண்டுபிடிக்கப் படவே இல்லை என்பது தான் சோகம். அதுவும் அணுவின் உள்ளே உள்ள துகள் என்று சொன்னால் கட்டையால் அடித்து மண்டையை பிளந்திருப்பார்கள்.

     ஆக, நியுட்டனின் எஃகு கோட்டையில் முதல் செங்கல்லை பிரித்தது நம்ம ராண்ட்ஜெனின் கண்டுபிடிப்பு தான் என்று நான் கூறவில்லை நூலாசிரியர் கூறுகிறார்.

     அணுவைப் பற்றி அறிவியல் சமூகம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத காலகட்டத்திலேயே கதிரியக்கம் கண்டறியப் பட்டு ஆல்ஃபா, பீட்டா மற்றும் காமாக் கதிர்கள் என்கிற மும்மூர்த்திகளின் கீர்த்தியை உலகம் அறிந்து விட்டது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஹென்றி பெக்கொரல் என்று 1992 ல் நான் பத்தாம் வகுப்பு படித்தபோதே அறிந்து கொண்டேன். (இல்லையா பின்ன அது முக்கியமான ஐந்து மார்க் கேள்வியாச்சே!) “இது என்ன சப்போட்டே இல்லாம நிக்குது?!“ என்று வடிவேல் வியந்து நோக்கியது போல லைட் சோர்ஸ் இன்றி தானாகவே மிளிரும் கல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. அந்த கதிர்களை யுரேனியக் கதிர்கள் என்று அழைத்தனர்.

     அதன்பின்பு ரேடியம் குறித்த ஆராய்ச்சியில் குடும்பமே கலந்து கொண்டு ஆய்வு செய்து பல இருட்டில் கிடந்த பல அறிவியல்  உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சியது கியூரி குடும்பம். ஆமாம், பியாரி கியூரியும் மேரிக் கியூரியும் கதிரியக்கத் தனிமங்கள் தொடர்பான பல ஆய்வுகளை செய்து ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நோபல் பரிசு பெற்றதோடு இல்லாமல் மேரிக் கியூரி இயற்பியல் துறை மற்றும வேதியல் துறை இரண்டிலுமே நோபல் பரிசுளை பெற்றுள்ளார். ஒன்று அழிந்து மற்றொன்று உருவாகும். ஆனால் அள்ள அள்ள குறையாமல் வரும் கதிர்வீச்சுகள் எதில் இருந்து வருகின்றன என்கிற மர்ம முடிச்சு மட்டும் அவிழ்க்கப் படாமல் இருந்தது.

     அப்புறம் குரூக்ஸ் குடுவை வழியாக ஆய்வுகள் பல செய்த ஜெ.ஜெ.தாம்சன் ஆய்வுகள் பல செய்து எதிர்மின் சுமை உள்ள எலக்ட்ரான்கள் லட்டின் உள்ளே ஆங்காங்கு முந்திரிகள் பொதிந்துள்ளது போல அணுவின் உள்ளே உள்ளன என்று முடிவு செய்தார். அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள் என்பது வரை சரிதான் ஆனால் அது முந்திரி பருப்பு போல அல்ல என்ற படி “மே ஐ கம் இன்?” என்றார்கள் அடுத்தடுத்து வந்த விஞ்ஞானிகள்.

     அடுத்து வந்த மாக்ஸ் பிளாங்க் என்பவர் ஒரு அஸ்திவாரம் தோண்டி “குவாண்டம்“ என்கிற கல்லை நட்டு வைத்தார். ஒளி அலைகள் எனர்ஜி பொட்டலங்களாகத்தான் பரவுகின்றன என்கிற கருதுகோளை முன்வைத்தார். ”என்னய்யாது ஏதோ விபூதி பொட்டலம் மாதிரி சொல்ற?”என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1928 ல் அவரை நோபல் பரிசால் அங்கீகரித்தது அறிவியல் உலகம்.

     அணுவின் மையத்தில் உட்கரு உள்ளது என்பதை கண்டறிந்து உலகிற்கு சொல்ல ரூதர்ஃபோர்டு ஆல்ஃபா கதிர்களோடு வந்தார். அவரின் ஆய்வில் தான் கால்பந்து மைதானம் அளவில் இருக்கும் அணுவில் கால்பந்து தான் அணுக்கரு என்றால் அதன் எல்லையில் கிடக்கும் ஒரு நெல்லிக்காய் தான் எலக்ட்ரான் என்கிற அளவில் அணுவைப் பற்றி ஒரு பிம்பம் உருவானது. ஆமாம் அணுவில் 99.99 சதவீதம் வெற்றிடம் தான் இருக்கு.

     மேற்கூறிய எல்லா கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு புதிய அணுக்கொள்கையை வகுத்து அளித்தவர்தான் நீல்ஸ்ஃபோர். இவர் ஜெ.ஜெ.தாம்சனின் சீடகோடி.

     அடுத்து என்ரிகோ ஃபெர்மி, ஓட்டாஹான் மற்றும் லைஸ் மிட்டனர் ஆகியோர் நியுட்ரான் கொண்டு அணுக்கருவைத் தாக்கும் போது அணுவில் உருவாகும் மாற்றம் குறித்து ஆய்வுகள் செய்தனர். ஒத்த மின்சுமை உள்ள துகள்கள் ஒன்றையொன்று விலக்கும், ஆனால் அணுவின் உட்கருவில் எப்படி இந்த நேர்மின்சுமை உடைய புரோட்டான்கள் சமர்த்துப் பிள்ளைகளாக ஒற்றுமையாக நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்து உள்ளன?  அங்கே தான் புரோட்டான்களின் விலக்கு விசையும் அணுக்கருவின் பிணைப்பு விசையும் சமரசம் செய்து கொள்கின்றன. இந்த சமநிலையை உடைக்கும் போது அணுவை பிளக்கலாம் என்று கண்டறிகின்றனர்.

     அந்த பிளவில் இருவேறு தனிமங்கள் உண்டாகின்றன, மேலும் நிறை குறைவு ஆற்றலாக மாறுகிறது என்பதை E=Mc2 என்கிற ஐன்ஸ்டீன் சமன்பாடு காட்டிக் கொடுக்கிறது. மேலும் இது அமெரிக்காவின் ராணுவ வலிமையை கூட்டியும் கொடுத்தது என்பதெல்லாம் உலகறிந்த உண்மை.

     ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை ஒளிமின்விளைவு (சூரிய ஒளிக்கதிர்கள் ஒரு தகட்டில் விழும் போது அதில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியாகின்றன – என்று கண்டறிந்து சோலார் பேனல் உருவாக காரணமானார்) பற்றிய ஆய்வு அணுக்கரு இயற்பியலைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அப்புறம் “நிறை” மற்றும் “ஆற்றல்“ இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் நிறை ஆற்றலாக மாறும் என்று கூறி உலகிற்கு ஒரு சமன்பாட்டை வழங்கினார். அப்புறம் குவாண்டம் இயற்பியல் மற்றும் அவரது மாஸ்டர் பீஸ் ஆய்வான “சார்பியல் தத்துவம்“ ஆகியவற்றை உலகிற்கு வழங்கியிருந்தாலும் அவருக்கு நோபல் பரிசை பெற்றுக் கொடுத்தது ஒளிமின்விளைவு ஆய்வு தான். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி என்றால் அவர் ஐன்ஸ்டீன்தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா?

     “சார் ஏதோ புத்தகம் பற்றி எழுத வந்துட்டு இப்படி…..?”

     “நான்  மேலே கூறிய எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டது இந்த புத்தகத்தை படித்து தான்பா!!“

      பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மீது தீராக் காதலை ஏற்படுத்த வல்ல ஒரு புத்தகம் இது. அனைவரும வாங்கிப் படியுங்கள். வெறும் 112 பக்கங்கள் தான்.

 

 

 

Thursday, January 28, 2021

தி கிரேட் இண்டியன் கிச்சன் மலையாளப் படம் குறித்த எனது பார்வை

 தி கிரேட் இண்டியன் கிச்சன்

வாட்சாப்பில் வலம் வருகிற பிரபலமான மீம்ஸ் களில் ஒன்று, மிக்சியை போட்டு குண்டான பெண்ணையும், அம்மியை போட்டு ஒல்லியான பெண்ணையும் படமாக போட்டிருப்பார்கள். பழமையை கைவிட்டதால் இப்படி ஆகிவிட்டார்களாம். நீங்க


ள் இந்த மீம்ஸ் ஐ வரிந்து கட்டிக் கொண்டு ஷேர் செய்தவர் எனில் “கைய கொடுங்க சார்” உங்களுக்குள்ளும் ஒரு கலாச்சார காவலர் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டுள்ளார்.

இந்த கலாச்சார காவலர் அவதாரம் எடுக்கும் ஆட்கள் எல்லோரும் பெண்களுக்குத்தான் நிறைய பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தந்தவண்ணம் உள்ளனர். இதுவே ஒரு சைக்கிளை போட்டு ஒல்லியான ஆணையும் பைக்கையோ அல்லது காரையோ போட்டு குண்டான ஆணையும்  வரைந்து பாரம்பரியத்தை காக்க அறைகூவல் விடுப்பார்களா?

துப்பட்டா போடுங்க தோழி என்று துப்புக்கெட்டு அலையும் கூட்டம் என்றைக்காவது சிக்ஸ் பேக் வைத்திருப்பவன் கூட கமுக்கமாக அடக்கி வாசிக்கும் போது ஃபேமிலி பேக்கைத் தள்ளிக்கொண்டு நிற்கும் குருக்களிடம் போய் ’துப்பட்டா வேண்டாம் துண்டையாவது போட்டு கலாச்சாரத்தை காப்பாத்துங்க தோழர்’ என்று கூறியது உண்டா?

சோ, நம்ம கலாச்சார கவலை எல்லாம் நைசாக எல்லா வேலைகளையும் பெண்களிடம் தள்ளிவிட்டு ஹாயாக குந்திக்கொண்டு சொகுசு காண்பதற்கு மட்டும் தான் என்பது தான் உண்மை. அவர்களைக் கட்டுப் படுத்துவதற்கென்றே ஆகம விதிகளில் ஆகப்பெரிய பட்டியலே உண்டு. அதையெல்லாம் காட்டிவிட வேண்டியதுதான். இது அனைத்து மத அடிப்படை வாதங்களுக்கும் பொருந்தும். (நீங்க இந்துக்களை மட்டும் தான் குறை சொல்வீங்களா என்று கமெண்ட வேண்டாம்.) நான் அறிந்தவரை அனைத்து மத அடிப்படை வாதங்களும் பாலின சமத்துவத்திற்கு எதிரானவையே.

காலை எழுந்தவுடன் தெய்வத்தையோ அல்லது கொழுநனையோ தொழுது (ஆமாம், பின்ன வள்ளுவர் கூட “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்றல்லவா கூறியுள்ளார்) ”சம்பவம்” நடந்திருந்தால் குளித்து முழுகி கோலம் போட்டு, கோமாதா இருந்தால் பால் கறந்து தேனீர் போட்டுக் கொண்டு வந்து வீட்டினரை எழுப்பி விட வேண்டும். (பாரதிதாசன் கூட குடும்ப விளக்கில் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்)

அடுத்ததாக கணவன் அலுவலகம் செல்பவனாக இருந்தால், காலை சிற்றுண்டி மற்றும் மதியப் பேருண்டி இரண்டையும் துரிதகதியில் ரெடிபண்ணி அனுப்ப வேண்டும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக கலாச்சாரத்தை காப்பாற்றி பேர் எடுக்க வேண்டுமானால், கணவனின் அன்றைய உடையை தேர்வு செய்து இஸ்திரி செய்து மாட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு கிச்சனில் இருக்கும் பயன்படுத்திய பாத்திர பண்டங்களை கழுவ வேண்டும். அப்புறம் துணிமணி துவைத்தல், வீடு பெருக்கி துடைத்தல் அப்புறம் நேரம் வாய்த்தால் கொஞ்சம் ஓய்வு அப்படியே மாலை சிற்றுண்டி இரவு பேருண்டி இடையிடையே தேனீர் கொட்டை வடிநீர் இத்தியாதி.

வேலைக்குச் செல்லும் கணவன் வீட்டில் இருக்கும் மனைவி எனில் நிச்சயமாக மேலே இருக்கும் வேலைகளில் எழுபத்தி ஐந்து விழுக்காடு செய்து தான் ஆகவேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைக்கத்தான் மிக்சி, கிரைண்டர் குக்கர் என்று பல சாதனங்கள் வந்துள்ளன. அதற்கும் இந்த பழமை விரும்பிகளான “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல” கோஷ்டி வேட்டு வைக்கிறார்கள். அம்மியில் அரைத்தால் உடற்பயிற்சி மேலும் போனசாக சட்னி சுவையாக வரும், குக்கரில் வேகவைத்தால் சத்துகள் அழிந்து பாழாகின்றன என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நடுத்தர வர்க்க மனைவிமார்கள் கலாச்சாரத்தோடு கணவனையும் காக்க களத்தில் இறங்கி மிக்சியையும் குக்கரையும் பரணில் ஏற்றி விடுகின்றனர்.

இப்போ படத்திற்கு வருவோம். முதல் காட்சியில் கதாநாயகியின் டான்ஸ் கிளாஸை காண்பிக்கிறார்கள். இடையிடையே சுவையான குழி பணியாரம் மற்றும் பல கேரள பட்சணங்கள் தயாராவதை காட்டுகிறார்கள். அடுத்தக் காட்சியில் பெண் பார்க்கும் படலம், அதற்கடுத்து கல்யாணம். அதன் பிறகு நான் மேலே சொன்ன வேலைகள் வரிசைக் கிரமமாக மாமியாரும் மருமகளும் மூச்சு வாங்க வேர்த்து ஓடி ஓடி செய்கின்றனர்.

மாமனார் தொரை கையில் ஒரு ஸ்மார்ட் போனோடு ஈசிச் சேரில் சாய்ந்த வண்ணம் இருக்கிறார். பிரஷில் பேஸ்ட் வைத்து கொண்டு வந்து மனைவி கொடுத்தால் தான் அவர் பல் விளக்க எழுந்து போவார். ’அப்படியே ஒரு மக்கில் தண்ணீர் கொண்டு வந்து பல்லை விளக்கி விட்டு டீயை வாயில் ஊற்றி கொஞ்சம் கூடுதலாக கலாச்சாரத்தை காப்பாற்றினால் என்னவாம்?’ என்பது அவரது மைண்ட் வாய்சாக இருக்கலாம். அடுத்து தொரை வெளியே கிளம்பும் போது செருப்பை அவரது காலருகில் போட வேண்டும்.

இவ்வளவு பெரிய அக்கப் போரில் நாயகியை தனியே சிக்க வைத்துவிட்டு மாமியார் மகள் வீட்டுக்கு சேவகம் செய்ய சென்றுவிடுவாள். (அவளைப் பொறுத்தவரை போர்க்களம் தான் மாறி உள்ளது). நாயகியும் பகல் எல்லாம் ஓடி ஓடி உழைத்து விட்டு இரவில் சோர்ந்து போய் தலை சாய்க்கும் போது கணவனின் ஆசைக்கு உடல் சாய்த்து பிறகு உறங்கி அடுத்தநாள் எழுந்து குளித்து அடுத்த நாள் வேலைகளை கவனிக்க வேண்டும்.

வீட்டில் ஒருத்தருக்கு சாம்பார் மற்றொருவருக்கு சட்னி. மாமனார் தொரைக்கு குக்கர் சாதம் ஆகாதாம், விறகு அடுப்பில் சோறு வடிக்க வேண்டும். மாமனாருக்கு வாஷிங் மெஷினில் துவைத்தால் துணி வெளுத்து போய்விடுமாம். (அடேய் நீ உடுத்துற லங்கோடும் வேட்டியும் ஏற்கனவே சமையலறை கைப்பிடித்துணி போலதானே உள்ளது!!) அப்புறம் சாப்பாட்டு மேசையை கொத்துபரோட்டோ போடும் தோசை கல் போல அலங்கோலம் பண்ணி வைத்து விடுகிறார்கள். இதுவே ஓட்டல் என்றால் ரொம்ப கச்சிதமாக சுத்தமாக சாப்பிடுகிறான் நாயகன். ”ஏம்பா இங்க நல்லா தானே டேபிள் மேனர்ஸ் ஃபாலோ பண்ற வீட்டில் ஏன்?” என்று கேட்டதற்காக கோபித்துக் கொண்டு சாரி கேட்கும் வரை பேச மாட்டேன் என்கிறான்.

இதுவே மாதவிடாய் காலம் என்றால் “அப்பாலே போ சாத்தானே!!” என்று விலக்கி வைத்துவிடுகிறார்கள்.

“நாளைக்கு சபரி மலைக்கு மாலை போடப் போறேன் அதனால…“ என்று முதுகை பிராண்டும் கணவனிடம் ”ஏம்பா நேரடியா ஆட்டத்தில குதிச்சா எனக்கு சரியா வரல கொஞ்சமா விளையாடிட்டு குதிக்கலாம்ல..“ என்ற கேட்டவுடன் “உன் முகரையை பாத்தா அந்த மாதிரி விளையாட தோணல“ என்று மூக்குடைக்கிறான்.

அப்புறம் மாலை போட்டுக் கொண்டு அப்பனும் புள்ளையும் பண்ற அட்ராசிட்டி இருக்கே அடடா!! இதுல வேற நாயகிக்கு மாதவிடாய் காலம் வருகிறது. பார்த்தாலே பரவசம் என்பது போய் பார்த்தாலே பாவம் என்று பதுங்கு குழிக்குள் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் நாயகி வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசையை தெரிவிக்கும் போது, அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிபடாது என்கிறான் கிழவன். “மோளே, உன் மாமியார் எம்.ஏ படிச்சவதான், எம்புட்டு அழகா கலாச்சாரத்த காவ காக்குறா. போ போ கையில கரண்டிய எடுத்துக் கிட்டு கலாச்சாரத்த காப்பாத்து போ” என்று விரட்டிவிடுகிறான்.

“பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரி“ என்று கதாயநாயகி என்ன செய்கிறாள் என்பதை மட்டுமாவது சொல்லாமல் விட்டுவிடுகிறேன். இல்லன்னா “ஸ்பாய்லர் அலர்ட்“ போடவேண்டி வரும்.

நான் பார்த்து வளர்ந்த சூழல் படி, ’படத்தில் சற்று மிகையாக கூறி உள்ளார்களோ?’ என எனக்கு தோன்றியது. இதுவே வேறு சிலருக்கு ’இதுவே குறைவாகத்தான் இருக்கு, பாருங்க சில இடங்களில் கலாச்சாரம் காப்பாற்றப் படாமல் அம்போன்னு கெடக்கு’ என்று தோன்றி இருக்கலாம்.

தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்வோரும் கூட வீட்டு வேலைகள் விஷயத்தில் “அது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்” என்று சைலண்டாக ஒதுங்கிக் கொள்வதையே பார்த்திருக்கிறேன். “என் மனைவி தங்கமானவ, எனக்கு ஒரு வேலையும் வைக்க மாட்டா!!“ என்று பாராட்டி வேலை வாங்கும் யுத்தியை சிலர் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி பெருமையாக கூறுவார்கள்.  “எங்க வீட்ல எங்க சாருக்கு ஒரு வேலையும் வைக்க மாட்டேன்“ என்று கூறும் பரிதாப ஜீவன்களும் உண்டு.

அதுவும் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் மேலே படத்தில் சொன்னமாதிரி ஒரு கணவன் இருந்தால் அந்தப் பெண்ணின் நிலமை எப்படி இருக்கும் பாருங்கள்.

சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை மனைவியுடன் பகிர்ந்து செய்வது தனது “ஆண்மை“க்கு இழுக்கு என எண்ணும் போக்கு சிலரிடம் உள்ளது. ஆண்பிள்ளைகளைப் பொறுத்தவரை அவன் வளரும் சுற்றுச் சூழலில் எந்தமாதிரி ஆண்களைப் பார்த்து வளர்கிறானோ அப்படியே தன்னை குடும்பத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முனைவான்.

பெண்பிள்ளைகளைப் பொறுத்தவரையில் “கண்ணான கண்ணே“ என்றெல்லாம் ”ஆனந்த யாழை” மீட்டி விட்டு ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடன் திடுதிப்பென்று “இந்தாம்மா பிடி, இதுதான் கலாச்சாரம் இத நீ தான் கண்ணுங்கருத்துமா காப்பாத்தணும்” என்று ஒரு துப்பட்டாவை ஒப்படைத்து விடுகின்றனர்.

இவ்வளவு பேசுறியே நீ எப்படி? நானெல்லாம் வெண்ணீர் வைக்க கூட தெரியாத வெள்ளந்தி பையனா இருந்து கல்யாணத்திற்கு பிறகு பிரியாணியையே பிரிச்சி மேயும் தரமான “தாமு“வாக அவதாரம் எடுத்துள்ளேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று வயதாக இருக்கும் போது எனது மகன் அருணிடம் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போய் வாஷ்பேசினில் போடச் சொன்னதற்கு “நான் என்ன பொம்பளையா?” என்று கோபத்தோடு சீறினான்.

அந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து வேலைகளையும் பாலின பாகுபாடு இன்றி எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம் நாங்கள் ”மூவரும்”

Friday, January 22, 2021

புத்தகம் – பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

 

புத்தகம் – பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

ஆசிரியர் – சாந்தகுமாரி சிவகடாட்சம்

வகைமை – பயணக்கட்டுரை


     இந்தவாரம் நூலகத்திற்கு சென்றபோது ஒரு சிறுகதை தொகுப்பு எடுத்துக் கொண்டு அடுத்ததாக கட்டுரைகள் ஏரியாவிற்குள் குடைய ஆரம்பித்தேன். அப்போது கையில் சிக்கியது தான் இந்த பயணக்கட்டுரை நூல். இருப்பதிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணச் செலவு ஆகக்கூடியது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலாதான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் அப்படியே இவங்க பின்னாலேயே போய் சுவிட்சர்லாந்தை சுற்றிப் பார்த்து பல லட்சங்களை மிச்சம் புடிச்சிடலாம் என்ற எண்ணத்தில் இந்த நூலையும் எடுத்துக் கொண்டேன்.

     பிரபல இதயநோய் நிபுணரான சிவகடாட்சம் அவர்களின் மனைவிதான் இந்த பயணக்கட்டுரை எழுதிய “சாந்தகுமாரி சிவகடாட்சம்“ அவர்கள். இந்தப் பயணக்கட்டுரை குமுதம் சினேகிதி இதழில் தொடராக வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரைகளைத்தான் தொகுத்து புத்தகமாக போட்டிருக்கிறார்.

     உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்று. மிகவும் பசுமையான அமைதியான ஐரோப்பிய நாடுதான் சுவிஸ் என்கிற சுவிட்சர்லாந்து. பால் பண்ணைத் தொழில், பால் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்கள் யாவும் தயாராகும் நாடு, சாக்லேட்டுகளுக்கு பேர் போன நாடு ம்ம்.. அப்புறம் அழகழகான வாட்சுகளை செய்து உலகெங்கும் விற்பனை செய்யும் நாடு. அப்புறம் இதைச் சொல்லவில்லை என்றால் வாசிக்கும் நீங்கள் கூட கோபித்துக் கொள்ளக் கூடும். ஆமாம், சுவிஸ் வங்கிகளும் உலகப் பிரபலம் தான். நமது நாட்டு பெரும்பணக்காரர்கள் தங்கள் பணத்தை பதுக்கி வைத்து அடைகாக்கும் வங்கிகள் சுவிஸ் வங்கிகள் தானே? சரி பயணக் கட்டுரைக்கு வருவோம்.

     இந்தியாவில் இமயமலை, கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் என்று இருக்கிறது. வட அமெரிக்க கண்டத்தில் ராக்கி மலைத்தொடர் இருப்பதாக ஒன்பதாம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்திருக்கிறேன். ஐரோப்பாவில் இருக்கும் மலைத்தொடர் தான் இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர். இந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர் தன்னகத்தே இருக்கும் மொத்த அழகையும் இறக்கி வைத்து இளைப்பாரும் நாடுதான் இந்த சுவிட்சர்லாந்து. 13000 அடி உயரத்திற்கு மேலான சிகரங்களே இங்கே 48 இருக்கின்றனவாம். இவையன்றி நீர் வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் என ஏராளமான இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த நாடு. அந்த நாட்டில் நமது பயணத்திற்கான “பாஸ்“ நாட்களுக்கு ஏற்றவாறு வாங்கி வைத்துக் கொண்டு ரயில், பேருந்து மற்றும் படகு என எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாமாம்.

     பனிமலையினூடாக கண்ணாடி ரயிலில் பயணம் குறித்து அவ்வளவு அழகாக எழுதி இருந்தார். நாம் பார்த்து ரசிப்பதற்கென்றே கண்ணாடிகள் மிகவும் பெரிதாக அதாவது நமது ஊர் ரயிலில் இருப்பதை போல மூன்று மடங்கு பெரிதாக வைத்திருப்பார்களாம்.

     சுவிஸ்நாட்டு சாக்லேட்டுகள் பற்றி அவ்வளவு பிரமாதமாக எழுதி இருக்கிறார். அந்தப் பகுதிகளை எல்லாம் வாயிலிருந்து எச்சில் புத்தகத்தில் ஒழுகிவிடாதவாறு சற்று லாவகமாகத்தான் கடந்தேன். அப்புறம் இந்த நெஸ்லே நிறுவனத்தின் சாக்லேட் ஃபேக்டரிக்குள் “சிற்றுலா“ அனுமதி உண்டாம். டிக்கெட் வாங்கிக் கொண்டு மொத்த ஃபேக்டரியையும் சுற்றிப் பார்க்கலாம். அங்கே இருக்கும் சாக்லேட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாமாம். (ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்களே!!) ஆனால் ஒன்று கூட வெளியே எடுத்துவர அனுமதி கிடையாதாம். என்னை எல்லாம் விட்டால் இரண்டு நாட்கள் வயிறை காயப் போட்டுக் கொண்டு உள்ளே சென்று ஒரு வெட்டு வெட்டி விடுவேனாக்கும்.

     மேட்டர்ஹார்ன் என்ற மலைச் சுற்றுலாப் பகுதிதான் உலகிலேயே அதிகமாக புகைப் படம் எடுக்கப் பட்ட பகுதியாம். அங்கே இருக்கும் ஜெர்மாட் நகரின் முக்கிய வருமானமே டூரிசம் தானாம்.

     மலை உச்சியில் கூட அழகான வாட்சுகளை விற்கும் கடை இருந்துள்ளது. ஒமேகா நிறுவனத்தின் CONSTELLATION BEGUTTE என்கிற மாடல் வாட்சின் விலையை கூறி உள்ளார். அதைப் படித்துவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் மயக்கம் போட்டுவிட்டுத்தான் மேற்கொண்டு வாசித்தேன். ஆமாம், வாட்சின் விலை மூணேகால் கோடி ரூபாயாம்.

     பல ஆண்டுகாலமாக பாறை மேல் மோதிய படி கொட்டும் அருவி என்ன செய்யும்? பாறையை குடைந்து குகையை உருவாக்கும். அப்படி ஒரு அருவியால் அமைந்த குகையினுள் லிஃப்ட் வைத்து அருவியின் வெவ்வேறு உயரங்களை வெளியே சென்று தரிசிக்க வாய்ப்பினை ஏற்படுத்தி வைத்துள்ளார்களாம். இயற்கையின் அற்புதங்களை அழகாக கடைவிரித்து வருமானத்தை வாரி சுருட்டுகிறார்கள்.

     சுவிஸ் நாட்டில் மற்றொரு விஷயம் பிரபலம். கேட்டால் வினோதமாக தோன்றக் கூடும். ஆமாம், அங்கே விதவிதமான பேனாக் கத்திகள் அழகழகாக தயார் செய்து விற்கிறார்கள். ஒரே பேனாக் கத்தி கொத்திற்குள் அவ்வளவு கருவிகளை வைத்துள்ளார்கள். ஹேன்ஸ் மெஸ்டர் என்பவர் ஒரே பேனாக்கத்திக்குள் 314 பிளேடுகளை வைத்து தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

     அடுத்து சுவிஸ் நாட்டின் மிக முக்கியமான அழகான ரம்மியமான நகரமான லூசர்ன் பற்றி எழுதியுள்ளார். கவிப் பேரரசு வைரமுத்துவை நூலாசிரியர் பேட்டி கண்டபோது அவர் தனக்கு மிகப் பிடித்த நகரம் என்று குறிப்பிட்ட நகரம் இந்த லூசர்ன் தானாம்.

     ஒரு பாலம் கட்டி அதன் உச்சியை கூரை வேய்ந்து எங்காவது மூடுவார்களா? ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி ஒரு பாலம் கட்டி கூரை வேய்ந்துள்ளார்கள். சேப்பல் பாலம் என்ற பாலம் 16 ம் நூற்றாண்டில் லூசர்ன் நகரில் ரைஸ் நதி மீது கட்டப் பட்டுள்ளது.

     இந்தியாவின் பிரபலமான புல்லாங்குழல் இசைக் கருவி போல சுவிட்சர்லாந்தில் மாடு மேய்ப்பவர்கள் தகவல் பரிமாற்றத்திற்கென பயன்படுத்திய ஒரு கருவி தற்போது இசைக் கருவியாக பயன்படுத்தப் படுகிறது. பெயர் அல்போர்ன். நீநீ…ளமான அடியில் வளைந்து விரியும் நாதஸ்வரம் போன்ற அமைப்பிலான கருவி. மரத்தை குடைந்து ஓட்டையாக்கி தயாரித்து இருப்பார்களாம்.

     அப்புறம் இறுதியாக மற்றொரு விஷயம், இந்த குக்கூ கடிகாரம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மணிக்கொருமுறை பறவை வெளியே வந்து குக்கூ என கூவி மணி அறிவிக்கும். (ஹைதராபாத்தில் சாலர்ஜங் மியுசியத்தில் இது போல ஒன்று உண்டு. அங்கே ஒருத்தன் சுத்தியல் எடுத்து வந்து மணியடித்து விட்டுச் செல்வான்) சுவிஸ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகிப் போய்விட்டதாம் இந்த குக்கூ கடிகாரம்.

     நான் கூறியுள்ளவை “டிப் ஆஃப் ஏன் ஐஸ்பெர்க்“ தான். இன்னும் ஏராளமான இடங்களைப் பற்றி மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். சுவாரசியமான நடையில் காட்சிகளை தெளிவுற விளக்கியுள்ளார். அவரது எழுத்தின் வழியாக சுவிஸ் நாட்டை செலவின்றி தரிசனம் செய்ய முடிகிறது.

     அழகிய வண்ணப் புகைப் படங்களை இடையிடையே இணைத்துள்ளார். மிகத் தரமாகவும் நேர்த்தியாகவும் புத்தகத்தை தயார் செய்துள்ளார். அட்டைப் பட கிராஃபிக்சும் தலைப்பின் எழுத்து வடிவமும் ஏதோ பேய்க் கதைக்கானது போல வடிவமைக்கப் பட்டுள்ளது மட்டும் தான் பொருத்தமின்றி எனக்கு உறுத்தலாக இருந்தது

 

பதிப்பகம் – சாந்த சிவா பப்ளிகேஷன்ஸ் (சொந்த பதிப்பகம்)

விலை – 350

பக்கங்கள் -242

 

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...