Thursday, May 30, 2024
அந்த அரபிக் கடலோரம் - 4
அந்த அரபிக் கடலோரம் -4
ஆலப்புழாவில் ஒரு குட்டி டைட்டானிக்
”ஏங்க நேத்து வந்த கார் ரொம்ப சின்னது, எட்டு பேருக்கு பத்தவே இல்லை”
“நாளைக்கு கப்பல் மாதிரி பெரிய வண்டி எடுத்துடலாம் விடு”
கேப் அனுப்பிய டிராவல்ஸ் காரரிடம் சொன்னபோது, “ஓ, அதுதான் நேற்று வந்த டிரைவர் வரமாட்டேன் என்கிறாரா?, சரிங்க சார் இன்றைக்கு இன்னோவா வரச் சொல்றேன் ஜாலியா போய்ட்டு வாங்க“ என்று மலையாள வாடை கமழும் தமிழில் கூறினார்.
“அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது” என்று ஒரு கவிதை உண்டு. அந்த கோவணம் களவாடப் பட்ட கதையை கடைசியில் சொல்கிறேன்.
எர்ணாகுளத்தில் இருந்து ஆலப்புழா அறுபது கிமீ க்கு அப்பால் இருந்தது. ரயில் பயணம் பற்றி எல்லாம் அரியலூரில் திட்டமிடும் போதே யோசித்த மாத்திரத்தில் நிராகரித்து விட்டேன்.
அந்த மார்க்கத்தில் நிறைய ரயில் வண்டிகள் ஓடினாலும் காலை எட்டு மணிக்கு பிறகு பதினோறு மணிக்குத்தான் இருந்தது. அகிலாவின் பஞ்ச்சுவாலிட்டி பற்றி அகிலமே அறியும் என்பதால் ரயில் பயணத்திட்டம் யோசித்த மாத்திரத்தில் ஈவிரக்கம் இன்றி கைவிடப் பட்டது.
நாங்கள் அனைவரும் கிளம்பிய பிறகும் அவர்கள் மூவரில் ஒருவர் “மோட்டார் மோகன்“ கணக்காக உறங்கிக் கொண்டு இருந்தார். எனவே இவர்களுக்கு கேப் தான் சரி.
எர்ணாகுளம் சுற்றுவட்டாரத்தில் எவரிடமாவது வெளியாட்கள் ஆலப்புழா என்றால் உடனடியாக முழ நீளத்திற்கு ஒரு கேட்டலாகை எடுத்து போட், ஹவுஸ் போட் என்று கதைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அனைவருமே கமிஷன் நிமித்தம் பல போட் காரர்களுடன் டை அப் வைத்துள்ளார்கள்.
ஒரு வழியாக இழுத்துப் பறித்து அனைவரும் ஒன்பதுக்கெல்லாம் எங்கள் ஆஸ்தான உணவு விடுதிக்கு சென்றுவிட்டோம். எல்லோரும் பூரி தோசை என்று பொளந்து கட்ட நாங்கள் புட்டு கடலைக் கறி என்று “நாம இப்படிக்கா போவோம்“ என்று உண்டோம். சாப்பிட்டு முடிக்கவும் இன்னோவா வருவதற்கும் சரியாக இருந்தது.
“கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ரயிலிலேயே சென்று இருக்கலாம்“ என்று வேதனைப் படும் அளவுக்கு ஆலப்புழா சாலை மோசமாக இருந்தது.
எர்ணாகுளத்தில் இருந்து தெற்கே திருவனந்தபுரம் வரையில் செல்லும் மேற்கு கடற்கரை ஹைவே தான் அது. முழு சாலையும் ஃப்ளை ஓவராகவே போடப் போகிறார்கள் போல. சென்னையில் மெட்ரோ தூண்கள் போல வரிசையாக தூண்கள் நிர்மானிக்கப் பட்டு வந்தன. நடுவே வேலைகள் நடந்த காரணத்தால் எஞ்சியுள்ள இடத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
9.30 க்கு கிளம்பி 11.40க்கு ஏற்கனவே கேப் காரர் மூலமாக புக் செய்திருந்த போட் அருகே சென்றோம்.
இன்றைக்கு வந்திருந்த டிரைவர் தம்பிக்கும் பாதைகள் பரிச்சயம் இல்லை. இவர் மலப்புரம் ஏரியாவாம்.
போட் ஓட்டும் அந்த வயதான மாலுமி எங்களுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். போட்டில் இருந்த நாற்காலிகள் டர்க்கி டவலை போர்த்தி இருந்தன. நடுவே ஒரு 3க்கு 5 பெட் இரண்ட திண்டுகள் என ஒரு அராபிய ஷேக்கின் ஷோக்கான படுக்கை அறை போல காட்சி அளித்தது.
போட்டின் முகப்பில் இருந்த முக்கோண முனை எவர்சில்வர் கம்பி அமைப்பால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அதன் முகப்பில் கேட் வின்ஸ்லெட் டி காப்ரியோ இணை மாதிரி போஸ் கொடுக்கலாமா என்று யோசித்தேன். பிறகு தான் எனது எடை மண்டையில் உறைத்தது. அந்த பெரிய டைட்டானிக்குக்கு ஏற்பட்ட அவல நிலை இந்த குட்டி டைட்டானிக்குக்கு ஏற்பட வேண்டாமே என்று பெரிய மனது பண்ணி அந்த முயற்சியை முலையிலேயே கிள்ளி கடாசிவிட்டேன்.
ஆலப்புழா மெயின் ரோட்டில் இருந்து கிழக்கு நோக்கி வாய்க்காலாக சென்று உள்ளே கடல் போல பரந்து விரிந்து கிடக்கிறது அந்த பேக் வாட்டர்ஸ். அந்த வாய்க்கால் கரை எங்கும் ஏராளமான போட் கள் அணிவகுத்து சுற்றுலாப் பயணிகளுக்காக காத்து கிடக்கின்றன.
அங்கே சாலையில் நடக்கும் போது Affirmative ஆக ஒரு பார்வை பார்த்தாலே போதும் ஆளை இழுத்து போட்டில் தள்ளிவிடுவார்கள் போல அவ்வளவு வெறித்தனமாக கேட்கிறார்கள்.
போட் லேசாக குளுங்கியபடி கிளம்பியது. அந்த குறுகலான வாய்க்காலைக் கடந்து விரிந்த பேக் வாட்டர்ஸ் பகுதியை அடையும் வரை போட் ஆமை வேகத்தில் தப்பு தப்பு நத்தை வேகத்தில் தான் செல்கிறது.
நாங்கள் இரண்டு மணி நேரங்கள் பேசி இருந்தோம். இரவு தங்கும் வகையிலான ஹவுஸ் போட்டுகளும் உண்டு. ஏற்கனவே சென்று தங்கிய நம்பகமான இரண்டு நண்பர்கள் அது வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர். மேலும் அவ்வளவு நேரத்தை ஒரே இடத்தில் விரயம் செய்ய எங்களுக்கும் விருப்பம் இல்லை. வந்திருப்பதே மூன்று நாட்கள் அதில் ஏன் இவ்வளவு நேரத்தை இங்கேயே செலவழிப்பானேன்.
ஒரு போட் ரைட் போதும். வேண்டுமானால் அந்தமான் சென்றால் கப்பலில் பிரயாணம் செய்ய முயற்சிக்கலாம் என்று மனதிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.
குறுக்கே நெடுக்கே ஏராளமான சிறிய ரக மற்றும் பெரிய ரக படகு வீடுகள் ஊர்ந்தபடி சென்றன.
அந்த தண்ணீருக்குள் உள்ள நிலப்பரப்பில் தென்னை மரம் சூழ அழகிய வீடுகள் இருக்கின்றன. நாம் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால் வண்டி அவசியம் என்பது போல அங்கே வசிப்போர் வீட்டிற்கு வீடு சிறிய ரக போட்களை வீட்டின் முன்னே கட்டிப் போட்டிருக்கிறார்கள்.
வீட்டின் முன்னே துணி துவைக்கிறார்கள். அமர்ந்து அரட்டை அடிக்கிறார்கள். சிறுவர்கள் கூடிக்கலைந்து விளையாடுகிறார்கள். சிலர் தூண்டில் போட்டு அந்த தண்ணீரிலேயே மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு பின்னால் இருக்கும் சிறு நிலப் பரப்பில் விவசாயமும் செய்கிறார்கள்.
அங்கங்கே துண்டு துண்டாக நிலப்பரப்புகள் தென் படுகின்றன. அவை அனைத்திலும் வீடுகள் நெருக்கமாக உள்ளன. அந்த துண்டுகுளை இணைக்க டவுன் பஸ் சேவை போல படகு சர்வீஸ் இயக்கப் படுகிறது.
இந்த துண்டுகளுக்கு இடையே ஒரு துவக்கப்பள்ளி கூட இருக்கிறதா அந்த பகுதி மாணவர்கள் அங்கே படிக்கிறார்களாம். அந்தப் பள்ளி ஆசிரியர் எந்த பகுதி ஆளாக இருப்பார், அவர் தினமும் போட்டில் ஏறி பள்ளிக்கு வந்து செல்வாரா? அவருடைய பணி அனுபவம் எவ்வாறு இருக்கும்?! என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன்.
வாடகைக்கு படகு எடுத்த தற்கு பதிலாக அந்த டவுன் போட் சேவையை பயன்படுத்தியிருந்தால் குறைவான கட்டணத்தில் முழு பேக்வாட்டர்ஸ் பகுதியையும் வலம் வந்திருக்கலாம்.
எங்கள் மாலுமி தாத்தா அங்கே இருந்த ஒரு வீட்டின் அருகே நிறுத்தி “இங்கே சாப்பாடு அருமையாக இருக்கும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்“ என்கிறார். அந்த ஓட்டல் வீட்டின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் சாப்பிடச் சொல்லி கையை பிடித்து இழுக்கிறார்கள்.
“ஏம்மா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா, எங்க சொந்தக் காரங்க கூட இவ்வளவு வற்புறுத்த மாட்டாங்களே”
இறுதியாக தேனீர் மட்டும் அருந்திக் கொள்கிறோம் என்று ஒரு டீலிங்குக்கு வந்தோம். இந்த வற்புறுத்தலுக்கு பின்னால் அந்த மாலுமி தாத்தாவின் டீலிங் இருந்தது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
அந்த வீட்டின் முன்னால் இருந்த மரத்தில் ஒரு வளர்ப்பு கழுகு இருந்தது. கையை நீட்டினால் வந்து அழகாக அமர்ந்து கொள்கிறது, எட்டு பேரில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் போட்டோ எடுத்துக்கொண்டோம்.
ஆக, இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை அந்த மாலுமி தாத்தா இப்படியே ஓட்டிவிட்டார். அங்கிருந்தே யு டர்ன் போட்டு திருப்பி விட்டார். அந்த வாய்க்கால் கரை நத்தை வேக பகுதி போக அரை மணி நேரம் வர அரைமணி நேரம். பரந்து விரிந்த பகுதி போக கால் மணி நேரம், வர கால் மணி நேரம். சாப்பிட வற்புறுத்தி ஒரு அரை மணி நேரம். “யோவ் நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு” இனி செல்ல உள்ள நண்பர்கள் இந்த விஷயங்களை முன்பே தெளிவாக உடைத்து பேசிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த விஷயத்தை இங்கே சொல்கிறேன்.
ஒன்று நாற்பதுக்கு மிகச் சரியாக ஏறிய இடத்திலேயே இறக்கி விட்டார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த டிரைவரை எழுப்பினோம். நல்ல நிலையிலேயே அவருக்கு ஒரு இடமும் தெரியாது. இப்போ தூக்க கலக்கம் வேற. “தம்பி ஒரு நல்ல ஏசி ஓட்டலா பார்த்து நிறுத்துப்பா” என்றேன். “அதெல்லாம் ரோட் சைட்ல பாத்துக்கலாம் சார்.
”சாப்பிட்ட பிறகு ஆலப்புழா பீச், லைட் ஹவுஸ் அப்புறம் மராரி பீச் போகணும்பா. சீக்கிரம் ஓட்டலை காட்டுப்பா” என்றேன்.
சாலை ஓரத்தில் கேசியாக் என்று பார்க்கிங் வசதியோடு ஒரு ஓட்டல் தென்பட்டது. “ஆத்தி பார்க்கும் போதே காஸ்ட்லி ஓட்டல் மாதிரி இருக்கே“ என்று எனக்கு பயம் கவ்வியது.
“சார் டேபிள் எதுவும் ஃப்ரீயா இல்ல” என்று செக்யுரிட்டி சொன்னவுடனே, “சரி சரி வண்டிய விடுங்க வேற இடம் போகலாம்” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிளம்பி விட்டேன்.
வழியில் இன்னும் இரண்டு ஓட்டல்கள் தென்பட்டன. அது நேற்றைய ஃபோல்க்லோர் மியுசிய ஓட்டல் போல இருந்ததால் மகளிரணி நிராகரித்துவிட்டார்கள்.
“யப்பா ஆலப்புழாவ விட்டு எர்ணாகுளம் ரோட் எடுக்காத, நாம ஆலப்புழா பீச் போகணும்“ என்றவுடன் யு டர்ன் போட்டு திரும்பினோம். தற்போது கேசியாக் ஓட்டலில் இடம் ஃப்ரீயாக இருப்பதாக டிரைவர் என்னை கேக்காமலேயே உள்ளே விட்டுவிட்டார். பசி வேகத்திலும் அங்கு இருந்த ஏசி மோகத்திலும் அனைவரும் குதித்து ஓடி விட்டனர். “உங்க வேகம் எனக்கு சோகம்“ என்ற நொந்தபடியே நான் இறுதியாக உள்ளே சென்றேன்.
நான் போட்டிங் போகும் போதே, “நாங்க வர லேட் ஆனாலும் ஆகும் நீங்க சாப்பிட்டு விடுங்கள்“ என்று டிரைவர் தம்பிக்கு 200 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தேன். அவர் சமத்துப்பிள்ளையாக அங்கேயே சாப்பிட்டிருந்தார்.
உள்ளே சென்றதும் ஆளாளுக்கு ஒரு மெனு கார்டை ஏதோ ரிசல்ட் வந்த செய்தித்தாளைப் போல வாசித்து கொண்டு இருந்தார்கள்.
அனைவருமே புதிதாக ஏதாவது ட்ரை பண்ணுவோம் என்கிற மனநிலையில் இருந்தனர்.
நானும் அன்பழகன் மாமாவும் மட்டும் மீல்ஸ் சாப்பிட்டோம். மற்றவர்கள் ஏராளமாக ஆர்டர் செய்ய அனைத்திலும் லேசாக தொட்டுப்பார்த்து பிட்டு வாயிலே போட்டுக் கொண்டேன்.
சாப்பிட்டு முடித்த பிறகு பில்லை நீட்டினார்கள். 3800 ஆகி இருந்தது. “அடேய்களா, நேற்று மூன்று வேளை சேர்த்து கூட இவ்வளவு ஆகலையேடா“ என்று புலம்பியபடியே பில்லை செட்டில் செய்தேன்.
இதற்குள் நான்கு மணி முப்பது நிமிடம் ஆகி இருந்தது. இனிமேல் ஆலப்புழா பீச்சும் கிடையாது லைட்ஹவுசும் கிடையாது என்று டிக்ளேர் செய்துவிட்டேன்.
லைட்ஹவுஸ் 100 படிகள் கொண்டது. நிச்சயமாக இப்”போதை”ய நிலையில் இவர்களால் ஏற முடியாது. ஆகவே எர்ணாகுளம் ரூட்டில் 13 கிமீ போய் மேற்கு புறமாக உள்ளே வண்டியை விட்டால் மராரி பீச் வந்துவிடும்.
இடையில் ரயில்வே கிராசிங் வேறு ஒரு பதினைந்து நிமிடங்களை காலி செய்துவிட்டது. நேராக மராரி பீச் மணல் ஓரம் நிறுத்தி இறக்கி விட்டார்.
“ஆகா, அழகான, ரம்மியமான, தூய்மையான வெள்ளை மணல் பீச்”
அலைகள் அவ்வப்போது சீறினாலும் சீராக வந்த வண்ணம் இருந்தன.
ஏராளமான பேர் குளியல் போட்டு கும்மாளமடித்துக் கொண்டு இருந்தனர்.
அன்பழகன் மாமா கரையில் அமர்ந்து கொண்டார். அவரிடம் பொருட்கள் பை எல்லாவற்றையும் வைத்து விட்டு ஏழு பேரும் கடலில் இறங்கிவிட்டோம்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை நனைத்த வண்ணம் என்னை நோக்கினான். மாமா ஒன்றும் சொல்லமாட்டார் போல் தெரிகிறதே என்று தொப்பென்று குதித்து கும்மாளமிட துவங்கிவிட்டான். அவனைத் தொடர்ந்து சித்துவும் குதித்துவிட்டான். அருண் இம்மியளவும் உணர்ச்சி வசப்படாமல் கால்களை மட்டுமே நனைத்துக் கொண்டு நின்றான். இறுதியாக சாரதி அருணை அலையில் தள்ளிவிட்டு நனைத்து விட்டான்.
கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில் பூம்புகார் கடலில் நீந்திச் சென்ற அனுபவம் உண்டு. மாற்றுடை இல்லாத காரணத்தினால் ஆவலை அடக்கிக் கொண்டு இடுப்பு நனையும் ஆழம் வரை மட்டுமே சென்றேன்.
ஆலப்புழா பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் கடலில் குளிக்க நினைத்தால் மராரி பீச் நல்ல சாய்ஸ். தூய்மையான மணல் பகுதி. அருமையான தண்ணீர். குளித்து கரையேறிய பிறகு உடலை நனைத்துக் கொள்ள குளியலறை வசதியும் உள்ளது.
நாங்கள் திரும்பி வந்த கோலத்தை பார்த்து டிரைவர் கதறியே விட்டார். “குளிக்காம கொள்ளாம வண்டில கால் வைக்காதீங்க பாஸ்“ என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்.
எனவே குளியலறை பகுதியில் இருந்த பைப்பில் கைகால்களை சுத்தபத்தமாக கழுவிவிட்டு மணலை சுத்தமாக உதறித்தள்ளிவிட்டுத்தான் வண்டியில் ஏறினோம். இருந்த போதிலும் நான் ஈரமான உடையுடன் சீட்டில் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து மௌனமாக அழுதபடியே வண்டி ஓட்டினார்.
எட்டரை மணிக்கு லாட்ஜ் க்கு சென்று உடை மாற்றிக் கொண்டு தான் எங்க ஆஸ்தான ஓட்டலில் ஆஜர் ஆனோம்.
அதற்கடுத்த நாள் எனக்கும் அகிலாவுக்கும் இணையேற்பு நாள் என்பதால் புத்தாடை எடுக்க வேண்டும் என்று “மேக்ஸ்“ க்கு என்னை இழுத்துச் சென்று விட்டனர்.
அவர்கள் நால்வரை மட்டும் சாப்பிடக் கூறிவிட்டு நான் அவர்களோடு மேக்ஸ் க்கு சென்று அகிலாவுக்கு சுடிதார் வாங்கிக் கொண்டு ஓட்டலுக்கு திரும்பி சாப்பிட்டு விட்டு அறையில் சென்று படுத்த போது மணி 11.30.
கார் காரன் கோவணம் களவாடிய கதையை விட்டுவிட்டேனே!!
முந்தைய நாள் எர்டிகா வில் இடித்து பிடித்துக் கொண்டு பயணம் செய்த காரணத்தினால் டிராவல்ஸ் காரர் பெரிய மனதோடு இன்னோவா அனுப்பியதாக கூறியிருந்தேன் அல்லவா.
அவர் தான் அறிந்த தொடர்புகளில் இருந்து ஒரு இன்னோவாவை அனுப்பி இருந்தார். அந்த வண்டி கருப்பா சிவப்பா என்று கூட அவருக்கு தெரிந்திருக்க வில்லை.
பிரச்சனை என்ன என்றால் டிரைவர் சீட் வரிசைக்கு அடுத்த வரிசை சீட் இரண்டு தனி சீட்டுகளால் ஆனது. இரண்டு பேர் தனித்தனியே தான் அமர இயலும். ஆக எட்டு பேருக்காக என்று அனுப்பிய வண்டி ஏழு பேர் செல்வதற்கு கூட உகந்தது இல்லை.
ஏற்கனவே நிறைய நேரத்தை கடத்தி விட்டதால் வண்டி மாற்ற நேரம் இல்லை என்று அதற்குள்ளேயே அமர்ந்து சுற்றி முடித்துவிட்டோம்.
இதற்கிடையே காலை சரியாக பதினோறு மணிக்கு ஆலப்புழா போகும் போதே, நானும் சித்துவும் தட்கலில் ரிட்டர்ன் டிக்கட் வெற்றிகரமாக போட்டு விட்டோம்.
இந்த முறை தொடர்ச்சியாகவே எட்டு டிக்கெட்டுகளும் கிடைத்துவிட்டன.
நாளைக்கு எர்ணாகுளம் லோக்கல் தான். மெட்ரோவில் போய்விடலாம் என்று முடிவு செய்து மூன்றாம் நாள் கேப் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
Tuesday, May 28, 2024
அந்த அரபிக் கடலோரம் -3
அந்த அரபிக் கடலோரம் – 3
”இனி ஒரு மியூசியம் பக்கம் போனீங்க அவ்வளவுதான்…”
எர்ணாகுளத்தில் எங்கள் முதல் விசிட் எங்க தெரியுமா? வேற எங்க ஹோட்டல் தான். சவுத் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலேயே சித்தூர் ரோட்டில் பேக் இன் என்கிற ஏசி ரெஸ்டாரண்ட்.
இரவு திருச்சியில் ரயில் புறப்பட்டபோது சாப்பிட்டது. நானாவது காலை எழுந்தவுடன் ரயிலிலேயே பல் தேய்த்து காபி குடித்துவிட்டிருந்தேன். மற்ற அனைவரும் குளித்து முடித்து தான் உணவு என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர்.
எனவே தான் கேப் வரும் கேப்பில் “வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று கிளம்பி விட்டோம்.
ஏறக்குறைய காலியாக கிடந்த ஓட்டலில் திடீரென எட்டு பேர் நுழைந்தவுடன் அளவில்லா சந்தோசமாகிவிட்டார்கள். இட்லி, தோசை, பூரி, புட்டு என்று ஒவ்வொருவரும் ஆர்டரை தெறிக்க விட்டார்கள்.
ஏசி ஓட்டல் வேற, ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கு, மெனு கார்ட கூட கண்ணுல காட்ட மாட்டேங்குறாய்ங்க, பில் எவ்வளவு எகிற போகுதோ என்று எனக்கு சற்றே கலக்கமாக இருந்தது.
வேண்டிய அளவுக்கு உண்டு முடித்து பில்லை பார்த்தால் 800 சொச்சம் தான். அதாவது 100 ரூபாய் ஆவரேஜ்.
தலைவா மூணு நாளும் காலை மாலை உங்க ஓட்டல் தான் என்று மனதிற்குள் கூவிக் கொண்டேன்.
முதல் தோசையை வாயில் வைத்த போதே கேப் டிரைவர் வந்து விட்டதாக போன் அடித்தார்.
ஏற்கனவே மேப் எல்லாம் பார்த்து லிஸ்ட் போட்டு இருந்தேன். நான் ஹில் பேலஸ் போங்க என்று சொல்ல வாய் எடுத்த கண நேரத்தில் டிரைவரும் ஹில் பேலஸ் தான சார் என்றார்.
பழைய தமிழ் பாடல் ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்“ என்று தொடங்கும். இந்த ஹில் பேலஸ் எட்டடுக்கு மேல் தான் கட்டியுள்ளார்கள். உள்ளே நுழைந்த மாத்திரத்தில் டிரைவர் நான் பார்க்கிங்ல இருக்கேன் கிளம்பும் போது போன் அடிங்க சார் என்று நழுவி விட்டார்.
நான்கு அடுக்கு ஏறும் போதே நாக்கு தள்ள துவங்கிவிட்டது. அப்புறம் பார்த்தால் ஆறாவது அடுக்கு வரைக்கும் கார் வருகிறது. அடிப்பாவி பயலே பேதில போவான் இப்படி ஏற விட்டுட்டானே என்று டிரைவரை சபித்துக் கொண்டே ஏறினோம்.
கேரளாவின் மிகப்பெரிய ஆர்க்கியாலஜிக்கல் மியுசியம் இதுதான். கொச்சி மகாராஜா தனது சொந்த செலவில் 1865 ல் கட்டியுள்ளார். கொச்சியின் நிர்வாக தலைமையிடமாக இருந்துள்ளது. 55 ஏக்கர் பரப்பில் கேரள பாரம்பரிய கட்டுமானக் கலையை பிரதிபலிக்கும் 49 கட்டிடங்களுடன் பரந்து விரிந்து கிடக்கிறது. கொச்சி ராஜ வம்சம் இந்த மாளிகையை 1980 ல் தான் கேரள மாநில அரசு வசம் இதனை ஒப்படைத்திருக்கிறது.
சந்திரமுகியின் முன்னோடியான மலையாள மணிசித்திர தாழ் படம் இங்கே எடுக்கப் பட்டுள்ளதாம்.
பேலஸ் முழுக்க முழுக்க அந்த கால கலைப் பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளார்கள். அந்த கால ஆயுதங்கள், அரச குடும்பத்தினர் செல்லும் பல்லக்குகள், உடைகள் மற்றும் நகைகள் என்று ஏராளமாக இருந்தது. குற்றவாளிக்கு நடுவீதியில் கூண்டில் அடைத்துப் பூட்டி தொங்க விட்டு தண்டணை வழங்கும் கூண்டு ஒன்றை தொங்க விட்டு இருந்தனர். முதலில் ஏதோ என்று கடந்து விட்டேன். அப்புறம் குறிப்பை படித்த போதுதான் அதன் கொடூரம் அறிந்து அதிர்ந்தேன்.
பேலஸ் ல் எங்கேயும் சேதம் செய்து விடக் கூடாது என்று மிக கவனமாக பராமரிக்கிறார்கள். அங்கங்கே பெடஸ்டல் ஃபேன் தான் நிற்கிறது. அதனைச் சுற்றி நம்ம ஆட்கள் காற்று வாங்க நிற்கிறார்கள்.
முடித்து இறங்கும் போது ஞாபகமாக டிரைவரை அழைத்து மேலேயே வரச் சொல்லி விட்டேன். “ஏம்பா, போகும் போது மேலே விட்டிருக்கலாம்ல?”
“சார் எனக்கும் தெரியாது சார் நானும் இந்த ஏரியாவுக்கு புதுசுதான் சார்” என்றார்.
அடுத்ததாக Folklore Museum செல்ல வேண்டும். “நோ, மதிய சாப்பாடு எங்கன்னு பாத்து கூட்டிட்டு போங்க, சாப்பிடாம ஒரு அடி நகர முடியாது“ என்று அத்தனை பேரும் ஏக காலத்தில் தர்ணா செய்தனர்.
“சார் அங்க பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம் சார்” என்று வண்டியை எடுத்தார். ஓட்டினார் ஓட்டினார் ஓட்டிக் கொண்டே இருக்கிறார். வந்த இடமெல்லாம் இரண்டாம் முறை வந்து போவதை நானே கவனித்து விட்டேன்.
நான் முந்தைய நாள் இரவு மேப்பில் பார்த்த போது பத்துக்குள் தான் கிமீ காட்டியது. ஆனால் இவர் இதுவரை 20கிமீ ஓட்டிவிட்டார்.
“பாஸு, உங்களுக்கு வழி தெரியலையா?”
“சார் நான் திருவனந்தபுரம், இங்க அவ்வளவு பழக்கமில்ல”
“ சொல்லி இருந்தா மேப் போட்டு இருப்பேனே”
“அந்த Folklore Museum போய் இருக்கேன் சார். பக்கத்தில் சின்ன ஓட்டல் இருக்கு” என்றார்.
அப்புறம் நான் மேப்பை போட்டு வழி காட்டிக் கொண்டே சென்றேன்.
அங்கே ஓட்டலைப் பார்த்தால் சின்னது கிடையாது மிகவும் சின்னஞ்சிறியது. மொத்தமே 12 பேர் தான் உக்கார முடியும். எங்க எட்டு பேர பார்த்ததும் உற்சாக மிகுதியில் தனியா உக்காந்து இருந்த ஒரு பையனை வேறு பத்தி விட்டு விட்டார் அந்த முதலாளி.
“சுத்தம் சோறு போடும்” என்றாலும் கூட சுத்தமான இடத்தில் தான் வயிற்றுக்கு சோறு போட வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு வாழும் கொள்கை கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அகிலா, கயல் அண்ணி மற்றும் லதா அக்கா.
இடத்தை பார்த்த மாத்திரத்தில் பார்வையாலேயே நிராகரித்துவிட்டனர்.
“டிரைவர் சார், இப்போ எழுந்து திரும்பி போனா ஓட்டல் காரர் வெட்டுவாரோ?“ என்பதை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என்று ஓட்டம் எடுத்தோம்.
ஆன் தி வே யில் ஓட்டல் ஆரியாஸ் ஐ கடந்த ஞாபகம் இருந்ததால் அதற்கு ரூட் போட்டு சென்றோம்.
அருமையான சாப்பாடு. மிகவும் சரியான விலையில் இருந்தது.
“ஜெயின் காலேஜ்ல உனக்கு பிடித்த விஷயம் என்ன?” கேட்டால் முகம் எல்லாம் பல்லாக “சித்தப்பா, அங்க மதியம் சாப்பிடும் போது எத்தனை அப்பளம் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்க“ என்பான் சித்து.
அவன் இரண்டாவது அப்பளம் கேட்க, அடுத்து அருண் கேட்க, அடுத்து நான் பாயாசம் இரண்டாவது கப் கேட்க என்று தெறிக்க விட்டோம்.
என்னையும் டிரைவரையும் தவிர அனைவரும் தமிழ்நாட்டு சின்ன அரிசி சாப்பாடு சாப்பிட்டனர். நானெல்லாம் பாம்பு திங்கும் ஊருக்குச் சென்றால் நடு கண்டத்தை எடுத்து கடிக்கும் ஆள். பில் மிகவும் நியாயமான ரேட் தான் வந்தது. 9 பேருக்கு 800 சொச்சம் தான். பில்லில் இரண்டாம் அப்பளம் பாயாசம் என்று எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி கொண்டேன்.
திரும்ப folklore museum சென்றோம். நுழைவுக் கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கிறார்கள். கேரளாவில் அனைத்து கிராம நகரங்களில் இருந்து அனைத்துவிதமான பாரம்பரிய கலைப் பொருட்கள், நடன நாடகங்களின் போது பயன்படுத்தப் படும் பொருட்கள் என மூன்று மாடி நிறைய குவித்து வைத்துள்ளார்கள். இது முழுக்க ஏசி செய்துள்ளார்கள். இந்த கலைப் பொருட்கள் அனைத்துமே தனி ஒரு மனிதராக ஜார்ஜ் ஜெ தய்லத் என்பவர் சேகரித்துள்ளார். மியுசியம் அமைந்துள்ள மூன்றடுக்கு மர மாளிகை முழுக்க முழுக்க கேரள பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. நுழைவுக் கட்டணம் சற்று அதிகம்.
அடுத்ததாக வண்டியை ஃபோர்ட் கொச்சி ஏரியாவுக்கு விட்டோம். அங்கே டட்ச் பேலஸ், காய்ர் மியுசியம், Jews town, வாஸ்கோடகாமா நினைவிடம் அப்புறம் பீச்சாங்கரை மற்றும் சீன மீன்பிடி வலைகள் என்று ஏராளம் இருந்தன.
டட்ச் பேலஸ் மியுசியம் ல் “இன்று உலக மியுசியம் நாள் எனவே இன்று மட்டும் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் இல்லை” என்று போர்டு தொங்கியது. அடப்பாவி “ஹில் பேலஸ், ஃபோல்க் லோர்” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டேன்.
“அப்பா, மியுசியம் போதும்பா, பீச் போகலாம்பா” என்று அருண் கூறவும் சித்துவும் சாரதியும் ஏக காலத்தில் ஆமோதித்தனர்.
பீச்சாங்கரை அருகே இருந்த வாஸ்கோடகாமா நினைவிடம் நாங்கள் போன நேரம் மூடிவிட்டனர். வெளியே நின்று சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.
பீச்சாங்கரையில் நுழையும் போதே மீன் “வாச்சம்“ அடித்து விரட்டியது. மிகவும் சிறிய பீச் தான். ஒரே ஒரு சிறு இடத்தில் தான் தண்ணீரில் கால் வைக்க முடிகிறது. அங்கேயும் கிளிஞ்சல்களாக கிடந்ததால் நான் இறங்கவே இல்லை.
எல்லோரும் டீ டீ என்று கேட்டதால் அங்கே ஒரு கண்றாவி தேனீரை வாங்கி கீழே ஊற்றினோம்.
சீக்கிரமே கிளம்பி ஆழ்ந்த நித்திரையில் இருந்த டிரைவரை எழுப்பி ஓட்டலுக்கு திரும்பலாம் என்றோம். நன்றாக அலைந்து திரிந்த காரணத்தினால் அனைவருக்கும் சரியான பசி.
டிரைவர் மீண்டும் எர்ணாகுளத்துக்கு சடங்கு சுற்றிவிடக் கூடாதே என்கிற பயத்தில் நானே மேப் ஓப்பன் செய்து கொண்டேன். எல்லோருக்கும் பயங்கர பசி என்பதால் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் அருகே இருப்பவரை கடித்து வைத்துவிடும் அபாயம் இருந்ததை மறுப்பதற்கு இல்லை.
மறுபடியும் இரவு உணவுக்கு பேக் டு பேக் டு பேக் இன் ரெஸ்டாரண்ட். காலையில் மெனு கார்ட் கொடுக்காத காரணத்தினால் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அம்பியாக சமர்த்தாக சாப்பிட்டார்கள். தற்போது மெனு கார்ட் கொடுத்தவுடன் சித்து, சாரதி, அருண் மூவரும் மெனு கார்டில் அந்நியனாக பாய்ந்தனர். ஆளாளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்யவும் எனக்கு லேசாக வயிற்றை கலக்கியது. ஆனாலும் பில் 1200 க்குள் தான் வந்தது.
சித்து, சாரதி மற்றும் அருண் மூவரும் தனி அறை. நள்ளிரவு வரை சிஎஸ்கே, ஆர்சிபி மேட்ச் பார்த்துவிட்டு கண்ணீர் மல்க உறங்கச் சென்றனர். நானெல்லாம் படுத்த மாத்திரத்தில் நித்திரை தழுவிக் கொண்டது.
Monday, May 27, 2024
அந்த அரபிக் கடலோரம் 2
அந்த அரபிக் கடலோரம் -2
அனைத்து சாலைகளும் திருச்சி நோக்கி
நாங்கள் சுற்றுலாவுக்கு எர்ணாகுளம் செல்ல புக் செய்தது காரைக்கால் டு எர்ணாகுளம் விரைவு வண்டி. அரியலூருக்கும் அந்த ரயிலுக்கும் ஒட்டும் கிடையாது ஒறவும் கிடையாது. ஆகவே திருச்சியிலிருந்து புக் பண்ணி இருந்தோம்.
இப்போ சிக்கல் என்னவென்றால் அனைத்து நபர்களையும் திருச்சியில் சரியாக எட்டு மணிக்குள் அசெம்பிள் செய்தால் தான் எர்ணாகுளம் ரயிலை பிடிக்க இயலும்.
அருண், அகிலா மற்றும் நான் மூவரும் அரியலூர் காரர்கள் சித்தார்த் சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக அரியலூர் ஏற்கனவே வந்திருந்தான். ஆக நாங்கள் நான்குபேரும் மாலை ஐந்தரை மணி வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து திருச்சி செல்வதாக திட்டமிட்டுக் கொண்டோம்.
அகிலாவின் அக்கா கயல்விழி அதாவது சித்துவின் அம்மா சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ்ஸை சரியான நேரத்தில் பிடிக்க வேண்டும். அந்த விஷயம் தான் வயிற்றில் கிலோ கணக்கில் புளியை கரைத்தது. காரணம்? ( ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போய்ட்டு வந்துடலாம்)
ஏதோ ஒரு தொடர்விடுமுறை சமயம் அருணையும் அகிலாவையும் சென்னையில் விட்டுவிட்டு பணிநிமித்தம் நான் அடுத்தநாளே மாலை பல்லவன் விரைவு வண்டியை பிடித்து அரியலூர் வரவேண்டும்.
“ஏங்க, கயலக்கா வெஜிடபிள் பிரியாணி செய்யுறதில் எக்ஸ்பர்ட், அதனால மதியம் சாப்பிட்டுவிட்டு ட்ரெயினுக்கு கிளம்புங்க சரியா இருக்கும்“ என்றார் எனது இணையர் அகிலா.
சுவையான வெஜிடபிள் பிரியாணியை கடைசியாக பாரதிதாசன் பல்கலைக் கழக விடுதியில் சாப்பிட்டது. எனவே அகிலா வெஜிடபிள் பிரியாணி என்று சொன்ன மாத்திரத்தில் நாவில் எச்சில் பெருகி தரையில் வீழ்ந்து உருண்டது.
ஏற்கனவே சிரத்தையுடன் செய்பவர் தான் கயல் அண்ணி, அகிலா வேறு எக்ஸ்பர்ட் என்று உசுப்பிவிட்டதால் டபுள் சிரத்தையோடு கிச்சனுக்குள் புகுந்தார். கற்றுக் கொண்ட அத்தனை வித்தைகளையும் பிரியாணியில் காண்பிக்க தயாரானார
அப்போது இந்திராநகர் CPWD QUARTERS ல் இருந்தார்கள். எதிர் வரிசை கடைகளில் காய்கறி மளிகை சாமான்களை சித்து மூட்டை கட்டி வாங்கி வந்தான்.
காலையில் பத்து மணிக்கு துவங்கிய வேலை ஒரு மணிக்கு கேரட் நறுக்கும் அளவுக்கே வளர்ந்து இருந்தது.
ஒன்று முப்பதுக்கு தலையை நீட்டினால் அங்கே புதினா இலையை அலசிக் கொண்டு இருந்தார்.
இனிமேல் இது நமக்கில்லை என்று உமிழ்நீரை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு எக்மோருக்கு ஊபர் கேப் புக் பண்ணிவிட்டேன்.
விழுப்புரம் தாண்டும் வேளையில் தான் அங்கே வெஜிடபிள் பிரியாணி டேபிளுக்கு வந்திருந்ததாக அகிலா தொலைபேசினார்.
ஃப்ளாஷ்பேக் முடிந்தது. எங்கள் அனைவருக்கும் இரவு உணவை வீட்டிலேயே செய்து எடுத்து வருகிறேன் என்று கிச்சனுக்குள் வன்முறையைத் துவங்கிவிடுவாறோ என்கிற பயத்தில் தான் நாங்கள் கலவரமடைந்தோம்.
இறுதியாக கயல் அண்ணி தாம்பரத்தில் சரியான நேரத்தில் ரயிலைப் பிடித்து எங்கள் வயிற்றில் ஆவின் பாலை ஆறவைத்து வார்த்தார்.
நான் பயணத்தின் போது சாப்பாட்டிற்காக பெரிதாக ஒன்றும் மெனக்கெட மாட்டேன். ரயில் நிலையங்களிலோ அல்லது ரயில் பேண்ட்ரியிலோ வாங்கி வயிற்றை நிறைத்துக் கொள்வேன். எனது வயிறும் சமர்த்துப் பிள்ளையாக எதைப் போட்டாலும் செரித்து விடும்.
கயல் அண்ணிக்கு அடுத்ததாக லதா அக்காவும் கடைகளில் சாப்பிட விரும்ப மாட்டார். எனவே எட்டு பேருக்கும் பெரம்பலூரில் வீட்டிலேயே தோசை சட்னி பொடி என்று ஏகத்துக்கு தயார் செய்ய துவங்கிவிட்டார்.
நாங்கள் அரியலூரில் வைகையை பிடித்த போது லதா அக்கா, அன்பழகன் மாமா மற்றும் சாரதி பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் நெரிசலாக இருக்கிறது என்று ஒவ்வொரு திருச்சி பேருந்தையும் விட்டுக் கொண்டே நின்றிருக்கிறார்கள்.
சரியாக ஏழறை மணிக்கெல்லாம் திருச்சியை அடைந்து விட்டோம். அவர்கள் மூவரும் அப்போதுதான் மெயின்காட்கேட்டை நெருங்கினார்கள். சரியாக முப்பது நிமிடத்திற்குள் திருச்சி ஜங்ஷனை அடைய வேண்டும்.
எர்ணாகுளம் ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸ் பார்த்தால் இன்றைக்கு பார்த்து எள்முனையளவும் தாமதமின்றி ஜப்பான் காரன் மாதிரி சரியான நேரத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
ஏழு முப்பத்தி ஐந்துக்கு அவர்களுக்கு போன் பண்ணினால், “மாப்ள, தோ இப்பதான் இறங்க போறோம், பஸ்பிடித்து வந்துடுறோம்“ என்றார் மாமா.
“மாமா இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் வந்துவிடும், அப்படியே ஆட்டோ பிடித்து வேகமாக வந்து விடுங்கள்“ என்றேன்.
நேரம் ஏழு நாற்பத்தி ஐந்து. அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. நடைமேடையில் வேறு அறிவிப்பு செய்ய துவங்கிவிட்டார்கள்.
“ஏங்க, ஒன் பாத்ரூம் போகணும்” இது அகிலா. மனதிற்குள் எவ்வளவு கொலைவெறி ஆகியிருப்பேன் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
ரயில் நிலையத்துக்கு வெளியேதான் கழிவறை இருந்தது. கழிவறை சென்று திரும்பிய போது ஏழு ஐம்பத்தி ஐந்து.
“மாமா, ஏ2பி பக்கத்தில் நிக்கிறோம் எங்க வரணும்?“ என்று சாரதி அழைத்த போதுதான் மனது ஆசுவாசம் அடைந்தது.
இரண்டு முறை தனித்தனியே தட்கலில் டிக்கெட் போட்டதால் நான்கு பேருக்கு எஸ்1, மூன்று பேருக்கு எஸ்3, ஒருவருக்கு எஸ்4 என்று தனித்தனியே பிரித்து தான் கிடைத்தது.
“ஏங்க, இங்க எஸ்1 க்கு வாங்க, டிடிஆர் சாரதிக்கு ப்ரூஃப் கேக்குறாங்க” என்று அகிலா அழைத்தார். எனது பெட்டியில் வந்த டிடிஆர் பெயரைக் கேட்டதோடு சரி. அவங்க டிடிஆர் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல.
சாரதி ஆதார் எடுத்து வர மறந்துவிட்டான். ராமு மாமாவுக்கு போன் பண்ணி வாட்சாப்பில் அனுப்பக் கூறினோம். மொபைலில் காண்பித்ததை ஏற்க மறுத்து கோபித்துக் கொண்டு போய்விட்டார். இறங்குவதற்குள் இ ஆதார் டவுன்லோட் செய்து காண்பிக்கிறேன் மேடம் என்று கூறிவிட்டு அமைதியாக திரும்பிவிட்டேன்.
இந்த அருணும் சாரதியும் காற்று வரவில்லை என்று கழிவறை அருகில் இருந்து வாசல் புறம் இருந்தார்கள். நான் பையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.
காலையில் கண்விழித்த போது கொச்சி ஏர்போர்ட்டின் பரந்து விரிந்த பகுதி கடந்து போய்க்கொண்டு இருந்தது.
இறங்கியவுடன் ஆட்டோவுக்கு விசாரித்தேன். ”நீங்க சொல்ற ஓட்டல் அடுத்த இரண்டாவது ரைட்டில் தான் இருக்கு நடந்தே போயிடுங்க“ என்று கூறிவிட்டார் அந்த ஆட்டோ டிரைவர்.
தூக்க கலக்கத்தில் ஒரு வாக்கிங் போல லக்கேஜ் எல்லாவற்றையும் இழுத்து பறித்துக் கொண்டு நடக்க வைத்து தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து விட்டேன்.
முதல்நாளே புக்கிங் டாட் காம் தளத்தில் செக் இன் டைம் காலை ஏழு மணி என்று வலியுறுத்தி கூறி இருந்ததால் மூன்று அறைகள் தயாராக இருந்தன.
தூய்மையான விசாலமான அறைகள். மிகவும் தூய்மையான கழிவறைகள். மினரல் வாட்டரைவிட வாஷ் பேசின் வாட்டர் மிகுந்த சுவையாக இருந்தது.
காலையிலேயே ரிசப்ஷனில் காருக்கு கேட்டிருந்தேன். ஒன்பதரைக்கு எல்லாம் கார் வந்து விட்டது.
இனி எர்ணாகுளம் பயண அனுபவங்கள் தான்.
அந்த அரபிக் கடலோரம் -1
"அந்த அரபிக் கடலோரம்…" -1
முன் பயணத்திட்டம்
ஜனவரி மாதம் நான் திருவனந்தபுரம் பயிற்சிக்காக போனதில் இருந்தே எனது மகனும் மனைவியும் எங்களையும் அங்கே சுற்றுலா கூட்டிக் கொண்டு போயே ஆகவேண்டும் என்று ஐந்து மாதகாலமாக ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தார்கள்.
பிரச்சனை என்னவென்றால் நான் திருவனந்தபுரத்தை மூன்று நாட்கள் தங்கி இருந்து பார்த்து முடித்தாயிற்று. கன்னியாகுமரியும் குடும்பத்தோடு போய் வந்தாச்சு. ஆக ஒரு மூன்று நாட்கள் பயணத்திட்டம் என்றாலும் அதற்கேற்றாற்போல புதிய இடங்களை பார்த்து வருவது போல திட்டமிட வேண்டும்.
எங்களோடு எனது இணையரின் அக்கா கயல்விழி மற்றும் மகன் சித்தார்த்தன் என்கிற சித்து(கணினி பொறியியலாளர்) வருவார்கள். அப்புறம் லதா அக்கா அவரது இணையர் அன்பழகன் மாமா (இருவரும் ஆசிரியர்கள்) நிச்சயமாக இணைவார்கள். இந்த குழு எங்களின் வழக்கமான ”டூரிணையர்கள்”
மார்ச் மாத இறுதியில் மே மாதம் வரட்டும் உங்களை நிச்சயமாக அழைத்துச் செல்கிறேன். இடம் மட்டும் திருவனந்தபுரம் இல்லை கோழிக்கோடு மற்றும் வயநாடு என்று சொல்லி வைத்தேன்.
ஏப்ரல் மாத வாக்கில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்த போது “உண்மையை சொல்லுங்க இந்த வருடம் டூர் போறோமா இல்லையா?” என்று கழுத்தில் கத்தி வைத்துவிட்டார்கள். அப்போது தப்பிப்பதற்காக பாலக்காடு கோயம்புத்தூர் என்று சொல்லி வைத்தேன்.
பள்ளி முடிந்தது, பள்ளியின் 6-9 மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் கூட்டத்தில் சமர்ப்பித்தேன்.
மே மாதம் ஆறு தேதி கரைந்து போனது. அடுத்த நான்கு நாட்களில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்.
அப்படின்னா மார்க் ஷீட் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும், டிசி தயார் செய்ய வேண்டும். ஆக மே மாதம் 13 தேதிகள் கரைந்தோடி விட்டன.
சரி 18-21 தேதிகளில் செல்லலாம் என்று முடிவு செய்தாகி விட்டது. “போகணும்னு தோணறது ஆனா எங்க போகணும்னு இன்னும் முடிவாகலையே” என்று தங்கப்பதக்கம் ஜுனியர் சிவாஜி கணக்காக கண்ணைக் கசக்கி யோசித்துக் கொண்டே இருந்தேன்.
சரி கொச்சி – எர்ணாகுளம் – ஆலப்புழா போய்விடலாம், கடல், பேக்வாட்டர்ஸ், படகு சவாரி என்று என்ஜாய் பண்ணலாம் என்று முடிவு செய்து விட்டோம். மைத்துனர் மகன் சாரதியும் (அருணின் வயதொத்தவர்) பயணத்தில் இணைந்தார்.
குகனோடு ஐவர் ஆனோம் என்பது போல சாரதியோடு எண்வர் ஆனோம். ஆமாம் மொத்தம் எட்டு பேர்.
தங்குமிடம் குறித்து அலசி ஆராய ஏராளமான ஆப்(பு)கள் இருக்கின்றன. நான் கூகுளாண்டவரிடம் வினவினால் அவரோ ஒரே இடத்தை ஆப்வாரியான ரேட்டோடு காட்டிக் கொடுத்தார். புக்கிங் டாட் காம் ல் குறைவாக காட்டியதால் அவர்களை அணுகி மூன்று தங்கும் அறைகளை பதிவு செய்து கொண்டேன். மூன்று நாட்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் காட்டியது. பணம் எல்லாம் நேரில் கட்டிக் கொள்கிறேன் என்று கறாராக கூறிவிட்டேன்.
ஆனால் ஐஆர்சிடிசி ஆப்பில் எவ்வளவு தேய் தேய்த்து பார்த்தாலும் ஒரு டிக்கெட்டும் அகப்படவில்லை. ஆக 17ம் தேதி காலை பதினோறு மணிக்கு தட்கல் ரேஸ் ஓடியாகவேண்டும்.
விடுமுறை தினங்கள் போன்ற பிசியான பயண நாட்களில் ஐஆர்சிடிசி யில் தட்கலில் உள்ள டிக்கெட்டுகளை கைப்பற்றுபவர்கள் அந்தக் கால திருச்சி மாரீஸ் 70 எம்எம் தியேட்டரில் ஐந்து ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட்டை எடுப்பவருக்கு நிகரான சாமர்த்தியசாலிகள்.
நான் அந்த டிக்கெட்டை பலமுறை கைப்பற்றி உள்ளேன். ஆக அந்த ரேசுக்கு நான் முற்றிலும் தகுதியானவன் தான்.
கூகுளாண்டவர் உதவியுடன் இடங்களையும் தெளிவாக தேர்வு செய்துவிட்டேன். முதல் நாள் எர்ணாகுளம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். இரண்டாம் நாள் ஆலப்புழா பேக்வாட்டர்ஸ் படகு சவாரி மற்றும் பீச். மூன்றாம் நாள் கொச்சி எர்ணாகுளத்தில் மீதமுள்ள இடங்களைப் பார்த்து விட்டு லுலுமாலில் “வேடிக்கை மட்டும்“ பார்த்துவிட்டு கிளம்புவதாக திட்டம் போட்டாயிற்று.
முதலில் இடங்களை அடையாளமிட்டுக் கொண்டு குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு இடத்திற்கும் இடையேயான தொலைவுகளை கூகுள் மேப் துணையோடு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மேப்பை பார்த்தால் போதும் எங்கிருந்து எங்கே எப்படி என்பதை பயண நாளில் நமது எண்வர் குழு கிளம்பும் வேகத்துக்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஆனாலும் மனதில் ஒரு உத்தேச திட்டத்தை வகுத்து நோட்பேட் ஆப்பில் குறித்துக் கொண்டுவிட்டேன்.
பதினேழாம் தேதி பத்து மணிக்கெல்லாம் போன், லேப்டாப் எல்லாவற்றிலும் சார்ஜ் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டு பத்தே முக்காலுக்கெல்லாம் சித்து போன் மற்றும் என்னுடைய போன் லேப்டாப் என்று ரெடி பண்ணி அமர்ந்து விட்டோம்.
தட்கலில் ஒரே ஐடிக்கு எட்டு டிக்கெட் எடுக்க இயலாது. எனவே சித்து நான்கு டிக்கெட் நான் நான்கு டிக்கெட் எடுப்பது என்று தீர்மானித்து பெயர் வயது என குறித்துக் கொண்டும் பிரித்துக் கொண்டும் அமர்ந்தோம்.
பதினோறு மணிக்கு எனது போனில் ஐஆர்சிடிசி ஆப் ”சுத்திச் சுத்தி வந்தீக….” என்று கைவிட்டது. உடனே லேப்டாப்பில் பிரௌசரில் ஏற்கனவே இட்டு வைத்திருந்து ஐஆர்சிடிசி போர்ட்டலை ரீலோட் செய்தேன். என்ன ஆச்சரியம் உடனே உள்ளே போய்விட்டது.
உள்ளே புகுந்து மடமடவென்று நான்கு டிக்கெட்டுகளை போட்டு விட்டு சித்துவைக் கேட்டால் “சித்தப்பா என்னோட போன் இன்னும் சுத்திக்கிட்டே தான் இருக்கு என்றான். அதே படம் அதே பாடல் “சுத்திச் சுத்தி வந்தீக…”
சரி மறுபடியும் லேப்டாப்பில் டிக்கெட் நிலவரத்தை பார்த்தால் வெய்ட்டிங் லிஸ்ட் 29 என்று காட்டியது. நிலவரம் கலவரமாகிப் போனது.
இப்போ என்ன செய்வது. டிக்கெட் கிடைக்காத நான்கு பேருமே நீண்ட நேர பேருந்து பயண ஒவ்வாமை உடையவர்கள். பயணத்திட்டத்தையே ஒத்திவைத்துவிடலாமா என்று அவநம்பிக்கையாக யோசித்தபோது தான் ஒரு பளீர் மின்னல் வெட்டியது.
"Premium Tadkal"- ப்ரீமியம் தட்கலை சற்று எட்டிப் பார்த்தால் என்ன என்று உள்ளே சென்று எட்டிப் பார்த்தால் 27 டிக்கெட்டுகள் கெட்டியாக இருந்தன.
“எலேய் சம்முவம் உட்றா ப்ரீமியம் தட்கலுக்கு வண்டிய…“ என்று பாய்ந்தேன்.
தட்கல் நானூறு என்றால் ப்ரீமியம் தட்கல் தொள்ளாயிரம் ரூபாய். “கைபுள்ள விட்றாதடா, வேற வழியில்ல நமக்கு டிக்கட்டப் போடு பேசிக்கலாம்” என்று அசரீரி ஒலித்தது. டக்கென்று தட்டி புக் செய்துவிட்டேன்.
ஆக லாட்ஜில் ரூம் ரெடி, பயணத்திற்கு டிக்கெட் ரெடி ஆட்களும் அவரவர் இடங்களில் இருந்து திருச்சியில் ரயில் கிளம்பும் நேரமான இரவு எட்டு மணிக்கு வருவதற்கும் ரெடி.
ஆகா, பயணத்திட்டம் இவ்வளவு சுளுவா முடிந்துவிட்டதே என்று ஆசுவாசம் அடைந்தேன். ஆனால் அடுத்தநாள் அசம்பிள் ஆவதில் இவ்வளவு இழுபறி ஆகும் என்று நினைக்கவே இல்லை. என்ன இழுபறி?! வெயிட் அன்ட் சீ இன் தி நெக்ஸ்ட் எபிசோட்.
Monday, May 13, 2024
மலையாளக் கரையோரம் -3
மலையாளக் கரையோரம் - 3
(ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது)
பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிறதா கேரள தேசம்?
கேரளாவில் நாங்கள் பயிற்சிக்காக சென்றதே கேரளப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறித்து கண்டு வரத்தான். எனவே பயிற்சியின் இரண்டாம் நாள் புரோக்ராமே அதுதான்.
முதலில் நாங்கள் சென்றது ஒரு மேல்நிலைப் பள்ளி. ஆனால் கெடுவாய்ப்பாக அரசுப் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. நாங்கள் சென்றது ஒரு Aided School.
தலைமையாசிரியரை பேட்டி காண வசதியாக முதல்வரிசை நாற்காலிகளில் நட்ட நடு நாற்காலியை பிடித்துக் கொண்டேன். ( தேனீர் கொண்டு வந்தவர் இரண்டு ஓரங்களில் இருந்து கொடுத்த போதும் என்னை விட்டுவிட்டார். எனது தவிப்பை கண்டு கொண்ட தலைமையாசிரியர் அவரிடம் கூறி எனது வயிற்றில் தேனீர் வார்த்தார்)
நானே கேள்விகளை யோசித்து டைரியில் குறித்து எடுத்து வந்திருந்தேன். அருகில் இருந்த ஆசிரியரோ ஒரு கற்றை பேப்பர்களை வைத்திருந்தார்.
உடன் வந்திருந்த மற்றொரு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் அந்த பள்ளியின் துவக்க நிலை வகுப்பறைகளை பார்வையிட ஆர்வமாக சென்றுவிட்டார்.
கேரள மேல்நிலைப் பள்ளிகளில் இரட்டைத் தலைமை உள்ளது.
ஆமாம், 6-10 வகுப்புகளை பார்த்துக் கொள்பவர் தலைமையாசிரியர். நாங்கள் முதலில் அவரைத்தான் பார்த்தோம்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி கேட்டாலும் தெளிவாக பொறுமையாக எளிமையாக ஆங்கிலத்தில் விளக்கங்கள் கூறினார்.
11-12 வகுப்புகளை பார்த்துக் கொள்பவர் பள்ளி முதல்வர். பள்ளி மேலாண்மையில் இருவருக்கும் வேலைகள் பிரித்து வழங்கப் பட்டுள்ளன.
முதல்வரை சந்திக்க சற்று காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் தனது வரலாற்றுப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்திவிட்டு கைமுழுக்க சாக்பீஸ் கறையோடு வந்திருந்தார். மலையாள வாடை துளியும் இன்றி தமிழில் பேசினார். நமது மாநிலத்தில் டிகிரி மற்றும் பி.எட் படித்திருக்கிறார்.
பத்தாம் வகுப்பு வரையில் நமது பள்ளிகளைப் போல் தான் இயங்குகிறது. கல்வித் தரம் மாணவர் தேர்ச்சி விழுக்காடு போன்ற எந்த விஷயத்திலும் நமக்கும் அவர்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது.
நூறு விழுக்காடு தேர்ச்சிக்காக அவர்களும் புஜபல பராக்கிரமங்களையும் பயன்படுத்தித்தான் வருகிறார்கள் என்பதை முதல்வரிடம் அன்அஃபிஷயலாக பேசிய போது அறிய முடிந்தது.
கேரள தேசம் கம்யூனிசம் வேர்விட்டு வளர்ந்து இன்னமும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று வரும் அளவுக்கு உள்ள மாநிலம். எனவே பெற்றோருக்கு தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இயல்பாகவே உள்ளது. எனவே பள்ளி நடவடிக்கைகளில் பெற்றோரின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. பள்ளிக்கு வர அவர்கள் தயங்குவதே கிடையாது.
Adolescent kids issues இங்கே இருப்பது போல அங்கேயும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
எங்களோடு வந்திருந்த ஆசிரியர் ஒருவர் ஆர்வமிகுதியில் ”பதின்பருவ ஆண் பெண் பாலின ஈர்ப்பு சார்ந்த பிரச்சனைகளை எப்படி கையாளுவீர்கள்?” பள்ளி மேலாண்மைக்குழுவின் உதவியை நாடுவீர்களா? என்றார்.
அவர்மேல் தவறு இல்லை கேரளப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒத்துழைப்பு அபரிமிதமாக உள்ளது, அவர்கள் அனுமதி இன்றி அணுவும் அசையாது என்று பயிற்றுவிக்கப் பட்டிருந்தோம்.
அதற்கு தலைமையாசிரியர் கூறிய பதில் சிறப்பாக இருந்தது. “இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் எதற்கு அவர்கள்( இந்த இடத்தில் எரிச்சலுற்றார்) குட்டிகளோட பேரண்ட்ஸ் மட்டும் போதுமே.
ரகசியமாக விசாரிக்க வேண்டிய விஷயத்தை மூன்றாவது நபருக்கு தெரிவதை பெற்றோர் விரும்பமாட்டார்கள் அல்லவா?“ என்றார்.
மாணவர்களின் டெக்ஸ்ட் புக் கொடுக்கச் சொல்லுங்கள் சார் கொஞ்சம் பார்க்கணும் என்று எங்களோடு வந்திருந்த ஒரு தலைமையாசிரியர் கேட்டார்.
“சார் இங்க முழுக்கவே NCERT books தான் ஃபாலோ பண்றோம். மேல்நிலைக் கல்வி முழுவதுமே சிபிஎஸ்இ தான். அவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு வசதியாக இருக்கும் அல்லவா?” என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.
வகுப்பறையில் பார்த்தபோது மாணவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சுருக்கப் புத்தகத்தை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்று புரிந்தது.
அதுபோல மலையாளத்திற்கு பதிலாக பெரும்பான்மை மாணவர்கள் இந்தியை மொழிப்பாடமாக படிக்கிறார்கள்.
இங்கே நமது மாநிலத்தில் சேர்க்கையை அதிகரிக்க ஆங்கில வழி சில பள்ளிகளில் துவங்கப் படுகிறது அல்லவா? அதுபோல அங்கேயும் எல்லா வகை அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழியும் உள்ளது. பெற்றோரின் ஆர்வமிகுதியால் ஆங்கில வழி வகுப்புகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றனர்.
இந்த மாற்றம் ஆரோக்கியமான மாற்றமாக எனக்கு படவில்லை.
மேல்நிலைப் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப் படுகிறார்கள்.
விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த வகுப்புகளில் சேர்ந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயார் ஆகலாம்.
பள்ளிகள் பார்வைக்கு பிறகான மீளாய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த கேரளக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசினார். அப்போது வாய்ப்பு வழங்கப் பட்ட போது கையை உயர்த்தி இந்த ஐயத்தை நான் எழுப்பினேன்.
“கேரளாவில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் புத்தகங்கள் எல்லாமே சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் உள்ளன. அப்படியானால் அந்த வகுப்புகளில் வரும் மொழிப் பாடம் மற்றும் கலைப் பிரிவுகளில் உங்கள் மாநிலம் சார்ந்த விஷயங்களை பயிற்று விக்க வாய்ப்பு இருக்காது தானே?“ என்றேன்.
“ குட்டிகள் நீட் ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் எழுத இது உதவியாக இருக்கும் அல்லவா?” என்றார்.
”டாக்டர் ஆகணும்னா நீ படி மேன் ஒய் மீ” என்கிற சாமானிய மாணவனின் குரல் எனது காதுகளில் மட்டும் ஒலித்தது.
ஆக, நீட், ஜேஇஇ ஆல் நம்ம பாடப் புத்தகங்கள் தான் பருத்துப் போனது ஆனால் அங்கே கேரளத்தில் பாடத்திட்டமே மத்திய அரசிடம் போய்விட்டது.
அங்கே திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலுமே மாணவர்கள் வந்து போவதற்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப் பட்டு உள்ளன. சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதி அல்லது பெருந்தனக் காரர்களின் அன்பளிப்பு என்று நிதி வசதி பெற்றுள்ளார்கள். டீசல் டிரைவர் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு பிள்ளைகளிடம் வசூல் செய்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அனைத்து தொடக்க பள்ளிகளிலுமே மதியம் மூன்று மணிக்கு மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்கப் படுகிறது. நாங்கள் சென்றிருந்த போது வழங்கப் பட்டது. தரமும் நன்றாகவே இருந்தது.
நமது மாநிலத்தைக் காட்டிலும் கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அதிகமாக உள்ளன.
துவக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் கிடையாது. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். நமது மாநிலம் போல ஒரு கீமீ சுற்றளவுக்குள் ஒரு துவக்கப் பள்ளி என்கிற அடர்த்தியில் துவக்கப் பள்ளிகள் உள்ளனவா என்று தெரியவில்லை.
நமது மாநிலத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று ஒன்று உள்ளது. பெற்றோராக இல்லாதபோதிலும் கௌரவத்திற்காக தலைவர் பதவியில் நங்கூரமிட்டு வருடக்கணக்கில் இருக்கிறார்கள். சில ஊர்களில் “பெரிய குடும்பங்களின்“ வாரிசு வழிப் பதவியாக பல ஆண்டு காலம் சிக்கி சீரழிகிறது.
பள்ளி மேலாண்மைக்குழுவின் கட்டமைப்பு அந்த விஷயங்களை இங்கே உடைத்துள்ளது. பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு பொறுப்புகளும் கடமைகளும் ஏராளம் வழங்கப் பட்டு பள்ளி கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டிற்கு சட்டரீதியான அனுமதி இங்கே உள்ளது.
அங்கே பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்கனவே இதை எல்லாம் செய்து வருவதால் பள்ளி மேலாண்மைக்குழு மற்றுமொரு பாடியாகவே உள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக் கூட்டம் வருடம் ஒரு முறையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கட்டாயமாக பருவம் தோறும் தேவை ஏற்பட்டால் கூடுதலாகவும் நடைபெறுகிறது.
வகுப்பு வாரியான பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் பருவத்தேர்வுக்கு பிறகு கூட்டப் பட்டு மாணவர்களின் நிலை குறித்து விவாதிக்கப் படுகிறது.
பாக்கெட் பிடிஏ என்று மாணவர்களின் இருப்பிடங்கள் வாரியாக கூட்டங்கள் நடத்தப் படுவதாகவும் கூறினார்கள்.
பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய பார்வையிடலுக்கு சென்றிருந்தாலும் அங்கே பள்ளியில் பேசிய அனைவருமே பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்தே பேசினார்கள்.
இவை அல்லாமல் விஜிலென்ஸ் கமிட்டி போன்ற ஒரு அமைப்பு ஆட்டோ ஓட்டுனர்கள், பொது ஜனங்கள், போலீஸ் போன்ற அந்த பகுதி மக்களைக் கொண்டு ஒரு அமைப்பு இயங்குவதாக தெரிவித்தனர். பொது இடங்களில் மாணவர்களின் செய்கைகள், ஒழுக்க கேடான விஷயங்களை கண்காணித்து ஆசிரியர்களுக்கோ தேவைப் பட்டால் பெற்றோர்களுக்கோ தகவல்கள் பகிரப் படுகின்றனவாம்.
வளையல், ஒற்றைக் காது கடுக்கண், பாதி மண்டையை கரண்டி வைத்தல், காதோரம் சுரண்டி வைத்தல் என்று ஸ்டைல் பாண்டி விஷயத்தில் இங்கே உள்ள மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று நிலைநாட்டினார்கள்.
எங்கேயும் எப்போதும் போல அங்கேயும் “பிரபல பள்ளி” மோகம் மிகுதியாகத்தான் உள்ளது.
திருவனந்தபுரம் நகர் மத்தியில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஏழாயிரத்து சொச்சம். நாங்கள் அந்த வழியாக மாலை வேளையில் சென்ற போது மாணவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் ஒரு கிமீ நீளத்திற்கு அணிவகுத்து நின்றன.
கேரளப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு செயல்படும் விதம் கண்டு பயில சென்ற எங்களுக்கு திருவனந்தபுரம் நகரப் பள்ளிகளுக்கு செல்ல மட்டுமே வாய்ப்பு அமைந்தது.
மீளாய்வுக் கூட்டத்தில் “குறைந்த பட்சம் திருவனந்தபுரம் சுற்றுவட்டார கிராமத்துப் பள்ளிகளையாவது காட்டி இருக்கலாம். நகரப் பள்ளிகளை மட்டுமே பார்ப்பதால் மாநில பள்ளிகளின் நிலமை குறித்த முழுமையான நீள்வெட்டுத் தோற்றம் கிடைக்காதே? “ என்று எங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டோம்.
அடுத்த பேட்ச் சென்று வந்தவர்களுக்கும் “அதே டைலர் அதே வாடகை“ கணக்குத்தான். தயவு செய்து இது போன்ற பயிற்சிகளை துறை முன்னெடுக்கும் போது பயிற்சிக்கு செல்வோரை குழுக்களாக பிரித்து முழு கேரளாவுக்கும் அனுப்ப வேண்டும். அப்போது தான் முழுமையாக ஒரு படம் கிடைக்கும்.
மற்றும் ஒரு முக்கியமான விஷயம், தமிழக அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளின் மாணவர்களின் அனைத்து விதமான விவரங்களும் எமிஸ் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எந்த ஒரு தகவலையும் நினைத்த இடத்தில் இருந்து அந்த தளத்திற்குள் நுழைந்து எடுத்து விட முடியும். அதுபோல அரசும் மாணவர்கள் சார்ந்த விவரங்களை தேவையான விதத்தில் அந்த தரவு தளத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்தி அவர்களின் திறன்களை பரிசோதிக்க மிகவும் உதவியாக இருக்கிறது.
தலைமை ஆசிரியர்கள் வகுப்பறைகளை கண்காணிப்பு செய்வதை கூட இந்த தளத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது.
தற்போது தமிழக அரசு பள்ளிகளில் ஆன்லைனில் அட்டெண்டன்ஸ் போடப்படுகிறது, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு இந்த தளம் வாயிலாக அவர்களின் பெற்றோருக்கு தங்களது பையன் பள்ளிக்கு வரவில்லை என்கிற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் வசதியும் உள்ளது.
மேலும் கொரோனா விடுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளி வந்தபோது அவர்களது பாடி மாஸ் இன்டெக்ஸ் எமிஸ் தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த விவரங்களை வைத்து தான் தேர்தல் அறிக்கையிலேயே இல்லாத திட்டமான மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்டது.
அதோடு மட்டுமின்றி பலவிதமான பள்ளி சார் தகவல்களை தலைமை இடத்தில் இருந்து சுலபமாக பெற இந்த தரவு தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இது போன்றதொரு டிஜிட்டல் தரவு தளம் கேரள பள்ளிகளில் இருப்பதாக தெரியவில்லை. நான் சந்தித்த தலைமையாசிரியரிடம் கேட்டபோது அதுபோல எதுவும் இல்லை என்றே பதில் அளித்தார்.
எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றுவது பாட செயல்பாடுகளுக்கு இடையூறாக இருந்தாலும் அந்த தரவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆன்லைன் டிசி, தமிழ் வழி படிப்புக்கான சான்று, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிப்பு மற்றும் திருத்தங்கள் தேர்வு சார்ந்த அனைத்து விதமான கடினமான நடைமுறைகள் என பல வகை பயன்களை இந்த தரவுத்தளம் மூலமாக தமிழக பள்ளிகள் பெற்று வருகின்றன.
நவீன தொழில்நுட்பங்களை மாணவர் நலன் சார்ந்து பொருத்தமான முறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான நன்மைகளை பெறுவதில் தமிழகம் கேரளாவை விட பல படிகள் முன்னே உள்ளது என்றால் அது மிகை இல்லை.
பள்ளி மேலாண்மையில் பெற்றோர்களின் பங்களிப்பு என்கிற ஒரு விஷயத்தில் வேண்டுமானால் அவர்கள் சற்று முந்தி இருக்கலாம் ஆனால் ஏனைய பல கூறுகளில் கேரள மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தையும் விட தமிழகம் பல படிகள் முன்னே உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
எனவே இனிவரும் காலங்களில் மற்ற மாநில ஆசிரியர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று இங்கிருந்து பல நுட்பங்களை எடுத்துச் சென்று அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக மலையாள கரையோரம் சென்றபோது எந்த விதத்திலும் அந்தப் பள்ளிகளை பார்த்து பிரமிப்போ தாழ்வு மனப்பான்மையோ எங்களுக்கு நிச்சயமாக ஏற்படவில்லை. மாறாக நமது பள்ளிகள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்கிற பெருமிதம் தான் ஏற்பட்டது.
கல்வியில் மாநில உரிமைகள் குறித்து உரக்க முழக்கம் இடும் மாநிலம் நாமாக தான் உள்ளோம்.
கேரளா எந்த வகையிலும் கல்வியில் சுய சார்போடு இயங்க முயற்சிக்கவில்லையோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. ஏனெனில் மேல் நிலையில் முழுக்க முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது, அது போல மலையாளத்துக்கு பதிலாக இந்தியை படிக்க வாய்ப்பு வழங்குவது என்று அவர்கள் சற்றே வடமாநிலங்கள போல செயல்பட துவங்கியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது.
இவை அங்கே நான் பார்த்து கேட்டு அறிந்து கொள்ள விஷயங்களில் இருந்து எழுதியவை தான் ஒருவேளை இதில் ஏதேனும் முரண்பாடான கருத்துக்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
Wednesday, May 8, 2024
வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்
சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு எழுதியது.
தினகரனில் வந்த எனது கட்டுரையின் மூலம் இதுதான்.
அவர்கள் சிறப்பாக பாலிஷ் செய்திருந்தார்கள்.
வளரிளம்பருவம் மிகவும் சிக்கலானது, பிரச்சனையை இழுத்துவரக் கூடியது, கவனமாக அணுகப் பட வேண்டியது. அதுவே இணையப் பருவமாக இருந்தால் சிக்கல்கள் அனைத்தும் இரட்டிப்பாகிவிடுகிறது.
ஆசிரியரை மையத்தில் வைத்து சுற்றி வந்து கும்மியடிக்கும் மேல்நிலை வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியரை தகாத வார்த்தைகள் கொண்டு கோபத்தோடு திட்டும் மாணவன். ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுக்கும் வேளையில் கடைசி பெஞ்சில் நடனமாடும் மாணவன். வகுப்பறைக்குள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் மாணவர்கள். பள்ளி தளவாடங்களை உடைக்கும் மாணவர்கள். ஏறினால் ஜெயில் இறங்கினால் பெயில் என்று கூறும் உயர்நிலை வகுப்பு மாணவன்.
இன்னும் ஏராளமான காணொலிகள் இணைய வெளி எங்கும் கொட்டிக் கிடக்கின்றன, பார்க்கப் படுகின்றன பதற்றத்தோடு பகிரப்படுகின்றன.
இந்த சம்பங்கள் எவ்வாறு காணொலிகளாக மாறின என்று சிந்தியுங்கள்.
கொரானா கற்றல் இடைவெளியை சரிசெய்ய கல்வித் தொலைக்காட்சியை வலுப்படுத்தியதோடு நில்லாமல் வாட்சாப் வகுப்புகளை கல்வித்துறையே ஊக்குவித்தது. பொருளாதார சமநிலை என்கிற ஒன்றே இல்லாத சமூகத்தில் தொடுதிரை போன், டேட்டா மற்றும் வாட்சாப் என்கிற செலவுபிடிக்கும் சமாச்சாரங்களை ஏழை மாணவன் உள்ளிட்ட அனைவரிடமும் திணித்திருக்கிறோம்.
கல்விக்கென்றே பிரத்தியேகமாக ஒற்றைச் செயலி தொடுதிரைக் கருவியை வடிவமைத்திருக்க வேண்டும். மாறாக, நல்லதும் கெட்டதும் கொட்டிக் கிடக்கும் இணையவெளிக்கு நல்லது எது கெட்டது எது என பிரித்தறிய இயலா வளரிளம் பருவத்தினரை கை பிடித்து அழைத்துச் சென்று விட்டிருக்கிறோம்.
வளரிளம் பருவ மாணவர்களுக்கு தினந்தோறும் இருபது ரூபாய் பாக்கெட் மணி கொடுத்துவாருங்கள். அவர்கள் தீனி வாங்கித் தின்னுவது என்பது அதிகபட்சம் ஒரு மாதம் வரை நடக்கலாம். அதன் பிறகு வேற என்ன வேற என்ன என்கிற பரவச தேடுதல் அவர்களை வேறு வேறு விஷயங்களை நோக்கி அழைத்துச் செல்லும். விளைவு, புகைபிடித்தல் புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் என்று படிப்படியாக “முன்னேறுவார்கள்“.
அதுபோலத் தான் இணையவெளியை பயன்படுத்தும் வளரிளம் பருவத்தினரும். மொபைலுடனான தங்களது தருணங்களை எப்படியெல்லாம் சுவாரசியமானதாகவும் பரவசமானதாகவும் மாற்றலாம் என்று தொடர் தேடுதலில் ஈடுபடுகிறார்கள்.
கெடுவாய்ப்பாக அவர்களைவிட வயதில் மூத்த கல்லூரி மாணவர்கள் தங்களை சாகசக்காரர்களாக காண்பிக்க எண்ணி புதிய புதிய விஷயங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். இந்த கட்டுரையில் ஏன் இதெல்லாம்? “ஒரு வைரல் வீடியோவில் தானே கதாநாயகனாக இருந்தால் என்ன?” என்கிற அடுத்த லெவல்தான் இந்த சேட்டைகள்.
இதெல்லாம் ஒழுக்க கேடு அல்லவா? இளம் தலைமுறையினர் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவதைக் கண்டும் வாளாவிருப்பதா என்று நமக்கு ரத்தம் கொதிப்பது இயல்புதான். ஆனால் சிந்தித்து பார்த்தால் இதுபோன்ற ஒழுக்க கேடு அங்கொன்றும் இங்கொன்றும் என காலந்தோறும் நடந்தே வந்துள்ளது.
பிட் அடித்தவனை பிடித்துகொடுத்த ஆசிரியரை பஸ்டாப்பில் அடித்தது. பிரம்படி கொடுத்த ஆசிரியரின் கையை பிடித்தது. திட்டிய ஆசிரியரை நெட்டி தள்ளியது. தொலைவில் இருந்து கல்லெறிந்தது இங்க் அடித்தது, ஊரில் ஆள் திரட்டி அடிக்க வந்தது என எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளது. அதாகப் பட்டது ஆசிரியர்கள் கைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்துள்ளது.
இணையத்தில் வைரல் ஆவதால் அனைவருடைய பாக்கெட்டுக்கும் இந்த காணொலிகள் வழிகேட்டு வந்தடைந்துள்ளன. எனவே 90 விழுக்காடு அரசுப் பள்ளிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் அரங்கேறுவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இணையப் பரவலை தவிர்த்து விட்டு பார்த்தால் எப்போதும் போல அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தேறும் தகாத செயல்கள் தான் இவை.
இந்த காணொலி பரவலில் ஒரு பேராபத்து ஒளிந்துள்ளது. பரவும் காணொலிகள் யாவுமே அரசுப் பள்ளிகளில் படம் பிடிக்கப் பட்டவை மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்கள் யாவரும் ரவுடித்தனம் செய்பவர்கள், முரட்டு சுபாவம் உள்ளவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்பது போன்ற தோற்றம் பொது சமூகத்தின் எண்ணத்தில் பதிய வைக்கப் படப் போகிறது. கௌதம் மேனன் தனது அடுத்த படத்தில் ஊதா நிற கட்டம் போட்ட சட்டை போட்டவனை வில்லனாக காட்டக்கூடும்.
விலையில்லா புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், ரோபோட்டிக் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயில வாய்ப்பளிக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிறப்பான காற்றோட்டம் மிக்க வகுப்பறைகள், கழிவறைகள் இவற்றுக்கெல்லாம் மேலாக கடுமையான தேர்வுகளை எதிர்கொண்டு வென்ற திறன் மிக்க ஆசிரியர்கள் என சிறப்பான கட்டமைப்போடு சமீப காலமாக ஏராளமான மாணவர்களை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி திருப்பியுள்ளது.
இவ்வளவு வலுவான கட்டமைப்பில் ஒரு ஓட்டையை போட்டு அனைத்தையும் பாழ்படுத்த இந்த வைரல் வீடியோக்கள் போதுமானதாக உள்ளது. அதற்குள்ளாகவே “நான் ஏன் எனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்கப் போகிறேன்“ என்றெல்லாம் முகநூலில் எழுதத் துவங்கிவிட்டார்கள்.
இந்த தோற்ற மயக்கத்தினால் ஏழை எளிய மக்களும் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு சமரசம் செய்தலாகாது என்றெண்ணி சக்திக்கு மீறி செலவை இழுத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு செல்லத் துவங்குவார்கள்.
நடனமாடுபவனோ, ஆசிரியரை அடிக்கப் பாய்பவனோ அல்லது தகாத வார்த்தைகளை ஆசிரியர்களை நோக்கி வீசுபவனோ ஒரே நாளில் இந்த செயலை அரங்கேற்றுவது கிடையாது. அவன் தனது அத்துமீறலை படிப்படியாக செய்து பார்த்து அடுத்தடுத்த நிலையை எட்டுகிறான்.
முதலில் தலையை கரண்டிக் கொண்டு வருவது, கைகளில் சாதி அடையாளக் கயிறு கட்டுவது, ஆசிரியர் கடந்து செல்லும் போது பொருட்படுத்தாமல் தங்களுக்குள் கெட்ட வார்த்தைகளை பேசிக் கொள்வது, ஆசிரியர்கள் பேசுவதை அலட்சியப் படுத்துவது, கண்டிக்கும் போது முறைப்பது அல்லது எதிர்த்து பேசுவது என்று படிப்படியாக உருவாகிறான். இத்தனைப் படிகளிலும் அவனை கேள்விகேட்காமல் நல்வழிப் படுத்த முனையாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து விட்டு நிலமை கைமீறிப் போகும் போது கைகளை பிசைந்து கொண்டு நிற்பது ஏன்?
நான் அறிந்தவரை ஆசிரியர்களிடம் தான் கையாளும் வகுப்பினை தாண்டி ஒழுக்கம் சார்ந்து ஒரு மாணவனை கேள்வி கேட்க தயக்கம் உள்ளது.
இரண்டு மாணவர்கள் தனது கண்முன்னால் அடித்துக் கொள்ளும் போது அந்த புழுதி தனது ஆடைகளை அழுக்காக்கிவிடக் கூடாதே என வேகமாக கடந்து செல்லும் ஆசிரியர்கள் உள்ளனர்.
வளரிளம் பருவ மாணவர்கள் காதுகளில் படுமாறு தான் முந்தைய நாள் மது அருந்திய அனுபவத்தை சிலாகித்து கூறும் ஆசிரியர்களைக் கண்டுள்ளேன். இவ்வளவு ஏன் மாணவனை அனுப்பி மது வாங்கிவரக் கூறும் ஆசிரியர்கள் கூட உண்டு.
அடுத்து இந்த குழுக் கலாச்சாரம். பத்து ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் கூட ஐந்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஆசிரியர்கள் செயல்படுவது சாதாரணம். ஒரே ஆசிரியரே ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதுண்டு. இந்த குழுக்களுக்கு இடையே எப்போதும் வெடிக்கத் தயாராகும் எரிமலை கனன்று கொண்டே தான் இருக்கும்.
தலைமையாசிரியர்களும் ஏதாவது ஒரு வலிமையான குழுவில் ரகசியமாக தன்னை இணைத்துக் கொண்டு நிர்வாக ரீதியாக காரியங்களை எளிதாக்க எண்ணுவதுண்டு. இந்த குழுக் கலாச்சாரத்தில் மாணவர்களை உள்ளே இணைத்துக் கொண்டு செயல்படும் போது நிலவரம் கலவரமாகி பள்ளியின் வளர்ச்சியை முற்றிலும் முடக்கிப் போட்டுவிடுகிறது.
பள்ளி மாணவனைப் பற்றிய செய்தி வந்து விட்டதா? ஆசிரியர்களிடம் விளக்கம் கேளுங்கள், மாணவனை சஸ்பென்ட் செய்யுங்கள் என சுருக்கமாக முடித்துவிட்டு கடந்து போகிற பிரச்சனையல்ல இது. இதனை இன்னும் விரிவாக ஆராய்ந்து அணுகி இனிமேல் எந்த பள்ளியிலும் இதுமாதிரி பிரச்சனை எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும்.
சமீபத்தில் காணொலியில் வந்த பள்ளிகள், காணொலியில் வராவிட்டாலும் இதே போல சிக்கல்கள் நிறைந்த பள்ளிகள் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்த பள்ளிகளிடையே உள்ள ஒற்றுமையை (pattern) ஆராய வேண்டும்.
ஆசிரியர்களிடையே ஒற்றுமை உள்ளதா? இந்த செயலை யாரேனும் தூண்டிவிட்டுள்ளனரா?
அனைத்து பள்ளிகளிலும் நடப்பில் இருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு இது குறித்து என்ன செய்துள்ளது?
பிரச்சனையானது பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வசம் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப் பட்டு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப் பட்டதா?
வெளியில் இருந்து மாணவரல்லாத இளைஞர்கள் குழு மாணவர்களை தவறாக வழி நடத்துகிறதா என ஆய்வு செய்ய காவல் துறை உதவி கோரப் பட்டதா?
மாணவர்கள் பிரச்சனைக்கு சாதிய பின்புலம் ஏதேனும் இருக்க முகாந்திரம் உள்ளதா?
நெறிபிறழ் நடத்தை உடைய மாணவனிடம் ஆசிரியர்கள் எவரேனும் பேசி நல்வழிப் படுத்த முயன்றனரா?
நெறிபிறழ் நடத்தையுடைய மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனரா?
கற்றறிந்த கல்வியாளர்களைக் கேட்டால் இன்னும் ஏராளமான கேள்விகளை வைத்திருப்பார்கள்.
இவற்றை எல்லாம் ஆய்வு செய்து மாணவர்களைக் கையால்வது குறித்த சரியான நெறிமுறைகளை அரசே வகுத்துக் கொடுத்து இது மாதிரியான சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
அதற்குள்ளாக தம்பி படத்தில் வரும் மாதவன் போல “இப்போ நான் என்ன செய்ய?“ என்று பிரம்பினை கையில் கொடுங்கள் என்று கதற வேண்டாம்.
ஆசிரியர் மாணவனை நல்வழிப் படுத்தும் நோக்கில் அடிப்பது கூடாது என்று சட்டம் இருந்தாலும் அன்பும் அக்கரையும் மிகுந்த ஆசிரியர்கள் பிரச்சனை ஏதும் இன்றி லேசாக அடித்து திருத்தும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் உள்ளது என்பதை மறுக்க இயலாது.
பள்ளி மற்றும் வகுப்புகளின் அமைப்பு முறைகளும் கல்விக் கொள்கைகளும் மாறி வந்து கொண்டே தான் உள்ளன. ஆனால் ஆசிரியர்கள் மட்டும் மாணவனை மேலே தொங்க விட்டு கீழே நெருப்பு மூட்டி பாதங்களில் பிரம்படி கொடுக்கும் அந்தக் காலமே பொற்காலம் என்று சிலாகிக்கிறார்கள்.
குடும்ப அமைப்புகள் மாறி வருகின்றன, ஆசிரியர்களைப் பற்றிய பொது சமூகத்தின் எண்ணம் மாறி வருகிறது, கல்விமுறைகள் மாறி வருகின்றன அதற்கேற்ப ஆசிரியர்கள் கண்டிக்கும் நடைமுறைகளும் மாற்றம் கண்டே தீரும்.
தனக்கு சாதகமான மாற்றங்கள் அனைத்தும் உடனே நடக்க வேண்டும் பாதகமான மாற்றங்களை ஒருகாலும் அனுமதியோம் என்பது சரியா என சிந்திக்க வேண்டும்.
ஆசிரியர் சமூகம் இந்த காணொலிகளைக் கண்டு அச்சம் கொள்ளவோ நம்பிக்கையிழக்கவோ தேவையில்லை. உங்களிடம் உள்ள குழந்தைகளை அன்போடும் அக்கரையோடும் எப்போதும் போல அனுகுங்கள்.
நெறிபிறழ் நடத்தை கொண்ட மாணவர்களை கண் இமைக்கும் நேரத்தில் மாற்றி விட வேண்டும் என்று எண்ணாமல் கூட்டு முயற்சியோடு அனைவரும் கைகோர்த்தால் நிச்சயமாக மாற்றிவிடலாம். இந்தியாவின் வருங்காலத் தூண்களை செதுக்கும் சிற்பிகள் நாம் தான். வாருங்கள் நம்பிக்கையோடு உளிகளை கையில் எடுப்போம்.
Subscribe to:
Posts (Atom)
மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!
தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
நீர் நிறைந்து சூல் கொண்ட மேகங்கள், திடீரென வெடித்து சிதறும் போது பனிக்கட்டிகளுடன் மழை பெய்வதையே கிளவுட் பர்ஸ்ட் என்கின்றனர். நம் ஊரில் ...