Saturday, July 8, 2017

தேன் தமிழ்

2011 ம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதும் CCRT (CENTRE FOR CULTURAL RESEARCH AND TRAINING)ல் orientation course ல் கலந்து கொண்டேன். தமிழகத்தில் இருந்து 8 ஆசிரியர்கள் ( 2 பெண் ஆசிரியர்கள்) கலந்து கொண்டோம். அரியலூர் மாவட்டத்தில் இருந்து நானும் எனதருமை நண்பரும் கணித ஆசிரியருமான செல்வராஜ் ம் கலந்து கொண்டோம். 28 நாட்களும் நல்ல அனுபவம். காஷ்மீர், நாகாலாந்து, ஜார்கண்ட், உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா வில் இருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பல்வேறு மாநில ஆசிரியர்களுடன் அவரவர் மாநில கல்வி முறை மற்றும் ஆசிரியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை பற்றி எல்லாம் கலந்துரையாடினோம். அந்த நினைவுகள் யாவும் பசுமையாக உள்ளன. அவற்றில் இருந்து பகிரத்தக்க சுவாரசியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று உள்ளேன்.
சமஸ்கிருதம் பெரிதா தமிழ் பெரிதா?
CCRT ல் பல வகுப்புகளில் சமஸ்கிருதத்தையும் இந்து மத கலாச்சாரங்களையும் தூக்கிப் பிடிக்கும் நபர்களே சிறப்பு அழைப்பாளர்களாக வந்து தங்கள் கருத்துக்களை வழங்கினர். அப்போது ஸ்ரீராமக்கிருஷ்ணன் என்கிறவர் பொறுப்பு இயக்குநராக இருந்தார்.
ஒரு பல்கலைக் கழக ஆங்கில பேராசிரியர் ஒருவர் வந்து மொழிகள் சார்ந்த வகுப்பை போதித்தார். எங்கே தொடங்கினாலும் சமஸ்கிருதப் பெருமையில் வந்து முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
திடீரென தமிழ் பற்றியும் கூறினார். அடடே என்ன சொல்லப் போகிறார் என நிமிர்ந்து அமர்ந்தோம்.
“Tamil also borrowed lot of words from Sanskrit” (தமிழ் மொழியும் கூட நிறைய வார்த்தைகளை சமஸ்கிருதத்தில் இருந்து பெற்றிருக்கிறது) என்றார்.
நான் உடனே “Objection sir”( யார்கிட்ட எத்தனை தடவ “விதி“ ஒலிச் சித்திரத்தை அந்த காலத்தில் டேப் ரெக்கார்டரில் கேட்டிருக்கிறேன்)
அவர் பதறிப் போய் “yes yes what sir” என்றார்
“நீங்கள் ஒரு நூறு வருடங்களில் எழுதப்பட்ட நூல்களைக் கொண்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்த தொண்ணூறு விழுக்காடு எழுத்தாளர்கள் பிராமணீயர்கள். அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ அல்ல தெரியாமலோ தமிழோடு கலந்து எழுதி விட்டார்கள். அந்த இலக்கியங்களை மட்டுமே எடைபோட்டு இந்த முடிவுக்கு வருவது சரியாகாது. எங்கள் இலக்கியங்களுக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே, எழுதப்பட்ட இலக்கண விதிகளை கொண்ட எங்கள் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வார்த்தைகளை பெற்று பிழைத்து வருவதாக தாங்கள் கூறுவது பொறுத்தமன்று. இடையூருக்கு வருந்துகிறேன்” என்று கூறிய உடன் தமிழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து மாநில ஆசிரியர்களும் கரகோஷம் எழுப்பினர்.
அந்த பேராசிரியரும் உடனே “ ஆமாம் தமிழும் சமஸ்கிருதம் போலவே ஒரு செம்மொழி“ என்று கூறி அடுத்த தலைப்புக்கு தாவினார்.
#நிகழ்வுகளின் பகிர்வு தொடரும்.

நமக்கு சாப்பாடு தாங்க முக்கியம்


“பேரழிவு ஆயுதங்கள் (WEAPONS OF MASS DESTRUCTION) எதுவும் ஈராக்கில் இல்லை அது ஆந்திராவில் தான் உள்ளது. அது ஆந்திராவின் காரமான உணவுதான்” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது பிரிவு உபச்சார விழா விருந்தின் போது நகைச்சுவையாக கூறியது போல பேப்பரில் செய்தி படித்திருக்கிறேன்.
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து சிசிஆர்டி பயிற்சி ஹைதராபாத்தில் போட்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். அன்றிலிருந்தே எனது கனவுகளில் ஒட்டு மொத்த ஆந்திராவின் நிலப் பரப்பிலும் மிளகாய் வற்றல் காயப் போட்டிருப்பது போல கனவு வர ஆரம்பித்தது.
அப்போது சிசிஆர்டி மையம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்தது. அது முழுக்க விஐபி ஏரியா. எந்த நேரமும் மயான அமைதியாக இருக்கும். நாங்கள் காலை மாலை வேளைகளில் நடந்து செல்லும் போது அந்த அமைதிக்கு குந்தகம் விளைவிப்போம்.
காலின் பவல் சொன்னது உண்மைதான் என சிசிஆர்டி மெஸ்ஸில் பல முறை உணர்ந்திருக்கிறேன். எல்லா உணவுகளும் செந்நிறம் தான். மாலை வேளைகளில் தேநீர் அருந்தினால் அதுவும் காரமாகத்தான் இருந்தது. டீத் தூளோடு ரெண்டு மிளகாயை கிள்ளி போட்டிருப்பார்கள் போல. என்ன அதிர்ந்து விட்டீர்களா? உணவு காரத்தோடு எனது உள்மன உளவியல் காரமும் சேர்ந்து கொண்டு என்னை பயமுறுத்திக் கொண்டு இருந்தது.
காஷ்மீர் நண்பர்கள் காரம் போதவில்லை(?!!!) என தர்கா ஏரியாவில் இருந்து சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவார்கள். அவர்களை நாங்கள் பிரம்மிப்போடு பார்ப்போம். பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எனது கனவில் மிளகாய் வற்றல் காய ஆரம்பித்தது. காஷ்மீர் பனியில் மிளகாய் எப்படி காயும் என லாஜிக்காக கேட்டு அந்த கனவை விரட்டியடித்து விட்டேன்.
நாகாலாந்து நண்பர்களோ ”மோப்பக் குழையும் அனிச்சம்” என்பது போல மென்மையான நாவுடையவர்கள். அவர்கள் அனைவருமே தங்கள் மாநில பதப்படுத்தப் பட்ட உணவுகளை எடுத்து வந்து சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிடுவார்கள். தனியே ஒரு மூலையில் அமர்ந்து குழுவாக சாப்பிடுவார்கள்.
ஒரு முறை தர்கா ஏரியாவில் தேனீர் கடைக்கு சென்றிருந்தோம். அங்கே இரண்டு சமோசாவும் தேனீரும் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்தோம். தட்டில் இரண்டு சமோசாக்கள் வந்தது. பார்த்த உடன் பக்கென்றாகி விட்டது. இரண்டையும் ஒன்றாக திணித்தால் கூட எனது வாயில் மற்றுமொரு சமோசாவிற்கு இடமிருக்கும். கடைக்காரனை திட்டிக் கொண்டே ஒன்றை எடுத்து சுண்டலை வாயில் விட்டெறிவது போல எறிந்தேன். பார்த்தால் மறுபடியும் ஒரு “பக்”. கல்லிடுக்கில் அமர்ந்திருக்கும் பல்லி போல இரண்டு பச்சை மிளகாய்களை சமோசாவிற்கு அடியில் வைத்திருக்கிறார்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் உள்ளே போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று திகைத்துப் போனேன்.
இவ்வாறாக “மணம் சுவை திடம்“ எதுவும் இல்லாமல் கழிந்து கொண்டிருந்த ஹைதராபாத் நாட்களின் ஒரு காலை நேரத்தில் பல் தேய்த்துக் கொண்டிருந்த போது அருமையான ஒரு மணம். எங்கோ உளுந்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த மணம் வந்த திசையை ஆய்வு செய்தேன். அது எங்கள் மெஸ்ஸை நோக்கி சென்றது. “என்னடா இது அதிசயம்“ என்று அவசர அவசரமாக வாய்க் கொப்பளித்து இரண்டு மக் தண்ணீரில் குளித்து(?!) விட்டு நண்பர்களையும் உசுப்பி விட்டு ஓடினேன்.
அங்கே காஷ்மீர் நண்பர்கள் எனக்கு முன்னே அமர்ந்திருந்தார்கள். வடை மோகத்தில் நம்மள மிஞ்ச யாருமில்லை என்கிற இறுமாப்பு அன்றோடு அழிந்து போனது. எல்லோரும் தட்டில் வடையை வைத்து சாம்பார் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்னதான் வடை மோகம் என்றாலும் அது “சைட் டிஷ்“ தானே? இவர்கள் அதையே “மெயின் டிஷ்“ ஆக சாப்பிடுகிறார்களே என வியந்து கொண்டே பரிமாறும் இடத்திற்கு போனேன். அங்கே கேட்பார் இன்றி ஒரு பாத்திரத்தில் அழகாக வடைகள் நிறைய இருந்தன. நான் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டு ஒரு நான்கு வடைகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அப்புறம் தாவித் தாவி கண்களால் துழாவினேன் இதற்கு பொருத்தமான இட்லியோ அல்லது பொங்கலோ இல்லை. என்னடா இது சீக்கிரமே வந்து விட்டோமோ என்று சந்தேகமாக காஷ்மீர் நண்பர் ஆஸாத்தை (இவர் இன்று வரை மாதம் ஒரு முறை போனில் பேசிக் கொண்டிருக்கும் நல்ல நண்பர்) கேட்டேன், ”ஏய் சாப்பாடே அவ்வளவு தான்ப்பா” என்றார்.
எனக்கு வந்ததே கோபம், வடை இருந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து வந்து டேபிளில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அட இதுவும் நல்ல காரம்தான். இருந்தாலும் வடையாச்சே அதனால் ஒரு 12 வடைகளோடு அன்றைய காலை சிற்றுண்டியை(?!) முடித்துக் கொண்டேன்.
சாப்பாட்டிற்கு ஆ“காரம்“ என ஆந்திராக் காரர்கள் தான் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆத்தாடி என்னா காரம்!!!

ஆண்டன் செக்காவ் ரஷ்யச் சிறுகதை எழுத்தாளர்



நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் ஒரு மொழிப் பெயர்ப்புக் கதைத் தொகுப்பையும் எடுத்து வருவது வழக்கம். மேலை நாடுகளின் பண்பாடு கலாச்சாரத்தை ஒரு இலக்கியவாதியின் பார்வையில் பார்ப்பதென்பது அந்த நாட்டு வழக்கங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் போல தெளிவாக அறியலாம். அதில் ஒரு சுவாரசியம் எனக்கு. உங்களுக்கும் அந்த ஆவல் உண்டென்றால் நூலகத்தில் புலமை பித்தன் அவர்கள் மொழி பெயர்ப்பில் உலகச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் துவங்குங்கள்.

மறுபடி ஆண்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைகளுக்கு வருவோம். இவரது ‘CHAMELEON’ என்கிற சிறுகதையை ஆங்கில வடிவில் நான் எனது பள்ளி நாட்களில் கதைப் பகுதி (non – detail) இல் படித்ததாக ஞாபகம். மறுபடி மிர் பப்ளிகேஷன் நூல்களை திருச்சி மக்கள் மன்றத்தில் கொட்டிக் குவித்து 5 ரூபாய் 10 ரூபாய் என்று விற்பனை செய்தார்கள். அதில் அள்ளிக் கொண்டு வந்த ஒரு புத்தகத்தில் தமிழிலும் வாசித்திருக்கிறேன்.

“அட என்னப்பா கதைக்கு வாப்பா!!” என்கிறீர்களா. இதோ வந்துட்டேன். கதை ரொம்ப சின்னது தான். தெருவில் ஒரு போலீஸ் ஆபீஸரும் ஒரு போலீசும் ரோந்து செல்கிறார்கள். அங்கே கூட்டமாக உள்ளது. என்னவென்று பார்த்தபோது ஒரு நாய் ஒருவனின் கையை கடித்து இரத்தம் கொட்டிக் கொண்டு உள்ளது. அந்த குட்டி நாயையும் பிடித்து வைத்துள்ளார்கள். போலீஸ் ஆபீஸர் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த நாயை கொல்ல வேண்டும் என்கிறார். கூட்டத்தில் ஒருவர் “போலீஸ் உயர் அதிகாரி ஒருவரது நாய்” என்கிறார். உடனே அந்த நாயின் கட்சிக்கு தாவி விடுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த சின்னஞ் சிறு நாய் உன் கை உயரத்திற்கு தாவி உன்னை கடித்தது என்பதை நம்ப முடியாது. அந்த நாயிடம் நீ ஏதோ குறும்புத்தனம் பண்ணியிருக்கிறாய் உன்னை விட்டேனா பார் என்று சீறுகிறார். உடனே அவர் உடன் வந்த போலீஸ் காரர் இது நமது அதிகாரியின் நாய் கிடையாது என்கிறார். உடனே அவர் கடிபட்டவன் மீது இரக்கம் கொண்டு நாய் மீது சீறுகிறார். இந்த மாதிரி ஒரு மூன்று முறை கட்சி தாவும் சங்கடமான சூழல் ஏற்படுகிறது. மூன்று முறையும் சளைக்காமல் கட்சி மாறுகிறார். இறுதியில் அந்த நாய் அவர்களது அதிகாரியின் தம்பி உடையது என்று தெரிய வருகிறது. அந்த நாயை மீட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

நகைச்சுவையோடு நல்லதொரு கருத்தான கதை. சட்டம் அங்கேயும் கூட ஏழை பணக்காரர் பார்த்து தான் தன் கடமையை செய்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்ன வென்றால் ஒவ்வொரு முறை கட்சித் தாவும் போதும் அந்த அதிகாரி சூடாக இருப்பதாக கோட்டை கழற்றி அந்த போலீஸிடம் தருவதும் பின்னர் குளிர் வாட்டுவதாக கோட்டை அணிவதும் என இருப்பார்.
பள்ளி விழாக்களில் இந்த கதையை நாடகமாக போடலாம். வசனம் ஏதும் ஸ்பெஷலாக நீங்கள் எழுதி விடாதீர்கள் அவரது வசனத்தை அப்படியே பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நாடகக்காரி என்று புலமைப் பித்தன் அவர்கள் தலைப்பிட்ட ஆண்டன் செக்காவ் அவர்களின் “THE CHORUS GIRL” என்கிற கதை. இதுவும் சின்னஞ் சிறியது தான். வேண்டுமானால் கூகுளில் படிக்கத்தான் அதன் ஆங்கிலப் பெயரையும் கொடுத்துள்ளேன். எளிமையான ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஒரு பெண் ஒருத்தியின் வீட்டில் ஆடவன் ஒருவன் இருக்கிறான். வழக்கமாக அங்கே வந்து போகிறவன். கதவு தட்டப் படுகிறது. இவன் மறைந்து கொள்கிறான். வந்தவள் அந்த ஆடவனின் மனைவி. இவனை கேட்கிறாள். இல்லை என்றதும் “உனக்கு பரிசளிக்க 900 ரூபிள் பணத்தை அலுவலகத்தில் கையாடல் செய்து விட்டான். உடனே அதனை தந்து அவன் சிறைக்கு செல்லாமல் காப்பாற்று என்று மிரட்டிக் கெஞ்சுகிறாள். காலில் விழக்கூட முனைகிறாள். அதனால் பதறி இவள் தன்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் அத்தனையையும் இரக்கப்பட்டு தந்து விடுகிறாள். அவள் சென்றவுடன் அந்த ஆடவனிடம் வந்து “நீ எப்போது எனக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தாய்? ஒன்று கூட எனக்கு தந்தது இல்லையே!” என்கிறாள். அதற்கு அவனோ இவள் சொன்னதை காதில் கூட போட்டுக் கொள்ளாமல் அவள் எவ்வளவு கவுரவமானவள் இந்த ஈனப்பிறவியின் காலில் விழ நான் காரணமாகி விட்டேனே என்று அவளை அருவருப் போடு தள்ளி விட்டு சென்று விடுகிறான். தன் அனைத்து உடைமைகளையும் இழந்ததை எண்ணி இவள் அழுகிறாள்.

இந்த கதையின் ஆரம்பத்தில் நாம் அந்த ஆடவனின் மனைவிக்காக இரங்குவோம். கதை முடிவில் அந்த பெண்ணுக்காக இரக்கப்படுவோம்.  இவ்விரண்டு கதைகளையும் படித்த பின் ஆண்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டுள்ளேன்.

Friday, June 2, 2017

ஆசிரியச் சான்றோர்களே இந்த ஆண்டிலிருந்து இதையெல்லாம் முயல்வோம்



கீழ்கண்ட கருத்துக்கள் எல்லாம் நான் கண்ட பெரும்பாலான நல்லாசிரியச் சான்றோர்களிடமிருந்து கற்றுக் கொண்டவை. நீங்களும் இவற்றையெல்லாம் நடைமுறையில் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். ஒரு வேளை புதியதாக இருந்தால் கற்கலாம் விடுபட்டவை இருந்தால் நீங்களே மெருகேற்றலாம் அல்லவா அதனால் தான் இவை உங்கள் பார்வைக்கு.
எந்த வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஆசிரியருக்கு மிகப் பிடித்தமானவர்களாக இருக்கிறார்களோ அந்த வகுப்பில் ஆசிரியரது மொத்த திறமையும் வெளிப்படும். அது போலவே எந்த ஆசிரியரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்குமோ அவர் எடுக்கும் பாடமே அவர்களின் பிடித்தமான இலகுவான பாடமாக மாறிப் போகும். எனவே மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியராக (வரம்புகளுக்கு உட்பட்டு) இருக்க முயல்வோம்.
கல்லூரி காலத்தில் மாணவர்கள் கற்கும் கடினப் பகுதிகளுக்கான அடிப்படைகள் எல்லாம் பதினோறாம் வகுப்பு பாடங்களில் தான் ஒளிந்து கொண்டுள்ளன. அவற்றை எல்லாம் எடுத்து தெளிவுற நடத்தி மாணவர்களுக்கு புரிய வைப்பதை இலக்காக கொள்வோம். அது பனிரெண்டாம் வகுப்பில் நமது வேலையை வெகு இலகுவாக்கி விடும். (இது அறிவியல் சார்ந்த அனைத்து பாடங்களுக்கும் பொருந்தும்.)
பதினோறாம் வகுப்பில் வந்த உடனே நாம் மாணவர்களிடம் பாரபட்சமில்லாமல் ஒழுக்க நெறிகளை தெளிவுற வரையறுத்துக் கூறிவிட வேண்டும். அதை கிஞ்சிற்றும் மீறலாகாது என்பதை வெகு கண்டிப்புடன் வலியுறுத்திக் கூறிவிட வேண்டும். வகுப்பறை சட்டம் ஒழுங்கை பராமரிக்க வீணாகும் நேரத்தை இது வெகுவாக குறைத்து விடும். (உ.ம்: கைப் பட்டை, கழுத்துச் செயின், அகோரமான சிகை அலங்காரம், கை பேசி வைத்திருத்தல், சீருடை இல்லாமல் வருதல் முதலியன)
விரும்பத் தகாத செயலில் பள்ளி வளாகத்தில் எந்த மாணவராவது ஈடுபட்டால் அதை உடனடியாக கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து ஆசிரியரும் தயாராக இருக்க வேண்டும். நாம் செல்லாத வகுப்பு மாணவன் என்பதால் அடங்க மாட்டானோ என்று தயங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏதேனும் மோசமான சம்பவமாக உருவெடுத்து பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் உண்டானால் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் அது பெரும் தலைகுனிவு தானே.
வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். வகுப்பறை வினாத் தொடுத்தலின் போது மெல்லக் கற்கும் மாணவர்களிடத்தில் வெகு எளிதான வினாவினைக் கேட்டு (அவனுக்கு எது தெரியும் என்பது ஒரு ஆசிரியருக்கு தெரியும் தானே?) அவன் விடையளிக்கும் போது உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூற வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஏதேனும் ஒன்றுக்காக வாரம் ஒரு முறையாவது பாராட்டி விட வேண்டும். (மாணவனுக்கு ஆசிரியரது அங்கீகாரமானது வசிஷ்டர் வாயாலேயே “பிரம்ம ரிஷி பட்டம்” பெற்றது போல் இருக்கும் அல்லவா?)
ஒவ்வொரு ஆசிரியரும் தாம் வகுப்பாசிரியராக பணியாற்றும் வகுப்புக்கு நல்லொழுக்க போதனை வகுப்பினை தானே கையாண்டு நன்னெறிக் கதைகளோ வாழ்வியல் அனுபவங்களோ நாட்டு நடப்புக்களோ அல்லது மாணவர்தம் தனித்திறமையை வெளிப்படுத்த களம் அமைப்பதோ என இயன்றவற்றை செய்து அந்த வகுப்புக்காக ஏங்கும் வண்ணம் அதனை மகிழ்ச்சியான பாட வேளையாக ஆக்க வேண்டும். இது ஆசிரியர் மாணவர் இடையே நட்பினை வலுப்படுத்தும்.
எந்த வகையிலும் விரும்பத் தகாத பழக்க வழக்கங்களை சிறப்பிக்கும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுதலாகாது. ஆசிரியருக்கே புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தால் அது மாணவர்கள் அறியா வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். என்னதான் அது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்றாலும் உங்கள் அறிவுரை மீதான நம்பகத் தன்மையை அது வெகுவாகப் பாதிக்கும்.
நாம் போதிக்கும் மாணவர்கள் குமரப்பருவத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களிடத்தில் “போராட்ட குணம், பாலியல் உணர்வு, தமது தனித்தன்மையை நிறுவ முயல்வது“ போன்றவை மிகுதியாக காணப்படும். இது அவர்களை மிகுந்த குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். விளைவு சார் சிந்தனையைக் காட்டிலும் உணர்வு சார் சிந்தனை மேலோங்கி இருக்கும். அவர்களுக்கு “நல்லது கெட்டது“ பற்றி பக்குவமாக எடுத்து கூறி அவர்களை நல்வழிப் படுத்துவது நமது கடமை. இதில் பெற்றோரைவிட நமது பொறுப்பு அதிகம் என்பது எனது எண்ணம்.
“தேர்வு”. “தேர்ச்சி” “மதிப்பெண்“ போன்றவற்றைப் பற்றி மிகையாக கூறி அவற்றை பூதாகாரமாக்கி பயமுறுத்துவதை இனிமேலாவது விட்டொழித்து கற்றலை நல்லதொரு அனுபவமாக மாற்ற முயல்வோம். நல்லதொரு கற்றல் அனுபவத்தை எந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் கொடுத்து விட்டோம் என்றால் தேர்வினை இயல்பாக எதிர்கொண்டு விரும்பத்தக்க முடிவோடு வெளிவருவார்கள்.
மறந்தும் கூட பொருளாதார நிலை, சாதிய இழி நிலை, உடல் சார்ந்த குறைபாடுகள் போன்றவற்றை நகைச்சுவைப் பொருளாக்கிவிட வேண்டாம். மாணவர்களிடமிருந்து அந்த மாதிரி நகைச்சுவை வெளிப்பட்டால் அதனை உடனடியாக கண்டிக்க வேண்டும்.
உடல் தூய்மை, சுற்றுப்புற தூய்மை மற்றும் சுற்றுச் சூழலைப் பேணுதல் போன்றவை சார்ந்த விழிப்புணர்வை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் தாங்கள் படித்த நூல்கள் பற்றி மாணவர்களிடம் கூறி அவர்களிடம் நல்ல நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். நூலகம் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்கப் படுத்த வேண்டும்.
மாணவர்களை தண்டிக்கும் போது இது அவர்களை நல்வழிப் படுத்த தானே அன்றி நம் கோபத்தை தணித்துக் கொள்ள செய்யும் செயல் அல்ல என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். தண்டனைக்கு உள்ளான மாணவனை தனிப்பட்ட முறையில் அழைத்து அன்றே ஆற்றுப் படுத்திவிட வேண்டும்.(இது “பிரம்படி“ பற்றியது அல்ல)
ஆசிரியர்களாகிய நாம் நமது வகுப்புக்கு நேரம் தவறாமல் சென்றுவிட வேண்டும். இது நமக்கான நேரத்தை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள உதவும். மேலும் நேரம் தவறாமைக்கு மாணவர்களுக்கு நாமே உதாரணமாக விளங்க முடியும்.
இவை அனைத்தையும் நமது பணியின் வாழ்வியல் நெறியாக மாற்றிக் கொண்டோம் எனில் நாம் தான் விருது பெறாத நல்லாசிரியர். வணக்கம் வாழ்த்துக்கள் நல்லாசிரியர்களே.


Thursday, May 25, 2017

இரயில் பயணங்களில்

எப்போதும் நேரம் தவறாமையை வலியுறுத்துவது எனது வழக்கம். எனவே 3.45 அதாகப்பட்டது 15.45 பல்லவன் விரைவு வண்டிக்கு எல்லோரையும் முடுக்கிவிட்டு வீட்டிலிருந்து 2.15க்கே கிளப்பிவிட்டேன். கேப் புக் பண்ணினாலும் டிராஃபிக்ல மாட்டி வண்டியை விட்டுடக் கூடாதே என்கிற நல்ல எண்ணம் தான். கார் எழும்பூரை நெருங்கும் போது அதாவது 2.45க்கு குறுந்தகவல் வருகிறது. இரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாம்.
வழக்கமாக 2.45க்கு கிளம்புவோர் என்மேல் கொலை வெறியில் இருந்தாலும் நாகரிகம் கருதி வாளாவிருந்துவிட்டனர். சரி ப்ளாட் ஃபார்ம் ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து ஃப்ரீ வைஃபை இணைப்பை பயன்படுத்தலாம் என்று பார்த்தால் நல்ல கூட்டம். நிற்பதற்குத்தான் இடம் கிடைத்தது. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாதுங்க வைஃபை நல்ல ஸ்பீடுங்க.
சற்றேரக் குறைய இரண்டு மணி நேரம் கழித்து வைகை உள்ளே வந்தது. இது தான் பல்லவனாக மறு அவதாரம் எடுக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. அப்பாடா கஷ்டம் எல்லாம் தீர்ந்தது என்று அக்கடா என்ற இருக்க விட்டார்களா?
விழுப்புரம் வரும் முன்னரே ஒரு இடத்தில்இஞ்சின் மூர்ச்சையானது. இஞ்சின் புதிதாகையால் டிரைவருக்கு கட்டுபடாமல் சண்டித்தனம் செய்தது. ரொம்பவும் முயன்று பார்த்த போது தனது இறுதி மூச்சை விட்டு அடங்கியது. சாப்பாட்டு நேரம் ஆகையால் எல்லோரும் உணவு விற்கும் சிப்பந்திகளை எதிர் நோக்கி காத்திருந்தனர். வேண்டாத போதெல்லாம் நூறு முறை குறுக்கும் நெடுக்கும் நடப்போர் இப்போ தலை காட்டவே இல்லை. சரி ஏழு பெட்டிகள் தாண்டி பேண்ட்ரி பாக்சுக்கு போனால் எல்லாம் தீர்ந்து விட்டிருந்தது. பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நிற்கவே முடியவில்லை. சூடான நீராவி நிறைந்த அண்டாவில் விழுந்து விட்டது போல நல்ல சூடு. சட்டை தொப்பலாக நனைந்து விட்டது. சாப்பிட ஒன்றும் கிடைத்த பாடில்லை.
இரண்டு மணி நேரம் சென்றபின்பு ஒரு புதிய இஞ்சின் கொண்டு வந்து மெல்ல நகர்த்தி சென்றனர். விழுப்புரம் வந்த உடனே எல்லோரும் பாலைவனத்தில் நீரைக் கண்ட பிரயாணிகள் போல குதித்து இறங்கி சாப்பாடு விற்பனையாளர்களை மொய்த்து கொண்டனர். நானும் சப்பாத்தி பொட்டலம் இரண்டு வாங்கிக் கொண்டேன். உடன் வந்த தம்பிக்கு ஒரு பொட்டலம் கொடுத்து விட்டு நான் பிரித்தேன். வண்டி சங்கு(?!) ஊதி புறப்பட்டது. பொட்டலத்தின் உள்ளேயிருந்த பரோட்டாக்கள் என்னை இளக்காரமாக பார்த்தன. அடேய் எனக்கு மட்டும் எப்படிடா இப்படி விக்குறீங்க?
விருத்தாசலம் வரும் முன்னே மறுபடியும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. டிரைவர் ஒரு அரைமணி நேரம் தாஜா பண்ணி கிளப்பி விட்டார். தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று விருத்தாசலம் நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் தப்பித்து ஓடினர்.
அப்பாடா அடுத்து அரியலூர்தான். வண்டி காரைக்குடி போனா என்ன போகாட்டி என்ன நாம இறங்கிக் கொள்ள வேண்டியது தான் என்று சுயநலமாக எண்ணியது தவறுதான். அது இஞ்சினுக்கு எப்படி தெரிந்ததோ உடனே படுத்துக் கொண்டது. ஈச்சங்காடு என்கிற குக்கிராம ஸ்டேஷனில். நேரமோ இரவு பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது.
எங்கள் இரயிலைத் தவிற எல்லா இரயில்களும் சற்றும் நேரம் தவறாமல் எங்களை கடந்து சென்று எங்களை வெறுப்பேற்றியது. சரி பக்கத்து டிராக் ரயிலை மறித்தால் வழிக்கு வந்து விடுவார்கள். நிவாரணம் விரைவாக கிடைக்கும் என்று  எண்ணி ராமேஸ்வரத்தில் இருந்து வரும் இரயிலை மறிப்பது என்று முடிவு செய்து ஒரு இருபது பேர் கொண்ட பெருங்கும்பல்(?) பக்கத்து டிராக்கில் குறுக்காக நின்றனர். ஆனால் டிரைவர் பார்த்தாரோ இல்லையோ தெரியவில்லை கொஞ்சம் கூட வேகத்தை குறைக்க வில்லை ஆதலால் முற்றுகை போராட்ட வீரர்கள் தங்கள் வேகத்தை கட்டுப் படுத்திக் கொண்டு வேகமாக சிதறி ஓடிவிட்டனர். ஒரு வழியாக முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் பயணிகள் “அப்படித்தாங்க நாங்க போன வருடம் திருப்பதி போனப்ப…“ என்கிற ரீதியில் கதைகளை எடுத்து விட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு தம்பி ஒருவன் “இன்னும் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஆகும்” என்று கூறி தனது பையை தலைக்கு வைத்து அந்த குக்கிராம ஸ்டேஷனின் பெஞ்சில் படுத்துக் கொண்டார். டிரைவர் சங்கை முழக்கினார். எல்லோரும் ஓடிச் சென்று ஏறிக் கொண்டோம். எனக்கு முன்னால் அந்த “ஒரு மணி நேர கெடு“ தம்பி ஏறிக் கொண்டு இருந்தார். அப்புறம் பார்த்தால் டிரைவர் “ஹாரனாவது“ அடிக்குதான்னு பார்த்திருக்கார் அதை நம்பி நாங்கள் ஏறி இருக்கிறோம். “நான் சொன்னேன்ல“ என்ற படி அந்த தம்பி இப்போ ரயிலின் ஒரு காலி இருக்கையை படுக்கையாக்கிக் கொண்டார். அவர் முடிவு சரிதான். அவர் காரைக்குடி போக வேண்டியவராச்சே.
நள்ளிரவு இரண்டு மணிக்கு ஒரு வழியாக வண்டி நகர ஆரம்பித்தது. “பார்ரா இப்போ இவ்வளவு வேகமா போவுது“ என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் விரைந்து சென்றது. பத்து நிமிடத்தில் அரியலூர் சென்றடைந்தோம்.
இரவு ஏழு முப்பதுக்கு வரவேண்டியது அதிகாலை இரண்டு முப்பதுக்கு வந்து சேர்ந்தது.
சைக்கிளில் போகும் போது பஞ்சரானால் தள்ளிக் கொண்டு போய்விடலாம், அதுவே புல்லட்டில் போகும் போது பஞ்சரானால்?!
பேருந்தில் போகும் போது பிரேக் டவுன் ஆனால் இறக்கி அடுத்த பேருந்தில் ஏற்றி விடுவார்கள், அதுவே இரயிலில் பிரேக் டவுன் ஆனால்?!
இரயிலில் போகும் போது இஞ்சின் ரிப்பேரானால் நின்று சரி செய்துகொண்டு செல்லும் வாய்ப்பாவது இருக்கிறது அதுவே விமானமாக இருந்தால்?!

எவ்வளவுக்கு எவ்வளவு சொகுசு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ரிஸ்க்கும் அதிகம் உள்ளது. வழவழப்பான சாலைகள் பெருகப் பெருக விபத்து எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தானே உள்ளது.

Friday, May 12, 2017

பாடல்களோடு எனது பயணம்

அது ஒரு அரையடி உயரமும் முக்கால் அடி நீளமும் உள்ள ஒரு ஜந்து. எங்கள் வீட்டில் எப்போதும் நடுவில் வீற்றிருக்கும். எல்லோருக்கும் பிடித்தமானவன். ஏனென்றால் வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும். எனக்கு நாடகங்கள், ஒலிச்சித்திரம் மற்றும் சிறார் அறிவியல் நிகழ்ச்சிகள். ஏனையோர்க்கு பாடல்கள் மற்றும் தொடர் நாடகங்கள்.

நீங்கள் நினைப்பது சரிதான். எங்கள் வீட்டில் இருந்த பிளிப்ஸ் ரேடியோதான் அது. எனது கையில் ஸ்குரு டிரைவர் கிடைக்கும் போதெல்லாம் நான் அதற்கு ஆபரேஷன் செய்வது உண்டு. மர அலமாரியின் மேல் அடுக்கில் இருந்து தவறி விழுந்து “அதல சிதலையா” ஆகியதுண்டு. வீட்டில் யாருக்கும் தெரியாமல் நானே ஆபரேஷன் செய்து காப்பாற்றி விட்டேன்.

ஒரு முறை அனைவரும் வாசலில் படுத்து உறங்கிய போது திடீரென மழை “சட சட“ என்று அடித்து பெய்ய ஆரம்பித்து விட்டது. எல்லோரும் வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடி வந்து விட்டோம். பதட்டத்தில் ரேடியோவை வாசலிலேயே விட்டு விட்டோம். காலையில் பார்த்த போது தண்ணீரில் மூழ்கி விழுந்து மண்ணும் தண்ணீருமாக ஆகி விட்டது. அப்போது தான் மெக்கானிக்கிடம் சென்றதாக நினைவு.

ஊரில் எல்லோரும் டேப் ரிக்கார்டர் வாங்கும் போதெல்லாம் நான் ஏக்கத்தோடு பார்ப்பது உண்டு. எங்கள் தந்தை எங்கள் படிப்பை கருத்தில் கொண்டு வாங்கவில்லை.

 பெரியவனானதும் சம்பாதித்து ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி அதில “விதி“ மற்றும் “ஒரு தாயின் சபதம்“ பட கதைவசன கேசட்டை போட்டு ஆசை தீர கேட்க வேண்டும் என்று பலமுறை எண்ணியது உண்டு. அப்போது நான் மிகச் சிறியவன் ஆதலால் நாடகங்களும் ஒலிச் சித்திரங்களும்( அதாவது படங்களின் கதை வசனம்) தான் என்னை கவர்ந்தவைகளாக இருந்தன. மற்றவர்களுக்கோ பாடல்கள் தான் பிடிக்கும். இதனால் ஏற்பட்ட தகராறில் எங்கள் வீட்டு “ப்ளிப்ஸ்“ ரேடியோ பல முறை மண்டை பிளக்கப் பட்டு வீழ்ந்தது உண்டு. அப்புறம் என்ன மறுபடியும் “இரகசிய ஆப்பரேஷன்“ தான்.

ஆண்டுகள் கடந்தன. நானும் படித்து பெரியவனானேன். தனியார் பள்ளியில் ரூபாய் 2250 க்கு வேலையில் சேர்ந்தேன். முதல் மாத சம்பளத்தில் ரூபாய் 1950க்கு 2001 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி விட்டேன். என்ன டேப் ரிக்கார்டர் என்கிறீர்களா? வேறு என்ன “ப்ளிப்ஸ்“ தான். இதற்கு நான் ஒரு போதும் ஆப்பரேஷன் செய்ததில்லை.

டேப் ரிக்கார்டர் வாங்கினால் போதுமா அது பாடுவதற்கு கேஸட் போட வேண்டுமே. நான் வேலை பார்த்தது கொல்லிமலையில் உள்ள “ஹில் டேல்“ மெட்ரிக் பள்ளி. அங்கே ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக தங்கும் அறைகள் உண்டு. அங்கே ஒரு டபுள் டெக் டேப் ரிக்கார்டர் இருந்தது. இளவரசு சார் அருமையான ஜேசுதாஸ் பாடல் தொகுப்பு வைத்திருப்பார். அவர் ஜேசுதாஸ் அவர்களின் “டை ஹார்ட்“ விசிறி. அது மட்டுமல்லாமல் அவர் ஒரு “வழுக்கை இல்லாத“ அப்துல் ஹமீது. நடமாடும் திரையிசைப் பாடல் அகராதி. அவருடன் ஆலோசித்து பாடல்களின் பட்டியலை தயார் செய்வேன். மலையில் இருந்து இறங்கும் போது ஜெயங்கொண்டத்தில் உள்ள ரெக்கார்டிங் சென்டரில் கொடுப்பேன். ரெக்கார்டிங் சென்டர் காரரோ பாடல் தொகுப்பை பார்த்து மண்டையை பிய்த்துக் கொள்வார். இருந்தாலும் நேரம் எடுத்துக் கொண்டு அனைத்துப் பாடல்களையும் போட்டுக் கொடுத்து விடுவார்.

புதுப் படங்களில் பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாகி இருந்தால் இரண்டு புதுப்படங்கள் அடங்கிய ரெடிமேட் கேஸட் வாங்கி விடுவேன். அந்த வகையில் முதலில் வாங்கியது “ரோஜாக் கூட்டம்“ மற்றும் “காசி“.
வேலைகிடைத்து ஜெயங்கொண்டத்தில் “பேச்சிலர் மேன்ஷனில்“ தங்கிய போது எனது உற்ற துணைவன் எனது டேப் ரிக்கார்டர் தான். அறையில் நுழைந்தவுடன் லைட்,மின் விசிறி மற்றும் டேப் ரிக்கார்டர் ஸ்விட்ச் மூன்றையும் ஒருங்கே தட்டி விட்டுதான் அமர்வேன். என் அறை வராண்டாவின் அருகே வரும் போதே நான் அறையில் இருப்பதை நண்பர்கள் ஊகித்து விடுவார்கள். பாடல் சத்தம் கேட்டால் இருக்கிறேன், அமைதியாக இருந்தால் அறையில் இல்லை அல்லது உறங்கியிருப்பேன்.
சில இயக்குனர்கள் நல்ல இசை ரசனை உடையவர்களாக இருப்பதால் எனக்கு நல்ல பாடல் தொகுப்பது இன்னும் இலகுவாகிப் போய்விடும். மணிரத்னம் இளையராஜா மற்றும் மணிரத்னம் ரஹ்மான் என்றொரு தொகுப்பும் என்னிடம் இருந்தது.

அப்புறம் பெஸ்ட் ஆஃப் சித்ரா, மனோ, ஜெயச்சந்திரன், ஜேசுதாஸ் மற்றும் இளையராஜாவின் குரலில் என்று ஒரு தொகுப்பும் தயார் செய்திருந்தேன். என்னை பார்க்க வரும் நண்பர்கள், பக்கத்து அறை நண்பர்கள் மற்றும் கீழே தேனீர் கடை பணியாளர்கள் எல்லோரும் என்னுடைய பாடல்களை பாராட்டும் போதெல்லாம் எனக்கு இரத்தத்தில் “டோப்பமைன்“ ஏறும்.

கீழே இருந்த டீக்கடை பையன் ஒரு முறை ஒரு கேசட்டை குறிப்பிட்டு கேட்டான். சரி நம்ம புகழ் டீக்கடை வரை பரவட்டுமே என்று கொடுத்தேன். ஆனால் நாட்கள் பலவாகியும் அது திரும்பி வரவே இல்லை. என்னடா என்று பார்த்தால் எதிர் வீட்டு இளம் பெண்ணை வசீகரிக்க அதில் ஒரு பாடலை தினந்தோரும் அதிகாலை நேரங்களில் போட்டுக் கொண்டு இருந்திருக்கிறான். அந்தப் பெண்ணும் அவனின் தொடர் பாடல் விடு தூதில் மயங்கி விட்டதாக கேள்விப் பட்டேன். அது என்னப் பாடல் என்றால் “காலங் காத்தாலே ஒரு வேலை இல்லாம…” என்ற பாடல். இந்த பாடல் விடு தூது பிறகு பெரும் பிரச்சனையாகி “வெப்பன் சப்ளையர்“ ஆகிய நானும் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருந்த காரணத்தினால் கேஸட்டை உடனே வாங்கி விட்டேன்.

அடுத்த ஓராண்டில் எனக்கு திருமணமாகி விட்டது. வீட்டில் சி.டி ப்ளேயரும் வந்து விட்டது. எனது அண்ணன் சந்திரசேகர் நல்ல பாடல்களின் எம்.பி3 தொகுப்பு போடும் போதெல்லாம் எனக்கும் ஒரு காப்பி போட்டு விடுவார். பத்து பதினைந்து சி.டி மற்றும் டிவிடிக்களில் எனது சற்றேரக் குறைய 100 கேசட்டுகளும் அடங்கிப் போய் விட்டது. எனது கேசட் ப்ளேயரில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்து விட்டது.

ஜெயங்கொண்டத்தில் இருந்து திருமானூருக்கு வீடு மாறும் போதுதான் எல்லா கேசட்டுகள் மற்றும் டேப் ரிக்கார்டரை ஒருவருக்கு கொடுத்தேன். அவரும் கூட அதை எத்தனை நாட்கள் வைத்திருந்திருப்பார் என்று தெரியவிவல்லை. ஏனென்றால் அப்போது செல்போன்களே சிறந்த பாடல் கேட்கும் கருவியாகவும் ஆகி விட்டிருந்தது. அதுவும் கொரியன் மொபைலாக இருந்தால் திருவிழாவில் ரேடியோ செட் கட்டியது போல தெருவையே தெறிக்க விடும்.

தற்சமயம் எனது மொபைலில் கிட்டத்தட்ட ஆயிரம் அருமையான பாடல்களின் தொகுப்பு உள்ளது. நான் வாங்கிய சிடிக்கள் மற்றும் டிவிடிக்களில் இப்போது சிலந்திகள் குடியேறி விட்டன.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

                                -நன்னூல்.

Wednesday, May 10, 2017

பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம்

தந்தை பெரியார் அறிவியல் மையம்
சென்னை வருபவர்கள் பார்க்கும் இடங்கள் பல இருந்தாலும் சிறு பிள்ளைகளை கூட்டி வருபவர்கள் தவற விடக் கூடாத இடம் ஒன்று உண்டென்றால் அது தந்தை பெரியார் அறிவியல் மையம் தான்.
கிண்டி காந்தி மண்டபம் சாலையில் உள்ளது. உள்ளேயே பிர்லா கோளரங்கமும் உண்டு.
”சென்னை வந்ததிலிருந்து ஒரே போர்ப்பா எங்கேயுமே வெளிய போகலப்பா. ஒரு முறை தி.நகர் போனேன் அவ்வளவு தாம்பா”
சரி பாகுபலி 2 போகலாம் என்றால் பத்து நாளாகியும் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்க வில்லை.  எல்லாம் முதல் வரிசை. படம் ஏற்கனவே பிரம்மாண்டம். அதை முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்தால் கழுத்து வலியும் காது வலியும் வருவது உறுதி என்று அந்த யோசனையை நிராகரித்தேன்.
ஏற்கனவே ஒரு முறை திருச்சி கோளரங்கத்திற்கு கூட்டிப் போவதாக வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இவர் லீவு விட்ட அடுத்த நாளே சென்னை கிளம்பி விட்டதால் போக இயலவில்லை. எனவே சென்னையில் கோளரங்கம் இருக்கிறதா என்று கூகுலில் தேடினேன். இலவச இணைப்பாக பெரியார் அறிவியல் மையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தது.

பெரியார் அறிவியல் மையம், கோளரங்கம் மற்றும் 3டி ஷோ எல்லாம் ஒரே பேக்கேஜ் ஆக கட்டணம் பெரியவர்களுக்கு 60 சிறுவர்களுக்கு 30. சோ ஒரு 90 ரூபாயில் சோலி முடிஞ்சது.
ஆட்டோவில் தான் போய் இறங்கினோம். நுழைவு வாயிலில் டிக்கெட் கொடுக்கிறார்கள். பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. வெயில் சுல்லென்று அடித்தது. திறந்த வெளியில் நிறைய இயற்பியல் அடிப்படை அறிவு சார்ந்த உபகரணங்களை நிறுவியிருக்கிறார்கள்.
ஒரு போர் விமானம் நிறுத்தப் பட்டிருந்தது. PSLV ராக்கெட் மாதிரி ஒன்று செங்குத்தாக நின்றது. ஒரு ரயில் எ ஞ்சின் ஒன்று. இரண்டு பரவளைய அரை வட்டங்கள் 100 அடி இடைவெளியில் நிறுவப்பட்டு அவற்றின் குவிய முனையில் வளையங்கள் உள்ளன. இரண்டு பேர் அவற்றின் குவிய முனைகளில் நின்று குசு குசுத்தாலும் அடுத்தவருக்கு அழகாக எதிரொலிக்கப் படுகிறது. அருண் ரொம்பவும் வியந்த ஒரு விஷயமாக இது அமைந்தது.
மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் நிறுவியிருக்கிறார்கள். நேரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து கோளரங்கம். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் மாறி மாறி காட்சிகள் நடைபெறுகின்றன. நல்ல ஜில்லென்ற ஏசி. வட்டமாக 360 டிகிரி அரங்கம். மேற்கூறையின் அரை கோளம் தான் திரை. நடுவில் புரஜெக்டர். காட்சிகள் பல்வேறு புரஜெக்டர்கள் மூலமாக கூட்டாக காண்பிக்கப் படுகின்றன. முதலில் பயந்த குழந்தைகள் (அருண் உட்பட) பின்பு சுவாரசியமாகி விட்டனர். ஆனால் உள்ளடக்கம் அவ்வளவு நன்றாக இல்லை. விண்வெளியில் காண வேண்டிய விஷயங்கள் எவ்வளவு உள்ளன. ஆனால் இங்கு விண் மீன் திரள் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றி மட்டுமே காட்சிகள் உள்ளன. இணையத்திலேயே எவ்வளவோ காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. எவ்வளவு பெரிய ஆயுதமாக இருந்தாலும் நாம் அதை வைத்து ”முதுகு சொறிந்து” பரவசம் அடைகிறோம்.(கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுங்க பாஸ்!)
அடுத்து அப்படியே எல்லோரையும் வரிசையாக எதிரே உள்ள 3டி தியேட்டருக்கு பார்சல் செய்கிறார்கள். வாயிலில் ஒரு பிரத்தியேக கண்ணாடி வழங்கப் படுகிறது.(அட இதெல்லாம் மைடியர் குட்டிச் சாத்தான் கால டெக்னிக்). ஒரு சிறிய படக் காட்சி பார்வையாளர்களை பயமுறுத்தி பரவசமடைய செய்கிறது.
அடுத்து DRDO வின் காட்சியரங்கம். ராணுவம் சார்ந்த நிறைய விஷயங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
அப்புறம் ISRO வின் பல விதமான ராக்கெட்டுகள் மற்றும் சாதனங்கள். அடுத்து அணுசக்தி துறையின் காட்சிக் கூடம். நிறய அணு உலை சார்ந்த சாதனங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. உள்ளே ஓர் அறையில் படக்காட்சி அரங்கம். அங்கே அணு உலை எவ்வளவு பாதுகாப்பானது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அதன் பிரதான நோக்கம் அதுவாகத்தான் இருக்கும் போல.
எல்லா இடங்களிலும் குழந்தைகளே செய்து பார்க்கும் வண்ணம் சாதனங்கள் உள்ளன. பாதி இயங்கவில்லை என்பது தான் சோகம்.
உள்ளே கேண்டீன் வசதி உள்ளது. அதனால் நொறுக்கு தீனி மற்றும் மதிய உணவு பற்றிய கவலை வேண்டாம். வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்றும் சாப்பிடலாம்.
காலை 10 மணிக்கு உள்ளே சென்றால் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு மாலை 4 மணிக்கு வெளியே வரலாம். வாசலிலேயே ஆட்டோ உண்டு.

மதநம்பிக்கைகளை புறந்தள்ளி விட்டு மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு அறிவியல் ஆய்வை மேற்கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் அறிவியல் பார்வையை செலுத்துங்கள் என்ற பகுத்தறிவு பகலவன் பெயரை அறிவியல் மையத்திற்கு வைத்திருப்பது வெகுப் பொருத்தம் தான். ஆனால் அங்கே இருக்கும் எல்லா சாதனங்களையும் நன்கு பராமரித்து வரும் குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மை வளர உதவிடுங்கள்.


புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை

புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...